அறிவியல் துளிகள்

This entry is part of 30 in the series 20021230_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது நாம் வியர்ப்பது ஏன் ?

வியர்வை வருவதற்குக் காரணம் நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே (sweat glands). இவற்றின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இவ்வியர்வைச் சுரப்பிகள் இருவகைப்படும். அவை முறையே, எக்ரின் (eccrine) சுரப்பிகள், அபோக்ரின் (apocrine) சுரப்பிகள் என்பன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின் தூண்டுதல்களுக்கு (stimuli) உட்படக்கூடியவை. முதலில் கூறப்பட்ட எக்ரின் வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருப்பவை. உடலின் வெப்ப நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுபவை. அடுத்துக் கூறப்பட்ட அபோக்ரின் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடையிடுக்கு ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பேரச்சம், கடுஞ்சினம் முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள் வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும், குளிர்காலத்திலும் கூட நாம் வியர்ப்பதற்குக் காரணம் இதுவே.

மரபுப் பொறியியல் (genetic engineering) என்றால் என்ன ?

தங்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைகள் மரபுவழிக் குறைபாடின்றி உருவாக, பல பெற்றோர்கள் மருத்துவ ஆலோசனையும், உதவியும் பெறுவது தற்போது பெருகி வருகின்றது. அரிவாள் செல் சோகை (sickle cell anemia) போன்ற நோய்கள் மரபுவழிக் குறைபாட்டினால் உண்டாவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் மரபுவழி நோய்கள் உண்டாகாமல் தடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்துறையே மரபுப் பொறியியலாகும். குறையுடைய மரபணுக்களை (genes), குரோமோசோம்களில் (chromosomes) இருந்து நீக்கி இயல்பான மரபணுக்களை பதிலுக்குப் பொருத்த முடியும் என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

எண்ணெய்த் தொட்டிகளில் தீப்பிடித்துக் கொண்டால் அணைப்பதற்கு ஏன் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது ?

எளிதில் தீப்பிடிக்கக்கூடிய எண்ணெய், எரி சாராயம் (spirit) போன்ற திரவங்களில் உண்டாகும் தீயை அணைக்க தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது. மாறாக, சோப்பு நுரை போன்ற, திரவங்களில் மிதக்கக்கூடிய ஒருவகை நுரையைப் பயன்படுத்துவர். இத்தகைய நுரையைத் தீப்பிடித்துள்ள பகுதி முழுவதும் மறையுமளவுக்குச் செலுத்தி, தீயைக் கட்டுப்படுத்தி அணைக்க வேண்டும். அவ்வாறின்றி தண்ணீரைப் பயன்படுத்தி அணைக்க முயன்றால், எண்ணெய் எல்லா பக்கங்களிலும் சிதறி, தீ மேலும் பரவ வழிவகுத்துவிடும்

கண்ணாடிப் பொருட்கள் நொறுங்கும் பண்பைப் (brittleness) பெற்றிருப்பதற்கு என்ன காரணம் ?

ஒரு பொருள் மென்மை அல்லது கெட்டித்தன்மை பெற்றிருப்பதும், நொறுங்கும் தன்மை அல்லது கடினத் தன்மை பெற்றிருப்பதும் அப்பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வாறு அமைந்துள்ளன மற்றும் பிணைக்கப்பட்டுள்ளன என்பவற்றைப் பொறுத்ததாகும். ஒரு பொருளின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் தமக்குள்ளே இருக்கும் பிணைப்புகளைத் துண்டித்துக் கொள்ளாமல் இடம் பெயரும் தன்மை பெற்றிருக்குமானால், அப்பொருள் தன் மீது செலுத்தப்படும் விசையைத் தாங்கிக் கொண்டு உடையாமாலிருக்கும். எடுத்துக்காட்டாக, உலோகத்தின் ஒரு பகுதி தகைவுக்கு (stress) உட்படும்போது, அப்பகுதியிலுள்ள அணுக்கள் வேறிடத்திற்கு இடம் பெயர்ந்து அங்குள்ள அணுக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்நிகழ்ச்சி உருத்திரிவு (deformation) எனப்படுகிறது. மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள பிணைப்பு நெகிழ்ச்சித் தன்மையுடனிருந்தால் மட்டுமே இஃது இயலும்.

கண்ணடியைப் பொறுத்தவரை அதில் பலவகைப்பட்ட அணுக்கள் — அதாவது சிலிகான், உயிர்வளி, போரான், சில உலோகங்கள் ஆகியவற்றின் அணுக்கள் – மிகவும் உறுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வணுப் பிணைப்புகள் ஏதேனும் அழுத்ததின் காரணமாக சிதைந்து போனால், அவ்வணுக்கள் இடம் பெயர்ந்து மற்ற அணுக்களுடன் இணைந்து மீண்டும் பிணைப்பைப் பெறமுடிவதில்லை. எனவேதான் கண்ணாடிப் பொருள் எளிதில் உடைந்து விடுகிறது. ஆனால் உலோகங்களையோ தகடுகளாகவும், கம்பிகளாகவும் மாற்ற முடிகிறது.

***

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar குவெம்பு நகர்

Mysore 570023. India மைசூர் 570023 இந்தியா

Email: ragha2193van@yahoo.com

Series Navigation