வாழ்க்கை என்னும் லாட்டரி

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

மைக்கல் லாட்டன்


ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள விரும்பிய ஒரு தம்பதியினர் தங்களுக்கு ‘நல்ல குழந்தை வேண்டும் ‘ என்று என்னிடம் சொன்னார்கள்.

மொட்டையான வார்த்தைதான். ஆனால் உண்மையான வார்த்தை. நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள விரும்பினால் உங்களுக்கு என்ன மாதிரியான குழந்தை வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆணா பெண்ணா, என்ன வயசு, ஆரோக்கியம் என்ன, புத்திசாலியா என்று எல்லாம் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உங்களால் எந்த அளவுக்கு குழந்தைக்கு ஈடு கொடுக்கமுடியும் என்று யோசித்துக்கூட ஒரு குழந்தையை தேர்வு செய்யலாம்.

இருந்தும், எனக்கு அவர்கள் சொன்னது எனக்குக் கஷ்டமாக இருந்தது. உங்களுக்கு ஆண் குழந்தையை தத்தெடுக்கவேண்டுமா பெண் குழந்தையை தத்தெடுக்க வேண்டுமா என்று தேர்வு செய்வது வேறு, ஒரு குழந்தையை எந்த அளவுக்கு ‘நல்ல ‘ குழந்தையாகத் தேர்வு செய்வது என்பது வேறு. உங்கள் குழந்தையை நீங்களே பெற்றீர்கள் என்றால், இந்தக் கேள்வியே வராது.

நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணையை தேர்வு செய்கிறீர்கள், மற்றதை சந்தர்ப்பத்திடம் விட்டுவிடுகிறீர்கள். ஆனால் இன்று அது சந்தர்ப்பத்திடம் விட்டுவிடப்பட்டுவிட்டதா ?

ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தையை உருவாக்கும்போது, எந்த ஜீன்கள் தங்கள் குழந்தைக்குச் செல்கின்றன என்பது அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை.

அவர்களுக்கு அப்பாவின் மூக்கு கிடைக்கலாம், அத்தையின் சிரிப்பு கிடைக்கலாம், அம்மாவின் இசை ஞானம் கிடைக்கலாம். மக்கள் பெருக்கம் என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய லாட்டரி.

பொதுவாக நாம் இந்த லாட்டரியை, மரபணு கூட்டுக்கலவையை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம். உங்கள் குழந்தைகள் எப்படி வருவார்கள் எப்படி எதிர்காலம் இருக்கும் என்று தெரியாமல் அதை பார்ப்பதென்பது வாழ்க்கையின் அதிசயமான ஆச்சரியங்களில் ஒன்று.

ஆனால் ஜீன்களின் எல்லா கூட்டுக்கலவைகளும் நல்லவை அல்ல. சில ஜீன்கள் வியாதியைக் கூடவே கூட்டிக்கொண்டு வருகின்றன. சிலவை வளர்ச்சியை குறைக்கின்றன. சிலவை உயிருக்கே ஆபத்தாகவும் முடியும். குழந்தைகள் இந்த கெட்ட ஜீன்களை பெறாமல் இருக்க பல முறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பல நாடுகளில், குழந்தை பிறக்குமுன்னர் ஆராய்ந்து பார்ப்பது வழக்கமானதாகி விட்டது (prenatal testing). அல்ட்ரா சவுண்டு என்னும் ஒலி மூலம் கருவிலிருக்கும் குழந்தையை படம் எடுத்து அதற்கு எல்லா உறுப்புகளும் இருக்கின்றனவா என்று ஆராய்வதும், அம்னியோஸென்டஸிஸ் போன்ற முறைகள் மூலம் குழந்தைக்கு ஆபத்தான ஜீன்கள் இருக்கின்றனவா என ஆராய்வதும் பழக்கமானதாகிவிட்டது.

இன்று பெரும்பாலான பெற்றோர்கள், தங்களுக்கு ஆபத்தான ஜீன்களுடன் குழந்தை தோன்றினால், குழந்தையை அபார்ஷன் செய்துவிட்டு அடுத்த முறை இந்த ஜீன்கள் இல்லாத குழந்தையை பெற முயற்சி செய்கிறார்கள்.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, மேற்கண்ட பரிசோதனைகளாலும், அபார்ஷன்களாலும், ஆபத்தற்ற ஜீன்கள் உள்ள குழந்தைகளே எதிர்காலத்தில் பிறப்பார்கள்.

ஏற்கெனவே நம்மிடம் டஜன் கணக்கில் இதுமாதிரி பரிசோதனைகள் இருக்கின்றன. இப்போது மனித ஜீனோம் வரிசை கண்டுபிடிக்கப்பட்டவுடன் இது இன்னும் அதிகமான ஆபத்தான ஜீன்களை பரிசோதனை செய்ய வாய்ப்பு இருக்கும். இவ்வளவு விஷயத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது ? எந்த ஆபத்தான ஜீன் இருந்தாலும் அபார்ஷன் செய்து விடுவோமா ?

இப்போது டெஸ்ட் டியூப் குழந்தை என்னும் இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் என்னும் முறையில் நன்றாக பிரியும் முட்டைகளை கருப்பையில் வைக்கிறார்கள். இதே முறையை நீட்டி, ஆபத்தான ஜீன்கள் இல்லாத முட்டைகளை மட்டும் கருப்பையில் வைக்கலாம்.

அறிவியல் கதை இல்லை இது. 1989இலேயே, முட்டைகளை ஆபத்தான ஜீன்கள் இருக்கின்றனவா என்று பரிசோதித்து வைக்கும் முறை தோன்றிவிட்டது. குழந்தைகளுக்கு ஹெமோஃபிலியா, டே சாக்ஸ், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற வியாதிகள் இருக்கின்றவா என பரிசோதித்து இது முறை 30 குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

ஏற்கெனவே பிறப்பை கட்டுப்படுத்தும் முறை ஸ்பெர்ம் ஸார்டிங் என்ற முறை மூலம் வந்து விட்டது. (பெண் குழந்தை வேண்டுமெனில் ஒரு முறையை பயன்படுத்தி 92.5 சதவீதம் வெற்றி வாய்ப்புடன் பெண் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஆண் குழந்தைக்கு அது போல முறை இல்லை). இப்போது இது அருவருப்பாக இருக்கலாம். ஆனால் முன்பு டெஸ்ட் டியூப் குழந்தை வந்தபோது இதே போல அருவருப்பாகத்தான் பேசப்பட்டது. இப்போது வழக்கமாகி விட்டது.

பிரதியெடுத்தல் (குளோனிங்) முறை இன்று பரவலாக பரபரப்புடன் பேசப்படுவதால், இந்த முறைகளை கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிடலாம். ஆனால்,நாம் எந்த முறையில் சந்ததியினரைப் பெறுவோம் என்பதை அதிகமாக பாதிப்பவை இவைகளே.

எதிர்காலச் சந்ததியினர் எந்த மாதிரி இருக்க வேண்டும் என்பதை நாம் வெகுவாக பாதிப்போம். நம்மிடம் உள்ள எந்த எந்த ஜீன்கள் குழந்தைகளுக்குச் செல்லவெண்டும் என்பதை நாம் நிர்ணயிப்போம்.

எனவே முக்கியமான கேள்வி, எந்த ஜீன்களை நாம் பரிசோதிக்க வேண்டும் ? நாம் ஆபத்தான வியாதிகளைத் தரும் ஜீன்களை பரிசோதிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமா ? கோலோன் கேன்ஸர் போன்ற பெரிய மனிதர்களிடம் வரும் வியாதிக்கான ஜீன்களையும் பரிசோதிக்க வேண்டுமா ? இந்த வழியில் போனால் நம் குழந்தைகளுக்கு மற்ற ஆக்கப்பூர்வமான ஜீன்களைத் தருவதற்கும் முயற்சிப்போமா ?

‘கட்டகா ‘ Gattaca என்ற படத்தில் ஜீன் களை பரிசோதித்து குழந்தை பெற்றுக்கொள்வது நடைமுறையாகக் காண்பிக்கப்படுகிறது. பணக்கார பெற்றோர் தங்கள் குழந்தைகள் எந்தமாதிரி குணாதிசியங்களுடன் பிறக்க வேண்டும் என நிர்ணயித்துக் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். ஒரு காட்சியில் ஒரு பெற்றோர் டாக்டரிடம் கேட்கிறார்கள். ‘வாழ்க்கை என்னும் லாட்டரியிடம் இந்த விஷயத்தை விட்டு விடுவது நல்லதில்லையா ? ‘ என்று

டாக்டர் பதில் சொல்கிறார் ‘ உங்கள் இருவரி சிறந்த குணாதிசியங்களை பெற்று இந்தக் குழந்தை வருவதாக நாங்கள் நினைக்கிறோம் ‘

மிகவும் ஆசைதரும் வார்த்தைகள். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு எந்த அளவு மக்களிடம் விருப்பம் இருக்கும் என்பதை தெளிவாகச் சொல்கிறது இது. நாம் நம் குழந்தைகள் நமது நல்ல குணாதிசியங்களின் மொத்த உருவமாக இருப்பதற்கு விரும்புவோமா இல்லையா ?

இது நம் குழந்தைகளின் ஜெனடிக் அடித்தளத்தை தேர்வது அடிப்படையான தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. அப்படி செய்யவில்லை என்றால் அது நாம் நல்ல பெற்றோராக இல்லாமல் இருப்பதை குறிக்கிறது.

இந்த சக்தி வாய்ந்த தொழில்நுட்பம் நல்லதாகவும் இருக்கலாம், சமூகப்பிரச்னைகளை உருவாக்குவதாகவும் இருக்கலாம். நல்லது – எந்த முறையில் என்றால், நம் குழந்தைகளுக்கு பிறப்பு ரீதியான நோய்கள் வராமல் இருக்கும்.

மன, அறிவு, வயது சம்பந்தமான நல்ல விஷயங்களை அதிகப்படுத்துவதாகவும் இருக்கலாம்.

நாம் ‘கெட்ட ஜீன் களை ‘ அழித்து, ‘நல்ல ஜீன் களை ‘ அதிகப்படுத்தும் போது, நாம் நமது மனித சமுதாயம், மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப பரிணமிக்கும் மனித குணத்தை அழிப்பதாகவும் இருக்கலாம்.

ஆகவே நம் குழந்தைகளுக்கு எந்த ஜீன் களை அனுப்புவது ? ‘நல்ல ஜீன்களை ‘ மட்டுமா ?

அது, நீங்கள் எந்த ஜீன்களை ‘நல்ல ஜீன்கள் ‘ என்று சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

***

மைக்கல் லாட்டன், நியூ ஜெர்ஸியில் இருக்கும் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் தாவர, மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார்.

***

Series Navigation

மைக்கல் லாட்டன்

மைக்கல் லாட்டன்