குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா


‘பூமா தேவியின் எழிலான முகத்தில் இருப்பவைச் சில கீறல்கள்! கீறல்கள் திறக்கும் போது, பூதளத்தின் பெருங் கண்டங்கள் நகரும்! அந்தப் பிளவுகள் மோதிக் கொள்ளும் போது பூகம்பங்கள், சுனாமிகள் உண்டாகக் காரணமாகிக் கடலின் வடிவங்கள் மாறிவிடும்! மேலும் எரிமலைகள் பொங்கிப் புதிய மலைகள் ஆக்கப்படும்! ‘

டியூஸோ வில்ஸன் Ph.D. [Tuzo Wilson, Director General, Ontario Science Centre, Toronto]

உலகின் செவிகளைத் துளைத்த பூத எரிமலை

1883 ஆகஸ்டு 26 இல் இந்தோனேஷியாவின் சுந்தா நிலச்சந்தியில் ஜகார்டாவின் மேற்கே உள்ள கிரகடோவாவின் [Krakatao, Sunda Strait] நடுவே ஓர் அசுர எரிமலை வெடித்துப் பொங்கி எழுந்தது! புகை மண்டலம் வானில் 50 மைல் உயரத்தில் கிளம்பிக் கருமுகில் பூத வடிவில் வெளிப்பட்டு, பகலை இருட்டாக்கியது! சாம்பல் வீச்சு 290,000 சதுர மைல் பரவி அண்டையில் இருக்கும் ஜாவா, சுமத்ரா தீவுகளையும் கரிய மையால் வர்ணம் பூசியது! அடுத்து அடுத்து எரிமலை நான்கு முறைகள் வெடித்தன! எரிமலைக் குமுறி வெடித்த இடி முழக்கம் 2500 மைல் தாண்டி மத்திய ஆஸ்திரேலியாவில் கேட்டதாம்! வெடியின் சக்தி 100,000 ஹைடிரஜன் குண்டுகளின் ஆற்றலுக்கு ஒப்பானது என்று அனுமானிக்கப் படுகிறது!

வெடிப்பின் அழுத்த அலைகள் தணிந்து அடங்குவதற்குள், அவைப் பூமியின் சுற்றளவை [25,000 மைல்] ஏழு முறைச் சுற்றிவந்து பன்னிற அத்தமிப்புக் காட்சிகளைக் காட்டியனவாம்! கிரகடோவா கூம்பு [Cone] குமுறி எழுந்தபின் அடுத்துக் கடல் அருகே இருந்த இரண்டு கூம்புகளிலும் எரிமலை கிளம்பின! அவற்றின் பூதவாய்கள் கக்கிய பாறைக் கற்களின் கொள்ளளவு 18 கியூபிக் கிலோ மீட்டர் என்று கணிக்கப் படுகிறது! 1815 ஆம் ஆண்டு தாம்பராவில் [Tambora] தோன்றிய எரிமலை, கிரகடோவாவை விட மிக அதிகமாக 100 கியூபிக் கிலோ மீட்டர் பாறைக் கற்களைக் கக்கியதாக அறியப்படுகிறது!

அடுத்துக் கிளம்பிய கடற்பொங்கு அலைச் சுனாமியில் கடல் மட்டம் 50 அடி எழுந்து, அலைகள் 130 அடி உயர்ந்து 163 கிராமங்கள் ஜாவா, சுமாத்ரா தீவுகளில் பாதிக்கப் பட்டன! ஜாவாத் தீவின் மேராக் [Merak] கரையில் சுனாமி அலைகள் 135 அடி எழுந்து, நகர் முழுவதையும் துடைத்து அழித்தது! முதல் நாள் சுனாமியில் சுமார் 36,000 பேர் மாண்டதாக அறியப் படுகிறது! மூன்று கூம்பு மலைகளும் தமது பிரளயத் தோற்றத்தைக் காட்டிய பிறகு, எரிமலை மாக்மா கனற்குழம்பு [Magma Lava] ஐந்து மைல் நீளத்தையும் தாண்டிக் கொடியதாகக் கணிக்கப்படுகிறது!

கண்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சுமார் 1500 உயிருள்ள எரிமலைகள் பூகோளத்தில் புகைந்து கொண்டுள்ளதாக அறியப்படுகின்றன! அவற்றில் 30 சதவீதம், மேற் தளத்தில் இல்லாமல், கடலடியில் குமிழியிட்டுக் கொண்டுள்ளன! குறிப்பாக, பசிபிக் மகாக் கடலில் ‘தீ வளையம் ‘ [The Ring of Fire] எனப்படும் சங்கிலித் தொடர்ப் பகுதியில் வருடத்திற்கு 50 எரிமலைகள் வீதம் தோன்றுகின்றன!

இத்தாலில் தூங்கி விழிக்கும் வெஸ்சூவியஸ் எரிமலை!

யுரேஸியன் தட்டை ஆஃப்ரிக்கன் தட்டு சந்திக்கும் [Eurasian Plate meets African Plate] மத்திய தரைக் கடல் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக மாபெரும் பூகம்ப ஆட்டங்களும், எரிமலைக் குமுறல்களும் எழுந்துள்ளதை வரலாறுகளில் நாம் அறிய முடிகிறது! இத்தாலியின் நேப்பில்ஸ் வளைகுடாப் பகுதியில் உள்ள வெஸ்சூவியஸ் சிகரம் [Mt.Vesuvius] உலகப் புகழ் பெற்றது! அதன் அருகே இருந்த சோம்மா எரிமலையில் [Somma Volcano] கண்டெடுத்த எரிமலைக் கற்பாறை 300,000 ஆண்டு வயதுள்ளது என்று கணிக்கப் பட்டுள்ளது! கி.மு.5960, கி,மு.3580 ஆண்டுகளில் வெஸ்சூவியஸ் இருமுறை கக்கியதாக அறியப்படுகிறது! சோம்மா வெஸ்சூவியஸ் கூட்டு எரிமலைச் சாம்பல் 25,000 ஆண்டு வயதுள்ளது! அவற்றின் அருகே 3750 அடி [1125 மீடர்] ஆழத்தில் துளைத்த சோதனைக் குழி ஒன்றில் எடுத்த மாதிரி 30,000-50,000 வருடப் பழைமை கொண்டதாக அறியப்பட்டது!

அடுத்து கி.பி.79 முதலாம் நூற்றாண்டில் வெஸ்சூவியஸ் சிகரத்தில் தீவிர எரிமலைக் குமுறல் கிளம்பி ஹெர்குலானியம், பாம்ப்பி [Herculaneum, Pompeii] என்னும் இருபெரும் நகரங்களும் புதைத்து போயின! எரிமலை கக்கிய விஷ வாயுவைச் சுவாசித்து 20,000 மக்கள் மாண்டனர்! எரிமலை கொட்டிய கருஞ் சாம்பலையும், சகதியையும் அடுத்துப் பெய்த பேய்மழை அடித்துச் சென்று இரு நகரங்களையும் மூடிப் புதைத்தாக அறியப் படுகிறது! சகதி வெள்ளத்தில் புதைந்தவர் மட்டும் 3360 பேர்! அக்கொடூர நிகழ்ச்சியை நேராகக் கண்ட இளைய பிளைனி [Pliny the Younger] என்பவர்தான் இரண்டு கடிதங்கள் மூலம் உலகுக்கு முதலாவதாக எடுத்துக் கூறியவர்.

பிளைனி தன் கடிதத்தில் எரிமலைக்கு முன்பு, முதலில் அப்பகுதியில் ஒரு பூகம்பம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எரிமலைக்குப் பிறகு கடற்பொங்கு அலைகள் என்னும் சுனாமியும் [Tsunami] கடற்கரையைத் தாக்கியதாக எழுதி யிருக்கிறார். எரிமலை கக்கிய நெடு உயரக் கருந் துணுக்குகள் [High-altitude Eruptions] 20 மைல் உயரத்தில் எழுந்து நகர் மீதும், மாந்தர் மேலும் கொட்டிப் பொழிந்ததாக வர்ணித்துள்ளார்! 19 மணி நேரங்களில் சுமார் 4 கியூபிக் கிலோ மீட்டர் [1 cubic mile] கருஞ்சாம்பல் நகரங்களில் கொட்டிக் குவிந்ததாம்!

வெஸ்சூவியஸ் எரிமலை கொட்டிய தீச்சாம்பற் குவியலில் ஹெர்குலேனியம், பாம்ப்பி என்னும் இரு நகரங்களும் புதைந்து மூழ்கின! வெஸ்சூவியஸ் மலைக்கு ஐந்து மைல் தூரத்தில் பாம்ப்பியும், மூன்று மைலுக்குக் குன்றி ஹெர்குலேனியமும் இருந்தன. முதலில் எரிமலை வாயிலிருந்து பறந்து வந்து பாய்ந்த பாறைக் கற்களும், தீச்சாம்பற் துணுக்கு வீச்சுகளும் [Pyroclastioc Flow of Hot Ashes], தூசியும் பாமர மக்களைத் தாக்கின! சூடான மண் சகதியிலிருந்து கிளம்பிய வெப்ப விஷ வாயுக்கள் அடித்து மாண்ட மக்கள் பலர்! அடுத்த நாள் 75 அடிக்குக் கீழ் எரிமலைக் கற்சாம்பல் குவியலில் ஹெர்குலேனிய மாந்தர் சடலங்களும், நகரமும் புதைக்கப்பட்டன! கனற் கற்களும், தீவாயுக்களும் தாக்கப்பட்டு 10 அடிக்குக் கீழ் பாம்ப்பி நகரமும் சாம்பலில் மூடப்பட்டு, அதன் மக்களும் உயிரோடு சமாதி ஆயினர்!

புதைந்த நகரங்கள் தோண்டிக் கண்டுபிடிப்பு

பல ஆண்டுகளாக புதைபொருள்வாதிகள் [Archaeologists] மூடப்பட்ட அந்த இடங்களைத் தோண்டி ஆராய்ந்து வந்தனர்! முதன் முதல் 1595 ஆம் ஆண்டில் மறைந்த நகரங்களின் சில பகுதிகள் ஆராயப்பட்டன. அடுத்து 1748 இல் பாம்ப்பி நகரத்தை ஆய்வாளர் தோண்டிப் பல விந்தைகளைக் கண்டனர்! பிரிட்டிஷ் எழுத்தாளர் லார்டு லைட்டன் எழுதிய ‘பாம்ப்பியின் இறுதி நாட்கள் ‘ [The Last Days of Pompeii By Lord Lytton] என்னும் நாவலில் வெஸ்சூவியஸ் விளைத்த கோரச் சம்பவங்கள் கூறப் பட்டுள்ளன! மனிதச் சடலங்கள், வீடுகள், விலங்கினங்கள், இறுதியில் தப்பிக்கொள்ள முயன்றோரின் தங்க நகை ஆபரணங்கள், முதல் நூற்றாண்டு இத்தாலிய நாணயங்கள் ஆகியவற்றைக் கண்டெடுத்துள்ளனர்! 1860 ஆம் ஆண்டில் பாம்ப்பியின் பகுதிகளைத் தோண்டி ஆராயும் போது, நூறுக்கும் மேற்பட்ட தீய்ந்து போன மனிதச் சடலங்கள், நாய்க் கூடுகள் கிடந்த ஒரு துளை காணப்பட்டது! தீச்சாம்பலில் வெந்த ஓர் இத்தாலிய மாதின் விரல்களில் இருந்த தங்க மோதிரங்களும், கால் தண்டைகளும் காணப்பட்டு படம் பிடித்துள்ளார்கள்!

அதற்குப் பிறகு வெஸ்சூவியஸ் சிகரத்தில் பலமுறை எரிமலைகள் கொந்தளித்து எழுந்துள்ளன! 1631 இல் மீண்டும் எழுந்த எரிமலையில் 3500 பேர் சகதி வெள்ளத்தில் மூடப்பட்டனர்! அடுத்து 1794, 1906, 1913, 1933, 1944 ஆண்டுகளில் எரிமலை எழுச்சி மீண்டதாக அறியப்படுகிறது! 1944 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் நடக்கும் சமயத்தில் விமானங்களை, எரிமலையின் ஊசிமுனைக் கண்ணாடிப் பாறைத் துணுக்குகள் தாக்கியதாக அறியப்படுகிறது! 1944 ஆண்டுக்குப் பிறகு தூங்கிய வெஸ்சூவியஸ் சிகரம் இதுவரை [2003] விழித்து எழுந்திட வில்லை!

இத்தாலியின் கால் முனையில் காணப்படும் ஒரு சிறு முக்கோண வடிவிலுள்ள சிஸிலியின் எட்னா சிகரம் [Mt.Etna, Sicily] ஈரோப்பின் மிகப் பெரும் உயிரோட்ட எரிமலையைக் [Active Volcano] கொண்டது! 2500 ஆண்டுகளாக எட்னா சிகரம் எரிமலைக் குழம்பு கரித்தூள்களைக் கொட்டி அடிக்கடிக் சிற்றூர்களையும், வேளாண்மை நிலங்களையும் சிதைத்து வருகிறது! எட்னா கொட்டிக் குவிக்கும் செழிப்புப் புதுத் தளத்தில் மக்கள் பரம்பரையாய் வாழ்கிறார்கள்! 1992 இல் எட்னா சிகரம் இறுதியாகக் குமுறி எழுந்த பிறகு அதுவும் இப்போது வெஸ்சூவியஸ் சிகரம் போல தூக்கத்தில் ஆழ்ந்துள்ளது!

எரிமலைகள் கடற்தளங்களில் எவ்விதம் ஏற்படுகின்றன ?

வெங்காயம் போன்று அடுக்கடுக்காய்த் தட்டுகள் மூடியுள்ள குமிழிகளின் அகத்தே, பூமி தோன்றிய பூர்வீக நாள் முதல் நிலையற்ற கொந்தளிப்பில் நர்த்தனம் கொண்டிருக்கிறது! பூமியின் கவசக் குமிழியில் பாதி உருகியப் பாறைத் திரவம் [Semi-molten Rocks in the Mantle] மேலும், கீழும் சுற்றிவரும் ஒரு மெதுவானச் சுற்றோட்டத்தில் [Slow Convection Current] நகர்ந்து வருகிறது! அந்தக் கொதியுலைக் குழம்பை எப்போதும் சூடாகச் சுற்றச் வைப்பது, பூமியின் திணிவு மிக்க உட்கரு [Core]! ‘மாக்மா ‘ என்னும் [Magma (திரவப் பாறை+வாயு)] வெப்பம் மிகுந்த கலவையான உருகிய பாறைக் குழம்பும், வாயுவும் சேர்ந்து கடல் நடுவே ஏற்படும் இரு தட்டுகளின் இடைச் செருகலால் [Subduction Process] மேலே தள்ளப்படுகிறது!

வெள்ளக் காடாய் தள்ளப்படும் கரும்பாறைத் தீக்குழம்பு [Basaltic Lava] எரிமலையாய் கடற் தளங்களில் வெளியேறுகிறது! அப்போது அந்த இடத்தில் பழைய மேற்தட்டு [Upper Crest] புறத்தே அகற்றப் பட்டுப் புதிய கடற்திட்டு [Oceanic Crest] கூம்பு வடிவில் உண்டாகிறது! எளிதில் நீங்காத பழைய தட்டு ஆழமான மாசுகள் ஏற்பட்டு, ‘மாறுபட்ட பழுதுகள் ‘ [Transfoem Faults] என்ற பெயருடன் பின்னால் மட்டநிலை நிலநடுக்கங்கள் [Shallow Earthquakes] ஏற்படக் காரண தளங்கள் ஆகின்றன.

எரிமலைகள் பலவிதம்! எத்தனை வித எரிமலைகள் இதுவரை உலகில் எழும்பியுள்ளன ? ஐந்து விதமான எரிமலை மாடல்கள் பூமியில் இதுவரைக் காணப்பட்டுள்ளன. 1. ஹவாயி மாதிரி [Hawaiian Model], ஹவாயி தீவுகளில் எழுவது போன்று உயரமற்ற தீக்குழம்பு ஆறோட்ட வெள்ளத்தைக் கக்குவது. 2. பெலீயன் மாதிரி [Peleean Model திணிவாக ஒட்டிக் கொள்ளும் திட்டுத் திட்டான தீக்குழம்பை வெளியேற்றி, எரியும் வாயுவும், சாம்பலும் பின்பற்றுவது. 3. ஸ்டிராம்பொலின் மாதிரி [Strombolian Model] சிறிது சிறிதாகக் கக்கும் ஒட்டுத் தீக்குழம்புடன் மின்னும் தீப்பொறிகள், வாயுக்கள், சாம்பல் வீச்சுக்கள் ஆகியவற்றைக் கொண்டது. 4. வல்கேனியன் மாதிரி [Vulcanian Model] இந்தோனேஷியாவின் கிரகடவோவா போன்று தீவிர வெடிப்பும், திணிவான தீக்குழம்புக் குண்டுகளை வெளியேற்றுவது. 5. பிளினியன் மாதிரி [Plinian Model வெஸ்சூவியஸ் சிகரம் மாதிரி மிக அதிக உயரத்தில் எழுந்து பொழியும் விஷ வாயுக்கள், கருஞ்சாம்பல், கற்பாறை வீச்சுகள்].

பசிபிக் கடற்பரப்பில் நிலையான எரிமலைத் தீ வளையம்!

பூமியின் எந்த ஒரு தளப்பரப்பும் எரிமலையின் பீறுதல்களுக்குத் [Eruptions] தப்பவில்லை எனினும், பீறல்கள் சில குறிப்பிட்ட, எதிர்பார்க்கும் ‘எரிமலைத் தீ வளையப் ‘ [The Ring of Fire] பகுதிகளில்தான் ஏற்படுகின்றன! உலக எரிமலை எண்ணிக்கையில் 62% பசிபிக் மகாக் கடலின் வரையரைத் திடல்களில் [45% பசிபிக் தீவுகள், அவற்றின் நிலத்தொடர்வுகளில், 17% வட, மத்திய, தென் அமெரிக்காவின் மேற்கு மலைத்தொடர்களில்] எரிமலைகள் கிளம்புகின்றன. சீரழித்த பிறகு செத்துக் கல்லறைக் குழியான பல எரிமலைத் தழும்புகள் அலாஸ்கா, மேற்கு வட அமெரிக்கப் பகுதிகள், தென்னமெரிக்காவின் சில்லி நாட்டில் காணப்படுகின்றன. உலக எரிமலை எண்ணிக்கையில் 14% இந்தோனேஷியா தீவுத் தொடர்களில், 17% பசிபிக் மையத் தீவுகளிலும், ஹவாயி தீவுகள், இந்தியக் கடல் தீவுகளிலும் எழுபவை. மீதி 7% மத்திய தரைக் கடல் பிரதேச நாடுகளிலும், கிழக்கு ஆஃபிரிக்காவின் மலைப் பீட பூமிகளில் ஏற்படுபவை.

1500 ஆண்டிலிருந்து 1914 வருடம் வரைக் கணக்கிட்டதில் எரிமலை நிகழ்ச்சிகளில் மட்டும் மாண்ட மக்களின் எண்ணிக்கை 190,000 என்று அறியப்படுகிறது! அத்துடன் எரிமலை எழுச்சிகளால் ஏற்படும் கடற்பொங்கு அலைகள், நிலச்சரிவுகள் ஆகியவற்றால் நேர்ந்த மரணங்களைத் தனியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 1783 இல் ஐஸ்லாண்டில் ஏற்பட்ட எரிமலை ‘லாகி ‘ [Volcano Laki] விஷச் சாம்பலைக் கொட்டிப் பஞ்சம், பட்டினி, தொத்துநோயில் 10,000 மக்கள் மடிந்தனர்! 1792 ஜப்பான் எரிமலை வெடிப்பில் சகதி ஆறோட்டத்தில் கிராமங்கள் மூழ்கி 10,452 பேர் புதைந்து போயினர்!

1815 இல் இந்தோனேஷியா தாம்போராவில் [Tambora] ஏற்பட்ட எரிமலைக் கொக்கரிப்பில் பாறைக் கற்கள், சாம்பல் கட்டிகள் வீசி 12,000 பேர் மாண்டதுடன், சும்பாவா, லொம்பாக் [Sumbawa, Lomba] என்னும் இரண்டு தீவுகளில் பஞ்சம் ஏற்பட்டு 80,000 மக்கள் பலியாயினார். 1883 இல் கிரகடோவா எரிமலை வெடிப்பில் ஜாவா, சுமாத்ரா தீவுகளில் 36,000 பேரி உயிரிழந்தனர். பதினெட்டு ஆண்டுகள் தூங்கிய பின் ஜாவா தீவில் எரிமலை கெலூடு [Volcano Kelud] மீண்டும் ஆங்காரத்துடன் விழித்தெழுந்து, உறங்கிய போது குழியில் சேமித்த 38 மில்லியன் கியூபிக் மீடர் நீர் வெள்ளம் சாம்பலுடன் கலந்து, சகதி ஓட்டத்தில் கிராமங்கள் மூழ்க்கப்பட்டு 5100 மக்களும் மூழ்கினர்!

எரிமலைப் பிரதேசங்களில் விளையும் விந்தைகள்!

எரிமலைகள் இயங்கும் தளங்களிலும், எரிமலைகள் தணிந்து முடங்கிய திடல்களிலும் ‘வெந்நீர் ஊற்றுகள் ‘ அல்லது கெய்ஸர்கள் [Hot Springs or Geysers] தோன்றுவது இயற்கை. ஐஸ்லாண்டின் சொல்லான ‘கெய்ஸர் ‘ என்பது விட்டுவிட்டு எழும்பும் வெப்பநீர் ஊற்றுக்களைக் குறிக்கும். எரிமலைகள் ஆறி அடங்கும் நிலையைக் காட்டும் இறுதிக் கட்டம் அது. அடித்தளத்தில் சூடாக்கிக் கொண்டிருக்கும் கொதிக்கனல் தணிவதையும் வெந்நீர் ஊற்றுக்களின் எழுச்சிகள் இறுதியாக அறிவிக்கின்றன. கெய்ஸர் ஊற்றில் நீரும் நீராவியும் கலந்தே வருகின்றன. எப்போதும் சூடாக இருக்கும் மாக்மா [Magma (Molten Material)] என்னும் பூமியின் உட்தள ‘வெப்பத் திரவப் பிண்டம் ‘ அடித்தளத்தில் கிடக்கும் நீரைச் சூடாக்கி, நீராவி அழுத்தம் மிகுந்து நீராவியையும், வெந்நீரையும் வெளியேற்றுகிறது.

பொதுவாக வெந்நீர் ஊற்றில் கார்பைன் டையாக்ஸைடு, ஹைடிரஜன் ஸல்பைடு மற்றும் தாது உப்புக்கள் [CO2, H2S, Mineral Salts] கலந்தே எழுகின்றன. நீராவி ஊற்றுக்கள் ஹைடிரஜன் ஸல்பைடைச் செழிப்பாகக் கொண்டு 90 முதல் 300 டிகிரி C உஷ்ணத்தில் வெளியேறுகின்றன.

வைரக் கற்களை எரிமலைகள் உற்பத்தி செய்கின்றன! பூமியின் அடித்தளத்தில் அதிக அழுத்தமும், பேரளவு உஷ்ணமும் உள்ள கவசத் தோல் பகுதிகளில் [Mantle] வைரக் கற்கள் இயற்கையாகத் தோன்றுகின்றன! கிம்பர்லைட் எனப்படும் எரிமலைப் பாறைக் கற்களில் [Volcanic Rock Kimberlite] பூமிக்குள்ளே வைரங்கள் பதிக்கப்பட்டு, எரிமலை எழும்பும் போது அவை வெளியே தள்ளப்படுகின்றன!

தூங்கும் அசுர எரிமலை மீண்டும் எப்போது குமுறி எழும் ?

1944 ஆம் ஆண்டு குமுறிக் கக்கிய பின்பு, வெஸ்சூவியஸ் இப்போது [2003] தூங்கிக் கொண்டிருக்கிறது! உறக்கம் கலைந்து மறுமுறையும் விழித்துத் தன் நெற்றிக் கண்ணை எப்போது திறந்து கனற் சாம்பலைக் கக்கும் என்று யாரும் யூகிக்க முடியாது! இத்தாலியில் எரிமலை ஆய்வாளர்கள் 2000 அடி உயரமுள்ள ஆய்வுக் கூடத்திலிருந்து அடிக்கடி அதன் உஷ்ணத்தைக் கண்காணித்து வருகிறார்கள்! வெஸ்சூவியஸின் பூதவாய் விட்டம் தற்போது 2400 அடி [700 மீடர்] விரிந்துள்ளது! வாயின் சுற்றளவு 7.2 மைல் [12 கி.மீடர்]! குழியின் ஆழம் 660 அடி [200 மீடர்]! பலதடவைக் கக்கிய பாறைத் துணுக்குகளையும், கருஞ் சாம்பலையும், விஷ வாயுக்களையும் ஆராய்ந்து வரும் பணி இத்தாலியில் இப்போது தொடர்ந்து வருகிறது.

வெஸ்சூவியஸ் சிகரம் தணிந்து இடைப்புகும் அரங்கத்தின் [Subduction Zone] மீது அமர்ந்துள்ளது! ஆஃபிரிக்கன் தட்டு [African Plate] வடக்கு நோக்கி ஆண்டுக்கு 2-3 செ.மீடர் நகர்ந்து, மத்திய தரைக் கடல் பீடக் குழியை [Mediterranean Basin] நிரப்புகிறது! மத்திய தரைப் பீடம் வடக்கே தள்ளப்படும் போது, ஆஃபிரிகன் தட்டு குனிந்து, யூரேஸியன் தட்டுக்கு [Eurasian Plate] அடியில் நுழையும்! அப்போதுதான் வெஸ்சூவியஸின் நெற்றிக்கண் திறக்கும்! எரிமலையாய் கனல் கற்களும், கருஞ் சாம்பலும் வெள்ளமாய்க் கக்கும்! அந்த நாளைத்தான் எரிமலை ஆய்வாளார்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

எரிமலை எதிர்பார்ப்புப் பகுதிகளில் இப்போது மக்கள் தொகை அடர்த்தி [சதுரக் கி. மீடருக்கு 20,000-30,000 பேர்] பெருகி வருகிறது! வெஸ்சூவியஸ் விழித்து வெகுண்டு இனி எழுப்பும் எரிமலையால் முதல் 15 நிமிடங்களில் 4 மைல் ஆரத்தில் பாறைக் கற்களும் சாம்பலும் பரவி வீசப்பட்டு, சுமார் 3 மில்லியன் மக்கள் தீவிரமாய்ப் பாதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

தகவல்கள்:

1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]

2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]

3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]

4. Encyclopedia Britannica 15 Edition [1978]

5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]

6. National Geographic Frontiers of Science [1982]

7. The Vesuvius Volcano at the Bay of Naples.

8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.

9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands

********************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா