இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும்

This entry is part of 57 in the series 20050106_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


சுனாமி வரும் பின்னே! சுருதியோலம் வரும் முன்னே!

பூகம்ப உடுக்கடித்துக் கடல்மடியில்

பொங்கும் அலைப் பாம்புகள் நெளிந்து

நாகப் படமெடுத்து நரபலிகள் நேருமுன்

நடுக்கத்தின் அதிர்வு நல்கும் எச்சரிக்கை!

‘சுனாமி எச்சரிக்கை அனுப்பச் சீரான, விரைவான ஒலிபரப்புச் சாதனத் துணை ஏற்பாடுகள், பயிற்சி முறைபாடுகள் நாடெங்கும் நிலவப்படாமல், ஏராளமான நிதியைச் செலவழித்து நவ நாகரீகக் கருவிகளும், புதுவித அதிர்வு உளவுக் கண்காணிப்புகளும் நிறுவகம் செய்வதில் ஏது பயனுமில்லை! அவ்வித ஏற்பாடுகளை ஒரு நாட்டில் அமைப்பது மாபெரும் ஒழுக்க வேலையாகும். சுனாமி வருகையை அறிவித்தால், கடற்கரைப் பகுதியில் திரியும் ஒவ்வொரு தனிநபர் காதிலும் பலமாகத் தெளிவாக அரவம் ஒலிக்க வேண்டும். அதுதான் மெய்யாக மிகக் கடினமானது. ‘

‘இந்து மாக்கடல் அரங்கு அனைத்திலும் சுனாமி எச்சரிக்கை செய்ய சுமார் 30 நிலநடுக்க வரைமானிகளும் [Seismographs], 10 அலை உயர அளப்புக் கருவிகளும் [Tidal Gauges], 6 சுனாமி உளவுச் சமிக்கை அனுப்பும் ஆழ்கடல் மிதப்பிகள் [Deep Ocean Assessment & Reporting of Tsunamis (DART) Buoys] தேவைப்படும். ‘

பிரதம விஞ்ஞானி பிலிப்ஸ் மெக்ஃபாடன் [இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பாளர், பூதளவியல் கூடம், ஆஸ்திரேலியா]

‘பசிபிக் மாக்கடல் அரங்கில் 1965 ஆண்டுமுதல் 26 கடற்தள நாடுகள் ஏற்கனவே இணைப்பாகி சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு ஏற்பாடு அமைக்கப்பட்டுத் தேசீயக் கடற் சூழ்வெளி உளவு ஆணையகத்தின் [National Oceanic & Atmospheric Administration (NOAA)] மேற்பார்வையில் சீராகப் பணியாற்றி வருகிறது. அதே ஏற்பாடு இந்து மாக்கடல் அரங்குக்கும் விரிவு செய்யப்பட்டு அதன் கடற்தள நாடுகள் இணைக்கப் பட்டால், உலகக் கடல்நாடுகள் அனைத்துக்கும் ஒரே அறிவிப்பகம் கண்காணிப்பு செய்யலாம். ‘

அதிபதி கொன்ராடு லாடன்பேக்கர் [இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு, பூதளவியல் கூடம், ஆஸ்திரேலியா]

‘பசிபிக் மாக்கடல் அரங்கு சுனாமி எச்சரிக்கை அனுபவங்களையும், பொறிநுணுக்கங்களையும் இந்து மாக்கடல் நாடுகளுடன் பகிர்ந்து கொண்டு, அங்கேயும் ஒரு நிலையம் அமைத்திட நாங்கள் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். ‘

கொய்ச்சிரோ மட்சூரா [Koichiro Matsuura, Director UNESCO]

முன்னுரை: பொதுவாக ‘சுனாமி ‘ என்னும் ஜப்பானியச் சொல்லுக்கு நிலவு, பரிதி ஆகியவற்றின் ஈர்ப்பாற்றலில் ஏற்படும் [Tidal Waves] பொங்கலைகள் என்று பலர் தவறாக அர்த்தம் செய்து கொள்கிறார்கள். பூகம்ப அலைகளான சுனாமிச் சுவரலைகள் சாதாரணப் பொங்கலைகள் அல்ல. அடிக்கடி தோன்றாமல் அபூர்வமாக எழும் இம்மதில் அலைகள் கடல்மடியின் அடித்தளப் பூமியில் உண்டாகும் பூகம்பம், எரிமலை அல்லது கடலில் விழும் பெரும் நிலச்சரிவு ஏதாவது ஒன்றால் உற்பத்தியாகி, கரை ஓரப் பிரதேசங்களில் பேரழிவுகளையும், மாந்தருக்குக் கோர மரணத்தையும் உண்டாக்க வல்லவை! வெகு வெகு அபூர்வமாக அண்ட வெளியிலிருந்து புவிநோக்கி வரும் விண்கல் [Meteorite] ஒன்று கடலில் விழுந்தால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு, கற்பனை செய்ய முடியாத ஒரு பிரளயமாகத்தான் இருக்கும்! 1964 இல் அலாஸ்காவின் பிரின்ஸ் வில்லியம் செளண்டு [Prince William Sound, Alaska] என்னும் தெற்குக் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் எழுந்த சுனாமிச் சுவரலைகள், அமெரிக்காவில் 90 மில்லியன் டாலர் நிதிச் செலவு விரையம் செய்து, நல்ல வேளையாக 119 பேர் மாண்டனர்! ஆனால் இந்து மாக்கடலில் 2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி 12 நாடுகளின் கரை ஓரங்களைத் தகர்த்து 150,000 பேர் மாண்டதுடன், பிழைத்த 5 மில்லியன் மாந்தர் குடிநீரின்றி, உணவின்றி, குடிலின்றி அனாதைகளாய் ஆக்கப்பட்டுப் பிறர் உதவியை அனுதினமும் எதிர்பார்த்துக் கிடைத்தும், கிடைக்காமலும் பேரின்னலில் அலைமோதி வருகிறார்கள். இறந்து போன, காயம்பட்ட அல்லது அனாதையான மொத்தக் குழந்தைகள் 1.5 மில்லியன் என்று அனுமானிக்கப் படுகிறது!

சுமாத்திர தீவுக்கருகில் 9.0 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டதை 8 நிமிடங்களில் கண்டுபிடித்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பகம் முதலில் இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கபூர் உள்பட பசிபிக் கடலரங்கு நாடுகளுக்கு 15 நிமிடங்களுக்குள் அறிவித்தது! இந்த அறிவிப்புக் கூட்டணியில் இந்தியா, இலங்கை, மால்டிவ் தீவுகள் உறுப்பின நாடுகளாக இல்லாவிட்டாலும், பசிபிக் அறிவிப்பகம் நிலநடுக்கம் பற்றியும், அது சுனாமியாக உருவாகலாம் என்றும் தெரிவித்திருக்கிறது! இந்து மாக்கடல் அரங்கு நாடுகளில் அபாய அறிவிப்பு, மற்றும் காப்பு முறைகள் எவையும் அமைக்கப் படாததால், கரைப் பகுதிகளுக்கு முன் அறிவிப்பு செய்ய முடியாமல், ஆயிரக் கணக்கான மக்களை, குழந்தைகளைக் கால தேவனுக்குப் பலியிட நேரிட்டது! எச்சரிக்கை கிடைத்த இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் கரைப் பகுதி மாந்தருக்கு ஏன் முன்னறிவிப்பு செய்து பாதுகாக்க முயலவில்லை என்பது வியப்பாக இருக்கிறது!

இந்து மாக்கடல் அரங்கில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு ஏற்பாடுகளை நிறுவ, 2005 ஆண்டு நாணய மதிப்பில் சுமார் 2 மில்லியன் டாலர் செலவாகலாம் என்று ஒரு விஞ்ஞானி மதிப்பிடுகிறார். இந்த நிதி மிகையான தொகையாக அச்சமூட்டினாலும், இப்போது உலக நாடுகள் திரட்டியுள்ள உதவி நிதி 4 பில்லியனைத் தாண்டி [ஜனவரி 5, 2005] இன்னும் குவிந்து கொண்டுள்ளது! ஏதுமற்ற அனாதைகளான 5 மில்லியன் சுனாமிப் பாதிப்பு மக்கள், புதுக் குடியேற்றத்தில் புகுந்து ஊதிய வசதிகளை மீண்டும் பெறுவதற்குப் பல பில்லியன் கணக்கில் நிதிவளம் தேவைப்படும் போது, வருமுன் காக்கும் எச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு 2 மில்லியன் டாலர் செலவழிப்பது இந்து மாக்கடல் நாடுகளுக்கு வீண் என்று விலக்குவது தவறானது. மீண்டும் இத்தகையக் கோர மரணங்களும், இன்னல்களும் நேரக் கூடாது என்னும் தீர்மானத்தில் இந்தோனேசியா, இந்தியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் இந்து மாக்கடல் அரங்கு சுனாமி எச்சரிக்கை ஏற்பாடைத் தீவிரமாய் அமைக்க ஜகார்டாவில் 2005 ஜனவரி 6 ஆம் தேதியில் கூடி ஆலோசனை செய்யப் போகின்றன. அகில நாட்டு ஐக்கியப் பேரவையின் ஆணையாளர் கொய்ச்சிரோ மட்சூரா [Koichiro Matsuura, Director UNESCO] பசிபிக்கடல் அரங்கு சுனாமி எச்சரிக்கை அனுபவங்களை, இந்து மாக்கடல் அரங்கு நாடுகளுக்குப் பகிர்ந்து கொண்டு, அங்கே ஒரு நிலையம் அமைத்திட உதவத் தயாராக இருப்பதாகவும் பாரிஸில் ஜனவரி 4 ஆம் தேதி கூறினார்.

பசிபிக் கடலரங்கில் சுனாமிக் கொல்லி கண்காணிப்பு

சுனாமி மதில் அலைகள் வருவதற்கு எந்தக் கால நியதியோ அல்லது கால நேரமே எதுவும் இல்லை! அடிக்கடி வருமென்று சொல்ல முடியாமல் அபூர்வமாக, எதிர்பாராத சமயத்தில் எழுந்து தாக்குவது சுனாமியின் கோரப் பண்புகளில் ஒன்று. ஆயினும் சுனாமி கடற்தள மக்களின் கொடுங் கூற்றாக, பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் கருதப்படுகிறது! இந்து மாக்கடல் கரை மக்களுக்கு இதுவே சுனாமியின் முதல் பயங்கர அனுபவம்! சுனாமியின் கோரத் தாக்குதலைத் தவிர்க்க முடியா விட்டாலும், அதன் எழுச்சியைக் கண்காணித்து எச்சரிக்கை அறிவித்துப் பாதுகாப்புத் திட்டங்கள் தயாராக இருந்தால், பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆயினும் சுனாமிச் சுவரலைகள் தகர்க்கப் போகும் வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள், வீதிகள், படகுகள், வாகனங்கள், இரயில் பாதைகள், வயல்கள், கிணறுகள் போன்ற மனிதத் துணை வசதிகள் எவற்றையும் பாதுகாக்க முடியாது. 1945 ஆம் ஆண்டில் அணு ஆயுதம் போட்டபின் அழிந்து போன ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் போன்று, இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் வடக்குப் பகுதி பேரழிவுக் கோலத்தை இப்போது காட்டுகிறது!

அமெரிக்காவின் சுனாமி கண்காணிப்புத் திட்டத்தில் நிலநடுக்க உளவு, அறிவிப்புப் பணிகள் 24 மணி நேரமும் மனிதரின் நேரடிப் பார்வையில் இயங்கி வருகின்றன. சுனாமி அபாய எதிர்பார்ப்பு அறிவிக்கப் பட்டதும், கடற்தளப் பகுதிகளில் எங்கு, யார், என்ன பணிசெய்ய வேண்டும் என்பவை சீராக எழுதி வைக்கப்பட்டு, பல இடங்களில் போலிப் பயிற்சிகளும் [Simulation Drills] மாந்தருக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் பயிற்சிகள் தொடரப்பட்டு வருகின்றன. இப்பணிகளை எல்லாம் தேசீயக் கடற் சூழ்வெளி உளவு ஆணையகம் [National Oceanic Atmospheric Asministration (NOAA)] மேற்பார்வை செய்து வருகிறது. இரண்டு தனித்தனி நிலையங்களில், பூகம்பச் சுனாமி எழுச்சிக் கண்காணிப்புகள் இயங்கி வருகின்றன. அலாஸ்காவில் பால்மர் [West Coast Tsunami Warning Center Palmer, Alaska] என்னும் இடத்தில் உள்ள மேற்குக் கடற்கரை சுனாமி எச்சரிக்கை மையம் ஒரு நிலையம். ஹவாயியின் ஈவா கடற்கரையில் உள்ள ‘ரிச்சர்டு ஹேக்மேயர் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் [Richard Hagemeyer Pacific Tsunami Warning Center Ewa Beach, Hawaii] இரண்டாவது நிலையம்.

மில்லியன் டன் கணக்கில் கடல் வெள்ளத்தைச் சுமந்து கொண்டு, கடல்மீது வெகு விரைவில் நீந்திச் சுனாமிச் சுவரலைகள் அடுத்தடுத்து தாக்கும் காலாட் படைகள் போன்று கரைநோக்கிப் பயணம் செய்பவை. கடல் அடித்தளத்தில் எழும் நில நடுக்கத்தால் பெரும்பான்மையான சுனாமிகள் பிறக்கின்றன. சிறுபான்மையான சுனாமிகள் கடல்மடியில் வெடிக்கும் எரிமலைக் கிளர்ச்சியாலும் அல்லது மலையினின்றும் நழுவும் நிலச்சரிவாலும் நேர்ந்திடலாம். வெகு வெகு அபூர்வமாக விண்கற்கள் அண்ட வெளியிலிருந்து புவியீர்ப்பு மண்டலத்தால் இழுக்கப்பட்டுக் கடல்மீதில் விழுந்தால், மனிதர் கற்பனை செய்ய முடியாத பிரளயப் பேரழிவுகள் நிகழும்! கடல் நெடுவே ஓரிடத்தில் பிறக்கும் சுனாமியின் அலை வட்டங்கள் அடுக்கடுக்காய் எழுந்து கடற்பரப்பு முழுவதிலும் பரவுகின்றன. உதாரணமாக 1960 இல் தென்னமெரிக்காவின் சில்லி நாட்டருகில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி அலைகள் பசிபிக்கடல் முழுவதும் பரவி, ஜப்பான் நாடு வரைப் பயணம் செய்தன!

சுனாமி கடல்மடியில் எப்படி உண்டாகிறது ?

இந்து மாகடலில் தற்போது நிகழ்ந்ததுபோல் கடல் அடித்தளத்தில் எழும் பூகம்பத்தால், சுனாமி உண்டாகலாம். மாபெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுக் கடலுக்குள் வீழும் போது, சுனாமி உருவாகலாம். கடல் அடியே எரிமலை வெடித்தால், சுனாமி அலைகள் ஏற்படலாம். அல்லது அண்ட வெளியிலிருந்து தவறி புவிஈர்ப்பில் இழுக்கப்பட்ட விண்கற்கள் [Meteorites] கடலில் விழுந்தால், மாபெரும் சுனாமி அசுர வடிவில் உதயமாகலாம். சுனாமி என்னும் ஜப்பானியச் சொல்லுக்குத் துறைமுகத்தைத் தாக்கும் அலை என்று பொருள். கரையை நோக்கி வலுவாய்த் தாக்கும் அலைமதில் என்று தமிழில் பொருள் கூறலாம்.

1. தோன்றும் காலத்தில் வெங்காயத் தோல் போன்று அடுக்கடுக்காய் உருண்டு வேறான இரண்டு தட்டுகளில் [Tectonic Plates] ஒன்று பூமிக்கடியில் கீழே சரியும் போது, மற்றொன்றை மேலே தள்ளுகிறது. அவ்விதப் பேரதிர்வு நிகழ்ச்சி கடலுக்கடியில் ஏற்படும் போது, கொந்தளிப்பு ஏற்பட்டு மாபெரும் கடல்தூண் மேலே செஙுத்தாய்த் துள்ளி எழும்புகிறது. நீரில் கல்லைப் போட்டால், வட்ட அலைகள் கிளம்புவது போல், கடல்தூண்கள் ஏகமைய வட்டங்களில் [Pillars of Concentric Circles] அடுக்காக எழுகின்றன!

2. கடலில் 20,000 அடிகளுக்குக் கீழ், மணிக்கு 400 மைல் வேகத்தில் [700 கி.மீ] கிளம்பும் சுனாமி காட்சிக்குப் புலப்படுவது அரிது. கடல் நடுவே நீண்ட அலையாகப் பயணம் செய்யும் சுனாமி, கரையை நெருங்க நெருங்க அதன் வேகம் குறைகிறது! வேகம் குறையக் குறைய சுனாமியின் அலை உயரம் மிகையாகி 120 அடி வரை [10 அடுக்கு மாளிகை உயரம்] உயர்ந்து நாகம்போல் படமெடுக்கலாம்! கரைநோக்கிப் பயணம் செய்யும் சுனாமி, தாக்குவதற்கு முன்பு பாம்புபோல் சீறிக் கொண்டு ஒருவித பயங்கர ஓலமிட்டு உறுமிக் கொண்டு முன்னே பாய்கிறது! யானை, சிங்கம், புலி, சிறுத்தை, நரி போன்ற காட்டு விலங்கினங்கள் இவ்வோசை அல்லது பூதள அதிர்வுகளை உணர்ந்து, சுனாமி தாக்கும் முன்பே எதிர்த்திசையில் தப்பி ஓடி விடிகின்றன!

3. கரையை அண்டி முன்னோக்கி அலைமதில் பாய்வதற்கு முன்பு, வலுவான அடியோட்டம் [Strong Under-current] ஏற்பட்டு, 25 நிமிடங்களுக்குக் கரை நீர்வெள்ளம் உள்ளிழுக்கப் படுகிறது! கரையைத் தாக்கும் போது, தலையை உயர்த்தி அழுத்த வலுவுடன் அடிக்கிறது!

4. சுனாமி கரையில் தாக்கும் போது, மாபெரும் ஆற்று வெள்ளம்போல் ஓங்கி அடித்து வீடுகளையும், வாகனங்களையும், மரங்களையும், எதிர்ப்படும் அனைத்தையும் தகர்த்துத் துண்டு துண்டாக்கி விடுகிறது!

5. கரையில் சுனாமியின் வலு முழுதும் தீர்ந்தபின், கடல் வெள்ளம் திரும்பிக் கடல்நோக்கிப் பின்வாங்குகிறது!

பூகம்ப அரக்கியின் தீ வளையம்!

பூகம்ப அரக்கியின் கழுத்தணியான ‘தீ வளையத்தில் ‘ [Ring of Fire] உள்ள ஓரு நாடு, இந்தோனேசியா! அடிக்கடி பூகம்பங்கள் அதன் தீவுகளில் நேர்ந்து, மக்கள் பாதிக்கப்படுவது புதிதான தகவல் அன்று. ஆனால் தற்போது சுமாத்திரா தீவுக்கருகில் நிகழ்ந்துள்ள நில நடுக்கத்தால் கடல்மீது சுனாமி தூண்டப்பட்டு அலைமதில் வட்டங்கள் அடுக்கடுக்காகக் கிளம்பி பனிரெண்டு நாடுகளைப் பாதித்தது, தெற்காசியக் கடலில் நூறாண்டுகளுக்குப் பிறகு நேர்ந்த முதல் நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது! சுமாத்திராவின் வடமேற்குப் பகுதி எப்போதும் தீவிர பூதளக் கொந்தளிப்புகள் மிக்க அரங்குகளில் ஒன்று! மணிக்கு 500 மைல் வேகத்தில் [800 கி.மீ] பயணம் செய்து, சில பகுதிகளில் 30 அடி உயரத்துக்குத் தாவிய சுனாமியின் பேரளவைக் கணித்துப் பார்க்கும் போது, சுமாத்திராவின் வடமேற்குப் பகுதியின் கடற் தளத்தில் சுமார் 100 மைல் [180 கி.மீ] நீட்சிக்கு கடலின் அடித்தளத் தட்டுகள், பூகம்பத்தால் முறிந்துபோய் இருக்க வேண்டும் என்று அனுமானிக்கப் படுகிறது!

(கட்டுரை தொடரும்)

தகவல்கள்:

Picture Credits: AP Photos, Time, Newsweek, Toronto Star, The Hindu & The Following Web Sites.

1. Indian Ocean Tsunami Warning System Will Cost Just 1.9 Million Dollar (Jan 4, 2005) [http://news.scotsman.com/latest.cfm]

2. UNESCO Ready to Create Tsunami Warning System in Indian Ocean (Jan 4, 2004) [www.itar-tass.com/eng]

3. Physics of Tsunamis [http://wcatwc.gov/physics.htm]

4. How a Tsunami Forms ? Toronto Star (Dec 27, 2004)

5. Asia to Seek Help on Warning System, Indonesia Death Rates 19% (Jan 4, 2005) [www.bloomberg.com/apps/news.

6. Tsunami Warning System [www.geophys.washington.edu/tsunami] (Jan 3, 2005)

7. The Tsunami Warning System in the Pacific (May 8, 1997)

8. The Global Ocean Observing System (GOOS) [http://ioc.unesco.org/goos/docs/whatis01.htm]

9. Tsunami Research Activities [www.prh.noaa.gov/pr/itic]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 5, 2005)]

Series Navigation