அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து :2 நம் கிராம உலைகளுக்கான தொழில்நுட்பம்

This entry is part of 33 in the series 20030317_Issue

அரவிந்தன் நீலகண்டன்


கிராமப்புற பாரதத்தின் முதன்மையான முக்கிய எரிபொருள் வாங்கப்படும் விறகும் மற்றும் சேகரிக்கப்படும் சுள்ளிகளும் தான்.வர்த்தக ரீதியற்ற எரிபொருள் பயன்பாடு 1978:79 முதல் 1992:93 வரை 95.53 % லிருந்து 95.18% க்கு குறைந்த அதே வேளையில் விறகு மற்றும் சுள்ளிகள் பயன்பாடு 42% லிருந்து 47% ஆக உயர்ந்தது.இவ்விதம் உட்கொள்ளப்பட்ட விறகு மற்றும் சுள்ளிகளின் அளவு 80 மில்லியன் டன்களிலிருந்து 130 மிலியன் டன்கள் ஆகும். இதே காலகட்டத்தில் கிராம ஆற்றல் பயன்பாடு 3,499 பீட்டா ஜூல்களாக 2,368 பீட்டா ஜூல்களிலிருந்து உயர்ந்தது (PJ). தங்கள் சமையலுக்கு விறகு மற்றும் சுள்ளிகளையே நம்பியிருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 35% லிருந்து 56% ஆக உயர்ந்தது.

இத்தகைய வளர்ச்சி கிராமப்புற இயற்கை வளங்கள் மீது ஏற்படுத்தும் அழுத்தம் கடுமையானது. கிராமப்புறங்களின் இச்சூழல் குறித்து டாடா ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (TERI) நடத்திய கள ஆய்வு ஒன்றின் அறிக்கை பின்வரும் சித்திரத்தை அளிக்கிறது, ‘கிராமப்புற சமையலுக்கு பயன்படுத்தப்படும் விறகு மற்றும் சுள்ளிகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மட்டும் பெறப்பட வில்லை. மாறாக பொது பூமி, பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலங்கள், வரையறை செய்யப்பட்ட வன இலாகாவுக்கு சொந்தமான நிலங்கள் ஆகியவற்றிலிருந்து அவை பெறப்படுகின்றன. குழந்தைகளாலும் பெண்களாலும் சுமந்து வரப்படும் இவை பின்னர் 20% குறைவான ஆற்றல் பயன்பாட்டு திறன் கொண்ட அடுப்புகளில், காற்றோட்டமற்ற புகை சூழ் அறைகளில் எரியூட்டப்படுகின்றன. ‘

எனவே இத்துறையில் ஏற்படும் திறன் கொண்ட ஆற்றல் பயன்பாட்டு மாற்றம் எத்தகைய மானுட மேம்பாட்டுக்கு, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்யும் என கூறவேண்டிய தேவையில்லை.ஏற்கனவே LPG போன்ற வர்த்தக எரிபொருட்களை கிராமங்களில் பயன்படுத்த முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. கிராமப்புற ஆற்றல் பயன்பாட்டுக்கான தொழில்நுட்பம் குவித்தன்மையற்றதாகவும் அந்த சுற்றுவட்டாரம் சார்ந்த தன்னிறைவு தன்மை கொண்டதாகவும் அமைவது அவசியம். ஆற்றல் பொருளியலாளர் சுஜாய் பாசு இது குறித்து பின்வருமாறு கூறுகிறார், ‘கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு கிராமங்களில் ஆற்றல் பயன்பாடு குறித்த தெளிவான கருத்தோட்டமும் செயல் திட்டமும் இருப்பது அவசியம்….மீள்பயன்படு தன்மை கொண்ட ஆற்றல் உற்பத்தியுடன் இணைந்த விநியோகம் குறித்தும் (அத்தகைய உற்பத்தி மற்றும் விநியோக இணைப்பினை) நிபுணர்கள் வடிவமைக்க வேண்டும். கிராமம் சார்ந்த அமைப்புகள் மூலம் கிராம ஜன சமூகங்களின் பங்கேற்புடன் அதனை நடைமுறை படுத்தவேண்டும். ‘

விறகிற்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்படும் எரிபொருள் சாணமே. பாரதத்தில் ஓர் ஆண்டிற்கு 960 X 10^6 டன் சாணம் கிடைக்கிறது. வருடாந்திர பயன்பாடு 106.9 X 10^6 டன். அதுவும் நேரடியாக எரியூட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் கரியமில வாயு மாசு மிகவும் சுற்றுப்புற சூழல் மற்றும் உடல்நல பாதிப்பினை ஏற்படுத்துகிறது. நேரடியாக சாணம் எரியூட்டப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் நைட்ரஜன் மீண்டும் மண்ணிற்கு அளிக்கப்படாமல் போய்விடுகிறது. இந்நிலையில் எத்தகைய தொழில்நுட்ப பயன்பாடு மூலம் இந்த நிலையில் நாம் மேம்பாடு காணலாம் ?

பாரத மண்ணில் வேர் கொண்டு உருவானதோர் ஆற்றல் தொழில்நுட்பம் இங்கு அதன் தொழில்நுட்ப, மற்றும் சமுதாய பொருளாதார தன்மைகளுடன் அதன் பரவுதலில் சமுதாய ஏற்பில் உள்ள சிக்கல்களுடன் ஆராயப்படுகிறது. பல்தன்மை கொண்ட இத்தொழில்நுட்பம் வளரும் நாடுகள் தன் மண் சார்ந்த மேம்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கண்டுள்ள சாதனைகள் செல்லவேண்டிய துரெங்கள் மற்றும் அத்தொழில்நுட்பத்தை களத்தில் பரப்புவதில் சமுதாய ஒப்புமை பெறவைப்பதில் பெற்றுள்ள வெற்றி தோல்விகள் மற்றும் சவால்கள் ஆகிய அனைத்துக்குமானதோர் எடுத்துக்காட்டாக விளங்கலாம்.

பாரதத்தின் கிராமங்களில் 45% வீடுகள் 3 முதல் 4 மாடுகளை கொண்டுள்ளன. TERI யின் ஆய்வு ஒன்றின் அடிப்படையில் டாக்டர். அப்துல் கலாம், 17,000 மெகாவாட்களை சாண எரிவாயு கலங்கள் மூலம் உற்பத்தி செய்யலாம் என்கிறார்.இந்த அளவு மீள்பயன்படு தன்மை கொண்ட ஆற்றல் உற்பத்தியில் காற்றாலை மற்றும் சமுத்திர ஆற்றல் உற்பத்தி அளவுகளுக்கு அடுத்த படியாக விளங்குகிறது ஆனால் அவற்றை போன்ற அதிக முதலீட்டுத்தன்மையும் குவிதன்மையுமற்ற ஆற்றல் உற்பத்தி முறை என்பதால் பாரத கிராமத்தன்மையுடன் இணைந்தியங்க முடியும். சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் முழுமை தன்மையினை, பாரத கிராம மேம்பாட்டில் அதன் முக்கியத்துவத்தை முதன்முதலில் உணர்ந்தவர் மகாத்மா எனும் ரசவாத கல்லால் ஜோ.க. குமரப்பா ஆகிய ஜோஸப் கர்னீலியஸ் என்கிற தஞ்சாவூர்காரர்.

பாரத கிராமங்களில் அமைக்க முடிந்த குடும்ப பயன்பாட்டிற்கான சாண எரி வாயு கலன்களின் எண்ணிக்கை 12X10 ^6 க்கும் சில ஆயிரங்கள் அதிகம். அமைக்கப் பட்டிருப்பவை 3.02 X 10 ^6. கனாடிய சர்வதேச மேம்பாட்டு உதவி நிறுவனம் நடத்திய விரிவான கள் ஆய்வுகள் சாண எரிவாயுவால் பயன்படுத்துவோரின் வாழ்க்கை தரம் மேம்பாடடைந்திருப்பதை உறுதி படுத்துகின்றன. சுள்ளி பொறுக்க நெடுந்துரெம் அலைவது, புகை அடர்ந்த சமையலறைகளில் கஷ்டப்படுவது ஆகியவற்றிலிருந்து விடுதலை அடையும் கிராமத்து பெண்களால் இவ்வாறு சேமிக்கப்பட்ட நேரம் எழுத்தறிவு பெறுவது முதல் சிறு தொழில்களில் ஈடுபடுவது என பல உபயோகமான முறைகளில் கழிக்கப்படுவதை அந்த ஆய்வு உறுதி செய்கிறது. சேமிக்கப்பட்ட நேரத்தில் தான் ஒரு நாளுக்கு 20 ரூபாய் சம்பாதிப்பதாக பயன்படுத்தும் பெண்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன. ‘ஊர் முழுக்க அலைஞ்சு சுள்ளி பொறுக்கிட்டு வந்து சமையல் செஞ்சி போடணும். இப்போ அந்த நேரம் மிச்சம் அதிலே அகர்பத்தி செஞ்சு தினமும் 20 ரூபாய் சம்பாரிக்கிறேன். ‘

சாண எரிவாயு கலனின் விளைவுகள் எரிபொருள் சேமிப்பு என்பதனையும் தாண்டி மனித வள மேம்பாட்டிற்கு நேரடியாகவே பலனளிக்கிறது என்பது கண்கூடு. இனிவரும் நாட்களில் நைட்ரஜன் சார்ந்த வேதிஉர உற்பத்தியின் ஆற்றல் விலைகள் மிகக்கடுமையாக அதிகரிக்கும். மத்திய அரசும் யூரியாவுக்கு கொடுக்கும் மானியத்தை அப்படியே கொண்டு செல்வது மோசமான பொருளாதாரம் எனினும் அதனை குறைப்பது மோசமான ஓட்டுவங்கி அரசியல் என்பதால் ஓட்டுக்காக மானியம் என்கிற பேரில் விவசாயத்தை தன்னிறைவு தொழில் நுட்பத்தன்மையற்று போக வைத்து வருகிறது. பல ஆய்வுகள் சாண எரிவாயு கல கழிவு வேதி நைட்ரஜன் உரங்களுக்கு (குறிப்பாக யூரியா) மிகச் சிறந்த மாற்றாக அமைவதை நிரூபிக்கின்றன. (ஆனால் இந்த கட்டுரையாளன் மேற்கொண்ட கள ஆய்வில் சாண எரிவாயு கல கழிவு உரமாக பயன்படும் அதே நேரத்தில் அது யூரியா பயன்பாட்டை குறைக்கவில்லை என்பது தெரிந்தது.குமரி மாவட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு இது. சாண எரிவாயு கல கழிவு உர பயன்பாட்டால் ஆண்டுக்கு சராசரியாக சேமிக்கப்பட்ட யூரியாவின் விலை எவ்வளவு என்பது குறித்த ஆய்வுகள் தேடிய மட்டும் அகப்படவில்லை.) குறிப்பாக 2003 இல் நைட்ரஜன் வேதி உரங்களின் உற்பத்தி செலவுகள் 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில் மத்திய அரசு அளிக்கும் உர மானியம் எத்தகைய பொருளாதார சுமையினை நாட்டின் மீது ஏற்றும் என்பது யாராலும் எளிதாக அறிய முடிந்த ஒன்று. சாண எரிவாயு தொழில்நுட்பம் முழுமைத்தன்மையுடன் பரவுவதால் ஏற்படும் நன்மைகள் மிகத்தெளிவாகவே கணக்கிடப்பட முடிந்தவை.

ஆனால் இத்தொழில்நுட்ப பரவுதலில் மற்றும் அதன் முழுமை பயன்பாட்டில் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிப்பதன் முன் இத்தொழில்நுட்பத்தின் அறிவியல் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும், அடுத்த வாரம்.

: அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com

Series Navigation