சூட்டு யுகப் பிரளயம் ! உலக மாந்தர் கூடி என்ன செய்யலாம் ? – 5

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


விரைவாகக் கடல் மட்ட உயரம்
ஏறும் போக்கைத்
தெரிவிக்கும் பூகோளத் துணைக்கோள்கள் !
பத்தாயிரம் அடிக்குக்
கீழே உள்ள
சுத்தக் கடல்நீர் சூடாகிப் போகும் !
பனிக்குன்றும், பனிச்சிகரமும் ஒரு காலத்தில்
பனி சுமந்த
பழங்கதை சொல்லா !
நில வரட்சி, நீர் வரட்சி நெடுங்காலம்
நீடித்துப்
பயிர்வளர்ச்சி சிறுத்து விடும் !
வேகமாகத்
தண்ணீர்ப் பூமி
தாகமாய்ப் பிச்சை எடுக்கும்
கண்ணீரோடு !


Fig. 1
Hurricane Flooding in Louisiana

“பதட்டமாய்த் தொடங்கல், கெஞ்சிப் பாதிவரை முடித்தல், காரியத்தைச் செய்யக் கால தாமதமப் படுத்தல் அல்லது தள்ளிப் போட்ட யுகத்துக்கு முடிவு காலம் வந்துவிட்டது ! அதற்குப் பதிலாக பலர் கூடி முடிவு செய்து ஒன்றாய்ப் பணிபுரியும் சமயம் எதிரே வந்து கொண்டிருக்கிறது.”

வின்ஸ்டன் சர்ச்சில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி (1936)

புதைத்தள எருக்களைப் [Fossil Fuel) பயன்படுத்தி வெளியாகும் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் ஆண்டுப் பரிமாணம் 1990 இல் 6.4 பில்லியன் டன்னாக இருந்தது, 2000-2005 ஆண்டுகளில் 7.2 பில்லியன் டன்னாக ஏறிவிட்டது !

உலக நாடுகளைச் சார்ந்த காலநிலை மாறுபாடு அரங்க அறிக்கை [Intergovernmental Panel on Climate Change (IPCC)]

சூடேறு பூகோளம் மாந்தருக்குக் காட்டும் எச்சரிக்கைகள்

* கடந்த 12 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் இதுவரைப் பதிவான எல்லா ஆண்டுகளையும் விட மிகச் சூடான வெப்பமோடு இருந்தன.

* கடல் வெள்ளத்தின் சூட்டு வெப்பம் தற்போது 10,000 அடி (3000 மீடர்) ஆழத்துக்குச் சென்று விட்டது.

* பனிக்குன்றுகள், மற்றும் மலைகளில் பனிச்சிகரங்கள் உருகி, உருகித் தேய்ந்து வருகின்றன.

Fig. 1A
Hurricane Rain Structure

* ஆர்க்டிக் பனி மூடிகளின் ஆழமும், பரப்பும் குறைந்து கொண்டு வருகின்றன.

* உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் இப்போது தீவிர நில வரட்சியும், நீர் வரட்சியும் நீண்ட கால இடர்களாய் ஆகிவிட்டன.

* பூகோளத்தைச் சுற்றிவந்து கண்காணிக்கும் துணைக்கோள்கள் கடல் மட்ட உயர்ச்சி விரைவாக ஏறிடும் போக்கைக் காட்டி இருக்கின்றன.

ரிச்சர்டு பிளாக் பிபிசி சூழ்வெளிக் கண்காணிப்பாளி (பிப்ரவரி 2007)

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

Fig. 1B
Hurricane Attacks

அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

Fig. 1C
World CO2 Emission

காலநிலை மாற்றத்தால் நேரும் பாதக விளைவுகள்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

6. சிறிய தீவுகளில் நேர்பவை என்ன ?

கடல் மட்ட உயர்ச்சியால் கரைப்பகுதி ஊர்களில் உப்புநீர் புகுந்து விடும். கரைத் தளங்கள் கரைந்து போய்ச் சிதையும். நீர்வளம், நிலவளம் உப்பு நீரால் கலப்பாகி, குடிநீர்ப் பஞ்சம் உண்டாகும். பேய்மழைச் சூறாவளிகள் தாக்கி உள்நாட்டுப் பகுதிகளும் சீர்கேடாகும். தீவுகளின் சமூகப் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலையும். கடற்கரைக் குளிப்பு மணற் பரப்புகள் நாசமாகி, பவளச் செல்வங்கள் வெளுப்பாகி தீவின் சுற்றுலா வணிகத்துறைச் சுருங்கி அன்னியர் வருகையும் குறையும்.

