அமெரிக்க அணுத்துறைத் தணிப்பு முறைகள் இந்தியாவுக்கு ஒத்தவையா ? பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா


‘இந்தியா விழித்துக் கொண்டது! மெதுவாக நடக்கும் ஒரு யானைதான், இந்தியா! ஆனால் அது நடக்க ஆரம்பித்தால், அழுத்தமான சக்தியோடு நடக்கிறது! ‘

முரளி மனோகர் ஜோஷி

[இந்தியக் குடியரசைப் பற்றிக் கூறிய மானிடத் துறைகளின் விருத்தி மந்திரி]

முகவுரை: அணுவியல் துறைகளைக் கட்டுப்படுத்தும் ஆணைக்குழு, அணுவியல் தளங்களில் நிகழும் தவறுகளைக் கண்காணித்துத் தடுக்கும் ஓர் இறுதிநிலைக் காவல் அரண் [Final Stage Barrier]! ஆனால் அதற்கு முன்பே விபத்து நேராவண்ணம் அடுத்தடுத்து நிறுத்தவோ, குறைக்கவோ பலவித அரண்கள் பாரத அணு உலைகளில் அமைப்பாகிக் காத்துக் கொண்டு நிற்கின்றன! அணுசக்தி உற்பத்தியின் போது தவிர்க்க முடியாமல் தாவும் கதிரியக்கத்தைக் காணும் கருவிகளும், தீவிர விளைவுகளைக் கட்டுப் படுத்தி மாந்தரைக் காத்துக் கொள்ள ‘பல்லடுக்கு அரண்கள் ‘ [Multi-Stage Barriers] அணு உலை அமைப்பின் போதே கட்டப் படுகின்றன. அணுசக்திக் கமிஷனுக்குக் கீழ் பணியாற்றிலும் சரி, அல்லது விடுதலை பெற்றுத் தனித்து நின்று கண்காணித்தாலும் சரி, கட்டுப்பாட்டுக் குழுவினர் தீர்மானிக்கும் தடுப்புமுறை முடிவுகள் யாவும், உரிமையாளர் கைவசம் உள்ள ‘நிதித்தொகைக்கு ‘ [Budget Improvement Funds] ஏற்ப செயல் படுத்தப்படலாம், தாமதிக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம்!

பாரத அணுமின் நிலையங்கள் எத்தனை வகையானவை, எவ்விதப் பாதுகாப்பு உடையவை, எப்போது செம்மையானவை என்னும் விபரங்களை அறியாமல், ரவி ஸ்ரீநிவாஸ் அகிலவலையில் கிடக்கும் சில தவறான கருத்துகளை மெய்யானவை என்று காட்டி வருகிறார்! இந்திய அணு உலைகளின் அம்சம், பண்பு, தகுதி, பாதுகாப்பு அரண்களைப் பற்றித் தெளிவாகத் தெரியாத ரவி ஸ்ரீநிவாஸ் பாரத அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணையகம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழருக்குப் பறைசாற்றுவது வேடிக்கையாக இருக்கிறது!

பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?

இந்தியா அழுகிப் போகும் ‘வாழைப்பழக் குடியரசா ‘ [Banana Republic], அல்லது உறுதியான ‘பலாப்பழக் குடியரசா ‘ [Jackfruit Republic] என்பது பிரச்சனைகள் எழும்போது மக்களின் நாகரீகப் போக்குகளே நிர்ணயம் செய்கின்றன! உன்னதச் சட்டங்களின் கீழ் உயர்நீதி மன்றங்கள் தமது கடமையைச் செய்தாலும், இனத் தளபதிகளும், அவரது மந்தைச் சீடர்களும் உள்ளவரை, பாரத மெங்கும் நியாயம் நிலைபெற முடியாது! நீதி மன்றம் வேலி போட்டுக் காத்த சமயத்திலும், பாப்ரி மசூதி ஓரிரவில் எப்படித் தரை மட்டமானது என்பதை யாவரும் அறிவார்! ஆயினும் ரவி ஸ்ரீநிவாஸ் காட்டிய 1996 ஆண்டு AERB, DAE அணுத்துறை ஆதிக்க வாதங்களில் மறுக்கப் பட்ட போதிலும், தனித்துவச் செயலாளர் பலர் நியாயமாக, வலுவாக எடுத்துக் கூறிய வாசகங்கள் அச்சாகித் தெரியவந்தது, பாரதத்தில் ‘குடியரசுக்கு ‘ மதிப்புள்ளதையே தெளிவாகக் காட்டுகிறது.

அணு உலைகளை, அணுத்துறைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அரிய ‘அணுசக்திச் சட்டங்கள் ‘ [Atomic Energy Acts (1962)] சீராகப் பாரதத்தில் அமைக்கப் பட்டுள்ளன. மாந்தருக்கு அணுத்துறைக் கதிரியக்கத்தால் உடற்பாதிப்புகள் நேர்ந்தால், அவர்கள் அரசாங்கத்தின் மீதும் வழக்குத் தொடர்ந்து, ‘பணநட்ட ஈடு ‘ பெற்றுத் தமது பிறப்புரிமைகளை நிலைநாட்டலாம். இந்தியா தேசம் இன்னும் அநாகரீகக் காட்டுமிராண்டி நாடாக மாறவில்லை! அதே சமயம் இந்தியா ஆன்மீகம் செழித்த பொற்றாமரைப் பூமியும் அன்று!

ரவி ஸ்ரீநிவாஸ் கட்டுரைக்கு மூன்று முக்கிய தலைப்புகளில் எனது பதிலுரையைத் தருகிறேன். 1. இந்திய அணுமின் உலைகள் பழைய 1957 ஸிப்பிங்போர்ட் மாடலா ? 2. அமெரிக்க முறையில் NRC/DOE [Nuclear Regulatory Commission, Dept of Energy] போன்று இந்தியாவின் AERB [Atomic Energy Regulatory Board] இயங்க முடியுமா ? 3. அமெரிக்க NRC/DOE தீர்க்க முடியாமல் திண்டாடும் அணுத்துறைத் தளங்களில் முடங்கிக் கிடக்கும் கதிரியக்கப் பிரச்சனைகள்!

இந்திய அணுமின் நிலையங்கள் பற்றித் தவறான தகவல்கள்!

முதலாவது கிறிஸ்டியன் விஞ்ஞான மானிடரில் [Christian Science Monitor] வந்ததாக ரவி ஸ்ரீநிவாஸ் தந்த செய்தி. ‘இந்தியாவில் 14 அணுமின் நிலையங்கள் உள்ளன. பெரும்பான்மையானவை 1957 இல் உருவான ஷிப்பிங்போர்ட் அமெரிக்க அணுமின் நிலைய மாடல் [Shippingport Power Reactor] அமைப்பில் கட்டப் பட்டவை! ….. அவற்றில் மூன்று அணுமின் உலைகள்தான் நெறிநிலைக்கு [International Atomic Energy Agency (IAEA) Standard] உட்பட்டவை!

இது முற்றிலும் தவறானது. திண்ணையில் வந்த எனது அணுசக்திக் கட்டுரைகளை அவர் மெய்யாகப் படித்திருந்தால், இவ்விதப் பெரும் பிழைக் கருத்துக்களை எழுதித் தன் அறியாமையை வெளிப்படுத்திருக்க வேண்டாம். பாரத அணுவியல் திட்டங்களை விளக்கும் எனது அணுசக்திக் கட்டுரைகளைப் படிக்காத பலரில் ஒருவர் ரவி ஸ்ரீநிவாஸ் என்பதை அறிய வருத்தம் அடைகிறேன். புளுகு அறிக்கைகளை ஆங்கில அகிலவலைப் பின்னல்களில் படித்த ரவி ஸ்ரீநிவாஸ் பாரத அணுமின் உலைகள் எந்த மாடல்களில் டிசைன் செய்யப் பட்டவை என்று அறியாமல், பாரத அணு உலைகள் எவற்றையும் ஒருமுறை கூடப்

பார்த்து அறியாமல் இந்திய அணுசக்தித் துறைகள் எவ்விதம் அமைக்கப் படவேண்டும், எவ்விதம் கட்டுப் படுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுகிறார்!

இந்திய அணுமின் உலைகள் எத்தனை வகையானவை ? அவை திருத்தம் அடைந்து எப்போது செம்மைப் படுத்தப் பட்டன என்பது ரவி ஸ்ரீநிவாஸ் அறியாதவர் என்பது திண்ணை வாசகர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்! ஆராய்ச்சி அணு உலைகள், அணுமின் நிலை உலைகள் என்று பெரும் பிரிவாக இரண்டு வகைகள். 1979 ஆம் ஆண்டில் நேர்ந்த அமெரிக்கன் திரிமைல் தீவு அணு உலை [American Three Mile Island Reactor (TMI)] விபத்துக்குப் பிறகு, IAEA வெளியிட்ட திருத்தங்களைப் பாரதம் ஆராய்ந்து அனைத்து அணுமின் நிலையங்களும் சில பாதுகாப்பு முறைகளில் செம்மைப் படுத்தப் பட்டன. [1979-1982] ஆண்டுகளில் TMI விபத்து ஆய்வுக்குழுவில் ஒருவனாகப் பணியாற்றி, புதிய பாதுகாப்பு டிசைன் மாறுதல்களைப் புகுத்திய எஞ்சினியர்களில் ஒருவனாக வேலை செய்தேன்]. அடுத்து 1986 இல் செர்நோபிள் அணுமின் உலை வெடிப்புக்குப் பிறகு மீண்டும் IAEA பல திருத்தங்களை வெளியிட்டது. அதன் பின்னும் இந்திய அணுமின் உலைகளின் பாதுகாப்பு முறைகள், நெறிகள் மாற்றம் அடைந்து செம்மைப் படுத்தப் பட்டன. ஐம்பது ஆண்டுகளாக வளர்ச்சி பெற்று, மாறி வரும் எந்த தொழில் நுணுக்கமும், அந்தந்த நாட்டு அணு உலைகளுக்கு ஏற்ப, நிதிவள இருப்புக்கு ஏற்ப ஓரளவுதான் மேம்படுத்த முடியும்!

முற்றிலும் வேறான பலவித அணுமின் உலைகள் யாவும் பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் என்றும், மூன்று அணுமின் உலைகள்தான் IAEA நெறிப்பாடுகளுக்கு உட்பட்டவை, மற்றவை AERB விதித்த தேசிய நெறிப்பாடுகளைப் [National Standards] பின்பற்றுவவை என்றும் ரவி ஸ்ரீநிவாஸ் தவறான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்! AERB கட்டுப்பாடு விதிகளைப் போட்டுள்ளதே தவிர, அணுமின் நிலைய டிசைன் அமைப்புகளுக்கு, [1955 முதல் IAEA இல் ஓர் முக்கிய அங்கம் வகிக்கிறது, இந்தியா] IAEA நெறிப்பாடுகளை அனைத்து அணு உலைகளுக்கும் பயன்படுத்த மேற்பார்த்து வருகிறது. மேலும் ‘அணுவியல் இயக்குநரின் அகிலக் கூட்டவையின் ‘ WANO [World Associations of Nuclear Operators (http://www.wano.org.uk/)] அரிய நெறிப்பாடுகள் பாரதத்தின் புதிய அணுமின் உலைகளில் [1989 ஆண்டுக்குப் பிறகு] கையாளப்பட்டன.

இந்திய அணு உலைகள் எப்போது திருத்தப் பட்டவை ?

1. ஆராய்ச்சி அணு உலைகள் [Atomic Research Reactors]: அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா,காமினி போன்றவை [Apsara, Zerlina, CIRUS, Dhuruva, Purnima, Kamini] இந்த ரகத்தைச் சேர்ந்தவை. நியூட்ரான் தாக்கல் சோதனைகளுக்குப் பயன்படும் இந்த அணு உலைகளில் வெப்பசக்தி மட்டும் வெளியாகும். மின்சார உற்பத்தி எதுவும் கிடையாது. ஸைரஸ், துருவா அணு உலைகளில் புளுடோனியம் எரிக்கழிவில் கிடைக்கிறது. ஸைரஸ் அணு உலை மட்டும் கனடாவின் நிதிக்கொடையில், கனேடியப் பொறியியல், விஞ்ஞான நிபுணர்களால் டிசைன் செய்யப்பட்டு கட்டப் பட்டது. துருவா உள்பட மற்ற நான்கும் முழுக்க முழுக்க இந்திய டிசைனில் உருவானவை.

2. அணுமின் நிலைய உலைகள் [Nuclear Power Reactors]: தாராப்பூர் [மகாராஷ்டிரா], ராவட்பாடா [ராஜஸ்தான்], கல்பாக்கம் [சென்னை], நரோரா [உத்தர் பிரதேஷ்], கக்கரபார் [குஜராத்], கைகா [கர்நாடகா], கூடங்குளம் [சென்னை] ஆகியவை யாவும் (160-220) MWe மின்சக்தி உற்பத்தி செய்கின்றன. மேலும் அவற்றின் அணுக்கழிவில் புளுடோனியம் கிடைக்கிறது.

தாராப்பூரில் இரண்டு (1960-1965) திருத்த மாடல் BWR கொதிநீர் உலைகள் (G.E. First Generation Boiling Water Reactor) [1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல] உள்ளன. எளிய நீரில் [Light Water] இயங்கும், இந்த அணுமின் உலைகளுக்குத் தேவையான 2.4% செறிவு யுரேனியம் [Enriched Uranium] அமெரிக்காவிலிருந்து வர வேண்டியிருப்பதால், BWR கொதிநீர் மாடல் அணு உலைகள் பின்னால் கட்டப் படவில்லை! 1969 ஆண்டு முதல் மின்சாரம் பரிமாறி வயதாகிப் போனதால், அதன் 210 MWe மின்னாற்றல் 160 MWe ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. மேலும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. திண்ணையில் தாராப்பூர் கொதிநீர் உலைகளின் குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த விபத்துகள் யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

தாராப்பூரில் புதிதாய்க் கட்டப்படும் இரட்டை 500 MWe மின்னாற்றல் அணுமின் நிலையங்கள் கனடாவின் கான்டு அணு உலைகளின் டிசைன் [Canadian Deuterium Uranium CANDU Reactors] கையாளப் பட்டுகிறது.

இந்த அணு உலைகளுக்கு செறிவு யுரேனியம் தேவை யில்லை. பூமியில் கிடக்கும் இயற்கை யுரேனியம் போதுமானது. ஆனால் இதற்கு தேவைப்படும் விலை மிகுந்த கன நீர் [Heavy Water], இந்தியாவிலே உற்பத்தி செய்யப் படுகிறது. இவை இரண்டும் 1980 ஆண்டு முற்போக்கான இரண்டாம் பிறவி கான்டு மாடல் டிசைன்களைப் பின்பற்றிக் கட்டப் படுகின்றன [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. மேலும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. திண்ணையில் கான்டு அணுமின் உலைகளின் குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த விபத்துகள் யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

ராஜஸ்தான், சென்னைக் கல்பாக்கத்தில் உள்ள இரட்டை அணுமின் உலைகள் 1965 முதற் பிறவி கனேடியன் டிசைன் கான்டு அணு உலைகள். [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. ஆயினும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களுக்குப் பிறகு சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. முதற் பிறவி ராஜஸ்தான் யூனிட் 1 கவசத் தட்டில் கசிவுகள் தொடர்ந்து வழிந்ததால், நிரந்தரமாக மூடப் பட்டது. கல்பாக்க இரட்டை யூனிட்டுகளின் 220 MWe மின்னாற்றல் 170 MWe ஆகக் குறைக்கப் பட்டது.

நரோரா, கக்கரபார், கைகா ஆகியவற்றின் (220 MWe) இரட்டை அணு உலைகள், ராஜஸ்தான் புதிய யூனிட் 3, யூனிட் 4 (220 MWe) அணு உலைகள் அனைத்தும் 1980 முற்போக்கான இரண்டாம் பிறவி கான்டு கனநீர் அழுத்த அணு உலைகள். ஆயினும் திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துக்களின் விளைவால் சில திருத்தங்கள், மாறுதல்கள் பெற்றவை. [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. திண்ணையில் நரோரா கனநீர் அணுமின் உலையில் உள்ள குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நேர்ந்த பெரிய தீ விபத்து யாவற்றையும் நான் எழுதி யிருக்கிறேன்.

கூடங்குளம் இரட்டை அணுமின் உலைகள் (1100 MWe) மின்னாற்றல் கொண்ட ரஷ்யாவின் செம்மை ஆக்கப்பட்ட VVER டிசைனைப் பின்பற்றியது. இது செர்நோபிள் வெடி விபத்திற்குப் பிறகு சீராக்கப்பட்ட ரஷ்ய அணுமின் நிலையம். இது அழுத்தநீர் அணு உலை PWR [Pressurized Light Water Reactor] ரகத்தைச் சேர்ந்தது. இது இயங்க (2%-4%) செறிவு யுரேனிய எரிகோல் தேவைப்படுகிறது. [பாழடைந்த அமெரிக்கன் 1957 ஸிப்பிங்போர்ட் மாடல் அல்ல]. திண்ணையில் கூடங்குள VVER அணுமின் உலையில் உள்ள குறை, நிறைகள், பாதுகாப்பு அம்சங்கள், மற்றும் செர்நோபிள் போல் பெரிய விபத்து நிகழுமா என்பவற்றை ஆய்வு செய்து எழுதி யிருக்கிறேன்.

இந்திய அணு உலைகளை மேல்நாட்டு நெறிநிலைக்கு இணையாக இயக்க முடியமா ?

‘இந்திய அணு உலைகள் அமெரிக்க, ஈரோப்பிய அணு உலை நெறிநிலைகளுக்கு [American or European Operating Standards of Reactors] இணையாக இயக்கப் படுவதில்லை ‘ என்று கிரிஸ்டொபர் ஸெர்ரி [Christopher Sherry, Research Director of the Safe Energy Communication Council, Washington] என்று சுட்டியுள்ளதை ரவி ஸ்ரீநிவாஸ் எடுத்துக் கூறியிருக்கிறார்! What A Great Discovery by Ravi Srinivas! அதற்கு முக்கிய காரணம் நமது பாரதக் கலாச்சாரம்! No Big Deal! நாம் ஆங்கிலம் பேசினாலும், ஆங்கிலச் சினிமா பார்த்தாலும் இந்தியர் இந்தியரே! [Good Feathers Do Not Make Good Birds!]. நாம் என்ன வேடம் போட்டு நாட்டியம் ஆடினாலும், அமெரிக்கராகவோ, ஈரோப்பியராகவோ ஆகவே முடியாது! நாம் அன்னிய தொழிற்துறைகளை அப்படியே அசல்நகல் எடுத்து பாரத மண்ணில் ஊன்றியவுடன் அவை கலாச்சாரத்தால் மாறுபடுகின்றன! நமது ஜாதி, மதம், இனம், மொழி, மாநிலப் பிரிவு, யூனியன் அமைப்பு, யூனியன் பிளவு யாவும் அன்னியத் தொழிற்துறைகளை இந்திய மயமாக்குகின்றன! போபால் இரசாயனத் தொழிற் சாலை விபத்துக்கு இம்மாதிரி கலாச்சார மாறுதல் ஒரு முக்கிய காரணமானது! இது ரவி ஸ்ரீநிவாஸுக்குப் புரியாமல் போனதில் வியப்பில்லை!

அணு உலையை இயக்குபவர், பணியாளிகள் அனைவரும் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளாமல் இந்திய மொழியில் ஊட்டி வளர்க்கப் பட்டவர்! விஞ்ஞானிகளும், எஞ்சினியர்களும் ஆங்கிலம் படித்த அளவுக்குச் சமமாக அவருக்குக் கீழ் பணி செய்பவர் பலர் ஆங்கிலம் பேச முடிவதும் இல்லை! படிக்க முடிவதும் இல்லை! பணியாட்கள் பலரிடம் ஆங்கில மூலம் தொடர்பு கொள்வது முடியாததால், பொறி நுணுக்கங்களில் பூரணப் பயிற்சி முறைகள் அவருக்குத் தர முடிவதில்லை! பயிற்சி அளிப்பதற்கு உரிய அடிப்படை விஞ்ஞான அறிவு பணியாட்களுக்குக் கிடையாது! குட்டுத்தனமாக வேலை செய்யும் பணியாளிகள் பலர்! புரியாமல் வேலை செய்பவர் பலர்! அமெரிக்காவிலோ, ஈரோப்பிலோ வேலை செய்யும் பணியாளிகளின் அடிப்படை விஞ்ஞானப் படிப்பறிவு மிகையானது.

அடுத்தது பணியாட்களின் பொறி நுணுக்க அனுபவத் திறன்! தொழிற்சாலையில் பணி புரியும் [குப்பை அள்ளும் பணியாளி உட்பட] அத்தனை பேரும் கார் ஒட்டுகிறார்கள். பெரும்பாலோர் காரைத் தாமே பழுது பார்த்துச் செப்பணிடுகிறார்கள். உதவி யில்லாமல் கூடியவரைத் தாமே படித்து எந்த பொறி யந்திரத்தையும் அவர்களால் இயக்க முடிகிறது! தொழிற்கூடங்களில் மேற்பார்வையாளர் அருகே கண்காணிப்பின்றித் தாமே வேலையை முடித்து, ஆங்கிலத்தில் லாக்புக்கில் [Log Book] பதிவு செய்கிறார்கள். நமது தொழிற்சாலையில் ஒரு பணியாள் செய்யும் வேலைக்கு மூவர் [பணியாள், உதவி ஆள், மேற்பார்வை ஆள்] தேவைப் படுகிறது! மேற்பார்வை ஃபோர்மன் கண்பார்வையிலிருந்து நீங்கி விட்டால், பணியாள் வேலையை நிறுத்தி ஓய்வெடுப்பது யாவருக்கும் தெரியும்! தொழிற்துறை யுகத்தைத் தோற்றுவித்து முன்னேறிய ஈரோப்பிய, அமெரிக்க நாடுகளின் பணிநெறிகள் [Work Ethics] வேறு! தொழிற்துறை யுகத்தைப் புரியாமல் காப்பி அடித்து, வற்புறுத்திப் புகுத்தப்படும் இந்திய மாந்தர் பணிநெறிகள் [Work Ethics] வேறு!

ஆகவே இந்திய அணுமின் நிலையங்களிலும் இதே நோய் பீடித்துள்ளது! கதிரியக்கத் தளங்களில் கனடா, அமெரிக்க நாடுகளில் ஒருவன் வேலை செய்து பாதுகாப்பான கதிரடி வாங்கும் போது, இந்திய அணுமின் உலைகளில் அதை விட அதிகமானக் கதிரடி மூன்று பேர் வாங்கிக் கொள்கிறார்கள்! [காரணம் ஒருவர் முடிக்கக் கூடிய பணியை மூவர் செய்யும் போது கால நேரமும் நீடிக்கிறது!]. ஆகவே நாம் எந்தப் போர்வையைச் சுற்றிக் கொண்டாலும், அமெரிக்கராகவோ, ஈரோப்பியராகவோ இந்திய மண்ணில் காலை வைத்துக் கொண்டு நடிக்க முடியாது! அதே சமயத்தில் அமெரிக்கா கனடாவுக்குப் பயிற்சிக்கு வந்த, பாரதப் பணியாட்கள் வட அமெரிக்க மண்ணில் கால்வைத்து, இங்குள்ள வெள்ளையருடன் வேலை செய்யும் போது, அவர்களைப் பார்த்துத் திறமையாக வேறு விதமாகப் பணியாற்றினர்! மீண்டும் இந்தியாவுக்கு வந்து பாரத அணு உலைகளில் பணியைத் துவங்கும் போது, அவரது நாய்வால் மறுபடியும் முன்புபோல் சுருண்டு கொண்டது!

இந்திய அணு உலைகள் அமெரிக்க, ஈரோப்பிய அணு உலை நெறிநிலைகளுக்கு [American or European Operating Standards of Reactors] இணையாக இயக்கப் படுவதில்லை என்று கிரிஸ்டொபர் ஸெர்ரி என்று குறிப்பிட்டது முற்றிலும் மெய்யானது. அதன் காரணத்தை அறியாமல் அதைத் தவறாக எடுத்துக் காட்டிய ரவி ஸ்ரீநிவாஸ், இந்தியத் தொழிற்சாலைப் பணி நெறிகளை மாற்றுவது கடினம் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்!

அணுத்துறை நெறிக்குழுவை தனித்தியங்க விடுதலை செய்!

(1993-1996) ஆண்டுகளில் AERB அதிபராய்ப் பணிசெய்த டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன் ‘அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணைக்குழுவைத் தனித்தியங்க விடு ‘ [ ‘Set AERB Free ‘] என்று முன்னாள் அணுசக்திக் கமிஷன் அதிபதி டாக்டர் R. சிதம்பரம் அவர்களிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அவரது ஆலோசனை சரியா, தப்பா என்பதைச் சற்று ஆராய்வோம்.

டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஓர் அணுவியல் எஞ்சியனர். நான் 1957 இல் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் [Bhabha Atomic Energy Centre] சேர்ந்து, ஸைரஸ் [CIRUS] அணு ஆராய்ச்சி உலையில் பணி செய்து வந்த காலத்தில் [1958-1966] கோபாலகிருஷ்ணன் சேர்ந்து என்னுடன் வேலை செய்தவர். ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்த பின், மேற்படிப்புக்காக விடுமுறை எடுத்துக் கொண்டு, அமெரிக்காவுக்குச் சென்று டாக்டர் பட்டம் [Ph.D. in Nuclear Engineering] பெற்று, பல ஆண்டுகள் கழித்து பாரதத்திற்கு மீண்டவர். அவர் இந்திய அணுமின் நிலையங்களில் என்னைப் போல் எஞ்சினியரிங் பணி புரியா விட்டாலும், அமெரிக்க அணு உலைகளில் அவருக்குப் பயிற்சி உண்டு. அவர் கூறிய ஆலோசனை அமெரிக்காவுக்குப் பொருந்துகிறது. ஆனால் இந்திய அமைப்புக்கு அந்த மாறுதலால் பெறும் பயன்கள் மிகக் குறைவே! அதற்குப் பல காரணங்கள் கூறலாம்.

அமெரிக்கக் குடியரசும், பாரதக் குடியரசும் ஒத்தவைபோல் தோன்றினும் அவை வேறுபட்டவை! பாரதத்தில் கதம்பக் கட்சிகளின் கூட்டாட்சி ஆளும்போது, அமெரிக்காவில் போட்டி யிடுபவை இரண்டு கட்சிகளே! ஆகவே பல காரியங்களை இணைந்து செய்வது எளிதாகிறது. அமெரிக்காவில் அணுமின் நிலையங்களைக் கட்டி இயக்கி வருபவர் அனைவரும் தனியார் நிறுவனங்கள். அரசாங்கம் சில ஆராய்ச்சி அணு உலைகள், புளுடோனிய உற்பத்தி செய்யும் மீள் சுத்திகரிப்புக் கூடங்கள் [Spent Fuel Enrichment Plants], யுரேனியச் செறிவுச் சாலைகள் [Uranium Enrichment Plants], அணு ஆயுத உற்பத்திச் சாலைகள் ஆகியவற்றைத் தனக்குக் கீழ் வைத்துள்ளது. ‘தேசியப் பாதுகாப்பு விதியைக் ‘ [National Security] கையாண்டு அமெரிக்க அரசு அவற்றை எரிசக்தித் துறையகத்தின் DOE [Dept of Energy] கீழ் கட்டுப்படுத்தி வருகிறது. அமெரிக்க NRC [Nuclear Regulatory Commission] அணுமின் நிலையங்களின் உரிமைக்கார தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தித் தண்டனைகள், அபராதங்கள் விதிக்க முடியும். ஆனால் DOE கண்காணிக்கும் ஆய்வு உலைகளையோ, புளுடோனிய உற்பத்தி செய்யும் மீள் சுத்திகரிப்புக் கூடங்களையோ NRC முழுக் கட்டுப்பாடு செய்ய முடியாது. ஆலோசனைகள் மட்டுமே அளிக்க முடியும்.

1948 ஆகஸ்டில் விஞ்ஞான ஆய்வுத்துறையின் கீழ் [Dept of Scientific Research] இந்திய அணுசக்திக் கமிஷன் [Atomic Energy Commission] முதலில் அமைக்கப் பட்டது. 1954 இல் தோன்றியது, அணுசக்தித் துறையகம் DAE [Dept of Atomic Energy]. பிறகு அதன் கீழ் 1958 மார்ச்சில் அணுசக்திக் கமிஷன் திருப்ப மானது. முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அணுசக்திக் கமிஷனுக்கு [Atomic Energy Commission] 1958 இல் டாக்டர் ஹோமி. ஜெ. பாபாவை முதல் அதிபதி ஆக்கினார். அணுசக்திக் கமிஷன் அதிபதியே, பிரதம மந்திரியின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இந்திய அணுமின் நிலையங்களை, அரசாங்கப் பங்கீடு கொண்ட NPCIL [Nuclear Power Corporation of India Ltd] பொதுத்துறை நிறுவகம் கண்காணித்து வருகிறது. DAE ஆராய்ச்சி அணு உலைகள், வேகப் பெருக்கி சோதனை ஆய்வுலை [FBTR], வேகப் பெருக்கி அணுமின் நிலையம், புளுடோனியச் சுத்தீகரிப்புச் சாலைகள், IREL [Indian Rare Earths Ltd], ECIL [Electronic Corporation of India Ltd], UCIL [Uranium Corporation of India Ltd], Heavy Water Plants [National Fertilizer Ltd], NPCIL [Nuclear Power Corporation of India Ltd] அனைத்தையும் மேற்பார்வை செய்கிறது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களா அணுமின்சார உற்பத்தி செய்கிறது ?

பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் [Security Act], இந்திய அரசாங்கம் புளுடோனியம் ஆக்கும் அணு உலைகளையும், அணுமின் உலைகளையும், புளுடோனியத்தைப் பிரிக்கும் மீள் சுத்தீகரிப்புச் சாலைகளையும், தன்கைக்குள் [DAE] வைத்துள்ள போது, AERB மட்டும் தனியாக்கப் பட்டு எப்படி அரசாங்கக்தைக் கட்டுப்படுத்த முடியும் ? DAE அணுத்துறையைக் கட்டுப்படுத்தினாலும், AERB தனிப்பட்டு ஆட்சி செய்தாலும், அவருக்குக் கையுதவி இப்போதுள்ள பைபிள் வேத நூல் ‘அணுசக்தி சட்டங்கள் ‘ [Atomic Energy Acts (1962)] ஒன்றுதான்! பாரத அரசாங்கம் அணு ஆயுத நாடாக மாறி, அணு ஆயுத உற்பத்தியை இரகசியமாய்ச் செய்து வருவதால், ‘தனித்துவ நெறிப்பாடு ஆணைக்குழு ‘ இந்தியாவில் அமைக்கப் பட்டு, பாதுகாப்பு ஆலோசனைகள் தந்தாலும், பாரத அரசாங்கம் அவற்றை யாவும் ஒப்புக் கொள்ளும் என்று உறுதி கூற முடியாது! மெய்யாக தற்போதுள்ள AERB அதே முறையில்தான் DAE மேற்பார்க்கும் அணு உலைகளையும் [அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா (1,2,3), காமினி, வேகப் பெருக்கி (Apsara, Zerlina, Cirus, Dhruva, Purnima I,II,III, Kamini, FBTR)] மற்ற புளுடோனிய, யுரேனிய, தோரிய உற்பத்தித் தொழிற்கூடங்களையும் முழுக்கட்டுப்பாடு இன்றி கண்காணித்து வருகிறது.

பாபா அணுசக்திக் கூட/கல்பாக்க ஆய்வு அணு உலைகளின் பாதுகாப்புகள்

அப்ஸரா, ஜெர்லினா, ஸைரஸ், துருவா, பூர்ணிமா (1,2,3), காமினி, வேகப் பெருக்கி போன்ற ஆய்வு அணு உலைகளில் அப்ஸரா [1MW,47y], ஜெர்லினா [100W,42y], ஸைரஸ் [40MW,43y] ஆகிய மூன்றும் பழையவை. அடைப்பில் காட்டப் படுபவை [MW வெப்பவாற்றல், Year வயது]. மற்ற ஆய்வு அணு உலைகள்: துருவா [100MW, 18y], பூர்ணிமா-I [1W,31y], பூர்ணிமா-II [10mW,19y], பூர்ணிமா-III [1W,13y], காமினி [30KW,7y] புதியவையும் அல்ல, பழையவையும் அல்ல. வயதில் இரண்டுக்கும் இடைப்பட்டவை. ஆய்வு அணு உலைகளின் வெப்பவாற்றல் [Thermal Power] ஸைரஸ் [40MWt], துருவா [100MWt] இரண்டையும் தவிர மற்றவை யாவும் மிகக் குன்றியவை! அக்குன்றிய ஆற்றலைத் தர மிகக் குறைந்த அணுவியல் எருநிறையே [புளுடோனியம்-239, யுரேனியம்-233] பயன்படுகிறது! ஆதலால் பிரமாண்டமான 200 MWe, 500 MWe, 1100 MWe மின்னாற்றல் கொண்ட அணுமின் நிலையங்கள் போன்று பல்விதப் பாதுகாப்பு அம்சங்கள் வேண்டியதில்லை! அணு ஆயுத நியூட்ரான் சோதனைகளுக்குப் பயன்படும் அந்த ஆய்வுலைகள் தொடர்ந்து இயங்குவதும் இல்லை. அதே சமயத்தில் புளுடோனியம் பிரித்தெடுக்கும் மீள் சுத்தீகரிப்புக் கூடங்கள், வேகப் பெருக்கி அணு உலைகள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், நெறிகள் அதிகம் கையாளப் படவேண்டும்.

திரிமைல் தீவு, செர்நோபிள் அணுமின் நிலையங்களின் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் நிலையங்களில் பெருத்த மாற்றங்கள் புகுத்தப் பட்ட போது, ஆய்வு அணு உலைகளில் அவ்வித மிகையான பாதுகப்புகள் அமைக்கத் தேவைப் படவில்லை. காரணம் அவற்றில் மின்சக்தி உற்பத்தி யில்லாததால் பல உபகரணங்கள், சாதனங்கள் கிடையா.

அமெரிக்க NRC/DOE தீர்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கும் கதிரியக்கப் பிரச்சனைகள்!

டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆதரிக்கும் அமெரிக்க அணுத்துறைக் கண்காணிப்பு, தணிப்பு முறைகள் உயர்ந்தவைதான். ஆனால் பின்னால் நான் காட்டும் மெய்யானப் பிரச்சனைகளைப் பார்த்தால், அமெரிக்கன் நெறிக்கட்டுப்பாடு முறைகளிலும் ஓட்டைகள் உள்ளன வென்று தெரிகிறது! அமெரிக்க NRC/DOE/Military [Nuclear Regulatory Commission /Dept of Energy] தணிப்பு முறைகளை ரவி ஸ்ரீநிவாஸ் இந்திய அணுத்துறை இயக்கங்களில் புகுத்த வேண்டும் என்று உதாரணம் காட்டி யிருக்கிறார். கீழே நான் எடுத்துக் காட்டும் மெய்யான நிகழ்ச்சிகளைப் படித்தபின் அமெரிக்கக் கண்காணிப்பு முறைகளைப் பாரதம் பின்பற்ற வேண்டுமா என்று வாசகர்களே தீர்மானம் செய்யலாம்! தனியார் துறைக்குழுத் தணிக்கையோ, தனிப்பட்ட அணுத்துறைக் குழுவினர் தணிக்கையோ என்ன ஆணைகள் விதித்தாலும், இறுதியில் நிதி ஒதுக்கம் இல்லாதால், பாதுகாப்புப் பணிகள் யாவும் நடத்தப் படாமல் முடங்கிக் கிடக்கின்றன! நிதிமுடைகள் செல்வம் கொழித்த அமெரிக்கவிலே உள்ள போது, பாதுகாப்பை முன்னிட்டு கவசங்களைப் பூரணமாகப் பாரதம் அமைக்க மறுக்கிறது என்று குறை கூறுவதில் அர்த்தம் இல்லை!

1. அமெரிக்காவில் அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்களின் அருகே உள்ள பல புதைப்புக் குழிகளில் புளுட்டோனியம் தீண்டிய கழிவுகள் கொட்டிக் கிடக்கின்றன என்று அமெரிக்க இந்தியச் சூழ்வெளி விஞ்ஞானி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani. Ph.D. Environmentalist] கூறுகிறார். இதாஹோ மாநிலத்தில் [Idaho State] மட்டும் ஒரு டன் புளுடோனியக் கழிவுகள் மண்ணில் பரவி யுள்ளன என்று மக்கிஜானி தான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.

2. நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில் முதல் அணுகுண்டுகளைத் தயாரிக்க 1942 ஆண்டு முதல் அணுவியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும், 1982 ஆம் ஆண்டில்தான் அமெரிக்க அரசு தனது, ‘கதிரியக்கக் கழிவுப் புதைப்பு விதியை ‘ [Nuclear Waste Storage Policy] முதன் முதலில் தயாரித்து வெளியிட்டது.

3. 1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு 200,000 அமெரிக்க ராணுவத்தினர், பூமிக்குமேல் மேற்கொண்டும் அணு ஆயுதச் சோதனைகளைச் செய்ய முற்பட்டனர்! அமெரிக்கக் காங்கிரஸின் ஓர் அறிக்கைப்படிச் சோதனைகளில் சில அமெரிக்கர் ‘பலி ஆடுகளாய்ப் ‘ பயன்படுத்தப் பட்டனர்! அமெரிக்க ஆற்றல் துறையகத்தின் [Dept of Energy (DOE)] நிபுணர்கள் யுரேனிய, புளுடோனியத் திரவங்களைச் சில அமெரிக்கருக்கு ஊசி மூலம் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர்! அணுகுண்டு வெடிப்பின் கதிரியக்கப் பொழிவுப் பொருட்களைச் சிலருக்குத் தின்னக் கொடுத்து, அவர்கள் சோதிக்கப் பட்டனர்! கதிரியக்க வாயுக்களை சிலர் நுகரும் படிச் செய்யப் பட்டனர்! சோதனைக்குச் சிலர் கதிரியக்க மீன்களை உண்ணும்படி வற்புறுத்தப் பட்டனர்!

4. பேரளவு கதிரியக்கக் கழிவுகளை கணக்கில்லாமல் விளைவித்துக் கொண்டு, ஆயிரக்கணக்கான டன் அளவுகளில் சேகரித்து வரும் முதல் நாடு அமெரிக்கா! உலக நாடுகள் அனைத்தையும் தகர்த்துப் பொடியாக்கத் தகுதி பெற்ற 32,000 அணு ஆயுதப் போர் வெடிகளை [Nuclear Warheads], அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது! அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சொல்லலாம்! 1945 இல் வாஷிங்டன் மாநிலத்தின் ஹான்ஃபோர்டு [Hanford, Washington State] அணு உலையில் முதல் அணு குண்டுகளுக்கு புளுடோனியம் தயாரிக்கப் பட்டது! 1989 இல் அந்த அணு உலை மூடப் படுவதற்கு முன்பு, அமெரிக்கா அணு ஆயுதங்களுக்காக 59 டன் புளுடோனியத்தை அங்கே தயாரித்துச் சேமித்தது! அருகில் ஓடிய கொலம்பியா ஆற்று நீரே அணு உலை வெப்பத்தைத் தணிக்கப் பயன் பட்டது. அணு உலையில் நுழைந்து ஆற்றுக்கு மீளும் நீரோட்டத்தில் கசிந்து, கதிர்வீசும் புளுடோனியம், ஸீஸியம், ஸ்டிரான்சியம், சோடியம், ஆர்செனிக் போன்ற நஞ்சு உலோகங்கள் காணப்பட்டன!

5. அணு ஆயுதச் சோதனைகள், அணு ஆயுத உற்பத்திச் சாலைகள், மருத்துவத் துறையகங்கள், யுரேனியச் சுரங்கங்கள், யுரேனிய உற்பத்திச் சாலைகள், புளுடோனியச் சுத்திகரிப்புச் சாலைகள், நெவேடா அணு வெடிப்புப் பயிற்சித் தளம் ஆகியவற்றில் பணி புரிந்த மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள், கடந்த 55 ஆண்டுகளாகப் பாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடி பெற்றுள்ளார்கள்! 1988 டிசம்பரில் அமெரிக்க ஆற்றல் துறையகம் DOE வெளியிட்ட அறிக்கையில் 16 அணு ஆயுதத் தொழிற் கூடங்களில் கதிரடி பட்ட 155 வேலை யாட்கள் கதிரியக்கத் தீங்குப் பட்டியலில் உள்ளதாக அறியப் படுகிறது! எல்லாவற்றை விடவும் மோசமாக, இதாகோ தேசியப் பொறியியல் ஆய்வகத்தில் [Idaho National Engineering Laboratory] கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் பாம்பு ஆற்றில் [Snake River] கலந்து விட்டதாகவும் அறிக்கை கூறியது!

6. வாஷிங்டனில் உள்ள ‘ஹான்ஃபோர்டு வேகத் திரட்சி அணு உலை ‘ [Hanford Fast-flux Reactor] விவாதத்துக்குள் மாட்டிக் கொண்ட ஓர் எருப்பெருக்கி வேக அணு உலை [Fast Breeder Reactor]! அங்கு பணி செய்யும் இயக்குநர், எட்வெர்டு பிரிக்கர் கூறுகிறார்: ஹான்ஃபோர்டு, அணு யுகத்தின் இருண்ட முகத்தை எடுத்துக் காட்டும் ஓர் உதாரணமாக உள்ளது! போதிய அணு உலைப் பாதுகாப்பு முறைகள் கிடையா! சாதனங்கள் பழையதாய்ப் போய் விட்டன! மேலதிகாரிகள் பொறுப்பான கண்காணிப்பும் அங்கு இல்லை! எட்வெர்டு முதலில் புளுடோனியம் உற்பத்தி சாலையில் வேலை செய்யும் போது, வேலையாளிகள் கவன மின்றிப் புளுடோனியம் கையாளுவதைக் கண்டு வெகுண்டார்! பாதுகாப்பு ஒழுக்க முறைகள் போதாதவை என்றார்! அணு உலை ஆட்சி செய்யும் இயக்குநர்கள் லைஸென்ஸ் பெறாமலே அங்கு பணி புரிந்து வருவதாகக் கூறினார்! நிலையத்தில் நிறுவனமான சாதனங்களைச் சரியாக எடுத்துக் காட்டாத பொறியியல் வரைபடங்கள் [Engineering Drawing] அங்கே பயன்படுத்தப் பட்டன என்றும் கூறினார்!

7. ஹான்ஃபோர்டு நிலையத்தில் 40 ஆண்டுகளாகச் சேர்ந்து விட்ட பிரம்மாண்டமான அணுவியல் கழிவுகள் [Nuclear Wastes] பெரும் பிரச்சனையை உண்டாக்கி விட்டன! அவற்றைச் அகற்றிப் புதைத்துச் சுத்தம் செய்ய 57 பில்லியன் டாலர் தேவைப் படுகிறது! போதிய நிதி ஒதுக்கப் படாததால், பிரச்சனை முற்றிக் கொண்டே போகிறது! ஹான்ஃபோர்டில் உள்ள 27 வீடுகளில் 25 இல்லங்களில் வசிப்போர், கதிரியக்கம் தாக்கி தைராய்டு சிகிட்சை பெற்றுக் கொண்டும், இருதய நோய் புற்று நோயில் அவதிப் பட்டுக் கொண்டும், பிறக்கும் பிள்ளைகள் அங்க ஈனமாய்ப் பிறப்பதால் வேதனை பட்டுக் கொண்டும் வருவதாக அறியப் படுகிறது!

8. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் சமயம், அணு ஆயுதத்துக்கு புளுடோனியம் தயாரித்த ஸ்போகேன், வாஷிங்டனில் [Spokane, Washington] சில குழந்தைகள் தமது தைராய்டு சுரப்பியில் வீரிய கதிரடி 256 rem வாங்கி யுள்ளதாக அறியப் படுகிறது! ஹான்போர்டு அணு உலைக்கு அருகில் வாழ நேர்ந்தால், ஒருவர் 2295 rem கதிரடி வாங்க வாய்ப்புள்ளது! 1987-1988 ஆண்டுகளில் அமெரிக்கக் காங்கிரஸ் 1.4 மில்லியன் டாலர் நிதி விடுவித்து ஹான்ஃபோர்டு கதிர்வீச்சுப் பிரச்சனைகளை உளவு செய்யுமாறு கட்டளை யிட்டது! அதுபோல் வாஷிங்டன், ஆரகன் [Oregon] மாநிலங்களும் 1987 இல் கதிரியக்கத் தீங்குகளை ஆய்வு செய்ய 15 மில்லியன் டாலர் திரட்டி உளவு செய்தன!

9. புளுடோனியக் குண்டுகளின் எச்சக் கழிவுத் திரவம் மட்டும் 45 பில்லியன் காலன் சேர்ந்து, கசியும் தொட்டிகளில் நிரப்பப் பட்டு, கொலம்பியா ஆற்றில் வழிந்தோடப் பயமுறுத்தியது! தற்போது 4 பில்லியன் டாலர் செலவில் திரவக் கழிவைக் கண்ணாடிக் கழிவாய்ச் சுண்டிப் புதைக்கப் பேரளவு ‘கழிவுக் திரட்சிக் கூடம் ‘ [Waste Vitrifying Plant] ஒன்று கட்டப் பட்டு வருகிறது!

Paradise Lost

திண்ணையில் எனது அணுவியல் கட்டுரைகள் என்ன பறைசாற்றுகின்றன ?

உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம்.

அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

‘அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல ‘ என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது! மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும்!

இந்திய அணுசக்தித் துறைகளைப் பற்றிய தகவல்கள்:

1. Dept of Atomic Energy /Atomic Energy Commission [Atomic Energy Acts 1962] www.dae.gov.in

2. Atomic Energy Regulatory Board [AERB] Regulations in www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

3. Atomic Power Plants Performance Reports in www.npcil.org [Updated Sep 22, 2003]

4. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002]

5. Dr. Anil Kakodkar, Present Chairman, Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

6. Dr. R. Chidambaram, Former Chairman, Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

7. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

8. Kalpakkam, Indra Gandhi Centre for Atomic Research www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

9. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

10 National Geographic Magazines [June 1986, April 1989]

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா