ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

அரவிந்தன் நீலகண்டன்


பார்வை மாற்றம் தந்த பண்பாளர்:


படத்தலைப்பு பாரதீய பொருளாதார மேதை ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா ஜோஸப்

கர்னீலியஸ் குமரப்பா பாரத பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் மிகவும் சுதேசிய நோக்கில் அணுகியவர். பொதுவாக காந்தியவாதிகள் என்றாலே மிகவும் கட்டுப்பெட்டித்தனமாக தொழில்நுட்ப விரோதிகளாக இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் உண்டு. பல சமயங்களில் உண்மையும் அப்படித்தான் இருந்து தொலைக்கிறது. ஆனால் மகாத்மா காந்தியின் தொழில்நுட்ப பார்வை அத்தகைய குறுகிய தொழில் நுட்ப மறுப்பு பார்வை அல்ல. ராட்டையை அவர் ஐரோப்பிய தொழிற்புரட்சிக்கு ஒரு மாற்றான குறியீடாகவே முன்வைத்தார் என கருத வேண்டியுள்ளது. ஐரோப்பிய தொழிற்புரட்சியின் முக்கிய அம்சங்கள்: ஆற்றலையும் மூலதனத்தையும் பெரிதும் சார்ந்த தொழில் நுட்பங்கள். இந்த தொழில்நுட்பங்கள் சார்ந்த ஒரு பண்பாட்டு வளர்ச்சியாக ஐரோப்பாவின் நவீன கால முன்னேற்றத்தை நாம் காண்போமென்றால், அதன் அடிப்படை காலனிய விரிவாதிக்கத்தின் மேல் எழுப்பப்பட்டது என்பதை அறிய முடியும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நீடிப்பு என்பது ஒரு பிராந்திய வளத்தினால் தன்னிறைவு பெறமுடியாத ஒன்றாகும். எனவேதான் அதன் வளர்ச்சிக்காக வன்முறை – ஆதிக்கம் ஆகியவை இன்றியமையாத ஒன்றாகிறது. எனவே தீர்வு என்ன? குவித்தன்மை அற்ற, மூலதன-ஆற்றல் ஆகியவற்றை பெருமளவு உள்ளீடு செய்யாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியமாகிறது. பயன்படுத்துவோருக்கு தெளிவாக தெரிகிற பிராந்தியத் தன்மைகளை தன்னுள் கொண்டு தகவமைந்த (adapted to local conditions) ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியமாகிறது.

தமிழ்நாட்டின் தவப்புதல்வன் ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா காந்திய சிந்தனையை அதன் இயல்பான அடுத்த கட்ட பரிணாம நிலைக்கு நகர்த்திய சிந்தனை மேதை ஆவார். பொருளாதார சிந்தனையாளர் என்பதுடன் அன்னார் விவசாய தொழில்நுட்பங்களில் சிறந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சாண எரிவாயு தொழில்நுட்பத்தை மிகவும் நுணுக்கமாக ஆய்வு செய்திருந்தார். சாண-எரிவாயுவினை அவர் வெறும் வீட்டுச்சமையலுக்கான ஆற்றல் அளிக்கும் எரிபொருள் தொழில்நுட்பமாக மட்டுமே கண்டாரில்லை. மாறாக விவசாயியின் அன்றாட வாழ்வுடன் இணைந்ததொரு மையமாக மாற்றிட அவர் விழைந்தார். சாண எரிவாயு அடுப்பிலிருந்து வெளிவரும் சாணஎரிவாயுக்கழிவு (biogas slurry) ஒரு சிறந்த உரம் என்பதனை அவர் அடிக்கோடிட்டு காட்டினார். ‘விவசாயி வீட்டுக்கொல்லையின் உர தொழிற்சாலையாக சாண எரிவாயு கலன் பயன்படும்’ என அவர் கூறினார். இந்த தொழில்நுட்ப பார்வை மாற்றத்தின் முக்கியத்துவம் அவர் கூறிய காலகட்டத்தில் முழுமையாக உணரப்படவே இல்லை. குமரப்பா அவர்கள் பாரத பண்பாட்டினோடும் நம் மண் சார்ந்த தொழில்நுட்பத்தோடும் தன்னை எந்த அளவு இணைத்துக்கொண்டார் என்றால் தமது உடல் சாணி தட்டிகளால் எரிக்கப்பட வேணுமென தமது உயிலில் எழுதி அவ்வாறே அதனை நிறைவேற்றிடவும் செய்தார் அம்மகான். ஆனால் சாண எரிவாயு கலன் அத்தனை தொழில்நுட்ப தகவமைப்பு பெற்றிருந்தும் ஏனோ பாரத கிராம வாழ்க்கையில் ஒருங்கிணைந்திடவே இல்லை. (குமரப்பாவால் ஈர்க்கப்பட்டு சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் இளைய தலைமுறை தலைவர் கூத்தம்பாக்கம் ரங்கசாமி இளங்கோ அவர்கள்)

விவேகானந்த கேந்திரம் – நார்டெப்:

விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டம் (VK-NARDEP) 1980களிலிருந்து இயங்க ஆரம்பித்தது. விகே-நார்டெப் (VK-NARDEP) என அழைக்கப்படும் இத்தொழில்நுட்ப திட்டம் தேசம் சார்ந்து சாண எரிவாயு கலன்களை ஆய்வு செய்தது. கலன் வடிவமைப்பு குறைநிறைகளை கண்டறிந்து குறைந்த செலவில் வடிவமைக்கப்படும் ஒரு சாண எரிவாயு கலனை நார்டெப் வடிவமைத்தது. இது வின்கேப் மாதிரி என அழைக்கப்படுகிறது. இது நிலைத்த அரைகோள (fixed dome model) எரிகலன் ஆகும். இது தீனபந்து அமைப்பின் மாற்றியமைக்கப்பட்ட வடிவாகும். இந்த எரிகலன் மாதிரியின் முக்கிய வேறுபாடு என்னவென்றால் இதன் அரைகோள அமைப்பு செங்கல்களால் ஆனதல்ல மாறாக மூங்கிலால் ஆனதாகும். உருக்கு அமைப்புகளால் (எரிவாயு வெளியேறாத வகையில்) பலப்படுத்தப் பட்ட இக்கட்டுமானத்தின் மீது ஒரு பூச்சும் அடிக்கப்படும். இந்த அமைப்பின் மூலம் கட்டுமான செலவு 12-20 விழுக்காடு குறைக்கமுடியும்.

படத்தலைப்பு: சாண எரிவாயுகலன் கட்டுமானத்தை விளக்குகிறார் விவேகானந்த கேந்திரத்தின் எரிகலன் தொழில்நுட்ப வல்லுநர் திரு,முனீஸ்வரன்:விளக்கப்படத்திலிருந்து

சாண எரிவாயுகலங்களின் பிரச்சனை என்னவென்றால் அரசு மானியமானது கலத்தின் கொள்ளளவு அடிப்படையில் கொடுக்கப்பட்டதே ஆகும். இதன் விளைவாக, அதிக மானியம் பெற விரும்பிய விவசாயிகள் பலர் அதிக கொள்ளளவு கொண்ட சாண எரிவாயுகலங்களைக் கட்டிவிட்டனர். இதனால் மாடுகள் குறையும் போது சாணி உள்ளீடு குறைந்து பல எரிவாயுகலங்கள் செயலற்றநிலையை அடைந்துவிட்டன. நார்டெப் சாண-எரிவாயு தொழில்நுட்பக் குழுவினர் இத்தகைய எரிவாயுக்கலன்களின் கொள்ளளவினைக் குறைத்து மீண்டும் செயல்பட வைப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியினை அடைந்துள்ளார்கள். 1982 இல் இருந்து 2000 சாண எரி-வாயுக்கலன்களை விவேகானந்த கேந்திரம் நிறுவியுள்ளது என்பதுடன் இன்றைய தேதியில் இவற்றின் செயல்படும் விழுக்காடு 95க்கும் அதிகமாகும்.


படத்தலைப்பு : உரமாகும் சாண எரிவாயுக் கழிவு

படத்தலைப்பு :டாக்டர்.கமலாசனன் பிள்ளை

விவேகானந்த கேந்திரம் குமரப்பாவின் சாண எரிவாயுக்கல கழிவினை உணவு உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக ஒரு முழுமையான திட்டத்தினை உருவாக்க நினைத்தது. விவசாயிகள் குறைந்த செலவில் வீட்டுக்கொல்லையிலேயே மாட்டுக்கான இயற்கை தீவனமான அஸோலாவினை வளர்க்க கேரளாவினைச் சார்ந்த உயிர்-தொழில்நுட்ப விஞ்ஞானியான டாக்டர்.கமலாசனன் பிள்ளை நார்டெப்-முறையினை ஏற்கனவே பிரபலப்படுத்தியிருந்தார். இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் இரண்டாம் வெள்ளைப்புரட்சியையே ஏற்படுத்தியுள்ள இந்த தொழில்நுட்பம் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நன்றாக பரவி வருகிறது. இந்த அஸோலா படுகையின் தயாரிப்பில் சாண எரிவாயுகழிவு பயன்படுத்தப்பட்டது. அஸோலா உயிர் உரமாகவும் பயன்படுத்த முடியும் அத்துடன் களை வளர்ச்சியை மட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். அதைப்போல மண்புழு உரக்கிடங்கு படுகையிலும் சாண எரிவாயுக்கழிவு பயன்படுத்தப்பட்டது. பஞ்சகவ்யம், ஜீவநீர் (நுண்ணுயிரிக்கலவை) ஆகியவற்றிலும் சாண எரிவாயுக்கழிவு உள்ளீடாக்கப்பட்டது, ஒரு விவசாயி இந்த சாண எரிவாயுக்கழிவு சார்ந்த விவசாய தொழில்நுட்பங்களை தமது வயலில் பயன்படுத்தும் பட்சத்தில் அவருக்கு இரசாயன உரம் சார்ந்த 30 சதவிகித செலவினைக் குறைக்க முடியும். இந்த தொழில்நுட்ப பரவுதல் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இயற்கை விவசாய களத்தில் ஈட்டியுள்ளது.

படத்தலைப்பு: சாணஎரிவாயுக்கழிவு நீர் படுகையில் அஸோலா – இயற்கை உரமும் இயற்கை தீவனமும் விவசாயியின் கொல்லைப்புறத்திலேயே

கல்யாணப் பரிசு இலாபமும் பெரிசு:

படத்தலைப்பு: இயற்கை விவசாய கரும்புத் தோட்டத்தின் நடுவே அந்தோணிசாமி : ‘மாவுப்பூச்சியை கொல்ல மோனோக்ரோட்டோ பாஸ் வேண்டாங்கையா’ என சகவிவசாயிகளுக்கு விளக்குகிறார்.

உதாரணமாக, தென்காசி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை எடுத்துக்கொள்ளலாம். இன்று தென்தமிழ்நாட்டின் இயற்கை விவசாய தலைநகராக இந்த ஊர் விளங்குகிறது. முக்கியமாக திரு. அந்தோணி சாமி அவர்களும் திரு. கோமதிநாயகம் அவர்களும் இந்த இயற்கை விவசாய இயக்கத்திற்கு தலைமை தாங்குகின்றனர். கோமதிநாயகம் அவர்களின் திருப்புமுனையாக அமைந்தது சாண எரிவாயுக்கலன் தான். அவர் சொல்லுகிறார்: “இந்த சாண எரிவாயுக்கலன் வெறும் எரியாற்றல் மட்டும் அளிக்கும் கருவியல்ல அது மண்ணை செழுமையுறச்செய்கிறது. அதன் கழிவினால் இதுவரை இலட்சக்கணக்கான ரூபாய் இரசாயன உரங்களை நான் மிச்சம் செய்திருக்கிறேன்.” என்று சொல்லுகிறார் அவர். அவர் கூற்றினை உறுதி செய்கின்றது குற்றாலம் பராசக்தி கல்லூரி நடத்திய மண்ணாய்வு. சாண எரிவாயுக்கழிவு பயன்படுத்தப்பட்ட நிலத்தில் பயன்படுத்தப்படாத இடத்தினைக் (control) காட்டிலும் பாக்டீரிய நுண்ணுயிரிகளும், பூஞ்சணங்களும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருமதி மேரி அந்தோணி சாமி சாண எரிவாயுக்கலத்தினை தமது திருமணத்திற்கு பிறகு தமக்கு கிடைத்த சிறந்த பரிசாக கருதுகிறார். “வயலுக்கு உரமும் ஆச்சு வீட்டு சமையலுக்கு கியாஸும் ஆச்சு இதுக்கு மேல என்னங்க வேணும்!” என்கிறார்.

படத்தலைப்பு:புளியங்குளம் கிராம இயற்கை விவசாய இயக்கத்தின் முன்னணி வீரர் விவசாயி ஐயா கோமதி நாயகம்

‘நல்ல ஆரோக்கியமான தோட்டத்துக்கு தேவை என்ன தெரியுமா? ரொம்ப சாண எரிவாயுக்கழிவுடன் கொஞ்சம் ஆன்மிகம்’

படத்தலைப்பு:: சாண எரிவாயுக்கழிவும் ஆன்மிகமும் நல்ல காம்பினேஷன்

திருநெல்வேலியிலேயே இன்னமும் சிறிது பயணிக்கலாம். பத்துமடை மகான் சிவானந்தர் பிறந்த கிராமம். அங்கு சுவாமிஜிகள் நடத்தும் சிவானந்த மிஷன் மருத்துவமனை உள்ளது. அங்குள்ள நோயாளிக்களுக்கான பேக்கரி முழுக்க முழுக்க சாண எரிவாயுவால் தயாராவதுடன், அங்குள்ள சாண எரிவாயு கழிவு நீர் மருத்துவமனைக்காக நடத்தப்படும் காய்கறித்தோட்டம் மற்றும் பண்ணைக்கு செல்கிறது. பண்ணைக்கான தலைமை விவசாயியும் துறவியுமான சுவாமி ஜகதீஷ்வரானந்தா நம்மை அந்த தென்னந்தோட்டங்களின் நிழலில் இருக்கும் அஸோலா படுகைகளின் ஊடே அழைத்துச் செல்கிறார். நோயாளிகளுக்கு அங்கு தங்கி சேவை செய்யும் மருத்துவர்களுக்கு முழுக்க முழுக்க உணவு இந்த இயற்கை முறைகளில் தான் உருவாகிறது.

‘தாமரையானது ரோசா’
டோ னாவூர் ஃபெல்லோஷிப்பை சேர்ந்தவர் டாக்டர் ஜெரி. இங்கு விவேகானந்த கேந்திரம் சாண எரிவாயுக்கலனை நிறுவியது பெரிய கதை. “ப்ளாக் டெவலப்மெண்ட ஆபீசர் வந்து சொன்னப்ப வேண்டாம்னுடேங்க. அப்புறம் கேந்திரா ஊழியர் முனீஸ்வரன்தான் திரும்ப திரும்ப பயோகேஸ் சிறப்பை சொல்லிகிட்டே இருந்தாரு. சரி பார்ப்போம் அப்படீன்னுட்டு அவரை ஒரு ப்ளாண்ட் (plant) போட சொன்னேன். ஒரு நாலு க்யூபிக் மீட்டர் ப்ளாண்ட். அதிலருந்து திருப்திகரமாக கியாஸ் சமையலுக்கு வருது. அத்தோட கூட நல்லா ஸ்லரி(slurry) வருது. அதுவும் மண்புழு உரம் செய்ய ரொம்ப நல்லா இருந்தது…” இன்றைக்கு டோ னாவூர் ஃபெல்லோஷிப்பின் நான்கு (மொத்தம் 32 க்யூபிக் மீட்டர் கொள்ளளவு) சாண எரிவாயுகலன்களையும் விவேகானந்த கேந்திரம் நிர்மாணித்துள்ளது. அத்துடன் டோ னாவூர் பண்ணையின் விவசாயம் இன்று பஞ்சகவ்யம் சார்ந்து நடைபெறுகிறது. அங்குள்ள விவசாய பண்ணையின் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சொல்கிறார், “சாண எரிவாயு கழிவுல ஆரம்பிச்சு பஞ்சகவ்யம் செய்தோம். பஞ்சகவ்யம் போட்ட ரோசால்லாம் எப்படி இருக்குதுங்கிறீக! ஒவ்வொரு ரோசாவும் தாமரை மாதிரி பெரிசு!”

படத்தலைப்பு: கோழிக்கோடுப்பொத்தை கிராமம்
குமரி மாவட்டத்தில் மருங்கூர் முருகன் கோவிலில் இருந்து தோவாளை முருகன் கோவில் செல்லும் கிராம சாலையின் ஓரமாக அமைந்துள்ளது கோழிகோடுப்பொத்தை எனும் கிராமம். தலித் சமுதாயத்தைச் சார்ந்த விவசாயிகள் இங்கு உள்ளனர். அண்மைக்காலமாக தோவாளை பூச்சந்தையின் ஈர்ப்பு இங்கு பல விவசாயிகளை பூந்தோட்டம் (குறிப்பாக ரோசா, சம்பங்கி) போட வைத்துள்ளது. கூடவே அதீத இரசாயன உரங்களும் உள்ளிறங்கின. இந்நிலையில் பஞ்சகவ்யத்தை பயன்படுத்த முன்வந்தார் இக்கிராமத்தை சேர்ந்த திருமதி.தங்கம் என்னும் விவசாயி. அவரது ஒரு ஏக்கர் ரோசா தோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக பஞ்சகவ்யம் மட்டுமே தெளிக்கப்பட்டு வருகிறது. எவ்வித இரசாயன உள்ளீடும் இல்லை என்பதுடன் தோவாளை பூச்சந்தையில் அவரது ரோசாக்கள் தரத்திற்கு பெயர்வாங்கி நல்ல விலைக்கு போகின்றன. 2006 இல் இந்த கிராமத்தில் ஒரு சாண எரிவாயுகலன் நிறுவப்பட்டது. அந்த விவசாயி மிகவும் தயங்கித்தான் சம்மதித்தார். ஆனால் இன்று பலர் தங்கள் வீடுகளில் சாண எரிவாயு கலன் அமைக்கப் போட்டி போடுகின்றனர். இருவர் வீடுகளில் அவை நிறுவப்படுகின்றன.

படத்தலைப்பு:இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு காட்டிவரும் விவேகானந்த உழவர் இயக்கத்தின் பொறுப்பாளர் விவசாயி திரு.மாணிக்கவாசகம்

விவேகானந்த கேந்திரத்தின் இந்த மீள்-ஆக்க எரிசக்தியுடன் இணைந்த விவசாய தொழில்நுட்பம் இன்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சுற்றுசூழலுக்கு இயைந்த ஆற்றல் தொழில் நுட்பங்களுக்காக அளிக்கப்படும் பரிசு ஆஷ்டன் பரிசு. இம்முறை அப்பரிசு பெற்ற சர்வதேச அமைப்புகளில் மீள்-ஆக்க எரிசக்தியுடன் இணைந்த விவசாய தொழில்நுட்ப சாதனைக்காக தமிழ்நாட்டின் விவேகானந்த கேந்திரம் பரிசு பெற்றது. இளவரசர் சார்ல்ஸ் இப்பரிசினை அளித்த போது அவ்ருக்கு தெரிந்திருக்குமா? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா என்கிற தஞ்சாவூர் தமிழரின் தொலைநோக்கு தொழில்நுட்ப பார்வையினால் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பத்தின் சாதனைக்கு தாம் பரிசு வழங்கினோம் என்பது?

படத்தலைப்பு:நார்டெப் திட்ட செயலர் திரு.வாசுதேவ்ஜி இளவரசர் சார்ல்ஸுடன் ஆஷ்டென் விருது நிகழ்ச்சியில்

இந்த கட்டுரையில் நீங்கள் பார்த்த பலதும் இணைந்து சாண எரிவாயு மற்றும் உயிரி எரிபொருள் குறித்த ஒரு வீடியோ விவரணப்படமாக வெளிவர இருக்கிறது என்பதனைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“கையில் கலப்பை பிடித்த உழவர்களின் குடிசையிலிருந்து புதிய இந்தியா எழும்பட்டும்! மீனவர்கள் சக்கிலியர்கள் தோட்டிகள் ஆகியவர்களின் குடிசைகளிலிருந்து புதிய இந்தியா எழட்டும்!…இந்தியாவை முன்னேற்ற விரும்பினால் நாம் இந்த மக்களுக்காக வேலை செய்தாகவேண்டும்…புராதன பாரத அன்னை மீண்டும் எழுந்துவிட்டாள். முன்னெப்போதையும் விட அரும் பெரும் மகிமைகளுடன் அவள் திகழ்கிறாள். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் அன்னையை உலகிற்கு பிரகடனப்படுத்துங்கள்”-சுவாமி விவேகானந்தர்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்