மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

க்ருஷாங்கினி


“குருவே சரணம்” என்னும் தலைப்பில் ஒரு இசை நூல் சதுரம் பதிப்பகம் மூலம் கொணர்ந்திருக்கிறேன். 19 கர்நாடக இசைக் கலைஞர்களின் நேர்காணல்களை எழுத்தாக்கம் செய்து தொகுத்திருக்கிரேன். இம்மாதம் 20ஆம் தேதி தாம்பரம் மியூசிக் கிளப் அதை தாம்பரத்தில் வெளியிடுகிறது.

மிருதங்க வித்வான் திரு T.K.மூர்த்தியின் நேர்காணலை இங்கு இணைத்திருக்கிறேன்.

க்ருஷாங்கினி
நூல் பெறவிரும்புவோர்
சதுரம் பதிப்பகம்
#34,சிட்லபாக்கம் 2ஆம் பிரதான சாலை,
தாம்பரம் சானடோரியம், சென்னை-600 047 முகவரியை தொடர்புகொள்ளலாம்
P.n. 2223 1879


T.K.மூர்த்தி

எனது வம்சமும் அதில் எனது இடமும்

எனது சொந்த ஊர் கன்யாகுமரிக்குப் பக்கத்தில் உள்ள மஹாதானபுரம். எங்கள் அப்பாவின் தாத்தா தாணு பாகவதர். என் தாத்தா சுப்ரமண்ய பாகவதர். ஆனால் அவரை முத்து பாகவதர் என்று கூப்பிடுவார்கள். என் அப்பா தாணு பாகவதர். என் பெயர் மஹாதானபுரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர். நான் பாடுவேன். நாங்கள் கோவிலில் பாடுவதற்காக திருவனந்த புரம் ராஜா எங்களுக்கு வீடு, நிலம், தோப்பு என சகலவிதமான சொத்துக் களும்அளித்திருந்தார். அப்போது அரண்மனை திருவனந்தபுரத்தில் கிடையாது. பத்மநாபபுரத்தில் இருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து, கன்யாகுமரி போகும் வழியில் தக்கலையில் இறங்கிச் செல்ல வேண்டும். அங்குதான் அரண்மனை இருந்தது. எங்களுக்கு சன்னதித் தெருவில் வீடு. கோயிலில் குடிகொண்டிருந்த ஈஸ்வரனின் பெயர் ஆனந்தேஸ்வரர். ஈஸ்வரியின் பெயர் ஆனந்தேஸ்வரி. அதுதான் என் அம்மாவின் ஊர். எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி பத்மனாபபுரம் நீலகண்ட சிவனின் வீடு. அவர் பெரிய ஞானி. நிறைய அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் என்னுடைய உறவு என்றும் சொல்வார்கள். நாட்டியத்தில் சொல்லப்படும் தஞ்சை நால்வரில் ஒருவரான வடிவேலு அந்த ஊரில்தான் வசித்துவந்தார். அவரோடு கோமள வல்லி, ஆனந்தவல்லி இருவருக்கும் கூடத் தனித்தனி வீடு கொடுத்திருந்தார் ராஜா. வடிவேலுவுக்கும் தனியாக வீடு உண்டு. சுவாதித்திருநாள் பத்மநாப புரத்தில்தான் இருந்தார். அதன் பிறகு வெகுநாட்கள் கழித்துத் தான் திருவனந்த புரத்தில் வசித்தார். அப்போதெல்லாம் திருவனந்தபுரத்தில் அரண்மனை கிடையாது. தெற்குத் தெருவில் வேறு ஒரு அரண்மனை இருந்தது.

எனது அப்பா, அம்மா இருவருமே பாடுவார்கள். நான் சின்னக் குழந்தையாக இருக்கும் போதே பாடுவேன். அப்பா சொல்லிக் கொடுப்பார். நீலகண்டசிவனின் கீர்த்தனைகளை அம்மா பாடுவார். ஒருநாள், நான் என் அம்மாவிடம் மிருதங்கம் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டேன். அந்தக் காலத்தில் ஒரு மிருதங்கம் மூன்று ரூபாய். எனது பெரிய அண்ணா கோபால கிருஷ்ணன் மிருதங்கம் வாசிப்பார். என் அம்மா எனக்கு மிருதங்கம் வாங்கித் தந்தார். அண்ணாவின் வாசிப்பைக் கேட்டு அது போலவே வாசித்துப் பழகினேன். தனியாக நான் அதைப் பயிற்சி செய்வேன். எனக்கு அப்போது குரு என்று தனியாக யாரும் கிடையாது. ஆனால் நான் எனது எட்டாவது வயது முதல் கச்சேரிகளுக்கு வாசிக்க ஆரம்பித்தேன். ஹரிகதா, கால§க்ஷபத் திற்கும் வாசிப்பேன்.

அருகில் குரு, ஆனால் பயம்

எனக்குத் தஞ்சாவூர் வைத்தியநாத அய்யரிடம் மிருதங்கம் சொல்லிக்க வேண்டும் என்று ஆசை நிறைய உண்டு. அவர் எங்கெல்லாம் கச்சேரிக்கு வாசிக்கிறாரோ அங்கெல்லாம் தவறாமல் சென்று அவரின் வாசிப்பை உன்னிப்பாக கவனிப்பேன். அந்தக்காலத்தில் சுசீந்திரம், எர்ணாகுளம் போன்ற இடங்களில் கச்சேரிகள் நடக்கும், அங்கெல்லாம் அவர் வாசிக்க வருவார். அருகில் சென்று கற்றுக் கொடுங்கள் என்று கேட்கப் போவேன். ஆனால் பயமாக இருக்கும். கேட்காமல் வீட்டிற்கு ஓடி வந்து விடுவேன்.

எனக்கு அப்போது வயது ஒன்பது. ஒரு சமயம் ஸ்ரீராம நவமி உற்சவம். அவர் கச்சேரிக்கு வாசித்து முடித்த பின், நான் ஹரிகதாவுக்கு வாசிக்க இருந்தேன். அவர் என்னிடம் ‘நீ வாசிக்கப் போகிறாயா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். அப்போது அங்கு கச்சேரி செய்தவர்கள் உமையாள்புரம் கல்யாணராமன் பாட்டு, சி.டி சங்கர அய்யர் பிடில், எனது குரு வைத்யநாத அய்யர் மிருதங்கம். அந்த உற்சவத்தை நடத்தியவர், திருவாங்கூர் சகோதரர் களில் ஒருவரான நாராயணய்யர். பிற்காலத்தில் இந்த நாராயண அய்யரின் மகளைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன். அவர்கள் எல்லோரும் அடுத்து வந்த எங்களின் கச்சேரியைக் கேட்டார்கள். கச்சேரியில் எனதுகுரு என்னைத் தனி வாசிக்கச் சொன்னார். தனி ஆவர்த்தனம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு என்ன தெரியுமோ அதை வசித்தேன். கச்சேரி முடிந்தவுடன், நாராயண அய்யர் ஒரு பட்டு சால்வையும், என் குருநாதர் தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் ஓரு பட்டு சால்வையும் போர்த்திப் பாராட்டினார்கள். குரு என்னிடம் ‘நான் உனக்குக் கற்றுத் தருகிறேன், என்னுடன் வந்து விடுகிறாயா?’ என்று கேட்டார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தானே ரொம்ப நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்? என் அப்பா அவரிடம், ‘உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை அவனுக்கு’ என்றார். ‘என்னை எப்படித் தெரியும் உனக்கு?’ என்றார். அப்பா, நான் கச்சேரிகளுக்குச் சென்று கேட்டுவிட்டு, அவரிடம் பேச பயந்து திரும்பி விடுவதைக் கூறினார்.

குருவே தந்தையுமாகிறார்

மறுநாள் தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் என் வீட்டிற்கு வந்தார். என் அப்பா விடம், ‘எனக்குக் குழந்தைகள் இல்லை. எனவே இவனை எனக்குத் தத்துக் கொடுத்து விடுங்கள்’ என்றார். அப்பா சற்று யோசித்துவிட்டு ‘சரி’ என்று கூறி விட்டார். ஆனாலும் ‘அவனின் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு சொல்லி விடுகிறேன்’ என்றார். அம்மாவிடம் சம்மதம் பெறுவதற்காக சென்று கேட்டார். ஆனால், அம்மா சரி என்றும் கூறாமல், வேண்டாம் என்றும் கூறாமல் ‘பகவான் என்ன நினைத்துக் கொண்டிருக் கிறாரோ?’ என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டு விட்டார். என்னிடம் அம்மாவுக்கு ரொம்பப் பிரியம். என் குருநாதர் ஊர் திரும்பி விட்டார்.

ஒரு நாலைந்து மாதத்தில் என் அம்மா இறந்து விட்டார். என்னை கவனித்துக்கொள்ள யாருமில்லை என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் நான் என் அப்பாவிடம் போய் ‘அப்பா, என்னை தஞ்சாவூர் கொண்டு விடுங்கள், நான் அங்கு மிருதங்கம் கற்றுக் கொள் கிறேன்’ என்றேன். அப்பாவோ சரியென்றும் சொல்லவில்லை. மறுக்கவு மில்லை. பேசாமல் இருந்து விட்டார். நான் நேரே அரண்மனைக்குச் சென்றேன். எங்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார்கள் சமஸ்தானக்காரர்கள். எங்களுக்கு திருவனந்தபுரத்திலும் வீடு, நிலம் எல்லாமே உண்டு. தினந்தோறும் எங்களுக்கு அரண்மனையிலிருந்து சாப்பாடு வந்துவிடும். வாரா வாரம் அரிசியும் வந்து விடும். இது தவிர, சம்பளமும் உண்டு. எந்தக் குறையும் கிடையாது. எங்களை அரண்மனை வித்வான்கள் என்று சொல்ல மாட்டார்கள். ‘முள்ளு முட்டு பாகவதாள்’ என்று சொல்வார்கள். நான் பாலஸில் பாடியும் இருக்கிறேன். மிருதங்கமும் வாசித்திருக்கிறேன். மிகவும் நெருக்கமானவர்கள் அவர்கள். நான் அரண்மனைக்கு சென்று, ‘தஞ்சாவூர் சென்று மிருதங்கம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம் ‘என்ன எதிர்பார்க்கிறாய், உனக்கு என்ன வேண்டும்?’ என்றனர். நானோ துணிவாக ‘உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்’ என்றேன். அவர்கள் என் அப்பாவைக் கூப்பிட்டு, 200 ரூபாய் பணம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு வயது பத்து. அது 1934 ஆம் வருடம். நான் தஞ்சாவூர் கிளம்பிச் சென்று விட்டேன்.

நான் தஞ்சாவூரில் வைத்தியநாத அய்யரிடம் மிருதங்கம் கற்றுக் கொள்ளும் போது என்னுடன் கற்றுக் கொண்டவர்கள் பலர். பாலக்காட்டு மணிஅய்யர் நான் அங்கு செல்வதற்கு முன்பிருந்தே அங்கிருக்கிறார், டி.எம். தியாகராஜனின் தம்பி, மைலாட்டூர் ராமச்சந்திரன், உமையாள்புரம் கோதண்ட ராமைய்யரின் தம்பி கணேசய்யர் போன்றவர் குறிப்பிட்ட சிலர். இன்னமும் சிலரும் கற்றுக் கொண்டனர்.

குருவின் அன்பு-அப்பாவின் அன்பு

எங்கள் குருநாதரான தஞ்சாவூர் வைத்தியநாத அய்யருக்கு என்னிடமும், பாலக்காட்டு மணிஅய்யரிடமும் மிகவும் பிரியம். நான் தஞ்சாவூர் சென்று இறங்கியவுடன், அவர், ‘மணி, நான் இந்தப் பையனை சுவீகாரம் எடுத்துக் கொள்ளப் போகிறேன். நீ என்ன சொல்கிறாய்?’ என்றார் மணி அய்யர் ‘பேஷாகச் செய்யுங்கள்’ என்றார். ஆனால் என்னை சுவீகாரம் எடுத்துக் கொள்வது என்பது ஏனோ கைவரப் பெறவில்லை. எனவே குருநாதர் ‘சுவீகாரமில்லை என்றால் என்ன? நான்தான் அவனை வளர்க்கப் போகிறேன்’ என்றார். என்னை அவர்தான் வளர்த்தார் மகனைப் போல. நான் அவரிடம் போன பத்து நாட்களுக்குள்ளேயே எனக்கு காதுக்கு வைரக் கடுக்கண், வைர மோதிரம், தங்கச் சங்கிலி கழுத்துக்கு லாங் செயின், ஒரு கைக்குக் காப்பு, மற்றொரு கைக்கு வாட்ச் எல்லாம் அணிவித்து அழகு பார்த்தார். எனக்கு எப்போதும் ஜரிகை வேட்டிகள்தான் சட்டைகள்தான். அம்மாவின் மடியில் தலை வைத்துக்கொண்டு அப்பாவின் அருகில்தான் நான் தூங்குவேன். யார் அம்மா? என் குருநாதரின் மனைவி மீனாட்சி அம்மாள் தான். எனக்கு வெல்வெட் மெத்தை, வெல்வெட் தலைகாணி. (இதன் பிறகு அனைத்து இடங்களிலும் அப்பா, அம்மா என்று குறிப்பிடுவது குருநாதரும் அவரின் மனைவியுமே ஆகும்.) நான் எங்காவது வெளியூர் சென்றால் அவரிடம் ‘உங்கள் மகன் எங்கே?’ என்றுதான் எல்லோரும் விசாரிப்பார்கள். அப்பாவும் ‘கச்சேரிக்குப் போயிருக்கிறான்.’ என்பார். எப் போதும் எனக்குப் பிடித்த உணவு வகைகள்தான் வீட்டில் தயாராகும். இருவரும் என்மீது அன்பைப் பொழிந்தார்கள்.

பாட்டிற்கு வாசிக்கப் பயிற்சி

நான் கற்றுக்கொண்டபோது என் குருநாதரிடம் பதினெட்டுப்பேர் கற்றுக் கொண்டிருந்தனர். அவருக்குக் குழந்தைகள் இல்லாததால், எல்லோர் மீதும் மிகப் பிரியமாக இருந்தார். தனது ஜாதியைச் சேர்ந்த சிஷ்யர்களுக்கு அம்மாவே சமைத்துப் போடுவார். அவர் கையால் பரிமாறுவார். யார் வயிறும் வாடக் கூடாது. வீட்டில் அமர்த்தி உணவிட முடியாத மற்ற சிஷ்யர்களுக்கு வெளியில் உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பார். அனைவருக்கும் அவரே பணம் கட்டிவிடுவார். எனது குருநாதருக்கு நிறைய சொத்து உண்டு. அவர் அக் காலத்தில் மஹாவைத்யநாத சிவன் என்ற வித்வானின் பரம்பரையில் வந்தவர். 72 மேளகர்த்தா ராகங்களுக்கு சக்ரம் என்று இப்போது பாடுகிறார்களே அது அவர் வடிவமைத்ததுதான். அவர் இவருடைய அத்தையின் கணவர்.

முதலில் எனக்கு முறையாகப் பாடம் ஆரம்பிக்கவில்லை. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும். இது நடந்தது 1934 இல். தாளத்திற்கும் பாட்டிற்கும் வாசிக்க மட்டும் கற்றுக் கொடுத்தார். எனது பயிற்சிக்காக பாடிய வர்கள், டி.வி.சுப்ரமணிம், டி.எம்.தியாகராஜன், தஞ்சாவூர் சங்கரய்யரின் குருநாதர் சாத்தூர் கிருஷ்ணய்யங்கார், இது தவிர, இன்னமும் சிலரும் பாடி உள்ளனர். என்னால் டி.எம்.தியாகராஜனை மறக்கவே முடியாது. நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில், அலுப்பில்லாமல் ஒரு கீர்த்தனையை பதினைந்து முறை கூடப் பாடியிருக்கிறார். நான் பாட்டுக் கச்சேரிகளுக்கு நன்றாக வாசிக்கிறேனென்று பெயர் உண்டு. என்னைப் பற்றிக் கூறும் பெருமைகள் அனைத்தும் டி.எம்.தியாகராஜனையே சேரும். அவரின் அப்பா, எனக்கு கோவிலில் வாசிக்கும் முறை பற்றிச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். விநாயகர், சுப்ரமணியர், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், ஈஸ்வரன் ஆகியோர் மீது கவுத்துவங்கள் உண்டு. இந்தக் கவுத்துவங்கள் எல்லாமே நான் தியாகராஜனின அப்பா மஹாலிங்கம் பிள்ளையிடம்தான் பயின்றேன். நவசக்தி தாளத்திற்கு வாசிக்கவும் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். இது அவ்வளவையும் என் மகன் ஜெயராமும் கற்றுக் கொண்டு இருக்கிறான். நான் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவனுக்கு கர்நாடக சங்கீதம்தான் கற்றுக் கொடுத்தது. டி.எம்.தியாகராஜன்தான் கற்றுக் கொடுத்தார். B.ராஜமய்யரிடமும் பயின்றான். அதன் பிறகு கல்லூரியில் படித் தான். தற்போது ‘ஆல் இண்டியா ரேடியோ’ வில் மெல்லிசை பிரிவில் வேலை பார்க்கிறான்.

முதல் வாசிப்பும் தொடர் நிகழ்ச்சிகளும்

1934 இல் கோயமுத்தூரில் முசிறி சுப்ரமணிய அய்யர் துக்காராம் வேடத்தில் நடித்தார். என் அப்பாவும் அவரும் நண்பர்கள். அப்பா அம்மாவுடன் நானும் கோயமுத்தூர் சென்று இருந்தேன். முசிறி சுப்ரமணிய அய்யரின் குரு சபேசய்யர், கரூர் சின்னச்சாமி அய்யர் ஆகியோர் அங்கிருந் தனர். அவர்கள் இருவரும் சினிமாவில் வாசிப்பவர்கள். பூதலூர் கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள் கோட்டு வாத்யம். இவைகள் கச்சேரியாக நடைபெற்றது. ஒரு நாள் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் வீட்டுத் திருமணம். அவர் வீட்டுத் திருமணத்திற்குக் கச்சேரிக்காக அனைவரும் கூடி இருக்கிறோம். அவர் கொச்சி அரண்மனையின் திவானாக இருந்தார். சபேச அய்யரும், சின்னசாமி அய்யரும் என்னை வாசிக்கும்படி சொன்னார்கள். அப்பாவும் என்னை வாசிக்கும்படி சொன்னார். ஷண்முகம் செட்டியார் வீட்டுக் கல்யாணத்தில் தான் எனது முதல் வாசிப்பு கச்சேரிக்கு ஆரம்பித்தது. அப்பாவும் குருநாதரு மான தஞ்சாவூர் வைத்தியநாத அய்யருக்கு நான் முதற் கச்சேரி செய்யும் போது ஏதாவது தட்சிணையாகக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அரங்கேற்றமாயிற்றே? நான், முசிறி சுப்ரமணிய அய்யரிடம் சென்று ‘மாமா, எனக்கு கொஞ்சம் பண உதவி செய்யுங்கள், நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் திருப்பிக் கொடுத்துவிடுவேன். அப்பாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இருக்கிறது’ என்று கேட்டேன். அவர் என்னைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போய், எனக்கு வேட்டி, சட்டை, அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு வேட்டி, சட்டை எல்லாம் எடுத்துக் கொடுத் தார். எல்லாவற்றயும் அப்பாவிடம் கொடுத்து ஆசி வாங்கிகொண்டேன். பிறகு தான் முதல் கச்சேரி வாசித்தேன். பின்னால் எவ்வளவோ பெயரும் புகழும் கிடைத்தாலும்கூட, குருவின் ஆசீர்வாதத்தால்தானே நாம் அத்தனையும் அனு பவிக்கிறோம்? என்ற எண்ணம் எனக்கு. அடுத்து ஷண்முகம் செட்டியார் எனக்கு நாலு பவுனில் மெடல் கொடுத்தார். என் அப்பாவிடம் சிட்சை என்று சொல்லிக்கொடுத்து, கற்றுக்கொண்டு நான் வாசிக்கவில்லை.

நாங்கள் திருவனந்தபுரத்திலிருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். திருவனந்தபுரத்தில் ஒரு கச்சேரி நடைபெற உள்ளது. லால்குடி ஜெய ராமனின் பெரியப்பா கந்தசாமி அய்யர் பிடில், மதுரை கேசவ பாகவதர் மிருதங்கம். மதுரையில் அவர்களை சந்தித்தோம். அவர்கள் என்னை யார் என்று விசாரித்தார்கள். ‘அவன் என் பிள்ளை’ என்றார் என் அப்பா. ‘மிருதங்கம் வாசிப்பானா?’ என்று கேட்க ‘ஆம்’ என்றார் அப்பா. ‘நாளை திருவனந்த புரத்தில் கச்சேரிக்கு அவன் வாசிக்கட்டும்’ என்று சொன்னார்கள். என் அண்ணா திருவனந்தபுரத்தில் இருந்ததால், அவரிடம் மிருதங்கம் ஏற்பாடு செய்யச் சொல்லி, எடுத்துவரச் செய்து அன்றைக்கு வாசித்தேன். நாலுகளை சவுக்கம் பல்லவி பாடினார். அதற்கு நான் வாசித்தேன்.

அடுத்த கச்சேரி, மைசூர் அரண்மனையில் மஹாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பாட்டு, சௌடையா வயலின், என் அப்பா மிருதங்கம். அங்கிருந்த வித்யா பாகவதர் என்னையும் வாசிக்கும்படி சொன்னார். அப்பாவின் அனு மதியுடன் வாசித்தேன். நவராத்திரி விழா அது. ஜெயசாமராஜ உடையாரின் பெரியப்பா கிருஷ்ணராஜ உடையார் காலம் அது. மறுநாள் என் வாசிப்பைத் தனியாக கேட்க ஆசைப்பட்டார் அவர். மழவராய சுப்பராம பாகவதர் பாட்டு, நான் மிருதங்கம் வாசித்தேன். எனக்கு மரியாதை செய்வதற்காக அரண் மனையில் எனக்கு இரண்டு எட்டு முழம் ஜரிகை வேட்டி, இரண்டு அங்க வஸ்திரம், இரண்டு ஜரிகைக் ‘கோட்’டிற்கு உண்டான துணி, இரண்டு சால்வை என ராஜாவின் உடையைப் போலவே தைப்பதற்கு வேண்டிய அனைத்தும் கொடுத்தனர். அத்துடன் 1000 ரூபாய் பணமும் கொடுத்தனர். நினைவில் வைத்து கொள்ளுங்கள் இது நடந்தது 1934 இல். எனக்கு வயது பத்து. எவ்வளவு பெரிய மரியாதை? அதன் பிறகு நாங்கள் தஞ்சாவூர் திரும்பி விட்டோம்.

அடுத்ததாக, கும்பகோணத்தில் ராஜமாணிக்கம் பிள்ளையின் வீட்டுத் திருமணம். அவரின் மூத்த பெண்ணுக்குத்தான் திருமணம். அங்கு காரைக்குடி சாம்பசிவ அய்யரும் அவரின் அண்ணாவுமாக வீணை வாசித்தார்கள். தாட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். அடுத்த நாள் செம்பை வைத்தியநாத அய்யரின் பாட்டு, சௌடையா பிடில், பாலக்காட்டு மணி அய்யர் மிருதங்கம். தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிரா. நான் கச்சேரி கேட்பதற்காக அங்கு போனேன். அந்த கஞ்சிரா கேட்க வேண்டும் என்று சென்றேன். அடுத்த நாள், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாட்டு, செம்மங்குடி நாராயணசாமி பிடில், என் அப்பாவுடன் நான் மிருதங்கம். 1935 ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சி நடந்தது.

1937 ஆம் வருடம் தட்சிணாமூர்த்தி பிள்ளை இறந்துவிட்டார். அவர் போல கஞ்சிரா வாசிக்க யாரும் இதுவரை கிடையாது. அவர் தரத்திற்கு வாசிப்பவர் என்றால் பாலக்காட்டு மணி அய்யரை மட்டுமே சொல்லலாம். மெட்ராஸில் ஆர்.ஆர்.சபாவில் முசிறி சுப்ரமணிய அய்யர் பாட்டு, பாப்பா வெங்கடராம அய்யர் பிடில், நான் மிருதங்கம், மணி அய்யர் கஞ்சிரா. அதன் விளம்பரம் இப்படி வந்தது, ‘முசிறி பாட்டு, பாப்பா பிடில், மணி கஞ்சிரா, மூர்த்தி மிருதங்கம்’. அதுவரை எனது பெயர் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் இருந்தது. அன்று முதல் மூர்த்தி ஆயிற்று. முசிறி சார்தான் அப்படி வைத்தார். அந்தப் பெயருடன் நான் சுகமாக, சாந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக் கிறேன். பாலக்காட்டு மணி அய்யர் கஞ்சிரா, நான் மிருதங்கம்; மணி அய்யர் நான் இருவருமே மிருதங்கம், பழநி சுப்ரமணிய பிள்ளை கஞ்சிரா என்று பல காம்பினேஷனில் நான் வாசித்திருக்கிறேன்.

சபேச அய்யர், டைகர் வரதாச்சாரியார், சாத்தூர் கிருஷ்ணய்யங்கார், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் செம்மங்குடி சீனிவாச அய்யர், முசிறி சுப்ரமணிய அய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பலருக்கும் நான் வாசித்திருக்கிறேன். பதினைந்து, பதினாறு வயதிலேயே நான் நல்ல பெயர் எடுத்துவிட்டேன். இவை எல்லாமே அந்த வயதில் நடந்த நிகழ்ச்சிகள் தான்.

எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மியுடன் எனது வாசிப்பு இணைந்த கதை

தஞ்சாவூரில் ஒரு நாள், நானும் பாலகாட்டு மணி ஐயரும் குளித்துவிட்டு வீட்டிற்கு வந்தோம். எங்கள் வீட்டிற்கு எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் வந்திருக்கிறார். அப்பா என்னைக் காட்டி ‘இது யார் தெரியுமா?’ என் வினவினார். எம்.எஸ்.அவர்கள் ‘தெரியாது’ என்றார். ‘இவன்தான் மூர்த்தி. மிருதங்கம் வாசிக்கிறான்,’ என்றவுடன் அந்த அம்மா ‘நான் கேள்விப்பட்டு இருக்கிறேனே. ஆனால் பார்த்ததில்லை’ என்றார். ‘இன்று மாலை உங்கள் வீட்டில் பாடுகிறேன் மூர்த்தியை மிருதங்கம் வாசிக்கச் சொல்லுங்கள்’ என்றார். அதன் பிறகு நான் மெட்ராஸ¤க்கு வந்து, எம்.எஸ்.அம்மாவுக்கு நிறையக் கச்சேரிகளுக்கு மிருதங்கம் வாசித்தேன். தொடர்ந்து 45 வருடங்கள் அவரின் கச்சேரிகளுக்கு நான் வாசித்திருக்கிறேன். அவரின் கடைசிக் கச்சேரிக்குக்கூட நான்தான் வாசித்தேன். வயலின் வாசிப்பவர் மாறியிருக் கிறார்கள், ஆனால் மிருதங்கம் நான் மட்டுமே வாசித்தேன். என்னிடம் அளவு கடந்த பாசம் உண்டு அவருக்கு. மாறாத அன்பும் கொண்டிருந்தார். அவரை விடவும், அவர் கணவர் சதாசிவத்திற்கு அசாத்யப் பிரியம் என்மீது. எம்.எஸ்.அவர்கள் ‘சாவித்திரி’ யில் நாரதராக நடித்த போதும், ‘சகுந்தலை’ ‘மீரா’ ஆகிய படங்களில் நடித்த போதும் நான் உடன் இருந்தேன். இந்தியா முழுவதும் அவர்களுடன் சென்றிருக்கிறேன். உலகம் முழுவதும் அவர்களுடன் சென்றேன். நான் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் அவருக்கு வாசித்திருக் கிறேன். எம்.எஸ்.அம்மா மாதிரி ஞானத்துடன் பாடுபவர்கள் குறைவு. அவருக்கு மிக நன்றாக மிருதங்கம் வாசிக்கவும் தெரியும். எனவே தாளம் அறிந்து தாளம் போடும் சிலரில் அவரும் ஒருவர். பெண் பாடகர்களில் அவர் மட்டுமே என்று நான் தைரியமாய்க் கூறவும் முடியும். தெலுங்கு, கன்னடம் ஹிந்தி, மலையாளம், பெங்காலி என இந்திய மொழிகள் அனைத்திலும் அந்தந்த உச்சரிப்புக் கெடாமல் பாடக்கூடியவர், யுனைடெட் நேஷனில் ஆங்கிலத்திலும் பாடினார்.

