உலக சினிமா வரிசை Not one less-சீனப்படம்

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

கே.பாலமுருகன்


ஆஸ்கார் என்கிற உயரிய சினிமாவிற்கான விருதுகளைப் பெற்ற படங்களையும் உலக சிறந்த அயல் சினிமா இயக்குனர்களின் படங்களையும் இந்தத் தொடர் கட்டுரையில் அறிமுகப்படுத்தவுள்ளேன். இன்றளவும் நல்ல தரமான உலக சினிமாக்கள் மீது பலரின் விமர்சனப் பார்வையும் ஆய்வு மனப்பான்மையும் பரவலாக எழுந்த வண்ணமே இருக்கின்றன. சமக்காலத்து வாழ்வையும் அசலான மனிதர்களையும் கொண்டு வருவதுதான் நல்ல சினிமா என்பார்கள். அந்த மாதிரியான மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் பிரதிபலிப்பதுதான் தரமான சினிமா என்று அடையாளப்படுத்தலாம்.
அந்த வரிசையில் உலக புகழ் பெற்ற சீனப் பட இயக்குனரான ஷங் யீ மோவ் (ZHANG YIMOU) என்பவர் இயக்கிய படமான “Not one less” என்ற படத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். மலையடிவாரத்தின் அருகிலுள்ள ஒரு சீனக் கிராமத்து பள்ளியைப் பின்னனியாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
20 மாணவர்களைக் கொண்ட அந்தச் சீன கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கோவ்(mr.Gou) தமது உடல் நலம் பாதித்த அம்மாவைப் பார்ப்பதற்காக வேறு ஊருக்குப் புறப்படவிருப்பதால், அவருக்குப் பதிலாக பள்ளியில் தங்கி மாணவர்களைக் கவனித்துக் கொள்ள கிராம அதிகாரியின் மூலம் 13 வயதே நிரம்பிய பெண் (Wei) வந்து சேர்கிறாள். தயக்கமும் பயமும் கொண்ட அவளிடம் மனமில்லாமல் பள்ளியின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, “நான் வரும்வரை மாணவர்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள், யாரும் நீங்கிவிடக்கூடாது, பள்ளியிலிருந்து நின்றுவிடக்கூடாது. . அப்படி ஒரு மாணவன் நின்றாலும் உனக்குச் சம்பளம் கிடையாது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்.
வெய் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க தடுமாறுவதால், ஆசிரியர் கூறியது போல் ஒவ்வொரு நாளும் ஒரு பாடப்பகுதியைக் கரும்பலகையில் எழுதிவிட்டு மாணவர்களை பின்பற்றி எழுதச் சொல்கிறாள். அதற்கு தகுந்த மாதிரி ஆசிரியரும் அவளிடம் 22 வெண்கட்டிகளை தந்துவிட்டுப் போகிறார். மாணவர்களிடையே அவள் மீது அதிருப்தியும் கோபமும் ஏற்படுகிறது. ஒருசில மாணவர்கள் அவளை தற்காலிக ஆசிரியராக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
இதற்கிடையில் பள்ளியின் ஒரு மாணவனான (Zhang) என்பவன் இரண்டு நாட்களாகப் பள்ளிக்கு வராமலிருந்ததால், வெய் பதற்றம் கொள்கிறாள். ஆசிரியருக்குக் கொடுத்த வாக்குபடி யாரும் பள்ளியிலிருந்து நீங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தாள். அந்த மாணவனின் வீட்டைத் தேடிப் போகிறாள். இருண்ட அந்த வீட்டின் கட்டிலில் அந்த மாணவனின் அம்மா உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறாள். மகனைத் தேடி வந்த வெய்யிடம், அவன் வேலை செய்வதற்காக நகரத்திற்குச் சென்றுவிட்டான், அவனைப் படிக்க வைக்கவும் எங்களிடம் வசதியில்லை என்று அந்த மாணவனின் அம்மா கூறுகிறாள்.
தற்காலக ஆசிரியரான வெய் எப்படியாவது நகரத்திற்குச் சென்று அந்த மாணவனைத் தேடி கண்டறிந்து மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரவேண்டும் என்று மாணவர்களிடையே சொல்லிவிட்டு நகரத்திற்குச் செல்வதற்கான பேருந்து டிக்கெட் விலையை விசாரிக்கச் செல்கிறாள். பேருந்து பணம் அதிகமாக இருப்பதால் அதைச் சேகரிப்பதற்காக மாணவர்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு செங்கள் சூழைக்கு வேலைக்குப் போகிறாள். அங்கே கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு நகரம் சென்று வீதி வீதியாய் அந்த மாணவனைத் தேடி அலைகிறாள். அவன் வேலைக்கு வந்ததாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்று விசாரிக்கும்போது, அவன் இங்கு வந்த முதல் நாளிலேயே காணாமல் போய்விட்டான் என்று கூறுகிறார்கள்.
அவன் தொலைந்ததாக நம்பப்படும் இரயில் நிலையத்திற்குச் சென்று அவனைப் பற்றிய தகவல்களை தாள்களில் எழுதி ஒட்டுவதற்காக முயற்சி செய்கிறாள், பிறகு தொலைகாட்சி நிலையத்தில் தகவல் கொடுத்தால் மாணவன் கிடைத்துவிடுவான் என்று ஒருவன் சொல்ல, இவளும் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தேடி நடக்கிறாள். இறுதியில் அந்த இடைத்தை அடைந்தும் அவளிடம் சரியான பத்திரங்கள் இல்லாததால் உள்ளே விட மறுக்கிறார்கள். நிலையத்தின் வாசலிலேயே 2 நாட்களாகக் காத்திருக்கிறாள், எல்லோரிடமும் உதவி கேட்டு அலுப்பில் முன்வாசல் கதவின் ஓரமாகவே படுத்துக் கொள்கிறாள்.
இறுதியில் அவள் அந்தத் தொலைகாட்சி நிலையத்தின் முதல்வரின் கண்களில் பட, அவளை ஒரு நேரடி தொலைகாட்சி பேட்டி நிகழ்விற்கு அனுமதிக்கிறார்கள். அந்த நிகழ்வில் கிராமப்புற பள்ளியின் சூழலைப் பற்றியும் மாணவனைத் தேடி இவ்வளவு தொலைவு வந்திருக்கும் வெய் என்ற அந்தத் தற்காலிக ஆசிரியைப் பற்றியும் பேசுகிறார்கள். காணாமல் போன அந்த மாணவனைப் பற்றிய அடையாளங்களைச் சொல்வதற்கு அவளிடம் கேட்க, வார்த்தைகள் வராமல் தடுமாறுகிறாள். கண்களிலிருந்து கண்ணீர் ஒழுக, “zhang. . நீ எங்க இருக்கெ? வந்துருடா. . திரும்பவும் பள்ளிக்கு வந்துரு!” என்று உடைகிறாள். நாடே அந்த நிகழ்வைக் கண்டு ஆழத்துயரத்தில் மூழ்குகிறது.
இறுதியில் ஒரு சாப்பாட்டுக் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்து அவளிடம் ஒப்படைக்கிறார்கள். இருவரையும் அழைத்துக் கொண்டு அந்தத் தொலைக்காட்சி நிறுவனமே நகர மக்கள் பள்ளிக்கு கொடுத்த உதவிகளுடன் அவர்களைக் கிராமத்தில் வந்து விட்டுச் செல்வதாகப் படம் நிறைவு பெறுகிறது.
இதைச் சினிமா என்று சொல்வதைவிட அசலான வாழ்வு என்றே கூறலாம். தற்காலிக ஆசிரியராக நடித்திருக்கும் வெய் அதன்படியே வாழ்ந்து மிகவும் யதார்த்தமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். சீன நாட்டின் கிராமப்புற வாழ்வியலையும் கிராமத்து பள்ளிகளின் நிலைகளையும் இந்தப் படத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார். தோட்டப்புற சூழலில் அல்லது கிராமப்புற சூழலில் அமைந்திருக்கும் பள்ளிகளின் முக்கிய பிரச்சனைகளான மாணவர் எண்ணிக்கைக் குறைவது குறித்து மிகவும் ஆழமாகவும் அழகான கதையின் மூலமாகவும் பதிவு செய்துள்ளார் இயக்குனர் ஷங் யி மோவ். அந்தத் தற்காலிக ஆசிரியை போல எல்லோரும் மாணவர்களை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டால்தான் நம் நாட்டில் தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்ற முடியும் போல.
-தொடரும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்