EPR முரண்-1

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

அரவிந்தன் நீலகண்டன்


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொடக்கத்திலிருந்தே க்வாண்டம் இயற்பியல் குறித்த தன் விருப்பமின்மையை வெளியிட்டிருந்தார். அது பொய் அல்லது தவறு என்பது அவரது நிலைபாடல்ல (தொடக்கத்தில் அவ்வாறு இருந்திருக்கலாம்.) மாறாக க்வாண்டம் அறிவியல் விளக்கும் உண்மையே இயற்கையின் பரிபூரண உண்மை என்பதை அவர் ஏற்கவேயில்லை. ஆனால் ஹெய்ஸன்பர்க், நெய்ல்ஸ் போர் ஆகியோருக்கு க்வாண்டம் இயற்கையே பருப்பொருள் நுண்பிரபஞ்சத்தின் அடிப்படை உண்மை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. புகழ் பெற்ற ஸோல்வே இயற்பியலாளர்கள் மாநாட்டில் ஹெய்ஸன்பர்க் கூறினார், ‘நாங்கள் க்வாண்டம் இயங்கியலை கருதுகோள்கள் மாற்றப்பட வேண்டிய தேவையில்லாத ஒரு முழுமையான சித்தாந்தமாக கருதுகிறோம். ‘ ஏற்கனவே க்வாண்டம் இயற்பியலின் தொடக்க காலத்திலேயே மாக்ஸ் போர்னுக்கு எழுதிய கடிதத்தில் (1926 லேயே) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் க்வாண்டம் இயற்பியல் குறித்து பின்வருமாறு கூறியிருந்தார், ‘இச்சித்தாந்தம் நமக்கு பல சரியான முடிவுகளை தருகிறது. ஆயினும் இது நம்மை அப்பெரும்பிரபஞ்ச இரகசியத்தின் அருகே எவ்விதத்திலும் முன்-நகர்த்தவில்லை. அவர் பகடையாடுவதில்லை என நான் உறுதியாக உள்ளேன். ‘ இயற்கை ஆய்வறிதலுக்கு அப்பாலான சுதந்திர இருக்கை (objective existence) கொண்டது எனும் தன் நிலைபாட்டை ஐன்ஸ்டைன் மாற்றவேயில்லை. க்வாண்டம் இயற்பியலின் கோபன்ஹேகன் வியாக்கியான நிலைபாடான ‘ அறிதல் இயற்கையின் அடிப்படை இருப்பினை விளைவிக்கிறது. புற இயற்கைக்கு அறிதலில்லாத தனி இருப்பு கிடையாது ‘ என்பது ஐஸ்டைனுக்கு மன உளைச்சலை அளித்தது.

1935 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சக இயற்பியலாளர்களான போரிஸ் போடோல்ஸ்கி மற்றும் நாதன் ரோஸன் ஆகியோருடன் இணைந்து ஒரு கற்பனை பரிசோதனையை உருவாக்கினார்கள். க்வாண்டம் இயங்கியலின் முழுமையின்மையைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பரிசோதனை இது. க்வாண்டம் இயற்பியலின் ஒரு முக்கிய அடிப்படை, ஒரு துகளின் திசைவேகம் மற்றும் அதன் இடம் ஆகிய இரண்டையும் துல்லியமாக அறியமுடியாதென்பது. இது நம் அறிதல் உபகரண குறைபாட்டால் எழுவதல்ல. மாறாக இயற்கையின் ஊடுறையும் ஒரு தன்மை என்கிறது க்வாண்டம் அறிவியல்.இத்தன்மை துகள்களின் க்வாண்டம் குண இயல்புகளை காட்டும் மதிப்புகளுக்கும் பொருந்தும் (உதாரணமாக எலக்ட்ரானின் ‘சுழல் ‘). ஒரு புரோட்டான் அல்லது எலக்ட்ரானின் ‘சுழலின் ‘ மதிப்பு -( ‘மேல் ‘ அல்லது ‘கீழ் ‘ சுற்று என.) சுற்றுவெளியின்(space) ஓர் பரிமாணத்தில் (உதாரணமாக x – அச்சில்) அறியப்படுகையில் அதன் மற்ற மதிப்புகள் (y மற்றும் z அச்சுகளில்) வரையறுக்கமுடியா நிலையை அடைகிறது. க்வாண்டம் இயற்பியலின் இந்த நிலைபாட்டின் அடிப்படையில் முரண்-விளைவை உருவாக்கும் முடிவுகளை தரும் ஒரு பரிசோதனையை வடிவமைப்பதன் மூலம் க்வாண்டம் இயற்பியல் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்ல என நிறுவ முற்பட்டது இம்மூவரணி.

ஒரே ஸ்க்ராட்டிஞ்சர் அலைச் சமன்பாட்டால் வரையறுக்கப்படும் அளவு இறுக்கமான இணைந்திருக்கும் (ஆனால் தனித்தனியான) இரு பருப்பொருள் அமைப்புகளை (physical systems-:உதாரணமாக, இரு ப்ரோட்டான்கள் அல்லது ஃபோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்கள்) எடுத்துக்கொள்வோம். அவை வெளியில் பலகாத தூரம் பிரிக்கப்பட்ட பின்னும் அவற்றின் இன்னமும் ஒரே ஸ்க்ராட்டிஞ்சர் அலைச் சமன்பாட்டால்தான் வரையறுக்கப்படும். எனவே ஒன்றின் க்வாண்டம் இயல்பு பற்றியே மற்ற துகளின் இயல்பும் அமையும். இந்த இயல்பு, கோபன்ஹேகன் வியாக்கியானத்தின் படி, அறிதலால் -அறியும் தருணத்தில் உருவாகிறது. என்றால் ஒரு துகளை அறிதலின் போது அதன் ஒரு குணாதிசய மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறதோ அதைப்பொறுத்து **அதேதருணத்தில்** மற்றொரு துகளின் இயல்பு உருவாகும். உதாரணமாக நம் அறிதலின் விளைவாக ஒருதுகளின் சுழல் மதிப்பு ‘மேல் ‘ மதிப்பை அடைந்தால் அத்தருணத்தில் மற்றொரு துகளின் சுழல் மதிப்பு ‘கீழ் ‘ நிலையை அடையும். இது, அந்த மற்றொரு துகள் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நிகழவேண்டும் என்பது மட்டுமல்ல ‘உடனடியாக ‘ நிகழ வேண்டும். ஆனால் பிரபஞ்சத்தின் வேகத்தடை – ஒளியின் வேகமான ஒரு நொடிக்கு 2.998 x 10^8 மீட்டர்கள். இந்த அபத்த முடிவினை க்வாண்டம் இயற்பியல் அளிப்பதால் அது முழுமையான சித்தாந்தமாக இருக்க முடியாது.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்