எம்.எஸ். அவர்கள் மிகவும் சாது. மனதில் கபடு சூது கிடையாது. அவர் உலக அளவில் பெயரும், புகழும் பெற்றிருக்கிறார் என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர் கணவர் சதாசிவம்தான். அவரை எவ்வளவு பாராட்டி னாலும் தகும். அதனால்தான் பாடகியாக அவர் உலகம் முழுவதும் அறியப் பெற்றார். ஒரு சகோதரனைப் போல நினைத்து என்னிடம் பழகுவார். அவருக்கு என்று தனி வங்கிக் கணக்குக்கூட கிடையாது.

அந்தக்காலத்தில் பக்கவாத்யக்காரர்கள் பெண்களுக்கு வாசிக்க மாட்டார்கள். நான்தான் முதலில் வாசித்தேன். எம்.எஸ்.அம்மாவிற்கு வாசித் தேன். டி.கே.பட்டம்மாளுக்கும், எம்.எல்.வசந்தகுமாரிகும் கூட வாசித்திருக் கிறேன். பாலக்காட்டு மணி அய்யர் பெண்களுக்கு வாசிக்க மாட்டார். டி.கே. பட்டம்மாளின் சம்பந்தி ஆனபிறகுதான் அவருக்கு வாசிக்க ஆரம்பித்தார். என் குருநாதர் சொல்லித்தான் நான் வாசித்தேன். என்குருநாதரின் சொல்லை நான் தட்ட மாட்டேன். மணி அய்யர் கூட இது வேண்டாம் என்றுதான் கூறினார். பிற் காலத்தில் அவர் டி.கே.பட்டம்மாள் அவர்களுக்கு வாசிக்கும்போது ஒரு கச்சேரிக்கு நான் போயிருந்தேன். என்னை மணி அய்யர் ஒரு மாதிரிப் பார்த்தார். நான் அவரிடம் வேடிக்கையாக ‘நான் கச்சேரி பார்க்க வந்திருக் கிறேன்’ என்றேன். அவரும் சரி என்றார். பிறகு ‘பார்த்துவிட்டேன், நான் வீட்டிற்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நான் பெண்களுக்கு வாசிக்கக் கூடாது என்றோ, பெண்கள் தாழ்வு என்றோ, வாசிப்பது தப்பு என்றோ கூற வில்லை. ஆனால் பெண்களுக்கு வாசிப்பதில் சில சிக்கல்கள் உண்டு. ஆண் களைப்போல சங்கீதத்தில் சிலவற்றைப் பெண்களால் செய்ய இயலாது. கொன்னக்கோல் என்று ஒருவகை உண்டு அதில் இதுவரை பெண்கள் ஈடுபட முடியவில்லை. ஏனெனில் அந்த சொற்களை அடிவயிற்றிலிருந்து, வேகமாக, பலமாக சொல்ல வேண்டும். அடி வயிற்றிருந்து எழும் சொற்கள் பெண்களின் மிருதுவான குரல்களில் சாத்யமில்லை. அவர்களின் சொற்கள் நளினமாகவும் மென்மையாகவும் விழும். பாட்டு, வீணை, புல்லாங்குழல் போன்றவற்றுடன் தங்களைப் பெண்கள் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் தவில் போன்றவற்றுடன் இணைப்பது சிரமம். மேலும் கச்சேரிகள் போகும் பாதை நமக்குப் புரியும் அவர்களுக்கு ஓரளவுக்கு மேல் விரிவுபடுத்த இயலாது. ஒரு சில பெண்கள் பக்கவாத்யக் காரர்களை மதிக்காமலும் இருக்கிறார்கள். ஆனால் நான் தைரியமாக இதையும் குறிப்பிட வேண்டும், எம்.எஸ்.அம்மா மட்டுமே பக்கவாத்யக்காரர்களை மதித்தார். இதை நான் பலமாகவும் கூறுவேன். சரியாக நடத்தினால், ஆண்களானாலும், பெண்களானாலும் ஒன்றுதான்.

நான் முதன்முதலில், எடின்பரோ பெஸ்டிவலுக்கு எம்.எஸ். அம்மாவுடன் வெளிநாடு சென்றேன். இதை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பண்டிட் ஜவஹர்லால் நேருதான். நம் சங்கீதம் அங்கு எடுபடுமா என்று சந்தேஹித்தேன். நிறைய மக்கள் வெளிநாட்டவர்களாகவே இருந்த அந்தக் கச்சேரியை எல்லோரும் மிகவும் ரசித்துப் பாராட்டினார்கள். என் எண்ணம் தவறு என்பதை உணர்ந்தேன். என்னுடன் அல்லா ராக்கா தப்லா வசித்தார். ஆர்.வெங்கடராமன் அவர்கள் அங்கு வந்திருந்து சபையில் அமர்ந்து கச்சேரியை ரசித்தார். அதே போல யுனைடெட் நேஷனிலும் எம்.எஸ். அம்மாவுடன் கச்சேரி சிறப்பாக நடந்தது.

(தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி

மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

க்ருஷாங்கினி


மிருதங்கத்தில் ஒரே பாணிதான்

மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்யநாத அய்யர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது. ஆனால் அதை வாசிப்பவர் இப்போது யாரும் இல்லை. பழநி முத்தையா பிள்ளை அந்தப் பாணியில் வாசித்தவர். இவர் பழநி சுப்ரமணிய பிள்ளையின் தகப்பனார். சுப்ரமணிய பிள்ளையின் சிஷ்யர்களே குருவின் பாணியில் வாசிப்பது இல்லை. பாட்டுக்கு வாசிப்பது என்பதில் வைத்தியநாதய்யர் பாணிதான் உயர்ந்தது. தனி வாசித்தல், பல்லவிக்கு அமர்த்துதல் போன்ற அனைத்திற்குமே இந்தப் பாணிதான் உயர்ந்தது. மேலும் தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் போல சொல்லிக் கொடுப்பவர் யாருமே கிடையாது. எனக்குக்கூட அப்படிப் பட்ட தகுதி வருமா என்பது சந்தேகம்தான். இரவு 12 மணிக்குக் கூட என்னை எழுப்பி சொல்லிக் கொடுத்துள்ளார். எனக்கு மட்டுமல்ல, அவரிடம் கற்றுக் கொண்ட எல்லோருக்குமே அப்படித்தான் சொல்லிக் கொடுப்பார்.

என் அப்பாவிற்கு யாரும் பசியோடு இருக்கக்கூடாது. சிஷ்யர்கள் வயிறு நிறைந்து இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார். பொய் சொல்ல மாட்டார். தான் செய்தது தவறென்றால், மனைவியிடமும் கூறி விடுவார். பெரிய மனதுடையவர். கோபம் வரும். ஆனால் அது கலைக்கான கோபமாகத்தான் இருக்குமே தவிர மனிதனின் மேல் வரும் கோபம் கிடையாது. உடனே கோபம் தணிந்தும் விடும். அவரால்தான் நான் நன்றாக இருக்கிறேன். நன்றாக வாசிக்கவும் செய்கிறேன். என்னுடைய 9 வயதில் அவரிடம் சென்றவன், 31 ஆண்டுகள் என்னுடைய 40 ஆவது வயதில் அவர் மறையும் வரை அவரோடுதான் இருந்தேன்.

அப்பாவின் இழப்பு-பெரும் சோகம்

அப்பாவின் மறைவுக்குப்பிறகு எனக்கு தஞ்சாவூரில் இருக்கப் பிடிக்க வில்லை. யாருக்காக நான் தஞ்சாவூர் வந்தேனோ அவரே இல்லாமல் போய் விட்டார். இந்த ஊரில் எனக்கு என்ன இருக்கிறது? என்னுடைய 40 ஆவது வயதில் சென்னை வந்து விட்டேன். என்னுடைய 10 வயதில் எனக்கு வைர நகைகளும் தங்க நகைகளும் போட்டு அழகு பார்த்த அவர் மறைந்த பின் நான் தங்க வைர நகைகள் ஏதும் அணிவது கிடையாது. எல்லாவற்றையும் போட்டுக் கொள்வதை விட்டு விட்டேன். எனக்காக அத்தர், செண்ட் வாங்கிக் கொடுப்பார் அப்பா. ‘வெளியில் போகும் போது, போட்டுக்கொள்’ என்று சொல்லுவார். அதையும் இப்போது விட்டுவிட்டேன். யாருக்காக நான் இனிமேல் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்?

நான் வாசிக்கும் கச்சேரிகளில் வெளியில் வந்து உட்கார்ந்து கேட்டு ரசிப்பார்.‘என்னமா வாசிக்கிறான்’ என்று அதிசயிப்பார். பாலக்காட்டு மணி அய்யரிடம் அப்பா இதுபோல பேசி இருப்பதை அவர் என்னிடம் கூறிய போதுதான் எனக்கே தெரியும். சென்னை ஆர்.ஆர்.சபாவில் அப்பாவும் நானும் இணந்து. செம்மங்குடி சீநிவாச அய்யரின் கச்சேரிக்கு வாசிக்க இருந்தோம். கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை பிடில். அப்பாவுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சபா செயலாளரிடம் சென்று அவன் மட்டுமே வாசிப்பான் என்று கூறிவிட்டார். கச்சேரி முழுவதும் நான் மட்டுமே வாசித்தேன். வெளியில் அமர்ந்து கேட்டிருக்கிறார். நன்றாக வாசித்தால் நேரடியாகப் பாராட்ட மாட்டார். ஆனால் மட்டமாக வாசித்து விட்டாலோ மேடையை விட்டு இறங்கியவுடனேயே திட்டிவிடுவார். யாராயிருந்தாலும் நிறையத் திட்டுவார். என் அப்பா அம்மா இருவரும் ‘சிட்டு’ என்று தான் என்னை கூப்பிடுவார்கள். என் கையில் நல்ல வேகம் பேசும். அது சிட்டுக் குருவி பறப்பதைப்போல ‘கிர்’ என்று, சுறு சுறுப்பாக இருக்குமென்பதற்காக, என் பெயர் ‘சிட்டு’. அக்கால வித்வான்கள் அனைவருமே என்னை ‘சிட்டு’ என்றுதான் கூப்பிடுவார்கள்.

என் குருநாதர் என்னிடம் சில விவரங்கள் கூறியிருக்கிறார். யார் யார் எப்படிப் பாடுவார்கள், எந்த சபா எப்போது தோன்றியது போன்றவைகள் அவை. அதற்கான காரணங்கள் என்ன, அதை முயற்சி செய்து முடித்தவர்கள் யார் யார் எல்லாவற்றையும் பற்றிக் கூறியிருக்கிறார். அந்த விவரங்களை இப்போது நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

ஒரு முறை மதுரை புஷ்பவனம் அய்யர் பற்றி சொன்னார். அவர் மதுரை மணி அய்யரின் சொந்த சித்தப்பா. மேலேயிருந்து வைரங்கள் கொட்டுவது போல இருக்கும் அவரின் பாட்டு என்பார் அப்பா. அப்படிப்பாட இப்போது யார் இருக்கிறார்கள் என்பார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர், பூச்சி சீனிவாச அய்யங்கார் இவர்களின் பாட்டு எப்படி இருக்கும் என்பது பற்றி என் அப்பாவுடன் இரவு படுத்துக் கொண்டிருக்கும்போது கேட்பேன். எல்லா வற்றையும் அவர் அன்புடன் விவரித்துத் தெளிவு படுத்துவார்.

சென்னையில் சபாக்கள் தோன்றிய விதம்

அதே போல ம்யூசிக் அகடெமி, இந்தியன் பைன் ஆர்ட்ஸ், தமிழிசைச் சங்கம் ஆகிய சபாக்கள் தோன்றிய விதம் குறித்தும் அப்பா கூறியிருக்கிறார். தமிழிசைச் சங்கம் தோன்றிய விதம் எனக்கே தெரியும்.

ஹரிகேசநல்லூர் அப்பாவு பாகவதர் என்ற பிடில் வித்வான் ஒருவர் இருந்தார். அவருக்கு தன்னுடைய பெண் கல்யாணத்திற்காக வீட்டை அட மானம் வைக்க நேர்ந்தது. ஆனால் அவரால் மீட்க முடியவில்லை. என் அப்பாவுக்கு அவர் நெருங்கிய நண்பர். அதனால் வீட்டை எப்படி மீட்பது என்று அப்பாவிடம் ஆலோசனை கேட்டார். அப்போது முத்தையா பாகவர் தஞ்சாவூரில் இருக்கிறார். அவரிடம் ஆலோசனை கேட்பதற்காக தஞ்சாவூர் சென்றார்கள். அவர் ஒரு தேதி குறித்து அன்றைக்குத் தான் சென்னையில் இருக்கப் போவதாகவும் அங்கு பார்க்கலாம் என்றும் சொன்னார்.

அந்தக்காலத்தில் சென்னையில் கச்சேரிகள் நடத்துவதற்கு நல்ல அரங் கங்கள் கிடையாது. மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப், கிருஷ்ண கானசபா, நாரத கான சபா, போன்றவை இப்போது இருக்கிறதல்லவா, அதைப்போல நல்ல அரங்கம் கிடையாது. அந்தக் காலத்தில் சின்னச்சின்ன அரங்கங்கள்தான் உண்டு. அப்போது சென்னையில் காங்கிரஸ் எக்ஸிபிஷன் தேனாம்பேட்டைத் திடலில் நடந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் சத்யமூர்த்திதான் அதை நடத்துவார். டி.எல்.வெங்கடராமய்யரும், முத்தையா பாகவதரும் அத்தான், அம்மாஞ்சி உறவு. காங்கிரஸ் சத்யமூர்த்தியிடம் பணம் திரட்ட என்ன செய்யலாம் என்று கேட்டபோது, அவர் ‘நான் காங்கிரஸ் எக்ஸிபிஷன் நடக்கும் இடத்திற்குப் பின்புறமாக கொட்டகை போட்டு மேடை அமைத்துக் கொடுக்கிறேன். அதில் இசைக் கச்சேரிகள் நடத்தி பணம் திரட்டுங்கள். வசூலாகும் தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு அதில் ஏதும் வேண்டாம். நீங்கள் உங்கள் திட்டத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார். அப்படி காங்கிரஸ் எக்ஸிபிஷனில் கச்சேரி நடத்தியதில் ரூபாய் 18,000/- வசூலானது. இசைக் கலைஞர்களுக்குப் பணம் கொஞ்சம்தான் கொடுக்க முடியும் என்றும் காரணத்தையும் சொல்லித்தான் கச்சேரிகள் ஏற்பாடு செய்தனர், வித்வான்களும் ஒத்துழைத்தனர். கொடுத்தது போதும் என்று கச்சேரி செய்தனர். ஏனெனில் இது ஹரிகேசநல்லூர் அப்பாவு பாகவதருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என்று எல்லோருமே இசைந்தனர்.

அப்பாவு பாகவதருக்கு வீட்டை மீட்டுக் கொடுத்தபின் ரூபாய் 12,000/- பாக்கி இருந்தது. அதற்கு அடுத்த வருடமும் காங்கிரஸ் எக்ஸிபிஷனில் கொட்டகை போட்டு கச்சேரிகள் நடந்தன. அதில் கிட்டத்தட்ட ரூபாய் 30,000/-வசூலாயிற்று. அந்தப்பணத்தை வைத்துக்கொண்டு உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசித்தனர். W.துரைசாமிஅய்யங்கார், ‘ஹிண்டு’ சீனிவாசன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோரிடம் டி.எல்.வெங்கடராமய்யர் கலந்து ஆலோசித்தார். டி.எல்.வெங்கட்ராமய்யரே நன்றாகப் பாடுவார். எல்லோருமாகச் சேர்ந்து செய்த யோசனைதான் ‘சங்கீத வித்வத் சபை’ ஆரம்பிப்போம் என்பது. இப்படி ஆரம்பித்ததுதான் ம்யூசிக் அகடெமி. இது நடந்தது 1927 இல்.

‘ரிப்பன் பில்டிங்க்’ பின்னால் ஒரு பெரிய பொட்டல் நிலம் இருந்தது. சங்கீத வித்வத் சபை முதலில் அங்கு கொட்டகை போட்டு விழா நடத்தியது மைலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களிருந்து ரசிகர்கள் வர மிகவும் சிரமப் பட்டனர். அதனால், பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியின் அருகில் இப்போது ஒரு சிமெண்ட் பொம்மைகள் செய்யும் இடம் இருக்கிறதே, அதற்குப் பின்னால் பரந்த நிலத்தில் கொட்டகை போட்டுக் கச்சேரிகள் நடந்தன. அதில் தான் ஜி.என்.பாலசுப்மணியம் இரவு பாடினார், நான் மிருதங்கம் வாசித்தேன்.

அதன் பிறகு பீச்சில் செனெட் ஹவுஸ் என்று இருந்தது, அதில் சங்கீத வித்வத் சபையின் சங்கீத நிகழ்ச்சிகள் நடந்தன. அங்கு மதுரை மணி அய்யர், ஜி.என்.பி. தஞ்சாவூர் நாணு, டி.கே.ஜெயராமன், சாத்தூர் சுப்ரமணியம் ஆகியோருக்கு மத்யானக் கச்சேரியில் வாசித்தேன். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மா, செம்மங்குடி சீனிவாசய்யர் ஆகியோருக்கும் அங்கு நான் மிருதங்கம் வாசித்திருக்கிறேன்.

பிறகு பி.எஸ்.ஹை ஸ்கூலில் கச்சேரிகள் நடந்தன. அப்போதுதான், சங்கீத வித்வத் சபைக்கு சொந்தக் கட்டிடம் ஒன்று வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மியூசிக் அகெடெமி கட்டடம் கட்டியதற்கான பணம் முழுவதும் சங்கீத வித்வான்கள் கொடுத்ததுதான். வேறு யாரும் உள்ளே வர வில்லை. அப்போது கே.ராஜா அய்யங்கார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, W.துரை சாமி அய்யங்கார், டி.எல்.வெங்கடராமய்யர், ஜெயராமைய்யர் போன்ற இன்னமும் சிலர் மட்டுமே வித்வான் அல்லாதவர்கள், சபையின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டவர்கள். மிக நல்ல முறையில் ‘ஓஹோ’ வென்று நடந்து கொண்டிருந்தது சங்கீத வித்வத் சபை. சொந்தக் கட்டிடம் வேண்டு மெனில் அதற்கு எம்.எஸ்.அம்மாவை பாடச்சொல்லி வசூல் செய்யலாம் என்று திட்டம் வகுக்கப்பட்டது. பெங்களூர், பாம்பே, கல்கத்தா, போன்ற இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் பணம் ஈட்டக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. அப்போது டி.டி.கிருஷ்ணம்மாச்சாரியார் நிதி அமைச்சராக இருந்தார். அவர் மூலமாக அரசு நிதி வழங்கப் பட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேருதான் பிரதம மந்திரியாக இருந்தார். இந்த மியூசிக் அகெடெமி கட்டடம் கட்ட அஸ்திவாரம் போட நேரு வந்திருந்தார். அப்போதும் எம்.எஸ்.அம்மா பாட்டு, நான் மிருதங்கம். என் அருகில் நின்றபடிதான் நேரு அவர்கள் பேசினார். இன்னமும் அந்தப் புகைப்படம் என்னிடம் இருக்கிறது. இப்படி உருவானதுதான், மியூசிக் அகெடெமி.

இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசையடி அலுமினி கார்ஷெட்டில் கோகலே ஹால் என்று அழைக்கிறோமே அங்குதான் நடந்து கொண்டிருந்தது. அங்கு நடந்த கச்சேரிகளில், செம்மங்குடி சீநிவாசய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர் ஆகியோரின் பாட்டுக்கு, சௌடையா பிடில், நான் மிருதங்கம், பாலக்காட்டு மணி அய்யர் கஞ்சிரா, ராமபத்ரனின் தந்தை கோபாலசாமி அய்யர் கொன்னக்கோல் என்று நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அரியக்குடி, எம்.எஸ்.அம்மா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.

தமிழிசைச் சங்கத்தை ஆரம்பித்தவர், முத்தையா செட்டியாரின் அப்பா, அண்ணாமலைச் செட்டியார்தான். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், கல்கி, சதாசிவம், டி.கே.சிதம்பரநாத முதலியார் போன்ற பலர் இணந்து ஆரம்பித்தது தான் தமிழிசைச் சங்கம். இந்த சங்கத்தில் தமிழ் பாடல்களைத் தவிர வேறு மொழிப்பாடல் ஏதும் பாடக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிபந்தனைகளுக்கு பல வித்வான்கள் ஒப்புக்கொள்ள வில்லை, பாட யாருமே வரவில்லை. வர இயலாது என்று கூறிவிட்டனர். எம்.எஸ். அம்மா பாடினார். நான் மிருதங்கம் வாசித்தேன். சினிமா நடிகர் தியாகராஜ பாகவதர் பாடினார்.அவருக்கும் நான் வாசித்தேன். தண்டபாணி தேசிகருக்கும், மதுரை மணி ஐயருக்கும் பழநி சுப்ரமணிய பிள்ளை வாசித்தார். நான்கைந்து ஆண்டுகள் வரை தமிழிசை விழாவில் யாருக்கு அழைத்தாலும் நாங்கள் சென்று வாசித்திருக்கிறோம். தமிழிசைச்சங்கம் அப்படி நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகு என்னை அவர்கள் கூப்பிடுவது இல்லை.

மிருதங்கத்தில் ஆராய்ச்சி

மிருதங்கத்தைப்பற்றி டாக்டர் பட்டம் வாங்கும் அளவு அதன் ஆராய்ச்சி எப்படி ஆரம்பித்து என் மனதில் வளர்ந்தது என்று கூறுகிறேன். சி.வி.ராமன் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆராய்ச்சியாளர். அவர் மிருதங்கத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தார். அதற்கு நான் மிருதங்கம் கொடுத்து உதவினேன். சில ஏற்பாடுகளும் செய்து கொடுத்தேன். அவரிடம் நான் ஒன்று சொன்னேன். இந்த மூட்டு அடிப்பது என்பது கைத் திட்டமாகத்தான் அடிக்கிறார்கள். அதன் படி ஒரு கண்ணைத் தட்டும்போது மற்றொன்று இறங்கிவிடும், மற்றொரு கண்ணைத் தட்டும் போது வேறு ஒன்று இறங்கிவிடுகிறது. இதற்கு ஒரு இயந்திரம் கண்டு பிடித்துக் கொடுங்கள் என்றேன். அவர் என்னிடம், ‘உன்னால் கண்டுபிடிக்க முடியுமா?’ என்று எதிர் கேள்வி வைத்தார். நான் ‘இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள்,’ என்று சொல்லிவிட்டு வந்தேன். இரண்டு நாட்களும் இரவும் பகலும் அதைப் பற்றியே சிந்தித்து, அதற்கான வரை படங்கள் தயாரித்து எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றேன். அவர் எனக்கு மெடல் கொடுத்தார்.

அதன் பிறகு, அரிஸோனா யுனிவெர்சிடியில் இந்த மிருதங்கம் மூட்டு அமைப்பு முறை பற்றி ஒரு செயல் விளக்கம் கொடுத்தேன். ‘சோறு’ போடு வதையும் இயந்திரமே செய்துவிடும். அப்படிப்பட்ட மிருதங்கத்தில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தாராளமாக நாற்பது கச்சேரிகள் வாசிக்கலாம். ஒரு முறை மூட்டு அடித்தோமென்றால், அது நான்கு வருடங்களுக்கு இருக்கும். ஏதும் கேடு வராது. ஆனால், இதன் மூலமாக கையால் இவைகள் அனைத்தும் செய்யும் மனிதனுக்கு வேலையில்லாமல் போய்விடும். இந்த இயந்திரத்தை வடிவமைத்துத் தயாரிக்க, நான் அரசிடம் உதவி கேட்டேன். அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்தக் கண்டு பிடிப்புக்காகத்தான் அரிஸோனா யுனிவெர் சிடியில் எனக்கு ‘டாக்டர்’ பட்டம் அளித்தார்கள். எனக்கு அமெரிக்காவின் ஒரு அமைப்புத்தான் ‘மிருதங்க சக்ரவர்த்தி’ என்ற பட்டமும் கொடுத்தது.

நான் பெற்ற முதல் பட்டம்

எனக்கு முதன்முதலில் பட்டம் என்றால், பரமாச்சாரியார் கொடுத்தது தான். மனிதாகப் பிறந்தவன் அறிந்தோ, அறியாமலோ பல தவறுகள் செய்து விடுகிறான். சிலது தவிர்க்க இயலாததாகக் கூட ஆகிவிடுகிறது. ஒரு முறை நான் சென்னை வந்திருக்கும் பொழுது திடீரென்று என் மனதில் நான் வாழ்நாளில் செய்த சில தவறுகள் உறுத்த ஆரம்பித்தன. ஏன் இதெல்லாம் செய்தோம் என்று என் மனம் மிகவும் வருந்தியது. பரமாச்சாரியாரிடம் நாம் செய்த தவறுகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்கலாம் என்று தோன்றவே காஞ்சிபுரம் சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை ஹைதராபாத் சென்றிருக்கிறார் என்று தெரிந்தது. நான் நேரே ஹைதராபாத்திற்குப் போய் விட்டேன். என்னுடன் திருவெண்காடு ஜெயராமனும், வீணை வாசுவும். (இந்த இருவருக்கும் என் வாழ்க்கை முழுவதும் தெரியும்.) நாங்கள் மூவருமாக ஹைதராபாத் சென்றோம். நான் அவருடன் என் எண்ணங்களை தனிமையில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். யாரும் கூட இருக்கக் கூடாது என்றும் எண்ணினேன். அந்த நேரத்திற்காக காத்திருந்தேன்.