7. பயிரின உயிரின வளர்ச்சி இயற்கை ஏற்பாடுகள் (Ecosystems)

சூடேற்றக் காலநிலை மாறுபாடுகளாலும், காட்டுத் தீ பரவுவதாலும் பலவகையான உயிர் வளர்ச்சி இயற்கை ஏற்பாடுகள் பாதிக்கப்படும். 21 ஆம் நூற்றாண்டின் பிற்பாதிப் பகுதி கரி விழுங்கா நிலையில் மாறிச் சூழ்வெளியில் கரி நிரம்பும் காலமாகி விடும். கரி மிதமிஞ்சிச் சேமிப்பாகி சூடேறும் போக்கு விரைவாகித் தீய விளைவுகள் பெருகும்.

8. கடற்கரை நகரப் பகுதிகள்

பூகோளச் சூடேற்றத்தால் கடற் மட்டம் உயர்வதாலும், கடல்நீர் உஷ்ணம் ஏறுவதாலும் கடற்கரை நகரங்கள் சூறாவளி, ஹர்ரிக்கேன் அடிப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் மக்கள் பாதிக்கப் படுவார். குறிப்பிடத் தக்க ஒரு பகுதி: வட அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாவை ஒட்டிய மாநிலங்கள் அனைத்தும் அவ்விதப் பாதிப்புகளில் இன்னல் அடைகின்றன. கடல் மட்ட உயர்வால் கடற்கரைப் பகுதிகள் நிலவளம் அழிந்து நீர்வளம் குறைந்து, மேலும் ஹர்ரிக்கேன் அடிப்புகளால் நகரம் சிதைந்து பேரளவு நிதிச் செலவில் தள்ளி விடுகிறது. உதாரணம்: சமீபத்தில் லூஸியான மாநிலத்தில் நியூ ஆர்லீன்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிக்கேன் கேட்ரீனா வரலாற்றில் முதலிடம் பெறுகிறது !

Fig. 1D
Use Less Power

9. மனிதர் கட்டிய தொழிற்துறைகளின் இயக்கம்.

மிகையான பூகோளச் சூடேற்றம் தொழிற்துறை நிறுவகங்களில் பாதிக்கும் விளைவுகளை உண்டாக்குகிறது. குறிப்பாக பேய் மழையால் வீதியெங்கும் வெள்ள நீரோட்டம், வெளியேற முடியாது நீர் முடக்கம் போன்ற இன்னல்கள் யந்திரச் சாதனங்களின் இயக்கத்தைத் தடுத்து வேலை நிறுத்தம் ஆகிவிடும். அதனால் அவை தயாரிக்கும் பொருட்கள் தடைப்பட்டுப் பெரும் நஷ்டம் உண்டாகும். சில நாட்கள் வேலை இல்லாமல் போவதால், ஊதியப் பணத்தை நம்பியிருக்கும் எளிய மக்கள் ஏழ்மையிலும், இல்லாமையிலும் இடர்ப்படுவார்.

10. பொதுவான நீர்வளப் பயிரினப் பாதகங்கள்

கடல் மட்ட உயர்வு, கடல் உஷ்ண ஏற்றத்தால் பேய்மழை பெய்து நீர் வெள்ளம் முடங்கினாலும் சரி, மழை பெய்யாமல் நீர் வரட்சியானாலும் சரி பொதுமக்கள் பேரளவு நோயிலும், வறுமையிலும் நோகும் நிலை உண்டாகும். மலைச் சிகரப் பிரதேசங்களில் நீர்வளம் செழித்து தானிய விருத்தி மிகையாகலாம். தரைப் பகுதிகளில் தானிய வளர்ச்சி குன்றி மக்கள் பஞ்சத்தில் துன்புற வாய்ப்புகள் நேரலாம். சராசரிப் பூகோளச் சூடேற்றம் 3 டிகிரி C மிகையாகும் வரை தானிய விருத்தி செழிக்க வசதி இருக்கிறது.

Fig. 2
Hurricane Rita in Gulf Coast

11. பூகோளச் சூடேற்றத்தால் மக்களது உடல்நலப் பாதிப்புகள்

சூடேறும் பூமியில் நீர் பஞ்சத்தாலும், வெள்ளத்தின் போது துர்நீர் கலப்பாலும் உலகில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் நீரால் வரும் தொத்து நோய், நொடிகளில் பாடுபடுவர். வெப்பச் சூட்டு அடிப்புகளால் [Heat Waves] குழந்தைகள், முதியவர் தரைமட்ட ஓஸோன் அளவு அதிகமாகி மூச்செடுக்க முடியாது சுவாச, இருதய உறுப்புக்களில் பாதகம் அடைவர். நீர் முடக்கத்தால் கொசுக்கள் பெருகி மலேரியா போன்ற நோய்கள் மக்களிடையே பரவும்.

சூடேற்றத்தைக் குறைக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் ?

உலகில் தனிப்பட்ட ஒரு நபர் சூடேறும் பூகோளத்தின் உக்கிரத்தைக் குறைப்பதில் பங்குகொள்ள முடியுமா ? நிச்சயம் முடியும். நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் மின்சாரத்தை நாள்தோறும் இயன்ற அளவு குறைவாக உபயோகப் படுத்தினால் கணிசமான அளவில் நிலக்கரி, ஆயில் எரிசக்தி பரிமாறும் அளவைக் குன்ற வைத்து சூழ்மண்டலத்தில் கரியமில வாயுச் சேமிப்பைக் கட்டுப்படுத்தலாம். நாம் எந்த எந்த வழிகளில் மின்சார சக்தியை மிச்சப் படுத்தலாம் என்பது கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

Fig. 3
Rain Water Flooding

1. இல்லங்களிலும், தொழிற்துறை தவிரப் பிற பணித் தளங்களிலும் மின்சக்திப் பயன்பாடு [30% – 50% மொத்த குறைப்பு]

* ஏர்கன்டிஷன் சாதனத்தைப் பயன்படுத்தாமல், வெறும் காற்றாடியை மட்டும் ஓட்டுவது (25% சேமிப்பு).

* அப்படி ஏர்கன்டிஷனரைப் பயன்படுத்த நேரிட்டால், 3 டிகிரி C குளிர்ச்சிக்கு கட்டுப்படுத்துவது. (15% சேமிப்பு)

* பலகணி, கதவுகளின் வழியே வெளிக்காற்று உள்ளே கசியாமால் இருக்க காலநிலை பிளாஸ்டிக் ஒட்டிகளால் தடுப்பது. (10% சேமிப்பு – குளிர் நாடுகளில் வசிப்போருக்கு மட்டும்)

* உட்புற நீச்சல்குள நீரின் உஷ்ணத்தை 1 டிகிரி C குறைத்துக் கட்டுப்படுத்துவது. (7% சேமிப்பு)

Fig. 4
Katrina Flooding in Louisiana

* ஈரத் துணிகளை மின்சார உருளை டிரம்மில் காயவிடாமல், வெளியே சூரிய வெளிச்சத்தில் காயப் போடுவது (5% சேமிப்பு)

* ஈரத்துணிகள் துவைப்பைச் செய்ய துவைக்கும் சாதனத்தில் வெந்நீருக்குப் பதிலாகக் குளிர்ந்த
நீரைப் பயன்படுத்தல் (5% சேமிப்பு)

* சமையல் பாத்திரங்களை யந்திரத்தில் கழுவினால், முழு இடங்களும் நிரம்பிய பிறகு தொடங்குதல் (5% சேமிப்பு)

* பயன்படுத்தாத மின் கணினி, தொலைக்காட்சியை நிறுத்துதல், மின்விளக்குகளை அணைத்தல் (5% சேமிப்பு)

* இரண்டாவது குளிர்ப் பெட்டியை [Second Fridge] நீக்குதல் (3% சேமிப்பு)

Fig. 5
Katrina Flooding in New Orleans

++++++++++++++++++
(தொடரும்)

தகவல்:

(Picture Credits: Time Magazine April 9, 2007)

1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
(April 9, 2007)

2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

3. The Assault on Reason By Al Gore (2007)

4. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

5. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

6. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

7. The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

8. Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

12. Good News For A Change – Hope for A Troubled Planet By: David Suzuki & Holly Dressel [2002]

13. The End of Nature By: Bill McKibben [2006]

14. ‘No Sun Link’ to Climate Change By: Richard Black, BBC Environment Correspondent.

15. BBC News – Climate Change Around the World.

16. BBC News – Billions Face Climate Change Risk

17. Through the Climate Window – Analysis By: Richard Black BBC Environment Correspondent

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 19 2007)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா