விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அவர் உயிரியியலாளர் அல்ல. ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் அவர் இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த கால கட்டம் குழப்பங்களும், சர்வதேச பிரச்சனைகளும் நிறைந்த காலம். அப்பிரச்சனை சூறாவளிகளின் மையக்கண்ணாகவே அவர் வாழ்ந்த தேசம் இருந்தது. ஆனால் மிகவேகமாக வளரும் உயிரியல் துறையின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் இன்றைக்கும் அம்மனிதரின் அவர் வாழ்ந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படாத அவரது சிந்தனைகளை இன்று வியப்புடன் நோக்குகின்றனர். பற்பல சூழ்நிலை கடினங்களுக்கு அப்பால் மானுட மேதமை அவரிடம் கொழுந்துவிட்டு பிரகாசித்து தலைமுறை தலைமுறையாக அவர் தேச அறிவியலாளர்களை மேம்படுத்தியது. இன்றுதான் அவரது மதிப்பு உலகெங்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. தம் காலங்களுக்கு அப்பால் அறிவியலின் மானுடத்தின் பரிணாம வளர்ச்சியை கணித்தவராக அவர் விளங்குகிறார். விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி (1863 – 1945) சுற்றுப்புற சூழலியல் அறிஞர்கள், மானுட பரிணாமம் குறித்து சிந்திக்கும் தத்துவவாதிகள், பரிணாம அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், அண்டவெளியில் உயிரின் சாத்திய கூறுகளை ஆராயும் அறிவியலாளர்கள் ஆகிய அனைவருமே கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் பெரும் மேதை.

தனது பதினேழாவது பிறந்த தின பரிசாக அந்த ரஷியச் சிறுவன் தன் தந்தையிடம் டார்வினின் நூல்களை பரிசாக கேட்டதில் நம் கதையின் தொடக்கப்புள்ளி இருக்கலாம். வெர்னாட்ஸ்கியின் தந்தையால் ‘ எனது அன்பு மகனுக்கு ‘என கையெழுத்திடப்பட்ட அந்நூல் இன்று மாஸ்கோவில் வெர்னாட்ஸ்கியின் நூலக அறையில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது. வெர்னாட்ஸ்கியின் இல்லமே காட்சியகமாக உள்ளது. அதே இளைஞன் தன் 21 ஆம் வயதில் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் கலைகளுக்கான மாணவர் அமைப்பில் சமர்ப்பித்த கட்டுரையொன்றில் பின்வருமாறு எழுதியிருந்தான், ‘ஆனால் உயிர் என்றால் என்ன ? மேலும் ஜடப்பொருள்-என்றென்றும் தொடர்ச்சியாக விதிக்களூக்குட்பட்ட இயக்கங்களுடன், முடிவற்ற ஆக்கமும் அழிவும் நிகழும் , ஓய்வற்ற தன்மையுடைய -அந்த ஜடப்பொருள் உயிரற்றதா ? இப்பெரும் பிரபஞ்சத்தில் காண இயலா ஒரு சிறு புள்ளியின் மேல் மிக மெதுமென்மையாக படர்ந்திருக்கும் ஓர் சிறு படலத்தில் மட்டுமே அத்தனி சிறப்பியல்புகள் உள்ளனவா ? அப்பால் இருக்கும் பெரும் பரப்பனைத்தும் உயிரற்ற ஜடத்தன்மையே அரசாள்கிறதா ? …காலம் மட்டுமே இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். அறிவியல் ஒருநாள் இக்கேள்விகளுக்கு விடையளிக்கும். ‘ அத்தேடலும் தேடலில் ஏற்பட்ட தரிசனங்களுமே வெர்னாட்ஸ்கியின் வாழ்வின் தவமாக விளங்கின. தத்துவ பின்புலம் இல்லா அறிவியல் அறிவு காட்டுமிராண்டித்தனமானது என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். பெரும் தத்துவ கேள்விகள் மனதில் சுழன்றாட தனது தேடலின் பாதையை இயற்கை அறிவியலில் துவக்கினார் வெர்னாட்ஸ்கி. 25 ஆவது வயதில் தன் வாழ்க்கை துணைவிக்கு எழுதிய கடிதத்தில் வெர்னாட்ஸ்கி குறிப்பிட்டார், ‘ விதி விசித்திரமானது. மானுட வரலாற்றிலும், கணிதவியலிலும் எனக்கு ஈர்ப்பு உண்டாயிற்று. எனினும் நான் இயற்கை அறிவியலை என் பாதையாக மேற்கொண்டேன். இயற்கையின் வரலாற்றிலிருந்து மனிதனின் வரலாற்றுக்கு முன்னேற கருதினேன். கணிதவியலை பொறுத்தவரை எனக்கே என் திறமையில் அவ்வளவாக நம்பிக்கையில்லை… ‘ தனது முப்பதாம் வயதில் அவர் டால்ஸ்டாயைச் சந்தித்தார். அச்சந்திப்பின் தாக்கம் அவர் வாழ்வு முழுவதுமாக இருந்ததை நாம் உணர முடிகிறது.ஏப்ரல் 23, 1892 இல் வெர்னாட்ஸ்கி பின்வருமாறு எழுதுகிறார், ‘ இன்று டால்ஸ்டாய் எங்களை காண வந்திருந்தார்.நெடு நேரம் நாங்கள் அறிவியல்,கருத்துக்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். … நான் முதலின் நினைத்திருந்ததைக் காட்டிலும் டால்ஸ்டாயின் எண்ணங்களில் பெரும் ஆழம் உள்ளது. அந்த ஆழம் எவை குறித்ததென்றால்:

1. நம் வாழ்வின் அடிப்படை உண்மையினைத் தேடுவதாக இருக்க வேண்டும்.

2. ஒருவரது வாழ்வின் நோக்கம் தான் கண்டறியும் உண்மையை எவ்வித தயக்கமும், பரிசுகளின் எதிர்பார்ப்புமின்றி

வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ‘ வெர்னாட்ஸ்கியின் குருவே வெர்னாட்ஸ்கியின் அறிவியல் ஆளுமையின் மதிப்பீடுகளை பெரிதும் உருவாக்கியவர். அவர் புகழ் பெற்ற ரஷிய மண்ணியலாளரான தாகுசேவ்(1846-1903). ஆனால் மண்ணியலைக் காட்டிலும் விரிவாக சென்ற அறிவியல் பார்வை தாகுசேவ்வினது. சுற்றுப்புற சூழலியலின் சர்வதேச தரமாக விளங்கும் பாடநூலின் (சூழலியலின் அடிப்படைகள்) ஆசிரியரான ஓதம் தாகுசேவ்வினை ‘சூழலியலின் முன்னோடி அறிவியலாளர் ‘ என்றே குறிப்பிடுகிறார். பல சம்பந்தமற்றதாக தோன்றும் துறைகளிலிருந்து பெறப்பட்ட ஆராய்ச்சி விளைவுகளை அழகிய தத்துவ இழைகளால் ஒருங்கிணைத்து உயிர் மற்றும் புவி குறித்து புதியதோர் பார்வையை அறிவியல் சார்ந்து முன்வைத்தவர் வெர்னாட்ஸ்கி. அப்பார்வையின் மூலம் புதிய இயற்கை உறவுகளை நாம் கண்டடைய முடியும். இயற்கை குறித்த நம் அறிவியல் பார்வை ஆழமும் விசாலமும் கொண்டு முன்னகர முடியும். புவிவேதியியலே வெர்னாட்ஸ்கியின் துறை. உயிரியல் அல்ல. இன்று போல தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத, மேலும் அரசியல் சுவர்களும் இரும்புதிரைகளும் சுதந்திரத்தின் மூச்சுவளையை நெறித்த அக்கால கட்டத்தில், உலகெங்கும் உள்ள புவிவேதியியல் அறிஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். (சத்திய வேட்கை கொண்ட பித்தர்களுக்கு எதுவும் தடையல்ல போலும். மானுடம் ஜீவிப்பதின் மாபெரும் இரகசியமும் இத்தகைய பித்தர்கள்தான் போலும்.) வெர்னாட்ஸ்கி மிகப்பரவலும் ஆழமும் கொண்ட புவிவேதியியல் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் சில அடிப்படை உண்மைகளை கண்டறிந்தார். புவியின் மேல்தோட்டில் காணப்படும் பருப்பொருளை அவர் பின்வருமாறு பகுப்பு செய்தார்: இப்பகுப்பு புவிவேதியியல் அடிப்படையில் செய்யப்பட்டது என்பதனை கருத்தில் கொள்க:

1) உயிர்களில் உறையும் உயிர் வாழும் பருப்பொருள்

2) உயிர்களால் உருவாக்கவும் உரு மாற்றம் செய்யப்படவுமான உயிர்-ஆக்கும்

பருப்பொருள்

3) உயிர்கள் பங்கு பெறாத பருப்பொருள்

4) உயிர்களாலும் , உயிரற்ற வினைகளாலும் உருவாகும் உயிர்-ஜட பருப்பொருள்

5) இயற்கை கதிரியக்க விளைவு பருப்பொருள்

6) துகளாக்கப்படும் பருப்பொருள் மற்றும்

7) புவியில் காணப்படும் அண்டவெளி பருப்பொருள்

இன்று இந்த பகுப்பு நமக்கு எளிதான ஒன்றாக தோன்றக்கூடும். ஆனால் புவிவேதியியலும் உயிரியக்கங்களும் தெளிவான வரையறுக்கப்பட்ட எல்லைகளுடன் விளங்கிய ஒரு காலகட்டத்தில் இப்பார்வை புரட்சிகரமான ஒன்றாகும். இன்றும் வளிவேதியியல், உயிரியல்,நீரியல் ஆகிய துறைகளிடையே ஒருமித்த இழைகளை நிறுவுதலென்பது எளிதானதல்ல. செங்கடலோரம் வெட்டுக்கிளி கூட்டம் குறித்து ஆய்வு செய்த கர்த்தூசரின் ஆய்வுகள் அடிப்படையில் காலத்துடன் தொடர்புடைய உயிர்வாழும் பருப்பொருளின் புவிபடர்தல் மற்றும் இடம் பெயர்தல் குறித்த வெர்னாட்ஸ்கியின் வரிகள் அவரது பார்வையின் தன்மையை நமக்கு தெளிவாக்குகின்றன. ‘உயிர்-புவி-வேதியியல் நோக்கில் ஒரு பெரும் வெட்டுக்கிளி படை என்பது என்ன ? அதி ஊக்க வேதித்தன்மையுடன், திண்மையற்ற பாறைகள் இயக்க நிலையில் நிலவுவதேயாகும். ‘ வெர்னாட்ஸ்கியின் முன் ஒரு வேதியியலாளரும் இவ்வாறு உயிரை கண்டதில்லை. இன்றைய அறிவியல் கண்ணோட்டத்திலிருந்தும் கூட இப்பார்வை துணிச்சலானதுதான். ஒற்றைப்படை தன்மை கொண்ட உயிர் பருப்பொருட் குழுக்களையும், (உதாரணமாக ஒரு ஜீனஸைச் சார்ந்த உயிரினங்கள்), மாறாக பன்மைத்தன்மை கொண்ட உயிர் பருப்பொருட் குழுக்களையும் அவர் வேறுபடுத்திக்காட்டினார். வெர்னாட்ஸ்கி புவியின் பரப்பில் பெருமளவு ‘கடந்த கால உயிரிக்கோளம் ‘ (Bygone Biosphere) என வரையறுத்தார். பாக்டாரிய நுண்ணுயிர்கள் ஒரு பெரும் புவிவேதி இயக்க சக்தியாக இந்த கோளம் முழுமையிலும் திகழ்வதை கணித்த முதல் அறிவியல் அறிஞர் அவரே. அவரது வார்த்தைகளில், ‘இப்புவியின் பரப்பானது பல டசன் கிலோமீட்டர்களுக்கு பலவித புவியியல் போர்வைகளால் பொதியப்பட்டுள்ளது. இவ்வாறு போர்த்தியிருக்கும் படலங்களில் பல கடந்த கால உயிரிக்கோளங்களாகும். …இப்போது இவை அனைத்துமே உயிர்க்கோளத்திலிருந்து உருவானவை என்பது தெளிவு. இவை கடந்த கால உயிரிக்கோளங்கள். ‘ உயிரினங்களுக்கும் புவியின் வேதி அமைப்பிற்குமான தொடர்பினை குறித்து முதன்முதலாக சிந்தித்தவர் சார்ல்ஸ் டார்வினாவார். ஒரு செ.மீ மண் புவி மீதுற 50 வருட காலமாகும். நல்மணல் மீது ஒவ்வொரு வருடமும் மண் புழுக்கள் தம் உடல்-வேதிவினைகளால் 4 மி.மீ படலத்தை இங்கிலாந்தில் மட்டும் சேர்க்கின்றன என கணித்தார் டார்வின். வெர்னாட்ஸ்கி தன்னால் அறியப்பட்ட ஏறத்தாழ அனைத்து உயிரின-சூழல் உறவுகளினுடையவும் புவிவேதி தாக்கத்தை காலத்தின் பிரவாகத்தில் கணித்தார். இக்கணிப்புகளின் அடிப்படையில் அவரால் ஒரு புதிய அறிவியல் புலமே உருவாக்கப்பட்டது. ‘உயிர்-புவி-வேதியியிலே ‘ (Biogeochemistry) அது. இப்புலத்தின் அடிப்படை விதிகளாக (இவை திட்டவட்ட மாற்ற இயலா விதிகளல்ல, மாறாக

திசைகாட்டிகள் என கொள்தலே நலம்.) அவர் பின்வரும் மூன்றையும் கண்டறிந்தார்.

1. உயிர்மூல புலம் பெயர்தலுக்கு (Biogenic migration) உட்படுத்தப்படும் தனிமங்களின் அணுக்கள் உயிரிகோளத்தில் தம் அதி உச்ச அளவு வெளிப்பாட்டை பெறும் வகையில் இயங்குகின்றன.

2.புவியியல் கால பிரவாகத்தில் (Geological time) உயிரினங்களின் பரிணாமத்தின் திசை எது நோக்கி நகருமென்றால், எத்தகைய அமைப்புகள் உயிர்மூல புலம் பெயர்தலினை மிகையாக ஆதரிக்கின்றனவோ அத்தகைய அமைப்புகளினை உருவாக்கும் திசை நோக்கியதாக அமையும்.

3.பிரி-காம்பிரிய புவியுகத்திற்கு பின் உடனடியாக அப்போது உயிர்மூல புலம் பெயர்தலுக்கு உட்படுத்தப்பட்ட அணுக்கள் தம் அதிஉச்ச வெளிப்பாட்டினை எட்டும் வகையில் உயிரின எண்ணிக்கை விளங்கியது.

பல பரிணாம புதிர்களுக்கான விடைகளை நாம் தேட வேண்டிய திசைகளை வெர்னாட்ஸ்கி நமக்கு தந்துள்ளார். தொல்பழங்கால உறை உயிர் ஆராய்ச்சியாளரான ஸ்டாபன் ஜே கோல்ட் மிகவும் பிரபலபடுத்திய ஒரு உயிரியல் உண்மை காம்பிரிய புவியுகத்தில் ஏற்பட்ட பெரும் உயிர் அமைப்பு மாற்றம். இன்று நாம் அனைத்து உயிரினங்களிலும் காணும் அடிப்படை அமைப்பு ஒற்றுமைகள் காம்பிரிய ‘பெரும் உயிர் வெடிப்பில் ‘ (Big Bang of Life) தான் தொடங்கியது. இதற்கான காரணிகளை பரிணாம அறிவியலாளர்கள் ஆராய்ந்த வண்ணம் உள்ளனர். இதில் புவி-வேதி காரணிகளின் பங்கினை – அப்பங்கு நிச்சயம் தீர்மான பங்காகவே இருக்க கூடும்- அறிய வெர்னாட்ஸ்கியின் விதிகள் நமக்கு பெரும் அளவில் உதவக்கூடும். கதிரியக்க சிதைவினை மனிதர்கள் கட்டுப்படுத்தி ஆற்றலுக்கு பயன்படுத்த முடியும் என கூறிய முதல் அறிவியலாளர் வெர்னாட்ஸ்கியே. 1916 இல் ரஷியாவில் யுரேனிய தாதுவினை அவர் முதன்முதலில் கண்டுபிடித்தார். 1918 இல் ரேடியம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. 1922 இல் பீட்டர்ஸ்பர்க்கில் ரேடியம் மையத்தை உருவாக்கினார். 1938 வரை அதன் இயக்குநராக விளங்கினார். இம்மையத்தின் தொடக்க உரையில் அவர் ‘அணு சக்தி அளப்பரிய ஆற்றலை நம் கையில் வைத்துள்ளது. அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறோமா அல்லது மானுட இன அழிவுக்கு பயன்படுத்துகிறோமா என்பது நம் கையில் உள்ளது. அளப்பரிய ஆற்றலுடன் அறிவியலுக்கு மதிப்பீடுகளின் இன்றியமையா தேவையும் ஏற்பட்டுள்ளது. ‘ என குறிப்பிட்டார். இது 1922 இல் ! 1922 இல் அவர் விண்கற்கள் குறித்த ஆய்வினையும் துவக்கினார். அது குறித்து ஆய்வுக் கட்டுரை தொடரினையும் அவர் வெளியிட்டார்.விண்கல் ஆய்வு கழகத்தையும் உருவாக்கினார். தன் வாழ்நாள் முழுவதும் அக்கழக செயல்பாடுகளின் வழிகாட்டியாக இருந்தார். அறிவியலுக்கு வெர்னாட்ஸ்கியின் வாழ்வின் மிகப் பெரிய பங்களிப்பு 1926 இல் லெனின்கிராடில் (பழைய மற்றும் இன்றைய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்) மிக அமைதியாக 2000 பிரதிகளே வெளிவந்த ‘உயிரிக்கோளம் ‘ எனும் நூல்தான். 1929 இல் இதன் பிரெஞ்ச் பதிப்பு பாரிஸில் வெளிவந்தது. 1986 இல்தான் முதல் ஆங்கில பதிப்பு வெளியிடப்பட்டது.(ஏன் இந்த பெரும் இடைவெளி ? காரணம் சொல்ல தேவையில்லை. 1927 இல் நடைபெற்ற ஒரு விமர்சன கூட்டத்தில் வெர்னாட்ஸ்கிக்கு வரலாற்றறிவியல் நோக்கற்று இருப்பதாக கூறப்பட்டது!) இன்று மீண்டும் ஆங்கிலப் பதிப்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. 1998 இல் நியூசயிண்டிஸ்டில் வெர்னாட்ஸ்கியின் இந்நூலுக்கு ஒரு புத்தக மதிப்பீடு வெளியிடப்பட்டிருந்தது. வெர்னாட்ஸ்கி 1922-23 இல் ஸோபோர்னில் நடைபெற்ற புவிவேதியியல் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது அவரது உரைகளை ஒரு பிரெஞ்சு துறவியும் மற்றொரு பிரெஞ்சு கணிதவியலாளரும் கேட்டனர். லெ ராய் எனும் அந்த தத்துவ அறிஞருடனும்,தெயில்ஹார்ட் தி சார்டின் எனும் அந்த துறவியுடனும் வெர்னாட்ஸ்கி நட்பு கொண்டார். ந்யூஸ்பியர் எனும் மனக்கோளம் குறித்த உருவாக்கத்தில் அவர்கள் இணக்கம் கொண்டனர். வெர்னாட்ஸ்கி உயிரிக்கோளத்தில் மானுட மனத்தின் தாக்க இழைகள் ஓடும் பகுதியை மனக்கோளம் என்றார். இம்மனக்கோளத்தின் செயல்பாடுகளினால் ஏறபடும் புவிவேதி மாற்றங்களை உயிரிக்கோளத்துடன் இணைவித்து பார்க்கும் முயற்சியை அவர் மேற்கொண்டார். வெர்னாட்ஸ்கி இறுதியாக எழுதியது ‘மனக்கோளம் (Noosphere) குறித்து சில வார்த்தைகள் ‘ எனும் கட்டுரையே. முதலில் ரஷிய மொழியில் வெளிவந்த அது பின்னர் 1945 இல் அமெரிக்கன் சயிண்டிஸ்ட் பத்திரிகையில் ‘உயிரிக்கோளமும் மனக்கோளமும் ‘ எனும் தலைப்பில் வெளிவந்தது. ‘மானுடம் முழுமையுமாக ஒரு மகத்தான புவியியல் இயங்காற்றலாக பரிணமித்துள்ளது ‘ என அதில் குறிப்பிடுகிறார் வெர்னாட்ஸ்கி. தனது 82 ஆவது வயதில் இம்மாமனிதர் காலமானார்.

புவி, ஓர் அதி உயிரியாக – மீண்டும் வெர்னாட்ஸ்கி!

1960களில் செவ்வாய் கிரகத்தில் உயிர் உள்ளதா இல்லையா என அறியும் பணியில் நாஸாவிற்காக ஈடுபட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் அறிவியலாளர் அதன் வளிமண்டல ‘சமச்சீர் தன்மையின் ‘ அடிப்படையில் அங்கு உயிர்கள் இல்லை என தீர்மானித்தார். பின்னர் பில்லியன்கள் டாலர் செலவில் செவ்வாய்க்கான ஆளற்ற மண் ஆய்வுகள் (வைகிங்) அவ்வுண்மையை உறுதி செய்தன. ஜேம்ஸ் லவ்லாக்கினை பொறுத்த வரையில் ஒரு கிரகத்தை இயக்க நிலையில் கண்டுவிட்ட பார்வை ஒரு பெரும் தரிசனத்தை அளித்தது. செவ்வாயின் வளிமண்டலத்தை இறப்பின் சமச்சீர் தன்மையிலும், புவியின் வளிமண்டலத்தை சமச்சீரற்ற இயங்கு நிலையிலும் வைத்திருக்கும் ஆற்றல் செயல்பாடு எது எனும் கேள்விக்கு விடைகாணும் முயற்சியின் இறுதியில் புவியின் உயிரனைத்தும் ஓர் பெரு இயக்கமாகவும், புவியையே ஓர் அதி உயிரியாகவும் அவர் கண்டறிந்தார். இன்று பிரபலமாகிவிட்ட ஒரு கதையின் படி, இங்கிலாந்தில், தன் வில்ஷயர் இல்லத்திலிருந்து ஒரு காலை நடையின் போது அவர் அண்டை வீட்டாரான நாவலாசிரியர் வில்லியம் கோல்டிங்குடன் லவ்லாக் தன் புதிய கண்டுபிடிப்பினை குறித்து விளக்கி இக்கோட்பாட்டிற்கு தகுந்த பெயர் கூறும்படி கேட்டதாகவும் அப்போது கோல்டிங் கிரேக்க புராணங்களின் புவி இறைவியான கயா (Gaia) எனும் பெயரினை கூறியதாகவும் கூறப்படுகிறது. ‘கயா ‘ நிறுவன அறிவியலாளரிடமிருந்து பெற்ற எதிர்ப்பு அபரிமிதமானது. இந்நிலையில் அமெரிக்க நுண்ணுயிரியலாளரான லின் மர்குலிஸ் மற்றும் அவரது மகன் டோரியன் சாகனுமாக இணைந்து ஏறத்தாழ இதே முடிவுக்கு வந்திருந்தனர். கயா குறித்து ஒரு தனிக்கட்டுரைத்தொடரே தேவைப்படும். சுவாரசியமான கோட்பாடுதான். ஆனால் இதற்கும் வெர்னாட்ஸ்கிக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் ?

அண்மையில் வெளியான கட்டுரை ஒன்றில், லின் மர்குலிஸின் வார்த்தைகளில், ‘வெர்னாட்ஸ்கி மற்றும் லாபோ (வெர்னாட்ஸ்கியை குறித்து பிரபல அறிவியல் நூல்கள் எழுதிய நிலவியலாளர்) குறித்து அறியாமலே ஜேம்ஸ் லவ்லாக் தன் ரஷிய முன்னோடிகளின் சாராம்சத்துடன் இசைவுடைய ஒரு புதிய கோட்பாட்டினை அளித்துள்ளார். அவை இரண்டுமே பிரபஞ்சத்திலியங்கும் இப்புவியின் உள்ளார்ந்த தன்மையாக உயிரினை காண்கின்றன. லவ்லாக் உயிரியங்கு தன்மையுடன் புவியினை காண்கிறார். வெர்னாட்ஸ்கி உயிரினை (புவியின் மிக முக்கியமான) புவிவேதி சக்தியாக காண்கிறார். ‘ உதாரணமாக வெர்னாட்ஸ்கி ‘ உயிர்-புவி வேதியியலில் சில ஆய்வுகள் ‘ எனும் தன் நூலில் பின்வரும் முடிவுக்கு வருகிறார், ‘உயிர் தான் சார்ந்திருக்கும் சூழலிற்கு தகுந்தாற் போல தகவமைத்துக் கொள்வதோடு அவ்வுயிரின் சூழலும் உயிருக்கு தகுந்தாற் போல தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. ‘ உயிர்களின் அதி உயிரி தன்மையை வெளிக்கொணரும் ஆய்வு முடிவுகளை வெர்னாட்ஸ்கி இலக்கியத்தில் எங்கெங்கும் காண முடியும். இது புவியின் கடல் குறித்து, ‘ பன்மைத்தன்மை வாய்ந்த உயிர்பொருளின் இருப்பினாலும் இயக்கத்தாலும் கடலின் உயிர்களனைத்தையும் மொத்தமாக கடலின் வேதித்தன்மையை மாற்றும் ஓர் தனி பெரும் உயிரியக்கமாக காணவேண்டும். ‘ பாஸ்பரஸ்,மாக்னீசியம், சிலிக்கான் என அனைத்து வேதிப்பொருட்களின் புவிசுழல்களிலும் உயிரின் பங்கினை வெர்னாட்ஸ்கி கடுமையான ஆய்வுகளால் கண்டறிந்தார். எனவே வெர்னாட்ஸ்கியின் அறிவியல் ‘கயா ‘ கோட்பாட்டின் அறிவியற் செயல்பாட்டிற்கான திசைகாட்டியாக விளங்குகிறது.

வெர்னாட்ஸ்கியும் பாரதமும்:

வெர்னாட்ஸ்கி தன் கிறிஸ்தவ இறையியல் சூழலை குறைபாடுடையதாகவே உணர்ந்துள்ளார். தனது 29 ஆவது வயதிலேயே அவர் எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு கூறியிருந்தார், ‘நாம் உடல்-மனது எனும் குறுகிய கிறிஸ்தவ இரட்டைத்தன்மையை கைவிட வேண்டும். உண்மையான ஆன்மிக வாழ்வு, மிக உயர்ந்த ஆதர்சங்களுடனான வாழ்வென்பது உடல் மற்றும் ஆன்மாவின் மிக உன்னத இயல்புகள் இணைந்தியங்குவதிலேயே உள்ளது. ‘. 1920 களிலிருந்து வெர்னாட்ஸ்கி மேலும் மேலும் பாரத தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். 1920 லில் அவர் ஒரு ரஷிய தத்துவவியலாளரை அவரது நூலில் பாரத தத்துவத்திற்கு உரிய இடம் கொடுக்காததற்காக கடிந்து எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார், ‘ஹிந்துக்களின் சமய மற்றும் தத்துவ சிந்தனைகள் மூலம் நாம் பெறுவது நம்முடைய யூதேய-கிறிஸ்தவ சிந்தனைகளிலிருந்து நாம் பெற்றதை காட்டிலும் அதிகம் என கருதுகிறேன். ‘ மேலும் அவர் பிற்கால கடிதம் ஒன்றில் வேத உபநிஷதங்களை குறித்த அவர் புலமையும் ஈடுபாடும் தெள்ளத்தெளிவாகிறது, ‘தெய்சினின் மொழிபெயர்ப்பில் உள்ள ரிக்வேத பாடல் ஒன்றினை அனுப்பியுள்ளேன். இம்மொழிபெயர்ப்பு அதன் மூல பாடலிற்கு நம்பிக்கையானதென்றே கருதுகிறேன். இக்கவி புத்தருக்கு நெடுங்காலம் முன்பும் ஏசுவிற்கு பல நூற்றாண்டுகள் முன்பும், சாக்ரட்டாசிற்கும் அனைத்து கிரேக்க சிந்தனைகளுக்கும் அறிவியலுக்கும் பன்னெடுங்காலம் முன்பும் இயற்றிய பாடலிது. ஆனால் இப்பாடல் நம்முள் எழுப்பும் சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்துகிறது.இப்பாடல் எத்தகைய உயர்ந்த எண்ணங்களை நம்முள் உருவாக்குகிறது! சிருஷ்டி கர்த்தரை குறித்து பெரும் ஐய வினாக்களை எழுப்புகிறது….இதுவே இதயத்தின் உள்தேடல் இதுவே அன்பின் உணர்ச்சி ‘. ரஷிய இந்தியவியலாளர் அலெக்ஸாண்டர் செக்னிவிச்சின் கூற்றின் படி வெர்னாட்ஸ்கி (அர்னால்ட் தாயின்பீ போன்றே) இந்நூற்றாண்டில் மானுடம் தன் கலாச்சார பன்மையையும் மனிதத்துவ மதிப்பீடுகளையும் காப்பாற்ற பாரத தத்துவத்தின் துணையினை பெறத் திரும்பும் என கருதியதாக கூறுகிறார். தன் இறுதிக்காலத்தில் வெர்னாட்ஸ்கி ஸ்வாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் மிகத் தீவிரமாக கவரப்பட்டார் என தெரிகிறது. 1936 இல் பெங்களூரில் இயங்கி வந்த உயிர் வேதியியலுக்கான மையத்தில் (Society for Biochemistry) அவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரானார்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள் மற்றும் இணைய தளங்கள்:

A.V.Lapo, “Traces of Bygone Biospheres” ‘Science for everyone’ series, Mir publishers, Moscow, 1987. (இந்த இரண்டாம் பதிப்பில் ‘கயா ‘-வெர்னாட்ஸ்கி தொடர்பு குறித்து விளக்கப்படுகிறது. முதல் (ஆங்கில) பதிப்பில் (1982) இது காணப்படாது.)

Vernadsky and our times (பக். 26-44) Science in the USSR, No. 3, May-June, 1988 (125th Birth anniversary feature)

G.Aksenov,Contact-response, Science in the USSR, No. 4,July-August 1990.

Alexander Mikeyev, “A pilgrimage to the world of immortal images”, Soviet Literature, No.8 (497), 1989.

http://www.earthinstitute.columbia.edu/library/earthmatters/spring1998/gaiaandbiospheres.html

****

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்