பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா ?(கட்டுரை 52)

This entry is part of 30 in the series 20090219_Issue

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாகாலக் குயவனின்
கைகள் கோணி போனதால்
ஆழிச் சுற்றில்
அவதரித்த பானைகள்
வால்மீனும், முரண் கோளும் !
புற்றீசல்களாய்
மூலப் பிரபஞ்சக் கூட்டில்
பொரித்த
முதற் சந்ததிகள் !
வால்மீனுக்கு இரட்டை வால் !
பரிதியின் அருகே நீளும் !
பரிதிக்கு அப்பால்
வால் சுருங்கும் ! பின்னடங்கும் !
நீள்வட்டத்தில் சுற்றும்
பரிதியை !
விரி வட்டத்தில் புகுந்து
தெரியாமல் மறையும் !
பிறைவட்ட நகர்ச்சியில்
திரும்பாது !
வால்மீன் வயிற்றில் அடித்தோம் !
வால்மீனின் தூளை
வடிகட்டிப் பிடித்தோம் !
முரண்கோள் தள மண்ணைச்
சுரண்டி வருகுது
ஜப்பான் விண்ணுளவி
இப்போது !
வால்மீனும் முரண்கோளும்
ஓரினமா அல்லது
வேறினமா ?

Fig. 1
Asteroids from Asteroid Belt

“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்? காரணமிதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்துவரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்! அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்டக் கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்பதாகக் கருதப் படுகிறது ! நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று! நாங்கள் நெடுங்காலம் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று! வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதிகள் கொண்டவை அல்ல! அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியம் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழி நிரூபித்துக் காட்டும்.”

டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து


Fig. 1A
Comets

“வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானப் பொக்கிஷம்! பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் !”

டொனால்டு பிரெளன்லீ பணித்திட்ட பிரதம ஆய்வாளி [Donald Brownlee, Mission Principle Investigator (ஜனவரி 15, 2006)]

“ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை! பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது ”

கார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]

Fig. 1B
Various Asteroids


பரிதி மண்டலத்திலே பல்வேறு சிற்றுருவக் கோள்கள் !

நமது பால்வீதிப் பரிதி மண்டலம் ஒரு சிக்கலான, நூதனமான விண்வெளி அரங்கு ! அதில் சூரியனையும் சுற்றிவரும் பேருருவக் கோள்களையும் தவிர கோடான கோடிச் சிற்றுருவக் கோள்களும் (Asteroids) வால்மீன்களும், துணுக்குகளும் தூசிகளும் மண்டிக் கிடக்கின்றன ! அவை யாவும் பரிதி மண்டலம் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிக் கரும்பிண்டக் குழம்பில் கடைந்தெடுக்கப் பட்டு ஆதிகாலம் தொட்டு இருந்து வருபவை ! பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் வானியல் நிபுணர்கள் சந்திரன்கள், வால்மீன்கள், சிற்றுருக் கோள்கள் (முரண்கோள்கள்) ஆகியவற்றை நோக்கிக் கணக்கிட்டு அட்டவணையில் இட்டார்கள். இப்போதும் அந்த முயற்சிகள் கடைப்பிடிக்கப்பட்டு புதுப்புது வால்மீன்கள், முரண்கோள்கள் எண்ணிக்கை மிகுந்து கொண்டே போனாலும், இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை விண்வெளியில் எண்ணற்றவை காத்துக் கொண்டுள்ளன ! தற்போது அண்டக்கோள் விஞ்ஞானிகள் கண்ட சிற்றுருக் கோள்களின் பண்பாடுகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமை, உறவுகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

Fig. 1C
Some Known Flyby Asteroids

உலக விஞ்ஞானிகள் இதுவரை [2007 ஆகஸ்டு] 330,000 சிற்றுருவக் கோள்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். அவற்றில் 129,000 எண்ணிக்கை நுண்கோள்கள் விளக்கமாக பெயர் இலக்கமுடன் பதிப்பாகியுள்ளன. அந்த வகையில் 13,000 முரண்கோள்கள் (Asteroids) ஆராயப்பட்டு பெயரிடப் பட்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் சூரிய மண்டலத்தில் ஒரு மைலுக்கு மேற்பட்ட அகலம் உடைய முரண்கோள்கள் சுமார் ஒரு மில்லியன் என்று மதிப்பீடு செய்கிறார். பல்லாண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் வால்மீன்களையும், பல்வடிவக் கோள்களையும் (Comets & Asteroids) தனிப்பட்ட வகையாகக் கருதி வந்தனர். வால்மீன்கள் என்பவை ஈர்மையும், வாயுக்களும் உறைந்து கிடக்கும் பனிக்கோளங்கள் (Frozen Ice Balls of Moisture & Gases) ! எப்போதாவது அவை ஈர்ப்பு விசைத் தள்ளுதலில் பரிதி மண்டலத்தின் உள்ளே புகுந்து உன்னதமாய் ஒளிவீசும் வாலோடு சூரியனைச் சுற்றிச் செல்கின்றன ! ஆனால் முரண்கோள்கள் கரடுமுரடான பாறை வடிவுக் கோள்கள். அவற்றைப் பல்வடிவக் கோள்கள், சிற்றுருவக் கோள்கள், சின்னக் கோள்கள், நுண்ணுருக் கோள்கள் என்று பல பெயர்களில் குறிப்பிடுகிறார். முரண்கோள்கள் பெரும்பான்மையாகச் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடைப்பட்ட “முரண்கோள் வளையத்தைச்” (Asteroid Belt) சேர்ந்தவை.

Fig. 1D
Ceres & Eros Asteroids
& The Relative Sizes


முரண்கோள்களின் புதிரான பண்பாடுகள்

பெரும்பான்மையான முரண் வடிவமுள்ள சிறு கோள்கள் உருளைக் கிழங்கு போன்றவை ! வால்மீனைப் போன்று முரண்கோள் சூரிய மண்டலத்தில் பரிதியை நீள்வட்டத்திலோ பிறை வட்டத்திலோ (Parabola) விரி வட்டத்திலோ (Hyperbola) சுற்றி வராது ! வால்மீனைப் போல் மின் அயான்கள் கொண்ட ஒளிவீசும் நீண்ட வால் கிடையாது. இந்தக் கருத்துக்கள்தான் கடந்த 15 ஆண்டுகளாக (2007 அறிவிப்பு) உலக விஞ்ஞானிகளிடையே நிலவி வந்தன ! சூரிய மண்டலத்தில் டிரில்லியன் (Trillion is Million Million = 10^12) கணக்கில் வால்மீன்கள் உலவி வருகின்றன ! நீண்ட காலச் சுற்று விண்மீன்கள் “ஓர்ட் முகில் மந்தையில்” (Oort Cloud) உதித்து வெளிவருபவை என்று டச் வானியல் விஞ்ஞானி ஜான் ஓர்ட் (Jan Oort) (1900-1992) முதன்முதலில் கூறியவர். 200 ஆண்டுகளுக்கும் குறைந்த காலச் சுற்றுள்ள வால்மீன்கள் சற்று அருகில் நகர்ந்து வருபவை. பிறை வட்டத்திலோ அல்லது விரி வட்டத்திலோ பரிதியைச் சுற்றிவரும் வால்மீன்கள் ஒருமுறைதான் அவ்விதம் வருவது காணப்படும். அவை மீண்டும் சூரிய மண்டலத்தில் வராமல் இருண்ட விண்வெளியில் பயணம் செய்து எங்கோ மறைந்து போகின்றன !

Fig. 1E
Two Asteroid Belts

முரண்கோள்கள் உலோகம் கலந்த பாறை வடிவு கொண்டவை (Metallic Rocky Bodies). சூரியனைச் சுற்றி வரும் முரண்கோள்களில் வாயு மண்டலம் கிடையாது. அவை உருவத்தில் சிறியவை ஆதலால் புதன், சுக்கிரன், பூமி, நிலா, செவ்வாய் போன்ற அண்டக் கோள்கள் வகுப்பில் (Planet Category) சேர்த்துக் கொள்ளப்பட வில்லை ! பரிதியை முரண்கோள்கள் சுற்றி வரும் வட்டப் பாதைகள் 180 முதல் 370 மில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் வளையத்தில் (Asteroid Belt) உள்ளன. பிள்ளைப் பிரபஞ்ச காலத்தில் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலத் தோற்றத்தின் ஆரம்ப காலத்தில் அண்டக் கோள்கள் உண்டான போது அவை யெல்லாம் தோன்றியவை.

பரிதி மண்டலத்தின் முரண்கோள்கள் அனைத்தையும் சேர்த்தால் அவற்றின் மொத்த நிறை 930 மைல் (1500 கி.மீ.) விட்டமுள்ள ஒரு கோளத்தில் அடங்கும் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது ! அந்த நிறை நிலவின் பாதி அளவுக்கும் குறைந்தது. 1801 இல் முதன்முதலில் 600 மைல் (1000 கி.மீ) விட்டமுள்ள “செரிஸ்” (Asteroid Ceres) முரண்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

Fig. 1F
Main Asteroid Belt

அடுத்து 150 மைல் விட்டமும் அதற்கு மேற்பட்ட விட்டமும் உள்ள 16 முரண்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பான்மையான முரண்கோள்கள் நிலையான சுற்று வீதியில் பூமியைப் போல் அதே திசையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவரும் அவற்றின் சுற்றுக் காலம் சுமார் 3 முதல் 6 வருடங்கள் !

வால்மீன்களை ஒத்த புதிரான முரண்கோள்கள் கண்டுபிடிப்பு !

1980-1990 ஆண்டுகளில் வானியல் விஞ்ஞானிகள் வால்மீனுக்கும் முரண்கோளுக்கும் வேறுபாடு உள்ளனவா என்று ஆராய்ந்து வந்தார்கள். இரண்டும் வேறானவை என்னும் மரபியல் கோட்பாடு மாறும்படிச் சவாலாகச் சில முரண்கோள்கள் நடந்து கொண்டன ! கீழே காணப்படும் மூன்று சான்றுகள் மூலம் வால்மீன்களுக்கும், முரண்கோள்களுக்கும் உடன்பாடு இருப்பது வியப்பாகத் தெரிய வந்தது !

1. வில்ஸன்-ஹார்ரிங்டன் (இலக்கம் : 4015) (4015 Wilson-Harrington Comet) 1949 இல் கண்டுபிடிக்கப்பட்ட வால்மீன் அது ! 1979 இல் அது மீண்டும் காணப்பட்ட போது ஒரு முரண்கோளாக அறியப்பட்டது !

Fig. 1G
Kuiper Belt & Oort Cloud
For Comets

2. சிரான் (இலக்கம் : 2060) (2060 Chiron Asteroid of Centaur Class) : 1977 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானி சார்லஸ் கௌவால் (Charles Kowal) பலோமர் நோக்ககத்தின் மூலம் கண்டுபிடித்த சிரான் முரண்கோள் “சென்டார்ஸ்” வகுப்பைச் சேர்ந்தது ! அதன் சுற்று வீதி சனிக் கோளுக்கும் யுரேனஸ் கோளுக்கும் இடைப்பட்டது ! அதை 1988 இல் மீண்டும் உற்று நோக்கும் போது விந்தையாகவும் புதிராகவும் வால்மீன் போல் ஒளிவீச்சு வெடித்தெழுவது காணப்பட்டது !

23. அடுத்து எசிகிலஸ் (இலக்கம் : 60558) (60558 Echeclus – Asteroid of Centaur Class) : 2000 இல் கண்டுபிடிக்கப்பட்ட முரண்கோளை மீண்டும் 2005 இல் ஆழ்ந்து நோக்கிய போது அது மங்கிய ஒளியுள்ள தலைக்கரு (Faint Cometary Coma) கொண்ட வால்மீனாக அறியப்பட்டது.


முரண்கோள்களைப் பற்றி விஞ்ஞானிகள் அறிந்தவை

இதுவரை மூன்று முறைகளில் நாசா, ஈசா விஞ்ஞானிகள் முரண்கோள்களை ஆரய்ந்துள்ளார்.

1. பூமியிலிருந்து தூரத்து நோக்குளவு முறை (Earth-Based Remote Sensing Method)

2. முரண்கோளைச் சுற்றி காலிலியோ விண்கப்பல் பெற்ற சுழல் உந்துவிசை (Galileo Spaceship Flybys)

Fig. 2
Inner & Outer Planets in
Solar System

3. ஆய்வகத்தில் எரிகற்கள் சோதிப்பு (Laboratory Analysis of Meteorites)

முரண்கோள்கள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் அளவு வீதத்தின் (Albedo) மூலம் அவற்றின் இன வகுப்புகள் பிரிக்கப்படுகின்றன. வெண்மைப் பிரதிபலிப்பு 1 ஆகவும், கருமையின் பிரதிபலிப்பு 0 ஆகவும் மதிப்பிடப்படும்.

பெரும்பான்மையான முரண்கோள்கள் ஒளிப் பிரதிபலிப்பை மதிப்பீடாக எடுத்துக் கொண்டு மூன்று வகையில் பிரிபடும்:

1. C-Type (Carbonaceous Type) கரி வகை மாதிரி : 75% முரண்கோள்கள் இந்த வகையைச் சார்ந்தவை. மிகக் கறுப்பு நிறத்தில் உள்ளவை. ஒளிப் பிரதிபலிப்பு வீதம் : (0.03 – 0.09). இவற்றில் உள்ள கலப்பு மூலகங்கள் சூரியனில் இருப்பதை ஒத்திருப்பவை (ஹைடிரஜன், ஹீலியம், மற்ற ஆவி வாயுக்கள்) முக்கிய வளையத்தில் புற அரங்குகளில் (Outer Regions of the Main Asteroid Belt) உள்ளவை.

2. S-Type (Silicaceous Type) கல் வகை மாதிரி : 17% முரண்கோள்கள் இந்த வகையைச் சேர்ந்தவை (Inner Asteroid Belt). முதல் மாதிரியை விட ஒளிப் பிரதிபலிப்பு கொண்டவை : (0.10 – 0.22) இவற்றில் உள்ள கலப்பு மூலக்கூறுகள்: உலோகம், இரும்பு மெக்னீஷியம் ஸிலிகேட். அவை உட்புற வளையத்தில் சுற்றி வருபவை.

Fig. 3
Two Known Comets

3. M-Type (Metallic Type) கனிம வகை மாதிரி : 8% இவை முதலிரண்டும் போக மிஞ்சிய முரண் கோள்கள் இவை. ஒளிப் பிரதிபலிப்பு : 0.10 -0.18) கலப்பு மூலகங்கள் பொதுவாக இரும்பு உலோகம். இந்த வகை முரண்கோள்கள் நடு வளையத்தில் சுற்றி வருபவை.

பூமியின் சுற்றுவீதியைக் குறுக்கிடும் முரண்கோள்கள் & விபத்துகள்

முக்கிய வளையத்திலிந்து வெளியேறிய முரண்கோள்களின் துணுக்குகள் “பூமிக்கருகிய முரண்கோள்களாய்” (Near Earth Asteroids) உலவி வருகின்றன. பூமிக்கருகிய முரண்கோள்களில் மூன்று வகைகள் உள்ளன.

1. அமார்ஸ் வகை (Amors) : செவ்வாய்க் கோளின் சுற்று வீதியைக் குறுக்கிடும் 1221 முரண்கோள்கள். ஆனால் இவை பூமியின் சுற்று வீதியை நெருங்கா. ஈராஸ் (Eros Asteroid) எனப்படும் முரண்கோள் அமார்ஸ் வகையச் சேர்ந்தது.

Fig. 4
Asteroid Hitting the Earth

2. அப்பெல்லோஸ் வகை (Apollos) : பூமியின் சுற்று வீதியைக் குறுக்கிடும் முரண்கோள்கள்.
சுற்றுக் காலம் ஓராண்டுக்கு மேலானது. ஜியோகிர·பாஸ் (Geographos Asteroid) எனப்படும் முரண்கோள் வகையைச் சேர்ந்தது.

3. அதென்ஸ் வகை (Atens) : பூமியின் சுற்று வீதியைக் குறுக்கிடும் முரண்கோள்கள். ஆனால் சுற்றுக் காலம் ஓராண்டுக்கும் குறைந்தது. ரா-ஸ்லாம் முரண்கோள் இந்த வகையைச் சேர்ந்தது. (Ra-Shalom Asteroid).

பரிதி மண்டலம் தோன்றிய காலத்திலிருந்து அநேக விண்கற்கள், முரண்கோள்கள் பூமியையும், நிலவையும் தாக்கி வந்துள்ளன ! நமக்குத் தெளிவாகத் தெரிந்த சான்று 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 6 மைல் (10 கி.மீ) அகற்சியுள்ள ஒரு முரண்கோளோ அல்லது வால்மீனோ


Fig. 5
About Comets

பூமியைத் தாக்கிப் பிரளயக் கொந்தளிப்பு உண்டாகி ஏற்பட்ட பேரழிவில் கோடான கோடி டைனோஸார்ஸ் விலங்குகள் உட்படப் பல்வேறு உயிரினங்கள் மடிந்தன ! 1908 ஜன் 30 ஆம் தேதி 330 அடி அகலம் உள்ள (100 மீடர்) ஒரு முரண்கோள் மனிதச் சந்ததி தடம் வைக்காத சைபீரியாவின் துங்குஸ்கா (Tunguska in Siberia) என்னும் இடத்தில் விழுந்து வெடித்தது ! அதனால் அரை மில்லியன் ஏக்கர் காடுகள் சிதைந்து போயின ! சமீபத்தில் (மார்ச் 23, 1989) கால் மைல் அகல (400 மீடர்) முரண்கோள் பூமிக்கு 400,000 மைல் அருகே நெருங்கியது ! விஞ்ஞானிகள் நேராத அந்த விபத்தின் பரிமாணத்தை மதிப்பிட்டார் : 50 மில்லியன் டன் எடையோடு மணிக்கு 46,000 மைல் (74,000 கி.மீ/மணி) வேகத்தில் செல்லும் அந்த முரண்கோளும், பூமியும் விண்வெளியில் ஒரே இடத்தைக் கடந்தன – அதிர்ஷ்ட வசமாக 6 மணிநேரத் தாமதத்தில் !


Fig. 6
Comets Parts

பூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்

பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், பல்வடிவக் கோள்கள் (முரண்கோள்கள்) [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன!


Fig. 7
Kuiper Belt & Oort Cloud -2

வால்மீன் விண்துகள் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

2005 ஜூலையில் வால்மீன் ஆழ்குழித் திட்டம் [Deep Impact Program] நிறைவேறி வால்மீன் உடம்பில் என்ன என்ன பூர்வீகப் பண்டங்கள் புதைந்துள்ளன என்று விஞ்ஞானிகள் உளவிக் கண்டார்கள். 2004 செப்டம்பர் 9 ஆம் தேதி, பரிதியின் தூள்களை வெற்றிகரமாகப் பற்றி வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Solar Particles Program], இறுதி வேளையில் பாராசூட் குடை விரிக்க முடியாமல் யூடா பாலை மணலில் விழுந்து உடைந்து போனது! அதன் பிறகு வால்மீன் வொயில்டு -2 திட்டம் [Stardust: Comet Wild-2 Program] வெற்றிகரமாய் நிறைவேறி, விண்சிமிழ் வால்மீனின் தூள்களை மடியில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாய், யூடா பாலை மணலில் குடைபிடித்து வந்திறங்கியது!

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கருதப்படும் பரிதி மண்டல அண்டங்களை வடிவாக்கிய மூலப் பண்டங்களான பூர்வீகப் பச்சை மாதிரியை வொய்ல்டு-2 வால்மீன் கொண்டுள்ளதாக ஊகிக்கப் படுகிறது. மேலும் அண்டங்கள் உண்டாவதற்கு முன்பே கிடந்த பழுதுபடாத பண்டைய மாதிரித் தூள்களையும் வொய்ல்டு-2 வால்மீன் பெற்றிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். 2006 ஜனவரி 15 ஆம் தேதி, அதிகாலையில் மணிக்கு 29,000 மைல் வேகத்தில் மீண்டு, யூடாவின் ஸால்ட் லேக் சிட்டிக்கு 100 மைல் தூரத்தில் உள்ள பாலை மணலில் குடை பிடித்திறங்கிய விண்சிமிழின் மாதிரிகளை உளவு செய்ய, ஹெலிகாப்டரில் ஹ¥ஸ்டன் ஜான்ஸன் விண்வெளி ஆய்வு மையத்துக்குக் [Johnson Space Center, Houston Texas, USA] கொண்டு செல்லப் பட்டது! அந்த மாதிரித் துணுக்குகளில் மயிரளவுக்கும் குன்றிய சுமார் ஒரு மில்லியன் வால்மீன் தூள்கள் பிடிபட்டிருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது!


Fig. 8
Japans Space Probe to Asteroid

முரண்கோள் தள மண்ணை எடுத்து மீளும் ஜப்பான் விண்ணுளவி

2009 பிப்ரவரி 5 ஆம் தேதி ஜப்பானின் “ஹயபூஸா” விண்ணுளவி (Hayabusa Space Probe) உருளைக் கிழங்கு வடிவான இடோகாவா முரண்கோளில் (Asteroid Itokawa) தடம் வைத்துத் தளமண்ணை அள்ளிக் கொண்டு மீள்கிறது என்னும் மகத்தான ஒரு விண்வெளிச் செய்தியை “ஜப்பான் விமான விண்வெளித் தேடல் ஆணையகம்” (JAXA -Japan Aerospace Exploration Agency) வெளியிட்டது. 2003 மே மாதத்தில் அந்த விண்ணுளவி 180 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள இடோகாவா முரண்கோளைத் தொட்டு வர ஏவப்பட்டது ! விண்ணுளவி 2005 இல் இடோகாவாவில் இறங்கியது. ஏவிய சில மாதங்களுக்குள் விண்ணுளவிக் கருவிகளில் சில பழுதாகிப் பல்வேறு இயக்கங்கள் தடைப்பட்டு இடோகாவாவில் அது இறங்குமா அப்படி இறங்கிய பின் தளமண் மாதிரியை சுரண்டிச் செல்லுமா என்று ஐயங்களை உண்டாக்கியது. மேலும் விண்ணுளவியின் மூன்றில் இரண்டு முக்கியத் “தளநிலைக் கட்டுப்பாடுச் சமன் குமிழ்கள்” (Attitude Controlling Gyroscopes) பழுதாயின ! அத்துடன் எரிபொருள் கசிவு வேறு. மின்னலைத் தொடர்பும் தடுமாறியது ! இப்போது ஒருவகையில் அது மீண்டு திரும்பினாலும் மண் மாதிரியை எடுத்திருக்கிறதா வென்னும் சந்தேகம் ஜப்பான் விஞ்ஞானிகளிடையே இருந்து வருகிறது ! விண்ணுளவி 2010 ஜூன் மாதம் ஜப்பானுக்கு மீளப் போவதாய் எதிர்பார்க்கப் படுகிறது. அந்த மீட்சி வருகையின் சமயத்தில்தான் மாதிரி எடுத்ததும் எடுக்காததும் நிச்சயமாக அறியப்படும் ! இறங்கும் போது மண்மாதிரி இல்லாமல் போனாலும் விண்ணுளவி முதன்முதல் முரண்கோளில் தடமிட்டு மீண்ட பெருமை ஜப்பான் தேசத்துக்குக் கிடைப்பது நிச்சயம் !

(தொடரும்)

++++++++++++++++++++++++++
தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How are Comets & Asteroids Related ? and How Many Asteroids are Locked up in the Kuiper Belt ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40207071&format=html [வால்மீன் கட்டுரை: 1]
21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703011&format=html [வால்மீன் கட்டுரை: 2]
22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703083&format=html [வால்மீன் கட்டுரை: 3]
23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703151&format=html [வால்மீன் கட்டுரை: 4]
24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html [வால்மீன் கட்டுரை: 5]
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html [வால்மீன் கட்டுரை: 6]
26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html [வால்மீன் கட்டுரை: 7]
27 ScienceInfo.Com – Closest Planetary System Has Two Asteroid Belts [Oct 29, 2008]
28 NASA Report on Asteroids [August 22, 2008]
29 NASA & ESA Prioritize Outer Planet Missions [February 18, 2009]
30 Japanese Asteroid Probe [Beleaguered] Headed Home After Scooping its Sample By : Tariq Malik (February 5, 2009]

(தொடரும்)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (February 19, 2009)

Series Navigation