தட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

கென்னத் சாங்


நவீன சமுதாயம் நமது சுற்றுச்சூழலை வெகுவாக மாற்றிக்கொண்டிருப்பதால், திடாரென்று அதிக அளவில் தட்பவெப்ப சூழ்நிலை மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர் குழு எச்சரிக்கிறது.

டிஸம்பர் 11ஆம் தேதி வாஷிங்டனில் தேசீய ஆராய்ச்சி மையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை 11 அறிவியலாளர்களின் கூட்டு முயற்சியின் கண்டுபிடிப்பாக மிகச்சிறிய நிகழ்ச்சிகள் கூட பெரும் விளைவுகளையும் வேகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பை குறிப்பிடுகின்றன.

எண்ணெயில் எரியும் விளக்கு திரியை நகர்த்த நகர்த்த சற்று அதிகமாக எரிவதோ அல்லது சற்று குறைவாக எரிவதோ ஆகிறது. ஆனால் மின்சார விளக்குக்கு போடும் ஸ்விட்ச் அப்படியல்ல. மெல்ல அழுத்தினால் ஒன்றும் ஆவதில்லை. சற்று வன்மையாக அழுத்தினால் சட்டென்று எரிகிறது. நமது தட்பவெப்பச் சூழ்நிலை திரிவிளக்கு போன்றது என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், அது உண்மையில் ஒரு மின்சார விளக்குப் போன்றது என்று இந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ரிச்சர்ட் பி அல்லி அவர்கள் ஒப்பிடுகிறார்.

‘ஆராய்ச்சியில் நமது சுற்றுச்சூழலில் திரிவிளக்குகளும் இருக்கின்றன, மின்சார ஸ்விட்சுகள் போன்றவையும் இருக்கின்றன ‘ என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அல்லி.

மனிதர்கள் உலகத்தில் தோன்றுவதற்கு முன்னர் இருந்த சுற்றுச்சூழல்களை பல வழிகளில் ஆராய்ந்த இந்தக் குழு இந்த அறிக்கையில் அவைகளை குறிப்பிட்டிருக்கிறது. இளம் திரையஸ் குளிர் இடைக்காலம் (Younger Dryas cold interval) என்று அழைக்கப்படும் 12800 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை இது உதாரணமாகக் காட்டுகிறது. இந்த யுகத்துக்கு முந்தைய பனியுகத்திலிருந்து முழுக்க தட்பவெப்பம் மீண்டுவிட்டது. ஆனால், சராசரி உஷ்ணம் 10 டிகிரிகள் குறைந்து சுமார் 1000 வருடங்களுக்கு அப்படியே இருந்தது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்புறம் திடாரென்று பூமி உஷ்ணமாகி விட்டது. அதுவும் ஒரு 10 ஆண்டுகளில் 15 டிகிரிகள். இதை ஒப்பிடும்போது கடந்த நூறாண்டுகளில் பூமியின் வாயுமண்டலத்தின் சராசரி வெப்பம் 1 டிகிரிதான் உஷ்ணம் அதிகரித்திருக்கிறது.

திடாரென்ற தட்பவெப்ப மாறுதல்கள் இயற்கையாகவே நடந்தாலும், சுற்றுச்சூழலில் நாம் ஏற்படுத்தும் மாறுதல்கள் (கரியமிலவாயுவினால் வாயுமண்டலத்தை நிறைப்பது, மழைக்காடுகளை அழிப்பது போன்றவை), இறுதி தள்ளல்களாகி திடாரென்று தட்பவெப்ப மாறுதல்களுக்கு காரணமாகலாம். ‘நமக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது ‘ என்று கூறுகிறார் டாக்டர் அல்லி.

உலகம் வெப்பமடைவது சம்பந்தமான சுற்றுச்சூழல் ஆய்வுகள் கரியமிலவாயு உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் மெதுவாகவும், சீராகவும் உலக வெப்பம் அதிகரித்து வருவதைக் குறிக்கின்றன. சென்ற வாரம் அமெரிக்க புவியியல் பெளதீக இணையத்தில் நடந்த கூட்டத்தில், கரியமிலவாயுவினால், வட துருவத்தில் குறைந்த அழுத்த மண்டலம் உருவாவதையும் அட்லாண்டிக் மீது அதிக அழுத்த மண்டலம் உருவாவதையும் கணினி மாதிரிகள் காண்பிப்பதை பேசியிருக்கிறார்கள்.

மேற்கண்ட அமைப்பு வெப்பக்காற்றை அட்லாண்டிக்கிலிருந்து ஐரோப்பாவுக்கு ஊதுவதையும், அதிக வெப்பமுள்ள எதிர்காலம் இதனால் காத்திருப்பதையும் காட்டுகிறது. ஆனால், அதிக வெப்பமுடையதாகவும், அதிக ஈரமுடையதாகவும் இருக்கும் குளிர்காலங்களும் திடார் தட்பவெப்ப மாறுதலை உருவாக்கலாம்.

சில தட்பவெப்ப மாதிரிகள், அதிக மழைபெய்யும் காரணத்தால், வெப்பக்காற்றை ஐரோப்பாவுக்கு கொண்டுசெல்லும் அட்லாண்டிக் காற்றை ஒரேயடியாக நிறுத்தவும் செய்யும் என்பதையும், இதனால், மீண்டும் ஐரோப்பாவில் ஒரு புது பனியுகம் தோன்றும் என்பதையும் காட்டுகிறது. மற்ற கணினி மாதிரிகள் இதனை காட்டுவதில்லை. இளம் திரையஸ் காலம் இதுபோன்று அட்லாண்டிக் காற்று நிறுத்தப்பட்டதாலோ, அல்லது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாலோ உருவாகியிருக்கலாம்.

Series Navigation

கென்னத் சாங்

கென்னத் சாங்