உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

அனாஹாட் ஓ ‘கான்னர்


உலகத்தின் பயிர் விளையும் பாசன வசதி உடைய நிலங்களில் கால்வாசி நிலங்களில் உப்பு அதிகமாகி விட்டன. இங்கு இருக்கும் உப்பின் அளவால் பல பயிர்கள் இறந்து போய்விடும். ஆனால், சமீபத்தில் உருவாக்கப்பட்ட சில மரபணு மாற்றப்பட்ட தக்காளி தாவரங்கள் இந்த உப்பு சேர்ந்த நிலங்களில் நன்று வாழ்ந்து நல்ல ருசியான தக்காளியையும் கொடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

முதல்கூறு மரபணு மாற்றப்பட்ட தக்காளிச் செடிகள் மிகமிக உப்பான நிலத்தில் வளர்க்கப்பட்டிருக்கின்றன. மரபணு மாற்றுவதற்கு டாக்டர் எடுவார்டோ ப்லம்வால்ட் அவர்கள் ஒரு வித்தையைச் செய்திருக்கிறார். தக்காளிக்குள் இன்னொரு செடியின் மரபணுவைச் செலுத்தி, அந்த ஜீன் தயாரிக்கும் புரோட்டான் மூலம் உப்பை தக்காளிப்பழத்துக்குச் செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்தப்புரோட்டான் அந்த உப்பில் இருக்கும் சோடியம் என்ற தனிமத்தை இலைகளில் இருக்கும் அறைகளுக்கு அனுப்பி விட்டார்.

கடந்த 50 வருடங்களாக, அறிவியலறிஞர்கள் உப்பு தாங்கும் தாவரங்களை உருவாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். உப்பு நிலத்தாவரங்கள் ஹாலோஃபைட் என்று அழைக்கப்படுகின்றன. உப்புத்தாங்காத தாவரங்கள் க்லைக்கோஃபைட் என்று அழைக்கப்படுகின்றன. உப்பு நிலத்தாவரங்களின் உள்ளே இருக்கும் ஜீனை உப்புத்தாங்காத தாவரங்களின் டி என் ஏயோடு சேர்த்து உப்புத்தாங்காத தாவரங்களை உப்புத்தாங்கும் தாவரங்களாக மாற்ற பல வருடம் உழைத்து வருகிறார்கள். 1998இல் டாக்டர் ப்லம்வால்ட் அவர்கள் டோரோண்டோ பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் போது, இந்த உப்புநிலத்தாவரங்களின் உள்ளே இருக்கும் உப்பை வெளியேற்றும் ஒரு புரோட்டான் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதுதான் முக்கியமான கண்டுபிடிப்பு.

இப்போது டாக்டர் ப்லம்வால்ட் அவர்கள் டேவிஸ் நகரத்தில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறார். அவரும் அவரது தோழர்களும், நேச்சர் பயோடெக்னாலஜி என்ற இதழில் தங்களது மரபணு மாற்றப்பட்ட தக்காளியைப்பற்றி அறிவித்திருக்கிறார்கள். உப்புத்தாங்காத க்லைக்கோஃபைட் தாவரங்கள், உப்பு நிலத்தில் வளரும்போது, அவை தாகத்தில் இறக்கின்றன. எந்த தண்ணீரை எடுத்தாலும் அதில் தாவரங்களுக்குத் தேவையில்லாத சோடியம் தனிமம் இருக்கிறது. இந்த சோடியம் தாவர செல்லிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். சோடியம் வெளியே போகும்போது, ஆஸ்மாஸிஸ் காரணமாக தண்ணீரும் வெளியேறி விடுகிறது.

உப்புநிலத்தாவரங்கள் சோடியத்தை தங்களது தாவர செல்களின் உள்ளே அனுமதிக்கின்றன. பிறகு, இந்த சோடியத்தை ஒரு பாதுகாப்பாக வெளியேற்றி விடுகின்றன. இந்த சோடியம், வகுவோல்(vacuoles) என்று அழைக்கப்படும் சில சேமிப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டு விடுகிறது. இந்த முறை, தாவர செல்லின் அமைப்பை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. சோடியம் செல்களின் உள்ளே இருப்பதால், ஆஸ்மாடிக் அழுத்தத்தால், தண்ணீரும், மற்ற தேவையான உணவுகளும் தாவரங்களின் செல்களுக்குள் செல்கின்றன. விளைவு தாவர வளர்ச்சி.

வகுவோல்களுக்குள் சோடியத்தைத் தள்ளும் புரோட்டானுக்குப் பெயர் இருக்கிறது. இது சோடியம்-புரோட்டான் ஆண்டிபோர்ட் என்பது. இது பெரும்பாலான தாவரங்களில் இருக்கிறது. ஆனால் இது உப்பு நிலத்தாவரங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது. மற்ற தாவரங்களில் இந்த புரோட்டான் வேலையை அதிகரித்தால், இந்த தாவரங்களை உப்பு நிலங்களில் வளர்க்க முடியும் என டாக்டர் ப்லம்வால்ட் கருதினார்.

‘சில ஆராய்ச்சியாளர்கள் இரண்டுவகைத்தாவரங்களையும் ஒட்டுபோட்டு வளர்க்க முயன்றார்கள் ‘ என்று டாக்டர் ப்லம்வால்ட் கூறினார். ‘நாங்கள் அடிப்படையில் எவ்வாறு தாவரங்கள் உப்பைத் தாங்குகின்றன என ஆராய முடிவு செய்தோம். சோடியம்-புரோட்டான்- ஆண்டிபோர்ட் தான் இந்த உப்புத்தாங்குவதற்கு முக்கியமானது என்பதையும், இதன் மூலமே, பழ, விதை, தான்ய தாவரங்களில் உப்புத்தாங்கும் திறமையை உருவாக்க முடியும் என்பதையும் கண்டோம் ‘ என்றும் கூறினார்.

கடுகு தாவரத்துக்கு நெருங்கிய உறவான ‘தாலே க்ரஸ் ‘ என்ற உப்பு நிலத்தாவரத்திலிருந்து இந்த புரோட்டான் உருவாக முக்கியமான தேவையான ஜீனைப் பிரித்து, அதனை தக்காளி தாவரச் செல்லின் மையக்கருவுக்குள் அனுப்பி அந்த ஜீன் பலதடவை பிரதி எடுத்து அந்த தக்காளி டிஎன்ஏவுடன் சேருமாறு செய்தார். இந்த தக்காளி தாவரங்கள் பின்னர் கடல் தண்ணீர் போன்ற உப்புத்தண்ணீரில் வளர்க்கப்பட்டன. இதனுடன் கூட வளர்க்கப்பட்ட சாதாரணத்தக்காளிகள் நன்றாக வளர முடியாமல் குட்டையாகி நின்றுபோயின. டாக்டர் ப்லம்வெல்ட் அவர்களின் தக்காளிகளோ நன்றாக வளர்ந்து பூ பூத்து காய்த்து, சாதாரண தக்காளிபோன்றே ருசியுள்ள தக்காளிப் பழங்களைக் கொடுத்தன.

டாக்டர் ப்லம்வால்ட் அவர்கள்தான் இந்த தக்காளிகளை முதலில் சாப்பிட்டுப் பார்த்தது. மரபணுமாற்றப்பட்ட இந்தச் செடிகள் தங்களுள் இருக்கும் அதிகப்படி உப்பை இலைகளுக்கு அனுப்புவதால், பழங்கள் அப்படியே இருந்தன். உப்பு குறைந்த தண்ணீரில் வளர்க்கப்படும்போது, மரபணு மாற்றப்பட்ட தக்காளிச் செடிகள், சாதாரண தக்காளிச்செடிகளைவிட அதிகமாக பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டன.

இந்த மரபணுமாற்றப்பட்ட தாவரங்கள் உருவாக்கிய தக்காளிகள், சாதாரண தக்காளிகளைவிட 5 சதவீதம் சிறியதாக இருந்தன. இருப்பினும், இந்த புதிய தக்காளிகள் சாதாரண தக்காளிகள் போலவே மணமாகவும், ருசியாகவும் இருந்தன.

‘இந்தத் தக்காளிகள் சரியாக ருசி பார்க்கும் தேர்வையும், இன்னும் பல சட்டதிட்டங்களையும் கடக்க வேண்டும் ‘ என்று டாக்டர் ப்லம்வால்ட் கூறுகிறார். ‘ஆனால், இந்தத் தக்காளிகளுக்கும் மற்ற தக்காளிகளுக்கும் ருசியில் வித்தியாசமே கிடையாது என்று உறுதியாகக் கூறுகிறேன். சரியான பணம் கிடைத்தால், இந்தத்தக்காளிகளை வியாபாரத்துக்கு இன்னும் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குள் கொண்டு வந்துவிடலாம் ‘ என்றும் கூறுகிறார். இந்த ஆராய்ச்சிக்குழு தக்காளிக்குள் செலுத்திய ஜீன் மேல் பேடண்டு (காப்புரிமை) கேட்கப்பட்டிருக்கிறது. ப்லம்வால்ட் அவர்களுக்கு இந்தக்காப்புரிமை இருக்கும். ஆனால், இந்த காப்புரிமை மூலம் பெறும் பணத்தில் ஒரு பங்கு டோரண்டோ பல்கலைக்கழகத்துக்கும் செல்லும்.

டாக்டர் ப்லம்வால்ட் அவர்களது குழு இதே முறையைப் பின்பற்றி, சோளம், அரிசி இன்னும் பல தாவரங்களை உப்புநிலத்தை தாங்கும்படிக்கு உருவாக்க விரும்புகிறார்கள்.

‘இந்த தாவரங்களில் ஏதும் குறைபாடு இருப்பதாக அர்த்தமில்லை ‘ என்று இவரது பரிசோதனைச்சாலையில் வேலை செய்யும் ஆராய்ச்சியாளர் டாக்டர் மாரிஸ் ஆப்ஸே கூறுகிறார். ‘இந்த தாவரங்கள் வளரும் சூழ்நிலைகளைத்தான் நாங்கள் மாற்றிக்கொண்டிருக்கிறோம். மனிதன் தன் சூழ்நிலையை மாற்றிக்கொண்டே போவதால், அப்படி மாறிக்கொண்டே போகும் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, நாம் இந்தத்தாவரங்களை எப்படி மாற்ற வேண்டும் என்பதையும் காரணார்த்தமாக சிந்திக்க வேண்டும் ‘ என்றும் கூறுகிறார்.

***

Series Navigation

அனாஹாட் ஓ 'கான்னர்

அனாஹாட் ஓ 'கான்னர்