முதல் விலங்கியல் அறிவியலாளர் அரிஸ்டாட்டில் (Aristotle)

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


அறிவியல் உலகிற்கு கிரேக்க மண்ணின் நன்கொடை அளவிடற்கரியது. தத்துவ மேதை சாக்ரடாஸும், அவர்தம் மாணவர் பிளேட்டோவும் இம்மண்ணில் தோன்றிய பேரறிஞர்களாவர். பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டிலும் வாழையடி வாழையென வந்த அத்தகைய அறிஞர் திருக்கூட்ட மரபினைச் சேர்ந்தவரே.

அரிஸ்டாட்டில் கிரேக்க நாட்டில் தோன்றிய மிகச் சிறந்த தத்துவமேதை; பெரும் சிந்தனையாளர். அவர் கி.மு.384 ஆம் ஆண்டு பிறந்தவர்; அவர் தந்தை மன்னர் மாளிகையில் மருத்துவராகப் பணி புரிந்து வந்தார். அரிஸ்டாட்டில் தன் இளமைக் கல்வியைத் தந்தையிடமே பெற்றார்; தனது பதினேழாம் அகவையில் ஏதென்ஸ் நகரக் கல்விக் கழகத்தில் (Academics of Athens) சேர்ந்தார். இங்குதான் கிரேக்கத்தில் அப்போது புகழ் வாய்ந்த தத்துவ அறிஞராக விளங்கிய பிளேட்டோவின் மாணவராகும் வாய்ப்பு அரிஸ்டாட்டிலுக்குக் கிடைத்தது. ஆசிரியர் பிளேட்டோவும், மாணவர் அரிஸ்டாட்டிலும் ஒருவர் கருத்தை ஒருவர் பாராட்டிப் போற்றியதும் உண்டு; கருத்து வேறுபாடு தோன்றியபோது நாகரிகத்தோடு மறுத்ததும் உண்டு. ஏதென்ஸ் கல்விக் கழகத்தில் கணிதம், தத்துவம், அண்ட அறிவியல் (Cosmic Science), அரசியல் ஆகிய துறைகளை அரிஸ்டாட்டில் ஆர்வத்துடன் கற்றார். பிளேட்டோவின் மறைவிற்குப் பின்னர் அரிஸ்டாட்டில் அங்கு ஆசிரியாகும் வாய்ப்பைப் பெற்றார். மிக விரைவில் தனது அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திச் சிறந்த ஆசிரியர் என்ற புகழை ஈட்டினார். அப்போது ஆட்சியிலிருந்த மன்னர் பிலிப் தனது மகன் அலெக்ஸாண்டருக்குக் கல்வி கற்பிக்குமாறு அரிஸ்டாட்டிலைக் கேட்டுக்கொண்டார். அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்ற இம்மாணவன்தான் பின்னாளில் உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர விரும்பிய மாமன்னன் அலெக்ஸாண்டராக விளங்கினான். தனது ஆசிரியர் அரிஸ்டாட்டிலிடம் அலெக்ஸாண்டர் அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டிருந்தான்; ஆசிரியரின் அறிவியல் ஆய்வுப் பணிகள் அனைத்திற்கும் வேண்டிய பொருளுதவி புரிந்து ஒத்துழைப்பு நல்கினான். இயற்கை ஆய்விலும், விலங்குகள் பற்றிய ஆய்விலும் பெரும் நாட்டம் கொண்டிருந்த அரிஸ்டாட்டிலுக்கு மன்னனின் ஆதரவு பேருதவியாக இருந்தது.

விலங்குகளைப் பற்றிய பல்வேறு நூல்களை அரிஸ்டாட்டில் இயற்றினார்; அவற்றில் தகுந்த விளக்கப்படங்களுடன் தனது கருத்துகளை நிலைநாட்டியுள்ளார். மாவீரன் அலெக்ஸாண்டரின் ஆதரவுடன் கி.மு.336 இல் லிசியம் கல்விக் கழகம் (Liziam Academy) என்ற தத்துவவியல் நிறுவனத்தை அரிஸ்டாட்டில் நிறுவினார். விலங்குகளின் வரலாறு, விலங்குகளின் உடற்கூறுகள் ஆகிய நூல்களை அவர் இயற்றினார். ஆய்வுப்பணிகளுக்காக விலங்குகளை அறுத்துப் பார்க்கும் (dissection) முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் அரிஸ்டாட்டில் அவர்களே. இம்முறையினால் விலங்குகளின் உள் உடற்கட்டமைப்பைப் பற்றிய அறிவை விளக்கமாகப் பெற முடிகிறது. அரிஸ்டாட்டில் தனது தத்துவக் கோட்பாடுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தினார்.

1. பொதுவாக விலங்குகளுக்கும் ஆன்மா என்பது உண்டு. ஒவ்வொரு விலங்கினமும் அதற்கே உரிய உடற்கட்டமைப்பைக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பெற்றுள்ளது.

2. வாழ்க்கை வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் உட்பட்டது; எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடையும் பொருட்டு இந்த வளர்ச்சி, மாற்றம், இயக்கம் ஆகியன அமைகின்றன.

வாழ்க்கையின் படிநிலைகள், உயர்வு தாழ்வுகள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றிற்கு அரிஸ்டாட்டில் முக்கியத்துவம் அளித்தார். இயற்கைப் பண்புகள், வாழ்க்கை முறைகள், செயல் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்களை அரிஸ்டாட்டில் வகைப்படுத்தினார். அரிஸ்டாட்டில் தருக்க முறையையும், அறிவியல் கோட்பாட்டையும், காரண காரிய விளக்கங்களையும் பெரிதும் போற்றியவர். புலனுணர்ச்சி, நினைவாற்றல், எதிர் வினையாற்றல், கனவுகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து அதன் வழிப்பட்ட தத்துவ அறிவை அவர் உலகுக்கு வழங்கினார். இத்தகைய பேரறிஞரும், மாபெரும் சிந்தனையாளருமான அரிஸ்டாட்டில் கி.மு.322 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

அரிஸ்டாட்டிலின் பணிகள் அனைத்தும் ஆய்வு செய்தல், கூர்ந்து நோக்கல், பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவை. விலங்கியல் அறிவில் அவருக்கிருந்த நாட்டத்தினால் ஏறக்குறைய 540 விலங்குகளைப் பற்றிய விளக்கமான ஆய்வை அவர் மேற்கொண்டார். இயற்கையைக் கூர்ந்து நோக்கி ஆய்வு மேற்கொள்வதில் தணியாத ஆர்வமும், மகிழ்ச்சியும் அவருக்கிருந்தன. அவரது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 400 ஆகும். விலங்கினங்களின் வரலாறு, இயற்பியல், அரசியல், நீதிநெறி போன்ற பல்வேறு துறைகளும் அவரது படைப்புகளில் அடங்கியுள்ளன. அவரது படைப்புகள் அனைத்தும் உயர்வும், தரமும், சிறப்பும் கொண்டவையாகக் கருதப்பட்டன.

ஆனால் அவரது கருத்துகளில் சில குறைகளும் இல்லாமலில்லை; சில கருத்துகள் செயல் முறைக்கும், நடை முறைக்கும் முழுமையாக ஒத்துவராது எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவரது ஆய்வு முறைகள், கூர்ந்து நோக்கும் தன்மை ஆகியன அனைவராலும் பாராட்டப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது உண்மை. அரிஸ்டாட்டில் தன் முழு வாழ்வையும் கல்விப் பணிக்கும், ஆய்வுப்பணிக்கும் அர்ப்பணித்துக் கொண்டவர். மிகச் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றியவர். கிரேக்கத்தின் அறிவியல் மும்மணிகளுள் (சாக்ரடாஸ் – பிளேட்டோ – அரிஸ்டாட்டில்) ஒருவராக விளங்கியவர்.

**

Dr R Vijayaraghavan

BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மொழிக் கல்வித்துறை (தமிழ்) வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர