இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (5)

This entry is part of 46 in the series 20041021_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


ஆற்றினிலே சுனை ஊற்றினிலே, தென்றல்

காற்றினிலே மலைப் பேற்றினிலே,

ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி

இனத்தினிலே உயர்நாடு!

வண்மையிலே உளத் திண்மையிலே

தண்மையிலே மதி நுண்மையிலே

உண்மையிலே தவறாத புலவர்

உணர்வினிலே உயர்நாடு! …. [பாரத நாடு]

மகாகவி பாரதியார்

கங்கை இந்தியாவின் நதி, இந்தியரின் பிரேமை நதி! இந்தியாவின் கனவுகள், நினைவுகள், அச்சங்கள், சாதனை முழக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் யாவும் சுற்றிப் பின்னி யிருக்கும் நதி! பலயுகக் காலங்கள் கடந்த இந்தியக் கலாச்சார, நாகரீகத்தின் சின்னம், கங்கை நதி. எப்போதும் ஓடினாலும், எப்படி மாறினாலும், தப்பாத முறையில் அன்றுபோல் என்றும் இயங்கும் கங்கை நதி!

பண்டிட் ஜவஹர்லால் நேரு.

இந்தியாவின் செழித்த ஜீவநதிகளும், மெலிந்த ஏழை நதிகளும், அவ்விரண்டை இணைக்கும் கால்வாய்களும், அவற்றின் நீர்வளத்தை அனுபவிக்கும் ஆயிரக் கணக்கான மக்களால் பாதுகாக்கப்பட வேண்டியவை! அவை தடமிட்டோடும் மாநிலங்களின் அரசாங்க அதிகார வர்க்கத்தாலும் கச்சாக் கழிவுகள் நேராகக் கலக்காதவாறு அல்லும் பகலும் கண்காணிக்கப்பட வேண்டியவை! நீர்வளத்தைச் செம்மையாகப் பராமரிப்பு செய்ய மாநில அரசாங்கக் கட்டுப்பாடுகளும், மக்களின் சமூக ஒத்துழைப்பும் நாகரிகச் சுக வாழ்வுக்கு மிக மிகத் தேவை! மக்களின் சுகாதார வசதிகளுக்குப் பொதுக் கழிப்பறைகளும், கச்சாக் கழிவுகளை வடிகட்ட நீர்ப்பக்குவச் சாலைகளும் [Waste Treatment Plants] மாநிலங்களில் அமைக்கப்பட்டு, அனுதினமும் அவை பராமரிக்கப்பட வேண்டும். நீர்வளத்தைக் காக்கப் பொதுமக்கள், தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகளையும், மீறினால் பெறும் தண்டனைகளையும் செய்தித்தாள், டெலிவிஷன், சினிமா, வெளியறிக்கை ஆகியவற்றின் மூலமாக அரசாங்கம் பறைசாற்ற வேண்டும். பொன்னான காலத்தையும், கோடிக் கணக்கான நாணயத்தையும் செலவழித்துக் கட்டிய கால்வாய்களின் நீர் வெள்ளத்தால் காலராவும், புற்று நோயும், மஞ்சள் காமாலையும், மயக்கமும், வாந்தியும், வயிற்றுப் போக்கும், வயிற்று வலியும், டைபாய்டும், ஹெபடைட்டிசும் மக்களுக்கு வர வேண்டுமா ?

கங்கா நதி குடிநீராக, குளியல் நீராக, நீர்ப்பாசான வளத்துக்காக பல கோடி மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. காசியில் மரணமடைவது புண்ணிய மென்று கருதி இந்தியாவின் மாநிலங்களிலிருந்து இந்து வயோதிகர் பலர், தமது இறுதிக் காலத்தைக் காசி மாநகரில் கடத்திக் காலனை எதிர்நோக்கி யுள்ளார்கள்! காலம் முடிந்து இந்து மானிடர் இறந்த பிறகு, கங்கா கரை ஓரத்தில் அனுதினம் நூற்றுக் கணக்காக உடல்கள் எரிவதும், சரிவர எரியாத அரை வேக்காட்டுச் சடலங்களை நதியில் தூக்கி எறிவதும், செத்த விலங்குகளை ஆற்றில் போட்டு விடுவதும் கடவுளுக்கே பொறுக்காத காட்சிகளாகும்!

கட்டுரை ஆசிரியர்.

புனிதம் அழிந்துவரும் புண்ணிய நதி கங்கை!

கங்கை நதி புனிதமானது, தெய்வீகத் தன்மை யுள்ளது, மூழ்கி எழுந்தால் மோட்சம் அளிப்பது என்னும் மூட நம்பிக்கை இந்துக்களிடம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழிவழியாய்த் தொடர்ந்து வருகிறது! பிரம்மாண்டமான பிரமபுத்திரா நதியும், ஐந்துகிளை சேரும் சிந்து நதியும், இமயத்தில் பிறந்தாலும் கங்கை நதியின் புனிதத்துவம் அவற்றுக்கு ஏனோ கிடைக்க வில்லை! கங்கா நீர் புனிதம் கெடுவதில்லை என்று நம்பிக்கை கொண்டு, சுத்தமாகாத நதி நீரைத் தினமும் குடித்துவரும் பித்தர் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இல்லத்தில் புனித கங்கா நீரைக் கலங்களில் இட்டு, இந்துக்கள் இறை வழிபாட்டில் பயன் படுத்துகிறார்கள். உயிர்போன உடற்கட்டையைக் கங்கா நதி தீரத்தில் எரித்துச் சாம்பலை நீரில் கரைத்து விடுகிறார். சரியாக எரியாமல் அரைகுறையாய்க் கரிந்தபோன மனித உடற் பாகங்களை, நதியில் தூக்கி எறிந்து விடுகிறார்! ஆத்மா பிரிவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு, குற்றுயிர் மாந்தருக்குக் கங்கா நீரை வாயில் ஊற்றி விடுகிறார்.

காசி என்னும் வாரணாசில் மட்டும் கங்கை நதியின் நான்கு மைல் தூர நீட்சியில் அனுதினமும் சுமார் 60,000 பேர் முங்கி எழுவதாக அறியப்படுகிறது! 2001 ஜனவரி 19 தேதியில் நடந்த புனிதக் கும்ப விழாவான, மாகா கும்பமேளாவில் 70 மில்லியன் [7 கோடி] இந்துக்கள் கங்கா நீரில் முங்கிக் குளித்திருக்கிறார்கள்! அவ்விதம் கங்காவில் ஒருமுறை முங்கி எழுந்தால், ஆத்மா சுத்தமாவதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஜனவரி 14 இல் துவங்கி, பிப்ரவரி 21 இல் முடியும் முங்குவிழா என்னும் கும்பமேளா அலகாபாத் அருகில் ஓடும் கங்கா நதியில் 42 நாட்கள் நீடிக்கும். ஆனால் இந்திய மற்றும் அகில தேசச் சூழ்மண்டலக் காப்பாளிகள், ஒரு யுகத்தில் தூயதாக இருந்த புண்ணிய கங்கா, இன்று தீவிரத் துர்மாசுக்கள் சேர்ந்து புனிதம் கெட்டுப் போயுள்ளது என்று இந்துக்களுக்குப் பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்!

உலக ஜனத்தொகையில் சுமார் பத்தில் ஒரு பங்கு (350-500 மில்லியன்) வாழ்ந்து வரும் கங்கா நதி தீரத்தில், காசி மற்றும் பல நகரங்கள் கச்சா மலக்கழிவு நீரை [Raw Sewage] நேரடியாகக் கலந்து வருகின்றன! கங்கா நதி அமெரிக்காவின் சார்ல்ஸ் நதியைப் போல் 1000 மடங்கு துர்மாசுக்கள் படிந்துள்ளது என்று நதிச் சுத்தீகரிப்புக்கு வந்திருந்த மாஸ்ஸெசூசெட்ஸ் முன்னாள் மாநில ஆளுநர் வில்லியம் வெல்டு [Former Governor William Weld] கூறினார். அன்னை கங்கையின் நீர்த்துளி ஒன்று, மனிதனின் பல தலைமுறைப் பாவங்களைக் கழுவும் என்று வில்லியம் வெல்டுவிடம் யாரோ அறிவித்ததாகத் தெரிகிறது! பெனாரஸ் இந்து பலகலைக் கழகத்தின் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியரும், மஹாந்த்ஜி என்னும் வேதீய குருவுமான, டாக்டர் வீர பகத்திர மிஸ்ரா தவறாது தினமும் மூக்கை அழுத்திப் பிடித்துக்கொண்டு, வாயை இறுக்கி மூடிக்கொண்டு கங்கா நதியில் முங்கி எழுபவர்! டாக்டர் மிஸ்ரா அமைத்த சங்கத் மோட்ச அறச்சாலை [Sankat Mochan Foundation] உறுப்பினர், கங்கா நதி மாதிரி நீரில் உள்ள மலக்கிருமி அளவுகளைக் காசியில் சோதிக்கும் [Tests for Fecal Coliform Levels] பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த உளவு அளவு நிலை, கங்கா நீர் குளிக்கத் தகுதியானதா அல்லது குடிக்கத் தகுதி யுள்ளதா என்பதை நிர்ணயம் செய்யும். உத்தர் பிரதேச நகர் அபிவிருத்தி அமைச்சர், நான்கு மைல் நீட்சி அலகாபாத் நதிப் பகுதிகள், கும்பமேளா தினங்களில் குளிப்பதற்குத் தகுதி யுள்ளவை என்று உறுதியாகக் கூறினார்.

கங்கா நதியில் கலக்கும் கச்சாக் கழிவுகளை வடிகட்டும் திட்டங்கள்

இமாலய மலைத்தொடர் மையத்தில் பிறக்கும் கங்கை நதி, 25,000 அடி உயரச் சிகரத்தின் கங்கோத்திரி பனிக்களஞ்சியம் [Gangothri Glacier] உருகி பாகீரதி, அலெக்நந்தா ஆறுகளின் இணைப்பாகப் பெருகிப் பால்லாயிரம் ஆண்டுகளாக வற்றாமல், குன்றாமல் சுமார் 1560 மைல் தூரம் ஓடி வங்காள விரிகுடாவில் சங்கமம் ஆகிறது. பாகீரதி நதி சுமார் 13,000 அடி உயரத்திலும், அலக்நந்தா 25,646 அடி உயரச் சிகரமான நந்தி தேவிக்குக் கீழாகவும் உற்பத்தியாகின்றன. கங்கா நதி தீரம் 400,000 சதுர மைல் நீர்ப்பாசானம் பரிமாறி உலகத்திலே மிகப்பெரும் செழிப்பான, மக்கள் தொகை அடர்த்தியான பிரதேசமாகக் கருதப் படுகிறது! ஆக்டபஸ் [Octopus] எட்டுவால் கடல்மீன் போன்று கங்கா நதிக்கு யமுனா, கோமதி, ராப்தி, காந்தக், கோசி ஆகிய கிளை நதிகள் வடக்கிலிருந்தும், சாம்பல், சிந்த், பெட்வா, கென், சோன் ஆகிய கிளை நதிகள் தெற்கிலிருந்தும் கங்கை நதியுடன் கலக்கின்றன. இந்தியாவின் மாபெரும் நதிவளப் பெருக்கான கங்கை, தேசத்தின் 25% பகுதிகளுக்கு நீர்ப்பாசான வசதிகளை ஊட்டி 500 மில்லியன் மக்களுக்கு நீரளித்து, வாழ்வளித்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக கங்கா நதி தீரத்தில் தோல்பதனிடுச் சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள், நெசவாலைகள், புலால் இறைச்சி அறுக்கும் கசாப்புக் கூடங்கள், வடிகாய்ச்சிச் சாலைகள் [Distilleries] போன்று ஆயிரக் கணக்கான தொழிற்துறைகள் தோன்றி, வடிகட்டப் படாத கச்சாக் கழிவு எச்சங்களை டன் கணக்கில் நதிகளிலும், நதிக் கால்வாய்களிலும் நேரடியாக அனுப்பி வருகின்றன. உத்தரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களின் 40 நகரங்கள் கங்கையில் வெளிக்கொட்டும் கச்சாக்கழிவுகள், நதியில் கலப்பதற்கு முன்பு சுத்தீகரிக்கப் படவேண்டும்! 1980 இல் ஆரம்பித்து 1985 இல் முடிந்த, நிதிச்செலவு மிக்க [300 மில்லியன் டாலர் நிதியளிப்பு] ‘கங்கா கழுவியக்கத் திட்டம் ‘ [Ganga Action Plan (GAP)] திறம்பட பின்பற்றப் பட்டாலும், கழிவு வடிகட்டுச் சாலைகள் நகரங்களில் மின்சக்தி வெட்டுகளால் தடைப்பட்டு ஓரளவுதான் இயங்கிப் பலனளித்து வருகின்றன! ஏராளமான மின்சார உடலெரிப்புக் கூடங்கள் [Electric Cremation Rooms] அமைக்கப்பட்டு, கங்கா நதியின் கரையில் உள்ளவைச் சீர்ப்படுத்தப் பட்டன. மின்சார எரிப்பகங்கள் மின்சக்தி முறிவால், சில சமயங்களில் முடங்கிக் கிடக்கும்! இந்தியாவின் வழக்கியல் நிபுணர்கள் பலர், சூழ்மண்டக் காப்பு வழக்கறிஞர் [Environmental Attorney] எம்.சி. மேத்தாவின் தலைமைக் கீழ், கழிவுகள் மிகுந்திடும் கங்கை நதியின் தலைவிதியை மாற்றி, நதிச் செம்மை நிலையை மீட்கச் சவால் விடுத்து சபதம் எடுத்துக் கொண்டனர்! பாரத நாட்டின் உச்சநீதி மன்றம் கச்சாக் கழிவுகளை கங்கா நதியில் கொட்டும் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகளுக்கு அறிக்கை விட்டுக் கழிவுகளைச் சுத்தப்படுத்து அல்லது தொழிற்சாலை இழுத்து மூடு என்று ஆணை யிட்டது!

மத்தியச் சூழ்மண்டலக் காப்புத்துறை அறிக்கை ஒன்று, துர்மாசுக்களின் நிலையைக் குறிக்கும், உயிரின உயிர்வாயுத் தேவை [Biological Oxygen Demand (BOD)] அளவு 50 mg/L (milligram per litre) என்று அறியப்பட்டு யமுனா நதியின் நீர் வெள்ளம், காப்பு அளவுக்கு 17 மடங்கு பெருகியதாகப் பறைசாற்றியது! கங்கா நதி கடக்கும் 1560 மைல் தீரத்தில் வாழும் 400 மில்லியன் [40 கோடி] மக்களில் பலர், புனித நீரில் உள்ள துர்மாசுக்களால் காலரா, புற்றுநோய், வயிற்றுக் கெடுப்பு, டைபாய்டு, ஹெப்படைட்டிஸ் ஆகிய நோய்கள் உண்டாகி அல்லல் படுகிறார். கங்கா கழுவியக்கத் திட்டம் (GAP), அடுத்து ஆஸ்வால்டு திட்டம் (Oswald Plan) ஆகிய இரண்டின் மூலம் 15 ஆண்டுகள் கச்சாக் கழிவுகளைக் கங்கா நதி ஓட்டத்தில் குறைப்பதற்குத் தீவிரமாகப் பணியாளிகள் ஈடுபட்டனர். 300 மில்லியன் டாலர் (1500 கோடி ரூபாய்) திட்டப் பணியில் பல வழிகளில் கசிந்த லஞ்சக் கைப்பணம் கணக்கிற்கு வரமால் காணாமல் போனதை, அரசாங்கத் தணிக்கை அறிக்கை [Govt Audit Report] ஒன்று சான்று அளித்துள்ளது!

கங்கா கழுவியக்கத் திட்டத்தில் அமைக்கப்பட்ட 39% மலக்கழிவு வடிப்புச் சாலைகள் சீராக இயங்கி சுத்தீகரித்தன. கங்கா நதியின் 1560 மைல் நெடிய தீரத்தில் இயங்கி வந்த தொழிற்சாலைகளில் பாதிக்கும் கீழானவை வெளிக்கழிவு பக்குவச் சாலைகளைக் [Effluent Treatment Plants] கொண்டிருந்தன. ஆனால் அவற்றில் 18% செம்மையாக வேலை செய்யவில்லை! அலஹாபாத் பல்கலைக் கழகத்தின் சூழ்மண்டலக் காப்பு விஞ்ஞானியான அனில் குமார் திவாரி, ‘அலஹாபாத் நகர் அனுதினமும் 250 மில்லியன் லிடர் மலக்கழிவு திரவத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் நகரத்தின் வடிகட்டும் பக்குவச் சாதனங்களின் தகுதி 100 மில்லியன் லிடர் அளவே ‘, என்று கூறுகிறார். துர்மாசுக்களைக் கொண்டுவரும் கங்கா நதி, தலைநகர் டெல்லி, அடுத்து தாஜ் மஹால் காட்சி நகர் ஆக்ரா ஆகியவற்றின் பேரளவு மாசுக் கழிவுகளைத் தூக்கிவரும் யமுனா ஆகிய பெரு நதிகள் இரண்டும் அலஹாபாத்தில்தான் சங்கமம் ஆகின்றன. அலஹாபாத் நகரின் நதி மேலோட்டத்தில் [Upstream River] கான்பூர் நகரின் தோல்பதனிடுச் சாலைகள் புற்றுநோய் உண்டாக்கும் குரோமியத் திரட்சியைப் [Chromium Content] பெருமளவில் கலக்கின்றன!

காசியின் கங்கா நதியில் கலந்துள்ள துர்மாசுக்களின் அளவு, பாதுகாப்பு அளவை விட 3000 மடங்கு பெருகி யிருப்பதாக அறியப்படுகிறது! ஆதலால் மரணத்திற்குப் பிறகு மோட்ச உலகத்தை அடையப் போகும் ஆத்மா, உயிருடன் உள்ளபோது நோயால் தாக்கப்பட்டு துடித்துச் சாக வழி உண்டாகிறது! 1.3 மில்லியன் ஜனத்தொகை யுள்ள காசி நகரும், கங்கா நதியின் 77 வைதீகக் குளியல் கரைகளும், கோடிக் கணக்கான இந்துக்களைத் தேனீக்கள் போல் ஈர்த்து, நகரமும் நதியும் நரக மாக்கப் படுகின்றன! காசியில் மரண மடைவது புண்ணிய மென்று கருதி இந்தியாவின் மாநிலங்களிலிருந்து வயோதிகர் பலர், தமது இறுதிக் காலத்தைக் காசி மாநகரில் கடத்திக் காலனை எதிர்நோக்கி யுள்ளார்கள்! காலம் முடிந்த இந்து மானிடர் இறந்த பிறகு, கங்கா கரை ஓரத்தில் அனுதினம் நூற்றுக் கணக்காக உடல்கள் எரிவதும், சரிவர எரியாத அரை வேக்காட்டுச் சடலங்களை நதியில் தூக்கி எறிவதும், செத்த விலங்குகளை ஆற்றில் போட்டு விடுவதும் கடவுளுக்கே பொறுக்காத காட்சிகளாகும்!

பதினான்கு ஆண்டுகள் சுத்தீகரிப்புப் பணிபுரிந்து, இதுவரை 600 மில்லியன் டாலர் முழுத்தொகை நிதிகரைந்தாலும், கலக்கப்படும் துர்மாசுக்கள் நதியில் ஓரளவு குறைந்தாலும், இந்திய அரசின் முயற்சிகளில் போதாமையும், கழிவு வடிகட்டுப் பொறித்துறையில் குறைபாடுகளும் உள்ளன. தொடர்ந்து மின்சாரப் பரிமாற்றம் இல்லாமல் தடைப்படுவதால், மலக்கழிவு வடிகட்டுச் சாதனங்கள் இடையிடையே முடங்கி ஓய்வெடுத்துக் கொள்கின்றன! திட்ட நிபுணர்கள் கழிவு வெளியேற்றத்தை நதியில் கட்டுப்படுத்தி விட்டோம் என்று வீண் பெருமை அடித்துக் கொண்டாலும், மின்சக்தி தடைப்பட்ட சமயங்களில் வடிகட்டப் படாத கச்சா மலக்கழிவுகள் புனித கங்காவில் ஓடிக் கலந்து மனிதரைப் போல் புண்ணியம் பெற்றுக் கொண்டன!

கங்கா நதியில் நீரோட்டத்தில் கட்டப் போகும் பேரணைகள்

இந்திய அரசாங்கம் கங்கா நதியின் நீர் வெள்ளத்தையும், வேகத்தையும் பல பகுதிகளில் கட்டுப்படுத்த 50 பேரணைகளையும், சிற்றணைகளையும் கட்டுமானம் செய்து, நீரோட்ட அளவைச் சீர்ப்படுத்தவும், நீர் மின்சாரம் எடுக்கவும் திட்ட மிட்டுள்ளது. இவற்றில் மிகப் பெரியது, டெஹ்ரிப் பேரணை! இமாலய மலைப் பிரதேசத்தின் உத்திராஞ்சல் மாநிலத்தில் ஹரித்துவாருக்கு வடக்கே, டேராதூனுக்குக் கிழக்கே பாகீரதி நதியில் டெஹ்ரி அணை கட்டப்பட்டுள்ளது. டெல்லிக்கு வடக்கே 200 மைல் தூரத்தில் உருவாகி வந்துள்ளது டெஹ்ரி அணைத் திட்டம். 2003 செப்டம்பர் முதல் தேதி உச்சநீதி மன்றம் டெஹ்ரி அணைத் திட்டம் சூழ்மண்டல உளவுகளைச் சீராக ஆய்வு செய்யாது தீர்மானமான அமைப்புகளுக்குச் சவால் விட்டது! 2004 ஆகஸ்டு 1-2 தேதியில் 2400 MWe மின்சார நிலையத்துக்காகத் தோண்டப்படும் மூன்றாவது நீர்க்குகையின் 630 அடி உயர செங்குத்துக் குழி [Tunnel Shaft] பெருமழையில் சரிந்து 29 ஊழியர் மாண்டனர்!

1972 ஆம் ஆண்டில் அனுமதிக்கப் பட்டு, 1978 இல் திட்டம் அடித்தளமிடப் பட்டு, 1996 இல் உறுதி அணை [Coffer Dam] கட்டுமானம் ஆனது. அணைத் திட்டம் 2003 ஆகஸ்டில் முடிவு பெற வேண்டியது. 1986 இல் இந்தோ-ரஷ்ய உடன்பாட்டில், ரஷ்யா நிபுணத்துவத்தையும், 416 மில்லியன் டாலர் நிதிக்கடன் அளிக்கவும் முன்வந்தது. 1994 இல் நிதிச்செலவு 612 மில்லியன் டாலர் தொகையிலிருந்து, 1999 இல் 1.2 பில்லியன் டாலராக இருமடங்கு பெருகியுள்ளது! டெஹ்ரி அணைத் திட்ட நிர்வாகத்தில் ஊழல்கள் ஏற்பட்டு மைய உளவு ஆய்வகம் [Central Bureau of Investigation (CBI)], ஆறு பெரிய அதிகாரிகள் மீது லஞ்சக் குற்றச் சாட்டுகளைத் தாக்கியுள்ளது! அதாவது டெஹ்ரி அணை அமைப்புச் செலவு, பயனீயும் ஊகிக்கப்புப் பலன் தொகையை விட, இரண்டு மடங்கு ஆகியுள்ளது! அதனால் அதன் உற்பத்தி மின்சாரம் யூனிட் இரண்டு மடங்கு விலைக்கு, பஞ்சாப், இமாசல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய அண்டை மாநிலங்களுக்குப் பரிமாறப்படும் என்று அஞ்சப்படுகிறது!

1978 ஆண்டு முதலே டெஹ்ரி அணைத் திட்டத்துக்கு எதிர்ப்புக்களும், முட்டுக்கட்டையும் அலை அலையாய் எழுந்தன! அரசாங்கம் ஏற்படுத்திய உள்ளாய்வுக் குழுவும் முரணாக அறிவிக்கவே, 1980 மையக் காலத்தில் திட்டம் சில ஆண்டுகள் முடங்கியது. 1987 இல் மத்திய அரசின் சூழ்மண்டலக் காப்பு அமைச்சகமும் எதிர்ப்புகள் அறிவித்தாலும், அரசாங்கம் அதை மீறி திட்ட வேலைகளைத் துவங்க ஆணையிட்டது! இந்திய நாட்டின் சூழ்மண்டலக் காப்பாளிகள் 1992 இல் உச்சநீதி மன்றத்துக்குப் புகார்மனு அனுப்பி, நிலநடுக்கப் பாதுகாப்பு, சூழ்மண்டலச் சிதைப்பு, இடப்பெயர்ச்சி ஈடுநிதி போன்ற பிரச்சனைகளில் தவறுகளைக் காட்டி யிருந்தனர்! 1996 இல் காந்தீயவாதி சுந்தர்லால் பஹுகுணா, அணைத் திட்டத்தை எதிர்த்து 74 நாட்கள் நீடித்த உண்ணா விரதம் வெற்றியாகி, அரசாங்கம் மீண்டும் பாதுகாப்பு, சூழ்மண்டலப் பாதிப்பு, நிலநடுக்க உளவு, இடப்பெயர்ச்சிப் பிரச்சனைகளை மீளாய்வு செய்ய ஓர் ஆய்வுக் குழுவை அமைக்கும்படி கட்டாயம் ஆனது! அதன்படி 1997 இல் அரசாங்கத்திற்கு ‘ஹனுமந்த ராவ் ஆய்வுக்குழு ‘ தனது உளவு அறிக்கையைச் சமர்ப்பித்தது. குழுவின் இடப்பெயர்ச்சி முறைகள் உட்பட, பெரும்பான்மையான நிபந்தனைகளை அரசாங்கம் பின்பற்ற வில்லை!

டெஹ்ரி அணைத்திட்டம் அமைப்பதில் எழுந்த பிரச்சனைகள்

ஐந்து பெரும் காரணங்கள் டெஹ்ரி அணைத் திட்ட எழுச்சி, திட்ட வளர்ச்சி, திட்ட முதிர்ச்சி ஆகிய மூன்றுக்கும் முட்டுக்கட்டை யிட்டுத் தடை செய்து வந்தன.

1. புதுத்தளக் குடியேற்றத் திட்டமின்மை: அணை அமைப்பால் மாதர், விதவைகள் உள்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடப்பெயர்ச்சி செய்ய வேண்டியதாயிற்று! ஆனால் அவர்கள் அத்தனை பேரும் புதுத் தளத்தில் குடியேறுவதிலும், நட்டஈடு நிதி அளிப்பதிலும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்!

2. தனியார் துறைக்கு அணையின் பலாபலன்: இடப்பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ஊர்மக்கள் அடைய வேண்டிய அணையின் பலாபலன்கள், சூயஸ் என்னும் தனியார் நிறுவகத்துக்குப் போகும்! நீர்ப்பக்குவச் சாலைகள் [Water Treament Plants] அமைக்கும், உலகிலே மிகப் பெரிய நிறுவகம் சூயஸ் கம்பெனி! அணையின் 635 மில்லியன் லிடர் கங்கா நீரை டெல்லிக்கு விற்க, சுத்தீகரித்துப் பதம்படுத்தும் ஸோனியா விஹார்ச் சாலையைச் [Sonia Vihar Plant] சூயஸ் கம்பெனி கட்டுமானம் செய்து வருகிறது.

3. மழை மறைவு அல்லது வேனிற் காலங்களில் கங்கையில் ஓடும் நீரோட்டத்தை, டெஹ்ரி அணைதேக்கம் குன்றச் செய்கிறது. அதனால் வாரணாசிப் (காசி) பகுதியில் ஓடும் கங்காவில் ஆழம் குறைந்து, வெய்யில் காலத்தில் கால்நடையாகவே மாந்தர் ஆற்றைக் கடந்து செல்ல முடியும்!

நீரோட்டம் குன்றிய கங்கா நதியில் சீர்கேடுகளும், துர்மாசுக்களும் நிரம்ப வாய்ப்புகள் உண்டாகும்! ஆழமற்ற அசுத்த நதியில் நீராடும் வமிசாவளி இந்துக்களின் வைதீகக் கலாச்சார வழக்கம் பாதக மடைகிறது.

4. இமாலயத் தொடர்மலை அடுக்குகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சேமிப்பு நிலநடுக்கச் சக்தி [Stored Seismic Energy] திடாரென விடுவிக்கப்பட்டு, அணையைப் பிளந்து விடலாம்! பிளவுகளில் பெரும் நீர்க்கசிவு உண்டாகி, நீர்ப்பெருக்கம் படைபோல் எதிர்ப்படும் எதையும் அடித்துச் செல்லாம். அணை வெள்ளம் உண்டாகும் நிலநடுக்கமும் [Dam-induced Seismicity] இத்துடன் ஆராயப்பட வேண்டும். 1991 இல் ஏற்பட்ட இமாலயப் பூகம்பம், டெஹ்ரி அணைக்கு முன்னோட்டப் பகுதியில் [Upstream of Tehri] பாகீரதி ஆற்றில் உள்ள மனேரி அணைக்கு அருகில் நடுக்கமையம் [Epicenter] கொண்டிருந்தது, ஓர் எச்சரிக்கை நிகழ்ச்சியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்!

5. நிலநடுக்கம் இல்லாமலே, டெஹ்ரி அணை வெள்ளப் பாதிப்பால் அபாயங்களை விளைவிக்க வாய்ப்புக்கள் ஏற்படலாம்! 1961 இல் ஒரிஸா மாநிலத்தில் ஹிராகுட் அணையில் வெள்ளம் நிரம்பி, வழிந்தோடி 350,000 கிராமங்கள் மூழ்கியதை நினைவில் வைக்க வேண்டும்.

[கட்டுரை தொடரும்]

தகவல்கள்:

1. Address of A.K. Goswami Secretary of Water Resources, Govt of India [www.ficci.com/media-room/speeches-presentations/2003/Mar]

2. Interlinking Problems By: Suresh Prabhu Task Force Leader The Hindu Editorial [Aug 6, 2003]

3. In a Place where Nature Provides, Mankind Deprives By Christian Monitor [Oct 30, 2002] [www.csmonitor.com/2002/1030/p08s02-wosc.htm]

4. Linking of Major Rivers of India -Bane or Boon ? By: B.P Radhakrishna, Current Science Vol:84 No:11 [June 10, 2003]

5. Planning for Inter-Basin Transfers, Indian National Perspective Plan, Govt of India, Ministry of Water Resources [2003]

6. Linking Rivers Courting Disaster By: Darryl D ‘Monte [www.boloji.com/wfs195.htm] [July 13, 2004]

7. The River Linkages Payoff [June 2003] [www.indiatogether.org/2003/jun/opi-rivers.htm], River Links & Judicial Chinks By Videh Upadhyay [Sep 2003] [www.indiatogether.org/2003/sep/vup-sclinks.htm], Cart Before the Horse By Videh Upadhyay [May 2004] [www.indiatogether.org/2004/may/env-ilrreview.htm]

8. Interlinking Mirages By madurai collective [Dec 8, 2002] By Medha Patkar & L.S. Saravinda (The Hindu Dec 3, 2002)

9. River Linking: Boon or Folly -Water Voices HidustanTimes.com [www.hindustantimes.com/…]

10 The Doubtful Science of Interlinking By: Jayanta Bandyopadhyay & Shama Perveen [Feb 2004]

11 The Hindu Report By: Dr. Kalyanaraman Special Correspondent [April 16, 2003]

12 Govt of India, Ministry of Water Resources Task Force Resolution [December 13, 2002]

13 The Hindu Report By: A. Vaidyanathan [www.hindunet.com] [March 27, 2003]

14 Linking Rivers: Vision or Mirage ? By R. Ramaswamy Iyer, Former Secretary Govt of India Water Resources, Member, Integrated Water Resource Planning, Vision 2020 Committee of Planning Commission.

15 No Rethink on River Links Project: Centre By: J. Venkataraman ‘The Hindu ‘ [Aug 31, 2004]

[www.thehindu.com/2004/08/31/stories]

16 Calamity, Chennai ‘s Thirst By: T.S. Subramanian [March 26, 2004]

17 Case Study of Telugu Ganga Project, India (Water Rights, Conflicts and Collective Action) By: Balaraju Nikku (Doctoral Fellow, Irrigation & Water Engineering Group, Wageningen University Research Centre, Netherlands) [May 2004]

18 California Canal [www.bsi.vt.edu/welbuam/pictures/irrigation.html]

19 All American Canal Boulder Canyon Project [www.usbr.gov/dataweb/html/allamcanal.html]

20 Colorado River Aqueduct, Parker Dam, Central Valley Project By: Cactus Jim [June 2002]

21 Indian Priest uses Engineering Training to clean up Ganges By Denise Brehm, MIT News, Mass (U.S.A) http://web.mit.edu/newsoffice/tt/1998/dec09/ganges.html [Dec 9, 1998]

22 India ‘s Ganges A Holy River of Pollution -Clean the Ganges Campaign (Project 130) [Jan 13, 2001]

23 Sacred Ganges Carries Toxic Pollution By E-Law U.S. Staff Scientist Mark Chernaik [www.elaw.org/news/ebulletin/] (2001)

24 The Ganges River By: Ashok Dutt M.A. Ph.D. Pofessor of Geography University of Akron, OHIO, U.S.A.

25 The Tehri Dam Project By: Sudha Mahalingam The Hindu (June 1998)

26 Tehri Dam, IRN Fact Sheet By: (Oct 2002)

27 Statement of Supreme Court Ruling on Tehri Dam (Sep 1, 2003)

28 Questions Surrounded Fatal Tunnel Collapse in Tehri Dam Project By: Saibal Dasgupta (Aug 10, 2004)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan] [October 21, 2004] (Part V)

Series Navigation