இலை போட்டாச்சு – 33 அக்காரவடிசில்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

பாரதி மகேந்திரன்



தேவைப் படும் பொருள்கள்

பச்சரிசி – 350 கிராம்
பாசிப்பருப்பு – 150 கிராம்
பால் – முக்கால் லிட்டர்
வெள்ளைச் சர்க்கரை – அரை கிலோ
வெல்லம் – அரை கிலோ
முந்திரிப்பருப்பு – 100 கிராம்
உலர்ந்த திராட்சை – 100 கிராம்
ஏலப்பொடி – 1 தே.க.
நெய் – 200 கிராம்

முன்பெல்லாம் கனத்த வெண்கலப் பாத்திரத்தில் இதைச் செய்வார்கள். இப்போது சமைப்பான் வந்துவிட்டதால், வேலை எளிதாகிவிட்டது. சமைப்பானிலேயே பாலையும் 200 கிராம் தண்ணீரையும் கலந்து கொதிக்கவிடவும். இந்தக் கலவை நன்கு கொதிக்கத் தொடங்கியதும், முதலில் அரிசியையும் பிறகு பருப்பையும் களைந்து அதில் போடவும். அடுப்பைப் பந்தம் போல் எரியவிடாமல் நடுத்தரச் சூட்டில் இக்கலவையைக் கொதிக்கவிடவும். முதலிலேயே பாத்திரத்தில் சிறிது நெய்யை ஊற்றித் தடவி விட்டால் அடி பிடிக்காது. நன்றாய் இவை கொதிக்கத் தொடங்கிய பின் மிகக் குறைந்தபட்சத் தீயில் (சிம்மில்) இவற்றை வேகவிடவும் சமைப்பானை அதன் மூடியால் மூடிவிடலாம். ஐந்து நிமிடங்கள் கழித்து அதன் கனத்துண்டை (weight) / stopper) மூடியில் செருகலாம். மேலும் ஐந்து நிமிடங்கள் கழிந்ததும் அடுப்பை நிறித்திவிட்டுச் சற்றுப் பொறுத்து அதைத் திறக்கலாம். அரிசியும் பருப்பும் நன்றாய்க் குழைந்திருக்க வேண்டும். இல்லை யெனில் மேலும் சற்று நேரம் போல் வேகவிடவும். தீ குறைவாகவே இருத்தல் நலம். அவை வெந்து குழைந்ததும் முதலில் வெல்லத்தைப் பொடி செய்து போட்டுக் கலக்கவும். கட்டிகள் இன்றி வெல்லம் கரைந்த பிறகு சர்க்கரையை அத்துடன் சேர்த்துக் கிளறவும். யாவும் நன்றாய்க் கொதித்துக் கலந்து கெட்டியானதும் இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். மிகச் சிறிய அளவில் குங்குமப்பூவும் போடலாம்.

சமைப்பான் பெரிய அளவில் இருப்பது நலம். பால் மேலெழுந்து பொங்காது. இல்லாவிடில் அதை அடைப்பான் போட்டு மூடாமல், கிளறிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது வரும். ஒரு முறை செய்து புரிந்து கொண்டுவிட்டால், அடிக்கடி சமைப்பானைத் திறக்காமலேயே மூன்று கூவல்கள் வந்ததும் ஒரேயடியாக நிறுத்தி இறக்கலாம். வெல்லத்தை மட்டும் முதலில் போட்டுவிடக் கூடாது. அரிசியும் பருப்பும் குழைந்த பிறகே வெல்லத்தைச் சேர்க்க வேன்டும். இல்லாவிட்டால், வெல்லம் பாகாகி அரிசியும் பருப்பும் வேகாமல் உதிரி உதிரியாக வெறும் அவல் போல் ஆகிவிடும்.


mahendranbhaarathi@yahoo.com

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்