அறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


இயற்பியல் மற்றும் கணக்கியலில் உயர் கல்வி பெறுவோர் போஸ்-ஐன்ஸ்டான் புள்ளியியல் (Bose-Einstein Statistics) என்னும் கோட்பாட்டை அறியாமலிருக்க இயலாது. இப்புதிய கோட்பாட்டை உருவாகியதில் பெரும் பங்கு வகித்தவர் இந்தியாவின் தேசியப் பேராசிரியர் என்று போற்றப்பட்ட சத்தியேந்திரநாத் போஸ் அவர்கள். இப்புள்ளியியல் பயன்படுத்தப்பெறும் துகள்களை (particles) போசன்ஸ் (Bosons) என அழைக்கின்றனர். ஒரே படித்தான, வேறுபாடு காணவியலாத துகள்களில் இப்புள்ளியியல் பயன்படுத்தப்பெறுகிறது. உயர்கல்வித் துரையில் இது தனியிடம் வகிப்பது உண்மை.

கொல்கத்தா இரயில்வேத் துறையில் பணியாற்றுவந்த சுரேந்திரநாத் போஸ் அவர்களின் மகனாக 1894 ஜனவரி முதல் நாள் தோன்றியவர் சத்தியேந்திரநாத் போஸ். பள்ளி வாழ்க்கையில் இவரது அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் வியப்பூட்டும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கணக்குத் தேர்வு ஒன்றில் இவருக்கு 100க்கு 110 மதிப்பெண் தரப்பட்டது. வினாத்தாளில் இருந்த அனைத்து வின்னாக்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகளில் சரியான விடைகளை அளித்ததால் இவ்வாறு மதிப்பெண் வழங்கிப் பாராட்டப்பெற்றார். கணக்கில் மிகப்பெரிய எதிர்காலம் போஸுக்குக் காத்திருப்பதாகவும் ஆசிரியர் வாழ்த்துரை வழங்கினார். உடன்படித்த மாணவர்கள் போஸ் இருக்கும் வகுப்பில் தமக்கு முதலிடம் கிடைக்கும் வாய்ப்பே இல்லை என உறுதியாக நம்பினர்; சில மாணவர்கள் இதற்காகத் தமது பாடங்களையே மாற்றிக்கொண்டனர்; வேறு சிலர் அவ்வாண்டு தேர்வே எழுதாமல் அடுத்த ஆண்டு எழுதிக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர். 1915இல் கொல்கத்தா பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராக போஸ் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டு ஐன்ஸ்டானின் சார்பியல் கோட்பாடு (Theory of Relativity) என்னும் நூலை ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.

பட்ட மேற்படிப்பை முடித்த போஸ் 1916ஆம் ஆண்டு டாக்கா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அப்போது, முதல் உலகப் போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த நேரம். ஐரோப்பிய நாடுகளில் நடந்து கொண்டிருந்த அறிவியல் ஆய்வு விவரங்கள் பிற நாடுகளுக்குத் தெரியாமலே இருந்தன. அணுக்கரு இயற்பியலில் பல ஆய்வுகள் அப்போது நடந்துகொண்டிருந்தன. இந்நிலையில் சத்தியேந்திரநாத் போஸுடன் பல்வேறு ஆய்வுகள் பற்றி தேவேந்திர நாத் போஸ் என்பவர் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளுவார்; இவர் ஜெர்மனியில் காந்தவியல் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார்; உலகப்போர் காரணமாக ஜெர்மனியை விட்டு அவரால் வெளியேற இயலவில்லை.

1921இல் சத்தியேந்திரநாத் போஸ் டாக்கா பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1923ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து வெளிவந்த ஓர் அறிவியல் ஆய்விதழில் வெளியிடுவதற்காக ‘பிளாங்க் சமன்பாடு (Plank ‘s Equation) ‘ பற்றிய கட்டுரை ஒன்றை போஸ் எழுதி அனுப்பினார். ஆனால் அக்கட்டுரை வெளியிடத் தகுதி அற்றது என்ற குறிப்போடு திரும்பி வந்துவிட்டது. தமது கட்டுரை மதிப்பும், தரமும் வாய்ந்தது என்று உறுதியாக நம்பிய போஸ் அதனை ஐன்ஸ்டானுக்கு அனுப்பி, அவரது கருத்தைக் கூறுமாறு கேட்டுக்கொண்டார். அதனைப் படித்துப்பார்த்த ஐன்ஸ்டான், கணிதவியலில் மிகச் சிறந்த கட்டுரை என்று பாராட்டியதோடு, தாமே அதனை ஜெர்மன் மொழியில் பெயர்த்தும் வெளியிட்டார். 1924இல் இக்கட்டுரை வெளியானபின் அறிவியல் உலகில் போஸின் புகழ் விரைந்து பரவியது; ஐன்ஸ்டானும் போஸும் இணைந்து பாராட்டப்பட்டனர். புதுவகைப் புள்ளியியலுக்கு இவ்வாய்வுக்கட்டுரை துவக்கமாக அமைந்து போஸ்-ஐன்ஸ்டான் புள்ளியியல் என்ற கோட்பாடு உருவாயிற்று.

அடுத்து டாக்கா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவிக்கு போஸ் விண்ணப்பம் செய்தார். பல்கலைக்கழக அதிகாரிகள் போஸ் ஆய்வுப்பட்டமோ, முனைவர் பட்டமோ பெறாதவர், எனவே பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க இயலாது, இருப்பினும் அவரது ஆய்வுக்கட்டுரைகள் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கு இணையானது என ஐன்ஸ்டானிடம் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் அவரது விண்ணப்பத்தைப் பரிசீலிக்கலாம் எனக் கூறினர். றிதைபற்றி ஐன்ஸ்டானுக்கு எழுதினார் போஸ். உடனே ‘முனைவர் பட்ட ஆய்வேடு எதுவும் உமது ஆய்வுக் கட்டுரைகளுக்கு இணையாகாது; உமது நாட்டவர்களுக்கு அது புரியாது ‘ என்று ஐன்ஸ்டான் பதில் எழுதினார்.

1924ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்தில் கல்வி விடுப்பு பெற்றுக்கொண்டு ஆய்வு செய்வதற்காக பாரீஸ் சென்றார்; அங்கு மேடம் கியூரி, லூயி டி புரோகில் ஆகியோரின் மேற்பார்வையில் சுமார் 10 மாதங்கள் ஆய்வுப் பணியாற்றினார். பின்னர் பாரிசிலிருந்து பெர்லினுக்குச் சென்று ஐன்ஸ்டான் அவர்களைச் சந்தித்தார்; அறிவியல் மேதைகளான பிளாங்க், ஸ்க்ரோடிங்கர், பாலி, ஹீசன்பெர்க், சோமர்ஃபீல்ட் ஆகியோரையும் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஐன்ஸ்டானுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனினும் அவரைத் தமது குருவாக ஏற்றுக்கொண்டு, போற்றிப் பாராட்டினார் போஸ்.

பெர்லினில் இருந்து நாடு திரும்பிய போஸ் டாக்கா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக நியமிக்கப் பெற்றார். 1945ஆம் ஆண்டு டாக்கவிலிருந்து கொல்கத்தா வந்த போஸ் அங்கு பல்கலைக் கழக அறிவியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியரானார். 1956இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், விசுவபாரதி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பெற்றார். இயற்பியலின் பல்வேறு தலைப்புகளில் 24 ஆய்வுக்கட்டுரைகளை போஸ் வெளியிட்டார்.

தமது மாணவர்களிடம் போஸ் பேரன்பு காட்டினார்; உரியவர்களுக்குப் பண உதவியும் செய்தார். மாலை நேரங்களில் நண்பர்களிடமும், மாணவர்களிடமும் அறிவியலின் பல்வேறு துறைகளைப் பற்றி விவாதிப்பதில் போஸுக்குப் பெரும் விருப்பம். இயற்பியல், கணக்கு ஆகியவற்றில் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், குறுக்கெழுத்துப் போட்டிகளுக்கான விடைகளைக் கட்டுபிடிப்பதிலும் போஸ் ஆர்வம் கொண்டிருந்தார்.

பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியில் இருந்து போஸ் விலகிய பின்னர் 1958இல் லண்டன் ராயல் கழக உறுப்பினராக நியமனம் பெற்றார். அதே ஆண்டு இந்திய அரசின் ‘பத்ம விபூஷண் ‘ விருதும், தேசியப் பேராசிரியர் பதவியும் அவருக்குத் தரப்பட்டன. தமது முதுமைக் காலத்தில் போஸ் இந்தியாவின் பல அறிவியல் நிறுவனங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அறிவியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவ்வாறு நீண்ட காலம் அறிவியல் பணியாற்றிய அவர் தமது 80ஆவது வயதில் 1974ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் கொல்கத்தாவில் உயிர் நீத்தார்.

முனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD

Email: ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர