சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

வந்தியத்தேவன்


‘அடையாளந் தெரியாத ஐந்து கொடிக்கம்ப பாய்மரக் கப்பலொன்று டயமண்ட் ஷோல்ஸில் (Diamond Shoals). பாய்கள் விரித்த நிலையில். அவசரகாலப் படகுகள் காணவில்லை. கப்பலில் எவரும் இருப்பதாய் தெரியவில்லை. கடல் கொந்தளிப்பால் கப்பலை நெருங்க முடியவில்லை. ‘

1921 ஜனவரி 31 ‘ அன்று எலிஸபெத் நகரிலிருந்து, அமெரிக்க கரையோர பாதுகாப்பு தலைமையகத்துக்கு தந்தி வந்தது. நான்கு நாட்கள் கழித்து ஒருவழியாய் அப்பாய்மரக் கப்பலின் கதி தெரிய வந்தது. கப்பலின் பெயர் கேரோல் ஏ. டியரிங் (Carroll A. Deering). தரை தட்டிய கப்பலை கடலைகள் ஆக்ரோஷமாய் தாக்கிக் கொண்டிருந்தன. ‘கடல் கேரலின் கதையை முடித்து விட்டது. இனிமேல் கடற்பயணமே மேற்கொள்ள முடியாதபடி கேரல் சேதமாகிவிட்டது ‘ என்று மீட்கச் சென்ற கேப்டன் ஜேம்ஸ் கார்ல்ஸன் கூறினார். இரண்டு பாய்களைக் காற்று கிழித்த நிலையில் கேரோல் பரிதாபமாய் காட்சியளித்தாள். அவளது நங்கூரங்களைக் காணவில்லை. சமையலறையில் வெந்தும் வேகாத நிலையில் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தன. உயிர் காக்கும் படகுகள் காணவில்லை. சுக்கானோ சுக்கு நூறாக உடைந்து கிடந்தது. அருகே ஒன்பது பவுண்ட் எடையுள்ள பெரிய சம்மட்டி அமைதியாய் கா(சா ?)ட்சியளித்தது. கப்பல் அபாயத்தில் இருப்பதாய் அறிவிக்கும் சிவப்பு விளக்கு ஒரு கொடிமரத்தில் எரிந்து தீர்ந்தபின் அணைந்து போயிருந்தது. கடற்வரைபடம் மேடையொன்றில் இருந்தது. திசை காட்டும் கருவிகள், காலமானி மற்றும் தீர்க்க ரேகையை அறிய உதவும் குரோனோமீட்டர் (Chronometer), கப்பலின் குறிப்புப் புத்தகம் (Ship ‘s Log) போன்றவை மாயமாய் மறைந்துவிட்டிருந்தன.

அதிமுக்கியமாக கப்பலின் காப்டனான வில்லிஸ் வோர்மல் (Willis Wormell) உட்பட 11 மாலுமிகள் கதி என்னவாயிற்றென்று தெரியவில்லை. கப்பலில் எஞ்சியிருந்வை மூன்று பூனைகள் மட்டுமே. அவையும் பசியுடன் மெலிந்து காணப்பட்டன. அப்பூனைகளுக்கு மட்டும் வாயிருந்திருந்தால் கேரோல் பற்றிய உண்மைகளை உலகம் அறிந்திருக்க முடியும். ஆராய்ச்சியாளர்களால் பேய்க்கப்பல் என்று வருணிக்கப்படும் கேரோலில் அப்படி என்னதான் நடந்திருக்கும் ? இக்கப்பலின் கதை பர்முடாஸ் முக்கோண திகிலுக்கு கொஞ்சமும் குறையாதது.

கேரோலின் பிறப்பு

பாத் கரையில் 4/4/1919 அன்று கேரல் கட்டுமானம் முடிந்து கடலுக்கு வந்தது. டியரிங் நிறுவனமானது தனது நிறுவனரின் மகன் பெயரையே இக்கப்பலுக்கு சூட்டி மகிழ்ந்தது. 255 அடி நீளமுள்ள கேரோல் அப்போது ‘மிகச்சிறந்த பாய்மரக் கப்பல் ‘ என்று வருணிக்கப்பட்டது.

19/08/1920 அன்று டியரிங் கப்பல் வில்லியம் எம். மெரிட் தலைமையில் பாஸ்டனிலிருந்து பியூனஸ் ஐயர்ஸ் மற்றும் ரியோடி ஜெனிரோவுக்கு பயணமாகத் தயாரானது. வில்லியம்ஸ் தனது மகனையே முதன்மை அதிகாரியாகவும் நியமித்தார். மேலும் ஒன்பது மாலுமிகளும் கப்பல் குழுவில் நியமிக்கப்பட்டார்கள். அக்குழுவில் ஒருவரான டென்மார்க்கைச் சேர்ந்த பீட்டர் சோரன்ஸன் என்பவர் தனது குடும்பத்திற்கு கடற்பயணம் குறித்து கடிதமும் எழுதினார். ஒருவழியாய் ஆகஸ்ட் இறுதியில் கேரோல் தனது பயணத்தைத் தொடங்கியது. துரதிருஷ்டவசமாக கேப்டன் வில்லியம் கடுமையான நோய்க்கு ஆட்பட்டார். அதனால் அவரும், அவரது மகனும் பயணத்திலிருந்து விலகிக் கொண்டனர்.

டியரிங் நிறுவனம் கேப்டன் வில்லிஸ் டி. வோர்மல் (Willlis T. Wormell ) என்ற ஓய்வு பெற்ற அதிகாரியை தலைமைப் பதவியில் நியமித்தது. அறுபத்தியாறு வயதான வில்லிஸ் கடற்பயணத்தில் அனுபவசாலி மட்டுமல்ல; மிகவும் நம்பகமான அதிகாரியும் கூட. சார்லஸ் பி. மெக்லெல்லன் (Charles B. MeLellan) என்பவர் வில்லிஸுக்கு முதன்மை அதிகாரியாக அறிவிக்கப்பட்டார். ஒருவழியாக நிலக்கரியை ஏற்றிக் கொண்டு 8/9/1920 அன்று ரியோவிற்கு கேரோல் புறப்பட்டது.

ஒருவழியாய் கப்பல் நவம்பர் இறுதியில் ரியோ வந்து சேர்ந்தது. நிலக்கரியை இறக்கியபின் கப்பற்குழுவிற்கு லிபர்டி எனப்படும் கரையை சுற்றும் வாய்ப்பும் தரப்பட்டது. கேப்டன் வோர்மல் தனது முன்னாள் நண்பரான கேப்டன் குட்வினை சந்திக்கும் அரிய வாய்ப்பும் கிட்டியது. அப்போது தனது தோழருடன் அந்தரங்கமாய் அளவளாவும்போது தனது முதன்மை அதிகாரியான மெக்லெல்லன் மீது தனது கடும் அதிருப்தியை தெரிவித்தார். ஆனால் கப்பல் இஞ்சினியனரான பேட்ஸ் மீது தனக்கிருக்கும் அதீத நம்பிக்கையை தெரிவிக்கவும் அவர் தவறவில்லை.

டிசம்பர் இரண்டாம் தேதியன்று கேரோல் ரியோவிலிருந்து தனது தாயக கரையான போர்ட்லாந்து நோக்கி புறப்பட்டது. வழியில் பார்படோஸில் பயணப் பொருட்களை வாங்குவதற்காக நங்கூரமிட்டது. அப்போது லிபர்ர்டியில் வெளியே சென்ற மெக்லெல்லன் நன்றாக குடித்துவிட்டு கலாட்டா செய்தமையால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். வோர்மல் தன்னால் முடிந்தவரை அவர்களை சமாதானம் செய்து மெக்லெல்லனை சிறையிலிருந்து மீட்டு வந்தார். அப்போது இருவருக்கும் ஒரு பெரிய வாக்குவாதம் நடந்ததாகவும், அப்போது மெக்லெல்லன் வோர்மலை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் நம்பப்படுகின்றது. கமாண்டிங் ஆபீஸரை இவ்வாறு மிரட்டியதற்கு மெக்லெல்லன் கடுமையான தண்டனை பெற்றிருக்கலாம். ஆனால் வோர்மலுக்கு அதற்கான நேரம் கிட்டவில்லை. போர்ட்லாந்து சென்றடைந்தால் போதுமென்று வோர்மல் நினைத்தார்.

ஜனவரி 29 ‘ம் தேதியன்று வடக்கு கரோலினா மாநிலமருகே ரோந்துக் கப்பலொன்று டியரிங்கைக் கடந்தது. அக்கப்பலின் கேப்டனான தாமஸ் ஜேகப்ஸனை, டியரிங் கப்பலிலிருந்த ஒருவன் சப்தாமாக விளித்தான். ஒல்லியாக, உயரமாக, சிவப்பு நிற முடியுடன் குவார்ட்டர்டெக் (Quarterdeck) எனப்படும் கப்பலின் நுழைவாயிலில் நின்று கூவியவன் ஒரு அதிகாரி போல் தெரியவில்லை. மேலும் டியரிங் கப்பல் குழு முழுதும் குவார்ட்டர்டெக்கில் நின்றது போல் ஜேகப்ஸனுக்கு தோன்றியது வியப்பையளித்தது. ‘டியரிங் கப்பலின் நங்கூரம் மூழ்கிவிட்டது. இதை டியரிங் கம்பெனிக்கு தெரியப்படுத்துங்கள் ‘, என்பதே ஜேகப்ஸனுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் சாரம்சம்.

அப்போது ரோந்துக்கப்பலின் ரேடியோ பழுதாகிவிட்டிருந்தமையால் ஜேகப்ஸன் தன்னைக் கடந்த ஒரு வேறொரு நீராவிக்கப்பலை நிறுத்தும்படி சமிஞ்கை செய்தார். அக்கப்பலின் பெயர் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது. ஜேகப்ஸன் ஏன் அக்கப்பலை பின்தொடரவில்லையென்பது தெரியவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து டியரிங் கப்பல் டயமண்ட் ஷோல்ஸில் தரைதட்டியிருந்தது. குழுவினரோ மாயமாய் மறைந்துவிட்டிருந்தனர். கப்பலை கரைக்கு இழுத்து வந்தாலும் மீண்டும் கடற்பயணம் செய்ய முடியாத அளவிற்கு சேதாரம் அதிகமாகிவிட்டிருந்தமையால் அங்கேயே கைவிடப்பட்டது. மார்ச் 4 ‘ம் தேதி 1921 அன்று வெடிகுண்டுகள் வைத்து டியரிங் தகர்க்கப்பட்டது. அக்கப்பலோடு அதன் மர்மங்களும் புதைந்தன.

அமெரிக்காவின் ஐந்து வெவ்வேறு துறையினர் டியரிங் கப்பலைப் பற்றி தமது தனிப்பட்ட விசாரணைகளைத் துவக்கினர். வர்த்தக அமைச்சரான ஹெர்பர்ட் ஹூவர் (Herbert Hoover) இவ்விசாரணையில் தீவிர ஆர்வம் செலுத்தினார். டியரிங் காணமல் போன காலகட்டத்தில் மேலும் ஒன்பது கப்பல்கள் அதே இடத்தைச் சுற்றி தொலைந்து விட்டிருந்தன. ஹீவிட் (Hewitt) என்ற சரக்குக் கப்பல் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து போர்ட்லாந்திற்கு சல்பர் ஏற்றி வரும்போது 42 பேருடன் காணாமல் போனது. கடைசியாக அக்கப்பலிடமிருந்து 25 ஜனவரிக்கு தகவல் பரிமாற்றம் நடந்தது. மேலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு சொந்தமான கப்பல்கள் அட்லாண்டிக் கடலைக் கடந்து ஐரோப்பா கண்டம் அடையும் போது காணாமல் போயின. ஒட்டாவா (Ottawa) என்ற எரிபொருள் சுமந்த கப்பல் நோர்போல்க்கிலிருந்து இங்கிலாந்தை நோக்கி வருகையில் 33 குழுவினருடன் தொலைந்து போனது. மேலும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 5 கப்பல்கள் போன இடம் தெரியவில்லை.

ஹூவரின் வலதுகரமான லாரன்ஸ் ரிச்சி (Lawrence Richey) என்பவர் இது குறித்து விசாரணையைத் தொடங்கினார். ரிச்சி முதலில் டியரிங் மற்றும் அதனைப் பார்த்த ரோந்துக் கப்பல்களின் குறிப்புப் புத்தகங்களை ஆராய முற்பட்டார். இதன்மூலம் டியரிங் கப்பலுக்கு நேர்ந்ததை துல்லியமாக கணிக்க முடியுமென்று திண்ணமாக நம்பினார். ரோந்துக் கப்பலின் கேப்டன் ஜேகப்ஸன் தனது குறிப்புப்புத்தகத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விலாவாரியாக விவரித்திருந்தார். ஜேகப்ஸனின் விசில் சமிஞ்கைக்கு நிற்காமல் போன பெயர் மறைக்கப்பட்ட நீராவிக்கப்பல் யாதென்ற கேள்வி ரிச்சியைக் குடைந்தது. சட்டவிரோதமாக சாராயம் கடத்தும் கப்பலாக இருக்கலாமென்பது ஒரு யூகம். நிறுத்தினால் மாட்டிக் கொள்வோமென்ற அச்சத்தால் ஓடியிருக்கலாம். இந்த மாயக்கப்பல் சிறிது தூரத்தில் முன்னே சென்று கொண்டிருந்த டியரிங்கைப் பார்த்திருக்கலாம். டியரிங் குழுவினர் உதவி வேண்டி மாயக்கப்பலை நோக்கி கூவியிருக்கலாம். எங்கே போட்டுக் கொடுத்து விடுவார்களோவென்ற அச்சத்தில் அப்போது அக்கப்பலின் குழுவினரை மாயக்கப்பல் ஆட்களால் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம். இதுவும் ஒருவகை அனுமானமே.

அம்மாயக்கப்பல் ஹீவிட்டாக இருக்கலாமென்பது இன்னொரு யூகம். ஏனெனில் கிடைத்த தகவல்களின்படி அச்சமயத்தில் டியரிங்கிற்கு அருகே ஹீவிட் மட்டும்தான் இருந்திருக்க முடியும். அப்படியானால் ஹீவிட் ஏன் நிற்கவில்லை ? ஜேகப்ஸன் ஏன் தனது குறிப்புப் புத்தகத்தில் ஹீவிட்டைப் பற்றி பதியவில்லை ? புதிர் மேலும் இறுகியது. 1921, ஜீன் 23 ‘ம் தேதி நியூயார்க் டைம்ஸ் நாளேடு மறைந்த கலங்களை தனது தலைப்புச் செய்தியாக்கியது. ‘மறைந்த கப்பல்களின் மர்மம் விலகாது, அதிகாரிகள் கலக்கம் ‘. ஒருவேளை இவை கடற்கொள்ளையரின் கைவரிசையாக இருக்குமோவென்ற ஐயப்பாடும் எழுந்தது. மறைந்த கப்பல்களை ரஷ்யர்களின் கைங்கர்யமென்று ஆதாரமின்றி ஏசிய காலமது. ஏனெனில் மறைந்த கப்பல்களின் சரக்குகளை வெளிப்படையாக இறக்குமதி செய்ய ரஷ்யாவின் செஞ்சட்டை சகோதரர்கள் தடை விதித்திருந்தார்கள். ரஷ்யாவின் துறைமுகங்களின் பெயர் மறைக்கப்பட்ட கலங்கள் இருப்பதாக வதந்திகளும் பரவின.

எந்நாட்டையும் சேராத கடற்கொள்ளையர்கள் நீர்மூழ்கி

வழியே வந்து அட்டகாசம் செய்வதாக மற்றொரு வதந்தி இறக்கை கட்டி பறந்தது. நெருப்பில்லாமல் புகையுமா ? கிரிஸ்டோபர் கொலம்பஸ் கிரே (Christopher Columbus Gray) என்பவர் ஏப்ரல் மாதம் 11 ‘ம் தேதியன்று வடக்கு கரோலினா மாநிலத்திலுள்ள பக்ஸ்டன் கடற்கரையில் ஒரு பாட்டிலை கண்டுபிடித்தார். அப்பாட்டிலினுள்ளே ஒரு குறிப்பு காணப்பட்டது. அதில் காணப்பட்ட செய்தி: ‘டியரிங் கப்பல் மற்றொரு விசைக் கப்பலால் துரத்திப் பிடிக்கப்பட்டது. குழுவினரை சிறைப்படுத்தி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. யாரும் தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை. டியரிங் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துங்கள். ‘

வோர்மலின் மகளான லூலா வோர்மல் தனிப்பட்ட முறையில் தனது விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார். கிரே பாட்டிலில் கண்டெடுத்த குறிப்பின் நகலை கையெழுத்து நிபுணர்களிடம் கொடுத்து ஆராயச் சொன்னார். குறிப்பிலிருந்த கையெழுத்து டியரிங் கப்பலில் இஞ்சினியரான ஹெர்பர்ட் பேட்ஸின் கையெழுத்தைப் போன்றே இருந்தது. பேட்ஸ் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களிலிருந்து கையெழுத்து ஒப்பு நோக்கப்பட்டது. பாட்டிலில் கிடைத்தது தனது தந்தையின் நம்பகத்துக்குறிய பேட்ஸ் எழுதிய குறிப்பாகவே லூலா நம்பினார். இது குறித்து மேலும் அறிய தனது பாதிரியாரான டாக்டர். ஆடிசன் லோரிமரை (Rev. Dr. Addison B. Lorimer) அணுகினார்.

மர்ம பாட்டிலும், அதனுள்ளே இருந்த குறிப்பும் லோரிமர் மூலம் விசாரணை செய்யும் அமெரிக்க அதிகாரியான ரிச்சிக்கு அனுப்பப்பட்டது. அப்பாட்டில் பிரத்தியேகமாக ரியோ-டி ஜெனிரோவில் தயாரிக்கப்படும் தகவல் ‘விசைப்படகு கொள்ளையர் ‘ யூகத்திற்கு மேலும் நம்பகத்தன்மையூட்டியது. பாட்டிலும், அதன் குறிப்பும் சூழ்நிலை ஆதாரங்களாக (Circumstantial Evidences) கருதப்பட்டன.

ரிச்சியின் விசாரணை

கிரேயின் பாட்டில் குறிப்பைத் தவிர வேறெந்த துப்புகளும் ரிச்சிக்கு உதவியாயில்லை. கப்பல்களை இழந்த மற்ற நாடுகளோ ரிச்சிக்கு மண்டையிடி கொடுக்க ஆரம்பித்தன. குறிப்பாக இத்தாலி கொடுத்த குடைச்சல் சொல்லி மாளாது. டியரிங்கை விட்டுவிட்டு இத்தாலி கப்பலைப் பற்றி ரிச்சி விசாரிக்க ஆரம்பித்தார். பிப்ரவரி மாதம் 1921 ‘ம் ஆண்டு அட்லாண்டிக் மாக்கடலில் பெரும் சூறாவளி உருவானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முன்னெச்சரிக்கை செய்யும் வித்தையை மனிதன் கற்றிருக்கவில்லை. இச்சூறாவளியை ஜூலை மாதம்தான் நடந்ததாய் உணர்ந்தார்கள். ஹூவிட், டியரிங் தவிர தொலைந்த மற்ற கப்பல்கள் அனைத்தும் இச்சூறாவளியின் மையம் நோக்கி பயணித்தமையால் கடற்கொந்தளிப்பால் மூழ்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே ‘விசைப்படகு/நீர்மூழ்கி கடற்கொள்ளையரின் அட்டகாசம் ‘ கொள்கை வலுவிழந்தது. ஹூவிட் கதி என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் டியரிங் தரைதட்டி காட்சியளித்ததே ? சூறாவளியில் சிக்கவில்லை. நங்கூரமில்லை. குழுவினரில்லை. அப்படியென்றால் கப்பலினுள்ளே உள்கலகம் (Mutiny) நடந்திருக்கலாமோ ?

ரிச்சியின் விசாரணையில் ஆகஸ்ட் மாதம் முக்கிய திருப்பமொன்று நிகழ்ந்தது. பாட்டிலும், அதன் குறிப்பும் போலியானதென்று கிரே அமெரிக்க உளவாளியிடம் கூறிவிட்டு பக்ஸ்டனிலிருந்து தப்பியோடிவிட்டார். கிரே ஏனிப்படி செய்தார் ? துறைமுக வேலையொன்று கிடைக்குமென்று நம்பி இம்மோசடியை துணிந்து செய்தார். ‘வாங்க வேலை கொடுக்கின்றோம் ‘, என்று ரிச்சி மறைமுகமாய் கிரேவிற்கு தெரியப்படுத்தினார். வேலையை ஏற்க வந்த கிரேயை கைது செய்து கம்பியெண்ண வைத்தார் ரிச்சி.

சூறாவளியால் மற்ற கலங்கள் மறைந்தன. பாட்டிலும், குறிப்பும் போலியானவை. எனவே மர்ம கொள்ளையர் கதையும் பணாலாகியது. அப்படியென்றால் டியரிங்கில் என்னதான் நடந்திருக்கும் ? இந்நூலைப் பிடித்து ரிச்சி விசாரணையைத் தொடர்ந்தார்.

ஹூவிட் மற்றும் டியரிங் கப்பல்களில் வேலை பார்த்த குழுவினரின் அங்க அடையாளங்களை பல்வேறு நாடுகளில் கடற்கரையிலமைந்த தனது தூதரகங்களுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. தொலைந்த கப்பல்கள் பற்றி மக்கள் மறந்துவிட்டிருந்தாலும் அமெரிக்கா தனது விசாரணையை நிறுத்தவில்லை. என்னதானிருந்தாலும் தொலைந்தது தனது கலங்களல்லவா ?

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து வில்பர் கார் (Wilbur J. Carr) என்பவர் தூதரகங்களுக்கு அனுப்பிய ‘மர்மமான முறையில் மறைந்த அமெரிக்க கலங்கள் ‘ என்ற தலைப்பிட்ட சுற்றறிக்கையில் அறிவித்ததாவது: ‘….சந்தேகப்படும் நபர்களை கவனத்தில் கொண்டு விசா மறுதளிக்கவும். உடனடியாக பாதுகாப்புத்துறையை தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கவும்…. ‘

போர்ச்சுகலிலிருந்து முதல் பதில் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு வந்தது. மார்டின்ஸ் என்ற பெயரில் ஹீவிட் குழுவிலிருந்தவன் சாயலில், ஸ்காட்லாந்து பாஸ்போர்ட்டில் ரியோடிஜெனிரோ செல்லும் ‘வெஸ்ட் மாக்ஸிமஸ் ‘ சமையல் ஆளாய் பயணிக்கின்றான். ஆனால் இந்த மார்டின்ஸ் வேறு. ஹூவிட்டில் இருந்தவனில்லை.

அதேபோல் டியரிங்கில் பணிபுரிந்த H.C. ஜென்ஸன் மற்றும் பீட்டர் நீல்ஸன் என்னும் மாலுமிகள் டெக்ஸாஸ் மாநில கடற்கரையில் வரவிருப்பதாக செய்தி வந்தது. FBI அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். ஹீவிட் மற்றும் டியரிங் கப்பல்களின் மர்மங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் இவ்விரு மாலுமிகளின் இருப்பிடம் பற்றிய அவர்கள் அளித்த செய்தியினை FBI அதிகாரிகள் டென்மார்க் நாட்டிடமிருந்து உடனடியாக ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இவர்கள் உண்மையிலேயே டியரிங் கப்பலில் பணி புரிந்து மாயமாய் மறைந்தவர்களா ? தெரியவில்லை.

12 ஜீலை 1921 அன்று துருக்கி தூதரகத்திலிருந்து வந்த தந்தி, ஹூவிட்டில் பயணம் செய்ததாய் கருதப்படும் ரைய்னி என்பவன் கிரேக்க கப்பலான மெகாலி ஹெல்லாஸ் மூலம் நியூயார்க் வருகின்றானென்று தெரிவித்தது. இவன்தான் ஹூவிட் பயணப்பட்டியலில் இருந்த B.O. ரெய்னியா ? ஆமாம் அவனேதான். நியூயார்க்கில் கிரேக்க கப்பல் வந்தடைந்ததும் இதை ரைனியிடமே FBI உறுதிப்படுத்திக் கொண்டது. ஆனால் என்னவொரு துரதிருஷ்டம்! ஹூவிட் பயணம் செய்யும் 20 நிமிடத்திற்கு முன்னர் ரைனி உபாதை காரணம் காட்டி கப்பலிலிருந்து விலகிக் கொண்டான். ஹூவிட் கப்பல் மறைந்த மர்மம் இன்னும் விலகவில்லை.

ரோந்துக்கப்பலில் ஜேகப்ஸனோடு பேசியதாக அறியப்படும் டியரிங் கப்பலின் பின்லாந்தைச் சேர்ந்த செந்நிற முடியோன் ஜான் பிரெடரிக்ஸனோ, எஞ்சினியரான பேட்ஸைப் பற்றியோ தகவல்களேதுவும் அமெரிக்காவிற்கு கிட்டவில்லை. ஆனால் கலகக்காரனென நம்பப்படும் மெக்லெல்லன் பெயர் டியரிங் தரை தட்டிய ஒரு மாத காலத்திற்குப் பின்பு கிட்டியது.

சிரில் மெக்லெல்லன் (டியரிங் கலகக்காரன் பெயர் சார்லஸ் மெக்லெல்லன் இரண்டுமே ‘C ‘ல் தொடங்குபவை) என்பவன் மாலுமி நிபுணத்துவத்தில் தேர்ச்சி பெற்றதாக 20 மார்ச் 1921 ‘ல் போர்ட்லாந்து நீராவி ஆய்வாளர் கழகத்தால் பட்டம் அளிக்கப்பட்டான். யாரிந்த சிரில் மெக்கெக்கன் என்று அமெரிக்காவின் நீதித்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் அவனது முகவரி மாலுமிகளின் சங்கத்தைச் சேர்ந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது. சிரில் மெக்லெல்லன் இப்போது எங்கே ? அவன்தான் சார்லஸ் மெக்லெல்லனா ? இன்றும் இது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

மேற்கண்ட தகவல்களை வைத்து டியரிங்கில் என்ன நடந்திருக்கலாமென்று ஒத்துக் கொள்ளக்கூடிய யூகமொன்று தெரிவிக்கப்படுகின்றது. மெக்லெல்லன் ரோமலைக் கொன்றிருக்க வேண்டும். பின்னர் எஞ்சினீயரான பேட்ஸை சிறை செய்திருக்க வேண்டும். பிரெடரிக்ஸன் நுழைத்தளத்திலிருந்து ரோந்துக்கப்பலை விளித்தது இதை உறுதிப்படுத்துகின்றது. ஏனெனில் ரோமல், பேட்ஸ், மெக்லெல்லனுக்கு அடுத்த அதிகாரி பிரெடரிக்ஸன்தான்.

கப்பலின் பயண வழித்தடம் 23 ஜனவரிவரை (டியர்ங் தரையைத் தட்ட 8 நாட்களுக்கு முன்பு வரை) ரோமலால் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் 80 மைல் தொலைவுள்ள டயமண்ட் ஷோலில் டியரிங் முட்டி நின்றது. கப்பலின் பாய்களனைத்தும் விரிக்கப்பட்ட நிலையில் 80 மைல் தொலைவை அக்கப்பல் வெகுசீக்கிரம் எட்டியிருக்க வேண்டும். இவ்வளவு காலதாமதத்திற்கு காரணமென்ன ? இக்காலகட்டத்தில்தான் வோர்மல் கொல்லப்பட்டிருக்க வேண்டும். கைப்பற்றப்பட்ட டியரிங் பயண வரைபடத்தில் 23 ஜனவரிக்குப் பிறகு வேறொருவரின் கையெழுத்திருப்பது இதை உறுதி செய்கின்றது. அப்படியென்றால் கலகக்காரன் எட்டு தினங்களில் என்ன செய்திருப்பான் ? அடுத்த நடவடிக்கைள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தானா ? தனியொருவனாய் அவனால் மிஞ்சிய குழுவைக் கட்டுப்படுத்த முடிந்திருக்குமா ? அவனுக்கு துணையாய் மற்றவரும் இருந்திருப்பாரா ?

வோர்மலைக் கொன்றபின் எஞ்சியோரை துப்பாக்கி முனையில் மெக்லெல்லன் நுழைவாயிலில் பிணைத்திருக்கலாம். அதைத்தான் ரோந்துக் கப்பலிலிருந்து ஜேகப்ஸன் பார்த்து வியந்திருக்கலாம். ஏனெனில் கப்பலின் நுழைவாயில் தளத்தில் பொதுவாக அதிகாரிகளே தென்படுவர்.

டியரிங் பற்றி லேக் ஈலோன் என்ற கப்பலில் இருந்து வந்த செய்தி மேற்சொன்ன யூகத்திற்கு வலுவூட்டியது. ‘டியரிங் கப்பல் தவறான பாதையில் செல்வது போல் தான் கருதுவதாக ‘ அக்கப்பலின் கேப்டன் தகவலனுப்பியிருந்தார். ரோமலைக் கொன்றபின் பேட்ஸ், மெக்லெல்லனை எதிர்த்துப் போராடியிருக்கலாம். அதனால் அதீத காயமும் அடைந்திருக்கலாம். கலகத்துக்குண்டான காரணத்தையோ, அதன் பின் விளைவுகளையோ மெக்லென்னன் மற்றும் சக குழுவினரால் சட்டத்தின் முன் நியாயப்படுத்த முடிந்திருக்காது. டியரிங் குறித்தபடி போர்ட்லாந்து கரையை அடைந்தபின் மெக்லெல்லனும் அவனுக்கு உதவியவர்களும் அதற்குண்டான தண்டனையை அடைந்தே தீருவார்கள். அதனால் எஞ்சிய குழுவினர் அவசரகால படகுகள் மூலம் முன்னரே தப்பித்திருக்கக் கூடும். பின்னர் டயமண்ட் ஷோலில் டியரிங்கை தரை தட்ட வைத்து மெக்லெல்லன் அதே முறையில் தப்பியிருக்கலாம். அப்போதுதான் லேக் ஈலோனின் கேப்டன் டியரிங்கை பார்த்திருக்க வேண்டும். கடைசியாக மெக்லெல்லன் டியரிங்கை விட்டு தப்பிச் செல்லுமுன் கப்பலின் சுக்கானை ஒன்பது பவுண்ட் சம்மட்டியால் அடித்து நொறுக்கியிருக்கக்கூடும். தப்பிப் பிழைத்த அனைவரும் புதிய பெயரில் உலகில் உலா வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இன்றும் வடக்கு கரோலினா மாநில கடற்கரையில் பேய்க்கப்பல் என்றழைக்கப்படும் டியரிங்கின் எஞ்சிய பிண்டங்கள் இறைந்து கிடக்கின்றன. தமது மர்மங்களை எடுத்துக் கூறாது ‘உன்னால் இம்முடிச்சை அவிழ்க்க முடியுமா ‘ என்ற அப்பிண்டங்களின் சவால் காற்றோடு கலந்து ஒலிக்கின்றது.

t_sambandam@yahoo.com

http://vanthiyathevan.blogspot.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்