அறிவியல் மேதைகள் ஜான் லோகி பெரெட் (John Logi Baird)

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


தகவல் பரிமாற்றத் துறையில், வானொலியைத் தொடர்ந்து உண்டான மிகப் பெரிய அறிவியல் முன்னேற்றமாகக் கருதப்படுவது தொலைக்காட்சியே. வானொலியில் செய்திகளை ஒலி ஊடகத்தில் கேட்க மட்டும்தான் முடியும்; ஆனால் தொலைக்காட்சியிலோ செய்திகளை ஒலி மற்றும் ஒளி வடிவங்களில் கேட்க மற்றும் பார்க்க இயலும். இவ்வுலகில் எம்மூலையில் என்ன நடந்தாலும் உடனுக்குடன் அவற்றைக் காணவும், அறிந்து கொள்ளவும் முடிவதால் நிகழ்ச்சிகளோடு ஏறக்குறைய நேரடி அனுபவத்தை தொலைக்காட்சி வழியே பெற இயலுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தகவல் தொடர்புச் சாதனமான தொலைக்காட்சி ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட மனிதரால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. எனினும் தொலைக்காட்சி வடிவமைப்பிலும், உருவாக்கத்திலும் முக்கியமான பெரும் பணியாற்றிய சிறப்பு ஜான் லோகி பெரெட் அவர்களுக்கு உரியதெனில் அதில் மிகையேதுமில்லை. அவர்தான் முதன் முதலில் தொலைக்காட்சி வழியே வெற்றிகரமாகச் செய்திகளை ஒளிபரப்பினார். இந்நிகழ்ச்சி 1926ஆம் ஆண்டு கிரேட் பிரிட்டனில் நடைபெற்றது.

ஜான் லோகி பெரெட் 1888 ஆகஸ்ட் 13ஆம் நாள் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலென்ஸ்பர்க் என்னுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தை மெத்தப் படித்த பாதிரியார்; குறைந்த வருமானத்தில் தமது பெரிய குடும்பத்தை நடத்தி வந்தார். பெரெட் கூடப் பிறந்தவர்கள் ஓர் அண்ணனும் இரு மூத்த சகோதரிகளுமாவர். அருகிலிருந்த தொடக்கப்பள்ளியில் பெரெட் தமது துவக்கக் கல்வியைப் பெற்றார். அந்நாளில் ஒளிப்படவியல் (photography) பள்ளிகளில் முக்கியமான இணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. பெரெட் அப்பாடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்; பள்ளியின் ஒளிபடவியல் சங்கத்தின் (photography society) தலைவராகவும் பணியாற்றினார். இளமையிலேயே பெரெட் அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார். தமது 12ஆம் வயதிலேயே தொலைக்காட்சித் தொடர்பான சோதனைகளை நண்பர்களுடன் சேர்ந்து மேற்கொண்டார் என்பது இதற்குச் சான்றாகும்.

பெரெட் தமது மேற்கல்வியை லண்டன் ராயல் தொழில்நுட்பக் கல்லூரியிலும், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்திலும் பெற்றார். ஐந்தாண்டுப் படிப்பை முடித்தவுடன் உதவிப் பொறியாளரகப் பணியாற்றினார். பின்னர் தமது 26ஆம் வயதில் மின்னணுத் தொழிற்கூடம் ஒன்றில் வாரத்திற்கு 30 ஷில்லிங் ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்த பெரெட் அதிலும் மன நிறைவின்றி காலுறை (socks) தயாரிக்கும் சொந்தத் தொழில் ஒன்றைத் தொடங்கினார். இத்தொழிலில் சுமார் 1600 பவுண்டுகள் இலாபம் கிடைத்தது. அடுத்து ரொட்டிக்கான ஜாம், சாஸ் ஆகியவை தயாரிக்கும் தொழில் தொடங்கிய பெரெட் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அத்தொழிலையும் விட நேர்ந்தது. இந்நிலையில் டிரினிடாட் நகரிலிருந்த தம் நண்பரைக் காண பெரெட் கப்பலில் பயணம் மேற்கொண்டார். கப்பலின் வானொலி அறையிலிருந்த ஊழியரின் நட்பு கிடைத்ததால் இப்பயணம் அவருக்கு இனிமையாக அமைந்தது. படங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எவ்வாறு ஒளிபரப்பலாம் என்பது பற்றிய தொழிநுட்ப விவாதத்தில் இருவரும் ஈடுபட்டனர்.

1922ஆம் ஆண்டு பெரெட் லண்டன் திரும்பினார். அப்போது அவருக்கு வயது 34. வேலையின்மையும் வறுமையும் அவரை வாட்டின. ஆனால் தொலைக்காட்சி பற்றிய அவரது ஆர்வம் மட்டும் குறையவேயில்லை. அதன் செயல் முறைக்கான ஒரு வரைபடத்தைத் தயாரித்தார்; அட்டைப் பெட்டி, காயலான் கடையிலிருந்து ஒரு மின் மோட்டார், ஒளி எறி விளக்கு (projection lamp),மின் கலங்கள் (cells), நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்ற எளிய பொருள்களைச் சேகரித்தார். அட்டையில் ஒரு வட்டத் தட்டைச் (disc) செய்து மின் மோட்டாரில் பொருத்திச் சுழற்ற ஒளித் துகள்கள் சிதறுவதைக் கண்டார். சமிக்ஞைகளைப் பெறுவதற்கும், பரப்புவதற்கும் பலவகையான ஆய்வுகளையும், திருத்தங்களையும், மாற்றங்களையும் தமது சோதனைக் கருவியில் செய்தார். இவ்வாறு இரண்டாண்டுகள் மேற்கொண்ட கடின உழைப்பு, 1924ஆம் ஆண்டு உரிய பலனைத் தந்தது. ஆம், ஓர் உருவத்தின் நிழலை சுமார் 10 அடி தூரத்திற்கு ஒளிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர பண வசதி இல்லை. நிதி உதவி கேட்டு, செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தைப் பார்த்த அறிவியல் ஆர்வலர்கள் சிலர் பண உதவி அளித்தனர். 1925ஆம் ஆண்டு கோர்டன் செல்ஃபிரிஜ் என்பவர் பெரெட் அவர்களின் ஆய்வில் ஆர்வம் கொண்டு பொருளுதவி செய்ய நேரில் வந்தார். தாம் செய்த சோதனைத் தொலைக்காட்சியை அவரிடம் செயல் விளக்கம் செய்து காட்டினார். உருவங்கள் மங்கலாகத் திரையில் தெரிந்தன.

தமது தொலைக்காட்சிச் சாதனத்தை மேலும் செம்மைபடுத்த விரும்பிய பெரெட் ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்றுவதற்கான ஓர் இணைப்பை அதில் பொருத்தினார். 1925 அக்டோபர் 2ஆம் நாள் தொலைக்காட்சிக் கருவியை இயக்கியபோது, முழுப்படமும் தொடர்ந்து, எவ்விதக் குறையுமின்றி, தெளிவாக, துல்லியமாகத் திரையில் தெரிந்தது. தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல் பெரெட் செயலிழந்து நின்றார். பல ஆண்டு கடின உழைப்பு வீண்போகவில்லை என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார். 1926 ஜனவரியில் தனது முதல் தொலைக்காட்சிக் கருவியை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார். பின்னர் ஜெர்மன் அஞ்சலக நிர்வாகம் தொலைக்காட்சிச் சேவையை நிறுவ பெரெட் அவர்களுக்கு வசதி செய்து தந்தது. 1928இல் வண்ணத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமது ஆய்வை மேற்கொண்டு அடுத்த ஆண்டே அதையும் வெற்றிகரமாகச் செய்து காட்டினார். 1929ஆம் ஆண்டு பி பி சி நிறுவனத்திற்காக தினசரி கருப்பு வெள்ளைத் தொலைக்காட்ச்ிச் சேவையைத் துவக்கினார். எனினும் அந்நிறுவனம் 1936ஆம் ஆண்டு மார்க்கோனி வடிவமைத்த முறையில் ஆர்வம் காட்டியதால் பெரெட் அவர்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டது.

பெரெட் தமது வாழ்நாள் முழுதும் தொலைக்காட்சி உருவாக்கத்திலும், ஆய்வுகளிலும் எவ்வித சலிப்புமின்றி ஈடுபட்டார். உடல் நலக்குறைவு, பண வசதியின்மை ஆகிய பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் தமது ஆர்வத்தைத் தளரவிடவில்லை. 1946 ஜூன் 14இல் மறைந்த பெரெட் அவர்களுக்கு, இறப்புக்குப் பின் பல பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. எனினும் உயிரோடிருக்கும்போது தேவையான வசதி வாய்ப்புகள் இன்றி அவர் வாடியது வேதனைக்குரியதே.

***

முனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD

Email: ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர