செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


‘நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது ‘.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

‘ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன! ‘

ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

‘ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன. ‘

ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பலகலைக் கழகம்

‘பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது. ‘

ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

இரட்டை ஊர்திகள் ஈராண்டுக்குப் பிறகும் புரியும் அரிய பணிகள்

இதுவரை நான்கு முறை செவ்வாய்க் கோளில் விண்சிமிழ்கள் இறங்கித் தடம் வைத்துள்ளன! எல்லாவற்றிலும் வைக்கிங்-1 [Viking-1] தளநிலைப்பு உளவிதான் நீண்ட காலம் (1976-1982) ஆய்வு செய்துள்ளது! அடுத்து 1997 இல் இறங்கிய பாத்பைன்டர் [Pathfinder]. தளத்தில் உலாவிய ஸொஜோனர் [Sojourner] ஊர்தி கீழிறங்கிய சிமிழ் அருகில் மட்டுமே நகர்ந்து உளவியது! பிறகு 2004 இல் அடுத்தடுத்து ரோவர் ஸ்பிரிட்டும் [Rover Spirit], ரோவர் ஆப்பர்சுனிட்டியும் [Rover Opportunity] செவ்வாய்க் கோளின் எதிர்ப்புற கோளத்தில் இறங்கி பணி புரிய ஆரம்பித்தன. ஸ்பிரிட் ஊர்தி 90 மைல் அகண்ட கூஸிவ் குழியில் [Gusev Crater] தடம் வைத்தது! ஆப்பர்சுனிட்டி ஊர்தி எதிர்ப்புறத்தில் உள்ள மெரிடியானி பீடத்தில் [Meridiani Planum] நடமாடி வந்தது! இரண்டாண்டுகளாக ரோவர் ஊர்திகளின் ஆயுள் தாண்டி உளவு நீடிக்கப் பட்டதால், குறிப்பணிக்கு நாசா சுமார் 820 மில்லியன் டாலர் செலவழித்ததற்கு மேலாக 84 மில்லியன் மிகையாகச் செலவு செய்ய வேண்டிய தாயிற்று!

2003 ஆம் ஆண்டில் நாசாவின் விண்கப்பல்கள் தனித்தனியாகச் செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் சென்ற இரண்டு சுயநகர்ச்சித் தள ஊர்திகளின் [Rover:1 &2 Robotic Carts] ஆயுட் காலம் என்றோ காலாவதியாகி விட்டது! அவற்றின் காலவறையறை 3 மாதங்கள் என்று முதலில் திட்டமிடப் பட்டிருந்தது! ஆனால் ஆச்சரிப்படும் முறையில், அவை யிரண்டும் இன்னும் மலையில் ஏறி இறங்கிப் படம்பிடித்துப் பூகோளத்துக்கு அனுப்பி வருகின்றன! கடந்த ஈராண்டுகளாக ரோவர்:1, ரோவர்:2 ஊர்திகள், பூஜியத்துக்குக் கீழ் 67 C சராசரி உஷ்ணத்தில், மணிக்கு 100 மைல் வேகத்தில் அடிக்கும் பேய்மணற் புயலில் [Dust Devils] பிழைத்துக் கொண்டு 7 மைல் தூரம் உலாவிச் சென்று உளவி வந்துள்ளன!

ரோவர் ஸ்பிரிட் [Rover: Spirit] 2004 ஜனவரி 2 ஆம் நாளும், ரோவர் ஆப்பர்சுனிடி [Rover: Opportunity] 2004 ஜனவரி 24 ஆம் தேதியும் செவ்வாய்க் கோளத்தில் எதிர்ப்புறத் தளங்களில் வந்திறங்கின! செவ்வாய்க் கோளின் வாய்க்கால் வழிகளில் ஒருகாலத்தில் ஆறுகள் ஓடின என்பதைச் தளவியற் சான்றுடன் [Geologic Evidence] நிரூபிப்பதில் அவை வெற்றி பெற்றன! திட்டமிட்ட மூன்று மாத ஊர்தி ஆயுள் எப்படி 24 மாத ஆயுளைத் தாண்டித் தொடர்ந்து வருகின்றன என்று கேட்டால், அவை அதிர்ஷ்ட வசமாக அப்படிப் பணி புரிகின்றன என்று நாசா விஞ்ஞானிகள் ஆச்சரிய மடைகின்றனர்! ஊர்திகளின் சூரியசக்தி தட்டுகளின் [Solar Power Panels] மீது படிந்த தூசிகள், பேய்ப் புயல்கள் அடித்துப் பலமுறை துடைக்கப் பட்டதால், அவை மீண்டும் புத்துயிர் பெற்று மீண்டும் பணி செய்யத் துவங்கின! ரோவர் ஆப்பர்சுனிடி பணி புரிய ஆரம்பித்த முதலே நாசா விஞ்ஞானிகளை வியப்பில் தள்ளியது! பல யுகங்களுக்கு முன்பாகச் [Eons Ago] செவ்வாய்த் தளத்தில் நீரிருந்த வரலாற்று முக்கியமான சான்றை அது கண்டுபிடித்தது! அந்த அரிய சான்று செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் உயிரினம் வாழ்ந்திருக்கலாம் என்று ஊகிக்க வழியை உண்டாக்கியது!

ரோவர் ஸ்பிரிட் மலை ஏறும் சாதனம் கொண்டது. அமெரிக்க விடுதலைச் சிலையின் [Statue of Liberty: உயரம் 152 அடி] உயரத்தைக் கொண்ட ஹஸ்பண்டு குன்றில் [Husband Hill in Mars] ஏறி யிறங்கி, முதன்முதலாக பிற அண்டக்கோள் ஒன்றின் குன்றை உளவி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது! இடையிடையே ஊர்திகள் பழுதுகள் ஏற்பட்டுத் தொல்லைகள் தந்தாலும், பொறியியர் வல்லுநர் பூமியிலிருந்தே அவற்றைச் செப்பணிட முடிந்ததும் பெரு வியப்புதான்! ஒருசமயம் மணற்புயல் அடித்து ஓரடி உயர மண்குவியலில் ஊர்தி சிக்கிக் கொண்டது! பல வாரங்கள் பூமியிலிருந்து ஆட்டி அசைக்கப் பட்டுப் பிறகு ஊர்தி விடுவிக்கப் பட்டது! ஆனாலும் அவ்விரண்டு ஊர்திகளும் வயதாகி மூப்படைந்து முடங்கும் தருவாய் நெருங்கி வருகிறது! 2005 நவம்பரில் ஆப்பர்சுனிட்டி ரோவரில் சுயயியக்குக் கரமொன்று [Robotic Arm] பழுதாகிப் போய் வேலை செய்ய முரண்டு செய்தது! இரண்டு வாரம் கழித்துத் திறமையாக அதுவும் செப்பணிடப் பட்டது.

இரண்டு ஆண்டுகளில் ஸிபிரிட் ஊர்தி 3 மைல் தூரம் பயணம் செய்து சுமார் 70,000 படங்களை பூமிக்கு அனுப்பி யுள்ளது! ஆப்பர்சுனிட்டி ஊர்தி 4 மைல் தூரம் நடமாடிச் சுமார் 58,000 படங்களை அனுப்பி யிருக்கிறது! இரண்டு ஊர்திகளும் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீர்மயம் இருந்ததற்குச் சான்றுகள் காட்டியுள்ளன! அத்துடன் உயிரினங்கள் உயிர்த்து எழாவண்ணம் தடுக்கச் செவ்வாயில் கடுமையான சூழ்நிலை வாய்த்திருந்ததையும் வியப்பாக எடுத்துக் காட்டியுள்ளன! அடுத்து செவ்வாய்த் தளங்களில் மேவியுள்ள உலோகங்களையும், தாதுப் பாறைகளையும் ஊர்திகள் உளவிடத் திட்டமிடப் பட்டுள்ளன!

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் செவ்வாய் நோக்கி விண்கப்பல்கள்

2001 ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் ஆடிஸ்ஸி [2001 Mars Odyssey Voyage] விண்சிமிழைத் தாங்கிச் செல்லும் ராக்கெட் எவ்விதப் பழுதும், தவறும் ஏற்படாமல் பிளாரிடா ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. ஆடிஸ்ஸி விண்சிமிழ் 725 கிலோ கிராம் எடையுடன் 7x6x9 கனஅடிப் பெட்டி அளவில் இருந்தது. சில மாதங்கள் பயணம் செய்து, 2001 அக்டோபர் 24 ஆம் தேதி செவ்வாய்க் கோளை அடைந்து, முதலில் பதினெட்டரை மணிக்கு [18:36 துல்லிய நேரம்] ஒருமுறைச் சுற்றும் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு செவ்வாய்க் கோளின் சூழ்மண்டலத்தில் ஆடிஸ்ஸி விண்கப்பலை வாயுத்தடுப்பு முறையில் [Aerobraking] கையாண்டு, நீள்வட்ட வீதியைச் சுருக்கிச் செவ்வாயின் குறு ஆரத்தை 240 மைலாக விஞ்ஞானிகள் மாற்றினர். திட்டமிட்ட குறு ஆரம் 186.5 மைல்! ஆனால் கிடைத்த குறு ஆரம்: 240 மைலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறைச் சுற்றும் வீதி!

ஆடிஸ்ஸியின் மின்னியல் கருவிகள் சில செவ்வாய்க் கதிர்வீச்சுச் சூழ்நிலையை [Mars Radiation Environment (MARIE)] உளவு செய்யும். காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி [Gamma Ray Spectrometer], நியூட்ரான் ஒளிப்பட்டை மானி [Neutron Spectrometer], ஆகிய இரண்டும் செவ்வாய்த் தளத்தில் நீர்வளம் உள்ளதையும், ஹைடிரஜன் வாயுச் செழிப்பையும் கண்டறியும். அதே சமயம் தெளிவாகப் படமெடுக்கும் வெப்ப எழுச்சிப் பிம்ப ஏற்பாடு [Thermal Emission Imaging System (THEMIS)] விரிகோணப் படங்களை எடுத்தனுப்பும். செவ்வாய்ச் சூழ்வெளியின் கதிரியக்க வீரியத்தை அளக்கும். பின்னால் மனிதர் செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்க வரும்போது, கதிரியக்கத் தீவிரத்தால் அபாயம் [Radiation Hazard] விளையுமா என்றறிய அந்த அளவுகள் தேவைப்படும். மேலும் அதன் கருவிகள் தளவியல் பண்பை [Geology] அறியவும், தாதுக்களை ஆய்வு [Mineralogical Analysis] செய்யவும் பயன்படும். 2005 அக்டோபர் வரை ஆடிஸ்ஸி விண்வெளிச் சுற்றுச்சிமிழ் தொடர்ந்து செவ்வாய்க் கோளின் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கும் என்று எதிர்பாக்கப் பட்டது.

ஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சுமந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-ஃபிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோடிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி [Mineralogical Mapper], இத்தாலியின் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.

பீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன்படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2! அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது! செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும். தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும். சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.

செவ்வாயைத் தேடி உளவும் இரட்டை வாகனங்கள்

2003 ஜூலை 8 ஆம் தேதி 400 மில்லியன் டாலர் செலவில் நாசா தயாரித்த இரண்டாவது செவ்வாய்த் தள வாகனத்தைக் [Mars Exploration Rovers (MER-B)] கனாவரல் முனை ஆயுதப்படை விமானத் தளத்திலிருந்து [Cape Canaveral Air Force Station] போயிங் டெல்டா-2 ராக்கெட் [Boeing Delta-2 Rocket] தாங்கிக் கொண்டு தனது பல மில்லியன் மைல் பயணத்தைத் துவங்கியது. வாகனத்தைக் கொண்டு செல்லும் விண்சிமிழ் ஏழு மாதங்கள் பறந்து 2004 ஜனவரி-பிப்ரவரி இல் செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்ற ஆரம்பிக்கும். சென்ற ஜூன் 10 ஆம் தேதியன்று முதல் செவ்வாய் வாகனம் [Mars Exploration Rovers (MER-A)] அதைப்போல் ஏவப்பட்டு, செவ்வாயை நோக்கித் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. முதல் விண்சிமிழ் 2004 ஜனவரி 4 ஆம் தேதி செவ்வாய்க் கோளைச் சுற்றத் துவங்கும். ‘இப்போது 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு வாகனங்கள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்கின்றன ‘ என்று நாசாவின் ஆணையாளர் ஷான் ஓ ‘ கீஃப் [Administrator, Sean O ‘Keefe] அன்றைய தினத்தில் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார்.

‘செவ்வாய் வாகனங்களின் குறிப்பணிகள் [Mars Exploration Rovers] அங்கே உயிரினங்கள் இருந்தனவா என்று அறிவதற்கு டிசைன் செய்யப்பட வில்லை. செவ்வாயில் நீருள்ளதா என்று உளவு புரியவும் அவை டிசைன் செய்யப்பட வில்லை. அங்கு நீர் இருந்ததை நாம் ஊகிக்கிறோம். இப்போதும் நீர்வளம் பனிக் கட்டிகளாய் இருக்கலாம் அங்கே. ஆனால் நமக்குத் தெரியாதவை என்ன ? செவ்வாய்த் தளத்தில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளம் இருந்தது ? அங்கே எத்துணை காலம் நீர்வளம் நீடித்தது ? கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளம் இருந்திருந்தால் அப்போது உயிரினத் தோற்றம் உதயமாவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும்! ஏனெனில் பூமியில் நீர்வளம், எரிசக்தி, ஆர்கானிக் கூறுகள் [Organic Compounds] ஆகியவை காணப்பட்ட போதெல்லாம், நாம் உயிரினங்களைக் கண்டோம். ஒரு காலத்தில் உயிரினம் இருந்ததற்கு மூலமான ஒரு முக்கிய காரணத்தைத் தேட அவை டிசைன் செய்யப் பட்டுள்ளன ‘ என்று நாசாவின் விஞ்ஞான அதிபர் எட்வெர்டு வைலர் [Edward Weiler, Science Chief] கூறினார்.

துருவப் பனிப் பாறைகள், தேய்ந்து வற்றிய நீர்த் துறைகள்

1971 இல் மாரினர்-9 விண்ணாய்வுச் சிமிழ் செவ்வாயில் நீரோட்டம் இருந்த ஆற்றுப் பாதைகளைக் காட்டின! ஐயமின்றி அவற்றில் நீரோடித்தான் அத்தடங்கள் ஏற்பட்டிருக்க முடியும். சிற்றோடைகள் பல ஓடி, அவை யாவும் சேர்ந்து, பெரிய ஆறுகளின் பின்னல்களாய்ச் செவ்வாயில் தோன்றின! ஆறுகளின் அதிவேக நீரோட்டம் அடித்துச் செதுக்கிய பாறைகள் சிற்ப மலைகளாய்க் காட்சி அளித்தன! அவை யாவும் தற்போது வரண்டு வெறும் சுவடுகள் மட்டும் தெரிகின்றன! பூமியின் அழுத்தத்தில் [14.5 psi] ஒரு சதவீதம் [0.1 psi] சூழ்ந்திருக்கும் செவ்வாய்க் கோளில் நீர்வளம் நிலைத்திருக்க வழியே இல்லை! காரணம் அச்சிறிய அழுத்தத்தில், சீக்கிரம் நீர் கொதித்து ஆவியாகி, வாயு மண்டலம் இல்லாததால் அகன்று மறைந்து விடும்! ஈர்ப்பாற்றல் பூமியின் ஈர்ப்பாற்றலில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதால், மெலிந்த ஈர்ப்பு விசையால் நீர்மை [Moisture], மற்றும் பிற வாயுக்களையும் செவ்வாய் தன்வசம் இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை! ஆயினும் செவ்வாய்ச் சூழ்மண்டலத்தில் மிக மிகச் சிறிதளவு நீர்மை ஆவி [Water Vapour] கலந்துள்ளது.

செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது! துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது. அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அளவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

2005 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மீண்டுமோர் விண்கப்பல்

நாசா [NASA -National Aeronautics & Space Admistration] 2003 இல் செவ்வாய்க் கோளுக்கு சர்வேயர் [Surveyor], ஆடிஸ்ஸி [Mars Odyssey] விண்கப்பல்களை ஏவியது. பிறகு ஈரோப்பில் ஈசா [ESA -European Space Agency] செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸை [Mars Express] அதே சமயத்தில் அனுப்பியது. ரோவர் ஊர்திகள் இரண்டும் 2004 ஜனவரியில் அடுத்தடுத்துச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நடமாட ஆரம்பித்தன. அதன் பிறகு நாசா 2005 ஆகஸ்டு 12 இல் செவ்வாய் விண்சுற்றிக் கப்பலைச் [Mars Orbiter] செவ்வாய்க் கோளுக்கு ஏவியது. விண்சுற்றி 2006 மார்சில் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்து, அடுத்து ஆறு ஆண்டு காலங்கள் வலம்வரும்! அப்பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர்! முதலிரண்டு காலாம் அது செவ்வாய்க் கோளின் துருவப் பனித் தொப்பியின் [Polar Ice Cap] வரலாற்றை அறிய முனையும்.

2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைக்கும் செவ்வாய்ப் பயணம்

இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் [2025] நாசாவும், ஈசாவும் மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பல்களைத் [Manned Spacecraft] தயாரித்து, செவ்வாய்க் கோளில் தமது தடத்தை வைக்கத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு வருகின்றன! அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது! ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும்! மேலும் செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டியதிருக்கும்! அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய பிரச்சனைகள், அனுபவம் பெறும் சிரமங்கள் அநேகம்! பாதுகாப்பாக அப்பயணத்தைத் துவங்கி நிறைவேற்றத் துணியும் விஞ்ஞானிகளின் மன உறுதியை நாம் மிகவும் மெச்ச வேண்டும். நாசா அல்லது ஈசா செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, செவ்வாய்த் தளத்தில் தடமிட்ட பிறகு பாதுகாப்பாகப் பூமிக்கு மீட்சி செய்தால், அது நிச்சயம் 21 ஆம் நூற்றாண்டு விண்வெளி வரலாற்றில் ஓர் மகத்தான விஞ்ஞானப் பொறியியல் சாதனையாக முதன்மை பெற்றுப் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும்.

****

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL

1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)

2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth

3. Water on Mars -Polar Ice Caps By: Elisabeth Ambrose

4. Mars Polar Caps – Martian Pole Reveals Ice Age Cycles [Feb 25, 2005] Encyclopedia of Astrobiology, Astronomy & Spaceflight.

5. Mars Rovers Advance Understanding of the Red Planet.

6. Twin Mars Rovers Still Exploring After Two Years [Jan 24, 2006]

7. Mars Rovers Explore Hints of Salty Water By: Robert Roy Britt [Feb 19, 2004]

8. Rovers Still Exploring Mars After Two Years By: Associated Press [Jan 2, 2006]

9. Cornell University Scientists to Lead NASA ‘s 2003 Mars Mission By: David Brand

10 2001 Mars Odyssey Space flight Now [October 24, 2001]

11 Mars Surveyor Orbiter [April 7, 2001]

12 Special Report Odyssey Mission to Mars

13 Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].

14 Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]

15 Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]

16 Science & Technology: ESA ‘s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]

17 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]

18 http://www.thinnai.com/science/sc0925031.html [Author ‘s Article on Mars Missions]

19 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]

20 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]

21 Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]

****

jayabarat@tnt21.com [February 2, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா