அறிவியல் மேதைகள் கேலன் (Galen)

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


“எனக்கு உண்மையைப் புலனாய்வு செய்வதில் ஆர்வம் மிகுதி; யாருடைய கூற்றையும் ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்ள என் மனம் இடம் தராது; எனக்குப் பின்னர் என் கருத்துகளை ஆராய்ந்து, அவற்றிலுள்ள உண்மைகளை யாரேனும் சரிபார்ப்பார் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது” – இவை கேலன் என்ற அறிவியல் மேதையின் சொற்களாகும். மருத்துவ அறிஞர்களின் வரிசையில் முன்னணி இடம் வகிப்பவர் கேலன் அவர்கள். மருத்துவ அறிவியல், உடற்கூறியல் (anatomy) ஆகிய துறை இலக்கியங்களில் அவர் ஆற்றிய பணி இன்றும் போற்றப்பட்டு வருகிறது. உடற்கூறியல் ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர் என்று அவரை மருத்துவ உலகம் பாராட்டுகிறதெனலாம். மனிதக் குரங்குகள் மற்றும் சில விலங்குகளைத் தமது ஆய்வுக்குக் கேலன் உட்படுத்திப் பல மருத்துவ உண்மைகளை வெளியிட்டார்.

கேலனின் தந்தை ஒரு கணித வல்லுநராகவும், கட்டிடவியல் அறிஞராகவும் விளங்கியவர். தந்தையின் அறிவியல் பார்வை, கூர்ந்து நோக்கும் திறன், ஆய்வு மனப்பான்மை ஆகியன மகனிடமும் சிறந்து விளங்கின. தனது 29ஆம் வயது வரை கல்வி கற்ற கேலன், பின்னர் ஆர்வத்தோடும், திறமையோடும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு சிறந்த மருத்துவ அறிஞராக விளங்கினார்.

கேலன் கி.பி.129ஆம் ஆண்டு ஆசியா மைனரில் இருந்த பெர்கமம் (Pergamum) என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை நிகன் (Nicon) ஏற்கனவே கூறியுள்ளவாறு ஒரு கட்டிடப் பொறியாளர். அன்பும், பொறுமையும் நிறைந்த நிகன், மகனுக்கு கேலனோஸ் (Galenos) எனப் பெயர் சூட்டினார். கிரேக்க மொழியில் அச்சொல்லுக்கு “பொறுமை / அமைதி” என்று பொருள். ஆனால் நிகனின் மனைவியோ கணவருக்கு நேர் எதிர்மாறானவர். எப்போதும் யாராவது ஒருவருடன் சண்டையும், சச்சரவுமாகவே இருப்பார்; சுருக்கமாகக் கூறுவதெனில் அவர் சாக்ரடாஸின் மனைவியை ஒத்தவர். கேலன் தன் அன்னையைப் பற்றிக் கூறுகையில், “ஒரு முறை வேலைக்காரி செய்த சிறு தவறுக்காகச் சினமுற்ற என் தாயார் அவளத் தன் வாயால் கடித்து விட்டாள்” எனக் கூறுகிறார்.

பெர்கமம் மருத்துவப் பள்ளியில் கேலன் தமது மருத்துவக் கல்வியைக் கற்றார். அம்மருத்துவப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரும் இப்போகிரட்ஸ் வகுத்துத் தந்த மருத்துவ முறையைக் கடைபிடித்து வந்தனர். பின்னர் கேலன் தமது உயர் மருத்துவப் படிப்பை சிம்ரினா (Smyrna) மற்றும் கோரிந்த் (Corinth) ஆகிய ஊர்களில் தொடர்ந்தார். பொதுவாக மருத்துவத் துறையிலும், சிறப்பாக உடலியல் (physiology), உடற்கூறியல் (anatomy) ஆகிய இரு துறைகளிலும் கேலன் அக்கல்விக்கூடங்களில் ஆழ்ந்த, பரந்த, நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டார். அலெக்சாண்டிரியாவில் தமது மருத்துவப் படிப்பை முடித்த பின்னர், கேலன் ஒரு மருத்துவ ஆய்வுக்கூடத்தைத் தொடங்கினார்; அங்கு மருத்துவ அறிவியலில், குறிப்பாக உடலியல், உடற்கூறியல் ஆகியவற்றில் மிகத் தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டார். கேலன் தம் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தது பெர்கமம் என்ற ஊரில்தான். துவக்கத்தில் அவரது ஆய்வு முடிவுகளை மக்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால் கி.மு.169இல் ரோமாபுரிப் பேரரசர் மர்காஸ் அரிலியஸ், கேலனைத் தமது நாட்டுக்கு வந்து மருத்துவத் துறையில் உயராய்வு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். மேலும் அன்றைய ரோமாபுரியில் போர்வீரர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் திறமையான மருத்துவர் ஒருவரின் உதவியும் உடனடியாகத் தேவைப்பட்டது. எனவே கேலன் அவர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதோடு மருத்துவ ஆய்வு, மருத்துவக் கல்வி, மருத்துவச் சிகிச்சை ஆகியவைகளை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் ரோம் நகரில் அவருக்குக் தரப்பட்டன. கேலன் ரோமில் இருந்தபோது ஏறக்குறைய 400 மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டார். ஆனால் இவ்வளவு ஆய்வு முடிவுகளில் ஒரு சில மட்டுமே தற்போது கிடைக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானதும், பாராட்டக்கூடியதுமான ஒன்று, குருதி ஓட்டம் (blood circulation) பற்றிக் கேலன் அவர்கள் கண்டுபிடித்து வெளியிட்ட முடிவாகும். இதயத்தின் செயல்பாடுகள், அதன் தசைப் படலங்கள், அதிலுள்ள தடுக்கிதழ்கள் (valves) பற்றி அவர் ஆழ்ந்த ஆராய்ச்சியை நடத்தினார். மனித உடலில் அவர் நடத்திய பரந்த அய்வுக்குப் பின்னர், குருதி நாளங்களின் (vein) ஊடேதான் குருதி ஓட்டம் நடைபெறுகிறது என்பது ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்தப்பட்டது. கேலன் அவர்களின் இந்தத் திடமான முடிவு வெளிவருவதற்கு முன் குருதி ஓட்டம் ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது.

மேலும் நரம்பு மண்டல அமைப்பு (nervous system) பற்றியும் கேலன் ஆய்வு நடத்தினார். எல்லா நரம்புகளும் மூளைக்குத் தண்டுவடம் (spinal cord) வழியே செய்திகளைத் தெரிவிக்கின்றன என்பதையும், காற்றை உள்ளிழுத்து வெளிவிடும்போது, அதாவது மூச்சு விடும்போது, உதரவிதானம் என்னும் குறுக்குத் தட்டத்தின் (diaphragm) அசைவைக் கட்டுப்படுத்துவது நரம்பு மண்டல அமைப்பே என்பதையும் கேலனின் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தசைகள் பற்றி அவர் நடத்திய ஆய்வுகளும், அவற்றின் முடிவுகளும் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தின. மேலும் தசைகள் பற்றி இத்தகையதோர் ஆய்வை முதன் முதலில் மேற்கொண்டவரே அவர்தான். உடலின் எல்லாப் பகுதிகளிலும் தசைகள் முரண்பாடுடைய (antagonistic) இணைகள் (pairs) அல்லது குழுக்களாகப் பணியாற்றுவதன் காரணமாகவே, உடலின் பல்வேறு பகுதிகளும் தளர்ச்சியோ அல்லது இறுக்கத்தையோ அடையும் வாய்ப்பைப் பெறுகின்றன என்பதைக் கேலனின் ஆய்வு முடிவுகள் தெளிவு படுத்தின. மேலும் அவரது கருத்துப்படி உடலின் அசைவும் மைய நரம்பு மண்டலத்தாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. இந்நிலையைில் ஏற்படும் மாற்றத்தைக் கீழங்கவாதம் (paraplegia) எனக் கூறுகின்றனர்.

கேலன் இயற்கையை மிகவும் நேசித்தவர். இயற்கையின் படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது; அக்குறிக்கோளுக்கு எதிராக நடந்து கொண்டால் அதன் விளைவு நலம் பயக்காது என அவர் உறுதியாக நம்பினார். இக்கோட்பாட்டின் அடிப்படையில்தான் கேலன் தமது ஆய்வை மேற்கொண்டார். ஒரு நோயின் அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அதனைத் தீர்க்க இயலாத நோய் எனக் கூறலாகாது; உண்மையில் அவ்வறிகுறிகளைக் கூர்ந்து நோக்கினால் நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை எளிதாக அறியக்கூடும் என்பது கேலனின் உறுதியான நம்பிக்கை.

மனித உணர்ச்சிகளை கேலன் ஆழ்ந்து கவனித்து வந்தார்; மனித உணர்ச்சிக்கும், உடல் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை அவர் தெளிவு படுத்தினார். உணர்ச்சிக் கொந்தளிப்பும், உள்ளத்தின் அழுத்தமும் மிகுதியானால் நோயின் கடுமை மிகுதியாகும் என்பதை மட்டுமல்லாது, நாடித்துடிப்பில் விரும்பத்தகாத மாற்றங்களும் விளையும் என்பதைக் கேலன் உறுதி செய்தார். கிரேக்க நாட்டு உயர்குடி மக்கள் சிக்கிச்சை முடிந்த பின்னர், தங்கள் மருத்துவச் செலவுக்கான பெருந்தொகையைப் பற்றி அறிந்தவுடனே அவர்களது நாடித்துடிப்பில் மாற்றங்கள் விளைந்தன. இதற்குக் காரணம் அவர்களின் மன அழுத்தமே என்பதை அவர் விளக்கினார்.

கேலன் அனைத்து ஆய்வுகளையும், அவரது முன்னோடியான இப்போகிரட்ஸ் காட்டிய வழியில் முறையாகவும், முழுமையாகவும் மேற்கொண்டார். ஒரு கோட்பாட்டையோ, கொள்கையையோ உருவாக்குவதற்கு முன்னர் அது முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பரிசோதிக்கப்படவேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. மனித உடற்கூறியலை உலகுக்கு முதன் முதலாக அறிவியல் முறையில் விளக்கியவர் கேலன் அவர்களே; அது மட்டுமல்லாது ஒவ்வொரு உடலுறுப்பின் பணி என்ன, மனிதனின் நலவாழ்வுக்கு உடலுறுப்புகளை எவ்வாறு பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பவற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியவரும் அவரே. மனித உடலையும், உடல் உறுப்புகளையும் நன்கு பராமரிக்கக்கூடிய பெரும்பாலான மருத்துவ அறிவுரைகள் கேலனிய முறை (Galenic system) என்றே அழைக்கப்பட்டன.

தமக்குப் பின்னர் வரும் மருத்துவ ஆய்வாளர்கள் எளிமையாகவும், துல்லியமாகவும் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கு ஏற்ற வகையில் கேலன் அவர்கள் மருத்துவ ஆய்வுகளைச் செம்மையாக நடத்தி முடித்தார். மருத்துவத்தோடு தொடர்புடைய இயற்கையின்பால் அவர் மேற்கொண்ட ஆய்வுகளும், அவரது கண்டுபிடிப்புகளும் மனித இனத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்வதாய் அமைந்துள்ளன எனில் மிகையன்று. மருத்துவ அறிவியலுக்கும், மருத்துவத் தொழில் நுட்பத்திற்கும் கேலன் ஆற்றியுள்ள அரும் பணியினை மருத்துவ உலகம் என்றைக்கும் மறவாது; மாறாக நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகிறது.

*****

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர