அறிவியல் துளிகள்

This entry is part of 13 in the series 20010408_Issue

டாக்டர் ரா விஜயராகவன் பிடெக் எம்ஐ எம்ஏ எம்எட் பிஎச் டி


மனிதனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது ?

பொன், வெள்ளி, ஈயம், செம்பு, இரும்பு, தகரம், பாதரசம் ஆகியன மக்களால் பழங்காலத்தில் இருந்து பயன் படுத்தப்பட்டு வரும் உலோகங்கள். இருப்பினும் மனித இனத்தால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகமாகக் கருதப்படுவது தங்கமே. ஆற்றுப்படுகைகளில் பொன் தாதுக்கள் பாள வடிவில் அறியப்பட்டன. கற்காலத்தின் இறுதிப் பகுதியில் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அப்போதிருந்தே நகையும் அணிகலன்களும் செய்ய இவ்வுலோகம் பயன்பட்டு வருகின்றது.

பண்பலை ஒலிபரப்பு (F M Transmission) என்பது என்ன ?

வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high fequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் (carriers) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.

இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM – Frequency Modulation) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM – Amplitude Modulation) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்.

ஊற்றுப்பேனாவில் (Fountain pen) உள்ள மை, ஏறக்குறைய தீர்ந்து விட்ட நிலையில், அதிகமாக வெளியே கொட்டுவது ஏன் ?

பேனா முள் (nib), மையைத் தேக்கிவைக்குமிடம், மையை முள்ளுக்குச் செலுத்தும் வழி ஆகிய மூன்றும் பேனாவின் முக்கியமான பகுதிகளாகும். பேனாவைப் பயன்படுத்தி எழுதும் போது, கூர்மையான பேனா முள்ளின் பிளவு வழியாக மை கசிந்து தாளில் எழுதும் வாய்ப்பு உண்டாகிறது. மை தேங்கியுள்ள இடத்திலிருந்து மை வெளியேறுவதனால் உண்டாகும் காலி இடத்தில் காற்று நிரம்பிவிடும். இதனால் மை தேக்ககத்திலும், வெளியேயுள்ள வளி மண்டலத்திலும் ஏற்படும் காற்றழுத்த வேறுபாடு சமன் செய்யப்படுகிறது. காற்று உள்ளே செல்வதற்கு வசதியாக பேனா முள்ளின் நடுவில் ஒரு சிறு துளை இருப்பதையும் காணலாம். மை தேக்ககத்திலிருந்து மை வெளியேற வெளியேற, அவ்விடத்தில் நிரம்பும் காற்றின் கொள்ளளவும் மிகுதியாகிக்கொண்டே செல்லும். ஒருவர் பேனாவைப் பிடித்து எழுதிக் கொண்டே இருக்கும்போது, அவர் கை விரல்களின் சூடு உள்ளே இருக்கும் காற்றையும் சூடுபடுத்தும். மை தேக்ககத்தில் பெருமளவு மையும், ஓரளவு காலி இடமும் அவ்விடத்தில் காற்றும் இருக்கும்போது மேற்கூறிய வெப்பத்தினால் உண்டாகும் விளைவு மிக மிகக் குறைவே. ஆனால் சிறிதளவு மையும் பெருமளவு காலி இடமும் அவ்விடத்தில் பெருமளவு காற்றும் நிரம்பி இருக்கும்போது, வெப்பத்தினால் காற்று விரிவடையும். தன் விளைவாக, மை உந்தித் தள்ளப்பட்டு பேனா முள்ளின் வழியாக சிந்திக் கொட்டத் துவங்கும். மிகச் சிரிதளவே மை இருக்கும்போது அதிகமாக மை கொட்டுவது தன் காரணமாகவே.

பச்சை மிளகாயைத் தின்ற வாயில் உண்டாகும் காரத்தை இனிப்புப் பண்டம் எவ்வாறு தணிக்கிறது ?

பச்சை மிளகாயை ஒருவர் கடித்துத் தின்றவுடனே, அவர் நாவில் அமைந்திருக்கும் சுவையரும்புகள் (taste buds) கிளர்ச்சியடைகின்றன; கார உணவைத் தின்ற செய்தி நரம்புத் துடிப்புகள் (nerve impulses) மூலம் மூளைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் ஏற்படும் கார உணர்ச்சி இனிப்பைத் தின்பதன் மூலமோ அல்லது குளிர்ந்த பானங்களை அருந்துவதன் மூலமோ நீக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், காரத்தைத் தின்ற வாயில் சர்க்கரை போன்ற இனிப்புப் பண்டங்கள் பட்டவுடனே, ஏற்கனவே குறிப்பிட்டவாறு சுவையரும்புகள் கிளர்ச்சியுற்று, நரம்புத்துடிப்புகள் மூலம் இனிப்பு தின்ற செய்தி மூளைக்கு அனுப்பப் படுகிறது; எனவே இனிப்புச் சுவையுணர்வு கார உணர்வை மங்கவைத்து விடுகிறது. அடுத்த காரணம், பால், தயிர் போன்ற நீர்மப் பொருட்களை உண்டவுடனே, நாவில் உண்டாகும் ஊற்றுநீரிலுள்ள வேதிப்பொருட்கள், சுவையரும்புகளை கிளர்ச்சியடையச் செய்து முன்பு சொன்ன முறைப்படி கார உணர்வைத் தணிக்கின்றன.

டாக்டர் ரா விஜயராகவன்

பிடெக் எம்ஐ எம்ஏ எம்எட் பிஎச் டி

வட்டாரக் கல்வியியல் கல்லூரி

மைசூர் 570006 ந்தியா

Series Navigation