7. செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – செல்பேசிக்குள்ளே!!

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி.


புதியன புகுந்தாலும் பழையன முற்றிலும் கழிவதில்லை என்பதை மின்னணுவியலில் கருவிகளில்

நாம் பார்க்கலாம். Compact Disk Drive எனப்படும் குறுவட்டு இயக்ககங்கள் அறிமுகம் ஆனாலும் நெகிழ்வட்டுகள் (Floppy disks) கணினியில் தேக்ககங்களாக இன்றும் இருந்து வருகின்றன. நாம் தொடர்பாடப் பயன்படுத்தும் செல்பேசிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. செல்பேசிகளிலோ புதிய அம்சங்கள் புகும்போது பழையன முற்றிலும் கழிவதில்லை. உதாரணத்துக்கு, 1997/98 களில் வந்த இலக்கமுறை CDMA செல்பேசிகள் சந்தைக்கு வந்த போது அவை பழைய ஒப்புமை (Analog) செல்லுலர் அமைப்பில் வேலை செய்ய ஏற்புடையதாக (Compatible) வடிவமைக்கப்பட்டன. இப்படி ஏற்புடையதாக வடிவமைக்கப்படும் செல்பேசிகள் Dual-Mode என்ற அடைமொழியால் வழங்கப்படுகின்றன. Dual-Mode என்றதும் ‘இரு-பாங்கிலும் வேலை செய்யவல்ல ‘ செல்பேசி என்று கொள்ளலாம். செல்பேசி விளம்பரங்களில் Dual-Mode என்பதற்கு விளக்கம் அளிக்காமலே சொல்லப்படுகிறது. டிஜிடல் (இலக்கமுறை) அமைப்புகள் இல்லாத சேவை வட்டாரங்களிலும் உங்கள் செல்பேசி வேலை செய்ய வல்லதாக வடிவமைக்கப் பட்டுள்ளது என்று கொள்க! Triple-Mode செல்பேசிகளும் உள்ளன. அய்ரோப்பாவில் பரவலாகப் புழக்கத்தில் உள்ள GSM எனப்படும் நேரம் பங்கிட்டு அணுகும் செல்பேசி அமைப்பிலும் வேலைசெய்யவல்லதாக இருக்கும் செல்பேசி ‘Triple-Mode ‘ என்று செல்லப்படுகிறது.

புதிய செல்பேசிகள் இலக்கமுறை ஒளிப்படக் கருவியோடு (Digital Camera) வெளிவருகின்றன. இதற்கு பெரிய அளவில் இளைய தலைமுறையினரிடம் வரவேற்பு இருந்தாலும் ஒரு உருப்படியான அம்சமாகத் தெரியவில்லை. 95% செல்பேசிகள் 2005 ஆம் ஆண்டுக்குள் மேம்பாடுடை-911 (Enhanced-911) வசதியோடுதான் வர வேண்டும் என்ற விதிமுறை FCC விதித்துள்ளது. அவசரநிலையில் (Emergency) அமெரிக்காவில் உதவியை நாட, செல்பேசிகளிலிருந்து 911 அவசரநிலை பணிசெய்குனரைக் (Operator) கூப்பிடும் போது, பேசியின் இருப்பிடத்தை, செல்லுலர் அமைப்பு செய்குனருக்கு அறியப்படுத்த வேண்டும்! என்பதே விதிமுறை. இந்த விதிமுறையின் பின்னணியும் அதை நடைமுறைப்படுத்தும் அமைப்பையும் தனி ஒரு

தொடரில் நாம் பார்க்கலாம்.

படம் 13. செல்பேசியின் கட்ட வரைபடம்.

செல்பேசிகள் பல வடிவங்களில், பலவேறுபட்ட அம்சங்களோடு வந்தாலும் சில பொதுநிலை செயற்பணி கட்டங்கள் எல்லா செல்பேசிகளிலும் உள்ளன. படம் 13 Qualcomm/SONY 5-6 ஆண்டுகளுக்கு முன் சந்தையில் வெளிவந்த செல்பேசியின் படத்தோடு உள்ளிருக்கும் கட்டங்களையும் சித்தரிக்கின்றது.

1. RF Section (ரேடியோ அலைவரிசை பிரிவு)

ரேடியோ அலைவரிசை (RF) வடிப்பான்கள் (filters), குறை-இரைச்சல் பெருக்கிகள் (low-noise amplifiers) மற்றும் அதிர்வெண் தாழ்த்தி (Downconverter) கொண்ட ஏற்பி, RF சமிக்கையை தாழலைவரிசைச் சமிக்கையாக (Baseband Signal) மாற்றி வெளியிடுகிறது. செலுத்தி துணையமைப்பில் ஒப்புமை தாழலைவரிசை சமிக்கைகள் வடிக்கப்பட்டு, பிறகு அதிர்வெண் உயர்த்தப்பட்டு (Upconversion), வலுக்கூட்டப்படுகிறது (Power Amplification).

2. ரேடியோ அலைவரிசை (RF) ஏற்பி வெளியிடும் தாழலைவரிசை சமிக்கை இலக்கமுறைச் சமிக்கையாக மாற்றி DSP பிரிவுக்குள் அனுப்பி வைக்கிறது ஒப்புமை தாழலைவரிசைப் பிரிவு. (Analog Baseband). DSP பிரிவிலிருந்து வெளியேறும் குறிமுறையாக்கப்பட்ட (encoded) இலக்கமுறை (Digital) சமிக்கை ஒப்புமை வடிவுக்கு மாற்றப்படுவதும் Analog Baseband பிரிவில் தான்.

CODEC என்பது குறிமுறையாக்கி (Encoder) மற்றும் குறிமுறை அவிழ்ப்பி (Decoder) ஆகிய இரண்டையும் குறிக்கும் சுருக்கெழுத்து. நுண்பேசியிலிருந்து வரும் குரலலை இலக்கமுறையாக்கப்பட்டு (Digitized) சில குறிப்புகள் மேலதிகமாக ஏற்றப்படுகின்றன (Encoded). ஏற்கப்படும் சைகை DSP யிலிருந்து இரும எண்களாக (binary) வரும் போது, அவற்றிலிருந்து குறிப்புகளை அவிழ்த்து (decoding), ஒப்புமைக் குரல் வடிவுக்கு கொண்டுவந்து (digital-to-analog conversion) ஒலியாக்கிக்கு அனுப்பி வைக்கிறது CODEC.

3. ROM,SRAM, Subscriber Identity Module (சந்தாதாரர் அடையாள அட்டை)

ROM, SRAM பேசியின் செயலாக்க நிரல் (operating system) , பயனர் அழைக்க விரும்பிய தொலைபேசி எண்களின் அடைவு (phone directory), மின்னியல் அடையாள எண் (ESN) போன்ற தகவலின் தேக்ககம் (storage). சில பேசிகள் SID மற்றும் MIN போன்ற குறிப்புகளை தேக்ககத்தில் வைக்கின்றன. வேறு சில பேசிகளில் SIM அட்டையில் சந்தாதாரர் குறிப்புகள் பதிக்கப்பெற்று, அட்டையை பயனர் செருகும் போது பேசியின் நுண்செயலியால் படிக்கப்படுகின்றது.

4. DSP/Microprocessor

இலக்கமுறை (Digital) வடிவில் இருக்கும் சமிக்கைகளைக் கையாண்டு பல கணிப்புகளை அதிவேகத்தில் நடத்தும் பணியை இலக்கமுறை செயலி (Digital Signal Processor) ஆற்றுகிறது.

விசைப்பலகை, காட்சித் திரை சம்பந்தப் பட்ட வேலைகளைச் செய்யும் நுண்செயலிக்கு தளநிலையமிடும் கட்டளைகளையும் ஏற்று, அதற்கு தக்கவாறு இதர செயல்களையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பும் உண்டு.

5.மின்சக்தி மேலாண்மைப் பிரிவு

மின்கலனின் மின்னழுத்தம் சமன்செய்யப்பட்டு, சீராக அந்தந்த பிரிவுக்களுக்கு வேண்டிய அழுத்தத்தை வழங்கும் பணியை இப்பிரிவு ஆற்றுகிறது.

முடிவுரை

‘செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் ‘ தொடர் நிறைவு பெறுகிறது. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், திருத்தங்களையும் உரை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க மின் அஞ்சல் kathirk@earthlink.net. இந்த கட்டுரைத் தொடர்

எழுத பெரிய உதவியாக இருந்தது, வளர்தமிழ் செல்வர் திரு. மணவை முஸ்தபா எழுதிய பேரகராதி. மேலும் சொல்லாக்கத் தூண்டுகோலாகவும், துணையாகவும் இருந்தது ‘காலம் தேடும் தமிழ் ‘ என்ற மணவையார் எழுதிய மற்றும் ஒரு நூல். சுவைக்கச் சுவைக்க திகட்டாத கனிச்சாறு என்று ஒன்றும் இல்லை. ஆனால் காலம் தேடும் தமிழை மீண்டும்

மீண்டும் படித்தாலும் என் மனம் சலித்ததாக இல்லை!

1. M.Brain and J.Tyson, ‘How Cell Phones Work, ‘ http://electronics.howstuffworks.com/cell-phone17.htm.

2. Manavai Mustafa, ‘கணினி களஞ்சியப் பேரகராதி ‘, Manavai Publication, Chennai-600040.

***

kathirk@earthlink.net

Series Navigation

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி