செர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“அணுக்கருத் தொடரியக்கத்தின் கண்டுபிடிப்பால் நேரும் மனித இணத்தின் அழிவு, தீப்பொறியை மாந்தர் முதலில் கண்டுபிடித்ததைக் காட்டிலும் எந்த விதத்திலும் மிகையானதன்று! நம்மால் முடிந்தவரை அணுசக்தியை அழிவுசக்தியாகத் தவறிய வழிகளில் பயன்படுவதைத் தடுத்து நாம் பாதுகாப்பு முறைகளில் ஆக்கசக்தியாகப் பயன் பெற முனைய வேண்டும்.”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [1879-1955]

என்ன நேர்ந்ததென உளவச் சென்றோர்
பின்னால் சொல்ல மீளவில்லை!
தீயணைக்கப் போனவர்
காயப்பட்டு மருத்துவ மனை
சென்றோர் திரும்பி
சேயணைக்க வீட்டுக்கு மீளவில்லை!

செர்நோபில் நினைவுகள்

கலைந்து கிடக்கும் மெத்தைகள்!
சேயின் தொட்டிலில் தூங்கும் பொம்மைகள்!
ஆயின் குழந்தைகள் யில்லை!
தாலாட்டுப் புத்தகம்
தாள் திறந்து கிடக்குது!
தாலாட்டைப் பாடும்
தாயில்லை!
தாலாட்டை நோக்கும்
சேயுமில்லை!

செர்நோபில் சோகப் பாடல்கள்

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு திட்டம் இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy (1840-1928)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: செர்நோபில் அணுமின் நிலையத்தில் மனிதர் செய்த மாபெரும் தவறுகளாலும், யந்திரக் கோளாறுகளாலும், டிசைன் பழுதுகளாலும் சோதனை நிகழ்ச்சியால் தூண்டப்பட்டு அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்படக் காரணமாயின. சுமார் 3000 மெகாவாட் வெப்பசக்தியில் ஓடும் அணுமின் உலைச் சாதனங்கள், அப்போது வெப்பசக்தி 100 மடங்கு மிகையாகி 300,000 மெகாவாட் நீராவியின் அழுத்தம் விரைவில் பேரளவில் ஏறிப் போய் அணு உலைச் சாதனங்கள் அதிரத் தொடங்கின! எரிக்கோல்கள் அடங்கிய அழுத்தக் குழல்களின் மூடிகள் ஏறி யிறங்கி நர்த்தனம் புரிந்தன! அணு உலைக்குள் கொந்தளிப்புச் சத்தங்கள் கேட்டன! பூகம்பம் போல் சிறு சிறு வெடி முழக்கங்கள் கேட்டன! காங்கிரீட் அறைகள் அசையத் துவங்கி அடி பெயர்ந்தன! சுவர் இடிந்தன! நிலையத்தின் விளக்குகள் அனைத்தும் சட்டென அணைந்தன! அறைகளின் மேல்தளங்கள் பிளக்கப் பட்டு விழத் தொடங்கின! உலைக்கரு வெடித்து நிலையத்தின் மேல்தளத்தில் பெருந்துளை ஒன்று காணப்பட்டது! அணு உலையின் 1700 யுரேனிய எரிக்கோல்கள் கதிரியக்கத்தை வெளியாக்குவதுடன், பெரும்பான்மையானவை உருக ஆரம்பித்துத் தணிப்பு நீருடன் இரசாயன முறையில் இணைந்தன. அதனால் நீராவி அழுத்தம் பெருகி, குழல்களில் வெடிப்புகளை [Steam Explosion in Pressure Tubes] உண்டாக்கின! முடிவில் 1000 டன் கனமுள்ள கவச உருக்குத் தட்டு [Upper Biological Shield] ஆட்டி அசைக்கப் பட்டுத் தூக்கி எறியப்பட்டு, அணு உலை வயிற்றுக்கள் பாதுகாப்பாய்க் கிடந்த கதிரியக்க எரிக்கோல்கள் மேல்தளம் திறந்ததால் வாய்திறந்து வானம் பார்த்தன!

செர்நோபில் கோர வெடிப்பில் நேர்ந்த ஆரம்ப விளைவுகள் (தொடர்ச்சி)

விபத்துக்கு அடுத்த நாள் காலை சிதைவுகளின் மத்தியில் கதிரிக்கத்தின் தீவிர அளவுகள் குறைந்தது போல் தென்பட்டன! ஏப்ரல் 26 ஆம் தேதி வான்வெளியில் பரவிய 12 மில்லியன் கியூரி [curie: Radioactivity Unit], 27 ஆம் தேதி 4 மில்லியன் கியூரி, 29 ஆம் தேதி 3 மில்லியன் கியூரி, 30 ஆம் தேதி 2 மில்லியன் கியூரிக் கதிர்வீச்சுப் பொழிவுகள் படிப்படியாகக் குறைவன போல் தெரிந்தாலும், பிறகு மறுபடியும் பொழிவுகள் பெருகிச் செல்லும் போக்கு அறியப்பட்டது! மே மாதம் முதல் தேதி 2 மில்லியன் கியூரி, 2 ஆம் நாள் 4 மில்லியன் கியூரி, 3 ஆம் நாள் 5 மில்லியன் கியூரி, 4 ஆம் நாள் 7 மில்லியன் கியூரி, 5 ஆம் நாள் 8 மில்லியன் கியூரியாகப் பெருகி வண்ணம் நிபுணரைத் திடுக்கிட வைத்தது! மே மாதம் 6 ஆம் தேதிக்குள் கரிக்கட்டிகளும் தொடர்ந்து எரிந்து மொத்தம் 40 மில்லியன் கியூரிக் கதிர்வீச்சுப் பொழிவுகள் வெளியேறின என்று கணிக்கப் படுகிறது! விண்வெளியில் உலகெங்கும் பரவும் அந்த பயங்கரக் கதிவீச்சுப் பெருக்கத்தை விரைவில் தடுக்க வேண்டும், அல்லது பேரளவு குறைக்க வேண்டும்! அதற்கு உடனே என்ன செய்யலாம் என்பது அணுவியல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நிபுணர்களுக்கும் பெரிய சவாலாய் இருந்தது!

ஒரு நிபுணரின் ஆலோசனைப்படி அணு உலைக்கு அடியில் குகை ஒன்றைத் தோண்டி ஒரு பெரும் “வெப்பக் கடத்தியை” நிறுவ முடிந்தால், அதன் மூலம் எரிந்துருகும் யுரேனியக் கோல்களின் வெப்பத்தைத் தணித்து, கதிர்வீச்சுப் பொழிவுகளின் தீவிரத்தைக் குறைக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுக் குகை குடைந்து கட்டும் வாகனச் சாதனங்கள் பல கொண்டு வரப்பட்டன! அருகில் எங்கெல்லாம் காங்கிரீட் தயாராக்கும் தொழிற்சாலைகள் உள்ளனவோ அங்கிருந்து விரைவாக ஆயிரக் கணக்கான டன்களில் காங்கிரீட் குழைவு வரவழைக்கப் பட்டது! மே 6 ஆம் நாள் புரியாத ஏதோ ஒரு காரணத்தால், கதிர்ப்பொழிவு திடீரென்று 150,000 கியூரியாகக் குன்றியது. மேலும் மே 9 ஆம் தேதி ஆயிரக் கணக்கான டன் கரிக்கட்டிகளின் நெருப்பு தீயணைப்புப் படையாளரால் அணைக்கப் பட்டது. ஆனால் அன்று மாலை பறந்து படமெடுத்த ஹெலிகாப்டர் அடியில் நோக்கிய போது, பயங்கரமாகக் காமா கதிர்கள் வீசிச் [Gamma Rays] செந்நிறத்தில் கனிந்து மிளிரும் அணு உலை மையப் பகுதி காணப் பட்டது!

மே 10 ஆம் தேதி மேலும் 80 டன் ஈயச் செங்கல்கள் [Lead Metal Blocks] மையத்தை நோக்கிக் கீழே கொட்டப் பட்டன! உடனே அச்செந்நிறக் கதிர்க் காட்சி நீக்கமானது! போகப் போக மேலும் பணிகள் மிகையாகின. அங்குமிங்கும் சிதறித் துண்டு துண்டான யுரேனிய எரிக்கோல்கள் நிலையப் பரப்புகள் அனைத்திலும் மிதிபட்ட தளங்களில் ஆயிரக் கணக்கான ராஞ்சன் நேர்க் கதிரடிகளைப் [Acute Radiation Dose in High Level (1000-2000) Rem] நூற்றுக் கணக்கான பணியாளிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன! அந்திப் பொழிதில் ஹெலிக்காப்டர் மூலம் தரையில் ஒளிவீசும் பொருட்களைப் படமெடுத்து, யுரேனியத் துண்டுகள் தெரியு மிடங்கள் பதிவாக்கப் பட்டன! புதிதாக “நகரும் யந்திரக் கரம்” [Robotic Arm] ஒன்று கொண்டு வரப்பட்டு கதிர்க்கனலில் ஒளிவீசும் அத்தனை யுரேனியத் துண்டுகளும் “காங்கிரீட் தட்டுக் கவசங்களால்” மூடப் பட்டன! நிலையத்தின் மேல்தளம் முழுவதிலும் தீவிரக் கதிரியக்கமுள்ள கரிக்கட்டித் துண்டுகள் கிடந்தன! அவையும் சாமர்த்தியமாக நீக்கப் படவேண்டும். யந்திரக் கரத்தின் சக்கிரம் தார்த் தளத்தில் சரியாக நகராது. ஆகவே அதை அங்கு பயன்படுத்த முடியாது! மனிதர்தான் அந்தப் பயங்கரப் பணியைச் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது!

நிலைய மேல்தளத்தின் கதிரியக்க நிலை கணிக்கப் பட்டபின், கரிக்கட்டித் துணுக்குகளைக் கையால் மனிதர் எடுத்துப் பாதுகாப்பாய் கவசக் கலன்களில் சேமிக்க எத்தனை பேர் தேவைப்படும் என்றும், எத்தனை நிமிடங்கள் அப்பகுதியில் பணி செய்யலாம் என்றும் கணக்கிடப் பட்டது. ஒரு பணியாளி அத்தகைய தீவிரக் கதிர்வீச்சுத் தளத்தில் 1 அல்லது 2 நிமிடங்கள் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆனால் அந்த நாழிகைக்குள் அவர் 25 ரெம் கதிரடி [25 Rem Dose] வாங்கி விடுவார்! ஆகவே அப்பணி திட்டமிடப்பட்டுச் செய்து முடிக்க 16,000 ராணுவப் படையாளிகள் செர்நோபில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்! அவர்கள் அனைவரும் கதிரியக்கம் தாக்கா வண்ணம் 55 பவுண்டு எடையுள்ள ஈயக் கவசங்களை கை, கால், நெஞ்சு, ஆண்குறிப் பகுதி, முதுகுப் பகுதிகளில் அணிந்து கொண்டனர்! மூக்கில் வாயு வடிகட்டியும், கண்ணுக்குக் கண்ணாடியும் [Respirators & Goggles] பூண்டிருந்தனர். டெலிவிஷன் காமிராக்கள் கண்காணிக்க மேல்தளத்திலிருந்த கதிரியக்கக் கரிக்கட்டிகள் யாவும் ஒவ்வொன்றாய் நீக்கப் பட்டன!

அணு உலைக்கடியில் குகை தோண்டி வெப்பக் கடத்தி நிறுவப்படும் திட்டம் ஜூன் மாதக் கடைசியில் வெற்றிகரமாக முடிந்தது. குழிவிழுந்து வானம் பார்க்கும் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்களைக் கவசத்தால் மூடும் கடினப் பணி அடுத்து துவங்கியது! பணியாளிகளைக் காமாக் கதிர்கள் [Gamma Rays] நேரடியாகத் தாக்கா வண்ணமிருக்க அதற்கு முதலில் மாபெரும் உயிரியல் பாதுகாப்புக் கவசம் [Biological Shield] தயாரிக்கப் பட வேண்டியதாயிற்று! அந்தக் கவசம் ஜூலைக் கடைசியில் தயார் செய்யப் பட்டது! அதன் பிறகுதான் அணு உலையை மூடும் “புதைப்புக் கோட்டை” [Sarcophagus] கட்ட ஆரம்பிக்கப் பட்டது! அப்பெரும் புதைப்பரண் செப்டம்பர் 23 தேதி முடிக்கப் பட்டது! செர்நோபிலில் விபத்துக்குப் பின் நிறுத்தமான மற்ற யூனிட்டுகள் சில மேம்பாடுகளுடனும், கடுமையான கட்டுபாட்டு நெறிகளுடனும் யூனிட் 1 அக்டோபர் முதல் தேதியிலும், இரண்டாம் யூனிட் நவம்பர் 5 ஆம் தேதியிலும், மூன்றாம் யூனிட் ஓராண்டுக்குப் பின்னும் திரும்ப இயங்கத் துவங்கின!

விபத்தான செர்நோபில் அணுமின் நிலைய நாலாவது யூனிட்டை ஓரளவு சுத்தப்படுத்திக் காங்கிரீட் கோட்டையில் மூடிப் போட சுமார் 600,000 பேர் பணி செய்ததாக அறியப்படுகிறது! நியூட்ரான் விழுங்கிச் சாதனங்கள், தீயணைப்பிப் பண்டங்கள் குழிக்குள்ளே ஹெலிகாப்டர் மூலமாகக் கொட்டப்பட்டன! குழியை மூடி அரண் கட்டிய மொத்த உலோக, மணல், காங்கிரீட் பொருட்களின் எடை: சுமார் 5000 டன்! அவற்றில் நியூட்ரான் விழுங்கியான 40 டன் போரான் கூட்டுப் கலவைகள் [Boron Compounds], காமாக் கதிர்களின் கவசமான 2400 டன் ஈயம், 1800 டன் மணல், களிமண் மேலும் 600 டன் டாலமைட் பண்டம் ஆகியவை பயன்பட்டன! அடுத்து முக்கிய நிகழ்ச்சி: கதிர்ப்பொழிகள் பரவிய 30 கி.மீடர் ஆரமுள்ள [20 மைல் ஆரம்] தீவிரப் பகுதிகளிலிருந்து வீடு, உடை, உணவு, பண்டம், பாத்திரம், பர்னிச்சர்கள், நிலங்கள் ஆகிய அனைத்தையும் விட்டுவிட்டு வெறும் கைபையைத் தூக்கிக் கொண்டு சுமார் 135,000 மக்கள் நூற்றுக் கணக்கான பஸ்களில் தொடர்ந்து புலம்பெயர்ச்சியாகிக் கடத்தப் பட்டனர்! விபத்து நடந்த சில தினங்களில் 31 பேர் உயிர் நீத்ததுடன் 209 பேர் கதிர்க் காய்ச்சலில் பாதிக்கப் பட்டனர். அவர்களில் 30% நபர்கள் பின்னால் பலவகையில் முடமானார்கள்!

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy
[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

25. Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Accident Sequence, The RBMK Reactor, Events Leading to the Accident, The Graphite Fire [2002 Update]

26 RBMK Reactors – Nuclear Issues Briefing Paper # 64A [Feb 2002]

******************

jayabarat@tnt21.com [June 14, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா