பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


கடற்தளத்தில் தட்டுகள்

காந்தக்

களத்தினை மாற்றும்!

வடமுனை, தென்முனைத் துருவங்கள்

பூகோளத்தில்

இடமாறி மாறித் திரும்பும்!

தடம்மாறும் முனைகள்

மின்காந்த அஞ்சல் கோலங்களை

அலங்கோலம் செய்யும்!

துருவ முனை வானில்

விண்ணிறத் தோரணம் ஒளி ஓவியமாக

வேடிக்கை காட்டும்!

‘மகத்தான இரவில் வான மண்டலத்தில் சில சமயம் விதவிதமான தோற்றங்களைக் காண்கிறோம். கண் கவரும் ஒளிமயமான வளைவுகள்! நெளிந்த முகில்கள்! குருதிச் செந்நிறத் தோரணங்கள்!…. ‘

கிரேக்க மேதை அரிஸ்டாடில் (கி.மு.384-322)

‘எப்போதாவது ஒருமுறை பூமியின் சூழ்வெளி பெளதிக விஞ்ஞானத்தை கலைத்துவ ஓவியங்களாய்

விண்வெளியில் காட்டி விந்தை புரிகிறது! பரிதிக்கோ அல்லது நிலவுக்கோ வட்ட வளையத்தைச் சூட்டுகிறது! மகத்தான வர்ணம் கலந்த வான்வில்லை வரைகிறது! துருவ முனைகளில் வியக்கத்தக்க விண்ணிற ஒளித் தோரணங்கள் கண்ணைக் கவர்கிறது ‘.

ரிச்சர்டு பைடில்மன்

‘துருவப் பகுதியில் சீர்கேடாகப் பரவியுள்ள பனிமலைகள் சீராகப் படியத் தொடர்கின்றன. சீரற்றுப் புதைந்துள்ள கனத்த பனிக் குன்றுகளில், பூமியின் சுழற்சி சுழல்வீச்சுப் பளுத் திருப்பத்தை [Centrifugal Momentum] உண்டாக்குகிறது. அந்தப் பளுத் திருப்பம் பூதளத்தின் இறுகிய அடித்தட்டில் [Earth ‘s Rigid Crust] அடுத்து கடத்தப்படுகிறது. நிலையான வேகத்தில் மிகையாகும் பளுத் திருப்பம் ஒர் உச்ச எல்லை அடைந்து நிலத்தட்டு நகர்ந்து, துருவப் பகுதி பூமத்திய ரேகையை நோக்கித் தள்ளப்படுகிறது ‘.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

‘நாங்கள் பூகோள ஜனனி மாடலைத் (Geodynamo Model) தயாரிக்கப் பல ஆண்டுகள் ஆயின. 1995 ஆம் ஆண்டில் இரட்டைத் துருவத் திருப்பம் பற்றிய எங்கள் முதல் போலிக் கணித வடிவுகளின் (Magnetic Dipole Reversal Simulation) விளைவுகள் வெளியிடப் பட்டன. அந்த மாடல் மூவடிவ, காலம் சார்ந்த வெப்பக் கொந்தளிப்பு வேகம், காந்தத் தளவியல் சமன்பாடுகள் அனைத்தையும் ஒரே சமயத்தில், ஒன்றை ஒன்று பின்பற்றித் தீர்வு செய்கிறது. மேலும் அந்த மாடல் இதுவரை அறிந்த பூதளப் பெளதிக (Geophysics) விஞ்ஞானத்தை மிகவும் ஒட்டி இருந்தது ‘.

காரி கிளாட்ஸ்மையர் & பால் ராபர்ட்ஸ் (Gary Glatzmaier & Paul Roberts)

முன்னுரை: ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் படகோட்டிகளும், கப்பலோட்டிகளும் தங்கள் செல்லும் திசைகளை அறியக் காந்தக் கருவிகளைப் பயன்படுத்தி பூகாந்தத் தளத்தின் உதவியை நாடி வந்திருக்கிறார்கள். அதற்கும் முன்பே பூமியின் காந்தத் திசை நுகர்ந்து, நெடுந்தூரம் பறக்கும் பறவைகளும், மற்ற காந்தத் திசை நுகர்ச்சி கொண்ட விலங்கினங்களும் உலகில் நெடுங்காலமாய் வாழ்ந்து வருகின்றன! ஆனால் தற்போதுள்ள நோக்குதிசையில் (Orientation) பூகோளத்தின் காந்தத் துருவங்கள் இருப்பது போல், எப்போதும் அவை இருப்பதில்லை. உலோகத் தாதுக்களில் [Minerals] பதிவாகியுள்ள பூமியின் காந்தத்தள நோக்குதிசை கூறுவதென்ன ? வடதுருவம் மாறித் தென்துருவம் ஆனதென்றும், மறுபடியும் தென்துருவம் வடதுருவமாய் மாறிய தென்றும், கடந்த 50 மில்லியன் ஆண்டுகளில் 100 தடவைகள் அவ்விதத் திருப்பங்கள் நேர்ந்துள்ளதாக அறியப்படுகிறது. சென்ற 10 மில்லியன் ஆண்டுகளில், சராசரி மில்லியன் ஆண்டுக்கு 4 அல்லது 5 முறைகள் துருவங்கள் இடம் மாறியுள்ளன என்றும் வேறொரு தகவல் மூலம் அறியப்படுகின்றது. ஆய்வுக்குக் கிடைத்த கடற்தட்டு எரிமலை மாதிரிப் பாறைகளில் பதிவாகி யுள்ள காந்த அமைப்புகள் மூலமாக, பூமியின் துருவ இட மாறுதல்களின் போக்கை அறிந்து கொள்ள முடிகிறது.

1958 இல் அமெரிக்கா முதலில் வெற்றிகரமாக ஏவிய மனிதனற்ற விண்ணுளவுச் சிமிழ் எக்ஸ்புளோரர்-1 [Unmanned Explorer-1 Satellite] பூகோளத்தின் உட்புறக் கதிர்வீச்சு வளையத்தைக் [Earth ‘s Inner Radiation Belt] முதன்முதல் கண்டுபிடித்தது! விண்ணுளவி-1 பூமியின் உட்கருவில் சிக்கி உள்ள கனல் பிழம்பைப் பதிவு செய்தது! வீரிய சக்தியுள்ள அந்தக் கனல் பிழம்பு பரவி யிருக்கும் பகுதிகளே [High Energy Plasma Regions], ‘வான் ஆலன் வளையம் ‘ [Van Allen Belt] என்று அழைக்கப்படுகிறது. கனல் பிழம்புக் கதிர்வீச்சை அளக்கும் கருவியைப் படைத்து, விண்ணுளவி அனுப்பிய தகவலைச் செம்மையாகப் புரிந்து விளக்கிய, ஐயோவா மாநிலப் பல்கலைக் கழகப் பேராசிரியர் வால் ஆலன் பெயரே அதற்குப் பின்னால் அளிக்கப் பட்டது. 1958 முதல் நூற்றுக் கணக்கான விண்ணுளவிகள் பூமியைச் சுற்றிவந்து பூகாந்தக் கோளத்தின் (Earth ‘s Magnetosphere) அனைத்து அரங்குகளையும் உற்று நோக்கி விளக்கம் அனுப்பியுள்ளன. அதுவே விண்வெளிப் பிழம்பு பெளதிக விஞ்ஞானமாக [Space Plasma Physics] புதிய பெயரில் துவக்கப் பட்டிருக்கிறது.

1995 இல் அமெரிக்காவின் லாஸ் அலமாஸ் விஞ்ஞானி காரி கிளாட்ஸ்மையர், லாஸ் ஏஞ்சலஸ் பல்கலைக் கழகத்தின் சக விஞ்ஞானி பால் ராபர்ட்ஸ் இருவரும் சேர்ந்து, பிட்ஸ்பர்க் பூத மின்கணனியைப் (Supercomputer CRAY-C90) பயன்படுத்தி 2000 மணி நேரங்கள் (சுமார் 3 மாதங்கள்) மெய்வருந்தி உழைத்து, பூமியின் உட்கருவில் நிகழும் மின்காந்த, திரவ-வாயு வெப்பக் கொந்தளிப்பு இயக்கங்களின் கணித மாடலைப் [Mathematical Model of The Earth ‘s Electromangnetic, Fluid Dynamic Process] படைத்து, விஞ்ஞான வரலாற்றில் மகத்தான சாதனையைப் புரிந்தார்கள். அந்த அரிய மின்கணனி மாடல் கடந்த 40,000 ஆண்டுகளாக நிகழ்ந்த பூகாந்தக் களத்தின் மாறுதல்களை உளவி ஆராயப் புதிய வழி முறைகளைக் காட்டின. மேலும் அந்த கணித மாடல் முதன்முதல் பூகோளக் காந்த துருவ மாற்றத்திற்குச் செம்மையான விளக்கத்தையும் அளித்தது.

பூகோளக் காந்தத்தின் துருவ இடமாறுதலை அறிவதெப்படி ?

1840 ஆம் ஆண்டு முதல் விஞ்ஞானிகள் பூமியின் காந்தக் களத்தை அளந்து வருகிறார்கள். சில காந்தக் களத்து அளவுகள், 500 ஆண்டுகளுக்கு முன்னால் கிரீன்விச், லண்டனில் செய்ததாக அறியப்படுகின்றன. கடந்த நூறு ஆண்டுகள் எடுத்த காந்தக் களத்து அளவுகளை உளவினால், பூகாந்தம் கீழ்நோக்கிச் தணியும் போக்கே [Downward Trend of Magnetic Field] தெரிகிறது! 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகிய ரோமாபுரிக் களிமண் பானைகளில் உள்ள உலோகத் துணுக்குகளின் காந்த ஆற்றல்களை ஆராயும் போது, இப்போதுள்ள ஆற்றலைவிட இரண்டு மடங்கு மிகையாக இருப்பது அறியப்பட்டது. சென்ற துருவத் திருப்பம் சுமார் 750,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு என்று அறியப்பட்டாலும், கடந்த 50,000 ஆண்டுகளில் இருந்த உச்ச நிலைக் காந்தக் களத்து அளவே தற்போதும் உள்ளதாகக் காணப்படுகிறது.

எவ்வளவு சீக்கிரத்தில் பூகாந்த துருவத் திருப்பம் நிகழலாம் ? எந்த ஒரு யுகத்திலும் ஏற்பட்ட ஒரு துருவ இடமாறுதலுக்கும், விஞ்ஞானிகள் குறிப்பாக விளக்க அறிக்கைகள் திரட்ட முடியவில்லை. அப்படித் துருவ மாறுதல்கள் ஏற்பட்டதாகக் கூறுவது, பெரும்பான்மையாக மின்கணனி மாடல்களைப் படைத்துக் கணித்த விளைவுகள் [Computer Mathematical Models] மூலம்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையாக சான்றுகள் கடற்தட்டுகளில் பதிவாகியுள்ள பூர்வீகக் காந்த நிலைகளை அளந்து கணித்தவைதான். காந்தத் துருவ மாறுதல்களின் போலிக் கணித வடிவுகளை [Mathematical Simulations] அமைத்து ஆராய்ந்த போது, துருவங்கள் முழுத் திருப்பமடைய ஓராயிரம் முதல் பல்லாயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம் என்று அறியப்படுகின்றது.

பூத மின்கணனி மாடல்கள் [Models Run in Supercomputors] மூலம் துருவத் திருப்பமாகும் போது, காந்தக் களத்து மாறுதல்கள் எவ்விதம் வேறுபடும் என்பதற்கு ஓரளவு சான்றுகள் நம்மிடம் உள்ளன. அதன் விளைவில், குறிப்பிட்ட சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வடதென் துருவ அமைப்புள்ள சிக்கலான ஒரு பூகாந்தத் தோற்றம் ஏற்பட வழி யிருக்கிறது! மேலும் தற்போதுள்ள வடதென் துருவ இடங்கள் திரிந்து பூமத்திய ரேகை நோக்கி நகர்ந்து, அதையும் கடந்து செல்லலாம் என்று கருதப்படுகிறது! முழு வலுவுடைய காந்த தள ஆற்றல், தற்போதுள்ள அளவுக்குப் பத்தில் ஒரு பங்கு பின்னமாகக் குறைந்து போகலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த யுகங்களில் நடந்த காந்தமுனைத் துருவமாற்றம்

பூகாந்தத் துருவ அச்சும் (Magnetic Polar Axis), பூமி சுற்றும் அச்சும் (Geographic Rotational Axis) வெவ்வேறாக அமைக்கப்பட்டு, ஒன்றுக்கொன்று சுமார் 11 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. பூமியின் தளத்தில் உள்ள முழுத்துவக் காந்த வலுத்திரட்சி [Overall Magnetic Flux Density] அரை காஸ் [Half Gauss] அளவில் மிகவும் நலிந்தது. காந்த சக்தி உற்பத்திக்கு இருவிதத் தேவைகள் அவசியம்: 1. மின்கடத்தும் உலோகச் சாதனம். 2. வேகச் சுழற்சி. இவ்விரு தேவைகளும் பூமிக்கு அமைந்துள்ளன. பூமியின் உட்கரு இறுகிய உலோகமாதலால், அது சிறந்த மின்கடத்தியாக [Conducts Electricity] இருக்கிறது. உட்கருவில் உலவும் மின்சாரத்தால், பூகோளம் காந்த சக்தியைப் பெறுகிறது. பூமியின் சுழற்சியே மெதுவான ஓட்டத்தை உலோக உட்கருவில் உண்டாக்கி, பூமியைப் பூதகரமான ஜனனியாக [Geodynamo] மாற்றிப் பூகோள காந்தம் தோன்றுகிறது. அத்தகைய நகர்ச்சி உட்கருவின் அரங்குகளில் பெரும் கொந்தளிப்பை [Turbulent] உண்டாக்குவதால், காந்த ஆற்றல் நிலைபெறாமல் இருப்பதுடன், பூகோளத்தில் அங்கு மிங்கும் துருவத்தின் திசையும் அலைகிறது.

கடந்த யுகங்களில் சில சமயம் வடதென் காந்த துருவங்கள் முற்றிலும் இடம்மாறி உள்ளன. கனல் குழம்பு இறுகி [Solidified Magma] ஏற்பட்ட பூமியின் அடித்தட்டுகளில் [Igneous Rocks] பாதுகாக்கப்பட்ட காந்தத் திசைநோக்கின் [Magnetic Orientation] மூலம், பூகோளத் துருவ மாறுதல்களை அறிந்து கொள்ள முடிகிறது. உட்கருவில் திரவ நிலையில் உள்ளபோது, அதிலிருக்கும் இரும்பு தாங்கிய பாறைக் குழம்புகள் பூகாந்தத்தால் நலிந்த காந்தம் பெறுகின்றன. திரவநிலை இறுகி திடப்பாறை ஆகும்போது, அதன் காந்தத் திசைநோக்கு நேரமைப்பு [Magnetic Orientation Alignment] நிரந்தர மாகிறது. கடந்த பல யுகங்களில் மாறிய காந்தப் பாறைகளின் காந்த வலுவை அளந்தும், துருவத்தை அறிந்தும், பூகோள காந்தத்தின் பூர்வீக வரலாற்றுத் தடத்தைப் பின்தொடர முடிகிறது.

சென்ற 50 மில்லியன் ஆண்டுகளில் நாம் வாழும் பூகோளத்தில் 100 முறை வடதென் துருவங்கள் இடம்மாறி, மீண்டும் திரும்பி யுள்ளன (Magnetic Pole Reversals) என்று பூதள விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள். துருவ மாற்றங்களின் திருப்பம் சராசரி 250,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழலாம் என்று கணக்கிடப் பட்டாலும், கடந்த 780,000 ஆண்டுகளாக துருவத் திருப்பம் எதுவும் நிகழ வில்லை என்று கிளாட்ஸமையர் தன் வெளியீட்டில் கூறுகிறார்.

பூகோளக் காந்தக்களம் சூழ்வெளியிலும் மேவுகிறது. அந்தக் காந்தக்களம் சூழ்வெளிக்கு அப்பால் சிறிதளவுப் பிழம்பைப் பற்றி [Trap Small Quantities of Plasma] வைத்துக் கொள்கிறது. பூகாந்தக் கோளம் [Magnetosphere] என்பது என்ன ? காந்தக்களம் ஆட்சி செய்து, பரிதியின் கதிர்வீச்சுக் காற்று [Solar Wind] தாக்குவதைத் தடைசெய்யும் பூதளக் காந்த அரங்குகளே காந்தக் கோளமாகக் கருதப்படுகிறது. காந்தக் கோளத்தின் வடிவம் சுருங்குவதும், நீள்வதும் பரிதியின் கதிர்வீச்சுக் காற்றின் [Solar Wind] எதிர்ப்பு வலுவைப் பொருத்தது. பொதுவாக பூகாந்தக் கோளம் பரிதியை நோக்கும் திசையில் 36,000 மைல் (60,000 கி.மீடர்) தூரமும், பரிதிக்கு எதிர்த் திக்கில் வெகுதூரம் நீட்சியாகி, துணைக்கோள் சந்திரன் சுற்றிவரும் வீதிவரைச் [Lunar Orbit] செல்கிறது! பரிதியின் காற்று பூகாந்த கோளத்தை மோதும் போது வேகம் தளர்ச்சியாகிச் சுற்றித் தொடரும் சமயம், அடுத்து கொந்தளித்து எதிர்ப்புறக் காந்தக் கோடுகளுடன் சேர்ந்து கீழோட்டப் பகுதியில் [Downstream Side] வால்போல் நீட்சியாகிறது.

பூகாந்தத் துருவ மாற்றத்தால் உயிரினங்களுக்கு அபாயம் உள்ளதா ?

ஏறக்குறைய அபாயம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். பரிதியின் கதிர்வீச்சுக் காற்றால் பூகாந்த கோளம் ஒரு கட்டுப்பாடான சூழ்வெளி அரணில் அடக்கப் பட்டுள்ளது. பரிதியின் பெரும்பான்மையான அதிசக்தித் துகள்களை [High Energy Particles] பூகாந்த கோளம் தடை செய்வதுடன், பூமியைத் தவிர்த்து விலகிச் செல்லவும் வகை செய்கிறது! விண்வெளிப் பயணத்தில் போகும் விண்வெளி விமானிகள் பரிதிக் கனல் வீச்சுகள், கனல் துணுக்கு வீச்சுகள் [Solar Flares, Coronal Mass Ejections] ஆகியவற்றின் அபாயக் கதிர் முகில் தாக்கா திருக்கத் தேவையான கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும்.

பூதளத்தில் கனல் வீச்சுகளால் மின்காந்த, மின்சாரத் தகவல் போக்குவரத்துகளில் சீர்கேடுகள் விளையும்! ஆனால் பூமியின் வாயு மண்டலச் சூழ்வெளி, பரிதி, காலக்ஸிகளின் பெரும்பான்மையான கதிர்வீச்சுகளைத் தாங்கிக் கொள்ளும் தடித்த போர்வையாக இருப்பதால், மானிடருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அபாயமில்லை. வாயு மண்டலப் போர்வையானது, கதிர்வீச்சின் போது 13 அடி தடிப்புள்ள காங்கிரீட் சுவருக்குச் சமமான பாதுகாப்புக் கவசத்தை, மனிதருக்கும் விலங்கினத்துக்கும் தருகிறது!

மனித இனங்களும், நிலத்துவ, நீர்த்துறை விலங்கினங்களும், பூகாந்தத் துருவம் மாறிவந்த பல மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. உயிரன விருத்திக்கும் அல்லது கேடான விளைவுக்கும், பூகாந்தத் துருவ மாற்றங்கள் எந்தவித சம்பந்தமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை! மேலும் துருவ மாற்றங்கள் எவ்வித உயிரின அழிவுக்கும் காரணமாக இருந்ததாக, பூதள வரலாறுகளில் அறிவதற்கில்லை!

காந்த துருவத்தில் தோன்றும் விண்ணொளித் தோரணங்கள்

வட துருவத்தில் தோன்றும் விண்ணிற ஒளித் தோரணங்களை [Auroras] அலாஸ்கா, கனடாவின் வட எல்லைப் பகுதிகள், நார்வே, ஸ்வீடன், ஜப்பான் ஆகிய பிரதேசங்களில் வாழ்வோர் அடிக்கடிக் கண்டு களிக்க வாய்ப்புள்ளது! அதுபோல் தென்முனை விண்ணொளித் தோரணங்களை அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, நியூ ஸிலாந்து, தென்னெமரிக்க முனை வாசிகள் காண முடிகிறது. வியப்பான, புதிரான அந்த விண்ணொளி வீச்சுக்கள் பரிதியின் கதிர்வீச்சு [Solar Radiation] விளைவுகளே தவிர வேறொன்றும் இல்லை! பரிதியின் பிழம்புக் கோளத்திலிருந்து, கதிர்க்கனல் வீச்சுகள் [Solar Flares] பாய்ந்து எப்போதாவது விண்ணொளித் தோரணப் புயல்கள் [Auroral Storms] அடித்து நீல நெளிவுகள் அல்லது செந்நிற நாடாக்கள் ஆர்க்டிகா, அண்டார்க்டிகா பிரதேசங்களில் வேடிக்கை காட்டுகின்றன! கதிர்க்கனல் வீச்சுகள் எப்போது எழுகின்றன ? பரிதியின் வடுக்களில் கொந்தளிப்பு [Sunspot Activity] நிகழும் போது, அடிக்கடி கதிர்க்கனல் வீச்சுகள் அண்டக் கோள்களை நோக்கி உமிழப் படுகின்றன!

எப்படி விண்ணொளித் தோரணங்கள் வீசுகின்றன என்று விஞ்ஞானிகள் இப்போது அறிந்து கொண்டிருக்கிறார்கள். டெலிவிஷன் கண்ணாடித் திரையில் எப்படி படங்கள் தெரிகின்றனவோ அதைப் போன்றுதான், விண்ணொளியும் துருவ வானில் ஓவியம் வரைகிறது! மின்சாரக் காந்தங்கள் (Electro Magnets) எலக்டிரான் துகள்களின் ஒளிக்கற்றைக் (Electrons Beam) குவித்து டெலிவிஷன் ஒளிமலர்ச்சித் திரையில் (Flourescent Screen) படம் காட்டுவது போல், பரிதியின் எலக்டிரான், புரோட்டான் பரமாணுக்களை பூகாந்தம் விண்திரையில் குவித்து, விண்ணிற ஒளித் தோரணங்களாய்க் காட்சி கொடுக்கிறது. காந்த தளங்கள் வடமுனை, தென்முனைத் துருவப் பகுதிகளில் புனலில் விழுவது போல் (Magnetic Fields Dip at the Poles) குவிகின்றன.

பரிதியின் கதிர்த் துகள்கள் துருவப் பகுதியில் புனலில் இறங்கும் காந்த தளத்தில் மோதி, சூழ்வெளி வாயுக்களில் கொந்தளிப்பை உண்டாக்குகின்றன. வாயு மண்டலத்தில் கொந்தளிக்கும் அணுக்களே சேர்ந்து விண்ணிற ஒளித் தோரணமாகக் காட்சி தருகிறது. காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்கள் கொந்தளிப்பில் வெளியாகும் போது, செந்நிறத்தையும், பச்சை நிறத்தையும் உமிழ்கின்றன. நைடிரஜன் அணுக்கள் ஊதா, நீலம் அல்லது சிவப்பு நிறத்தைக் காட்டுகின்றன. பரிதியின் கதிர்க்கனலில் வெளிவந்து துருவ காந்த தளத்தில் உட்படும் புரோட்டான் பரமாணுக்கள் நலிந்த மஞ்சள் நிறமும், செந்நிறமும் அளிக்கின்றன. வாடிக்கையாக வீசாத விண்ணொளித் தோரணப் புயல்கள் [Auroral Storms] ஏன் பரிதியின் கதிர்க்கனல் பாய்ச்சலைப் பின் தொடர்கின்றன என்று ஒருவர் கேட்டால், அதற்குப் பதில் இதுதான்: கதிர்க்கனல் தாக்குதல்கள் பரிதிக் காற்றை அதி விரைவுத் துகள்களால் அடர்த்தி செய்கின்றன [Intensify the Solar Wind with High-Velocity Particles].

(தொடரும்)

தகவல்கள்

1. Atlantic: Driving Continents Apart. Pacific The Vanishing Ocean -Reader ‘s Digest Atlas of the World [1992]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

7. This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

8. Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

9. The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

10 Physical Earth By: National Geographic Society [1998]

11 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

12 National Geographic Picture Atlas of our World [1990]

13 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]

14 Geographical Atlas of the World, Tiger Books International [1993]

15 Atlas of the World, Helicon Publication [2001]

16 Magnetic Pole Reversal By: David Cook (Argonne National Laboratory)

17 Magnetic Pole Reversal By: Zue-Starr Livingstone (Nov 22, 2003)

18 Magnetic Pole Reversal By: Xamolxis (Feb 16, 2005)

19 Scientific American, Probing the Geodynamo By: Gary Glatzmaier & Peter Olson (April 2005)

20 The Earth ‘s Magnetism, Exploration of the Universe By: G. Abell, D. Morrison, S. Wolf [1987]

21 Unfolding the Universe By: Iain Nicolson [1999]

22 Magnetic Reversals (www.geomag.bgs.ac.uk/reversals.html)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 13, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா