MARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்

This entry is part of 10 in the series 20000702_Issue

பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் யமுனா ராேஐந்திரன் உரையாடல்


ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் ?

கா.சி: சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நான் இப்படிப் பார்க்கிறேன். மார்க்சியத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சோவியத் அரசினுடைய வளர்ச்சியும் சோவியத் அரசு ரஷியப் பேரரசினுடைய பகுதிகளை சோவியத் அரசுக்குள் கொண்டு வரவேண்டிய – கொண்டு வந்த நிர்ப்பந்தமும் இதன் காரணமாக, தொடக்கம் முதலே காணப்பட்ட ஒரு சமனற்ற வளர்ச்சியும். சோவியத் ரஷியப் புரட்சியை, ரஷியப் பேரரசின் மாநிலங்கள் முழுவதற்கும் புதுமையாக ஆக்க முனைந்ததில் ஏற்பட்ட வரலாற்றுப் பிரச்சனைகள் அடிப்படையில் உள்ளன என்று நான் கருதுகின்றேன். புரட்சி ஏற்பட்டது ரஷியாவில்தான், மொஸ்கோவில்தான். ஆனால் ரஷியப் பேரரசு, கஸாக்ஸ்தான்வரை துருக்கிஸ்தான்வரை நீண்டு கிடந்தது. லெனின் காலத்திலே படிப்படியாக இவையெல்லாம் அதாவது 27, 28இலை தான் வந்து சேருது. இங்கெல்லாம் பெரிய ஒரு புரட்சிக்கான நிலைமையோ அல்லது புரட்சியினுடைய தன்மைகள்பற்றியோ புரட்சிபற்றியோ அதற்கான சிந்தனைகளோ இருந்தது கிடையாது. அந்தச் சந்தர்ப்பத்திலைதான் அந்த நாடுகள்மீதும் இந்த நடைமுறைகள் போய்ச் சேர்ந்தது. அப்போது அங்கே உள்ள, அந்தந்தப்பகுதிகளில் உள்ள மக்கள் எல்லாரும் ரஷியாவில் எழுந்த மொஸ்கோ நிலைப்பட்ட ஒரு அரசியலைப் பகிர்ந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. சோவியத் அரசினுடைய தன்மை இதனால் மாறுதலடையத் தொடங்குகிறது. இது படிப்படியாக லெனின் காலத்தில் ஏற்படுகிறது. இரண்டாவது உலக யுத்தத்தின்பொழுது சோவியத் அரசினுடைய பங்கு ஒரு மாதிரியாகவும் அதன் பின்னர் இன்னொரு மாதிரியாகவும் விளங்குகிறது. ஸ்டாலினிசத்தினுடைய வளர்ச்சி என்று சொல்கிறபொழுது அதை நாங்கள் சற்று அனுதாபத்தோடும் பார்க்கவேண்டும். அதை வரலாற்றுப் புரிந்துணர்வோடு பார்க்கவேண்டும். என்னவென்றால் ஒரு காலகட்டத்தில் சோவியத் அரசு அல்லது சோவியத் பொருளாதாரம் கனரகத் தொழில்களினுடைய (heavy industries) பெருந் தொழில்களினுடைய வளர்ச்சி, பெருமளவிலான முன்னேற்றம் செய்யவேண்டிய தேவை ஒன்று இருந்தது. மார்க்சியத்தினுடைய அடிப்படையான சில விஷயங்கள் இருக்குத்தானே ? தொகைரீதியான மாற்றங்கள் கனரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது. இது சோவியத் அரசினுடைய தன்மைகளை மாற்றத் தொடங்கியது. அது, படிப்படியாக, அந்த மாற்றம் ஏற்பட்டுப் பின்னர் நாங்கள் ஸ்டாலினியம் என்று சொல்லப்படுகிற போக்கு நிச்சயமாக வந்து சேர்ந்துவிட்டது.

ய.ரா: இங்கு ஸ்டாலினியத்துடைய குணங்களாக நீங்கள் எதை எதை வரையறுக்கிறீர்கள் ?

கா.சி: ஸ்டாலினியத்துடைய குணங்களாக நான் வரையறுப்பது, பிரதானமாக, லெனின் காலத்தில் இருந்த உட்கட்சி விவாதம் இல்லாமற்போனது. அந்த உட்கட்சி விவாதமும், ஒருமைப்பாட்டின் அடிப்படையில், அதாவது ஒருமித்த சிந்தனை அடிப்படையில் விவாதங்களைக் கொண்டு செல்கின்ற தன்மையும் இல்லாமற்போனது. இதன் காரணமாக, சோவியத் அரசு மிக முக்கியமான ஒன்றானது.

என்னென்றால் லெனின் காலத்தில் , அவர் கட்சியை வாக்கெடுப்பு நிலைக்கு விடவில்லை. அதாவது கட்சியை வாக்களிப்புக்கு விடவில்லை. எல்லாரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்ல அவற்றினு‘ாடாக வருகின்ற பொது அம்சங்களை எடுத்து ஒருமித்த சிந்தனை அடிப்படையில் திரட்டினார். அப்ப, லெனினைப் போன்ற ஒரு ஐனநாயகவாதி, எல்லாக் கட்டங்களிலும் ஐனநாயகச் சூழலைப் பேணுகின்ற சிந்தனைத் திறனுள்ள, தீட்சண்யமான பார்வை உள்ள ஒரு தலைவர் இருக்கிறவரையில் பிரச்சினை இல்லை. அதன் பிறகு, இது எப்பொழுதுமே வர்றது, புரட்சியின் தலைவர்களும் புரட்சிக்குப்பின் வருபவர்களும் என்பது. அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் இந்த நிறுவனங்களுடாகவே வளர்ந்து அதன் மூலமாக முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்களால் அந்த ஐந்தாம், பதினேழாம் ஆண்டுகள் காலத்து நடைமுறையைப் பின்பற்ற முடியவில்லை. இதனால், கட்சியினுடைய ஒருமைப்பாட்டை (ஒருமித்த சிந்தனை அல்லது நிலைப்பாடு) என்பது, கட்சி நிர்வாகத்தினுடைய திணிப்பாக மாறுகின்றது. இது மிகவும் சுவாரசியமான முரண்பாடு. பிற்காலத்தில் சோவியத் அரசும் சோவியத் கட்சியும் இவ்வாறு ஏன் தனிநிலைப்பட்டன என்று சொன்னால் அது லெனினியம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதனால். பிழையை உண்மையிலேயே லெனினிலேயே போடலாம் போல இருக்கு. ஆனால், லெனினுடைய காலச்சூழல் வேறு. அவருடைய ஆளுமை இடம்பெற்ற சூழல் வேறு. அவர் நடந்த முறை வேறு. அந்த நடைமுறை பின்னர், கட்சிச் செயலாளர் விரும்புகிறார், கட்சி விரும்புகிறது என்கிற நிலைக்கு வந்துவிட்டது. இதனால் அந்த உள்கட்சி விவாதம் உண்மையில் இல்லை. அதன் பிறகு, இப்படியான ஒரு சூழல் ஏற்பட்டதற்கு, உலக-சர்வதேசிய நிலைமையும் காரணம். அதாவது, உலகயுத்தம், கெடுபிடிப்போர், கம்யூனிசத்தை ஒரு மிகவும் விரோதமான தன்மையில் பார்க்கும் முதலாளித்துவப் போக்குகள் இவை எல்லாம். இதனால் சோவியத் அரசு உண்மையில் சாதாரண முற்போக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம் ஒரு உலகப் பொதுவான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டிய தேவைகூட இருந்தது. குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு 50, 60களில் அதனையே கொண்டு நடத்தவேண்டி இருந்தது. அப்போ இந்த முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்டது. மற்றது, அந்தந்த நாடுகளில் கட்சிகளினுடைய வளர்ச்சிகள் சோவியத் ரஷியாவோடு இணைக்கப்பட்டிருந்த முறைமையிலும் ஒரு பிரச்சினை இருந்ததென்று தான் நான் கருதுகிறேன். அவற்றினுடைய இயல்பான வளர்ச்சி சில இடங்களில் பிரச்சினைக்குள்ளாயிற்று. உதாரணமாக, பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்படமுடியாத சூழலிலும், அந்த அரசிற்கு சோவியத் அரசினுடைய ஆதரவு இருந்தது. இந்த மாதிரியான நிலவரங்கள் ஏற்பட்டன. இவை யாவற்றுக்கும் மேலாக ஒரு தொடர்ந்த அரசியற்கல்வி, எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னொரு கேள்வி. அதுதான், அதிலுள்ள ஒரு சிக்கல் என்னவென்று சொன்னால், அதன் பிறகு ரஷியாவினுடைய நிலைமைகள் மாறி செளகரியங்கள் எல்லாம் வரத் தொடங்கிய பிறகு, புரட்சிக்காகப் போராடியவர்களின் தலைமுறை போய்விட்டது. அப்ப, இந்த நிலைமைகள் காரணமாக சோவியத் அரசில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவை நடந்து கொண்டிருக்கின்றபொழுது, உண்மையில் அது அரசில், குறிப்பாக அவர்களுடைய விவசாய விடயங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திற்று. விவசாயம் பிழைக்கத் தொடங்கியவுடன் இந்த நடைமுறை, நிர்வாகரீதியாக ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, ஒரு இயல்பான பொருளாதார, சமத்துவப் பொருளாதார வளர்ச்சிக்கு – சோசலிசப் பொருளாதார வளர்ச்சிக்கு – இந்த விதிகள் பிரமாணங்களே தடைகளாக இருந்தன.

உண்மையில் நம்பமாட்டாங்கள், நான் 72, 74, 76, 78களில் எல்லாம் போயிருக்கிறேன். நான் 80களில் போகவில்லை. அங்கு நாங்கள் ஒரு முறை போய் ஒரு தொழிற்சாலையில் கதைக்கின்றபொழுது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், அவர் எங்களுடன் ரொம்ப நட்புடன் பேசுகிறபொழுது சொன்னார் சிலவேளைகளில் தங்களிற்குச் சிக்கல் இருக்கிறது, அடிக்கடி தலையீடு செய்கின்ற சுற்று நிருபங்கள் போன்றவையால். நிர்வாகத்துக்கு அப்படிப் பிரச்சினை இல்லை. அங்கு உணவுப் பிரச்சினை ஒன்று படிப்படியாக வளர்ந்துகொண்டு வருகின்றது, 70களின் பிற்கூற்றுகளில் இருந்து 80கள் வரை, பாணுக்கு கியூ, இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம். அதெல்லாம் வெறும் முதலாளித்துவப் பிரச்சாரங்கள் மாத்திரமல்ல, உள்ளுக்குள்ளேயே பிரச்சினையாகத் தொடங்கிவிட்டது. ஆனால் இவற்றினுடாடாக ஒரு சமத்துவம் இருந்தது. உண்மையான சமூக ஐனநாயகம் இருந்தது, கவலை என்னென்று சொன்னால் அந்த மேற்கத்தைய நாகரீகத்தின் பண்பு, அவைகளை எவ்வாறு எதிர்நோக்குவதென்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. நான் கஸாக்ஸ்தானுக்குப் போயிருக்கிறன், ஆர்மேனியாவுக்குப் போயிருக்கிறன். இப்படியான இடங்களிலை போய்ப் பார்த்த பொழுது, அந்த சோவியத் புரட்சி பற்றிய அரசியல் பிரக்ஞை எல்லா இடங்களிலும் சமமாக இருந்ததாகச் சொல்லமாட்டேன். அப்ப, இத்தகைய காரணங்களினாலதான் சோவியத் வீழ்ச்சி ஏற்பட்டதென்று நான் கருதுகிறன். சோவியத் வீழ்ச்சி, அந்தச் சிதைவு ஏற்பட்டதுக்கு அகக் காரணிகளும் உண்டு. புறக் காரணிகளோ உலகத்திற்குத் தெரிந்தது. அவர்கள் அந்த நிலைமையை அழிக்கவேண்டும் என்று நீண்டகாலமாகத் தொழிற்பட்டமை. ஆனால், ஒரு வெறும் சதி என்பதனால் மாத்திரம் இது ஏற்பட்டதென்று நான் கருதமாட்டேன்.

ய.ரா: மற்றது, ஒரு புரட்சி வந்து ஒரு கால கட்டத்தில் நடந்த பிறகு ஐனநாயக நிறுவனங்களை கட்டவேண்டியது ஒரு மிக முக்கியமான விடயந்தானே ? இவர்கள் ஐனநாயக நிறுவனங்களை கட்டுவதில் என்னமாதிரி நிலைப்பாடு எடுத்திருந்தார்கள், ஒன்று ? மற்றது இன்னொன்று, பெரும்பாலும் வரலாற்றுரீதியில் பார்த்தோம் என்றால் எந்த சமூக அமைப்புமே ரொம்பக் கெட்டி தட்டிப்போகும்போது அதிகாரம் வரும்போது அதற்கு முதல் குரல் எழுப்புபவனாகக் கலைஞன்தான் இருக்கிறான். அப்ப இந்தக் கலைஞர்கள் சம்பந்தமான ஒரு சகிப்புத்தன்மையும் இருக்கவேண்டிய சூழல் ஒன்று இருக்கிறது. சோவியத் யூனியனிலும் சரி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளும்சரி, புரட்சிக்குப் பிந்திய சமூகங்களிலும் சரி, இன்றைக்கு வரைக்கும் அந்தப் பிரச்சினை ஒன்றிருக்கு. இதனை மார்க்சிய வாதிகள் அல்லது புரட்சியாளர்கள் என்ன மாதிரி அணுகியிருக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள் ?

கா.சி: என்னுடைய நிலையில் இருந்து, ரொம்ப சூசகமாகத்தான், நான் அப்போது சொன்னதைத் திருப்பிச் சொல்ல விரும்புகிறேன். அதாவது, வரலாற்றுப் பாத்திரம் மாறத் தொடங்க, அரசின் வளர்ச்சி, அரச நிறுவனங்களின் வளர்ச்சி, கருத்துநிலையை நிலைநிறுத்துவதற்கான நடைமுறைகள் – இவை எல்லாம் படிப்படியாக ஒரு நிர்வாகமயப்படுத்தப்பட்ட விடயங்களாக மாறிவிட்டன. அப்ப இந்த நிர்வாகமயப்பாட்டுக்கு நடைமுறை வரலாற்று முன்னுதாரணம், – ரஷியப் பேரரசுடைய – உதாரணம் தான். என்னைக் கேட்டால், அடிப்படையில் சோவியத் வீழ்ச்சியினுடைய காரணமே அதுக்குள்ளைதான் இருக்கு. இதைப் புரிந்துகொள்ளேல்லை.

கோர்க்கி, செலக்கோவின் பின்னர் ஒரு இலக்கியப் படைப்பாக்கப் பாய்ச்சல் வரமுடியாமற் போனதற்கான ஒரு காரணம் இந்த நடைமுறைதான். இந்த நடைமுறைகள் இலக்கியத்தோடு அல்லது கலைஇலக்கியத்தோடு தொடர்பு கொண்டிருந்த முறைமையில் காணப்பட்ட பிரச்சினை. மூன்றாவது உலகநாடுகளில் இருந்த கலை இலக்கிய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்ட அளவுக்கு, அக்காலகட்டத்து சோவியத் ரஷியா அறுபதுகள் எழுபதுகளில் தங்களுடைய கலை வளர்ச்சிகளை – உள்ளுர ஏற்பட்ட வளர்ச்சிகளை – அது புரிந்துகொண்டதாக எனக்குப்படவில்லை. இதன் பின்னர் இந்த சீன-சோவியத் முரண்பாடு வந்ததுதானே, அது உண்மையில் அரசுகளின் முரண்பாடு. அது மார்க்சியத்தின் முரண்பாடென்று நான் எடுக்கமாட்டேன். ஆனால், அதை மார்க்சியத்தின் முரண்பாடாகத்தான் நாங்கள் கருதினனாங்கள். அப்ப, இந்தக் கலைகள் சம்பந்தமாக சிந்தனை முறைமைகளை எவ்வாறு உள்வாங்கிக்கொள்வது எவ்வாறு பார்ப்பது என்பது சம்பந்தமாக…. இப்ப, டோல்ஸ்டோயினுடைய இடம் என்ன என்பது பற்றி லெனினுக்குத் தெளிவிருந்தது. புஷ்கினுடைய இடம் என்ன என்பது பற்றிய தெளிவு அதற்குப் பின் வந்தவர்களுக்கு இருக்கேல்லை. அந்தக் கால கட்டத்திலை – நான் பேரை மறந்து போனன் – ஒரு இளம் கவிஞர் , அவரை நான் சந்திச்சுக் கதைச்சனான். ரொம்ப நீண்ட நேரமாகப் பேசினோம். அவர் வந்து கட்சியினுடைய வேலைகளைச் செய்கிறார், நிறைய இளம் எழுத்தாளர்களைச் சந்திக்கிறார். ஊடாட்டம் எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த அளவுக்குப் புதிய சிந்தனைகளை அவர் கொண்டு வருகிறார், சொல்லுகிறார் என்பது…. ? அதில் ஊக்கம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அந்த ஊக்கம் ? இது ஒரு தவிர்க்கமுடியாத நிலைமையாக – அதைத்தான் நான் சொல்லுறன், நான் திருப்பித் திருப்பிச் சொல்வது என்னவென்றால் அந்த அரசினுடைய மேலாண்மை பற்றி அடிப்படையாக, நான் என்ன சொல்லுறன் என்றால், சுருக்கமாகச் சொல்லுறனே, நான் கிராம்ஸியை இங்க பொறுத்திப்பார்க்க விரும்புறன். சோவியத் ரஷியாவில், எங்கை நாங்கள் பிழைபோச்சுது எண்டிறதைப் பாக்கிறத்துக்கு, இந்த கலாச்சார மேலாண்மை எல்லாம் பார்ப்பம். எங்கை பிரச்சினை வந்ததெண்டு பாக்கிறத்துக்கு நாங்கள் கிராம்ஸியை சோவியத் ரஷியாவுக்கு பொறுத்திப் பார்க்கலாம்.. சோவியத் ளவயவநமுக்கியமா ? சோவியத் அரசு தன்னுடைய கருத்துநிலையை நிறுவுவதற்கான முக்கிய மையங்களாக ஊடகங்களாகக் கொண்டவை எவை ? அவற்றினுடைய அமைப்பிலுள்ள பிரச்சினைகளை. அப்படிப் பாத்தமெண்டு சொன்னா இந்தப் பிரச்சினை இல்லாமப் போகும்.

ய.ரா: அப்துல்லா ஒச்சலான் சோசலிசத்தின் இன்றைய வீழ்ச்சி சம்பந்தமாக ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதிலைகூட இந்த சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு காரணம், ஒரு ‘ஸ்பிரிச்சுவல் கல்ச்சர் ‘ ‘டெவலப் ‘ பண்ணுறதிலை அது ஒரு மிகப் பெரிய பிழை விட்டிருக்கிறது என்கிறார். உதாரணமாகப் பார்த்தீர்கள் என்றால் மதம், மற்றது சடங்குகள், மரபு சார்ந்த இந்த விஷயங்களில் வந்து ஒரு கெட்டி தட்டின ஒரு நிலைப்பாட்டை அது கொண்டிருந்தது என்றும் மற்றது இன்னொன்று தனக்கே உரிய ‘சோசலிஸ்ட் ஸ்பிரிச்சுவல் கல்ச்சர் ‘ ஒன்றை மாற்றாக உருவாக்கத் தவறியது என்றும் ஒரு விஷயத்தை அவர் சொல்கின்றார்.

கா.சி: அது ரொம்ப சுவாரசியமான ஒரு விஷயம். என்னென்று சொன்னால் 74, 76களில் நடந்த ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் மகாநாட்டிலை, ஆர்மேனியாவில், கவியரங்க அம்சம் நடந்தது. அப்ப தமிழ்க் கவிதைகள்பற்றி நான் வாசித்தபோது அங்கு இந்த பிரச்சினை வந்தது. ‘ஸ்பிரிச்சுவல் டெவலப்மென்ட், ‘ மற்ற ‘லிட்டரேச்சர் அண்ட் ஸ்பிரிச்சுவல் டெவலப்மெண்ட். ‘ இந்த முரண்பாடு ஒன்று இருக்கு. அது ‘ஸ்பிரிச்சுவல் ‘ என்று சொன்னவுடனே ஆத்மார்த்தமான வளர்ச்சி. அந்த ஆத்மார்த்தமான வளர்ச்சி என்கிறது எங்களுக்கு மதம்சார் வளர்ச்சியாகத்தான் இருக்கிறது. நாங்கள் இப்போதும் அதை அப்படித்தான் பார்க்கிறோம். அது ‘ஹூயுமன் ஸ்பிரிட் ‘டினுடைய வளர்ச்சி, அதனுடைய தன்மைகள், ‘ஸ்பிரிச்சுவல் ‘ என்பதற்கு ஒருமானுடப் பரிமாணம் இருக்கிறது என்கிற அந்த வரையறை எங்களுக்கும் வரேல்லை அங்கையும் போகேல்லை. சரீங்களா ? ஏன் நான் அந்த எழுத்தாளர் மகாநாட்டைப்பற்றிச் சொல்லுகிறேன் என்று சொன்னால், நாங்கள் அந்த பிரச்சினையை அங்கை எழுப்புறோம்.. உங்களுக்கு ‘ஸ்பிரிச்சுவல் ‘ என்றால் நீங்கள் எழுபது வருஷ, அறுபது வருஷ புரட்சி அனுபவத்தோடு இருக்கிறீங்கள். எங்களுக்கு ‘ஸ்பிரிச்சுவல் ‘ என்றால் வேறை அர்த்தம். பிரெஞ்சிலை இப்படிச் சொல்லுகிறார்கள், இதை எப்படிப் பார்க்கிறதென்று நான் கேட்டன்.

உண்மையிலேயே நம்பமாட்டாங்கள், பலருக்கு அது சிக்கலாக இருந்தது. ஒரு பெண்வந்து என்னோடை பேசினாங்க, அந்த மாநாடு முடிஞ்ச உடனை. அவ சொன்னா நீங்க சொன்னது பல விஷயங்களிலை இருக்கு. நாங்கள் அந்தத் தன்மைகளை வளர்த்தெடுக்கவில்லை. இதற்குக் காரணம் என்னவென்று சொன்னால் அவங்க மதம்சார் மரபையும் கலாச்சாரம்சார் மரபையும் விளங்கிக்கொண்டமுறை. அப்போ, இதனாலைதான் ஜரோப்பிய பண்பாட்டுக்குள்ளேயே கம்யூனிசமும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வளர்ந்த முறைகளில் நாங்கள் பல வேறுபாடுகளைக் காண்கிறோம். இத்தாலிக் கட்சிக்கு ஒரு வளர்ந்த முறைமை இருக்கு. பிரெஞ்சுக் கட்சிக்கு ஒரு வளர்ந்த முறைமை இருக்கு. வித்தியாசமானது. நிச்சயமாக வித்தியாசமானது. அதுக்குள்ளாலைதான் ஒரு அல்துாஸர் வரமுடியும். வெளிப்படையாகப் பேசமுடியும். இந்தப் பாரம்பரியம் ஏன் ரஷிய அரசிலை இல்லாமற் போனது ? அப்ப என்னெண்டு சொன்னால், நான் நம்புறன் அந்த அரசு அமைப்புநிறுவனமயமாதல் தன்மை ஆகிட்டுது. அதுதான் அடிப்படை. எல்லாமே அப்படி நடந்துகொண்டு போறபொழுது அந்த நிறுவனஇறுக்கமாதல்- அது வந்தவுடன் யார் நமக்குச் சார்பாகப் பேசுகிறார்கள் என்பது முக்கியமாகின்றதே தவிர, யார் நம்மைக் கேள்விக்குட்படுத்தவில்லையோ அது முக்கியமாகின்றதே தவிர, யார் அடிப்படைக் கேள்விகளைக் கிளப்புகிறார்களோ அது முக்கியமாகப்படாமற் போகின்றது.

ய.ரா: மற்றது நாங்கள் பெரும்பாலும் சோசலிசத்தின் வீழ்ச்சிபற்றிப் பேசும்போது ஐனநாயக நிறுவனங்களைக் கட்டியமைப்பது சம்பந்தமான கேள்வி கூடவே வருகின்றது. அப்படி வரும்போது என்னென்னு கேட்டாங்கன்னா ஐனநாயக நிறுவனங்களைக் கட்டுவதென்பது ஒன்று அரசியல் சுதந்திரத்துடனும் தனிநபருடைய பொருளியல் சுதந்திரத்தோடையும் சம்பந்தப்பட்ட விஷயம். இப்ப இந்த சோவியத் யூனியனுடைய கிழக்கு ஜரோப்பிய நாடுகளுடைய வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு நவ தாராளவாதத்தின் பாலான ஒரு ஈர்ப்பு எல்லா இடதுசாரிகளுக்குமே வந்திருக்கு. உதாரணமாக லத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்கள் பெரும்பாலும் அந்த நவ தாராளவாதத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றன என்றுதான் பெரும்பாலான ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். நவ தாராளவாதம் அத்துடன் பின்நவீனத்துவம் சம்பந்தமான விவாதங்களும் வரும்போது ஒரு தனிநபருடைய அரசியல் பொருளியல் உரிமைகளோடு இந்த வித்தியாசங்கள் என்று சொல்வதை அங்கீகரிப்பது என்று இணைத்துக் கொண்டால் ஒரு சாத்தியமான எதிர்காலத்திற்கான ஐனநாயக அமைப்பை உருவாக்கமுடியும் என்பதுபோல் சொல்கிறார்கள்.

கா.சி: அதிலைதான் அடிப்படையில் இருந்து தொடங்க விரும்புகிறேன். அதாவது வந்து, என்னைப் பொறுத்தவரையில் சோசலிசத்தின் வீழ்ச்சி என்று நீங்கள் ஒரு சொல்லுப் பாவிக்கிறீர்கள்தானே. அதை நான் எப்படிச் சொல்லுவேன் என்று சொன்னால் சோசலிசப் பரீட்சார்த்தங்களின் வீழ்ச்சி அல்லது சிதைவு. இதை நான் சோசலிசத்தின் வீழ்ச்சி என்று எடுக்கிறதற்கு இன்னும் ‘ரெடி ‘யாகவில்லை. அந்த சோவியத் அனுபவம் – சோவியத் சோதனை- அதிலை ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் அவைகள்தான் ‘சோசலிசம் ‘ என்று அல்ல. பிற்காலத்தில் என்ன ஆகிவிட்டதென்று சொன்னால், சோவியத் சோதனை முயற்சியில் காணப்பட்ட அம்சங்கள் அத்தனையும் சோசலிசத்தினுடைய அம்சங்களாக எடுக்கப்பட்டது. அதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். சோவியத் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், சோவியத் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான மார்க்சிய நிலைப்பட்ட காரணங்கள் – இதுகளுக்கு நான் திருப்பித் திருப்பிப் போக விரும்புவதற்கான காரணம்- அரசியல- அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகள் என்னென்று சொன்னால் அங்கு நடந்த சோசலிச முகாமைத்துவம், சோசலிச அரசு நிர்வாகமுறை-. அதிலை இருந்த பிரச்சினைதான்.

இது எந்தளவிற்கு அந்த அடிப்படையான வாதத்தைப் பிரச்சினைப்படுத்துது என்கிறது இன்னொரு கேள்வி. சீனாவிலும் அந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கு. அது இன்னொரு விதமான பிரச்சினை. அது முற்றிலும் இன்னொரு பண்பாட்டுச்சூழலில் ஏற்பட்டது. சரியோ பிழையோ இதற்குள் தாக்குப் பிடிச்சுக் கொண்டிருக்கிற கியூப சோசலிசம் கியூப சோதனை என்று ஒன்றிருக்கு. கிழக்கு ஜரோப்பிய அனுபவங்கள் அதனால் ஏற்பட்ட சிதைவுகள் எல்லாம் இருக்கு. இவை எல்லாம் ஒரு புறம் இருக்க இந்தியாவிலை ஒரு பாராளுமன்ற ஐனநாயக அமைப்புக்குள்ளை மிகத் திரிபுபட்ட அல்லது மிகவும் வெவ்வேறுபட்ட சூழலில் வங்காளத்தில் ஒரு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி இருக்கு. 15 வருஷமாக அல்லது இருபது இருபத்தைஞ்சு வருஷமாக இருக்கு. கேரளாவிலை அதைச் செய்யமுடியுது. சோசலிசத்தைப்பற்றிய எங்களுடைய பார்வை இவை எல்லாவற்றையும் உள்ளடக்கவேணும். சோசலிசத்தினுடைய எதிர்காலம் பற்றிய நடைமுறைகள் அதனுடைய சோதனை அம்சங்கள் எல்லாத்தையும் நான் ஒரு புறத்திலை கியூப சோதனை இன்னொரு புறத்திலை ேஐாதிபாசு இன்னொரு புறத்திலை காலஞ்சென்ற நம்முடைய ஈ. எம். எஸ். என். அதொரு முக்கியமான சோதனை முயற்சி. அது பூரண கம்யூனிஸம் அல்ல. இருந்தாலும் அது முக்கியமான சோதனை. அதே நேரத்தில் சோவியத் யூனியனில் நடந்தவை. அவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துப்பார்க்கிற பொழுது இந்த மார்க்சிய பொருளாதார முறைமைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் நமக்குத் தெரிய வரும். இந்த நவ தாராளவாதப் போக்கு என்று சொல்லப்படுகிற இந்த முறைமை எங்களைப் பழையபடி, நான் நம்புறன், நாங்கள் இந்த விவாதங்கள் எல்லாத்துக்குள்ளாலையும் விடுபட்டுப்போயிருக்கிற ஒரு மார்க்சியச் சிந்தனையாளரிடம் எங்களைக் கொண்டு செல்லவேண்டும் என்று நான் நினைக்கிறன். அவருடைய சிந்தனையை அனுதாபரீதியாக எந்தக்காலத்திலும் முன்னர் பார்க்காதவன் என்கிற வகையில் – ட்ரொட்ஸ்கி. எனக்கு ட்ரொட்ஸ்கி இப்ப சில விஷயங்களை, நாங்கள் ட்ரொட்ஸ்கியத்தை மிகவும் ஆழமாகப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறன். நுிரந்தரப் புரட்சி என்னும் கருத்தாக்கம்-அந்த விஷயத்தை நாங்கள் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கவேணும். இப்ப கலாச்சாரம் பற்றியும் இலக்கியம் பற்றியும் ட்ரொட்ஸ்கி சொன்ன விஷயங்களை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கவேணும் போலை இருக்கு. இதனாலைதான் நான் சொல்றனான் சோவியத் அரசினுடைய வளர்ச்சியினுடைய ஒரு முதல் பலிக்கடாவாக ட்ரொட்ஸ்கி போய்விடுகிறார். சரீங்களா ? அப்ப இவற்றினுடாடாக நாங்கள் வளருகிற தன்மையை நாங்கள் காணுகிறோம். இப்ப நீங்கள் சொல்லுகிற இந்த நவ தாராளவாதம் வந்து ஒரு ஜரோப்பியச் சூழலில்தான் பேசப்படுகிறது. இந்த நவ தாராளவாதம் மூன்றாம் உலக நாடுகள், இல்லை என்று சொன்னால் சீனா தவிர்ந்த ஆசிய நாடுகளில் எந்த அளவிற்குப் பொருத்தமானது என்பது இன்னொரு விஷயம். அதுபற்றி நாங்கள் மிக நுணுக்கமாக ஆராயவேண்டிய தேவை இன்னும் இருக்கென்றுதான் நான் நினைக்கிறன்.

இதுக்குள்ளை என்ன விஷயம் என்று சொன்னால், அதுதான் அடிப்படையான முதலாளித்துவத்தின் தன்மை அறுபதுகளின் பின்னர் உருத்தெரியாமல் மாறியது. முற்றமுழுக்காக மாறியது. ஏர்னஸ் மேன்ட்டல் வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் அல்லது பிற்கால முதலாளித்துவம் எனும் வாதத்தை வளர்ததெடுக்கிறார். அவர் வைக்கேல்லை சோவியத் எதிர்பார்ப்புகள் மாதிரிஅல்லது , அரசுகளின வீழ்ச்சி எல்லாம் வருகுது என்ற மாதிரி.

நாங்கள் அதைத் தவறா இணைச்சிட்டம். முதலாளித்துவத்தின் உள்ளுறை சக்தியை நாங்கள் புரிஞ்சு கொள்ளேல்லை. அதனுடைய சாத்தியப்பாடுகளை அதனுடைய ஆற்றல்களை நாங்கள் புரிஞ்சு கொள்ளேல்லை. சரீங்களா ? அப்ப, அது, இந்த மார்க்சியத்தினுடைய சில முக்கியமான அம்சங்களை உள்வாங்கி அது தன்னை நிலைப்படுத்திக் கொண்டுது. சரி. அப்ப நாங்கள் இப்ப வர்க்கம் அப்பிடி என்று பார்க்கேக்கை, ஒரு நெருக்கடி வருகிறபொழுது பாருங்கோ எங்களுடைய பழைய வரையறைகள் எல்லாம் சரியா எண்டு பார்க்கணும். அது அவசியம் எண்டு நான் கருதுறன். அப்பிடிப் பார்க்கிற பொழுதுதான் நாங்கள் ஏற்கனவே சில மார்க்சீய வகைத்திணைகளுக்குக் கொடுத்த வரையறைகள் எல்லாம் ஒரு காலச்சூழலில் கொடுத்த வரையறைகள்தான். ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார ஓட்டப் பின்னணியில் கொடுத்த வரையறைகள்தான். அதை எல்லாம் மாறிப் பார்க்கவேண்டி இருக்கிறது.

இன்றைக்குள்ள நவ தாராளவாதம்கூட முதலாளித்துவத்தினுடைய தன்மைகள் காரணமாக மாறியிருக்கு. இப்ப ஒரு ஓற்றதை¢துருவ உலகு-. ஒரு பெரிய கலாச்சாரத்தை முதன்மைப்படுத்திப் பார்க்கிற தன்மை இவைகள் எல்லாம் முக்கியமா இருக்கு. வடிவாப் பார்க்கலாம் இந்தக் கால கட்டத்திலை மேலுக்கு வந்திருக்கிற அறிவுத்துறைகளைப் பாருங்கோ. நிர்வாகவியல் வந்திருக்கு, கலாச்சார ஆய்வுகள் வந்திருக்கு. இதெல்லாம் முக்கியமான விஷயங்கள். கடந்த 10, 20 வருடங்களுக்குள் நடந்த அறிவியற்துறை மாற்றங்கள் அல்லது அறிவுத்துறை மாற்றங்கள். இப்படிப் பார்க்கிறபொழுதுதான் இந்த நவ தாராளவாதம் என்று பார்க்கிற தன்மை ஜரோப்பிய மரபில் உண்டு. அந்தப் பார்க்கிற முறைமை இல்லாததன் காரணமாக, ஜரோப்பாவின் கம்யூனிச வளர்ச்சிக்கு பாதகங்கள் ஏற்பட்டது என்பதும் உங்களிற்குத் தெரியும். அதனால்தான் அல்து‘ாஸர் போன்றவர்கள் எல்லாம் புதிய சிந்தனை முறைமைகளைத் தோற்றுவித்தார்கள். துரதிர்ஷ்ட வசமாக என்னவென்றால் நாங்கள் மார்க்சியத்தினுடைய மார்க்சியதர்க்கம் அதுக்கு ஒரு தர்க்கம் மார்க்சீய தர்க்கம் என்று ஒன்று இருக்கு. மார்க்சீய தர்க்கத்தை மார்க்சியம் இடைக்காலத்தில் தவறவிட்டுவிட்டது. நாங்கள் மற்றபடி அந்த தர்க்கத்தைப் மீட்டெடுக்க வேணும்..

– தொடரும்

நன்றி : உயிர் நிழல்: மார்ச்-ஏப்ரல்: பிரான்ஸ் :2000. e-mail : EXILFR@aol.com. உயிர் நிழல் நேர்முகத்திலிருந்தான ஆங்கில வாக்கியங்கள் இந்த வடிவத்தில் முழக்க தமிழில் மாற்றப்படடிருக்கிறது. திண்ணைக்காக வாசிப்புக்கருதி மொழியமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. மறுபிரசுரத்திற்கு அன்புடன் அனுமதியளித்த உயிர் நிழல் ஆசிரியர்கள் லமி கலைச் செல்வன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி உரியது.

 

 

  Thinnai 2000 July 02

திண்ணை

Series Navigation