விண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


‘நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் இரகசியங்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது ‘.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

முன்னுரை: 2003 ஆகஸ்டு 27 ஆம் தேதி செவ்வாய்க் கோள் 60,000 ஆண்டுகளுக்குப் பிறகு, பூமிக்கு அருகே மிக நெருங்கி வந்த அரியதோர் காட்சியை, வட அமெரிக்காவில் பலர் இரவு நேரத்தில் கண்டு களித்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் நேர்ந்த அந்நிகழ்ச்சி விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகுக்கிறது! விண்வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி செவ்வாயின் மகத்தான செந்நிற கோளத்தை அப்போது படமெடுத்துள்ளது. அன்றைய தினத்தில் செவ்வாய் பூமிக்கு அருகில் அண்டிய தூரம் ஏறக்குறைய 34.7 மில்லியன் மைல்! அவ்வரிய நெருக்கக் காட்சியை நாம் மீண்டும் காணப் போவது, அடுத்து 284 ஆண்டுகள் கடந்து சென்ற பிறகுதான்!

சந்திர மண்டலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்களின் தடங்கள் பட்டதற்குப் பிறகு, நாசாவின் [National Aeronautics & Space Administration (NASA)] முழுக் கவனம் பூமியை ஒத்திருக்கும் செவ்வாய்க் கோள்மீது விழுந்தது! நிலவில் நடமிட முழு முயற்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்த போதே, நாசாவின் விஞ்ஞானிகள் 1964 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மாரினர்-4 விண்ணாய்வுச் சிமிழை அனுப்பி, அதன் முழு வடிவத்தை முதலில் படம்பிடித்துப் பூமியில் ஆராய்ந்தனர். 1975 ஆண்டு வரை நாசா எட்டு விண்ணுளவிச் சிமிழ்களைச் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பியது. அடுத்து இரண்டு வைக்கிங் ஆய்வுச்சிமிழ்கள் [Viking Probes] செவ்வாய்த் தளத்தில் இறங்கித் தடம் பதித்து, பல்லாண்டுகள் தகவல்களைத் தெரிவித்தன! 1996 இல் ‘செவ்வாய்க் கோள் தளவுளவி ‘ [Mars Global Surveyor], ‘செவ்வாய்ப் பாதை காட்டி ‘ [Mars Path Finder] என்னும் இரண்டு பெரும் விண்வெளிக் கப்பல்களை நாசா அனுப்பியது. பாதை காட்டியில் சென்ற ஓர் ஆறு சக்கிர ஆமை வண்டியைச் செவ்வாய்த் தளத்தில் இறக்கி, பூமியிலிருந்து ஆணையிட்டு பல மில்லியன் மைல் தூரத்தில் இயக்கி, விண்வெளி வரலாற்றில் நாசா ஓர் மகத்தான சாதனையைப் புரிந்தது!

ஆயிரத்தாண்டு [Millennium] 2000 பிறந்த பின்பு நாசா, ஈசா விண்வெளித் துறைக் குழுவினர் [European Space Agency (ESA)] செவ்வாய்க் கோளைக் குறிவைத்துப் புரிந்த விண்வெளிச் சாதனைகளைப் பற்றியே இங்கு பெரும்பான்மையாக அறியப் போகிறோம். செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழத் தகுதியுள்ள இரண்டு முக்கிய தளங்களைத் தேர்ந்தெடுத்து, விண்ணுளவி வாகனங்களை [Probing Rovers] அங்கே இறங்கி, புதிய தகவல்களைச் சேகரிப்பதே இப்பயணங்களின் தலையாய குறிப்பணியாகும்.

செவ்வாய்க் கோளை ஆராய்ந்த முதல் வானியல் மேதைகள்

செந்நிற ஒளிவீசும் செவ்வாய்க் கோளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக மாந்தர் வெறும் கண்கள் மூலமாகக் கண்டு அதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். 1610 இல் வானியல் மேதை காலிலியோ (1564-1642) முதன் முதல் தனது தொலைநோக்கியில் கண்டு செவ்வாய் கிரகம் ஓர் ஒழுங்கற்ற உருண்டை வடிவில் இருப்பதாகவும், இரண்டு சந்திரன்கள் அதைச் சுற்றி வருவதாகவும் அறிவித்தார். டென்மார்க் வானியல் வல்லுநர் டைகோ பிராஹே [Tycho Brahe (1546-1601)] இருபது ஆண்டுகளாக அண்டக்கோள்களின் நகர்ச்சியைத் தொடர்ந்து, அவற்றின் இடங்களைத் துல்லியமாகக் குறித்து வந்தார். அவரது ஜெர்மன் துணையாளர் ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630), பிராஹே கணித்த செவ்வாய்க் கோளின் நகர்ச்சி இடங்களை எடுத்தாண்டு, செவ்வாய் சூரியனை ஓர் நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] சுற்றி வருகிறது என்று 1609 இல் முதன்முதல் அறிவித்தார்.

Earth and Mars

டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens(1629-1695)] 1659 ஆம் ஆண்டில், செவ்வாயும் பூமியைப் போல் தன்னைத் தானே சம காலத்தில் [24 மணி நேரம்] சுற்றுவதைக் கண்டு பிடித்து, அதன் தளப்படத்தையும் வரைந்தார். அடுத்து இத்தாலிய விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini (1625-1712)] துல்லியமாகச் செவ்வாய் தன்னச்சில் சுற்றும் காலத்தைக் [24:40 Hours] கணித்தார். செவ்வாய்க் கோளின் துருவப் பனித் தொப்பிகளைத் [Polar Ice Caps] தொலைநோக்கி மூலம் முதலில் கண்டவரும் காஸ்ஸினியே! புறக்கோள் யுரானஸைக் [Planet Uranus] கண்டு பிடித்த வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel (1738-1822)], நூறாண்டுகள் கழித்து செவ்வாயின் துருவப் பனித் தொப்பிகளில் நீர் இருக்கலாம் என்று தனது கருத்தை அறிவித்தார். மேலும் ஹெர்ச்செல் நுணுக்கமான கருவிகளைப் பயன்படுத்திச் செவ்வாய்க் கோளின் அச்சு, பூமியின் அச்சு 23.5 டிகிரிக் கோணத்தில் சாய்ந்துள்ளது போல், 23.98 டிகிரி சாய்ந்திருப்பதாகக் கணித்தார்.

1877 இல் இத்தாலிய வானியல் நிபுணர் கியோவன்னி சியபரெல்லி [Giovanni Schiaparelli (1835-1910)] செவ்வாய்த் தளத்தில் பரவியுள்ள கோடுகளைக் கண்டு அவற்றை ஆறோட்டங்கள் [Canals] என்று அறிவித்தார். அமெரிக்கன் வானோக்காளர் பெர்சிவெல் லோவல் [Percival Lowell (1855-1916)] அக்கூற்றைப் பின்தொடர்ந்து மேலும் 150 ஆறோட்டங்களைக் குறிப்பிட்டார். செவ்வாய்க் குடியினர் துருவப் பனிப் பாறைகளை உருக்கி அந்த ஆறுகள் மூலமாக நீரனுப்பித் துருவங்கள் அருகே வேளாண்மை செய்து வந்தனர் என்றும், பின்னால் ஆறுகள் யாவும் காய்ந்து செவ்வாய்க் கோள் பாலையாகக் போனது என்றும் விளக்கினார், லோவல்.

