பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

சுப்ரபாரதிமணியன்


சுப்ரபாரதிமணியன்

தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களின் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான ‘பூங்கா’ முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சனைகளை முன் வைக்கிற ‘கை’, குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய “பாலிபேக்” ஆகியவற்றிலும் காணமுடியும்.

“பூங்கா”வில் அன்பிற்காக ஏங்கும் பெண்குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. “இப்படிக்கு பேராண்டி” படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களில் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நம்முள்ளும் ஆழமாக விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறுசெடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிறபோது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்து காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தாபாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)
குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றிவிடுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.

தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் முறித்து இன்னும் சில நெகிழ்வுகளை அது சமச்žரான பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப்பதைக் காட்டியிருக்கும்.

இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந்திருக்கின்றன. ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் ” நாடக நடிகர்களாகி” விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளியமைப்பு உறுத்துகிறது. குழந்தைகளின் நுண்ணிய உணர்வுகளின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனுடன் தனிப்பயிற்சி மாணவர்களை உட்காரவைத்தபடி தேநீர் அருந்தும் குரோதமும் தென்படுகிறது. திரைப்படத்தனம் என்பது ஏற்படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவதிலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் ‘தாத்தா பாட்டி வேணும்” என்று கோஷமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள்கிறது. இந்தவகை சாதரண நிகழ்வுகளை யதார்த்த தளத்தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத்தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும்பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத்திய அவரின் சிறுகதை யொன்றிலும் இதை நுணுக்கமாக கவனிக்க முடிகிறது ). வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்தவகையில்தான் குழந்தைகளின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாப்பாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியால் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாக காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சியாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் பெறும் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிகக நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்திக் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும், நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளின் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம்தான்.

அன்பையும், பாசத்தையும் நெகிழ்வையும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற காட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முரற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடி இயங்குகிறார் அவர்.

– சுப்ரபாரதிமணியன் ( subrabharathi@gmail.com )
( இப்படிக்கு பேராண்டி.. தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்.
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: தாண்டவக்கோன்.55 நிமிட குறும்படம்
KA ARTS, TIRUPPUR >Ph., 09360254206 )


subrabharathi@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்