இலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

பாரதி மகேந்திரன்



(அ) பீட்ரூட் பச்சடி

பீட்ரூட் – 200 கிராம்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய்ப் பொடி – அரைத் தேக்கரண்டி
அரிசிமாவு – 1 தேக்கரண்டி

முதலில் பீட்ரூட்டின் தோலைச் சீவவும். பின், அதைக் கொப்பரைத் துருவியில் சன்னமாய்த் துருவிக்கொள்ளவும். பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் துருவலைக் ஒரு கிண்ணம் அளவுத் தண்ணீfர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பீட்ரூட் குழைந்து நன்றாக வெந்த பிறகு வெல்லத் தூளை அதில் போட்டுக் கரையவிடவும். வெல்லத்திலிருந்து பாகு வாசனை வரத் தொடங்கியபிறகு அரிசிமாவை ஒரு மேசைக்கரண்டி நீரில் கரைத்து அதில் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து, ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கவும். இதற்குக் கடுகு போன்ற வேறு எதையும் தாளிக்கக் கூடாது. சிலர் இந்தப் பச்சடிக்கு வெல்லத்துக்குப் பதிலாய்ச் சர்க்கரை சேர்ப்பதுண்டு. அதுவும் சுவையாகத்தான் இருக்கு மென்றாலும், வெல்லமே உடம்புக்கு நல்லது.

பீட்ரூட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் தன்மை யுள்ளது என்று சொல்லுகிறார்கள்.

(ஆ) கேரட் பச்சடி

மேலே சொல்லியுள்ளபடியே தான் கேரட் பச்சடியையும் செய்ய வேண்டும். கேரட்டில் விடமின் ஏ அதிகமென்பதால் கண்களுக்கு நல்லது என்று சொல்லப் படுகிறது. இதில் தங்கம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. புற்று நோயைத் தடுக்க வல்லது என்பதும் உண்மையாகும். அடிக்கடி கேரட் பச்சடி சாப்பிடுவோம்.

(இ) தக்காளிப் பழப் பச்சடி

தக்காளிப் பழம் – 200 கிராம்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய்த் தூள் – அரைத் தேக்கரண்டி
உப்பு – அரைத் தேக்கரண்டி
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
கடுகு – அரைத் தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி

தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கி , மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றுடன் சிறிதளவுத் தண்ணீரில் வேகவைக்கவும். தக்காளி வெந்ததும் ஒரு கனத்த கரண்டியால் அதை நன்றாக் மசிக்கவும். பிறகு வெல்லப் பொடியை அத்துடன் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். வெல்லத்தின் பாகு வாசனை கிளம்பியதும், அரிசி மாவைக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்துக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி ஏலக்காய்த் தூளையும் அத்துடன் சேர்த்து, நெய்யில் கடுகைத் தாளித்து அதில் கொட்டிப் பரிமாறவும். (பங்களூர்த் தக்காளியை விடவும் சிறிய அளவில் உள்ள, சற்றே புளிப்பான நாட்டுத் தக்காளியே சத்துள்ளது என்கிறார்கள்.)

பாரதி மகேந்திரன்

mahendranbhaarathi@yahoo.com

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்