1930-1940 ஆண்டுகளில் காலிஃபோர்னியா வில்ஸன் குன்றில் [Mount Wilson, California] அமைக்கப் பட்டுள்ள ஆற்றல் மிக்க 100 அங்குல தொலை நோக்கிகளைக் கொண்டு, விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளை உற்று நோக்கி, அதன் ஒளிப்பட்டைகளை [Light Spectra] ஆராய்ந்து நீர், ஆக்ஸிஜென் உள்ளனவா என்று தேடினார்கள்! ஆனால் அவற்றின் இல்லாமையே நிரூபணம் ஆனது! அடுத்து நாசா செவ்வாயிக்கு அனுப்பிய விண்ணாய்வுச் சிமிழ்களும், லோவலின் கருத்து தவறானது என்று நிரூபித்துக் காட்டின.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் செவ்வாய் நோக்கி விண்கப்பல்கள்

1. 2001 செவ்வாய் ஆடிஸ்ஸித் தீரப்பயணம்

2001 ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் ஆடிஸ்ஸி [2001 Mars Odyssey Voyage] விண்சிமிழைத் தாங்கிச் செல்லும் ராக்கெட் எவ்விதப் பழுதும், தவறும் ஏற்படாமல் பிளாரிடா ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. ஆடிஸ்ஸி விண்சிமிழ் 725 கிலோ கிராம் எடையுடன் 7x6x9 கனஅடிப் பெட்டி அளவில் இருந்தது. சில மாதங்கள் பயணம் செய்து, 2001 அக்டோபர் 24 ஆம் தேதி செவ்வாய்க் கோளை அடைந்து, முதலில் பதினெட்டரை மணிக்கு [18:36 துல்லிய நேரம்] ஒருமுறைச் சுற்றும் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு செவ்வாய்க் கோளின் சூழ்மண்டலத்தில் ஆடிஸ்ஸி விண்கப்பலை வாயுத்தடுப்பு முறையில் [Aerobraking] கையாண்டு, நீள்வட்ட வீதியைச் சுருக்கிச் செவ்வாயின் குறு ஆரத்தை 240 மைலாக விஞ்ஞானிகள் மாற்றினர். திட்டமிட்ட குறு ஆரம் 186.5 மைல்! கிடைத்தது, குறு ஆரம் 240 மைலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறைச் சுற்றும்

நீள்வட்டப் பாதை!

ஆடிஸ்ஸியின் மின்னியல் கருவிகள் சில செவ்வாய்க் கதிர்வீச்சுச் சூழ்நிலையை [Mars Radiation Environment (MARIE)] உளவு செய்யும். காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி [Gamma Ray Spectrometer], நியூட்ரான் ஒளிப்பட்டை மானி [Neutron Spectrometer], ஆகிய இரண்டும் செவ்வாய்த் தளத்தில் நீர்வளம் உள்ளதையும், ஹைடிரஜன் வாயுச் செழிப்பையும் கண்டறியும். அதே சமயம் தெளிவாகப் படமெடுக்கும் வெப்ப எழுச்சிப் பிம்ப ஏற்பாடு [Thermal Emission Imaging System (THEMIS)] விரிகோணப் படங்களை எடுத்தனுப்பும். செவ்வாய்ச் சூழ்வெளியின் கதிரியக்க வீரியத்தை அளக்கும். பின்னால் மனிதர் செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்க வரும்போது, கதிரியக்கத் தீவிரத்தால் அபாயம் [Radiation Hazard] விளையுமா என்றறிய அந்த அளவுகள் தேவைப்படும். மேலும் அதன் கருவிகள் தளவியல் பண்பை [Geology] அறியவும், தாதுக்களை ஆய்வு [Mineralogical Analysis] செய்யவும் பயன்படும்.

2005 அக்டோபர் வரை ஆடிஸ்ஸி விண்வெளிச் சுற்றுச்சிமிழ் தொடர்ந்து செவ்வாய்க் கோளின் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கும்.

2. பீகிள் தளச்சிமிழுடன் ஐரோப்பாவின் செவ்வாய் வேகக் கப்பல்

ஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சுமந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-ஃபிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோடிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

Russian Soyuz Rocket

2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி [Mineralogical Mapper], இத்தாலியின் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.

பீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன்படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2! அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது! செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும். தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும். சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.

ESA Mars Express

செவ்வாய்த் தளத்தில் பீகிளின் பணிகள்: நிறைய விரிகோணப் படங்கள் எடுக்கும். அதன் நுண்ணோக்கி [Microscope] சிறு பாறைகள், தள மண் ஆகியவற்றைச் சோதிக்கும். சுய இயங்கிக் கரம் [Robotic Arm] நீளும் தூரத்தில் உள்ள பாறைத் துணுக்குகளைக் கைப்பற்றி ஆர்கானிக் பிண்டம் [Organic Matter], நீர், நீர்மை [Moisture], நீருடன் இயங்கித் தங்கிய தாதுக்கள் [Aqueously-deposited Minerals] ஆகியவை உண்டா என்று ஆராயும். தரைக்குள் நுழையும் கருவி ஒன்று, உட்சென்று மண்ணை மாதிரி எடுத்து, முற்காலத்தில் வாழ்ந்த உயிரின வளர்ச்சியை அறிய வாயுவைச் சோதிக்கும்.

3. செவ்வாயைத் தேடி உளவும் இரட்டை வாகனங்கள்

2003 ஜூலை 8 ஆம் தேதி 400 மில்லியன் டாலர் செலவில் நாசா தயாரித்த இரண்டாவது செவ்வாய்த் தள வாகனத்தைக் [Mars Exploration Rovers (MER-B)] கனாவரல் முனை ஆயுதப்படை விமானத் தளத்திலிருந்து [Cape Canaveral Air Force Station] போயிங் டெல்டா-2 ராக்கெட் [Boeing Delta-2 Rocket] தாங்கிக் கொண்டு தனது பல மில்லியன் மைல் பயணத்தைத் துவங்கியது. வாகனத்தைக் கொண்டு செல்லும் விண்சிமிழ் ஏழு மாதங்கள் பறந்து 2004 ஜனவரி-பிப்ரவரி இல் செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்ற ஆரம்பிக்கும். சென்ற ஜூன் 10 ஆம் தேதியன்று முதல் செவ்வாய் வாகனம் [Mars Exploration Rovers (MER-A)] அதைப்போல் ஏவப்பட்டு, செவ்வாயை நோக்கித் தற்போது போய்க் கொண்டிருக்கிறது. முதல் விண்சிமிழ் 2004 ஜனவரி 4 ஆம் தேதி செவ்வாய்க் கோளைச் சுற்றத் துவங்கும். ‘இப்போது 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு வாகனங்கள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்கின்றன ‘ என்று நாசாவின் ஆணையாளர் ஷான் ஓ ‘ கீஃப் [Administrator, Sean O ‘Keefe] அன்றைய தினத்தில் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார்.

Mars Odyssey Location

டெல்டா-2 ராக்கெட்டுகள் திடவ எரிச்சாதன மேலுந்திகளைக் [Soild-Fuel Boosters] கொண்டவை. 2004 ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் செவ்வாயைச் சுற்றும் விண்சிமிழ்கள் இரண்டும் பாராசூட் வாயுப்பை இறங்கு ஏற்பாடில் இருக்கும் [Parachute-Airbag Landing System] தளச்சிமிழ்களைக் கீழே இறக்கும். வாகனங்கள் வேறான தளங்களில் இறங்கி நகரத் துவங்கும். செவ்வாயின் எதிர்ப்புறத்தில் நீரால் நிறம் மாறிய தாதுக்களான ஹேமடைட் செம்மண் [Hametite Red Sand] நிறைந்த பகுதியில் ஒரு வாகனம் நடமாடும்!

‘செவ்வாய் வாகனங்களின் குறிப்பணிகள் [Mars Exploration Rovers] அங்கே உயிரினங்கள் இருந்தனவா என்று அறிவதற்கு டிசைன் செய்யப்பட வில்லை. செவ்வாயில் நீருள்ளதா என்று உளவு புரியவும் அவை டிசைன் செய்யப்பட வில்லை. அங்கு நீர் இருந்ததை நாம் அறிவோம். இப்போதும் நீர் இருக்கலாம் அங்கே. ஆனால் நமக்குத் தெரியாதவை என்ன ? செவ்வாய்த் தளத்தில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளம் இருந்தது ? அங்கே எத்துணை காலம் நீர்வளம் நீடித்தது ? கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளம் இருந்திருந்தால் அப்போது உயிரினத் தோற்றம் உதயமாவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும்! ஏனெனில் பூமியில் நீர்வளம், எரிசக்தி, ஆர்கானிக் கூறுகள் [Organic Compounds] ஆகியவை காணப்பட்ட போதெல்லாம், நாம் உயிரினங்களைக் கண்டோம். ஒரு காலத்தில் உயிரினம் இருந்ததற்கு மூலமான ஒரு முக்கிய காரணத்தைத் தேட அவை டிசைன் செய்யப் பட்டுள்ளன ‘ என்று நாசாவின் விஞ்ஞான அதிபர் எட்வெர்டு வைலர் [Edward Weiler, Science Chief] கூறினார்.

Polar Ice Cap

செவ்வாயிக் கோளின் தளவியல், சூழ்நிலை அமைப்புகள்

பரிதியிலிருந்து சராசரி 142 மில்லியன் மைல் தூரத்தில் நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது, செவ்வாய். பூமியின் விட்டம்: 7926 மைல். செவ்வாயின் விட்டம்: 4222 மைல். செவ்வாய்க் கோள் தன்னைத் தானே சுற்ற சுமார் 24 மணி நேரமும், சூரியனைச் சுற்றிவர 687 நாட்களும் எடுத்துக் கொள்கிறது. ஏறக்குறைய பத்தில் ஒரு பங்கு பூமியின் நிறையைப் [10% Mass] பெற்று, 16 சதவீதக் கோள வடிவைக் [16% Volume] கொண்டுள்ளது, செவ்வாய். பூமியில் பெரும்பான்மை நைடிரஜன் [78%], சிறுபான்மை ஆக்ஸிஜன் [20%] வாயுக்கள் சூழ்ந்துள்ளதைப் போலின்றி, செவ்வாயில் பெரும்பான்மை கார்பன்டையாக்ஸைடு [Carbondioxide 96%] மிகையாகி, உயிரினங்கள் வாழத் தேவையான வாயுக்கள் நைடிரஜன் 2%, ஆக்ஸிஜன் 0.1% ஆகிய இரண்டும் குன்றி, மரணப் பாலை நிலமாய்ப் போனது! பகல் சராசரி உஷ்ணம் +30 C, இரவில் தணிவு உஷ்ணம் -100 C என்று தெரிய வருகிறது.

சூரிய குடும்பத்திலே மிகப் பெரிய எரிமலைகள், செவ்வாய்க் கோளில் இருப்பதாக அறியப்படுகிறது. சூரிய மண்டலத்தின் மிகப் பெரும் செங்குத்து மலைத்தொடர்கள் [Grand Canyons] செவ்வாயில் உள்ளன! பிரம்மாண்டமான ஒலிம்பஸ் குன்று [Olympus Mons], இமயத்தின் சிகரத்தைப் போல் மூன்று மடங்கு உயரத்தில் [15 மைல்] செவ்வாயில் எழுந்துள்ளது! சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய ஒலிம்பஸின் தளப்பீடம் 435 மைல் நீளம் அகண்டது! பல்குழி நிறைந்த கால்டெரா பெருங்குழி [Caldera Crater] 50 மைல் அகலம் உள்ளது!

Steven & Bell, Rover Designers

துருவப் பனிப் பாறைகள், தேய்ந்து வற்றிய நீர்த் துறைகள்

1971 இல் மாரினர்-9 விண்ணாய்வுச் சிமிழ் செவ்வாயில் நீரோட்டம் இருந்த ஆற்றுப் பாதைகளைக் காட்டின! ஐயமின்றி அவற்றில் நீரோடித்தான் அத்தடங்கள் ஏற்பட்டிருக்க முடியும். சிற்றோடைகள் பல ஓடி, அவை யாவும் சேர்ந்து, பெரிய ஆறுகளின் பின்னல்களாய்ச் செவ்வாயில் தோன்றின! ஆறுகளின் அதிவேக

நீரோட்டம் அடித்துச் செதுக்கிய பாறைகள் சிற்ப மலைகளாய்க் காட்சி அளித்தன! அவை யாவும் தற்போது வரண்டு வெறும் சுவடுகள் மட்டும் தெரிகின்றன!

பூமியின் அழுத்தத்தில் [14.5 psi] ஒரு சதவீதம் [0.1 psi] சூழ்ந்திருக்கும் செவ்வாய்க் கோளில் நீர்வளம் நிலைத்திருக்க வழியே இல்லை! காரணம் அச்சிறிய அழுத்தத்தில், சீக்கிரம் நீர் கொதித்து ஆவியாகி, வாயு மண்டலம் இல்லாததால் அகன்று மறைந்து விடும்! ஈர்ப்பாற்றல் பூமியின் ஈர்ப்பாற்றலில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதால், மெலிந்த ஈர்ப்பு விசையால் நீர்மை [Moisture], மற்றும் பிற வாயுக்களையும் செவ்வாய் தன்வசம் இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை! ஆயினும் செவ்வாய்ச் சூழ்மண்டலத்தில் மிக மிகச் சிறிதளவு நீர்மை ஆவி [Water Vapour] கலந்துள்ளது.

செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது! துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.

அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அளவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும் இரண்டு சந்திரன்கள்

சூரியக் குடும்பத்தின் சீரமைப்பை நம்பிய, ஜொஹானஸ் கெப்ளர் செவ்வாய்க் கோளுக்கு, அவரது கணிதக் கோட்பாடின்படி இரண்டு சந்திரன்கள் இருக்க வேண்டும் என்று உறுதியாக அறிவித்தார்! காலிலியோதான் 1610 இல் முதன்முதல் செவ்வாய்க் கோளின் இரண்டு துணைக் கோள்களைத் தன் தொலைநோக்கியில் கண்டவர். 1877 இல் அமெரிக்க விஞ்ஞானி அஸாஃப் ஹால் [Asaph Hall] அவற்றைப் படம் பிடித்து, போர்க்கோள் செவ்வாயைச் சுற்றும் அவற்றுக்கு ஃபோபாஸ் [Phobos], டைமாஸ் [Deimos] என்று கிரேக்க இதிகாசத்தில் வரும் போர்க் கடவுளின் தேர்க் குதிரைகளின் பெயர்களைச் சூடினார். ஃபோபாஸ் என்றால் அச்சம் [Fear] என்றும், டைமாஸ் என்றால் பீதி [Panic] என்றும் பொருள்.

1969 இல் நேரில் நெருங்கிப் படமெடுத்த அமெரிக்க விண்ணாய்வுச் சிமிழ்கள் மாரினர், வைக்கிங் [Mariner, Viking Space Probes] ஆகிய இரண்டும் ஃபோபாஸ், டைமாஸ் ஒழுங்கற்ற உண்டைக் கோள்களாகக் [Irregular, Lumpy Objects] காட்டின! இரண்டிலும் பெரிதான ஃபோபாஸின் பரிமாணம்: 17x14x12.5 மைல்! செவ்வாயிக்கு அருகில் 5829 மைல் தொலைவில், வெகு வேகமாகச் [சுற்றுக்கு 7:51 மணிநேரம்] செவ்வாய்க் கோளைச் சுற்றுகிறது! இரண்டு சந்திரன்களும் செவ்வாயை வட்ட வீதியில் சுற்றி வருகின்றன.

டைமாஸ் இரண்டிலும் மிகச் சிறியது. அதன் பரிமாணம்: 10x7x6 மைல்! செவ்வாயிக்கு 14,600 மைல் தொலைவில், சுற்றுக்கு 31 மணி எடுத்து வலம் வருகிறது! இரண்டு துணைக் கோள்களும் கருமை நிறத்தில் பெரும் குழிகளைக் [Craters] கொண்டவை. ஃபோபாஸில் உள்ள ஒரு பெருங் குழியின் விட்டம்: 5 மைல்! அக்குழிக்கு ஸ்டிக்னி [Stickney] என்று அஸாஃப் ஹால் தன் மனைவின் பெயரை இட்டார்!

ஃபோபாஸ், டைமாஸ் இரண்டும் விண்வெளியில் என்றோ ஒரு காலத்தில் வெடித்துச் சிதறி அலைந்து கொண்டிருந்த விண்கற்கள் [Astroids] என்றும், அவற்றைச் செவ்வாய்க் கோள் தன் ஈர்ப்பாற்றலால் இழுத்துப் பற்றிக் கொண்டதாகவும் கருதப் படுகிறது! பூமியின் நிலவைப் போன்று, ஃபோபாஸ், டைமாஸ் இரண்டும் ஒரே முகத்தைச் செவ்வாயிக்குக் காட்டிச் சீரிணைவுச் சுழற்சியில் [Synchronous Rotation] சுற்றி வருகின்றன!

2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைக்கும் செவ்வாய்ப் பயணம்

இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் [2025] நாசாவும் [NASA], ஈசாவும் [ESA] மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பல்களைத் [Manned Spacecraft] தயாரித்து, செவ்வாய்க் கோளில் தமது தடத்தை வைக்கத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு வருகின்றன! அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது! ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது. திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும்! ஆகவே செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டியதிருக்கும்! அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய சிரமங்கள், பிரச்சனைகள் அநேகம்! பாதுகாப்பாக அப்பயணத்தைத் துவங்கி நிறைவேற்றத் துணியும் விஞ்ஞானிகளின் மன உறுதியை நாம் மிகவும் மெச்ச வேண்டும்.

நாசா முன்னோடியாகக் கணித்த எதிர்கால மனிதப் பயணத்தில், மனிதர் 500 நாட்கள் செவ்வாய்த் தளத்தில் தங்கி வாழப் போவதாய்த் திட்ட மிட்டுள்ளது. அதற்காக ‘மேகா ‘ [Mars Environmental Compatibility Assessment (MECA)] என்னும் திட்ட நெறிநூல் தயாரித்திருக்கிறது. அதைப்போல் ஈசாவின் பயணப் பாதுகாப்புத் திட்டம் ‘மெலிஸா ‘ [Micro-Ecolocigal Life Support Alternative (MELISA)] எனப்படும் நெறிநூலில் எழுதப் பட்டுள்ளது.

2004 ஆண்டு செவ்வாய்க் கோளில் இரட்டை வாகனங்கள் [Mars Rovers] நடமாடி, விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் முக்கிய தகவல்களைக் கண்டு அனுப்பினால், அவற்றை நாசா பயன்படுத்திப் பல பில்லியன் டாலர் செலவில் மனிதரை நிச்சயம் செவ்வாயிக்கு அனுப்பப் போகிறது. நாசா அல்லது ஈசா செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, செவ்வாய்த் தளத்தில் தடமிட்ட பிறகு பாதுகாப்பாகப் பூமிக்கு மீட்சி செய்தால், அது நிச்சயம் 21 ஆம் நூற்றாண்டின் விண்வெளி வரலாற்றில் ஓர் மகத்தான விஞ்ஞானப் பொறியியல் சாதனையாக முதன்மை பெற்றுப் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும்.

************************

தகவல்கள்:

1. Mars-Earth Opposition Makes History By: A.J.S. Rayl [Aug 27, 2003]

2. Planet Guides: Mars By: Duncan Brewer [1993]

3. Exploring the Planets By: Brian Jones [1991]

4. Cornell University Scientists to Lead NASA ‘s 2003 Mars Mission By: David Brand

5. 2001 Mars Odyssey Space flight Now [October 24, 2001]

6. Mars Surveyor Orbiter [April 7, 2001]

7. Special Report Odyssey Mission to Mars

8. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].

9. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]

10 Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]

11 Science & Technology: ESA ‘s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]

12 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]

******************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா