அடுத்தவன் மனைவியை கவர்வதெப்படி ?

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

சம்பத் ரங்கநாதன்


கொரில்லாக்களை பற்றி பல மாயைகள் நிலவுகின்றன.கிங்காங் படம் வந்த பிறகு இது அதிகம் தான் ஆனது.கொரில்லாக்கள் ஜென்டில் ஏப் என்று கூட அழைக்கபடுகின்றன.

ஆனால் கொரில்லாக்கள் தமது காதலை தெரிவிக்கும் முறையை அறிந்தால் பலர் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.கொரில்லாக்கள் பெரும்பாலும் மனிதன் போல் தான்.கொரில்லா ஆண் அந்தப்புரத்தையே வைத்திருக்கும்.அந்த அந்தப்புரத்தில் விசுவாசமான பெண் கொரில்லாக்களும்,கொரில்லா சிசுக்களும் இருக்கும்.பெண் கொரில்லாக்கள் தாயன்பு மிகுந்தவை.கொரில்லா ஆண்கள் பெண்கொரில்லக்களிடம் குடும்ப வன்முறை,அடி ஆகியவற்றை காட்டுவதில்லை.பெண் கொரில்லக்கள் ஆண்கொரில்லக்களுக்கு கட்டுபட்டு தான் வாழும்.

கொரில்லாக்களிடையே குடும்ப உணர்வும் பாசமும் அதிகம்.குட்டி கொரில்லாவை வேட்டையாட முயலும் வேட்டைக்காரர்கள் அதன் தாயையும் தந்தையையும் கொன்றால் தான் குட்டியை நெருங்கவே முடியும்.

சக்களத்தி சண்டையும் பெண் கொரில்லக்களிடம் ஏற்படுவதுண்டு.அப்போது ஆண் கொரில்லா சின்னதாக உறுமினால் சண்டை நின்றுவிடும்.வலிமை வாய்ந்த கொரில்லக்கள் பல மனைவிகளை வைத்திருக்கும்.வலிமை குறைந்த கொரில்லாக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டின்படி வாழும்.வலிமையற்ற கொரில்லாக்கள் பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்க வேண்டியதுதான்.

வயதான தந்தையின் மனைவிகளை வயது வந்த மகன் வாரிசுரிமையாக பெறுவதும் கொரில்லா குடும்பங்களில் நடக்கும்.

வனவிலங்கு ஆய்வாளர்களை பல வருடங்களாக ஆச்சரியப்பட வைத்த விஷயம் கொரில்லாக்களிடையே நடக்கும் சிசுக் கொலை தான்.30% கொரில்லாக்கள் குழந்தைப் பருவத்திலேயே கொல்லப்பட்டுவிடும்.சிசுக்கொலை இந்த அளவுக்கு ஏன் நடக்கிறது என்பது புரியாத புதிராக இருந்தது.

டியான் பாஸி இந்த புதிரை சற்று விடுவித்தார்.அவருக்கு பிறகு பல ஆய்வுகள் கொரில்லா சிசுக்கொலையை ஆராய்ந்தன.வியக்க வைக்கும் பல உண்மைகள் தெரிந்தன.

வலிமை வாய்ந்த ஆண்கொரில்லாவின் அந்தப்புரத்தில் இருக்கும் பெண்கொரில்லாவை இன்னொரு ஆண்கொரில்லா விரும்புகிறது.அந்த பெண் கொரில்லாவை அடைய ஒரே வழி அதன் குழந்தையை கொல்வது தான்.பெண்கொரில்லாக்கள் தாய்ப்பாசம் மிகுந்தவை.தனது கணவன் தன் குழந்தையை காப்பான் என்று நம்பித் தான் அவை இருக்கின்றன.அந்த நம்பிக்கையை உடைக்க ஒரே வழி குழந்தையை கொல்வதுதான்.அப்படி செய்தால் தனது கணவன் உதவாக்கரை என்ற நம்பிக்கை அந்த பெண்கொரில்லா மனதில் வந்துவிடும்.பிறகு அது அந்த கணவனை விட்டு பிரிந்துவிடும்.

கணவனை பிரிந்த பெண்கொரில்லா தனது குழந்தையை கொன்றவனுடன் ஏன் ஜோடி சேர்கிறது ?அது காட்டில் உள்ள வேறு எந்த ஆண் கொரில்லாவுடனும் ஜோடி சேரலாம்.ஆனால் 100க்கு 100 சதவிகிதம் அவை தமது குழந்தையை கொன்ற கொரில்லாவுடனே ஜோடி சேர்கின்றன.இனி பிறக்கும் குழந்தையாவது பாதுகாப்பாக இருக்கட்டுமே என்ற அச்ச உணர்வு காரணமா அல்லது தனது முன்னாள் கணவனை மீறிய வலிமை வாய்ந்த இந்த புதிய கொரில்லாவின் ஆளுமை தரும் ஈர்ப்பு காரணமா என்று தெரியவில்லை.ஆனால் நடப்பதென்னவோ இதுதான்.

அடுத்தவன் மனைவியை கவர கொரில்லாக்கள் பின்பற்றும் முறை சிசுக்கொலைதான்.

வேறொருவிதத்திலும் கொரில்லாக்களிடையே சிசுக்கொலை நடைபெறுவதுண்டு.ஆண்கொரில்லா திடாரென்று இறந்து போனால் அந்த குடும்பமே சின்னா பின்னமாகிவிடும்.புதிதாக ஒரு ஆண்கொரில்லா தலைமையேற்காவிட்டால் குடும்பம் சீர்குலைந்து போகும்.புதிதாக தலைமையேற்கும் கொரில்லா இதற்குமுன் இருந்த தலைவனுக்கு பிறந்த அத்தனை குட்டிகளையும் கொன்றுவிடும்.தனக்கு பிறக்கும் குட்டிகளை மட்டுமே வாழ அனுமதிக்கும்.

–சம்பத் ரங்கநாதன்

doctorsampath@gmail.com

Series Navigation

சம்பத் ரங்கநாதன்

சம்பத் ரங்கநாதன்