மாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

ஆண்ட்ரூ குவின்


பழங்கால மாயா சமுதாயத்திலிருந்து, ட்ராய் சமுதாயம் வரை. திடாரென்று அழிந்து போயிருக்கிற பழங்காலச் நகரச் சமுதாயங்கள் பூகம்பங்களால் அழிந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் சென்ற வியாழன் அன்று கூறியிருக்கிறார்கள்.

‘முக்கியமான கேள்வி: ஏன் இந்த இடங்களின் கட்டடங்கள் அழிந்திருக்கின்றன ? ‘ என்று கேட்கிறார் பேராசிரியர் அமோஸ் நுர். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழத்தின் புவியியல் பெளதீகவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ‘இயற்கைச் சீற்றங்களும், முக்கியமாக பூகம்பங்களுமே இதற்கு முக்கியக் காரணம் என்று நாங்கள் நம்புகிறோம் ‘ என்று கூறுகிறார்.

அகழ்வாராய்ச்சிக்கும், புவியியலுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய சென்ற அமெரிக்க புவியியல் பெளதீகவியல் இணையத்தில் நடந்த கூட்டத்தில் இந்தக் கருத்துக்கள் பேசப்பட்டன. பழங்காலத்தின் மர்மங்களை தீர்க்க புவியியலின் பூகம்பச் வரலாறும் மனித வரலாற்று சின்னங்களின் காலமும் இணைத்துப் பார்க்கப்பட்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

கிழக்கு மத்தியதரைக்கடல் பிரதேசங்களில் பித்தளைக்காலம் (Bronze Age) முடிவில் இருந்த ட்ராய், மைசெனே, க்னோஸஸ் போன்ற இடங்கள் சுமார் கிமு 1200இல் சுத்தமாக அழிந்தொழிந்தன. இதைப் பார்த்து இதற்கு பூகம்பங்கள் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தை கொண்டார் பேராசிரியர் நுர்.

முன்பு ‘கடல் மக்கள் ‘ என்ற கடல் கொள்ளைக்காரர்கள் இந்த நகரங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. பூகம்பப் புயல் சுமார் 1225க்கும் கிமு 1175க்கும் இடையே தோன்றி இந்த நகரங்களை அழித்திருக்கலாம் என்று நுர் கருதினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல அறிவியலறிஞர்கள் இந்த தேற்றத்தை இன்னும் அதிக அளவுக்கு ஆதரவுடன் சிந்து சமவெளி நாகரிகமான ஹரப்பா போன்ற இடங்களும் கிமு 1900இல் நடந்த பூகம்பத்தால் அழிந்திருக்கலாம் என்றும், தென்னமெரிக்காவின் மாயா நாகரிகம் கிபி 9ஆம் நூற்றாண்டில் நடந்த பூகம்பத்தில் அழிந்திருக்கலாம் என்றும் பேசினார்கள்.

‘ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான விஷயம், இந்த விஷயங்களை ஒன்றோடொன்று கோர்ப்பது ‘ என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்கள் ஆராய்ச்சி பரிசோதனைச்சாலையில் வேலைசெய்யும் மானிகா பிரசாத் கூறினார். இவர் நுர் அவர்களுக்கு சிந்து சமவெளி நாகரிக அழிவு பற்றி ஆராய உதவி வருகிறார்.

ஹரப்பா சமுதாயம் சிந்து நதிக்கரையில் 2000 வருடங்களாக இருந்து வந்து, சுமார் கிமு 1900இல் மறைந்தது. இதற்கு பல அறிவியலறிஞர்கள் மாறிவிட்ட வர்த்தகத்தால் பிரயோசனம் இழந்து இந்த சமுதாயம் அழிந்ததாகவும், ஆர்ய படையெடுப்பால் அழிந்ததாகவும் பல தேற்றங்களைக் கூறிவந்திருக்கிறார்கள்.

நுர் அவர்களும் பிரசாத் அவர்களும் இந்த பகுதியில் இருக்கும் பூகம்ப வரலாற்றை ஆராய்ந்து, இந்த இடங்களில் மிகவும் தீவிரமான அழிவை ஏற்படுத்தும் பூகம்பங்கள் அடிக்கடி வருவதும், இன்னமும் இந்த இடம் தீவிரமான பூகம்பச் செயல்பாடுகள் கொண்ட இடமாக இருப்பதையும் குறித்திருக்கிறார்கள்.

இவர்கள் கூறுவது போல, பூகம்பத்தால் ஒரு பெரும் ஆற்றின் வழி அடைபட்டு அந்த இடத்தில் இருக்கும் விவசாயமும், வர்த்தகமும் அழிந்து அந்த இடம் மண்ணடித்து நகரமே புழுதியில் அழிவதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஸ்டான்போர்ட் புவியியல் பெளதீக ஆராய்ச்சியாளர் ராபர்ட் கோவாச் அவர்கள் இந்த கருத்தை மாயா நாகரிகத்துக்கும் பொருத்திப் பார்த்து திடாரென்று ஒரு சிறிய காலகட்டத்தில் பெரும் சமுதாயம் அழிந்திருப்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

சிஹோக்ஸி-போலோசிக் மோடாகுவா பூகம்பக் கோட்டின் மீது எழுப்பட்டிருந்த மாயா நாகரிக ஒரே ஒரு பூகம்பத்தில் சுத்தமாக அழிந்து போனதைக் கண்டுபிடித்திருக்கிறார் டாக்டர் கோவாச்.

இந்த தேற்றத்துக்கு விமர்சனமும் இல்லாமல் இல்லை. இதனை ‘கோட்ஸில்லா பாபிலோனை அழிக்கிற ‘ தேற்றம் என்று கிண்டல் செய்கிறார்கள் சில அறிவியலறிஞர்கள்.

ஆனால் நுர் அவர்கள் பூகம்ப செயல்பாடுகள் பற்றிய வரலாற்று அறிவோடு மனித வரலாற்று அறிவையும் இணைத்து பார்க்கும் போது, பூகம்ப அழிவுத் தேற்றம் இறுதியில் வெற்றி பெறும் என்று நம்புவதாக கூறுகிறார்.

‘இந்த அழிவுகளில் அழிவது மாபெரும் மனித உருவாக்கிய கட்டிடங்கள். இது வெறும் வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்ல ‘ என்று நுர் கூறுகிறார். மேலிருந்து கீழாக இருக்கும் சமுதாயங்களில் (strictly hierarchical civilizations) மேல்தட்டு வர்க்கத்தினர் பெரும் பூகம்பம் நடக்கும் போது பாதுகாப்பற்று இருப்பார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். இந்த பூகம்பத்தால், முக்கியமான அதிகார வர்க்கத்தின் சக்திஸ்தாபனங்கள் அழிக்கப்பட்டுவிடுகின்றன என்பதையும் குறிப்பிடுகின்றார்.

‘இதற்கான தடயங்கள் இன்னமும் அங்கங்குதான் இருக்கின்றன. இதனை நிரூபிக்க கடினமான துப்பறியும் வேலை வேண்டும் ‘ என்று நுர் கூறுகிறார். ‘ஒரு பெரும் பூகம்பம் நடக்கும் போது, சமுதாயத்தின் மத்தியில் ஒரு பலவீனத்தை உருவாக்குகிறது. ஆனால், ஏற்கெனவே சற்று பலவீனமான சமுதாயம் இந்த பூகம்பத்தால் தள்ளப்பட்டு அழிந்து போய்விடுகிறது ‘ என்று கூறுகிறார்.

Series Navigation

ஆண்ட்ரூ குவின்

ஆண்ட்ரூ குவின்