தமிழ்நாட்டில் வீதி நாடக இயக்கம்

This entry is part [part not set] of 11 in the series 20000723_Issue

– K.V. ராமசாமி


தெரு நாடகம் என்று அறியப்படும் இந்த மூன்றாம் வகை நாடகத்தை தமிழ் நாட்டுக்குச் சமீபத்தில், அதாவது எழுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தியது வீதி என்ற அமைப்புத்தான். சமீபத்தில் என்று நான் கூறுவதின் நோக்கம், இதற்கு முன்னால் சுதந்தரப் போராட்ட காலத்தில் இந்த நாடக வடிவம் போராட்ட ஆயுதமாக தமிழ் நாட்டில் எங்கேயாவது பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி நமக்குத் தெளிவாகத் தெரியாது. மேலும், கூத்து, ஜாத்ரா போன்ற நமது புராதன கிராமிய நாடக வடிவங்கள், ப்ரோசீனியம் மேடையின் தட்டை வடிவமைப்புக்குள் அடங்குவது அல்ல எனபதுவும், வீதி நாடகம் பற்றிய சமஸ்கிருத பழைய நூல் ஒன்று இருப்பதாகவும் நான் ஒரு நாட்டிய மணியின் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன், நான் இங்கு வலியுறுத்த விரும்புவது இந்த வகை நாடகம், முற்றிலும் புதிய கண்டு பிடிப்போ நமக்கு அன்னியமானதோ அல்ல நமது மரபில் இருப்பதுதான்.

ஒரு மாலைப் போதில் மெரீனா கடற்கரையில் இலக்கியத் தொடர்புடைய சில இடதுச்சாரிச் சிந்தனையாளர்கள் கூடிப் பேசியதில் பிறந்ததுதான் வீதி. இதில் பங்கு கொண்ட பெரும்பான்மையோர் மத்திய மாநில ஸ்தாபனங்களில் அல்லது வங்கியில் பணி புரிந்த மத்தியதர வர்க்க அறிவு ஜீவிகளே. தொடக்கத்தில் இது ஒரு புதிய நாடக வடிவாக்கம் என்ற கலைப்பூர்வமான பிரக்ஞையை விட, தங்கள் ‘எதிர்ப்புக் குரல் ‘ வெளிப்பாட்டுக்கு சுலபமான வலுவான ஒரு ஊடகமாகத்தான் இவர்களால் இது கருதப்பட்டது.

நான் பல இடஙகளில் பலமுறை கூறியிருப்பது போல, பார்வையாளர்களோடு. பெளதீக இடைவெளியை முற்றாக இல்லாமல் செய்ய முயல்வது, மேடையை மறுப்பது, ஒளி ஒப்பனைகள் இல்லாமல் இருப்பது, என்ற இந்த நாடக வடிவம், வடிவ அமைப்பிலேயே உள்ளார்ந்த ஒரு சமூகப் பார்வையை, ஒரு மதிப்பீட்டை தன்னகத்தில் கொண்டிருக்கிறது. ‘வீதி ‘யும் தன் அமைப்புவடிவில் இதே மதிப்பீடுகளை, பார்வையைக், கொண்டிருந்தது. இதில் தலைவர், செயலாளர், அங்கத்தினர்கள் என்று கிடையாது, அனைவரும் கூடி ஒரு வட்ட வடிவில் அமர்ந்து விவாதித்து ‘வீதி ‘யின் செயல்பாடுகளை முடிவு செய்வர். இதில் இதுவரை போடப்பட்ட எந்த நாடகத்தையும், யாரும் நான்தான் இதன் நாடகாசிரியர் என்றோ, நான்தான் இயக்கினேன் என்றோ பெருமை பாராட்ட முடியாது.

இதில் நாடகம் போடப்பட்ட முறை ரொம்பவும் வினோதமானது. நாடகம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட நாளில் மதியம், நாங்கள், பல்கலைக் கழக வளாகத்தில் கூடுவோம். எங்களில் யாருக்கும் அன்று மாலை என்ன நாடகம் போடப்போகிறோம் என்று தெரியாது. சந்தித்த நாங்கள் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சனைகள் பற்றி விவாதிப்போம். பார்க்கும் யாருக்கும், அவர்கள் இன்று மாலை ஒரு நாடகம் போடக் கூடியிருக்கிறார்கள் என்று தோன்றாது. விவாதத்தின் இடையில் யாராவது அன்று மாலை போடவேண்டிய நாடகத்தின் கருத்தையும் உருவத்தையும் Suggest செய்வார்கள். பின் விவாதத்தில் எல்லோருடைய பங்களிப்புடனும், அந்த நாடகம் செழுமைப்படுத்தப்படும், பின் யார்யார் என்ன பாத்திரத்தை ஏற்பது என்று தீர்மானிக்கப்படும், யார் என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை மட்டும் சொல்லப்படும், பின் அவர்களே தங்கள் வசனங்களை Style யை உருவாக்கிக் கொள்வார்கள். பாத்திரத்தின் வாயில் ஆசிரியனின் வசனத்தை திணிக்கும் வழக்கம் வீதியில் கிடையாது. பின் இரண்டு அல்லது மூன்று ஒத்திகை பார்த்தபின் நாங்கள் எதிரே உள்ள கடற்கரை நோக்கி நடக்கத் துடங்குவோம்.

இப்படி மேடையேற்றப்பட்ட அல்ல நிகழ்த்தப்பட்ட நாடகங்கள்தான் ‘பசி ‘ ‘வேலை ‘ ‘நவீன புத்தன் ‘ ‘சடுகுடு ‘ ‘சுயம்வரம் ‘ ‘கயிறு ‘ ‘அக்கினிப் பிரவேசம் ‘. இன்னும் சில நாடகங்கள். பிரெக்ட்டின் மொழி பெயர்ப்பு நாடகம் ‘Exception and the rule ‘ மட்டும் எழுத்து வடிவம் பெற்றது.

அனுபவத்தால் இவர்கள் இந்த நாடக வடிவின் சக்தி, இவர்களால் சென்றடையக்கூடிய மக்கள் தொகையின் எல்லை, தங்களது போதிய பயிற்சி இன்மை, இவைகளை உணர்ந்தனர்.

தாங்கள் பயிற்சி பெறவும், ஒருங்கிணைந்த பல்வேறு சிறுசிறு குழுக்கள் மூலம் இந்த நாடக வடிவை தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் கொண்டு செல்லவும் கருதி, நண்பர் கோ.ராஜாராமின் உதவியுடன், சென்னை சோழ மண்டலத்தில், பாதல் சர்க்காரின் பத்து நாள் நாடகப் பட்டறை நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் நண்பர்கள் வந்து பங்கு பெற்றனர். இலங்கையிலிருந்து கூட நண்பர் அன்டனி ஜீவா பயிற்சி பெற்றார்.

ஆனால், மத்தியதர அரசு ஊழியர்களான இவர்கள் தங்கள் எல்லைகளை யதார்த்தத்தில் பார்க்க மறுத்தது. இவர்கள் எல்லைகளைக் கணக்கில் கொள்ளாது தூரத்திலிருந்து இவர்களை இயக்க முயன்ற புறச் சக்திகளின் தலையீடு, ஐக்கிய வாழ்வு, கூட்டுச் செயல்பாடு முதலிய அடிபடை கோட்பாடுகளை மறந்து, தன் முனைப்போடு செயல்படத்துவங்கிய சிறிய ஈகோக்களின் மோதல், இன்னும் பல காரணங்களால் இந்த வீதி என்ற நாடக இயக்கம் ஒரு அகால முடிவை அடைந்தது.

ஆனால் வீதி துவக்கிய இந்த சோதனை முயற்சியும், தமிழ்நாட்டின் நாடகப் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து அது நடத்திய பாதல் சர்க்கார் நாடகப் பட்டறையின் அனுபவங்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

Series Navigation