சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா



[The Approaching Global Thermageddon]

எங்கெங்கு காணினும்
புகை மூட்டமடா!
ஈராக் எண்ணைக் கேணிகள்
தீப்புகை எழுப்புதடா!
தவறு செய்யும் மனிதர் கூட்டம்
தப்பிக் கொள்ளப் பார்க்குமடா!
துப்புரவு செய்திடாமல்
தொழிற்சாலைக்
புகைபோக்கி மூலம்
கரிவாயு மூட்டம்
விரிவான் நோக்கிப் போகுதடா!
நிலவளம், நீர்வளம், கடல் வளம்,
மனித நலம், உயிரினப் பயிர்வளம்
புனிதம் சிதையப் போகுதடா!
வெப்ப யுகப் பிரளயம்,
வாசல் முன் வந்து நிற்குதடா!

“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது! வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது! அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை! மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

“ஆழமான விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம், சிறிய உஷ்ண மிகையால் பூமியின் சூழ்மண்டலம் மாறுபட்டு உலக விலங்கினங்களும், பயிரினங்களும் வெப்ப ஏற்றத்தால் சிதைவுற்ற நிகழ்ச்சிகள் அனுபவத்தில் அறியப் பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டில் மட்டும் பூமியின் உஷ்ணம் 0.6 டிகிரி C மிகச் சிறிய அளவில் மிகையாகிக் கடல் தளத்தில் பவளக் கொத்துக்கள் [Coral Reefs] சிதைவாகியுள்ளன. புதிய ஊர்களில் மலேரியா போன்ற நோய் பரவியுள்ளது! உச்சக் குளிர்ப்பனியில் அழியும் பயிர்கள் உள்ள அலாஸ்காவில் சூடேற்றத்தால் புதர்கள் முளைத்துள்ளது விந்தையாக இருக்கிறது!

மார்டின் மிட்டெல்ஸ்டேட் [Martin Mittelstaedt Toronto Globe & Mail (28 March 2002)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர். அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது. காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது. அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

“கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது! சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்! அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும். அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

1950 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் வட துருவத்துக்கு அடியில் குறுக்கிடும் சமயங்களில் முதன்முதலாகக் கடற்பனி ஆழத்தைத் துல்லியமாகக் கண்டறிந்த போது, பனிப்பாறைத் தடிப்பு கணிக்கப் பட்டது! ஆர்க்டிக் துருவ வட்டாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாகப் பனியுருகும் காலம் ஒவ்வொரு பத்தாண்டுகளில் 5 நாட்கள் அதிகமாகிப் பனித்தளங்கள் படிப்படியாய் நலிந்து, பனித்தேய்வு வீதம் விரைவாகி வருகின்றது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள்! (1958-1976) ஆண்டுகள் அமெரிக்க இராணுவம் கடற் பனித் தடிப்புகளையும், (1993-1997) ஆண்டுகள் தடிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், ஆர்க்டிக் பனிப்பாறை 42% உருகி நலிந்து விட்டதன்று அறியப்படுகிறது! அதே போன்று 1976, 1996 ஆண்டுகளில் ஆர்க்டிக் வட்டாரத்தை உளவிய பிரிட்டீஷ் நீர்மூழ்கிக் கப்பல் குழுவினர், 20 ஆண்டு இடைக்காலத்தில் பனித்தடிப்பு 43% குன்றியுள்ள தென்றும் கண்டிருக்கிறார்கள்!

கடந்த 30 ஆண்டுகளில் செய்த மேற்பட்ட உளவுகளும், கணிப்புகளும் சராசரி கடற்பனித் தடிப்பு 4 மீடரிலிந்து ஒரு மீடர் உருகிச் சராசரி 3 மீடராக மெலிந்து போனது தெரிய வருகிறது. பூகோளக் கண்காணிப்புத் துணைக் கோள்கள் 10 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடற்பனி 4% தேய்ந்து விட்டது என்று கணித்துள்ளன!

ஸ்டீவ் கான்னர், ஆர்க்டிக் துருவப் பனியுருக்கம் (நவம்பர் 11, 2004)

ஆர்க்டிக் வட்டாரத்தைத் துணைக்கோள் கண்காணித்த உளவுகள், பூகோளச் சூடேற்றம் மெய்யானது என்று நிரூபித்ததுடன், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் முந்தைய காலத்தை விட 8 மடங்கு வேகத்தில் வெப்பச் சீற்றம் ஏறி வருகிறது என்றும் எடுத்துக் காட்டியுள்ளன! கடற்பனி உருகுவதால் கடல் மட்டம் உயராது. காரணம், கடற்பனிக் குன்றுகள் கடலில் மிதக்கின்றன. ஆனால் கிரீன்லாந்தின் பனிக்குன்றுகள் முழுதும் உருகினால் கடல் மட்டம் 7 மீடர் வரை [சுமார் 25 அடி] ஏறிவிடலாம் என்று அஞ்சப் படுகிறது! ஆனால் அவ்விதம் பனிக்குன்றுகள் யாவும் கிரீன்லாந்தில் உருக 1000 ஆண்டுகள் ஆகலாம்!

மார்க் ஸெர்ரீஸ் [Mark Serreze, University of Colorodo]

“கிரீன்பீஸ் போராட்டக் குழு நியமித்த தனியார் துறை விஞ்ஞானிகள் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்: அதாவது கிரீன்லாந்தின் பனிக்குன்று [Glacier] ஒன்று 1988 ஆண்டில் கண்டதை விட 2005 ஆண்டில் மூன்று மடங்கு வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று அறியப் பட்டுள்ளது. அவ்விதம் விரைவான பனிக்குன்று நகர்ச்சிகள் பூகோளக் கடல் மட்ட எழுச்சிக்குப் பேரளவு உதவுகிறது. அந்த பனிக்குன்று உலகிலே உச்சமான விரைவில் ஆண்டுக்கு சுமார் 9 மைல் வேகத்தில் [14 கி.மீடர்] நகர்கிறது. “பூகோளத் தளக் கணிப்புத் துணைக்கோள் ஏற்பாடு” [(GPS) Global Positioning Survey System] மூலமாய் அந்த பனிக்குன்று 1996 இல் ஆண்டுக்கு 3 மைல் [5 கி.மீடர்] வேகம் நகர்ந்தது என்று கணிக்கப் பட்டது.

டாக்டர் கார்டன் ஹாமில்டன் & மார்டீனா குரூகர் [Greenpeace Expedition in the Ship “Arctic Sunrise” to Greenland (July 22, 2005)]

பூகோளச் சூடேற்றப் போக்கு [Global Warming Trends]
“கம்பியூட்டர் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

பூகோளச் சூடேற்றப் போக்கப் பற்றி:

1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது.

2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!

4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆ·பிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center]

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]
2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]
3. What is Happening to our Climate? By Samuel Matthews, National Geographic [Nov 1976]
4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]
5. Global Warming from Wikipedia.
6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]
7. Climate Change: Projected Changes in CO2 & Climate
8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.
9. Is Our World Warming? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]
10 http://www.thinnai.com/sc1014051.html [Author’s Article on Katrina Damage & Evaquation]
11 Stormy Weather: Can We Link to Global Warming By: Jim Motavalli [Nov 11, 2004]
12 A Cold Hard Look at a Telltale Region Arctic By: Christian Science Monitor [Nov 18, 2004]
13 Global Warming : Definitions & Debate [http://zfacts.com/p/49print.html
14 Meltdown: Arctic Wildlife is On the Brink of Catastrophe By Steve Connor [Nov 11, 2004]

******************

jayabarat@tnt21.com [April 20, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


[The Approaching Global Thermageddon]

வெப்ப யுகப் பிரளயம்,

குப்பெனவே

உப்புக் கடலில் எழுந்தது!

சொர்க்க வாசல் புகுந்து

மாதிரிச் சூறாவளி,

பூத வடிவில், பேய் மழையில்

சூதகமாய் அரங்கேற்றும்,

வேதனை நாடகம்!

நியூ ஆர்லீன்ஸ்

எழில் நகரம்

ஒருநாள் அடித்த அசுரப் புயலில்

பெருநரக மானது!

மந்தையாய் மூன்று லட்சம்

மாந்தர்கள்

வீடு, வாசல், ஆடை, வாகனம் விட்டு

நாடு கடத்தப் பட்டார்!

அந்தோ உலகில் நேர்ந்த முதல்

விந்தை யிது!

‘பூகோள வெப்பப் பெருக்கம் நிதியடிப்படை பற்றியோ, அரசாங்க ஆதிக்க வாதிகளுக்கோ, சூழ்நிலை வாதிகளுக்கோ அல்லது எதிர்க்கட்சி வாதிகளுக்கோ உரிமையான அழுத்தப் பிரச்சனை யில்லை! இது கடவுளின் படைப்பான ஏக உலகக் குடும்பத்திற்கு ஏற்படும் எதிர்காலப் பாதிப்பு! இது மனித இனப் பாதுகாப்பு, இயற்கைச் சூழ்நிலைப் பாதுகாப்பு பற்றிய பிரச்சனையாகும்! கடவுள் நமக்குப் படைத்த கொடையை நல்முறையில் நமது சந்ததிகளுக்குச் சமர்ப்பிக்க வேண்டியது நமது பொறுப்பு.

அமெரிக்கக் காத்திலிப் பாதிரிக் குழுவினர் [Global Climate Change (July 2001)]

‘1880 ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலப் பூகோளச் சூடேற்றத்தால் அட்லாண்டிக் கடல்நீர் உஷ்ணம் 0.5 C மிகையாகி யிருக்கிறது. அரை டிகிரி உஷ்ணம் உலகக் கடல் வெள்ளத்தில் ஏறினாலும், ஹரிக்கேன் பேராற்றல் அல்லது அழிவுக் குறியிலக்கம் [Hurricane Energy Index or Destructive Index] 0.97 யிலிருந்து 1.90 ஆகி 2003 ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி [96% மிகை] விட்டது! ‘

‘2001 ஆண்டில் பூகோள உஷ்ணம் (1880-2000) ஆண்டுகளின் சராசரி உஷ்ணத்தை விட 0.52 C ஏறுமென்று எதிர்பார்க்கப் பட்டது! எல்னினோ [El Nino] விளைவால் 1998 ஆண்டு சூடான வருட மானத்திற்குப் பிறகு, 2001 ஆண்டு அடுத்த சூடான ஆண்டாகக் கருதப் பட்டது. நிலப்பகுதியின் உஷ்ணம் அதே 120 ஆண்டுகளில் கடல் சராசரி உஷ்ணம் 0.41 C யிலிருந்து 0.77 C ஆக ஏறி யிருக்கிறது.

தேசீயக் கடல், சூழ்வெளி ஆணையகம் [(NOAA) US National Oceanic & Admospheric Administration]

‘நியூ ஆர்லின்ஸ் நகரம் ஹரிக்கேன் கேட்ரீனா தாக்குதலால் மக்கள் வாழத் தகுதியற்று, அரை மில்லியன் பேர் வெளியேறக் கட்டளை யிடப்பட்டு புலப்பெயர்ச்சியான பிறகு 50,000-100,000 நபர்கள் பிடிவாதமாய் வெளியேற மனமின்றி நீர் மூழ்கிய இல்லங்களில் தங்கி அடைபட்டு விட்டார்கள். ‘

நகராட்சி அதிபர்: ரே நாகின் [Ray Nagin, New Orlean ‘s Mayor]

‘கேட்ரினா ஹரிக்கேன் நினைக்கப் பார்க்க முடியாத ஓர் பயங்கரச் சூறாவளி! அது விளைவித்த சேதமும், பாதகமும் ஒரு தேசச் சீர்கேட்டு நிகழ்ச்சி! மேலும் அது தேச அவமான இகழச்சி என்றும் கருதப் படுகிறது! அப்போது மனித நேயம் புறக்கணிக்கப் பட்டு மாந்தரிடம் ஒளிந்திருக்கும் வெறுப்பு உணர்வுகள், காட்டுமிராண்டித்தனமான ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைக் கேட்ரினா வெளியே கொண்டு வந்தது! அமெரிக்காவில் எவ்விதம் நிறவெறி இப்போதும் தலைதூக்கி, உதவி செய்வதில் தாமதம் நேர்ந்துள்ளதை அது வெளிப்படையாகக் காட்டியது. ‘

ஜெ. டிம்மன்ஸ் ராபர்ட் [J. Timmons Robert, Director of Environmental Science/Studies]

‘3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது. ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனிமதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்! ‘

ஆன்டிரூ ரெவ்கின் [Andrew Revkin, The New York Times (23 September 2003)]

‘ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது. உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன. உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன. சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன. ‘

உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

பூகோளச் சூடேற்றத்தால் சூறாவளிப் பேரிடர்கள்

சமீபத்திய தகவல் சேமிப்புக் கணிப்பின்படி, பூகோளச் சூடேற்றத்தால் கடல் மெதுவாக வெப்பத்தை உறிஞ்சி ஹரிக்கேன் சூறாவளிகளின் பேராற்றலை 45% மிகைப் படுத்தியுள்ளது என்பது தெரிய வருகிறது. அதை நிரூபித்துக் காட்ட கடந்த ஆண்டு 2005 ஆகஸ்டு மாதக் கடைசியில் அமெரிக்காவில் அடித்த அசுரச் சூறாவளி கேட்ரீனா ஓர் உகந்த சான்று. ஹரிக்கேனின் ஆற்றல் சூடான கடல்நீர் உஷ்ணத்தைச் சார்ந்ததாக உள்ளது. கடல்மட்ட உஷ்ணத்தைப் பூகோளச் சூடேற்றம் மெதுவாக மிகைப் படுத்தி கடல் வெள்ளத்தின் வெப்பச் சேமிப்பு கூடுவதுடன், வெள்ளத்தின் கொள்ளளவு பெருகி [Volumetric Expansion] நீர் மட்டமும் உயர்கிறது. 2002-2004 ஆண்டுகளில் ஆய்வு செய்த புள்ளி விவர மதிப்பீடுப்படி [Statistical Estimates] அட்லாண்டிக் கடல் ஹரிக்கேன்களின் ஆற்றல்கள் அதிகமாகி யுள்ளன. 1880 ஆண்டுக்குப் பிறகு நீண்ட காலப் பூகோளச் சூடேற்றத்தால் அட்லாண்டிக் கடல்நீர் உஷ்ணம் 0.5 C மிகையாகி யிருக்கிறது. அரை டிகிரி உஷ்ணம் உலகக் கடல் வெள்ளத்தில் ஏறினாலும், ஹரிக்கேன் பேராற்றல் அல்லது அழிவுக் குறியிலக்கம் [Hurricane Energy Index or Destructive Index] 0.97 யிலிருந்து 1.90 ஆகி 2003 ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகி [96% மிகை] விட்டது! ‘

1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதிய ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!

சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி இரண்டு மதில் அணைகள் உடைக்கப் பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!

நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க பல வாரங்கள் ஆயின என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க ஐந்து அல்லது பத்தாண்டுகள் கூட ஆகலாம்.

(தொடரும்)

****

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]

2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]

3. What is Happening to our Climate ? By Samuel Matthews, National Geographic [Nov 1976]

4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]

5. Global Warming from Wikipedia.

6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]

7. Climate Change: Projected Changes in CO2 & Climate

8. Climate Change: Sea Level Rise Due to Global Warming.

9. Is Our World Warming ? By: Samuel Matthews, Senior Assistant Editor National Geographic [Oct 1990]

10 http://www.thinnai.com/sc1014051.html [Author ‘s Article on Katrina Damage & Evaquation]

****

jayabarat@tnt21.com [April 12, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


சூடு காலம் வருகுது! புவிக்கு

கேடு காலம் வருகுது!

நாடு, நகரம், வீடு, மக்கள்

நாச மாக்கப் போகுது!

புயல டிக்கப் போகுது!

பூத மழை யிடிக்கப் போகுது!

நீரை, நிலத்தை, வளத்தை,

பயிரை, வயிறை, உயிரை

முடக்கிப் போட வருகுது!

கடல் மட்டம் ஏறப் போகுது!

மெல்ல மெல்ல ஏறி உஷ்ணம்,

மீறி மேலே போகுது!

வெப்ப யுகப் பிரளயம்,

தப்பாமல் வரப் போகுது!

உன்னை, என்னை அனைவர்

கண்ணைப் பிதுக்கப் போகுது!

தொழிற்சாலை விடும் புகைமூச்சால்,

சூடேறிப் போகும் பூமி!

துருவப் பனிப் பாறை உருகி,

கடல் மட்ட நீர் உயரும்!

பருவக் காலநிலை உருமாறிப்

புயல் வெடிக்கும், பேய்மழை அடிக்கும்,

நிலப்பரப் பெல்லாம் நீர்மய மாகி

புலப்பெயர்ச்சி நேர்ந்து விG ‘>

‘இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பூகோளச் சூடேற்றத்தால் சூழ்வெளிப் பாதிப்புகளால், உலக நாடுகளில் உயிர்ப் பயிரின வளர்ச்சிகள் முடக்கமாகிச் சேதமாகி நிதித் தட்டுப்பாடுகளும், தொழிற்துறை நொடிப்புகளும் நேரப் போகின்றன. ‘

ஆன்டிரூ ஸிம்ஸ் [Demand for Kyoto Tax on the USA (Dec 6, 2003)]

‘பூகோளக் காலநிலைச் சீர்கேடு பூதளத் துறைகளின் செம்மைப்பாடு நோக்கிச் செல்கிறது! அதைப் பறைசாற்றும் எச்சரிக்கைச் சங்குகள் உலக நாடுகளின் தலைநகர் எங்கணும் ஒலிக்க வேண்டும். ‘

ஜான் கம்மர் [John Gummer, British Environment Society (July 21, 1996)]

‘பல்வேறு பணித்துறைக் காலநிலை கண்காணிப்பாளர் உலக நாடுகளில் ஒன்றுகூடித் தமது நிதிவளம், நேரம், ஆக்க உணர்வு அனைத்தையும் திரட்டி, எவ்விதத் தடையின்றி நீண்டகாலப் போராட்டத்தைத் துவக்க வேண்டும். ஏனென்றால் நாமெல்லாம் காலநிலைக் கோளாறு நரகத்தின் வாயிலை வெகு சீக்கிரத்தில் தொட நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ‘

ராஸ் கெல்பிஸ்பான் [Ross Gelbspan (July 31, 2002)]

‘கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது பூமண்டலம் சூடேறி விட்டதென்று, ஆழ்ந்து செய்த காலநிலை வரலாற்று ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன! அதற்குக் காரணம் ஓரளவு இயற்கைச் சம்பவங்களே தவிர, மனிதரியக்கும் தொழிற்சாலை வெளியேற்றும் துர்வாயுக்கள் அல்ல என்று கூறும் மறுப்புவாதிகள் கொள்கைக்கு எதிர்ப்புத் தரும் முறையில் பறைசாற்றப் படுகிறது. ‘

இயான் ஸாம்பிள் [Ian Sample, ‘Not Just Warmer: It ‘s the Hottest for 2000 Years ‘ Guardian Unlimited *(Sep 1, 2003)]

’20 நூற்றாண்டின் கடைசிக் கால வேளைகளில் விரைவாக ஏறிய வெப்பச் சூடேற்றத்துக்கு வேறெந்தக் காரணத்தைக் காட்டுவது ? பூகோளச் சூழ்வெளியில் கண்ணாடி மாளிகை முறையால் [கிரீன்ஹெளஸ் வாயு விளைவு] வாயுச் சூடேற்றச் சேமிப்பால் உண்டான விளைவு என்றுதான் கூற வேண்டும். ‘

பேராசிரியர் ஃபிளிப்ஸ் ஜோன்ஸ் [Philip Jones Director, Climatic Research, University of East Anglia]

பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது! வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது! அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது! வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் ‘கிரீன்ஹெளஸ் விளைவு ‘ அல்லது ‘கண்ணாடி மாளிகை விளைவு ‘ [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது! அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எஃப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது! பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது. அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது. பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது. நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன! பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன! அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

பனி யுக, வெப்ப யுக விளைவுகள்

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடைசிப் பனியுகம் உலகைத் தொட்டுக் கடந்து போனது. நமது பூமியின் காலநிலை வரலாறு கடும் பனிப்பாறைப் படுகையிலும், பிறகு சுடும் வெப்பப் பாலை வனங்களிலும் எழுதப் பட்டுள்ளன! மனித நாகரீகத் தொடக்கமே 10,000 ஆண்டுகளுக்குப் பின்னால்தால் வளர்ச்சி அடைந்து வந்திருப்பதாக அறியப்படுகிறது! ஒவ்வொரு காலநிலை யுகமும் தனது வரலாற்றுத் தடங்களைக் கடற்படுகை ஆழத் தட்டுகளில் பதிவு செய்திருப்பதைத் தற்போது மாதிரிகள் எடுத்து ஆராயப் பட்டுள்ளது. பனிப்பாறையில் பதுங்கிக் கிடக்கும் ஆக்சிஜென் வாயுவின் அளவு, பனிப்பாறை உருவான காலத்து உஷ்ணத்தைக் காட்டுகிறது. பனிபடிந்து பாறையாகும் சமயத்தில் உஷ்ண ஏற்றத் தணிவுக்கு ஏற்ப ஆக்ஸிஜென் அளவு பாறையில் சேமிக்கப் படுகிறது. கீரின்லாந்தின் பூர்வீகப் பனிப்பாறைகளைத் துளையிட்டு மாதிரிகளை எடுத்து, உயரப் பகுதித் துண்டுகளில் உள்ள ஆக்ஸிஜென் அளவைக் கணக்கிட்டு கடந்த 100,000 ஆண்டுகளாகப் பூமியில் காலநிலை வேறுபாடு வரலாறுகளை எழுதி யுள்ளார்கள்!

கிரீன்ஹெளஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion]. அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது! பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது. அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது! பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது! மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹெளஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

****

தகவல்கள்:

Picture Credits: Time, National Geographic Magazines.

1. Time, Special Report on Global Warming [April 3, 2006]

2. Stop Thermageddon in Our Lifetime [www.thermageddon.com]

3. What is Happening to our Climate ? By Samuel Matthews, National Geographic [Nov 1976]

4. The ocean An Era of Discovery National Geographic [Dec 1981]

5. Global Warming from Wikipedia.

6. Climate Change: The Human Influence Analysed By Harry N.A. Priem [Sep 15, 2000]

7. Climate Change: Projected Changes in CO2 & Climate

8. Climate Change: Sea Level Rise Due to Global Warming

****

jayabarat@tnt21.com [April 6, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா