தமிழுக்கு ஞானபீடப் பரிசு

This entry is part of 11 in the series 20000618_Issue

வெளி ரெங்கராஜன்


தமிழுக்கு ஏன் ஞானபீடப் பரிசு கிடைக்கவில்லை என்று அண்மையில் சன் டி.வி சில எழுத்தாளர்களை பேட்டி கண்டது சுஜாதா, அப்துல் ரகுமான், அகிலன் கண்ணன் போன்ற எழுத்தாளர்களை. மொழி குறித்த ஒரு போலிப் பெருமை தான் இவர்களுடைய பேட்டியில் வெளிப் பட்டது எந்த இலக்கியத்தின் சார்பாக குரல் கொடுக்கிறார்கள் என்பதை இவர்கள் தெளிவுபடுத்தவில்லை. தமிழுக்கு ஞான பீடப் பரிசு கிடைக்காததற்க்கு இவர்கள் தெரிவித்த சில காரணங்கள்:

1. தமிழ்ப் படைப்புகளை மற்ற மொழியில் அறிந்துக் கொள்வதற்க்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை. அதற்கான நல்ல மொழிப் பெயர்ப்பாளர்கள் கிடையாது. மொழி பெயர்க்கப்படுபவைகளும் மிக சாதரணமான படைப்புகளே. இதனால் தமிழ்ப் படைப்புகள் குறித்து ஞான பீடப் பரிசுக் குழுவுக்கு உய்ர்ந்த அபிப்பிராயம் ஏற்படுவதில்லை.

2. தங்கள் மொழிக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்று வேறுபாடுகளை மறந்து மற்ற மொழிக்காரர்கள் ஒரே முனைப்புடன் இருக்கிறார்கள் ஆனால் தமிழில் அதிக கருத்து வேறுபாடுகளும், உட்பூசல்களும் இருக்கின்றன.

இவர்கள் தெரிவித்துள்ள இந்த காரணங்கள் தமிழ்ச் சூழலின் உண்மை நிலையைப் பிரதிபலிப்பவையா என்பதை நாம் ஆராய வேண்டும்.

எல்லா மொழிகளிலும் உள்ள சிறப்பான படைப்புகள் பற்றிய நேரிடையான அனுபவம் ஞான பீடப் பரிசுக் குழுவுக்கு ஏற்பட ஒருபோதும் வாய்ப்புகள் இல்லை. அது பரிந்துரைகளின் மூலமே செயல்படுகிறது. மற்றொரு உயர்ந்த விருதான சரஸ்வதி சம்மான் விருதுக்கான தேர்வுக்குழு அந்தந்த மொழிகளில் உள்ள இலக்கியப் பத்திரிக்கைகளிடம் உரிய படைப்பாளிகளைப் பரிந்துரைக்கும்படி கோருகிறது. அதனால் தமிழில் தரமான பரிந்துரையாளர்கள் இருக்கிறார்களா என்பதை முதலில் நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் தமிழைப் பொறுத்த வரை இந்த அமைப்புகளில் இடம் பிடிப்பவர்கள் எல்லாம் பல்கலைக் கழக பேராசிரியர்களும், வர்த்தக ரீதியாக பிரபலமான எழுத்தாளர்களும்தான் இவர்களுக்கு தமிழ் இலக்கியத்தின் நவீனப் போக்குகள் குறித்தோ, உலக இலக்கியம் குறித்தோ எந்தவிதமான பரிச்சயமும், பார்வையும் கிடையாது. ஏற்கனவே அகிலன் விஷயத்தில் இது போன்ற ஒரு விபத்து ஏற்பட்டது. அகிலனுக்கு ஞான பீடப் பரிசு கொடுக்கப்பட்டபோது அகிலனை விட தரமான பல எழுத்தாளர்கள் தமிழில் இருந்தனர். ந.பிச்சமூர்த்தி, மெளனி, புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி, (எழுத்தாளர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு கொடுக்க கூடாது என்று சட்டம் இல்லை. ஒரு மொழிக்கு கிடைக்கும் பங்களிப்பு என்பது தான் தேர்வின் அடிப்படையாக இருக்க முடியும்.) சுந்தர ராமசாமி, ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஆர்.ஷண்முகசுந்தரம், ப.சிங்காரம், ஆதவன், சம்பத் என்று பலரைக் குறிப்பிட முடியும். ஆனால் பரிந்துரைக்கும் குழுவுக்கு இவர்களில் பெரும்பாலானவர்களை யார் என்றே தெரியாது. தன்னுடைய மொழியில் நிகழ்ந்திருக்கிற மேலான சாதனைகளைப் பற்றிய பரிச்சயம் இல்லாத மொழிப் பேராசிரியர்களை தமிழில் தான் பார்க்க முடியும். இவர்களுக்கு தரம் குறித்த ஒரு அளவுகோல் கிடையாது. யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்கள்தான் நல்ல எழுத்தாளர்கள். ஞான பீடப் பரிசுக் குழுவுக்கும் எழுத்தாளர்களுக்கு மொழியில் உள்ள பிராபல்யம்தான் அளவுகோலாக இருக்கிறது.

ஆனால் தமிழில் மிகவும் மேலோட்டமாக எழுதுபவர்கள்தான் பிரபலமாக இருக்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தின் தேவைகளுக்கேற்ப இயந்திரமாக எழுதிக் குவிப்பவர்கள்தான் இங்கே பெரிய எழுத்தாளர்கள். ஆழமான, செறிவான எழுத்துக்கள் சிறிய வட்டத்திலேயே இயங்க வேண்டியிருக்கிறது. மொழிக்கு உண்மையான பங்களிப்பு என்பது இந்த எழுத்துக்கள் மூலமே சாத்தியப் படுகிறது. ஆனால் இலக்கிய உணர்வு சார்ந்த இத்தகைய தீவிர எழுத்துகளுக்கு உரிய மதிப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. நசிவு எழுத்துகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் எழுத்து வியாபரிகள் செழிப்புடன் திளைத்துக் கொண்டிருக்க, இலக்கிய அக்கறைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எழுத்தை நம்பி வாழ முடியாமல் பிழைப்புக்காக வேறு வேலைகளில் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த நிறுவனங்கள் ஈடுபாடு இல்லாமல் கூலிக்கு மாரடிப்பவர்களையே நாடுகின்றன. இது போன்ற அவல நிலை வேறு எந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை.

அண்மையில் ஞான பீடப் பரிசுப் பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர், கிரிஷ் கர்னாட் போன்றவர்கள் கலை, இலக்கியம் சார்ந்த தீவிர செயல்பாடுகள் மூலமே கவனம் பெற்றவர்கள். பலவிதமான வர்த்தகப் போக்குகளுக்கிடையிலும் அங்கே அரசாங்கமும், பத்திரிக்கைகளும் தகவல் ஊடகங்களும் உண்மையான கலை, இலக்கிய அக்கறைகளை அடையாளம் கண்டு கெளரவிக்கின்றன. கேரளத்தில் ஒரு இருபதெட்டு வயது எழுத்தாளர் தன்னுடைய எழுத்தின் பலத்தில் மட்டுமே சாகித்ய அகாடமி பரிசு பெறக்கூடிய சூழல் இருக்கிறது. ஒரு மொழியில் நிலவும் சூழல் தானாகவே அந்த மொழிக்கு ஒரு கெளரவத்தை பெற்றுத் தந்து விடுகிறது.

ஆனால் தமிழில் மொழி குறித்த போலிப் பெருமையைத் தவிர இலக்கிய வளர்ச்சி குறித்த ஆழ்ந்த அக்கறைகள் செயல்படுவதில்லை. சிலைகளை நிறுவுவதும் பெயர்களை மாற்றுவதுமே இந்த அரசாங்கத்துக்கு பெரிய இலக்கிய சேவையாக இருக்கிறது. தமிழ்ப் பத்திரிக்கைகள் இனக்கவர்ச்சி, மலிவான சினிமா, மலிவான அரசியல் இவைகளை வைத்தே பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவை. தொலைக்காட்சி ஊடகங்கள் பொழுதுப் போக்கு என்ற பெயரில் மக்களின் அழகுணர்வை தினமும் காயப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மேலான மதிப்பீடுகள், கலை இலக்கிய அக்கறைகள், சமூக ஈடுபாடு ஆகியவற்றை வெளிப் படுத்துவதில் மற்ற மொழி ஊடகங்கள் காட்டும் ஆர்வம் தமிழில் குறைந்த அளவுக்கு கூட இல்லை. இந்நிலையில் இங்கே நல்ல இலக்கியம், நல்ல நாடகம், நல்ல சினிமா இவற்றுக்கு ஒரு பரந்துபட்ட இயக்கம் எவ்வாறு சாத்தியப்படும் ? தனிமனித ஆர்வங்களே இங்கு சிறு பத்திரிகைகளாகவும், குறும்படங்களாகவும், திறந்தவெளி நாடகங்களாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றவை. இவையே மொழிக்கு ஒரு செறிவான சூழலை வழங்குபவை.

வர்த்தக மதிப்பீடுகளுக்கு இரையாகிப்போன இத்தகைய ஒரு சூழலுக்கு பங்களிப்பு செய்துக் கொண்டிருப்பவர்களே தமிழுக்கு ஏன் ஞான பீடப் பரிசு கொடுக்கவில்லை என்று கேட்பது மிகப்பெரிய வேடிக்கை. உலகெங்கும் கலைப் படங்கள் குறித்த அளவு பெருகி வரும் நிலையில் தொடர்ந்து ரசனையற்ற, அறிவுள்ள மனிதன் உட்கார்ந்து பார்க்க லாயக்கற்ற படங்களையே எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா ஆஸ்கார் பரிசு கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவது போல்தான் இதுவும்.

முதலில் இலக்கிய உணர்வுகள் தமிழில் கெளரவிக்கப்படட்டும். சி.சு.செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவலை தமிழக அரசின் நூலகத் துறையே அங்கீகரிக்காதபோது அவரை ஞான பீடம் ஏன் கவனிக்கவில்லை என்று எப்படிக் கோரமுடியும் ? தமிழுக்கு அவமரியாதை செய்பவர்கள் வெளியே இருப்பவர்கள் அல்ல.

 

 

  Thinnai 2000 June 18

திண்ணை

Series Navigation

{ Comments are closed }