நீர்வளச் செல்வத்தைச் சீர்கேடாக்கும் தொழிற்சாலைகளின் துர்வீச்சுத் துணுக்குகள் [Water Pollutants Created by Industrial Chemical Di

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


எப்புறம் நோக்கினும் நீர்மயம், நீர்மயமே!

எனினும் அருந்த ஓர்துளி நீரிலமே!

எஸ்.டி. கோல்ரிட்ஜ் [பண்டைப் படகோட்டி]

‘புனித நதிகள் ஓடும் புண்ணிய பூமி இந்தியா பேரளவுத் துர்வீச்சுத் துணுக்குகளை நதியில் கலக்கி நாசமாக்கும் தேசமாக விரைவில் உருவாகி வருகிறது! ‘

குப்தா [1993]

ஆற்றினிலே சுனை ஊற்றினிலே, தென்றல்

காற்றினிலே மலைப் பேற்றினிலே….உயர் நாடு. [பாரத நாடு]

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். [பாரத தேசம்]

மகாகவி பாரதியார்

கிணறு வற்றிய பிறகுதான் நீரின் அருமை தெரிகிறது!

‘கிணற்று நீர் வற்றிய பிறகுதான், தண்ணீரின் அருமை நமக்குத் தெரிகிறது ‘ என்று கூறுகிறார் அமெரிக்க மேதை, பெஞ்சமின் ஃபிராங்கிலின். நாம் ஒவ்வொருவரும் நம்மையும், அண்டை நபர்களையும், நமக்கு ஊதியம் அளிக்கும் பணியகங்களையும், நம்மை ஆளும் அரசாங்கத்தையும் அடிக்கடிக் கேட்க வேண்டிய ஒரு கேள்வி இதுதான்! நாம் நுகரும் காற்றும், அருந்தும் நீரும், நிற்கும் நிலமும் சுத்தமானவையாய் பாதுகாக்கப் படுகின்றனவா ? காற்றுக்கு அடுத்தபடி மனித இனம், உயிரினம், பயிரினம் மூன்றின் வளர்ச்சிக்கும் தேவையானது, தண்ணீர்! நீரில்லாத அண்ட கோளத்தில் உயிரினம் எதுவும் வாழ முடியாது! உணவின்றி ஒரு மாத காலம் வாழக் கூடிய ஒரு மனிதன், நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது கடினமானது! இருபதாம் நூற்றாண்டில் மக்கள் தொகை மும்மடங்காகப் பெருகி, மனிதன் ஒருவனுக்கு தேவையான நீர்வளம் 40% பற்றாக்குறை ஆகிவிட்டது! உலக மக்களில் ஐவரில் இருவருக்கு நீர்ப்பஞ்சம் உண்டாகித் தவிக்கும் நிலைக்கு வந்து விட்டது! ஆசிக் கண்டம் போல் ஐரோப்பிய நாடுகளிலும் மூன்றில் ஒரு பகுதி மக்கள் நீர் பற்றாக்குறையில் பரிதவித்து வருகிறார்கள்! ஐரோப்பாவில் 54% நீர்வளப் பரிமாற்றம் தொழிற் சாலைகளின் தேவைக்கும், 26% வேளாண்மைக்கும், 20% மக்கள் புழக்கத்திற்கும் பயன்பட்டு வருகிறது. இந்தச் சராசரி நீர் வினியோக மதிப்பீட்டு வீதங்கள் நாட்டுக்கு, நாடு, வீட்டுக்கு வீடு வேறுபடுகின்றன. இருபது ஐரோப்பிய நாடுகள் தமது 10% பற்றாக்குறைக் கொள்ளளவை அண்டை மாநிலங்களின் ஆறுகளில் வாங்கிக் கொள்ளும்படி நெருக்கடி நேர்ந்துள்ளது! நெதர்லாந்து, லக்ஸெம்பர்க் இரண்டும் தமது 75% பற்றாக்குறை நெருக்கடியை அண்டை மாநில ஆற்று வெள்ளத்தை வாங்கிக் கொண்டுதான் தீர்த்துக் கொள்கின்றன!

நீர்வளச் செழிப்பை அழிக்கும் இந்தியத் தொழிற்துறைகள்

வட இந்தியாவில் முப்பெரும் பூத நதிகளான கங்கை, யமுனா, பிரமபுத்ரா ஆண்டு தோறும் வெள்ளம் பெருகி பெரும்பான்மையான பரப்பைத் தொட்டுக் கடலை அடைகின்றன. அந்த நதிகளில் தொழிற்சாலைகள் கழிவுத் திரவங்களை வடிகட்டாமல் திறந்து விடுகின்றன! மனிதர்கள் மரணத்திற்குப் பிறகு மோட்சம் புகப் போவதாய் நம்பி, மூன்று நதிகள் கூடும் இடத்தில் மூழ்கிப் பாவங்களைக் கழுவிக் கரைத்து விடுகின்றனர்! சொர்க்க லோக வாயில் வழியாக எண்ணிச் செத்த சடலங்களைக் கங்கா நதியில் வீசி எறிந்து, பிறகு அதே நீரைப் புனித நீராகக் கருதி அருந்துகின்றனர், மானிட இந்துக்கள்! குடி நீரில்லை என்று குமுறிடும் மக்கள், கடவுள் அளித்துள்ள ஆற்று வளத்தை மாசு படுத்தாது வைத்துக் கொள்ள முன்வருவார்களா ? ஒரு மாநிலத்தில் பிறந்து அடுத்த மாநிலத்தில் ஓடிக் கடலில் சங்கமாகும் காவிரி நதிக்கு எஞ்சிய நீரை அனுமதித்து தமிழ்நாட்டு மக்களுடன் பங்கிட்டப் பகிர்ந்து கொள்ள, கர்நாடக அரசு உடன்பட்டு உதவி செய்யுமா ? ஆண்டு தோறும் மழையை எதிர்பார்த்து நிற்கும் தமிழகத்தின் பல நதிகள், மழை யின்றேல் நீரோட்டம் இன்றி எண்ணற்ற மக்கள் இன்னல் படுவது தமிழ் நாட்டின் தலைவிதியா ?

இந்திய ஜனப்பெருக்கமும் நீர்வளப் பற்றாக்குறையும்

உலக ஜனத்தொகையில் சைனாவுக்கு அடுத்தபடி இரண்டாவதாக இருக்கும் இந்தியாவில் மக்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டி விட்டது! அந்தத் தொகை இன்னும் 30 அல்லது 40 வருடங்களில் இரட்டிக்கலாம் என்றும், அதே சமயத்தில் தண்ணீரின் தேவைப்பாடு நான்கு மடங்கு பெருகலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது! 2000 ஆண்டிலிருந்து 2025 இல் நீர்வளத் தேவை 550 BCM கொள்ளளவிலிருந்து 1050 BCM அளவாக விரிவடையும் என்று 1999 உலக வங்கித் தகவல் [World Bank Report:1999] ஒன்று இந்தியாவைப் பற்றி கூறுகிறது. தற்போது பாரதத்தில் 92% நீர்வளம் வேளாண்மைக்கும், 3% தொழிற்சாலைகளுக்கும், 5% இல்லப்பயனுக்கும் உபயோக மாகிறது.

இந்தியாவின் இருபது பெரும் நதிகளில் ஆறின் நீர்மட்டம் இறங்கி ஆண்டுக்கு 1000 கியூபிக் மீடர் கொள்ளளவு குன்றி வருகிறது. பாரத நாட்டில் மனித நீர்வள அளப்பாடு [per Capita Availability] 1947 இல் ஆண்டுக்கு 5000 கியூபிக் மீடர் இருந்தது, 1997 இல் 2000 கியூபிக் மீடராகி, 2025 இல் 1500 கியூபிக் மீடர் ஆகலாம் என்று 1999 உலக வங்கி அறிக்கை கூறுகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் நீர்வள சம்பந்தமான நோயில் நோகும் 0.7 மில்லியன் மக்கள் எண்ணிக்கையில் ஆண்டுக்கு 1000 பேர் மரணம் அடைகிறார் என்று அதே அறிக்கையில் அறிய வருகிறது! தென்னாசியாவில் [இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேசம்] போதிய சுகாதார வசதிகள் இன்மையாலும், துர்நீரைப் பல மக்கள் பயன்படுத்தி வருவதாலும் மலேரியா போன்ற நீர் சம்பந்தமான நோய்கள் தாக்கிப் பல மரணங்கள் நேருகின்றன என்று உலக வங்கி கூறுகிறது.

முப்பெரும் நதிகள் பாயும் வங்காளத்தில் ஆர்ஸெனிக் நஞ்சு

ஆண்டு தோறும் மூண்டு வரும் பேய் மழைகளில் வெள்ளம் திரண்டு வீடுகளையும், ஆடு மாடுகளையும் அடித்துச் செல்லும் மேற்கு வங்காளம் மற்றும் பங்களா தேசத்திலே, பல்வகை நச்சுத் துணுக்குகள் சேரும் குடிநீரை மக்கள் அருந்துவதால் காலரா நோயும், வயிற்றுப் போக்கும் தாக்குகின்றன! கல்கத்தாவின் ஜதாவ்பூர் பல்கலைக் கழகச் சூழ்மண்டல உளவு நிபுணர்கள் 2001 பிப்ரவரியில் ஆராய்ந்து கண்டுபிடித்த தகவலில், மேற்கு வங்காளத்தில் 9 மாவட்டங்கள், பங்களா தேசத்தில் 42 மாவட்டங்கள் ஆகியவற்றின் நிலத்தடி நீரில் ஆர்ஸெனிக் [Arsenic] நஞ்சுவின் அளவு, உலக உடல்நலப் பேரவை [World Health Organization (WHO)] குறிப்பிட்ட வரையறை அளவைத் [50 microg/Litre] தாண்டி விட்டதாக அறிவித்தனர்! அவற்றால் பங்களா தேசத்தில் சுமார் 80 மில்லியன் மக்களும், மேற்கு வங்காளத்தில் 43 மில்லியன் நபர்களும் பாதிக்கப் படலாம்! ஆர்ஸெனிக் நஞ்சு பாதரசத்தை விட நான்கு மடங்கு பாதிக்கும் வீரியம் கொண்டது! அதனால் பாதகம் அடையும் உடற் பாகங்கள்: தோல், லிவர், நரம்புத் தொடுப்புகள், இருதய இரத்தக் குழல்கள், சுவாச உறுப்புகள் முதலியன. தாக்கும் நோய்கள்: புப்புசப் புற்றுநோய், லிவர் வீக்கம், மஞ்சட் காமாலை, காது செவிடாய்ப் போதல், பலவித செல் கார்ஸினோமா [புற்றுநோய்] போன்றவை சில.

இதுவரை நிபுணர் குழு பங்களா தேசத்தில் 492 கிராமங்களில் 10990 நீர் மாதிரிகளையும், மேற்கு வங்காளத்தில் 58,166 நீர் மாதிரிகளையும் எடுத்து ஆய்வகத்தில் சோதித்துள்ளது. அவற்றில் உள்ள ஆர்ஸெனிக் தீட்டை உளவும் போது, முறையே 59%,34% மாதிரிகளில் 50 microg/L எல்லை அளவுக்கு மேற்பட்டு காணப்பட்டன! ஆர்ஸெனிக் தீண்டிய பகுதிகளில் வாழ்ந்த இந்தியர், பங்களா தேசிகளின் மயிர், நகம், மூத்திர மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில், முறையே 77%,93% நபர்களின் உடல் உறுப்புகளில் பாதுகாப்பு அளவுக்கு மேலாக ஆர்ஸெனிக் நஞ்சு பதுங்கி யிருந்தது அறியப்பட்டது! பங்களா தேசத்தில் 42 இல் 27 மாநிலங்களிலும், மேற்கு வங்காளத்தில் 9 இல் 7 மாநிலங்களிலும் மக்களில் சிலர் ஆர்ஸெனிக் தோல் சிதைவு நோய்களால் [Arsenical Skin Lesions] பீடிக்கப் பட்டிருந்தனர்! அங்குமிங்குமாக 29000 பேரை மேற்கு வங்காளத்திலும், 11000 பேரை பங்களா தேசத்திலும் பார்த்ததில் முறையே 15%, 25% நபர்கள் தோல் சிதைவு நோயால் பாதிக்கப் பட்டிருந்தனர்!

காக்கர் நதியில் பஞ்சாப் தொழிற்சாலைகள் கலக்கும் துர்வீச்சுகள்

1999 மார்ச் 4 ஆம் தேதி சந்திகார் நகருக்கு அருகில் உள்ள பங்கார்பூரில் ஓடும் காக்கர் நதியில் அடர்த்தியான குமிழ்கள் நிரம்பிய கரும் பழுப்பு நிறத்தில் நுரைத் தீவுகள் பல இடங்களில் மிதப்பதை டிரிபியூன் நாளிதழ்த் தகல்வாதி ஒருவர் [Tribune India Reporter] கண்டு படமெடுத்து வெளியிட்டுள்ளார்! 24 மைல் தூரம் நீண்ட நதிக் கரைகளில் உள்ள தொழிற்சாலைகள் சுக்நா, ஜர்மல் என்னும் சிற்றாறுகளில் அனுதினமும் வெளித்தள்ளும் துர்வீச்சுத் திரவங்கள் துப்பிய பழுப்பு நிற நுரைகள்தான் அவை! பன்ச்குலா விலிருந்து வரும் அடுத்த ஒரு சிற்றாறு சுக்நாவுடன் சந்திக்கும் காஜிப்பூரில் இரண்டு காகிதத் தொழிற்சாலைகளின் டையாக்ஸின் [Dioxin] நச்சுத் துணுக்குகள் கலக்கின்றன! பர்வாலா அருகில் உள்ள பால்துறை நிலையம் ஒன்று வெளியேற்றும் கழிவுத் திரவங்களை ஜர்மல் சிற்றாறில் கொட்டுகிறது! அநேக தொழிற் துறையகங்களின் கழிவுகளும், இரசாயன எச்சத் துணுக்குகளும், திரவங்களும் ஜர்மல் சிற்றாறில்தான் சங்கமம் அடைகின்றன.

சந்திகாரின் ஆடுமாடு வெட்டுச்சாலைகளின் துர்நாற்றம் பிடித்த மாமிசக் கழிவுகள் யாவும் காக்கர் நதியில்தான் கலக்கும்படி விடப்படுகின்றன! நீர்வளம், நிலவளம், காற்றுவளம் ஆகியவற்றைச் சீரழிக்கும் இந்தப் பழுப்புக் கழிவுகளின் வெளியேற்றத்தை நிறுத்தும்படி உடல்நல நிபுணர்கள் பறைசாற்றுவதுடன், மனித இனம், உயிரினம், பயிரினம் ஆகிய மூன்றின் வளர்ச்சிகளை அவை நோயில் தள்ளி முடமாக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர்!

காக்கர் நதி கழிவு வெளியேற்றங்களுக்கு ராஜஸ்தான் மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தாலும், பஞ்சாப் கழிவு வெளியேற்றக் கட்டுப்பாடுத் துறையகம் [Punjab Pollution Control Board (PPCB)] எச்சரிக்கை, நிறுத்த அறிவிப்புகளை அனுப்பி இருந்தாலும், சில தொழிற்சாலைகள் தொடர்ந்து கழிவு மாசுக்களை நதியில் கலக்கிக் கொண்டுதான் இருந்தன! ராஜஸ்தானில் அந்த நீரைப் பயன்படுத்தும் பகுதிகளில் மஞ்சள் காமாலை நோய் [Jaundice] பரவுவதைப் பஞ்சாப் கட்டுப்பாட்டுத் துறையகம் பஞ்சாப், ஹரியானா அரசாங்கங்களுக்குச் சுட்டிக் காட்டியது! பதினொரு தொழிற்சாலைகளுக்கு கண்டன அறிக்கைகள் விடப்பட்டன. அவற்றில் மூன்றை உடனே மூடும்படி உத்தரவுகள் பறந்து, மின்சக்தி பரிமாற்றமும் அற்றுவிடப் பட்டது! அடுத்து இரண்டின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆறு தொழிற்சாலைகள் ஆணைக்குக் கீழ்படிந்து, நியதிப்படிக் கழிவுச் சுத்தீகரிப்புச் சாதனங்களை அமைத்து, வெளிவீச்சுகளை வடிகட்டி நதியில் அனுப்பின. இரண்டு தொழிற்கூடங்கள் மட்டும் எச்சரிக்கைகளையும் மீறிக் கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தன. பக்கத்து நகர்களுக்கும், கிராமங்களுக்கும் குடிநீராகப் பயன்படும் அந்த ஆறுகளின் அருகே ஆழத் துளைக் கிணறுகளைத் [Deep-bore Tubewells] தோண்டிப் பஞ்சாப் பொதுநலத் துறையகம் நீர் மாதிரிகளைச் சோதித்தது. அவற்றில் பல நீர் மாதிரிகள் துர்நாற்றம் வீச்சுடன் மாசு படுத்தப் பட்டவையாய் அறியப்பட்டன!

அமெரிக்காவின் காற்று, நீர் வளங்களில் துர்வீச்சுத் துணுக்குகள்

சுமார் 250 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 33 விநாடிக்குப் பிறகு ஒரு மனித உயிர் இருதய நோயால் மாண்டு வருகிறது! அமெரிக்க நகரங்களில் இருதய நோயால் மரணம் அடைவோர் எண்ணிக்கைத் துர்வாயுக்களால் ஏற்படும் புப்புசப் புற்றுநோய், மூச்சு முறிவு நோய்கள் [Respiratory Ailments] ஆகியவற்றின் இறப்புகளைப் போல் இரட்டித்து விட்டன என்று அகிலவலைப் [www.AmeriPure.NET] புதுத் தகவல் ஒன்று மூலம் அறியப் படுகின்றது! காற்றில் கலந்துள்ள துர்வாயுக்களால் விளையும் 68% மரணங்கள் இருதய நோய் அல்லது இருதய இரத்த சம்பந்தமானவை. துர்வாயு மாசுக்கள் இருதய இரத்த அனுப்புக் குழல்களில் வீக்கங்களை உண்டாக்கி, விரைவில் குழல் பரப்பைச் சிறுத்து விடுகின்றன. வாயுவைச் சுத்தம் செய்யும் அம்ரிபியூர் வடிகட்டுச் சாதனங்கள் [AmriPure Air Filters] தற்போது 5 மில்லியன் தொழிற்துறைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுக் கடந்த 17 வருடங்களாகப் [2001] பணி புரிந்து வருகின்றன.

நிலத்தடித் தெருக்கழிவு நீரோடையின் தரம் [Stormwater Quality] அதில் சங்கமம் அடையும் அபாயகர இரசாயனக் கலவைகள் [Hazardous Chemicals], பூச்சிகொல்லிகள் [Pesticides], களைக்கொல்லிகள் [Herbicides], வேளாண்மை உரங்கள் [Fertilizers], நாய் பூனை மலங்கள் [Pet Wastes], மோட்டார் வாகனச் சாதனங்கள் (மசைவு ஆயில், எஞ்சின் தணிப்புத் திரவம்) போன்ற கழிவுகளைப் பொருத்தவை. அவற்றை நேரடியாகத் தெருக்கழிவு ஓடையில் புகுத்துவது தவறாகும். நகராட்சிக் கழகங்கள் அவற்றை எவ்விதம் அப்புறப் படுத்துவது என்று அமைத்துள்ள விதிகளின்படி நாம் நடக்க வேண்டும். புல்தளங்களைப் பசுமையாக்கத் தெளிக்கப்படும் சில இரசாயனக் கலவைகள் [Weed & Feed, Weed Killers] மழை நீரில் கரைக்கப் பட்டு நேராக ஆற்றிலோ அல்லது ஏரியிலோ சேர்ந்து குடிநீரை மாசு படுத்துகிறது. மலக்கழிவு நீர், குளிப்பு நீர் மற்ற கழுவு நீர் யாவும் தனியாக வேறு மலக்கழிவு நீரோடையில் [Sewage Drain Water] சேர்ந்து மலக்கழிவு சுத்தீகரிப்புக் கூடத்திற்குச் [Sewer Treatment Plant] செலுத்தப் படுகிறது.

அகில நாட்டு அணுத்துறைப் பேரவையின் நீர்வளப்பணி:

2001 ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி ‘உலக நீர்வள நாள் ‘ [World Water Day 2001] எனக் கொண்டாடப் பட்டது! அடுத்து வரும் பாத்தாண்டுகளில் பெரும் நீர் நெருக்கடி விளையப் போவதை, ஐக்கிய நாடுகள் பேரவை [United Nations] முன்னறிந்து பல்லடுக்குத் திட்டங்களுக்கு விதை யிட்டது. அந்த திட்டங்களின் முக்கிய குறிக்கோள், மனித நலத்திற்குத் தண்ணீரின் ‘நீர்வளத் தரத்தை உயர்த்திப் பேரளவு நீர்வள உற்பத்தி ‘ ஒன்றே! அகில நாட்டு அணுத்துறைப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)] 9 மில்லியன் செலவழித்து, நாற்பது உலக நாடுகளில் நீர்வளச் சிறப்பாளிகளை அனுப்பி எவ்விதம் குடிநீர், புழக்கநீர் விருத்தியாகிறது, எப்படி நீர் கையாளப் படுகிறது என்று அறிந்திட முற்பட்டது. அடுத்து அணுசக்தியின் வெப்பத்தைப் பயன்படுத்தி ‘உப்புநீக்கி நிலையங்களை ‘ [Desalination Plants with Nuclear Energy] நிறுவிக் கடல் நீரைக் குடிநீராகவும், புழக்க நீராகவும் மாற்றும் திட்டங்களுக்கும் நிதியைச் செலவு செய்தது. மேலும் ‘கதிரியக்க உளவிகளைப் ‘ [Radioactive Tracers] பயன்படுத்தி, மனித நலத்தைக் கெடுக்கும் நீரில் நிரம்பியுள்ள துர்வீச்சுத் துணுக்குகளை அறியவும், அளக்கவும் திட்டங்களை உருவாக்கியது.

நான்கு முக்கிய நீர்வளப் பொறித்துறைத் திட்டங்களை அகில நாட்டு அணுத்துறைப் பேரவை ஊக்குவித்துப் பரப்பி வந்தது.

1. உடல்நலப் பாதுகாப்பு நீர்வளப் பரிமாற்றம்:

உதாரணமாக பங்களா தேசத்தில் குடிநீரில் மனிதர் உடல்நலத்துக்கு இடர்தரும், ஆர்ஸெனிக் நஞ்சு

தீண்டப்பட்டது [Arsenic Contamination] அறியப்பட்டு, நிலத்தடி நீர்ப் போக்கு ஆராயப் பட்டது.

2. கடல் நீரிலிருந்து குடிநீர் உற்பத்தி:

எகிப்து, இந்தியா, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் அணுசக்தியைப் பயன்படுத்திக் கடல்நீரைக் குடிநீராக்கும் ‘உப்புநீக்கிப் பயிற்சி நிலையங்களைக் ‘ [Desalination Demonstration Plants] கட்டி, அணுவியல் உப்புநீக்கிப் பொறிநுணுக்க [Nuclear Desalination Technology] இயக்க முறையை நிலைநாட்டுவது.

3. நதிகளையும் கடல்களையும் சூழ்வெளித் துர்வீச்சுகளிலிருந்து பாதுகாப்பு:

கருங்கடலைச் சுற்றி இருக்கும் துருக்கி போன்ற மற்ற நாடுகளில் IAEA உதவியில் இரசாயனக் கதிரியக்க துர்வீச்சுத் துணுக்குகளைத் தொழிற்சாலைகளில் உளவிச் செல்லும் விஞ்ஞானத் துறையை விரியச் செய்வது.

4. பயிர்விளையும் நிலவளங்கள் விருத்தி:

தற்போது குடிநீராகப் பயன்படும் நல்ல தண்ணீரே வாய்க்கால் வழியோடி, வயல்களில் வேளாண்மைப் பயிர்களை விளைத்து வருகிறது. UNFAO [UN Food & Agriculture Organization] IAEA இரண்டும் சேர்ந்து ஆசியா, ஆஃபிரிக்கா கண்ட நாடுகளில், வேளாண்மைக்கு உப்புநீர் அல்லது சிற்றளவு உப்புள்ள நீர் உபயேகமாகி பயிர் விளைச்சல் செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளன.

நீர்வள நச்சு மாசுக்களால் விளையும் உடல்நலத் தீங்குகள்:

வேளாண்மை உரக்கழிவுகள், தொழிற்துறை துர்வீச்சுகள், இல்லங்களின் கழிவு நீர்கள் மூன்றும் ஓடி ஆறுகளிலே, ஏரிகளிலோ அல்லது நிலத்தடியிலோ முடிவில் சென்றடைகின்றன. அவற்றில் உடல்நலக் கேடும், உயிரழிவுப் பாதகமும் அளிப்பவை: பூச்சி கொல்லிகள் [Pestcides], களைக் கொல்லிகள் [Herbicides], பெயிண்ட், மசவு ஆயில், உரம் போன்ற இரசாயனப் பொருட்கள் [Chemicals], சீர்கெட்ட மாமிசக் கழிவுகள் [Cysts], கன உலோகங்கள் [Heavy Metals], இனார்கானிக் கழிவுகள் [Inorganics] போன்றவை. அரை மைக்கிரான் நுண்ணிய வடிகட்டுச் சாதனம் பலவித மாசுத் துணுக்குகளை மட்டும் நீக்கிவிடும். ஆனால் மீள்தடுப்பு நீர்ச் சுத்தீகரிப்புக் [Reverse Osmosis] குடிநீர்ச் சாதனங்கள் மேற்கூறிய பல்வேறு துர்வீச்சுத் துணுக்குகளையும், இரசாயனக் கூறுகளையும் வடிகட்டு இரசாயன முறையில் உறிஞ்சி அகற்றிவிடும்.

பூச்சி கொல்லி, களைக் கொல்லி, இரசாயனக் கழிவுகள்:

பென்ஸீன் [Benzene] புற்றுநோய், லியூக்கிமியா, அனிமியா நோய் உண்டாக்கும்.

லின்டேன் [Lindane], எதைல் பென்ஸீன் [Ethyl Benzene] நரம்பு நோய், கிட்னி முறிவு, லிவர் சிதைவுகளை உண்டாக்கும்.

டினோஸெப் [Dinoseb] தைராய்டு பாதகம், கருத்தரிப்பு உறுப்புகள் சீர்கெடும்.

குளோரோஃபார்ம் [Chloroform] நரம்பு நோய், தசைச் சிதைவுகள், புற்றுநோய் உண்டாகும்.

ஈயம் [Lead] குழந்தைகளுக்கும், கர்ப்பிணிக்கும் நோயுண்டாக்கும் நஞ்சு, நரம்புத் தொடுப்பு, கிட்னி முறிவுகள்.

பாதரசம் [Mercury] கிட்னி முறிவு, நரம்புத் தொடுப்புச் சிதைவு.

ஆஸ்பெஸ்டாஸ் [Asbestos] புற்றுநோய் உண்டாக்கும்.

வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளில் நீர்வளத் தூய்மை:

புதிய கண்டமான வட அமெரிக்கா எங்கெங்கு நோக்கினும் ஆறுகளும், ஏரிகளும் கொண்டு பெருவாரியான குடிநீர் வளச்செழிப்பு படைத்தது. அப்பெரும் கண்டத்தை ஐக்கிய மாநில அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ வென்னும் முப்பெரும் குடியரசு நாடுகள் ஆட்சி செய்து வருகின்றன. சுபீரியர், மிச்சிகன், ஹியூரான், ஈரி, அண்டாரியோ வென்னும் ஐம்பெரும் சுவைநீர் ஏரிகள் ஆண்டு முழுவதும் மழைப் பொழிவாலும், பனிப்பூ உருக்காலும் நீர் நிரம்பி வழிந்து, நீண்ட தூரம் ஸெயிண்ட் லாரென்ஸ் நதி வழியாகக் கடலை அடைவது, வட அமெரிக்காவின் வரப்பிரசாதம் ஆகும்! ஆனால் ஏரிகளின் கரையில் நீரெடுத்துக் கொள்ளும் கனடா, அமெரிக்காவின் எண்ணற்ற தொழிற்சாலைகள் போதிய அளவில் வடிகட்டாது, கழிவு நீரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டு வருகின்றன! மிஸ்ஸிசிபி, மிஸ்ஸெளரி, கொலராடோ, செந்நதி, கொலம்பியா, ஓஹையோ, மெக்கென்ஸி, ஃபிரேசர் போன்ற பெரு நதிகள் பேரளவு நீர்வளத்தைத் தொழிற்சாலைகளுக்கும் வேளாண்மைக்கும், குடிநீராகவும் ( ?) பயன்பட்டு வருகின்றன. கப்பல், படகு, கட்டுமரப் போக்குவரத்துக்கு உபயோகப்படும் ஆற்றுப் போக்கிலும், ஐம்பெரும் ஏரிகளிலும் கழிவுத் திரவங்கள் பல இடங்களில் புகுவதுடன் குப்பை கூளங்களும் சில நகரங்களில் தள்ளப் படுகின்றன.

1989 இல் ஐம்பெரும் ஏரிகளின் ஆணைக்குழு [Council of Great Lake Governors], சூழ்மண்டலப் பாதுகாப்புப் பேரவை [Environmental Protection Agency (EPA)] வரையறை யிட்ட நீர்வளச் சீராக்கு நியதிகளைப் பின்பற்ற முன்வந்தது. ஐம்பெரும் ஏரிகளின் உயிரினக் காப்பு [Great Lakes Ecosystem] ஏற்பாடுகளை ஒப்புக் கொண்டு தேசீய துர்வீச்சு வெளியேற்றத் தடுப்பு [National Pollutant Discharge Elimination System (NPDES)] விதிகளுக்கு உடன்பட்டுத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதனால் அமில மழைப் பொழிகள் குறைந்து, ஏரிகளிலும், நதிகளிலும் இப்போது மின்வளம் செழித்து விருத்தி யடைகிறது. 1997 மார்ச் 23 இல் தூய நீர் நிலைப்புச் சட்டம் [Clean Water Act] நிறைவேற்றப் பட்டு, ஏரிகளைச் சுற்றியுள்ள மாநிலங்களான இல்லினாய்ஸ், இண்டியானா, மிச்சிகன், மின்னிஸோடா, நியூ யார்க், ஓஹையோ, பென்ஸில்வேனியா, விஸ்கான்ஸின், கனடாவின் அண்டாரியோ ஆகியவை கடும் நீர்த்தர நிலைகளுக்குக் கட்டுப்பட்டு வந்தன.

ஏரிகளையும், நதிகளையும் தூய்மைப்படுத்தும் இந்தியா:

‘துர்வீச்சு மாசுக்கள் கலக்கப்பட்ட ஏரிகளையும், ஆறுகளையும், நீர்ச்சேமிப்புத் தடாகங்களையும் தூயதாக்கி முந்தைய நிலைக்குச் சீராக்கும் பணியில் முதலாவது நாடாக இருக்கப் பாரதம் உறுதிமொழி எடுத்திருக்கிறது! இந்தியர் நதிகளைப் புனிதமாகக் கருதுபவர்! அவரது இந்த வேட்கை ஆன்மீகமும், ஞான பூரணமும் கொண்டது ‘ என்று கிலீன் புளோ இன்டர்நேசனல் கம்பெனியின் பிரதம அதிபதி, ராபர்ட் லேயிங் [CEO, Clean-Flo International (1999)] கூறுகிறார். 1999 மார்ச்சு மாதத்தில் நைட்டிரஜன், ஃபாஸ்ஃபரஸ் கலந்து மாசுபடுத்தப் பட்ட பாரத்தின் பத்து ஏரிகளைச் சுத்தம் செய்ய, அமெரிக்காவின் கிலீன் புளோ இன்டர்நேசனல் கம்பெனி [Clean-Flo International Company] முன்வந்து வெற்றிகரமாகச் செய்து முடித்தது. டெல்லியில் அமைக்கப்பட்ட விஸிடெக்ஸ் அறச்சாலை [Wisitex Foundation] வெற்றிப்பணியைப் பாராட்டிக் கிலீன் புளோ கம்பெனிக்குப் புதிய சூழ்வெளித் தூய நுணுக்கப் பரிசளித்துக் [Innovation in Environment Technology Award] கெளரவித்தது! அதைப் பின்பற்றி இந்திய அரசாங்கம் அடுத்து பல ஏரிகள், நீர்த்தேக்கங்கள், நதிகளைச் சுத்தீகரிப்பு செய்ய முற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆசியச் சூழ்மண்டலக் காப்புக் கூட்டகம் [US Asian Environmental Partnership (US-AEP)] கிலீன் புளோ கம்பெனியை, இந்தியாவுக்கு அறிமுகம் செய்ததுடன் ஆற்று, ஏரி, கால்வாய், தேக்க நீர்ச் சுத்தீகரிப்புப் பொறி நுணுக்கத்தையும் புகுத்தியது. கிலீன் புளோ பம்பாயில் உள்ள ஏரி ஒன்றைச் சுத்தமாக்கிச் சீரிய நிலைக்குக் கொண்டு வந்தது. 2001 இல் அமெரிக்க அரசு சூழ்மண்டல நிபுணர்களை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி கிலீன் புளோ கம்பெனி சுத்தம் செய்த பாம்பே ஏரியை ஆராயத் திட்டமிட்டது. காப்புக் கூட்டகத்தின் ஆணையாளர் காப்டன் ஃபான் மில்லார்டு [Captain Von Millard] ஆர்வமும் அப்போது அதிகரித்தது. பாம்பேயிக்கு அருகில் பத்து ஏக்கர் பரப்பளவில் பாசானம் படிந்த தானாவின் கச்ராலி ஏரி [Kachrali Lake] 70% பகுதியில் கொடி படர்ந்து, நீரடி மட்டத்தில் காற்றில்லாது, மண்டி நிரம்பி நைட்டிரஜன், ஃபாஸ்ஃபரஸ் ஆகியவற்றை வெளியேற்றி துர்நாற்றம் அடித்தது. கிலீன் புளோ கம்பெனியின் பிராண வாயூட்டும் சுமுக ஓட்ட சாதனம் [Clean-Flo Continuous Laminar Flow Inversion & Oxygenation System] பயன்படுத்தப்பட்டு பாரதத்தில் மொத்தம் 500 ஏக்கர் பரப்புள்ள பத்து ஏரிகள் சுத்தமாக்கப் பட்டன.

நீர்வளப் பற்றாக்குறை நிவிர்த்திச் சில நிதிச்செலவு வழிகள்:

சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் இன்மையும், பற்றாக்குறையும் மக்களைத் தவிப்பு நிலையில் தள்ளி விட்டுள்ளது! தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க மாநில அரசுகளும், மத்திய அரசாங்கமும் என்ன முயற்சிகள் செய்யலாம் ? கடலருகே உள்ள பகுதிகளில் மாபெரும் உப்புநீக்கி நிலையங்களை நிறுவி, நீர் பரிமாற்றம் செய்யலாம். மலையருகே உள்ள பகுதிகளில் மலைகளை அணைகளால் இணைத்து அரணாக்கிச், செயற்கை நீர்த்தேக்கங்களை உண்டாக்கி மழை வெள்ளத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மழை பெய்யும் பகுதிகளில், மாபெரும் செயற்கை ஏரிகளை வெட்டி, நீரைத் திரட்டி வைத்துக் கொள்ளலாம். நதிகள் ஓடும் பகுதிகளில் நீரைத் திசை திருப்பும் கால்வாய்கள் வெட்டி, செயற்கை ஏரிகளில் நீரைச் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். குற்றால அருவிகளின் நீரை, மலைமேல் உண்டாக்கிய செயற்கை மலையரணில் திருப்பிச் சேமித்துத் தூய்மையாக்கிப் பாட்டில் நீர் பரிமாறும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். நீரற்ற வரட்சிப் பகுதிகளில் மாநில அரசு, பல இடங்களில் ஆழக் கிணறுகள் அல்லது துளைப் பைப்பு நீரூற்றுகள் தோண்டலாம். நீர்வளத்தைப் பெருக்க அரசாங்கம் இப்பணிகளைப் புரிவது மட்டுமின்றி, அவற்றில் மாசுகள் படாத வண்ணம் கண்காணித்து வருவதுடன், நீரை அடிக்கடிச் சோதித்தும் வர வேண்டும்.

வங்கத்தில் மீறிவரும் முப்பெரும் நதிகளின் வெள்ள மிகுதியைக் கடல் விழுங்கிக் கொள்வதற்கு முன்பு, திசைதிருப்பி தென்னிந்திய நதிகளில் இணைத்துக் கொள்ளும் இமாலயப் பணியை எப்போது அரசாங்கம் துவக்க முன்வரப் போகிறது ? தென்னிந்தியாவை முப்புறமும் சுற்றியுள்ள கடல்நீரை எடுத்து உப்பகற்றிக் குடிநீராகவோ, புழக்க நீராகவோ மாற்ற பரிதிக்கனல் சக்தியையோ அல்லது காற்றாடி யந்திர சக்தியையோ பயன்படுத்தும் காலம் எப்போது கண்விழிக்கப் போகிறது ? மையக்கிழக்கு நாடுகளில் [Middle East Countries] கனல் வெப்பத்தையோ அல்லது மின்சக்தியையோ உபயோகித்து, ‘உப்புநீக்கி நிலையங்களில் ‘ [Desalination Plants] கடல்நீரை குடிநீராகவோ, புழக்க நீராகவோ உண்டாக்கப்பட்டு வருகிறது. அந்த உப்புநீக்கி முறைகளைப் பின்பற்றிக் கடல்நீர் குடிநீரானால், தண்ணீர் பற்றாத தென்னாட்டவரின் நீர்ப்பஞ்சம் ஓரளவு குறையும். கடற்கரை சூழ்ந்த தென்னாட்டுப் பகுதிகளில் ‘உப்புநீக்கி நிலையங்கள் ‘ நிறுவிப் புழக்கநீர் படைப்பதற்கு மாநில அரசுக்களும், மத்திய அரசாங்கமும் இணைந்து பணி புரிய வேண்டும்.

தகவல்கள்:

1. Water Pollution, Sustainable Water Management India [1999]

2. India Cleans up Polluted Lakes & Rivers [Jan 1999]

3. Industry Effluents defile Ghaggar By Bipin Bhardwaj [www.tribuneindia.com/1999/99mar05/punjab.htm] [Mar 5, 1999]

4. National Geographic Special Edition Water The Power, Promise & Turmoil of North America ‘s Fresh Water [1993]

5. Acid Rain www.zephryus.demon.co.uk/geography/resources/environ/acid.html

6. Toxic Air Pollutants Facts www.deq.sate.la.us/permits/air/atoxfact.html [Jan 10, 2000]

7. Ground Water Arsenic Contamination in Bangladesh & West Bengal India, By U.K. Chowdhury, B.K. Biswas & Others [Feb 2001]

8. International Atomic Energy Agency [IAEA Staff Report] The Vital Missing Elements [Mar 15, 2001]

9. Water Quality Guidance for the Great Lakes System in North America [U.S.A & Canada] [www.epa.gov/docs/great_lakes/wqggls.txt.html]

10 Health Effects of Water Pollutants [Feb 1997]

11 Forms of Surface Water Pullution [www.cotf.edu/ete/modules/waterq/forms.html]

12 Polluting our Rivers -Ohio Valley Environmental Coalition [www.ohvec.org/old_site/streams08.htm] [Sep 4, 2001]

13 A Global Asset On the Research Front – Preserving Water Resources, European Knowhow.

****

jayabarat@tht21.com [S. Jayabarathan]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா