கல்லூரி : உலக சினிமா நோக்கி தமிழ்த்திரை….

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

கோவிந்த்


தமிழ்ச் சினிமா வியாபார சந்தையின் நிர்பந்தங்கிடையில் மனதை பிழியும், மௌனமாய் நெஞ்சில் அறைந்து அறைந்து கேள்வி கேட்டும் படம்.
தமிழ் சினிமாவில் , தமிழக கல்லூரிகளின் மாணவ சமுதாயத்தின் நிகழ்வுகளை இந்த அளவிற்கு எந்த இயக்கனுரும் சிற்பமாய் வடித்ததில்லை….
எண்ணெய் வழிந்த, கறுத்த நமது தேகமொட்டிய கண்மணிகள் இடையில், பெங்களூர் ரோஜாவையும் நிறுத்தி, அவர்களின் மனங்களின் சங்கமத்தை அழகுற செதுக்கியுள்ளார் இயக்குனர்.
மதுரை பாஷை, நெல்லை பாஷை தாண்டி தமிழக -சென்னை தாண்டிய- கல்லூரி பேச்சு வழக்கு , அவர்களின் சந்தோஷ மின்னல்கள் என மலர் சரம் தொடுத்துள்ளார்.

கீழ் தட்டு சமுதாய உணர்வுகளுக்குகிடையில் அவர்களின் படிப்பு முயற்சி, ஆங்கிலத்தினுடன் கத்தி சண்டை போடும் கல்லூரி வாழ் நிலை…
தூரத்தே தெரியும் எதிர்காலத்தை , நம்பிக்கை எனும் உறுதியுடன் அடைய நினைக்கும் வாழ்வு நிலை…

ஆங்கில வாத்தியார் போடும் நோட்ஸ், கூரை வீட்டில் தொங்கும் கல் லாரியில் இருந்து விழுந்து அழிந்த தாயின் போட்டோ, கடந்த கால சரித்திரமாக சுவரில் தொங்க…..
தனது முன்னோர் என அந்தப் பெண் சொல்வதும்,

அதே ஊரில், ஜட்ஜாகவும், ஐ.ஜி ஆகவும் பாட்டனார்கள் பரம்பரையை புகைப்படமாக சொல்லும் இன்னொரு சுவர்… பெரிய பணக்கார குடும்பம்…
– சுவரில் சித்திரம் எழுதியுள்ளார் இயக்குனர்.
கல்லூரி கனவுகளையும், காதலையும் …. கனத்த இதயத்துடன் பார்க்க வைத்துள்ளார்…

அதுவும் ஜாதிய வித்தியாசத்தில் துவேஷம் வளர்க்காமல்…. அற்புதமாக கையாண்டுள்ள நேர்த்தி….

நிச்சயம் மாணவ சமுதாயத்தினரின் சிந்தனைகள் அருமையே..

அந்தச் சாக்கடையில் கையை விட்டு குறுக்கு பாலம் கட்டும் காட்சி….
அரசியல் சாக்கடையென கேலி பேசி ஒதுங்காமல் நாம் இறங்கி நல்பாலம் கட்ட வேண்டும் என்ற குறீட்டாக இயல்பாக நிற்கிறது.

நமது வீட்டார்கள் வெளியில் சென்றால், எந்த கட்சித் தலைவன் இறந்தாலோ…இல்லை.. கோர்ட் தீர்ப்பினாலோ கலவரம் வருமோ , என்று பயந்து பயந்து ஒரு மன இம்சையில் நாம் செத்து செத்து நிதம் பிழைப்பது கதையில் ஆணி அடித்தார்போல் சொல்லப்பட்டிருக்கிறது…
இது பார்த்து சிலாகிக்க வேண்டிய படம்.
பாருங்கள் கட்டாயம்.

மறக்க முடியுமா…? கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா….. கருக்கி எரிக்கப்பட்ட அந்த வலி…?
இதை திரையில் வடிக்கப்படமால் என்ன உலக சினிமா பற்றிப் பேசி.. நாம்…?
அதை கல்லூரி படம் தீர்த்து வைத்திருக்கிறது.
உலகமெங்கும் எடுத்துச் செல்லப் பட வேண்டிய படம்.

இந்தப் படத்தில், ஆரம்பத்தில் நிச்சயம்,
“இந்த படத்தில் கிளைமாக்ஸ் போல் நிஜத்தில் நடந்த நிகழ்வை ஒட்டி பிணையப்பட்ட கற்பனை படம்” – என்று போட்டிருக்கலாம்.
அது, உலகமெங்கும் போகையில், நமது வாழ்வு, அலல்து தமிழ் கலாச்சாரம் எப்படி காட்டுமிராண்டித்தனமாக போய் உள்ளது எனக்காட்டும்.
வேட்டிகளின் ஆத்திர அராஜக செயல்பாடுகளினால்…… இன்னும் எத்தனை சேதம் வரும்….

இந்தப் படம் நிச்சயம் மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்ச்சியை ஆழ் மன நிலையில் ஏற்படுத்தும்…
அதற்காக,
தயவு செய்து இந்தப் படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
தமிழக திரைக்களத்தில் சாதனை புரிந்த கலைஞர் வரி விலக்கு ஆணை பிறப்பிக்க விண்ணப்பிப்போம்…!


govind.karup@gmail.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்