சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2

This entry is part of 48 in the series 20060414_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


[The Approaching Global Thermageddon]

வெப்ப யுகப் பிரளயம்,

குப்பெனவே

உப்புக் கடலில் எழுந்தது!

சொர்க்க வாசல் புகுந்து

மாதிரிச் சூறாவளி,

பூத வடிவில், பேய் மழையில்

சூதகமாய் அரங்கேற்றும்,

வேதனை நாடகம்!

நியூ ஆர்லீன்ஸ்

எழில் நகரம்

ஒருநாள் அடித்த அசுரப் புயலில்

பெருநரக மானது!

மந்தையாய் மூன்று லட்சம்

மாந்தர்கள்

வீடு, வாசல், ஆடை, வாகனம் விட்டு

நாடு கடத்தப் பட்டார்!

அந்தோ உலகில் நேர்ந்த முதல்

விந்தை யிது!

‘பூகோள வெப்பப் பெருக்கம் நிதியடிப்படை பற்றியோ, அரசாங்க ஆதிக்க வாதிகளுக்கோ, சூழ்நிலை வாதிகளுக்கோ அல்லது எதிர்க்கட்சி வாதிகளுக்கோ உரிமையான அழுத்தப் பிரச்சனை யில்லை! இது கடவுளின் படைப்பான ஏக உலகக் குடும்பத்திற்கு ஏற்படும் எதிர்காலப் பாதிப்பு! இது மனித இனப் பாதுகாப்பு, இயற்கைச் சூழ்நிலைப் பாதுகாப்பு பற்றிய பிரச்சனையாகும்! கடவுள் நமக்குப் படைத்த கொடையை நல்முறையில் நமது சந்ததிகளுக்குச் சமர்ப்பிக்க வேண்டியது நமது பொறுப்பு.

அமெரிக்கக் காத்திலிப் பாதிரிக் குழுவினர் [Global Climate Change (July 2001)]

‘1880 ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலப் பூகோளச் சூடேற்றத்தால் அட்லாண்டிக் கடல்நீர் உஷ்ணம் 0.5 C மிகையாகி யிருக்கிறது. அரை டிகிரி உஷ்ணம் உலகக் கடல் வெள்ளத்தில் ஏறினாலும், ஹரிக்கேன் பேராற்றல் அல்லது அழிவுக் குறியிலக்கம் [Hurricane Energy Index or Destructive Index] 0.97 யிலிருந்து 1.90 ஆகி 2003 ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி [96% மிகை] விட்டது! ‘

‘2001 ஆண்டில் பூகோள உஷ்ணம் (1880-2000) ஆண்டுகளின் சராசரி உஷ்ணத்தை விட 0.52 C ஏறுமென்று எதிர்பார்க்கப் பட்டது! எல்னினோ [El Nino] விளைவால் 1998 ஆண்டு சூடான வருட மானத்திற்குப் பிறகு, 2001 ஆண்டு அடுத்த சூடான ஆண்டாகக் கருதப் பட்டது. நிலப்பகுதியின் உஷ்ணம் அதே 120 ஆண்டுகளில் கடல் சராசரி உஷ்ணம் 0.41 C யிலிருந்து 0.77 C ஆக ஏறி யிருக்கிறது.

தேசீயக் கடல், சூழ்வெளி ஆணையகம் [(NOAA) US National Oceanic & Admospheric Administration]

‘நியூ ஆர்லின்ஸ் நகரம் ஹரிக்கேன் கேட்ரீனா தாக்குதலால் மக்கள் வாழத் தகுதியற்று, அரை மில்லியன் பேர் வெளியேறக் கட்டளை யிடப்பட்டு புலப்பெயர்ச்சியான பிறகு 50,000-100,000 நபர்கள் பிடிவாதமாய் வெளியேற மனமின்றி நீர் மூழ்கிய இல்லங்களில் தங்கி அடைபட்டு விட்டார்கள். ‘

நகராட்சி அதிபர்: ரே நாகின் [Ray Nagin, New Orlean ‘s Mayor]

‘கேட்ரினா ஹரிக்கேன் நினைக்கப் பார்க்க முடியாத ஓர் பயங்கரச் சூறாவளி! அது விளைவித்த சேதமும், பாதகமும் ஒரு தேசச் சீர்கேட்டு நிகழ்ச்சி! மேலும் அது தேச அவமான இகழச்சி என்றும் கருதப் படுகிறது! அப்போது மனித நேயம் புறக்கணிக்கப் பட்டு மாந்தரிடம் ஒளிந்திருக்கும் வெறுப்பு உணர்வுகள், காட்டுமிராண்டித்தனமான ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைக் கேட்ரினா வெளியே கொண்டு வந்தது! அமெரிக்காவில் எவ்விதம் நிறவெறி இப்போதும் தலைதூக்கி, உதவி செய்வதில் தாமதம் நேர்ந்துள்ளதை அது வெளிப்படையாகக் காட்டியது. ‘

ஜெ. டிம்மன்ஸ் ராபர்ட் [J. Timmons Robert, Director of Environmental Science/Studies]

‘3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது. ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனிமதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்! ‘

ஆன்டிரூ ரெவ்கின் [Andrew Revkin, The New York Times (23 September 2003)]

‘ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது. உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன. உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன. சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன. ‘

உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

பூகோளச் சூடேற்றத்தால் சூறாவளிப் பேரிடர்கள்

சமீபத்திய தகவல் சேமிப்புக் கணிப்பின்படி, பூகோளச் சூடேற்றத்தால் கடல் மெதுவாக வெப்பத்தை உறிஞ்சி ஹரிக்கேன் சூறாவளிகளின் பேராற்றலை 45% மிகைப் படுத்தியுள்ளது என்பது தெரிய வருகிறது. அதை நிரூபித்துக் காட்ட கடந்த ஆண்டு 2005 ஆகஸ்டு மாதக் கடைசியில் அமெரிக்காவில் அடித்த அசுரச் சூறாவளி கேட்ரீனா ஓர் உகந்த சான்று. ஹரிக்கேனின் ஆற்றல் சூடான கடல்நீர் உஷ்ணத்தைச் சார்ந்ததாக உள்ளது. கடல்மட்ட உஷ்ணத்தைப் பூகோளச் சூடேற்றம் மெதுவாக மிகைப் படுத்தி கடல் வெள்ளத்தின் வெப்பச் சேமிப்பு கூடுவதுடன், வெள்ளத்தின் கொள்ளளவு பெருகி [Volumetric Expansion] நீர் மட்டமும் உயர்கிறது. 2002-2004 ஆண்டுகளில் ஆய்வு செய்த புள்ளி விவர மதிப்பீடுப்படி [Statistical Estimates] அட்லாண்டிக் கடல் ஹரிக்கேன்களின் ஆற்றல்கள் அதிகமாகி யுள்ளன. 1880 ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலப் பூகோளச் சூடேற்றத்தால் அட்லாண்டிக் கடல்நீர் உஷ்ணம் 0.5 C மிகையாகி யிருக்கிறது. அரை டிகிரி உஷ்ணம் உலகக் கடல் வெள்ளத்தில் ஏறினாலும், ஹரிக்கேன் பேராற்றல் அல்லது அழிவுக் குறியிலக்கம் [Hurricane Energy Index or Destructive Index] 0.97 யிலிருந்து 1.90 ஆகி 2003 ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி [96% மிகை] விட்டது! ‘

1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதிய ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!

சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி இரண்டு மதில் அணைகள் உடைக்கப் பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!

நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க பல வாரங்கள் ஆயின என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க ஐந்து அல்லது பத்தாண்டுகள் கூட ஆகலாம்.

(தொடரும்)

****

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]

2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]

3. What is Happening to our Climate ? By Samuel Matthews, National Geographic [Nov 1976]

4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]

5. Global Warming from Wikipedia.

6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]

7. Climate Change: Projected Changes in CO2 & Climate

8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.

9. Is Our World Warming ? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]

10 http://www.thinnai.com/sc1014051.html [Author ‘s Article on Katrina Damage & Evaquation]

****

jayabarat@tnt21.com [April 12, 2006]

Series Navigation