ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

பாண்டித்துரை


22.02.2007 ஞாயிறு அன்று சிங்கப்பூரில் அமைந்துள்ள அமோக்கிய நூலகப்பிரிவில் தீவிர இலக்கியவாசிப்பில் ஈடுபட்டிருக்கும் வாசகர் வட்டம் ஓவியர் கா. பாஸ்கர் அவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது . அந்நிகழ்வின் பதிவினை திண்ணை வாகர்களுக்காக பதிவுசெய்துள்ளேன்.

திரு. செல்வம் அவர்கள் ஓவியர் கா.பாஸ்கர் அவர்களை அறிமுகம் செய்ததையடுத்து ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல் கலகலப்பாக அரங்கேறியது.

கா. பாஸ்கர் சென்னை ஓவியக்கல்லூரி மாணவர் அங்கு ஓவியத்தில் முதுகலைபட்டத்தை முடித்து பல்வேறு ஓவியபோட்டிகளில் கலந்துகொண்டும் தற்சமயம் சிங்கப்பூரில் கணிணி வரைகலைபிரிவில் பணிபுரிகிறார். ஓவியர் சந்துரு ஆர்.வி. பாஸ்கர் தட்சணாமூர்த்தி இவர்களின் மாணவர் கா .பாஸ்கர் என்பது சிறப்பு.

இந்த சந்திப்பை மிகப்பெரிய அனுபவமாக எடுத்துகொள்வதாக ஆரம்பித்து நான் இங்கு வரலாறுகளை பற்றி பேசவரவில்லை ஓவியத்தை மட்டும் பேசவந்துள்ளேன் என்றார் . ஓவியம் எழுத்து இரண்டும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதாக கருதும் இவர் ஓவியம் பயின்ற கால கட்டத்தில் ஓவியத்தை தாண்டி வேறு பக்கங்களில் அதிகம் சென்றதில்லையாம். ஓவியக் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் முன் இவரது கனவு மிகப்பெரிய சினிமா போஸ்டர் டிசைனராக வருவதாக இருந்ததாம். ஆனால் கல்லூரியில் நுழைந்த பின்தான் ஓவியம் என்பது புகழுக்காகவும் எல்லோருக்காகவும் தெரியபடுத்தவேண்டும் என்பதற்காகவும் செய்யும் செயலாக இல்லை என்பதை உணர்ந்ததாகவும் கூறும் பாஸ்கர் ஓவியத்திற்கும் இவருக்கும் உள்ள தொடர்பினை நிர்ணயிக்கவே 5 ஆண்டுகள் தேவைபட்டதாம். இது ஓவியம் என்று இல்லை எழுத்து இன்னபிற கலைகளுக்கும் பொருந்துவதாகவும் கருதுகிறார் . அவரது கல்லூரிக் காலத்து நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். முதல் இரண்டுவருடங்களில் பார்ப்பதை வரைந்து பின் வந்த காலகட்டத்தில் ஓவியம் சார்ந்த சிற்பம் புகைப்படம் அச்சுக்கலை என்று பல்வேறுவகையான கலைகளுக்கு பயிற்சியளிக்கப்படும்போது தான் ஓவியன் அவன் எந்த திசையில் பயணிக்கவேண்டும் என்று முடிவு எடுப்பதாகவும் மேலும் ஓவியத்தில் புதுவகையான மாற்றங்களை புகுத்தவும் தயாராகின்றனர் என்கிறார். டெல்லியுளுள்ள மாடர்ன் ஆர்ட் காலரிக்கு ஒவிய போட்டிக்கு 10000 க்கும் மேற்ப்பட்ட படைப்புகள் வந்தால் அதில் சிறந்த ஓவியமாக 100 க்கும் குறைவான ஓவியம் தேர்ந்தெடுக் படுமாம் அப்பொழுது ஓவியரின் சிறப்பினை கண்டுகொள்ள முடியுமாம் . கல்லூரி காலகட்டத்தில் இவரது படைப்புகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றதும் குறிப்பிடதக்கது. பயிற்சி காலகட்டத்தில் ஆபுர்வமாக சில விருந்தினர்கள் வருவார்கள் என்றும் அப்படி நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வினை நினைவுகூறும் இவர் சிவக்குமார் நடிகர் என்பதைவிட சிறந்த ஓவியராம்.

16ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஓவியம் அடைந்த வளர்சியினை ரவிந்தான தாகூர் ரவிவர்மா ரெனாசன் மைக்கல் ஏஞ்சலோ எம்ரான் வான்கோ பிக்காசோ மோன்ரியான் சந்துரு ஆர். வி.பாஸ்கர் அல்போன்சா என்று வரிசைபடுத்தி எங்களுக்கு காண்பித்தது என்போன்றவர்களுக்கு ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்த தூண்டுவதாக அமைந்தது. ஓவியனும் ஓவியனும் சந்தித்து கலந்துரையாடுவதை விட ஒரு ஓவியனும் எழுத்தாளனும் சந்திக்கும்போது இருவரிடம்மிருந்தும் வெளிப்படும் படைப்புகள் மிகச்சிறந்ததாக வருவதாக கருதும் இவர் சிங்கப்பூரில் கிடைந்த நட்பு வட்டங்கள் தான் எழுத்தின் மீதான புரிதலை தூண்டியதாம். பார்ப்பதை வரைவதைவிட நாம் பார்த்ததில் நினைப்பதை வரையஆரம்பித்த இவர் எல்லா இசங்களிளும் குழு மனப்பான்மை இருந்ததாகவும் அதனால்தான் கலைகள் ஒவ்வொருகாலகட்டத்திலும் பல்வேறு விதமான வளர்ச்சியினை எட்டியுள்ளதாம் . சினிமா புகைப்படகலைஞர்கள் பின்னோக்கிசென்று ஓவியத்தில்லிருந்தான் பல்வேறு காட்சி அமைப்புகளை அறிந்து தற்பொழுது சினிமாவில் பயன்படுத்துவதாக சொல்லி 18ம் நூற்றாண்டின் ஓவியத்தை பிரதிபலிக்கும் சில தமிழ்சினிமாவை குறிப்பிட்டபோது சிரிப்பலை எழுந்து அடங்கியது. மரபு பற்றி தெரிந்து கொள்ளும் போதுதான் நவின ஓவியத்தை சிறப்பாக வiயைமுடியும் என்று நம்பும் இவர் இலக்கியங்கள் பற்றியும் அதன் மீதான குழுமனப்பான்மை பற்றியும் ஆங்காங்கே தொட்டுச்சென்றது அவரது மனஅதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது . எகிப்திய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது ஆரம்பகாலகட்டத்திலேயே நாம் மிகச்சிறந்த ஓவியத்தை வரைய ஆரம்பித்துவிட்டதாகவும் நம்மிடமிருந்துதான் ஓவியத்திற்கான வண்ணங்களை ஆரம்பகாலகட்டத்தில் எகிப்தியர்கள் எடுத்துச்சென்றதாகவும் அதற்கான வரலாறுகளை தான் நாம் பத்திரப்படுத்த தவறிதை குறிப்பிட்டு பிரிட்டிஷ்சாரின் வருகையால் நாம் நம்முடைய அஜந்தா குகைகள் உட்பட பல்வேறு ஓவியங்ளை கண்டுகொள்ள நேரிட்டதையும் விவரித்தது ஓவியத்தின் மீதான அதித ஈடுபாட்டை காட்டியது.

எழுத்தாளர் விமர்சகர் இந்திரன் அவர்கள் எழுதிய நவின ஓவியம் என்னும் நூலை வாங்கி படித்தால் தமிழக ஓவியர்கள் பற்றியும் நவின ஒவியத்தை பற்றியும் அறிந்துகொள்ள உதவுவதாகவும் மேலும் கும்பகோணத்தை சேர்ந்த எழுத்தாளர் தேனுகா அவர்கள் பியத்மோன்ரியான் பற்றி எழுதிய புத்தகமும் ஓவியம் பற்றிய புரிதலை பூர்த்திசெய்வதாக இருக்கும் படைப்புகள் .

மரபு நவினம் என்று மாறிமாறி பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவரது எண்ணம் இவரது படைப்புகளை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது அவ்வளவுதானாம். அத்தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப அவர்கள் வேண்டியதை எடுத்துகொள்ளட்டுமாம்.

இதன் பின் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஓவியத்தின் மூலம் சழுகத்திற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ஓவியத்தை நவின ஓவியத்தை புரிந்துகொள்வது எப்படி வரலாறுகளை ஓவியன் அடுத்த தலைமுறைக்கு கடத்திச்செல்கிறானா அப்படி நீங்கள் செய்கிறீர்களா என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஓவியர் கா. பாஸ்கருடனான இந்த கலந்துரையாடல் எழுத்தாளர்கள் திருமதி . ஜெயந்தி சங்கர் திருமதி. மாதங்கி திரு.கண்ணபிரான் கவிஞர் திரு. பாலுமணிமாறன் தீவிர இலக்கிய வாசிப்பாளர் திரு. மணி உள்ளிட்ட கலந்துகொண்ட இலக்கிய ஆர்வர்களை ஓவியத்தின் மீதான புரிதல் ஓவியம் மற்றும் எழுத்துடனான தொடர்பை அறிதல் என்று பயனுள்ளதாக அமைந்தது. என்போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு படைப்பினை எப்படி அணுகுவது என்று கண்டுகொள்ள களமாக இந்த கலந்துரையாடல் அமைந்ததில் கலந்துகொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியே .

அருமையான கலந்துரையாடலை ஏற்பாடு செய்த வாசகர் வட்டம் திரு ரெ.பாண்டியன் உள்ளிட்ட நண்பர்கள் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் கிளை பிரிவான அமோக்கியநூலகம் மற்றும் நிகழ்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரையிருந்து எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ததோடு அருமையான சிற்றுண்டியை கொடுத்து உபசரித்த நூலகத்தின் நிர்வாகியில் ஒருவரான நிர்மலா அவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை திண்ணைவாயிலாக பதிவு செய்கிறேன்.

குறிப்பு:

ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்திருப்பவர் ஓவியர் கா.பாஸ்கர்

இந்த கட்டுரை பற்றிய பகிர்தலுக்கு ஓவியர் கா.பாஸ்கர் அவர்களின் மின்னஞ்சல் முகவரி உங்களுக்காக. :

artistbaskar@yahoo.com

பதிவு : பாண்டித்துரை


pandiidurai@gmail.com

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை