இணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி ?

This entry is part [part not set] of 14 in the series 20010623_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


இணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேவையானபொழுது கண்டுபிடிப்பது எப்படி ? இது வைக்கோற்போரில் ஊசி தேடுவதற்கு ஒப்பானது. நாம் கொடுத்து வைத்தவர்களாக இருந்தால் ஒரு சில மணித்துளிகளில் நாம் விரும்பும் தகவல்கள் நமக்குக் கிடைத்துவிடும்; இல்லாவிடிலோ கணினி முன் உட்கார்ந்து, சுட்டியைச் (Mouse) சொடுக்கிச் சொடுக்கி, இணையப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி வாழ்க்கையே வெறுத்துவிடும். இந்த ஒரு காரணத்திற்காகவே பலர் இணையத்தை நாடுவதைத் தவிர்க்கின்றனர்; பெரும்பாலானவர்களுக்கு இதற்கான நேரம் இருப்பதில்லை, பொறுமையும் இருப்பதில்லை. இதற்காக இணையத்தை அடியோடு ஒதுக்குவது என்பது அறிவுடைமையாகாது. குறிப்பாக ஆய்வாளர்களுக்கு இணைய வெளியும் அதில் கிடைக்கும் தகவல்களும் கற்பனை செய்தும் பார்க்க முடியாதவை. இணையத்தில் சரியான தகவல்களைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது தகவலறிவு நிர்வாகத்தின் (Knowledge Management) தலையாய பாடமாகும்.

இணையக் கலைச்சொற்கள்

இணையத் துறையில் வழங்கும் கலைச்சொற்கள் தொடக்கத்தில் பொருள் புரியாத வேற்றுமொழிச் சொற்கள் போல இருக்கும் என்பது உண்மையே. ஆனால் தொடர்ந்து இணையத்தில் பணியாற்றுவோர்க்கு கீழ்க்கண்ட இந்த மூன்று சொற்களும் பழக்கப்பட்டுவிடும். அவை முறையே, கோப்பகங்கள் (Directories), தேடுபொறிகள் (Search Engines), துறை வாயில்கள் (Portals) ஆகியன.

கோப்பகங்கள் என்பவை பெரிய அட்டவணைக் (Index) கோப்புகளின் தொகுதியாகும். எடுத்துக்காட்டாக, யாஹூ (Yahoo) என்பது அனைவரும் அறிந்த ஒரு கோப்பகமாகும். ஒரு கோப்பகத்தின் படிநிலை அமைப்பின் வாயிலாக இணையப் பயனாளர் பல்வேறு தகவல்களையும் சில வினாடி நேரத்தில் அடைந்துவிட இயலும். எடுத்துக்காட்டாகத் தமிழ்– தமிழ் இலக்கியம்– திருக்குறள்– திருக்குறள் மாநாடுகள் இவையனைத்தையும் பற்றிய வலைத்தளங்களின் முகவரிகளைச் சில வினாடிகளில் பெற்றிட இயலும். மேலும் எல்லா வலைத் தளங்களும் பதிவு செய்யப்பெற்றவை (கோப்பகங்களில் வலைத்தளத்தை இணைக்க உரிமையாளர்கள் பணம் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும்); இதனால் பொருளற்ற தாறுமாறான கூளத் தளங்கள் (Junk sites) வருவது தவிர்க்கப் படுகின்றது. கோப்பகங்களின் முக்கியமான குறைபாடு என்னவெனில் அவற்றில் இணைக்கப்படும் வலைத் தளங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படுவதில்லை. நாம் தேடும் வலைத்தளம், உரிமையாளர் அதற்கு வழங்கிய முதன்மைச்சொல் (Key word) மற்றும் விவரங்கள் ஆகியவற்றோடு ஒத்துப் போக வேண்டும். அவ்வாறில்லையெனில் நாம் தேடும் தகவல்களை உள்ளடக்கிய வலைத்தளத்தைப் பெறுவது எளிதாக இராது.

தேடு பொறிகள் என்பன, வைய விரிவு வலையில் (World Wide Web – WWW) உள்ள எல்லாத் தளங்களையும் வருடிப் (Scan) பார்த்து நுண்ணாய்வு செய்யும் திறன் வாய்ந்தவை; நாம் தரும் முதன்மைச் சொல்லின் வாயிலாக நமக்குத் தேவையான தகவல்களைப் பட்டியலிடும் கணினி நிரல்களின் (Programs) அடிப்படையில் செயல் படுபவை. கூகுல் (Google), லைகாஸ் (Lycos), எக்சைட் (Excite) ஆகியன தேடுபொறிகளுக்கான சில எடுத்துக் காட்டுகளாகும். இவைபற்றி நாம் கருத்தில் கொள்ளவேண்டிய இரு செய்திகள்: 1) ஒவ்வொரு தேடுபொறியும் வலைத் தளங்களைப் பட்டியலிடுவதற்கும், வகைப் படுத்துவதற்கும் தனித்தனி முறையைக் கையாளும். 2) நாம் தரும் முதன்மைச் சொல்லைக்கொண்டு எந்த ஒரு தேடுபொறியும் வலைத்தளத்தில் கிடைக்கும் தொடர்புள்ள அனைத்து வலைப்பக்கங்களையும் பட்டியலிட்டுவிடாது. வலைப்பக்கங்களை பட்டியலிடுவதும், பட்டியலிடாததும் தேடுபொறிகளின் கட்டுப்படாத விதிமுறைகளுக்கு உட்பட்டவை. எனவே ஒரே முதன்மைச் சொல்லிற்கு, வெவ்வேறு தேடுபொறிகள் வெவ்வேறு வலைப் பக்கங்களைப் பட்டியலிடும் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே ஒரே முதன்மைச் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தேடுபொறிகளில் வலைப் பக்கங்களைக் கொணர்ந்து, தகுதியானதைப் பார்வையிடுவதே நல்ல பலனையளிக்கும்.

துறைவாயில் என்பதும் ஒருவகைத் தளம்தான். இத்தளத்தில், கோப்பகங்கள் மற்றும் தேடுபொறிகளில் கிடைக்கும் வசதிகளுடன் கூடுதலாக மின்மடல் (E-Mail), செய்திகள், அரட்டை அறைகள் (Chat rooms) ஆகிய வசதிகளும் உண்டு. யாஹூ (Yahoo), எம் எஸ் என் (MSN) ஆகிய துறைவாயில்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களுக்கான நுழைவாயில்களாக விளங்குபவை. சில துறைவாயில்கள் பரந்து விரிந்தவை; வேறு சில குறிப்பிட்ட துறைகளுக்கான வாயில்களாக மட்டுமே விளங்குபவை. எடுத்துக்காட்டாக தொடர் வளர்ச்சிக்கான நுழைவாயில் (Sustainable Development Gateway – SD Gateway) பெயருக்கேற்றாற்போல் வளர்ச்சித் துறை சார்ந்த தகவல்களையே தருவது. ஒரு குறிப்பிட்ட தலைப்பில், தேவையான தகவல்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட துறை சார்ந்த துறைவாயில்கள், கோப்பகங்கள் போன்று பயன்படும்.

கோப்பகம், தேடுபொறி, துறைவாயில் இவற்றுள் எதைப் பயன்படுத்துவது என்பது பயனாளர்களின் விருப்பத்தையும், முன்னுரிமையையும் பொறுத்தது. தற்போது பல தேடுபொறிகள், கோப்பகம் மற்றும் துறை வாயில் ஆகியவற்றின் கலப்பினத் தன்மை வாய்ந்தவையாக விளங்குகின்றன. சிலர் தேடுபொறிகளையும், மற்றவர்கள் மூன்றையும் நம்புகின்றனர். பொதுவாகக் கூறவேண்டுமெனில், ஒரு பொதுத் தலைப்பில் தகவல்களை வேண்டுவோர், எங்கிருந்து துவங்குவது என்று தெரியாத நிலையில், கோப்பகம் அல்லது துறைவாயிலை நாடலாம். குறிப்பிட்ட முதன்மைச் சொற்களை அறிந்தோர் அல்லது சீர் வளத் தகவல் காட்டியைக் (Uniform Resource Locator–URL) காண விரும்புபவர் தேடுபொறியைப் பயன்படுத்துவது நல்லது.

முதன்மைச் சொற்களின் (Key words) முக்கியத்துவம்

தேடுபொறியைப் பயன்படுத்த விரும்புவோர் சரியான முதன்மைச் சொற்களை வழங்க வேண்டும். தருகின்ற முதன்மைச் சொற்களின் அடிப்படையில்தான் சரியான தகவல்கள் கிடைக்கும். மேலும் சரியான முதன்மைச் சொற்கள் தேவையற்றக் கூளத்தளங்களைத் தவிர்ப்பதுடன், தேவையான தகவல்களை விரைந்து பெறவும் உதவி செய்யும். பொதுவாக முதன்மைச் சொற்களைத் தரும்போது பெரும்பான்மையோர் ஓரிரண்டு சொற்களோடு நிறுத்திக் கொள்ளுகின்றனர். தேவைக்கேற்றவாறு அதிகமான சொற்களைத் தருவதில் தவறேதுமில்லை. ஏற்கனவே தரப்பட்ட எடுத்துக்காட்டைக் காண்போம். கூகுல் (Google) தேடுபொறியைத் திறந்து, பெட்டியில் தமிழ் (Tamil) என்ற முதன்மைச் சொல்லை தந்தபோது சுமார் 10 லட்சம் முடிவுகள் கிடைத்தன; தமிழ் + இலக்கியம் (Tamil+literature) என்ற முதன்மைச்சொற்களுக்கு கிடைத்த முடிவுகள் சுமார் 50 ஆயிரம்; இன்னும் விளக்கமாக தமிழ் + இலக்கியம் + திருக்குறள் (Tamil + literature + Thirukkural) என்று முதன்மைச் சொற்களைத் தந்தபோது வந்த முடிவுகளின் எண்ணிக்கை வெறும் 250 மட்டுமே; மேலும் விளக்கத்துடன் தமிழ் + இலக்கியம் + திருக்குறள் + மாநாடுகள் என்று முதன்மைச் சொற்களை வழங்கியபோது கிடைத்த முடிவுகள் 30க்குச் சுருங்கிவிட்டன. எனவே நமக்கு என்ன தேவை என்பதை உறுதி செய்துகொண்டு அதற்கேற்ப முதன்மைச்சொற்களை வழங்கினால் தேவையான தகவல்களை விரைந்து பெறமுடியும் என்பதில் ஐயமில்லை.

மேலும் சிறப்பாகத் தகவல்களைத் தேடுவதற்கு நேர்த்தியான, நுட்பமான வழிமுறையாக விளங்குவது பூலியன் (Boolean) சொற்களான AND, OR, ANDNOT, NEAR போன்றவற்றைப் பயன்படுத்துவதாகும். தமிழ் மற்றும் திருக்குறள் (Tamil AND Thirukkural) என்று முதன்மைச் சொற்களை வழங்கினால் மேற்கூறிய இரு சொற்கள் எங்கெங்கு உள்ளனவோ அத்தள விவரங்களெல்லாம் நம் பார்வைக்கு தரப்படும். தேடுபொறி பற்றிய தளங்களைப் பார்வையிடுவதன் வாயிலாக அவற்றைப் பற்றிய அட்டவணை, தரவேண்டிய ஆணைச் சொற்கள் போன்ற பல விவரங்கள் நமக்குக் கிடைக்கும்; அதை படியெடுத்து வைத்துக் கொண்டால் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான தள விவரம் வருமாறு: http://www.searchenginewatch.com/ facts/atglance.html.

கூழாங்கற்களுக்கிடையே வைரக் கற்கள்

இணையத்தில் வியக்கத்தக்க வகையில், ஏராளமான தகவல்கள் கிடைக்கும் என்பது உண்மையே; ஆனால அவை அனைத்தும் உண்மையென்றோ, சரியானவையென்றோ கூறிவிட முடியாது. இணையத்தில் தகவல்களை அல்லது தகவல் தளங்களைத் தேடிப்பிடித்தவுடன், அடுத்த நமது முக்கியமான பணி அவற்றுள் தேவையான வற்றையும், சரியானவற்றையும் சலித்து எடுப்பதுதான்; இது கூழாங்கற்களுக்கிடையே ஓரிரண்டு வைரக் கல்லைத் தேடுவது அல்லது குப்பையைக் கிளறி மாணிக்கத்தைத் தேடுவது போன்றதே. ஆனால் இதற்கான முடிவை மேற்கொள்ளுவது முழுக்க முழுக்க இணையப் பயனாளரையே சார்ந்தது; ஏனென்றால் நமக்கு வேண்டியது நமக்குத்தான் தெரியும். இருப்பினும் இணையத்தில் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சில அறிவுரைகளைக் கருத்தில் கொள்ளுவது நலம்.

நம்பகத்தன்மையும், சரியான தகவலும் முக்கியமெனில், பெயர்பெற்ற, புகழ் வாய்ந்த, பெரிய நிறுவனங்கள்/ அமைப்புகள்/ சங்கங்கள் ஆகியவற்றின் தளங்களைப் பார்வையிடுவது சிறந்தது. எடுத்துக்காட்டாக ஐக்கிய நாடுகள் நிறுவனம், யுனெஸ்கோ போன்றவற்றின் தளங்கள் உண்மைக்கும், சரியான தகவல்களுக்கும் பெயர் பெற்றவை; மேலும் அவற்றின் தளங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு அண்மைக்காலத் தகவல்களைச் சரியாகவும், துல்லியமாகவும் தரக்கூடியவை. அடுத்து இத்தகையத் தளங்களைப் பார்வையிடும்போது, தொடர்புடைய (Links) வேறு பல சிறந்த தளங்களைப் பற்றிய விவரங்களும் கிடைக்கும்.

மேலும் தற்போது பல்துறை சார்ந்த தரம் வாய்ந்த இதழ்களும் இணையத்தில் உலா வருகின்றன; அவையும் அண்மைக்காலத் தகவல்களைச் சரியாகத் தரக்கூடும். அவற்றையும் பார்வையிடலாம். இவை தவிர்த்துப் பல செய்தி நிறுவனங்களும் இணையத் தளங்களை நடத்திவருகின்றன; எடுத்துக்காட்டாக என்விரோலிங்க், தி டைம்ஸ் ஆப் இந்தியா, சி என் என் ஆகியவற்றின் செய்தித் தளங்களை உண்மையான, சரியான, நம்பகமான தகவல்களை வேண்டுவோர் பார்வையிடலாம். மேற்கூறிய தளங்களை, பல தனியார் தளங்களை விட உண்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் உரிய சிறப்பான தளங்களாகக் கருதலாம்.

இருப்பினும் தனியார் தளங்களை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது; மின்னணு இதழ்கள்,

மி-குழுக்கள், மி-மாநாடுகள், மி-கருத்தரங்குகள், நேரடிப் பங்கேற்புகள் ஆகியனவெல்லாம் தனியாரால் நடத்தப் பெறுவனவே. இவற்றிலெல்லாம் பங்கேற்று அண்மைக்கால ஆய்வு முடிவுகளையும், கண்டுபிடிப்புகளையும், பல்வேறு தகவல்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடியும். சிறந்த தகவல்தளங்களைப் பற்றிய செய்திகளை கணினி பற்றிய இதழ்களிலும், செய்தித் தாள்களிலும், விளம்பரங்கள் வாயிலாகவும் தெரிந்துகொள்ள இயலும். ஒரே துறையில் ஆர்வமுள்ளவர்களுடன் கலந்துரையாடும்போதும் சிறந்த தகவல் தளங்களைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடும். பெரும்பாலான தளங்களில் அவை எப்போது இறுதியாக மேம்படுத்தப்பட்டவை என்ற தகவல், பக்கத்தின் இறுதியில் தரப்பட்டிருக்கும். இதன்மூலம், நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அண்மைக் காலத்தவையா அல்லது ஹைதர் காலத்தவையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். முக்கியமானவை எவையெனில், தரப்படும் செய்தியின் உண்மையும், நம்பகத்தன்மையுமே. தகவல் தளங்களில் தரப்படும் செய்திகளின் மூலங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பார்வையிடுவது இவ்வகையில் மிகவும் நல்லது.

தரம்வாய்ந்த, சிறந்த தேடு பொறிகள், உயர் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு முன்னேற்றங்கள் இருப்பினும், இணையத் தேடுதலில் நமது வெற்றி, நாம் எவ்வளவு சிறப்பாகத் தேடுகிறோம் என்பதை மட்டுமே பொறுத்தது. எவ்வளவு திறமையோடு நாம் தேடுகிறோமோ, அவ்வளவு சிறப்போடு நமது ஆய்வு முடிவுகள அமையும்.

இணையத் தேடலுக்கான சில குறிப்புகள்

1. நமக்குத் தேவையானது, கோப்பகமா, தேடு பொறியா அல்லது துறைவாயிலா என்பதைத் தீர்மானித்தல்.

2. தேடுபொறியைப் பயன்படுத்தினால், சரியான முதன்மைச் சொற்களைக், குழப்பமின்றித் தெரிவு செய்தல்

3. குறிப்பிட்ட முதன்மைச் சொற்களை, வெவ்வேறு தேடுபொறிகளில் தந்து சிறந்த தளங்களைக் காணல்.

4. தேடுபொறி, தளங்களுக்கான பட்டியலைத் தந்தவுடன், அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்தல்.

5. தளத்தைப் பார்வையிடும்போது, தொடர்(Links) தளங்களைப் பற்றி அறிந்து அவற்றையும் பார்வையிடல்.

6. ஒரு வலைத்தளத்தைப் பார்வையிடும்போது அதன் மூலத்தை அறிந்து கொள்ளல்.

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித் துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர