அறிவியல் துளிகள்
முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
இனிப்பு மாத்திரைகள் சர்க்கரையைப் போன்ற இனிப்பையே தந்தாலும் குறைவான கலோரி (calorie) ஆற்றலையே பெற்றிருப்பது எவ்வாறு ?
இனிப்பு மாத்திரைகளுக்கு மட்டுமின்றி வேறு பல கூட்டுப்பொருள்களுக்கும் (compounds) கூட சர்க்கரையைப் போன்றும், அதை விடக் கூடுதலாகவும் இனிப்புச் சுவை இருப்பதுண்டு. சர்க்கரைப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொண்டால் வளர்சிதை மாற்றத்தின்போது (metabolism) கூடுதலான கலோரி ஆற்றலைத் தந்து அவை உடலில் கூடுதலான கொழுப்பு சேர்வதற்கு வழி வகுத்துவிடும். அதிகக் கொழுப்பு சேர்வது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பது நாம் அறிந்ததே. சாக்கரின் (saccharine) போன்ற கூட்டுப்பொருள்கள் சர்க்கரையைவிடக் கூடுதலான இனிப்புச் சுவையைத் தந்தாலும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படாததால் அவை பூஜ்யம் கலோரி ஆற்றலையே தரும். பெரும்பாலும் இத்தகைய சாக்கரின் கலந்த இனிப்பு மாத்திரைகளையே நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்துகின்றனர். குறைந்த கலோரி ஆற்றலுள்ள அதே நேரத்தில் தேவையான இனிப்புச் சுவையும் கொண்ட வேறு சில இனிப்பு மாத்திரைகளும் உள்ளன. அசெஸுல்ஃபாம்-கே (acesulfam-K) போன்றவை வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகாமல் அதே நேரத்தில் தேவையான இனிப்புச் சுவையையும் தரும்.
நீரினால் கண்ணாடி ஈரமாவதுபோல் பாதரசத்தால் ஏன் ஈரமாவதில்லை ?
ஈரமாதல் நிகழ்ச்சியானது திரவம் மற்றும் அது தொட்ர்புகொள்ளும் பரப்பு ஆகியவற்றிடையே நிலவும் ஒட்டு விசை (adhesive force) மற்றும் ஈரமாகும் திரவத்தின் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசை (cohesive force) ஆகியவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டையே பெரிதும் பொறுத்துள்ளது. திரவத்தின் மூலக்க்கூறுகட்கிடையே நிலவும் பிணைப்பு விசையே அதன் பரப்பு இழுவிசையின் (surface tension) அளவுக்கும் காரணம் எனலாம். பாதரசம் கண்ணாடிப் பரப்பை ஈரமாக்க இயலாமைக்கு முக்கிய காரணம் அதன் பரப்பு இழுவிசை மிக அதிகமாக இருப்பதே; தண்ணீரின் பரப்பு இழுவிசயைவிட பாதரசத்தின் பரப்பு இழுவிசை ஆறு மடங்கு அதிகம். மேலும் பாதரசத்தின் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள பிணைப்பு விசை பாதரசத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே நிலவும் ஒட்டு விசையைவிட மிகவும் வலிமை வாய்ந்ததாகும். இதன் காரணமாகவே பாதரசம் கண்ணாடியின் மீது பரவுவதும் இல்லை, அதன் பரப்பில் ஒட்டுவதுமில்லை. அதே நேரத்தில் தண்ணீருக்கும் கண்ணாடிப் பரப்புக்கும் இடையே நிலவும் ஒட்டு விசையானது தண்ணீர் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் பிணைப்பு விசையைவிட மிக வலிமையானது; இதன் விளைவாகவே நீர் கண்ணாடியுடன் ஒட்டிக்கொள்வதோடு, அதன் பரப்பின் மீது விரைந்தும் பரவுகிறது.
ஊற்றுப் பேனாவின் (fountain pen) முள்ளில் (nib) பிளவு இருப்பது ஏன் ?
ஊற்றுப் பேனாவைக் கொண்டு எழுதும்போது அதன் மை, முள்ளின் வழியாக வெளியேறி தாளில் கோடுகளாகவும், எழுத்துக் குறிகளாகவும் பரவி உலர்ந்து போகிறது. மை சீராகவும், மென்மையாகவும் வெளியேறுவதால் எழுத்துக் குறிகளும் ஒரே சீராக அமைகின்றன. பரப்பு இழுவிசை (surface tension) மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவை காரணமாக வெளியேறும் மை பேனாவின் முன் பகுதியுலுள்ள பிளாஸ்டிக் நாக்கிற்கு மேல் வந்து, பேனா முள்ளின் நடுவேயுள்ள சிறு துளையருகே சேர்கிறது. எழுதும்போது பேனாவைச் சற்று அழுத்தவேண்டியுள்ளது; அப்போது முள் இரண்டாகப் பிளவுபட்டு சிறு குழாய்/நுண் புழை (capillary) போன்ற அமைப்பு உருவாகி அதன் வழியே மை வெளியேறுகிறது. இவ்வெளியேற்றத்திற்கான விசை நுண்புழை விசை எனப்படும். முள்ளிலுள்ள பிளவு, குழாய் போன்றும் குழாயினுள் இருக்கும் தடுக்கிதழ் (valve) போன்றும் பணிபுரிந்து மை ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இப்பிளவு மட்டும் இல்லாவிடில் வெளியேறும் வாய்ப்பே உண்டாகாமல், மை, பேனாவிற்கு உள்ளேயேதான் தங்கி இருக்கும்.
சோடியம் உலோகத்தை நீரில் இடால் தீப்பற்றிக் கொள்வது ஏன் ?
சோடியம் உலோகம், நீருடன் சேரும்போது வேதியியல் வினையின் மூலம் ஹைடிரஜன் வாயுவும் பெருமளவு வெப்பமும் வெளி வருகின்றன. இவ்வினையைக் கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் அறியலாம். இதற்கு வெப்ப உமிழ் வினை (exothermic reaction) என்று பெயர்.
2Na + 2H2 O H2 + 2NaOH
சோடியம் + நீர் ஹைடிரஜன் + சோடியம் ஹைடிராக்ஸைடு
இவ்வேதியியல் வினையின் மூலம் வெளிவரும் பெரும் வெப்பம், எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் இயல்புடைய ஹைடிரஜன் வாயுவை எரியூட்டிவிடும். இதைத் தவிர்க்கும் பொருட்டு சோடியம் உலோகத்தை மண்ணெண்ணெய், பென்சீன் போன்ற கரைப்பான்களில் (solvents) வைப்பது வழக்கம். இவற்றில் சோடியம் நீருடன் சேர்ந்து வினைபுரியும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. எனவே தீப்பிடித்துக் கொள்ளும் வாய்ப்பும் இல்லை.
Email: ragha2193van@yahoo.com
- அவள்
- அவதார புருசன்!!!
- சுற்றம்..
- நில் …. கவனி …. செல் ….
- வல்லூறு
- மானுடம் வெல்லும்!
- பாலன் பிறந்தார்
- விளக்கு – ஹெப்சிபா ஜேசுதாசன் பாராட்டு விழா அழைப்பிதழ்
- நன்றி
- ஒற்றுமை
- கிரகணம்
- பரிசு
- அநேகமாக
- மாறிவிடு!
- செலவுகள்
- அட்டைகள்
- அண்டங்காக்கைகளும் எலும்பு கூடுகளும் (பாபா பாீதின் சிந்தனைகள் குறித்து)
- மறத்தலும் மன்னித்தலும் (எனக்குப் பிடித்த கதைகள் – 41- மாப்பஸானின் ‘மன்னிப்பு ‘)
- நகுலன் படைப்புலகம்
- ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு
- அறிவியல் துளிகள்
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ [Galileo] (1564-1642)
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 – தொடர்கவிதை