அறிவியல் துளிகள்

This entry is part of 15 in the series 20010430_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


ஆற்றின் நடுப்பகுதியில் செல்லும் நீரின் விரைவுத்தன்மை (speed) கூடுதலாகவும், இரு கரைகளின் அருகே செல்லும் நீரின் விரைவுத்தன்மை மிகக் குறைவாகவும் இருப்பது ஏன் ?

தண்ணீர் ஒட்டுந் தன்மை/பசைத் தன்மையுடைய ஒரு நீர்மப் பொருள். இதன் குண நலன்கள் மிகவும் தெளிவானவை. ஆற்றின் இரு கரைகளை ஒட்டி இருக்கும் தண்ணீர், கரைகளுடன் ஏற்படும் உராய்வின் காரணமாக இயக்கம் குறைந்து ஏறக்குறைய நிலையான தன்மையில் இருப்பதாகக் கருதலாம். மாறாக ஆற்றின் இரு கரைகளை விட்டு விலகி இருக்கும் நீரில் மேற்கூறிய உராய்வு ஏதுமில்லை என்பதால் ஆற்றின் நடுப்பகுதியில் ஓடும் நீர் விரைந்து செல்லுகிறது. எனவேதான் ஆற்றின் கரைகளின் அருகே செல்லும் நீரைவிட, நடுப்பகுதியில் செல்லும் நீர் விரைந்து ஓடுகிறது.

இருக்கையில் இருந்து எழும்போது, நாம் முன்பக்கம் சாய்ந்தவாறு காலை உந்திக்கொண்டு எழுந்திருப்பது ஏன் ?

ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் (center of gravity) அதன் அடிப்பகுதியிலேயே விழும்போது அப்பொருள் நிலையாக இருக்கும். எனவேதான் ஒரு பொருள் பரந்த அடிப்பகுதியும், அதனால் அதன் ஈர்ப்பு மையம் புவிக்கு அருகிலும் இருக்கும்போது, அப்பொருள் நிலையாக இருக்கிறது.

இருக்கையில் அமர்ந்து இருக்கும் மனிதனின் ஈர்ப்பு மையம் அவன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும். அதனால் அவன் முன்பக்கம் சாய்ந்து, காலை உந்தி எழும்போது ஈர்ப்பு மையம் காலின் அடிப்பகுதியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. எனவேதான் மனிதனால் கீழே விழாமல் எழுந்திருக்க இயலுகிறது. மேற்கூறிய அச்செயல் தன்னியக்கமாக, அனிச்சையாக, எவ்வித முயற்சியுமின்றி, மிகவும் இயல்பாக நடைபெறுகிறது என்பதனை நாம் அறிவோம்.

தொலைக்காட்சித் திரையில் ‘சினிமாஸ்கோப் ‘ படங்களைத் திரையிடும்போது அவற்றின் அகலம் குறைந்து காணப்படுவதேன் ?

சினிமாஸ்கோப் படங்களை எடுப்பதற்கு உருளை வடிவிலமைந்த கண்ணாடி வில்லை (lens) பொருத்தப்பட்ட தனிவகையான ஒளிப்படப் பெட்டியைப் (camera) பயன்படுத்துவர். இதில் எடுக்கப்படும் படம் அல்லது உரு (image) நீளம் மிகுந்தும், அகலம் குறைந்தும் அமையும். இதனால் உருவின் மிகுதியான பரப்பு படத்தில் பதிவாகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட சினிமாஸ்கோப் படங்களை அரங்குகளில் திரையிடுவதற்கு உருளை வடிவிலமைந்த மற்றொரு வில்லை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நீளவாட்டில் அமைந்த பகுதி, உயரவாட்டில் அமைந்த பகுதியைவிட மிகுதியாக உருப்பெருக்கம் (magnify) செய்யப்படுகிறது. படத்தின் நீளவாட்டப் பகுதி, உயரவாட்டப் பகுதியை விட இரண்டரை மடங்கு அதிகமாக அமைந்துள்ளது. எனவே சினிமாஸ்கோப் படத்தை திரையரங்குகளில் திரையிடுவதற்கும் நீள அகல விகிதங்கள் 2.5: 1 என்ற வகையில் அமைந்த சிறப்புத் திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தொலைக்காட்சித் திரையில் நீள அகல விகிதங்கள் மேற்கண்ட விகிதத்தில் இல்லாமல் இருப்பதால் சினிமாஸ்கோப் படத்தின் அகலம், முழுத் திரையிலும் கொண்டுவர இயலாமல், குறைவாகக் காட்சியளிக்கிறது.

வளி அடுப்பைப் (gas stove) பற்றவைக்கும்போது உருளைகளில் அடைக்கப்பட்டுள்ள நீர்மப் பெட்ரோலிய வளி (liquefied petroleum gas-LPG) எவ்வாறு தீப்பற்றிக்கொள்ளாமல் இருக்கிறது ?

வளி அடுப்பைப் பற்றவைத்தவுடனே, அதிலுள்ள வளிப்பொருள், உலையைச் (burner) சுற்றியுள்ள காற்றுடன் கலப்பதால் உடனே தீப்பிடித்து எரியத் தொடங்குகிறது. தேவையான அளவு காற்று கலக்காவிட்டால் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டு எரியும் நிகழ்ச்சியும் நடைபெறாது. உருளையின் (cylinder) வாய்ப்பகுதி மிகவும் குறுகி இருப்பதாலும், உருளையையும் அடுப்பையும் இணைக்கும் குழாயினுள் காற்று நுழையும் வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் நீர்மப் பெட்ரோலிய வளி தீப் பிடித்துக்கொள்வது பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. அடுத்து உருளையின் வாய்ப்பகுதியில் உள்ள சீரியக்கி (regulator) நீர்மப் பெட்ரோலிய வளியை வெளியே செல்ல அனுமதிக்குமே ஒழிய வெளியே உள்ள காற்றை உருளையின் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இதனால்தான் உருளையில் அடைக்கப்பட்டுள்ள வளி தீப்பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்கமுடிகிறது. மேலும் வளி தீப்பிடிப்பதற்கு அதன் சில மூலக்கூறுகளின் வெப்ப நிலையை மிகுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காகவே தீக்குச்சி அல்லது தீக்கொளுவியினால் (lighter) தீப்பொறிகளை உண்டாக்கி வளியை விரைந்து தீப்பிடிக்கச் செய்யவேண்டியுள்ளது.

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

மைசூர் 570023 இந்தியா

Series Navigation