ஒரு நாள் இரவு பத்து மணி முதல் காலை ஐந்து மணி வரை எனது உள்ளத்தில் இருந்த அனைத்தையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன் தனியாக. அவரோ ‘நீயாகத் தவறை முழுமனத்துடன் உணர்ந்துவிட்டாய் என்றால் அதிலிருந்து விடுபட்டுவிட்டாய் என்று அர்த்தம். இனிமேலும் தவறுகள் தொடராது’ என்று சொன்னார். மறுநாள் பூஜை முடிந்ததும், எங்களுக்குத் தீர்த்தம் அளித்தார். தன் அருகில் அழைத்து, எனக்கு சால்வை, ருத்ராட்சம் அணிவித்து, தங்கக்காசில் ‘மிருதங்க பூஷண்’ என்று பொறித்து எனக்குக் கொடுத்தார். அதுதான் நான் வாங்கிய முதல் பட்டம். மறுபடியும் நின்று கொண்டேயிருந்தேன். ‘என்ன வேண்டும்’ என்று கேட்டார். நான் சொன்னேன் ‘நீங்கள் எனக்கு ‘மிருதங்க பூஷண்’ என்று பட்டம் கொடுத் திருக்கிறீர்கள். நான் சரியாக வாசிக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும். இப்படிப்பட்டவர் பட்டம் கொடுத்தும் சரியாக இவன் வாசிக்கவில்லை என்று. எனவே எனக்கு உங்கள் பூரண ஆசி தேவை’ என்றேன். தட்டு நிறைய பழங்கள் எடுத்துவந்து என்னிடம் அளித்து ‘இது நந்திகேஸ்வருக்குக் கொடுக்கும் பிரசாதம். இன்று முதல் நீ இந்த மடத்து ஆஸ்தான வித்வான்’ என்றார். நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மடத்தில் ஆஸ்தான வித்வானாக ஆனேன். அப்போது என் வயது நாற்பது.

புகையிலைப் பழக்கம்

எனக்கு பாலக்காட்டு மணி அய்யருடன் சேர்ந்து வெற்றிலை புகையிலை போடும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இது அப்பாவுக்குத் தெரியாது. ஆனாலும் ஒருநாள் நான் புகையிலைச் சாற்றை அப்பா முன்னால் துப்ப முடியாமல் முழுங்கி மயக்க மடைந்துவிட்டேன். அப்போதுகூட என்னை அப்பா திட்டாமல் ‘இந்தச் சனியனெல்லாம் எதற்குடா?’ என்று மெதுவாகச் சொல்லி ‘பழக்கத்தை விட்டுவிடு’ என்றுதான் கூறினார். ஒருமுறை முசிறி சுப்ரமணிய அய்யர் கச்சேரிக்கு நானும் அப்பாவுமாக மிருதங்கம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். நான் எப்போதும் மாவு பிசைந்து எடுத்து வருவது போன்ற வேலைகளைச் செய்யமாட்டேன். தனி வாசிக்கும் நேரம், அப்பா இன்னொரு பையனிடம் எனக்கு வெற்றிலைச் சீவல் கொடுக்கும்படி கூறினார். நான் வேண்டாம் என்றேன், ஆனால் அவரோ ‘அப்போதுதானே நீ நன்றாக வாசிப்பாய்?’ என்று கூறி கட்டாயப்படுத்தி கொடுத்து விட்டார். நான் துப்பிவிட்டு வருகிறேன் என்று சொல்லி பயந்து போய் அங்கிருந்து ஓடிவந்து விட்டேன். முசிறிக்கும் நான் ஓடிவிட்ட விஷயம் தெரியும். அப்பாவிடம் பையன் எங்கே என்று கேட்க, அவரோ தாம்பூலம் துப்பிவிட்டு வருவதற்குப் போயிருக்கிறான் என்கிறார். இதுவும் எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சிதான். மறு நாள் வீட்டில் முசிறிக்கு காபி கொண்டுவந்து கொடுக்கும் படி அப்பா கூற நான் பயந்து கொண்டே அப்பாவுக்கும் அவருக்கும் காபி கொடுக்கப் போனேன். அவர் என்னிடம் தன் வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொடுத்து ‘வெற்றிலை போட்டுக்கொள்’ என்றார். நான் மறுத்தேன். ‘ஏன் நேற்று அப்பா கொடுத்தபோது மட்டும் போட்டுக் கொண்டாயே?’ என்று ஒன்றும் தெரியாதது போல கேட்கிறார். என்னைப் பற்றிய அனைத்தும் அறிந்தும் வெறுக்காத குரு, அப்பா. அதுதான் என்னால் மறக்க முடியாதது.

கச்சேரியில் மறக்க முடியாத நிகழ்ச்சி

மழவராயபுரம் சுப்பராமய்யர் கச்சேரிக்கு நான் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். லட்சுமீசன் என்று ஒரு தாளம். 108 தாளத்தில் ஒன்று. அவர் அதைப் பாடுகிறார். அப்போது எனக்கு 16 வயது. சின்ன பையன். யச்சி சீனிவாச ஐயங்கார் செய்த தில்லானா ஒன்று இருக்கிறது இந்தத் தாளத்தில். அதற்குத் தானம் பாடி எனக்குத் தனி விட்டு விட்டார். எப்படியோ நான் சரியாக வாசித்துவிட்டேன். என் குருநாதராகிய அப்பா மிகவும் பாராட்டினார். கோபித்துக் கொள்ளவில்லை. தப்புத்தப்பாக வாசித்திருந்தால் அங்கேயே எல்லோர் முன்னாலும் எனக்கு திட்டு விழுந்திருக்கும். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.

ஒரு வேடிக்கை சம்பவம்

சேத்தூர் ஜமீந்தார், மாமுண்டியா பிள்ளையின் சிஷ்யர். அவரின் ஏற்பாட்டில் அந்த ஊரில் ஒரு கச்சேரி நடக்கவிருக்கிறது. தஞ்சாவூர் நாணு பாட்டு, ராஜமாணிக்கம் பிள்ளை பிடில், நான் மிருதங்கம், ஜமீந்தார் கஞ்சிரா. ஜமீந்தாரின் வாசிப்புப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் ராஜ மாணிக்கம் பிள்ளைக்குத் தெரியும், ஏற்கனெவே அவருக்கு வாசித்திருக்கிறார். தஞ்சாவூர் நாணு முதலில் வர்ணம் பாடினார். அதற்கு நான் மிருதங்கம் வாசித்து விட்டேன். அடுத்து பந்துவராளி கீர்த்தனை. ராஜமாணிக்கம் பிள்ளை பிடிலை கீழே வைத்துவிட்டார். ‘இந்த ராஜமாணிக்கம் பிள்ளை பேர் வாங்கியது மஹாராஜாவால்தான். பாகவதரும் பேர்வாங்க வேண்டாமா? பாட்டுக்கு நீங்க வாசியுங்கோ நான் அப்புறமா வாசிக்கிறேன்’ என்று சொல்லி விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஜமீந்தாரின் இழுவை வாசிப்பைக் கேட்ட பின்னால்தான் எனக்குப் புரிய வந்தது. அவ்வளவு ‘ஸ்லோ’. என்னிடம் ‘தனி ஆவர்த்தனத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்’ என்று கூறிவிட்டார். நான் பார்த்தேன், ஜமீந்தாரரை முதலில் தனி வாசிக்க விட்டுவிட்டேன். அவருக்கும் கஷ்டமில்லாமல் இருக்க வேண்டுமல்லவா? அதன் பிறகு நான் ‘தனி’ தனியாக வாசித்தேன். எனக்கும் கஷ்டமில்லாமல் போய் விட்டது. இது சும்மா ஒரு வேடிக்கைக்காக கூறப்பட்ட நிகழ்ச்சி. மறக்க முடியாதது.

தாளங்களில் ஆராய்ச்சியும் அதன் பதிவும்

நான் முதலில் 35 தாளத்திற்கும், பிறகு 72 மேளகர்த்தா தாளத்திற்கும், இப்போது 108 தாளங்களுக்கும் வெண்பா பாடி அதையும் தாளத்தையும் இணைத்து சிடிக்களாகக் கொடுத்திருக்கிறேன். இதன் ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்றால், தஞ்சாவூரில் சரஸ்வதி மஹாலில் எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. அது 1904 ஆம் ஆண்டு கரூரில் ஒருவர் எழுதியது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தாள சமுத்திரம்’. அது இன்றும் என்னிடம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு தளத்திற்கும் எப்படி அங்கம் போட வேண்டும், எப்படி வடிவமைக்க வேண்டும் போன்ற அநேகக் குறிப்புகள் உள்ளன. மேலும் சரஸ்வதி மஹாலில் இருக்கும் ஏட்டுச் சுவடிகளில் இன்னமும் கையாளப்படாத ஏராளமான சுவடிகள் உள்ளன. ஆராய்ச்சி செய்ய இன்னமும் பல தளங்கள் இருக்கின்றன. எந்த ராகம் பாடினால் எந்த நோய் தீரும் என்பது போன்ற பல ஆராயத் தகுதியானவை உள்ளன. இந்த 108 தாளங்களுக்கும் வெண்பா இருக்கிறது ஏட்டில். அதில் சில சாகித்யங்கள் கீழ் ஸ்தாயியிலும், தாளம் மேல் ஸ்தாயியிலும் சில சாகித்யங்கள் மேல் ஸ்தாயியிலும், தாளம் கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அந்த 108 வெண்பாக்களையும் என்மகன் பாடுவான்.

நாற்பது ஆண்டுகள் உழைப்பு

ஒரு நாள் இரவு, என்குருநாதர், என்னையும் மணி அய்யரையும் இரவில் எழுப்பி சில கணக்குகளைக் கற்றுத்தந்தார். அதைக் கொண்டுதான் நான் 35 தாளங்கள், 72 மேளகர்த்தா தாளங்கள், 108 தாளங்கள் எல்லாமே செய்திருக் கிறேன். இந்தத் தாளங்களுக்கு ‘மோரா’ எப்படி சமத்துக்கு சமம் வர வேண்டும் என்பதையும் அறிந்தேன். சிறு குழந்தைகளும் மிருதங்கத்தைப் பயின்றால், கச்சேரிக்கு சரியாக வசிக்க வேண்டும். சமத்திலிருந்து எடுக்கச் சொன்னால் எல்லோராலும் சரியாக வாசிக்க முடியும். எனக்கு இது பற்றிய எண்ணம் தோன்றி அதையே எப்போதும் யோசித்துக் கொண்டு ஏறக்குறைய 40 ஆண்டுகள் இதுபற்றிய சிந்தனையிலேயே இருந்து உழைத்து இதைச் செய்திருக்கிறேன்.

டெல்லியில் ‘ஆர்கிவ்ஸி’ல் (இசைக் களஞ்சியம்) 35 தாளங்களைப்பற்றி நான் செய்தது 4 மணி நேரப் பதிவாக இருக்கிறது. அந்தத் தாளங்களை நான் வாசித்திருக்கிறேன். 72 மேள கர்த்தா ராகங்களைப்பற்றி என்னை செய்யும்படி தூண்டியவர், பாண்டிச்சேரியில் இருந்த கே.எம்.வைத்தியநாதன்தான். திருச்சி ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் திருவாரூர் நமச்சிவாயம் பாட, நானும் தஞ்சாவூர் ராமமூர்த்தியும் மிருதங்கம் வாசித்திருக்கிறோம். இரண்டு தவில், இரண்டு டோலக், ஒரு மோர்சிங் ஆகிய வற்றுடன் இணைந்து பதிவு செய்து உள்ளோம். இவையெல்லாம் இப்போது மக்களுக்குப் புரியாது. பிற்காலத்தில் இதன் அருமை புரியும்.

எனக்கு இன்னமும் பல ஆசைகள் உண்டு. மிருதங்கம் கற்றுக் கொடுப் பதை சினிமாப் போல பதிவு செய்து, கைகள் உபயோக்கிப்பது, தாளம் எப்படி வாசிப்பது என்பதையெல்லாம் வீடியோவைப் பார்த்து மிருதங்கம் கற்றுக் கொள்ளும்படி தயாரித்து, அதை தூர்தர்ஷனில் ஒளிபரப்பி அது மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது ஒரு ஆசை. எனக்கு நூறு சிஷ்யர்களுக்கு மேல் இருக்கிறார்கள். கே.வி.பிரசாத், ஜெ.வைத்யநாதன், பி.சிவராமன், ஹரி நாராயணன், பாலாஜி, கோபாலகிருஷ்ணன் போன்றோர் அதில் சிலர். இன்னமும் பலரின் பெயர் இப்போது நினைவில் இல்லை. வெளிநாடுகளிலும், இந்தியாவெங்கிலும் என்னுடைய சிஷ்யர்கள் பரவலாக வாசித்துக் கொண்டும், சொல்லிக் கொடுத்துக் கொண்டும், வேலையிலும் இருக்கிறார்கள்.

நான் வெஸ்லியன் (Wesleyan) யுனிவெர்சிடியில் இரண்டு மாதங்கள் பணி புரிந்தேன். அதே போல பிட்ஸ்பர்க்கிலும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகப் பணி புரிந்தேன். ஆனால் எனக்கு அங்கு உள்ள குளிர், உணவு முறை இரண்டுமே ஒத்து வரவில்லை. அங்குள்ள சில கட்டுப்பாடுகளும், (வெளியில் செல்லக்கூடாது என்பது போன்ற சில) என்னைக் கட்டுப் படுத்துவது போல இருந்ததாலும் என்னால் இயலாது என்று வந்து விட்டேன். நிறைய வெளிநாடுகளில் கற்றுக் கொடுக்க அழைக்கிறர்கள்தான்.

ஆறு தலைமுறைக்கு வாசித்தது

நான் ஆறுதலைமுறை வித்வான்களுக்கு வாசித்திருக்கிறேன். முத்தையா பாகவதருக்கு வாசித்திருக்கிறேன். அவரின் சிஷ்யர் சங்கரசிவனுக்கும், அவரின் சிஷ்யர் சேஷகோபாலனுக்கும், அவரின் சிஷ்யர் சந்தான கோபாலனுக்கும், அவரின் சிஷ்யர் ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கும், அவரின் சிஷ்யை ஒரு பெண் மணிக்கும் இப்படி ஆறு தலைமுறை குரு சிஷ்ய பாரம்பரியத்திற்கு வாசித் திருகிறேன்.

அரிஸோனாவில் பாதுகாக்கப்படும் பதிவு

அரிஸோனா யுனிவெர்சிடியில் என்னுடைய மிருதங்க வாசிப்பு எல்லாமே பதிவுகளாக, பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்னுடைய எல்லாக் கச்சேரி வாசிப்புகளும், தனி ஆவர்த்தனங்களும் ‘டிராக்’ ‘டிராக்’காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைச் செய்தவர் ஜேம்ஸ் ரூபன் என்பவர். அவர், நான் எம்.எஸ்.அம்மாவுக்கு வாசித்த பதிவுகளை மட்டுமே 350 மணி நேரத்திற்குச் சேகரித்து வைத்துள்ளார். அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு நான் வாசித்தது, டி.கே.பட்டம்மாளுக்கு, டி.எம்.தியாக ராஜனுக்கு பி.ராஜமைய்யருக்கு, டைகர் வரதாச்சாரியாருக்கு, என எல்லா வற்றையும் தனது வாழ்நாளில் மிகவும் சிரமம் மேற்கொண்டு சேகரித்த ஜேம்ஸ் ரூபன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், அவர் தான் சேகரித்த இந்த சொத்து விலை மதிப்பற்றது, எனவே அது தன் காலத்திற்குப்பின் அரிஜோனா யுனிவெர்சிடியைச் சாரும் என்று உயில் எழுதி வைத்து அதைப் பதிவும் செய்திருக்கிறார். அதை யார் வேண்டுமானாலும் யுனிவெர்சிடியில் போய் கேட்கலாம், ரசிக்கலாம்; ஆனால், அதைப் பதிவு செய்வதோ, தெரியாமல் எடுத்து வருவதோ இயலாது. இதை நம் கர்னாடக இசைக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையாய் நான் கருதுகிறேன். இது எனக்கானது அல்ல. இந்தியாவின் இசை ஒரு வெளிநாட்டவரை எப்படி மயக்கி இருக்கிறது என்பதற்கான ஆதாரமாகத்தான் இதை நான் நினைகிறேன்.

வரும் தலைமுறைக்கு

அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு நான் சொல்வது இதுதான், என் போன்று அவர்களால் பயிற்சி எல்லாம் மேற்கொள்வது சாத்யமில்லாதது. அதை ஆசை என்பதை விட வெறி என்று சொல்லலாம். அந்த நெருப்பு உள்ளே கனன்று கொண்டே இருக்க வேண்டும். நான் ஒரே நாளில் கோவில்களில் பஜனைக்கு மாலை ஆறு முதல் ஒன்பது மணிவரை, பின் பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்குப் பக்க வாத்யமாக, 9 முதல் 12 வரை, பிறகு திவ்ய நாமத்திற்கு 12 மணி முதல் விடிய 4 மணி வரை தொடர்ந்து வாசிப்பேன். அது இந்தக்காலப் பிள்ளைகளுக்கு இயலாது. எனவே நிறைய கச்சேரிகளுக்குச் சென்று கேட்பதை ஒரு பழக்கமாகக் கொள்ள வேண்டும். பாட்டும் முறையாகக் கற்றுக் கொண்டால் பாட்டுக்கு பக்க வாத்யமாக வாசிக்க இன்னமும் எடுபடும். பெற்றோரும் ‘என் பிள்ளையின் வாசிப்பு பிரமாதம்’ என்று எல்லோரிடமும் கூறி அவனின் வித்தையை வளர விடாமல் செய்யக்கூடாது. வித்வான்களும் காசுக்கு வாசிக்காமல் தகுதிக்காக வாசிக்க முன் வரவேண்டும். தகுதி இருந்தால் பணம் புகழ் எல்லாமே தானே நம்மை வந்தடையும். இவற்றையெல்லாம் நான் ஏதோ‘ஈகோ’வுடன் சொல் கிறேன் என்று எண்ண வேண்டாம். ஒரு நல்ல எண்ணத்தில்தான் சொல் கிறேன். பெற்றோர்களும் குழந்தைகளைப் பாராட்டி அழித்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தினால்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.


———————————————
வணக்கம்
“குருவே சரணம்” என்னும் தலைப்பில் ஒரு இசை நூல் சதுரம் பதிப்பகம் மூலம் கொணர்ந்திருக்கிறேன். 19 கர்நாடக இசைக் கலைஞர்களின் நேர்காணல்களை எழுத்தாக்கம் செய்து தொகுத்திருக்கிரேன். இம்மாதம் 20ஆம் தேதி தாம்பரம் மியூசிக் கிளப் அதை தாம்பரத்தில் வெளியிடுகிறது.

மிருதங்க வித்வான் திரு T.K.மூர்த்தியின் நேர்காணலை இங்கு இணைத்திருக்கிறேன்.

க்ருஷாங்கினி

நூல் பெறவிரும்புவோர்
சதுரம் பதிப்பகம்
#34,சிட்லபாக்கம் 2ஆம் பிரதான சாலை,
தாம்பரம் சானடோரியம், சென்னை-600 047 முகவரியை தொடர்புகொள்ளலாம்
P.n. 2223 1879

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி