படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

அரவிந்தன் நீலகண்டன்


உலகில் உயிர் எவ்வாறு தோன்றின என்பது குறித்தல்ல சார்ல்ஸ் டார்வின் கண்டறிந்தது. மாறாக, எவ்வாறு உயிரினங்கள் (species) என்பது குறித்தே. என்றபோதிலும் உயிர் இவ்வுலகில் எவ்விதம் தோன்றியிருக்கலாம் என்பது குறித்து அவர் முன்வைத்த கருதுகோள் இன்றைக்கும் முக்கியமானதே ஆகும். பழம் புவியின் ஆதிப்பெருங்கடலில் கரிம மூலக்கூறிழைகளின் இணைவிலிருந்தே இயற்கை தேர்ச்சி நடைபெறுவதன் மூலம் மென்மேலும் சிக்கலமைப்புகள் உள்ள அமைவுகள் உருவாகி அதிலிருந்து உயிர் என நாம் அழைக்கும் நிகழ்வு வரையிலான பரிணாம பாதை இன்று பல அறிவியலாளர்களாலும் சாத்தியகூறுகள் மிகுந்த ஒன்றாகவே அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதினேழாம் நூற்றாண்டிலேயே பிரான்ஸ்ஸிஸ்கோ ரெடியாலும்(1660), பின்னர் லஸாரோ ஸ்பாலென்ஸியாலும் (1768), அதன் பின்னர் தியோடர் ஸ்வானாலும் (1836), இறுதியாகவும் முடிவாகவும் லூயிஸ் பாய்ஸ்ச்சராலும் (1862) உறுதியாக பொய்ப்பிக்கப்பட்டது யாதெனில் அழுக்குகளிலிருந்தும் இன்னபிற உயிரற்ற ஜட வஸ்துக்களிலிருந்தும் பாக்டாரிய கோளங்கள் முதல் பூச்சிகள் வரை உருவாகமுடியுமெனக் கருதப்பட்ட நம்பிக்கை. இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்ததோர் ஒரு பழமையான கிரேக்க நம்பிக்கைதான். இதற்கும் பரிணாம அறிவியலாளர் முன்வைக்கும், பழம் புவியின் ஆதிப்பெருங்கடலில் உயிர் முகிழ்ப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதையும் இதையும் முடிச்சு போடுவது பரிணாம அறிவியலின் அடிப்படையைக் கூட உணராதவர்கள் செய்யும் வார்த்தை விளையாட்டுக்கள் அவ்வளவே. இன்னமும் கூறினால் திடாரென உயிரினம் (அதன் அனைத்து சிக்கலான அமைப்புகளுடனோடே) ஜடப்பொருளிலிருந்து தோன்றுகிறது எனும் கருதுகோளை கொண்டவர்கள் அந்நாளில் அதனை இறை சிருஷ்டி அதிசயமாகக் கண்டவர்கள். உதாரணமாக, அன்று லூயிஸ் பாயிஸ்ச்சரை அதிகமாக எதிர்த்த பாரிஸின் பெலிக்ஸ் பெளவுச்ட் இவ்வித உயிர் உருவாதல் ‘சிருஷ்டி கர்த்தரின் ஆற்றலை வலுவிழக்க வைக்கவில்லை மாறாக இறைப் பெருமைக்கு ஆதாரமாகிறது ‘ என்றார். ஆனால் பரிணாம அறிவியல் எக்கால கட்டத்திலும் ஜடப்பொருளிலிருந்து தீடாரென உயிர் தோற்றம் (Spontaneous Generation) எனும் கருதுகோளை ஏற்றதில்லை. ஆதிப்பெருங்கடலில் பலகோடி வருடங்களாக கதிரியக்கமும் கரிம மூலக்கூறிழைகளுமாக, பழம் புவியின் வளிமண்டல இயக்கங்களுமாக படிப்படியாக உருவாக்கிய நிகழ்வொன்றினைக் குறித்து அறிவியல் பேசுவதை, அறிவியலால் பொய்ப்பிக்கப்பட்ட பழம் நம்பிக்கை ஒன்றுடன் இணைத்து பேசுவது மடத்தனமானது.

இன்றைக்கு 400 கோடி ஆண்டுகளிலிருந்து 300 கோடி ஆண்டுகளாக இப்புவியில் நடந்த வேதிவினைகளை குறித்து நாம் இனிவரும் பகுதிகளில் காணப்போகிறோம். ஆம். முதல் ஒரு செல் உயிரிகளின் தோற்றம் ஏறத்தாழ 100 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பது நம் கவனத்தில் இருக்க வேண்டும். கார்பனும், ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் நேற்று இணைந்து இன்றைக்கு உயிராக – பாக்டாரியமாக அதன் அனைத்து புரதங்களுடன் -மாறிற்று என்பதல்ல பரிணாம அறிவியல். அத்தகையதோர் நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு பெரும் சக்தியின் அறிவு பூர்வ படைப்பாக இருந்திருக்கலாம். மாறாக, அது நூறு கோடி ஆண்டுகளாக சிறு மூலக்கூறுகள், மூலக்கூறிழைகள், அவற்றால் உருவாகும் சங்கிலிகண்ணித் தொடரமைப்புகள், சிறு லிப்பிட் கோளங்கள், அதனால் உருவான உள்-வெளி அமைப்புகள் அதனுள் சிறு மீள்-உருவாக்குத் தன்மை கொண்ட மூலக்கூறுகளுடைய அமைப்புகள், இத்தகைய அமைப்புகளின் பரவல், ஒரு செல் உயிரினங்களின் மூதாதை அமைப்புகள் ஒரு பல சாத்திய கூறுகளை, நாம் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளாத மர்மங்களை, புரிந்து கொள்ள முயலும் படிக்கப்படாத பக்கங்களை கொண்டது. இவ்வாறு கூறியதும், ‘பார்த்தீர்களா பரிணாமம் உயிரின் உதயத்தை விளக்க முடியாது என்பதற்கு இதோ இன்னொரு வாக்குமூலம். ‘ என்று கூறிவிடக் கூடும். ஆனால் இதற்கு பொருள் அதுவல்ல. உயிரின் உதயத்திற்கு காரணமாக ஏக இறைவனையோ கர்த்தரையோ அல்லது நான்முகனையோ, அறிவியலடிப்படையற்ற முரண்பாட்டியங்கியல் விசைகளையோ இன்ன பிற தெய்வீக பூச்சாண்டிகளையோ அழைக்க வேண்டிய அவலநிலையில் நாம் இல்லை.உயிரின் உதயம் எனும் மர்மத்தை நாம் விளங்கிக் கொள்ள முயல்கிறோம். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளோம். பொதுவான சித்திரம் தெரிந்து விட்டது. இனி அதன் உள்-வழிகளை நாம் அறிய வேண்டும். அதையும் செய்யும் போதுதான் உயிரின் உதயம் குறித்த நம் சித்திரம் முழுமை பெறும். சற்றேறக்குறைய நூறு கோடி ஆண்டுகள் முற்றிலும் மாறுபட்ட வளிமண்டலம் கவிய இப்புவியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றை பரிசோதனை சாலையில் பரிசோதிப்பதிலும் அறிவியல் முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளது. யூரே மில்லர் (1953) மீத்தேன் அமோனியா நீராவி மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை கொண்ட வளிமண்டலத்தில் அடிக்கடி எழும் மின்சக்தியுடன் கூடியச் சூழலினை தம் பரிசோதனையில் உருவாக்கிய போது கிளைஸின், ஆல்பா-அலனைன், பீட்டா-அலனைன், அஸ்பார்ட்டிக் அமிலம் போன்ற அமினோ அமிலங்கள் தாமாகவே உருவாகின. ஹைட்ரஜன் சயனைடுடன் நீர் அமோனிய எனும் அமைவில் J.ஓரோ நடத்திய பரிசோதனை டி.என்.ஏ மூலக்கூறின் நைட்ரஜன் கார அமைப்பான அடினைனை அளித்தது. நைட்ரஜன் ஐயனிகள், நீர், கரியமில வாயு கார்பன் மோனாக்ஸைட் போன்றவை கொண்ட வளிமண்டலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பார்மால்டிகைட் கிடைத்துள்ளது (ஜே.பி.பிண்டால், 1980). லிப்பிட் (Lipid) கோளங்கள் எனக் கூறியிருந்தேன். உயிரின் உதயத்தில் இவற்றின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதும் இவை எவ்வாறு ஆதிமுன்னோடி உயிரணுவின் மூதாதையாக இருந்திருக்க முடியும் என்பதும் பரிசோதனைச் சாலையில் நிரூபணமான விஷயம்.(லூயிகி லூயிஸி, 1994) வெப்ப இயங்கியல் விதிகளாலும் புறச்சூழல் விசைகளாலும் உந்தப்பட்டு லிப்பிட் கோளங்கள் தானாகவே செல் பிரிவின் முன்னோடிகளாக செயல்பட்டன. (பார்க்க படம்-2) எனவே உயிரற்றதிலிருந்து உயிர் உள்ளது வராது என்பது உண்மையில் ஜடப்பொருளிலிருந்து ஒரு முழு உயிரினம் திடாரென எழும்பிவிடாது என்பதையே கூறுகிறது. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த உயிரின் உதயத்திற்கான பரிமாணங்களில் இவ்விதி பொருத்தமற்றது. இதெல்லாம் ஏதோ நமது மெமிட்டிக் க்ளோன்கள் உடனே பரிணாம அறிவியலின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என்பதற்காக கூறவில்லை. இது இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் நடக்கிற பத்தொன்பதாம் நூற்றாண்டு விவாதம் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. மேலும் எந்த அளவுக்கு ஒரு மதம் ஒருவரது சிந்திக்கும் திறனை அழிக்க முடியும் என்பதையும் காட்டுகிற விவாதம் இது. இந்நிலையில் திரு ரவி ஸ்ரீனிவாஸ் எனக்கு கூறியிருந்த அறிவுரைகளை குறித்து சில வார்த்தைகள். நீ முதலில் பகவத் கீதையில் உள்ள மூட நம்பிக்கைகளை கண்டித்து விட்டு பிறகு ஹரூண் யாகியாவைச் சொல்லு என்றிருந்தார். அவரைப் போன்ற இடதுசாரி மேதையின் மூளையில் தான் இப்படி ஒரு வாதம் உதிக்க முடியும். நான் குர்ரானிலுள்ள அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தால் அவர் கூறியதில் நியாயம் உண்டு. ஆனால் நான் எழுதியிருப்பது ஹரூண் யாகியாவைக் குறித்து. அதுவும் நானாக தேடிச் செல்லவில்லை. திண்ணையில் இரண்டு பேர் வலிய வந்து ஏதோ ஹரூண் யாகியா டார்வினை பொய்ப்பித்தாகிவிட்டதாக டமாரா போட்டதால் நான் அவரை படிக்க நேர்ந்தது. பச்சை பித்தலாட்டத்தை யாகியா செய்திருப்பதை காட்டினால் ஏனோ தெரியவில்லை, ரவி ஸ்ரீனிவாஸ் இந்த குதி குதிக்கிறார். அப்படியும் எனது கட்டுரையில் நானே வலிய சென்று ஸ்ரீலஸ்ரீ பிரபுத்தபாதா பரிணாமத்தை எதிர்ப்பதை அபத்தக் களஞ்சியம் எனக் கூறியிருப்பதை ஏனோ அவர் மறந்துவிட்டார். என்னைப் பொறுத்தவரையில் இதில் நான் தெளிவாக உள்ளேன். பரிணாம அறிவியலை ஏற்க இயலாத எந்த கருத்தியலும் அல்லது நம்பிக்கையும் எத்தனை சீக்கிரம் மண்மூடிப் போகிறதோ அந்த அளவு மானுடத்திற்கு நல்லது. பொதுவாக திரு.ரவி ஸ்ரீனிவாஸின் ‘அரவிந்தன் நீலகண்டன் எதை சொன்னாலும் எதிர்த்தாக வேண்டும் ‘ என்கிற ஆவேசம் மனிதரை அதல பாதாளத்திற்கு தள்ளியுள்ளது. மனிதர் படைப்புவாதம் பேசுகிறவர்களுக்கு ஆதரவான விசயங்களில் ஈடுபடக் கூட தயங்கவில்லை. அல்லது இதுவும் மார்க்சிய தத்துவ இயலின் பாதிப்பா அவரே அறிவார். மேலும் நான் எந்த மொழிபெயர்ப்பிலும் எதையும் அந்த ஆசிரியரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை காட்டும் படியாக திரிக்கவில்லை என்பதையும் திரு, ரவி ஸ்ரீநிவாஸ் புரிந்து கொள்வது நல்லது. எதுவாயினும் தமிழ்நாட்டின் மக்களுடன் அறிவியலை பகிரும் முயற்சிகளின் வரலாறு என்றாவது எழுதப்படுமானால், அதில் திண்ணையில் தற்போது நடக்கும் பரிணாம அறிவியல் vs படைப்புவாத கற்பனைகளின் இச்சிறுபோர் பதிவு செய்யவும் படுமானால், அன்று எப்படி தொடர்ந்து அறிவியலின் ஒரு முக்கிய ஒளிவிளக்காக விளங்கும் பரிணாமத்திற்கு எதிராக படைப்புவாதிகள் தொடுத்த அடிப்படைவாத அசட்டுக் கற்பனைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசாமல் திரு.ரவி ஸ்ரீநிவாஸ் மெளனித்து பின்னர் எவ்வித மத நம்பிக்கையின் அடிப்படையிலுமல்லாமல் படைப்புவாதத்திற்கு எதிராக அறிவியலுக்காக எழுப்பப்பட்ட குரலை எதிர்த்தார் என்பது பதிவாக்கப்பட்டு இந்நிலைபாட்டிற்கு காரணமான சித்தாந்த மற்றும் மனவியல் காரணிகளும் அலசப்படும் என நம்புகிறேன்.

ஹாரூண் யாகியா விவகாரத்தில் அவரது நூலை படிக்காதவர் திரு.இப்னுதான். ஏனெனில் ஃபுத்துய்மா மேற்கோள் காட்டப்படும் பக்கத்தில் ஹாரூண் யாகியா பரிணாம அறிவியலின் அடிப்படைகளில் ஒன்றான அனைத்துயிர்களுக்கும் பொதுவான தோற்றமூலம் என்பதனை அறிவியல் தாரமற்றது என்கிறார். உயிரின் உதயம் குறித்த அவரது அறியாமையை அந்த பக்கத்தில் (பக். 16) கொட்டவில்லை. அதற்கு முன்னதாக அது கொட்டப்பட்டுவிட்டது அல்லது இறக்கப்பட்டுவிட்டது. பரிணாம அறிவியலாளர் ஃபுத்துய்மா கூறியதை அதற்கு நேர் எதிராக பொருள் வரும்படியாக நேர்மையின்றி யாகியா பயன்படுத்திய அழகைதான் நான் விமர்சித்திருந்தேன். அத்துடன் அந்த பக்கத்தில் அவர் எழுப்பிய மடத்தனமான கேள்விக்கு பதிலளித்திருந்தேன். முன்னால் ஒரு வாக்கியம் பின்னால் ஒரு வாக்கியத்தை விட்டுவிட்டார் என்பதல்ல குற்றச்சாட்டு. ஃபுத்துய்மா கூறியதற்கு நேர் மாறாக பொருள்படும் படி ஃபுத்துய்மா படைப்புவாதத்தை ஒத்துக்கொள்வதாக கூறுவது (The sudden origination of living beings on the Earth is proof that they were created by God. Evolutionist biologist Douglas Futuyma admits this fact: Organisms either appeared on the earth fully developed or they did not. If they did not, they must have developed from preexisting species by some process of modification. If they did appear in a fully developed state, they must indeed have been created by some omnipotent intelligence.) மோசடி அன்றி வேறென்ன ? ஃபுத்துய்மா மிகத்தெளிவாக படைப்புவாதத்தை மறுப்பவர் இறைவன் படைத்தான் என்கிற கற்பனையை ஏற்காதவர். அவரது மேற்கோளை வெட்டி Douglas Futuyma admits this fact என்று கூறுவது எவ்விதத்தில் நேர்மை. இது போக திரு. ஏகலைவன் என்பவர் இதன் ஆங்கிலத்தை நான் யாகியாவுக்கு அனுப்பவேண்டும் என்கிறார். மாறாக, எவரது மேற்கோள் சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டதோ அவருக்கு அனுப்பி உண்மையை திண்ணையில் தெளிவு படுத்த வேண்டுமென ஏன் கூறவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. எதுவாயினும் திரு, ஏகலைவன், தங்கள் கருத்துக்கு நன்றி. இது குறித்த விரிவான ஆங்கிலக் கட்டுரையை எழுதி அனைவர் பார்வைக்கும் இணையத்தில் வைக்கிறேன். சிலவாரங்கள் பொறுக்க வேணும். பின்னர் யாகியாவுக்கும் அனுப்புகிறேன். எதிர்வினைகளை பதிவு செய்யலாம். என்னுடைய ஐயம் யாதெனில் யாகியா உண்மையில் ஃபுத்துய்மாவை படித்திருப்பாரா என்பதுதான். ஏற்கனவே ஃபுத்துய்மாவின் மேற்படி சித்திரவதைக்குட்பட்ட மேற்கோள் அட்சர பிசகில்லாமல் கிறிஸ்தவ படைப்புவாத இணையதளங்களில் குப்பை கொட்டப்பட்டு பின்னர் இப்போது யாகியாவால் மீள்-சுழற்சி செய்யப்பட்டுள்ளது. Talk about deja vu!

அன்புடன்

எஸ். அரவிந்தன் நீலகண்டன்

உயிரின் உதயம் குறித்து மேலதிக விவரங்களுக்கு:

www.talkorigins.org

Cairns-Smith, Seven Clues to the Origin of Life, Cambridge University Press

Fritjof Capra, Hidden Connections பக்.13-28 உயிர் உதயத்திற்கு முந்தைய பரிணாமத்தை விவாதிக்கின்றன.

பின்குறிப்பு-1: ஹிந்து தர்மத்தின் மைய நீரோட்டம் பரிணாம அறிவியலுடன் மோதவில்லை. அதைப்போலவே ஆபிரகாமிய மதங்களின் விளிம்பு நீரோட்டங்களும் பரிணாம அறிவியலுடன் மோதவில்லை. மறைகளுக்கு நேரடி பொருள் கொடாது அவற்றை அகவயப்படுத்தும் ஹிந்து தர்ம செயல்பாடே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இது ஹிந்து பாரம்பரியத்தின் ஒரு பண்பாட்டு வலிமையாகவே கருதப்பட வேண்டும். இத்தகைய பண்பாட்டு வலிமைகள் ஒரு அறிவு சார்ந்த வல்லரசாக பாரதம் உருவாக மிகவும் உறுதுணையானவை என்பதில் ஐயமில்லை. ஹிந்து எனும் வார்த்தையையே ஏதோ அரிப்பெடுக்கும் அருவெறுப்பான பொருளாக கருதும் அறிவுஜீவிகளுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தலாம் .என்றாலும் உண்மை அதுதான். நாளையே இந்நாடு ஒரு தலிபானிய நாடாகும் பட்சத்தில், மார்க்ஸிய தலிபான்களான JNU மதரசா குருக்களின் பிடியில் சிக்கும் பட்சத்தில் இந்நாடு காட்டுமிராண்டித்தனத்தில் சூடானும் சோவியத்தும் காணாத கொடுமைகள் நிகழும் நாடாகும். அதன் பின்னர் பரிணாம அறிவியல் இங்கு தடைப்படுத்தப்படுவதும் உறுதி. ரவி ஸ்ரீநிவாஸ் மற்றும் இப்னுபஷீர் போன்றவர்களின் இன்றைய செயல்பாடுகளே இதற்கு சிறந்த முன்னோடி உதாரணங்கள்.

பின்குறிப்பு-2: விரைவில் உயிரின் உதயம் குறித்து விளக்கமான கட்டுரை ஒன்றை எழுதி திண்ணையில் (ஆசிரியர் குழு அனுமதித்தால்) வெளியிடப் போகிறேன். சில தனிப்பட்ட காரணங்களாம் சில வாரங்கள் ஆகலாம்.

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்