சூட்டு யுகப் பிரளயம் ! ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


மனிதர் படைக்கும்
நச்சு வாயுக்கள் சேர்ந்து
ஓஸோன் துளைகள் உண்டாகும் !
மென்மையில் திண்மை யாகும்
வாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது
வண்ண நீர்க்கோளம் !
தூயச் சூழ்வெளியில்
பூமியின்
ஆயுள் நீடிக்க வேண்டும் !
ஓஸோன்
ஓட்டைகள் ஊடே
புற ஊதாக் கதிர்கள் நுழைந்து
சூட்டு யுகப் புரட்சி
நாடு நகரங்களில்
நர்த்தனம் ஆடும் !
நீரின்றி,
நித்திரை யின்றி
நிம்மதி யின்றி
நீண்ட காலம் தவிப்பர்
நில மாந்தர் !

Fig. 1
Ozone Layer

“ஓஸோன் இழப்பால் ஏற்படும் தீவிர விளைவுகளைத் தவறான சூழ்வெளிப் பகுதிகளில் தேடிக் கொண்டிருந்தோம். ஓஸோன் பூகோளக் காலநிலை மாற்றத் தூண்டுதலுக்கு ஒரு காரணம் என்பது முன்பு கருதியதை விட இருமடங்கு முக்கியத்துவம் இப்போது பெற்றுள்ளது.”

பீடர் காக்ஸ் [Peter Cox University of Exeter, U.K.]

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்


Fig. 1A
Global Warming increases
Ozone

உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.

அல் கோர் (ஜூன் 5, 2005)

Fig. 1B
Ozone Height

பூகோளச் சூடேற்றத்தில் ஓஸோன் வாயுவின் உடன்பாடு

சூழ்வெளி வாயு மண்டலத்தின் உஷ்ணக் கட்டுப்பாடுக்கு ஓஸோன் வாயு (Ozone Gas -Oxygen3 – O3) ஒரு முக்கிய பங்கேற்கிறது. ஸ்டிராடோஸ்·பியர் வாயு மண்டலத்தில் 90% சேமிப்பாகியுள்ள ஓஸோன் வாயு, தீங்கு புரியும் பரிதியின் புறஊதா கதிர்களுக்குக் கவசமாக பூமியைப் பாதுகாத்து வருகிறது. ஆனால் பூமியில் மனிதர் உண்டாக்கும் இராசயனக் கூட்டான சியெ·ப்சி [Chloro Fluoro Carbons (CFC)] வாயுக்கள் துருவப் பிரதேசங்களின் குளிர்ச்சிப் பகுதியில் உள்ள ஓஸோனுடன் கலந்து அதைச் சிதைக்கின்றன. அப்போது அப்பகுதிகளில் ஓஸோன் துளைகள் உண்டாகிப் பரிதியின் புற ஊதாக் கதிர்கள் சூழ்வெளியில் பூமியை நோக்கி நுழைகின்றன. அவ்விதம் ஏற்படும் ஓஸோன் துளைகளால் பூகோளச் சூடேற்றம் மிகையாகும். அதே சமயத்தில் மனிதர் உண்டாக்கும் சியெ·ப்சி வாயும் உஷ்ணத்தை ஏற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Fig. 1C
Ozone Presence

பூகோளச் சூடேற்றத்தில் ஓஸோன் வாயுவின் தீவிரப் பங்கு

முன்பு விஞ்ஞானிகள் எண்ணியது போலின்றி ஓஸோன் வாயு பூகோளக் காலநிலை மாற்றத்தைத் தூண்டும் காரணிகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது என்று விஞ்ஞான இதழ் இயற்கையில் (Nature) வந்துள்ள ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்றாய்க் கருதப்படும் ஓஸோன் வாயுவின் முக்கிய விளைவுகள் முதலில் கவனமாக எடுத்தாளப் படவில்லை ! பூதளத்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்களான நைட்டிரஜன் ஆக்ஸைடுகள், மீதேன், கார்பன் மனாக்ஸைடு மீது சூரிய ஒளிபட்டு தளத்தில் ஓஸோன் உண்டாகிறது. பூதளப் பகுதிகளில் பரவிய ஓஸோன் வாயுவால் பயிரினங்கள் சூழ்வெளியில் உள்ள கார்பன் டையாக்ஸைடை விழுங்காதபடிச் சிதைவாகி விடுகின்றன. அதனால் கிரீன்ஹவுஸ் வாயுவான கார்பன் டையாக்ஸைடு மென்மேலும் பெருக ஏதுவாகிறது. மனிதத் தூண்டுகோளால் உண்டாகும் CFC போன்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களால் பூகோளத்தின் உயரத்தில் உள்ள ஓஸோன் சிதைவடைகிறது சொல்லப் போனால் ஓஸோனின் பொறுப்பு பூகோளச் சூடேற்றத்தில் தற்போது இருமடங்கு மதிப்பைப் பெறுகிறது.

Fig. 2
Ozone Good & Bad

சூழ்வெளியின் உயரத்தில் பரவியுள்ள நேரடி ஓஸோன், பரிதியின் புற ஊதாக் கதிர் உஷ்ணத்தை உட்கொண்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிவார். சூழ்வெளியின் அடிப்பகுதிகளில் ஓஸோன் மறைமுகமாகப் பேரளவுக் கெடுதிகள் விளைவிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை மேலும் சொல்கிறது. தளப் பகுதிகளில் உள்ள ஓஸோனால் மனிதரின் சுவாச உறுப்புக்களுக்குப் பங்கம் விளையும். மிகையாக உண்டாகும் ஓஸோன் வாயுவால் பயிரினங்களுக்கு ஏற்படும் தீங்குகளைக் கணிப்பது சிக்கலான முயற்சி. CO2 & O3 வாயுக்களை வைத்து ஆய்வாளர்கள் அமைத்த நூறாண்டுக் (1900- 2100) கணினி மாடலில் (Computer Models) விளைவுகள் மதிப்பிடப் பட்டன ! அந்த மதிப்பீடுகளில் உச்ச, தணிவு விளைவுகளாக அறிந்தது: உச்ச மதிப்பு ஓஸோனால் பயிரின விருத்தி 23% குறைத்துக் காணப்பட்டது. ஓஸோனால் தணிவு மதிப்பு பயிரின விருத்தி 14% குறைத்துக் காணப்பட்டது.

Fig. 3
Ozone & Heat Formation

பூகோளச் சூடேற்றத்தைக் குறைக்க நாமென்ன செய்ய முடியும் ?

கீழ்க் காணும் பத்து முறைகளில் உலகப் பொதுநபர்கள் சூடேறும் பூகோளத்தின் உஷ்ணத்தைக் குறைக்க வழிகள் உள்ளன. ஒவ்வொரு நிவிர்த்தி வழியிலும் எவ்வளவு கார்பன் டையாக்ஸைடு வாயு உற்பத்தியைத் தவிர்க்கலாம் என்று காட்டப் பட்டுள்ளது.

1. மின்சார வெளிச்சக் குமிழிக்குப் பதிலாக ஒர் ஒளிவீச்சு மின்குமிழியைப் பயன்படுத்துவதால் (Use Compact Fluorescent Bulb instead of the Regular Light Bulb) ஓராண்டுக்கு 150 பவுண்டு கார்பன் டையாக்ஸைடு (CO2) வாயு உற்பத்தியைக் குறைக்கலாம்.

2. கார் வாகன ஓட்டத்தை ஒருவர் அனுதினமும் குறைப்பதால், ஒவ்வொரு மைல் தூரத் தவிர்ப்புக்கும் ஒரு பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

3. ஒரு வீட்டுப் பழக்கப் பொருட்களால் விளையும் கழிவுகளில் பாதியை மீள்பயன்பாட்டுக்கு (Recycle) அனுப்பிப் புதுப்பித்தால் ஆண்டுக்கு 2400 பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

Fig. 4
Ozone Breakdown

4. கார் வாகன டயர்களின் காற்றழுத்தத்தைச் சரிபார்த்துச் சீராக வைப்பதால் 3% தூரம் மிகையாகக் கிடைப்பதோடு, ஒவ்வொரு காலன் பெட்ரோல் சேமிப்பும் 20 பவுண்டு CO2 வாயு உற்பத்தியைக் குறையும்.

5. வீட்டில் வெந்நீர் பயன்பாட்டைக் குறைப்பதால் ஆண்டுக்கு 350 பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும். வெது வெதுப்பான நீரில் துணிகளைச் சலவை செய்வதற்குப் பதிலாக குளிர்ந்த நீரில் சலவை செய்வதால், ஆண்டுக்கு 500 பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

6. திணித்து நிரப்பட்ட அட்டைப் பெட்டியில் அடைத்த சாமான்களை வாங்கினால் விழும் கழிவுகளில் 10% கழிவைக் குறைத்தாலும் 1200 பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

Fig. 5
Ozone Levels

7. குளிர்காலத்தில் வீட்டு உஷ்ணக் கட்டுப்பாடை 2 டிகிரி C குறைப்பதாலும், வேனிற் காலத்தில் 2 டிகிரி C கூட்டுவதாலும், ஆண்டுக்கு 2000 பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

8. மின்னியல் சாதனங்களை [Television, Radio, CD DVD Players, Computer, Printer] தேவையில்லா சமயங்களில் நிறுத்தி வைப்பதால் ஏராளமான பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

9. வீட்டருகே ஒரு மரத்தை நட்டு வளர விடுவதால் அது ஆயுள் பூராவும் ஒரு டன் CO2 வாயுவை விழுங்கி கிரீன்ஹவுஸ் வாயு இழப்புக்கு வசதி செய்ய முடியும்.

10. சூடேறும் பூகோளத்தைப் பற்றியும் அதனால் வரப்போகும் தீங்குகளைப் பற்றியும் வாய்ப்புள்ள போதெல்லாம் பொதுமக்களுக்குப் பள்ளி விழாக்களிலும், பொது மேடைகளிலும், ஆலயச் சொற்பொழிவுகளிலும் எடுத்துரைக்கலாம்.

Fig. 6
World Ozone Destruction

(முற்றும்)

++++++++++++++++++

தகவல்:

(Picture Credits: Time Magazine April 9, 2007)

1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
(April 9, 2007)

2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

3. The Assault on Reason By Al Gore (2007)

4. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

5. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

6. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

7. The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

8. Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

12. Good News For A Change – Hope for A Troubled Planet By: David Suzuki & Holly Dressel [2002]

13. The End of Nature By: Bill McKibben [2006]

14. ‘No Sun Link’ to Climate Change By: Richard Black, BBC Environment Correspondent.

15. BBC News – Climate Change Around the World.

16. BBC News – Billions Face Climate Change Risk

17. Through the Climate Window – Analysis By: Richard Black BBC Environment Correspondent

18. Deadly Heat Wave Grips in Europe [CNN.Com#cnnSTCPhoto]

19. Europeans Struggle to Keep Cool in Heat Wave By Cesar G. Soriano (USATODAY.com)

20. Humans “Affect Global Rainfall ” BBC News

21. Britains Battle Worst Floods in 60 Years By Tewkesbury, England (July 23, 2007)

22. BBC News – Prince Sees Boscastle, (England) Devastation (July 24, 2007)

23. Ozone has Strong Climate Effect By Paul Rincon BBC News Science Reporter

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (Aug 2 2007)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா