இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (6)

This entry is part of 39 in the series 20041028_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


வானகம் முட்டும் இமயமால் வரையும்,

ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்,

காத்திடும் நாடு! கங்கையும், சிந்துவும்

தூத்திரை யமுனையும், சுனைகளும், புனல்களும்

இன்னரும் பொழில்களும், இணையிலா வளங்களும்

உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!

பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க

மைந்நிற முகில்கள் வழங்கு பொன்னாடு! …(சத்ரபதி சிவாஜி)

மகாகவி பாரதியார்

‘நீங்கள் இன்னல்பட வேண்டிய நிர்பந்தம் வந்தால், அந்த இன்னலை தேச நலனுக்காக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ‘

பண்டிட் ஜவஹர்லால் நேரு. (ஹிராகுட் அணை அமைப்பை முன்னிட்டு இடப்பெயர்ச்சி செய்யப்படும் கிராம மக்களுக்கு ஆற்றிய உரை, ஒரிஸா 1948)

‘நதிக்கு மேல் நதி, வனத்துக்குப் பிறகு வனம், மலைக்குப் பின் மலை, ஏவுகணைக்கு அடுத்து ஓர் ஏவுகணை, அணுகுண்டு சோதித்து மற்றுமோர் அணுகுண்டு சோதனை -இவ்விதம் நாமறிவிக்கப் படாமலே, நமது ஆட்சியாளரால் ஒவ்வொரு நாளும் நாம் அடிக்கப்படுகிறோம்!

அணுகுண்டுகள் இராணுவத்துக்கு எவ்விதம் ஆயுதக் கிடங்குபோல் உதவியாக உள்ளனவோ, அதுபோல் பேரணைகள் தேசீய வளர்ச்சிக்கு உதவுபவை! அவை இரண்டுமே ஏராளமான மக்களுக்குப் பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள் (Weapons of Mass Destruction)! அவை இரண்டுமே ஆட்சியாளர் தமது குடிமக்களை ஆட்டி அடக்கப் பயன்படும் ஆயுதங்கள்! மக்களினம் வாழப் பிழைத்துக் கொள்ளும் சுய உணர்ச்சியை உரித்தகற்றும், மாந்தரின் சூட்சம அறிவுத்திறத்தைச் சுட்டிக் காட்டும் வரலாற்று மைல் கல்லாக வார்க்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் சின்னங்கள், அவை இரண்டும்! தம்மீதே புகுத்திக் கொண்ட மனிதரின் சீர்கெட்ட நாகரீகக் காட்சிகள் அவை இரண்டும்! அங்குல அங்குலமாக முன்னேறி, ஒவ்வோர் அணுகுண்டாக, ஒவ்வோர் அணையாக தகுதிக்கு ஏற்ப குறித்த முறைகளைப் பின்பற்றி நிறுத்தப் போரிடுவோம்! நர்மதா பள்ளத்தாக்கில், நமது முதல் போர் துவங்கட்டும்! ‘

அருந்ததி ராய் (ஏப்ரல் 1999)

‘இந்திய மக்களுக்கு நீர்வளமும், நீர்ப்பாசான வசதிகளையும் 3600 பேரணைகளின் நீர்த்தேக்கங்கள் அல்லும் பகலும் அளித்து வருகின்றன. அவற்றில் 3300 அணைகள் பாரதம் விடுதலை அடைந்த பிறகு அமைக்கப் பட்டவை. 1999 ஆண்டு தகவல்படி இன்னும் 1000 அணைகள் கட்டப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. அணைகள் நலனளித்த காலங்கள் போய்விட்டன! பலன் தருவதை விடப் பெரும் பாதகம் கொடுப்பவை அணைகள்! அணைகள் உலக வழக்கற்றுப் போனவை [Obsolete]! அணைகள் குடியரசுக்கு எதிரானவை! அரசாங்க அதிகார வர்க்கத்தின் ஆதிக்கச் சாதனங்கள் அவை! விவசாயிகளின் அறிவை அவரிடமிருந்து பறிக்கும், உத்திரவாதச் சுரண்டல் கருவிகள் அவை! ஏழை எளியவரின் நிலபுலம், நீர்வளம், இல்லங்கள், நீர்ப்பாசான வசதிகள் யாவற்றையும் பறித்து, பணக்கார வர்க்கத்துக்குத் தாரை வார்க்கும் தானங்கள் அவை! அணைகளின் நீர்த்தேக்கங்கள் ஏராளமான மக்களின் இல்லங்களை இழக்கச் செய்து, அவர்களை ஏழையாக்கி, இடப்பெயர்ச்சிக் குழியில் தள்ளுகின்றன! நீர்வள, நிலவள உயிர் இனங்களுக்கு நாய்க்குடிலாக ஆக்கிவிட்டன அணைகள்! பேரணைகள் பூகோளத்தைச் சீர்கேடாக்குபவை! பெரும் வெள்ளம், நீர்க்கிடை முடக்கம் (Water-logging), நிலம் நோக்கி உப்புறுஞ்சல் கேடு (Salinity), நோய் பெருக்கம் ஆகியவை உண்டாகக் காரணமாகின்றன! பேரணைகளுக்கும், நிலநடுக்கங்களுக்கும் நேரடித் தொடர்புகள் உள்ளன வென்று அழுத்தமான சான்றுகள் மேலோங்கி வருகின்றன! ‘

அருந்ததி ராய் (ஏப்ரல் 1999)

பேரணைகள் அணு ஆயுதங்களைப் போன்று பேரழிவு தருபவை என்று ஆத்திரமாக அருந்ததி ராய் அம்மையார் அறிவித்து வருவது, பொருத்தமற்ற, அர்த்தமற்ற ஓர் உதாரணம்! பல்லாண்டு காலம் பாதகம் விளைவிக்கும் கதிரியக்கம் போன்ற அழிவுப் பொழிவுகள் பேரணை விபத்துகளில் விளையா! அணைகள் நீக்கப்பட்டால், அணைகள் நிறுவப்படா விட்டால், நீர்த்தேக்கங்கள் இல்லை! குடிநீர் பற்றாக்குறையும், நீர்ப்பாசான வசதி இன்மையும் நாட்டில் தாண்டவம் ஆடும்! ‘அணைகள் நவீன இந்தியாவின் கோயில்கள் ‘ என்று தொழுதவர், நம்மைத் தொழ வைத்தவர், பண்டிட் நேரு! மக்கள் எண்ணிக்கை பேரளவில் பெருகிவரும் பாரத தேசத்தில், சென்னை நகரம் போன்று பல பகுதிகளில் நீர்ப்பற்றாக்குறை, அல்லது நீர்ப்பஞ்சம் நேர்ந்து மாந்தர் அவதிப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை! நாட்டின் நதியிணைப்புகளுக்கும், கால்வாய் அமைப்புகளுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக வெள்ளப் பெருக்குக் கட்டுப்பாடுகளுக்கும் அணைகள், நீர்த் தேக்கங்கள் மிக மிக அவசியமானவை. ஒரு பில்லியன் ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் 200 மில்லியன் நபர்களுக்குப் போதிய சுத்தமான குடிநீர் இன்மையும், 600 மில்லியன் நபருக்கு அடிப்படைச் சுகாதார வசதி [Basic Sanitation] இல்லாமையும் பெரும் நோய் நொடிகளைக் கொடுத்து வருகின்றன.

இந்த யந்திர யுகத்தில் மாந்தருக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும், மனிதர் படைக்கின்ற ஆகாய விமானங்களோ, இரயில் வண்டிகளோ, மோட்டார் வாகனங்களோ, விண்வெளி அல்லது கடல்வழிக் கப்பல்களோ, அணுமின்சக்தி நிலையங்களோ, பேரணைகளோ, நீர்த்தேக்கங்களோ உலக நாடுகளில் எங்கேயும் கிடையா! யந்திர யுகச் சாதனங்கள், பொறிநுணுக்கச் சாதனைகள் அனைத்திலும் ஓரளவு அபாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன! பேரளவுச் சாதனைகளை, யந்திரச் சாதனங்களை ஓரளவு அபாயங்களுக்காக அஞ்சி, அருந்ததி ராய் அம்மையார் போல் முழுமூச்சாக எதிர்ப்பதோ, முற்றிலும் புறக்கணிப்பதோ அல்லது முழுவதும் மூடுவதோ நாகரீக யுகத்தில் அறிவுள்ள புரட்சியாகாது! விஞ்ஞான யுகத்தில் கட்டமைப்புச் சீர்கேடுகள், பொறிச் சாதனைகளின் கோளாறுகள், மனிதத் தவறுகள் ஆகியவற்றை நீக்கவோ அல்லது குறைக்கவோ சீரான நெறிமுறைக் கட்டுப்பாடுகளும், கண்காணிப்பு முறைகளும் நிறைய நம்மிடம் இருக்கின்றன! அவற்றை மீறினால் தண்டனைகள் அளிக்க நீதி நெறிகளும், சட்டங்களும், நீதி மன்றங்களும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் இருக்கின்றன!

கட்டுரை ஆசிரியர்

டெஹ்ரி அணைத்திட்டக் கட்டமைப்பில் பிரச்சனைகள் (மே 2003)

பாகீரதி நதியில் 260 மீடர் (860 அடி) உயரத்தில் கட்டப்பட்ட டெஹ்ரி அணை, ஆசியாவிலே உயர்ச்சி மிக்க அணையாகக் கருதப்படுகிறது! அணை முடிந்ததும், அதன் நீர்வெள்ளம் முக்கியமாக உத்திரப் பிரதேசத்தின் நீர்ப்பாசானத்துக்கும், 2400 மெகாவாட் மின்சக்தி உற்பத்திக்கும் பயன்படும். 1998 ஆண்டு வரை டெஹ்ரி திட்டம் 1,650 கோடி ரூபாயை விழுங்கியுள்ளது! முதற்கட்ட அணையுடன் 1000 மெகாவாட் நீர்மின்சாரத் திட்டத்திற்கு மதிப்பீடு ரூ. 4,700 கோடி [+திட்ட முடிவு வரை வட்டி ரூ. 750 கோடி]. இரண்டாம் கட்ட அணை 30 கி.மீ. (20 மைல்) நதிக் கீழோட்டத்தில் கோடாஸ்வர் என்னும் இடத்தில் ரூ. 1,200 கோடி [+வட்டி] மதிப்பீட்டில் அமைக்கத் திட்டமிடப் பட்டிருந்தது. முதற்கட்டச் செலவை மத்திய அரசும், உத்திரப் பிரதேச மாநிலமும், முறையே 60%-40% பங்கீட்டில் பகிர்ந்து கொண்டன. மேலும் ரஷ்ய நாடு இந்தியாவுக்கு ரூ. 540 கோடி கடன் கொடுத்தது. ஆண்டு தோறும் மதிப்பீடு நாணயச் செறிவு (Cost Escalation) ஏறும் வீதம்: 10%. நாட்கள் வீணடிக்கப் படாமல் திட்டம் 2002 ஆண்டு இறுதியில் முடிவு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டது.

1978 இல் அடித்தளம் இடப்பட்ட திட்டம், நிறுவன காலங்களில் தாமதமாகி அரசாங்கம் பெரும் நிதி விரையத்தில் பாதிக்கப் பட்டது! ரூ 195 கோடி (1978) மதிப்பீடில் துவங்கிய திட்டம், இறுதியில் ரூ 6,000 கோடியாக (2003) விசுவரூபம் எடுத்தது! 2001 ஏப்ரலில் திட்ட எதிர்ப்பாளிகள் 50 பேர் (கிராம மக்கள்) கலகம் விளைவித்து மூன்று வாரங்கள் வேலை நிறுத்தமானது! தனியார் துறைக் கட்டமைப்பு நிறுவகங்கள் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழந்ததாக அறியப்படுகிறது! அரசாங்கம் மட்டும் மூன்று வாரப்பணி முடக்கத்துக்கு ரூ 100 கோடி இழந்ததாக அறியப்படுகிறது! நிதியிழப்புடன் திட்ட முடிவும் காலம் கடந்து, 2004 ஆண்டுக்குப் பிறகே மின்சக்தி பரிமாறப்படும் என்ற தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது!

நிலநடுக்க வரையறைப் பாதுகாப்பு நெறிகளில் முரண்பாடுகள்

டெஹ்ரி அணைத் திட்டத்தின் தள அமைப்பு, மத்திய இமாலய நிலநடுக்க இடைத்தளத்தில் [Central Himalayan Seismic Gap] 1961 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப் பட்டது! 1991 இல் இமாலயப் பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்ப நடுக்க மையத்துக்கு 45 கி.மீ. (27 மைல்) தூரத்தில் டெஹ்ரி அணையின் அமைப்புத் தளம் சிக்கிக் கொண்டது! 1972 இல் ஒப்புக் கொள்ளப்பட்ட டெஹ்ரி திட்ட அணை, 0.25(g) உச்சத் தள அசைவைத் [Peak Ground Acceleration (PGA)] தாங்கிக் கொள்ள டிசைன் செய்யப்பட்டது!

தற்போதைய கணிப்புப்படிப் பூகம்பம் 8 ரிக்டர் அளவில் ஆடினால், நிலநடுக்கத் தள அசைவு (PGA) 1.0(g) ஆகலாம் என்றும், அதனால் அணை விரிசல் அடையலாம் என்றும் அஞ்சப்படுகிறது! அவ்விதம் பூகம்பத்தால் பிளவு ஏற்பட்டால், அணை தேக்கியிருக்கும் 700 பில்லியன் காலன் நீர்வெள்ளம், அணை உடைப்பில் பாய்ந்தோடி, ஒரு மணி நேரத்தில் புனித இடங்களான ரிஷிகேஷ், ஹரிதுவார் இரண்டையும் மூழ்க்கிவிடலாம்!

டெஹ்ரி அணையின் நிலநடுக்க மாடல் ‘ஈரச்சு அசைவுக் ‘ [Two-dimensional Model (X,Y)] கணக்கீட்டில் பூகம்ப ஆய்வுக் கூடங்களில் சோதிக்கப்பட்டது! ஆனால் விஞ்ஞான நிபுணர்கள் ‘மூவச்சு புறங்கோட்டு அசைவு ‘ ஆய்வு முறையில் [Three-dimensional Non-linear Analysis] அணை மாடல் ஆராயப்பட்டு, அணைப் பாதுகாப்பு, ஒருமைப்பாடு உறுதியாக மீளாய்வு செய்யப்பட வேண்டுமென, திட்ட அதிகாரிகளை வற்புறுத்தினர். ஆனால் அணையை டிசைன் செய்த வல்லுநர்கள் கணக்கிடும் போது, ஈரச்சு அசைவு ஆய்வுமுறை அணைக்கு ஏற்படும் உச்சப் பாதிப்புகளை எடுத்துக் கொள்வதால், மூவச்சு அசைவு முறை ஆய்வு அளிக்கும் விளைவுகளை விடச் செம்மையான விடை தரும் என்று அறியப்பட்டது. ஆதலால் சிக்கலான மூவச்சு ஆய்வு முறை முதலில் கைவிடப் பட்டது!

டெஹ்ரி மாந்தர் இடப்பெயர்ச்சி நிதியளிப்பு விதிகளில் குறைபாடுகள்

இமாலயப் பிரதேசத்தில் பல எதிர்ப்புகளைக் கடந்து, கட்டி முடிந்த டெஹ்ரி அணையில் இடப்பெயர்ச்சி நிதி அளிப்புத் தகராறுகள் எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குப் பல இடையூறுகளைத் தந்தன. 200 ஆண்டுகளாக மலர்ந்து வந்த பண்டைய டெஹ்ரி கிராமம் இன்னும் சில ஆண்டுகளுக்குள் நீர்த்தேக்க வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கி வரலாற்றுக் கதை ஆகிவிடும்! சுமார் 10,000 கிராமக் குடிமக்கள் தாம் வாழ்ந்த வீடுகளை இழக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது! அணையை முன்னிட்டோ அல்லது நிலத்தை முன்னிட்டோ சுமார் 100,000 பொதுமக்கள் பாதிக்கப்படலாம் என்று அறியப்பட்டது! மக்கள் பட்ட பெரு வேதனை என்ன வென்றால், இடப்பெயர்ச்சி நிதிக்கொடை அளிப்பு, அதைப் பெற்றுக் கொள்ளும் விதி முறைகள் அறிவிப்பு எதுவுமின்றி, அணைகட்டும் அதிகார வர்க்கம் பாகீரதி ஆற்றின் நீரோட்டத்தை நிறுத்தி அவர்களைப் பயமுறுத்தியது!

டெஹ்ரி அணையால் பாகீரதி நதிப் பள்ளத்தாக்கில் உள்ள திகோலி கிராமத் தளத்தில் 12% பாதிக்கப் பட்டது! கிராமத்தின் 40% தளம் மனேரி பாலி இரண்டாம் கட்டத் திட்டத்தால் பாதிப்பானது! பொதுப் பணித்துறை (PWD) வீதிகள் போட்டதில் 12% தளம் ஆக்கிரமிக்கப் பட்டது! கிராமத்தின் 64% தளப்பகுதியை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டதுடன், 20 இல்லங்களின் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி செய்யப் பட்டன! அஸேனா கிராமத்தில் இடப்பெயர்ச்சி அட்டவணையில் இருந்த நபர்கள் அரசாங்க வர்க்கத்தால் பயமுறுத்தப் பட்டனர்! அரசாங்கம் திட்ட மிட்டபடி இடப்பெயர்ச்சி நெறிகள் கையாளப்பட வில்லை! பலர் கவர்ச்சி மொழிவலையில் சிக்கி தூண்டியில் மாட்டிக் கொண்டனர்! எதிர்ப்பு அணிவகுப்பு மாந்தர்களின் கோரிக்கை நிரலில் பின்வரும் கேள்விகள் எழுதப்பட்டிருந்தன.

11. இடப்பெயர்ச்சில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று புதிய இல்லம் கட்டிக் கொள்ள உதவிக்கடன் 100,000 ரூபாய் அளிக்க மத்திய அரசாங்கம் அனுமதி தந்தாலும், மாநில அரசு 60,000 ரூபாயே அளித்தது! மாநிலம் ஏன் 40,000 ரூபாயைக் குறைத்தது என்னும் கேள்வி மக்களிடையே எழுந்தது!

2. இல்லம் கட்டுதவி நிதிவரும் முன்பே, வீடுகளைத் தகர்க்கும் விதிகளை அறிவித்ததின் முக்கியத்துவம் என்ன ? நகர மாந்தர்களுக்கு அளிக்கப்பட்ட இடப்பெயர்ச்சி நெறிகளைக் கடைப்பிடிக்காது, கிராம மக்களுக்கு ஆடு மாடுகள் வசிக்க தகரக் கொட்டங்கள் கூடத் தரப்பட வில்லை!

3. மலைக் காலங்களில் நிலச்சரிவுகளுக்கு வாய்ப்புள்ள, நீர்த்தேக்கத்தின் விளிம்பில் இருக்கும் கோலா, ஜல்வால்கெளன், கங்சாலி ஆகிய மூன்று கிராமங்களின் தலைவிதியை அரசாங்கம் இன்னும் தீர்மானம் செய்யவில்லை! அணையின் விளிம்புத் தளங்களில் உள்ள வீடுகளின் நிச்சயமற்ற நிலை எத்தனை ஆண்டு காலம் நீடிக்கும் ? 2002 ஜூலையில் நீர்த்தேக்க விளிம்புப் பகுதியில் பூதள அளவீடுகள் [Geological Survey] எடுக்கப்பட்டாலும், இதுவரை ஏனோ மக்களுக்கு வெளியிடப்பட வில்லை.

4. அணை கட்டுவதால் பிரிந்துபோன பகுதிகளை இணைப்பதற்குத் திட்டமிடப்பட்ட சியான்சு பாலம் ஒத்திவைக்கப் பட்டதன் காரணங்கள் இதுவரை [டிசம்பர் 2003] மக்களுக்கு அறிவிக்கப் படவில்லை!

5. நீர்மின்சார நிலையம் உற்பத்தி செய்யும் ஆற்றலை [2400 மெகாவாட்] உத்திராஞ்சல், உத்தரப் பிரதேச மாநிலங்கள் இரண்டும் பகிர்ந்து கொள்வதாக ஒப்பந்தம் ஆகியிருந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட டெஹ்ரி மாவட்ட மக்களுக்கு இனாமாக அளிக்கும் மின்சார ஆற்றல் எவ்வளவு என்று கணிக்கப் படாமலே இருந்தது!

6. புது இடப்பெயர்ச்சி மக்கள் அருந்துவதற்குக் குடிநீரும், வேளாண்மைக்கு நீர்ப்பாசான வெள்ளமும் எவ்வளவு என்று அறிவிக்கப் படவில்லை! அதற்குரிய திட்டமும் இருப்பதாக மக்கள் காட்டப் படவில்லை!

7. உத்தரப் பிரதேச மாநிலத்திற்கும், டெல்லி நகருக்கும் எங்கே, எப்போது, எவ்விதம் குடிநீரும், நீர்ப்பாசான வெள்ளமும் பரிமாறப்படப் போகிறது ? அவற்றுக்காக நிறுவகமாகும் கால்வாய்களும், பைப்புகளும், எவ்விடங்களைத் தோண்டி அமைக்கப்பட விருக்கின்றன ? அணை அடிவார இல்லங்களில் வாழுகின்ற மக்களைப் பாதித்து, இடப்பெயர்ச்சி முறைகள் வில்லங்கங்களை விளைவிக்கப் போகின்றனவா ?

இவ்வினாக்கள் யாவும் 2003 ஏப்ரல் 12 ஆம் தேதி டெஹ்ரி மாந்தர் எழுப்பியவை. இவற்றில் எத்தனை வினாக்களுக்குப் பதில் கிடைத்தது அல்லது பலாபலன் ஏற்பட்டது என்று தெரியவில்லை.

டெஹ்ரி பகுதியில் 109 கிராமங்கள், கோடாஸ்வர் பகுதியில் 16 கிராமங்கள் அணையால் நேரிடையாவோ அன்றி மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டன. டெஹ்ரியில் 35 கிராமங்கள், கோடாஸ்வரில் 2 கிராமங்கள் அணைநீர் தேக்கத்தில் முற்றிலும் மூழ்கிப் போகும்! முதற்கட்ட இடப்பெயர்ச்சிச் சீரமைப்புகள் [Reloaction, Rehabilitation] ஏற்படுத்தப்பட்டு, 98% குடும்பத்தினர் ஈடுநிதி பெற்று, புது கிராமத்தில் குடியேறியதாக அறியப் படுகிறது! இரண்டாம் கட்ட இடப்பெயர்ச்சிச் சீரமைப்பில் 2845 இல் 435 குடும்பங்கள் இடம் பெற்றனர். மீதிக் குடும்பங்களுக்கு டேஹ்ரா டூன், ஹரிதுவார் நகர்களில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டன. 2001 ஆண்டுக்குப் பிறகும் தீர்க்கப்படாத மனிதப் பிரச்சனைகள் நிழல்கள் போல் அடுத்தும் தொடர்ந்தன!

நர்மதா நதியில் எதிர்ப்புக்கு உட்பட்ட சர்தார் ஸரோவர் அணை

இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மட்டுமே பெருநதிகளில் பிரித்துக் கட்டிய பல கால்வாய்கள் மூலமாக நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டு, குடிநீராகவோ அல்லது நீர்ப்பாசான நிலவளத்துக்கோ பயன்பட்டு வருகிறது. அருந்ததி ராய் அம்மையார் அமைக்கக் கூடாதென்று எதிர்த்துப் போரிட்ட முதல் அணை, சர்தார் ஸரோவர் நீர்தேக்கம் நர்மதா நதி மீதுதான் கட்டப் பட்டுள்ளது. 1961 இல் பண்டிட் நேரு அடிக்காலிட்ட சர்தார் ஸரோவர் அணை 49.8 மீடர் [166 அடி] உயரமுள்ளது! அதைவிட ஐந்து மடங்கு உயரம் [860 அடி] உள்ளது இமாலயத்தின் பாகீரதி நதியில் கட்டப்பட்ட டெஹ்ரி அணை! பல இடங்களில் 41 கிளை நதிகள் இணையும் நர்மதா பெருநதியில் 30 பெரிய அணைகளும், 135 இடைத்தர அணைகளும், மற்ற சிற்றணைகளும், அவை நீரனுப்பும் அநேக நீர்த்தேக்கங்களும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளன.

நர்மதா நதிவளம் ஊட்டும் வேளாண்மைப் பரப்பு மிகவும் பெரியது! நர்மதா நதியோட்டம் சுமார் 25 மில்லியன் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது! 1985 இல் 450 மில்லியன் டாலர் நிதிக்கடன் சர்தார் ஸரோவர் அணைத் திட்டத்துக்கு வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் சூழ்மண்டலக் காப்பு அமைச்சகத்தின் அனுமதி, 1987 இல் கிடைத்தது. குஜராத் மாநிலத்தின் ஜனத்தொகை 50 மில்லியன்! அதில் 56.7% பழங்குடி வாசிகள் சர்தார் ஸரோவர் அணை அமைப்பால் இடப்பெயர்ச்சி ஆயினர்! பின்தங்கிய வகுப்பினர் 60% வேறு இடங்களுக்குத் தள்ளப்பட்டனர்! அணையிலிருந்து குடிநீர் அளிக்கப்படும் மக்கள் தொகை 1992 இல் 40 மில்லியன் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் மெய்யாகக் குடிநீர் கிடைத்தது 1993 ஆண்டுத் தகவல்படி 25 மில்லியன் மக்களுக்கு மட்டுமே! குடிநீர் அனுப்பப்படும் கிராமங்கள் 8215 என்று 1991 இல் அறிவிக்கப் பட்டாலும், அவ்வாண்டுத் தகவல்படி 236 கிராமங்கள் மட்டுமே பயன் பெற்றன! 1979 இல் இடப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் கிராமக் குடும்பங்கள் 6000 மேல் என்று மதிப்பிடப் பட்டாலும், அந்த எண்ணிக்கை 1987 இல் 12,000 ஆகி, அடுத்து 1991 இல் 27,000 ஆகி, இறுதியில் 1992 இல் 40,000 என்று அரசாங்க அறிவித்தது! 12 வருட ஜனத்தொகைப் பெருக்கம் 6000 எண்ணிக்கையிலிருந்து, 40,000 எண்ணிகை பெருகியதாக எடுத்துக் கொள்ளலாம். 1999 ஆண்டு அறிக்கைப்படி அன்றைய எண்ணிக்கை: 41,500! ஆனால் மெய்யான இடப்பெயர்ச்சி எண்ணிக்கை 85,000 என்று ஓர் உளவு அறிக்கை (NBA) கூறுகிறது!

சர்தார் ஸரோவர் அணைத் திட்டத்தின் நிதிமதிப்பீடு ரூ. 6000 கோடியிலிருந்து, தற்போது ரூ. 20,000 கோடியாக ஏறிவிட்டது என்று அதிகாரப் பூர்வமாகத் தெரிந்தாலும், உளவு அறிக்கை (NBA) ரூ. 40,000 கோடி வரை போகலாம் என்று அனுமானிக்கிறது! சுமார் 70,000 மக்கள் 101 கிராமங்களிலிருந்து இடப்பெயர்ச்சி அடைவார் என்று அறிவிக்கப் பட்டது! 162 கிராமங்கள் இருக்குமிடம் தெரியாமல் அணைத் தேக்கத்தின் அடிவயிற்றில் மூழ்கிப் போகும்! மெய்யாக இடப்பெயர்ச்சி ஆனவர்: 114,000 பேர்! சீரான இடப்பெயர்ச்சி முறைபாடுகள் கையாளப்பட வில்லை என்று அருந்ததி ராய் கூறுகிறார்! போதிய ஈடுநிதி மக்களுக்கு அளிக்கப்பட வில்லை என்றும் குறைபாடு கூறுகிறார்!

கால்வாய்த் திட்டங்கள் கையாளப்படும் பிற்போக்கு முறைகள்

விடுதலை இந்தியா இமயமலை அடிவாரத்தில் திட்டமிடப் பட்ட ஸட்லெஜ்-யமுனா கால்வாய், டெஹ்ரி அணைத்தேக்கம், குஜராத்தின் நர்மதா நதியில் உருவான சர்தார் ஸரோவர் நீர்த்தேக்கம், தென்னாட்டில் ஒரிஸாவின் ஹீராகுட் அணை, ஆந்திரா-சென்னைக்கு இடைப்பட்ட தெலுங்கு-கங்கா கால்வாய் ஆகியவற்றைக் கையாண்ட முறைகள் அனைத்தையும் மீளாய்வு செய்தால், அவை யாவும் ஓர் ஒழுங்கற்ற கலாச்சார வழக்கப் பிற்போக்குப் பண்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன! அதிகார வர்க்க நபர்களான மத்திய அரசாங்க மாந்தரும், மாநில அரசுகளின் மாந்தர்களும் ஒரே அச்சு யந்திரத்தில் உதித்தவ ரானதால் அவர்களுடைய பண்பாட்டு வழக்க நடைகளில் ஒரே மாதிரி ஒற்றுமைப்பாடுகள், வேற்றுமைப்பாடுகள் காணப்படுவதில் வியப்பில்லை!

ஒற்றுமைப்பாடுகள்:

1. திட்ட அமைப்புச் செலவு நிதித்தொகை மதிப்பீடுக்கு மீறி இரு மடங்கு முதல் நான்கு மடங்குக்கும் மேலாக ஏறிக்கொண்டு போவது விதி விலக்கன்று! எல்லாத் திட்டங்களிலும் வழக்க நிகழும் நடப்பான அதிர்ச்சி!

2. ஐந்தாண்டுகளில் முடிய வேண்டிய திட்டம், பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளில் முடிக்கப்படுவது விதி விலக்கன்று! அதுவும் வழக்கமான நிகழ்ச்சியே! திட்டங்கள் ஆண்டாண்டு தோறும், நிதிவளம் பற்றாமல் போய் தேய்பிறை நிலவாக ஒளிமங்கிப் போவது, எதிர்பார்க்க வேண்டிய நிகழ்ச்சி!

3. திட்டப் பொறி நிபுணர்கள் சூழ்மண்டலக் காப்பு, பூதளப் பொலிவிழப்பு, நீர்வள-நிலவள உயிரினப்-பயிரின அழிப்பு [Ecological Damage], நிலநடுக்க வரையறுப்பு போன்ற சிக்கலான அடிப்படைக் கணிப்புகளில் ஆழ்ந்து ஆய்வுகள் செய்யாது, மேலோட்டமாக கணக்கிட்டுத் தவறுகள் நேருவது வழக்கமாக நிகழ்வது! முக்கிய பிரச்சனையான பூகம்ப வரையறைக் கணிப்புகள் குறைந்தது, முப்பெரும் தனி ஆய்வுக் கூடங்களால் உளவு செய்யப்பட வேண்டும்.

4. இடப்பெயர்ச்சியில் பாதிக்கப்படும் மக்கள் தகுதியான ஈடுநிதி பெறாமல் திண்டாடுவது, ஏமாற்றப்படுவது, புறக்கணிக்கப் படுவது போன்றவை தவறாமல் ஏற்படும் பிரச்சனைகளாகும்.

5. அணையின் டிசைன் கணிக்கீடுகள் மீளாய்வு செய்யப்பட்டு, நீருயர்ச்சியால் பிளவு படாமல் உறுதியாக நிலைக்க ‘அணை ஒருமைப்பாடு ‘ [Dam Integrity] ஆழ்ந்து சோதிக்கப்பட வேண்டும்.

அண்டை நாடுகள் உலகில் கைகோர்க்கும் போது பாரத மாநிலங்களுக்குள் பிளவுகளா ?

வட அமெரிக்கக் கண்டத்தில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய முப்பெரும் குடியரசுகள் ஒன்று சேர்ந்து ‘நாஃப்தா ‘ [North American Free trade Association (NAFTA)] என்னும் வர்த்தகக் கூட்டமைப்பை தமக்குள் வைத்துள்ளன. ஐரோப்பாவில் அநேக நாடுகள் இணைந்து வர்த்தக வசதிக்காக ஈரோ [Euro] வென்னும் பொது நாணயத்தை ஏற்படுத்தித் தமக்குள் வணிக விருத்தி செய்து வருகின்றன! ஊமைப்போர் [Cold War] மறைந்து கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் ஒன்றாய்ச் சேர்ந்து, பலமிக்க பண்டைய ஏகபூமி ஜெர்மனியாய் ஆகிவிட்டது! பிரிட்டன் ஆதிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து ஒன்றாகப் போராடி விடுதலை பெற்ற பன்மொழிப் பாரத நாடு, இன்று இரயில் பாதைகளால் இணைக்கப் பட்டிருந்தாலும், நதிப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதில் மாநிலங்களுக்குள் பெரும் எதிர்ப்பிருப்பது வியப்பாக இருக்கிறது!

பேரணைகள் கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள் பெரும்பான்மையாக மனிதர் உண்டாக்குபவை! இடப்பெயர்ச்சி நிதியளிப்புச் சிக்கல்களை உண்டாக்குபவர் அரசாங்க அதிகார வர்க்க அதிகாரிகள்! நதியிணைப்புத் தகராறுகளை, ஐயப்பாடுகளை உற்பத்தி செய்பவரில் பலர் மாநில ஆட்சிக் கலகவாதிகள்! கங்கா நதியையும், பிரமபுத்திராவையும் இணைத்து, தென்னக நதிகளுடன் பிணைப்பது சிக்கலான, சிரமமான, பிரச்சனைகள் மிகுந்த ஓர் இமாலயப் பணி! அப்பெரும் பணியைப் பாரத மாநிலங்கள் ஒன்று கூடி ஒருமைப்பாடு கொண்டு கூட்டாய்வு செய்து, அனைத்தும் தோள் கொடுத்துப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், முன்னேறும் பாரத நாடு பின்தங்கிப் பிற்போக்கு நாடுகளில் ஒன்றாக மூழ்கிப் போகும்!

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission.

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004).

29 Large Dam Construction is a Controversial Issue in India, BBC By: Ram Dutt Tripathi, Lucknow [Dec 8, 2001]

30 The Greater Comman Good -Article on Gujarat ‘s Sardar Sarovar Dam in Narnada River By: Arundhathi Roy [April 1999].

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [October 28, 2004] (Part VI)

Series Navigation