உங்கள் உழைப்பைச் சமூகத்திற்குத் தாருங்கள் (ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 10)

This entry is part [part not set] of 7 in the series 20001119_Issue

வே. வெங்கடரமணன்


venkat@tamillinux.org

கடந்த வாரங்களில் லினக்ஸ் இயக்குதளத்தைப் பற்றிய அறிமுகத்திற்குப் பின், கணினி மென்கலன்கள் காப்புரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பது எவ்விதம் வளர்ச்சிக்கு அடிகோலும் என்றும், பின்னர் தமிழில் நடந்துவரும் கணினி புரட்சிகள் பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்தப் பத்தாவது வாரம் வரை நீங்கள் இவற்றைப் பொறுமையுடன் படித்து வந்திருப்பீர்களேயானால் இப்பொழுது நீங்கள் பிறருக்கு ஒன்றை அளிக்கக்கூடிய உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். உங்களிடம் கையேந்தி நிற்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒருவருக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ நாம் ஒன்றைக் கொடுக்கும் நிலையில் இருப்பதாக உணர்வதன் பரவசத்தை நீங்கள் இப்பொழுது அனுபவிப்பீர்கள்.

இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் உங்கள் பங்களிப்பை வேண்டுவதே! இந்தத் தமிழ் லினக்ஸ் திட்டத்திற்கு எல்லாராலும் பங்களிக்க இயலும். ஏன் பங்களிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால் தயவுசெய்து பழைய கட்டுரைகளை ஒருமுறை படித்து விடுங்கள். இது எந்த ஒரு தனிமனிதனும் தனக்காகச் செய்யும் காரியம் இல்லை. நம்மூரில் ஒரு சொலவடை உண்டு; ஊர் கூடித் தேர் இழுப்பது என்று. இது அத்தகைய காரியம். அந்தக் காலத்தில் (ஏன் இப்பொழுதும் கூட) நம் மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு – ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலுக்கென்று ஒரு தேர் இருக்கும், அதை ஊர் தேர் வீதிகளில் வலம் வரச் செய்து நிலைக்குக் கொண்டுவந்தால் ஊரில் மழை தவறாது பெய்யும் என்று. இதில் முக்கியமான விஷயம், இந்தத் தேரை ஊர்கூடி இழுக்கவேண்டும் – அதாவது ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவராவது வந்து வடத்தைப் பிடிக்க வேண்டும். இங்கு மழை பெய்கின்றாதா இல்லையா என்பது முக்கியமல்ல – இந்த நிகழ்ச்சி ஊரை ஒன்று கூட்டுகின்றது. பங்காளிப் பகை இருப்பவர்கள்கூட அதை மறந்து (அல்லது ஒத்தி வைத்துவிட்டு) அருகில் நின்று வடம்பிடிப்பதைப் பார்க்கலாம்.

இன்றைக்குப் பிழைப்பிற்காக பல ஆயிரக்கணக்கான் மைல்கள், கடல் கடந்து வாழும் நம் எல்லோரையும் ஒன்றிணைக்க சில வழிகள்தான் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று நம் தாய்மொழியில் கணினி (மற்றும் அறிவியல்) முன்னேற்றத்திற்குப் பங்களிப்பது. இதில் ஈடுபடும் சிலரிடம் கேட்டபொழுது அவர்கள் கூறிய காரணங்கள்;

1. நான் தமிழகத்தில் தொடக்கக் கல்வி கற்றேன். என்னுடைய படிப்புக்கு அரசாங்கம் (அதாவது நம் சமூகம்) எவ்வளவு உதவியது என்பதை நான் இப்பொழுது உணர்கின்றேன். என்னாலான வகையில் மறுநன்றியாக என் சமூகத்திற்குச் சிறிய உதவி இது.

2. நான் தமிழை நேசிக்கிறேன், அது ஒரு நல்லமொழி என்று எண்ணுகின்றேன். உலகின் பழம்பெரும் மொழியான அதனால் இன்றைய தகவல் புரட்சியையும் எதிர்கொள்ள முடியும் என நம்புகின்றேன். அந்த வகையில் இது.

3. உலகின் மற்ற நாடுகளையும் சமூகங்களையும்விட எந்த வகையிலும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை நாம்; எனினும் நம் சமூகம் பாழ்பட்டுக்கிடக்கிறது. இது மாறவேண்டுமென நான் விரும்புகின்றேன். வெறும் சொற்களால் புலம்புவதைவிட யாருடைய தடைகளும் இன்றி என்னாலான சிறிய பங்களிப்பு இது.

4. லினக்ஸ் ஒரு சக்திவாய்ந்த இயக்குதளம் இதற்குப் பங்களிப்பதாகத் தொடங்கினால் விரைவில் இதன்மூலம் கணினி நுட்பத்தின் பலகூறுகளை நான் கற்க முடியும். ஆணைமூலங்கள் திறந்தனவாகக் கிடைப்பதால் என்னால் ஒவ்வொரு கேள்விக்கும் விடைகாண முடியும். என்னுடைய அறிவு வளர்ச்சிக்கு இது பெரிதும் பயன்படுகின்றது. இதனால் என்னுடைய வேலைவாய்ப்புச் சாத்தியங்களும் அதிகரிக்கின்றன.

5. இவ்வாறு தொடங்கிய நான் இதிலுள்ள பல குறைகளைக் கண்டிருக்கின்றேன்; இதற்கு யார்வேண்டுமானாலும் நல்ல தீர்வை முன்வைக்க முடியும் என்பதால் என்னுடைய தீர்வைக் கூறினேன். பலராலும் விவாதிக்கப்பட்டு, சில மாற்றங்களுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றைக்கு என் சிந்தனையில் உருவான ஒரு சிறிய கருத்து உலகெங்கிலும் உள்ள லினக்ஸ் பயனர்களின் வேலையை எளிதாக்குவதை அறிகின்றேன். இது எனக்கு அளவிட முடியாத மனநிறைவைத் தருகின்றது.

6. எனக்கு கணினிகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது, எனினும் நான் விபரம் தெரிந்தவர்கள் வேறு மொழியில் எழுதிய உதவிக் கட்டுரைகளை என்னுடைய மொழியில் மாற்றினேன். இப்பொழுது இது என்னைப்போன்ற பலருக்கும் உதவியாக இருக்கின்றது.

7. சிந்தனைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சிந்தனையில் உதித்த எண்ணங்களுக்கு ஏன் விலை. அடிப்படை கணக்கு/அறிவியல் விதிகளைக் கண்டுபிடித்தவர்கள் அதைப் பிறர் பயன்படுத்த விலை விதித்திருந்தால் இன்றைக்கு நம் அறிவு இந்த அளவிற்கு மேம்பட்டிருக்குமா ? நான் எனக்கு முந்தைய பல அறிஞர்களின் தோள்களில் நின்றுகொண்டிருக்கின்றேன் – என்னுடைய தோளையும் பிறர் ஏறிநிற்க வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன்.

இப்படி பலப்பல.

இதில் ஏதாவது ஒரு காரணத்துடன் உங்கள் சிந்தனையை இனம் காணமுடியுமென்றால் நீங்கள் தொடர்ந்து படியுங்கள். உங்களால் சமூகத்திற்கு உதவ முடியும் என்பதில் உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும்.

கணினி பற்றி அதிகம் தெரியாதவன் நான். என்னால் எந்த வகையில் உதவ முடியும் ? எனக் கேட்பவர்களுக்கு: உங்களைப் போன்றவர்களின் பங்களிப்புதான் தற்பொழுது மிகவும் அவசியம் தேவைப்படுகின்றது. லினக்ஸ் இயக்குதளம் நாம் பலமுறை சொன்னதுபோல் தன்னார்வம் மிக்க பல கணினி நிரலர்களால் வடிக்கப்பட்டது. இவர்களில் பலர் இன்றைக்கு உலகில் தலைசிறந்த கணினி அறிஞர்களாக மதிக்கப்படுபவர்கள். இவர்கள் பலமுறை இந்நிரல்களை எழுதி, மாற்றி எழுதி தொடர்ச்சியாக இதை முன்னேற்றி வருகின்றார்கள். இவற்றைப் பிறர் பயன்படுத்த இலவசமாகவும் தருகின்றார்கள். இதன் பயன்முறையில் இருக்கும் சிக்கல்களுக்கு அவ்வப்பொழுது இணையத்தின் மூலம் விடைகளும் அளித்துவருகின்றார்கள். இவற்றைத் தொகுத்து ஆங்கிலத்தில் FAQ (Frequently Asked Questions) – எனும் வழக்கமான சந்தேகங்களுக்குத் தீர்வுகள் (நாமும் செல்லமாக வ-ச-தி என்று வைத்துக் கொள்வோமே) கட்டுரைகளாக வெளியிடப்படுகின்றன. இது தவிர முழுமையான பயன்படுத்துவது ‘எவ்வாறு ‘ (How-to) ஆவணங்களும் நிறைய உண்டு. உதாரணமாக Linux – Modem Howto என்று ஒரு கட்டுரை. இதுபோல் நிறைய உதவிக்கட்டுரைகள், வசதிக் கட்டுரைகள், எவ்வாறு கட்டுரைகள் எனப் பல தொகுப்புகள் உள்ளன. இவற்றை நீங்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம். இதைச் செய்ய உங்களுக்கு கணினி பற்றிய நுட்பம் அதிகம் தேவையில்லை. கலைச்சொற்களை மொழியாக்கம் செய்ய சில அகராதிகள் உள்ளன. இவற்றில் ஒன்று தமிழ் லினக்ஸ் தளத்திலிருந்து இலவசமாகக் கிடைக்கிறது. இக்கட்டுரைகளை மொழியாக்கம் செய்வதன் மூலம் கணினி பற்றிய உங்கள் அறிவு வளர்ச்சியடைவதும், உங்கள் ஆர்வம் பெருகுவதும் உறுதி.

எனக்குக் கணினி பற்றி ஓரளவிற்குத் தெரியும், ஆனால் கணினி நிரல்கள் எழுதத் தெரியாது. என்னால் எந்தவகையில் பங்காற்றமுடியும் எனக் கேட்பவர்களுக்கு; நீங்கள் நிரல்கள் எழுதத் தெரியாமல் கணினியை சிறந்த முறையில் பயன்படுத்துவர் என்றால் உங்களுக்கு அவசியம் ஆர்வம் இருக்கும். நீங்கள் சற்றே கடினமான தொழில்நுட்ப ஆவணங்களை மொழியாக்கம் செய்யலாம். அல்லது பயனர் வரைவியல் இடைமுகங்களின் தமிழ் மொழியாக்கத்தில் பணியாற்றலாம். அருகில் இருந்து கூர்ந்து கவனித்தால் உங்களால் எந்த வகையில் பங்களிக்க இயலும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

கணினி வல்லுநர்களுக்கு நாம் விசேடமாக ஏதும் சொல்ல வேண்டியதில்லை. உங்களால் பலவகைகளில் பங்காற்ற இயலும். உங்களுக்கான ஒரே பரிந்துரை லினக்ஸ் தமிழாக்கம் தொடர்பான இணைய ஊடாடல்களில் பங்கெடுக்கத் துவங்குங்கள். தமிழினிக்ஸ் எனும் பெயர் கொண்ட ஒரு விவாதக் குழு நுட்பமான பல விஷயங்கள் பற்றி விவாதிக்கின்றது (சுட்டி இக்கட்டுரையின் இறுதியில்). இந்த விவாதங்களில் நீங்கள் பங்கெடுக்கத் துவங்கினால் உங்களால் எந்தவகையில் பங்களிக்க இயலும் என நீங்களே அறிவீர்கள். லினக்ஸ் ஒரு திறந்த புத்தகம்; இதில் கணினி செயற்பாடுகள் குறித்த உங்கள் சந்தேகங்கள் பலவற்றுக்கும் விடைகாண முடியும்.

பொதுவில் நான் மாணவர்களிடையே லினக்ஸ் பற்றிப் பேசும்பொழுது மாணவர்களும் (அவர்களுக்கும் மேலாக அவர்களது ஆசிரியர்களும்) கேட்கும் கேள்வி ஒன்று; இன்றைக்குக் கணினி பயன்பாட்டில் 80%க்கும் மேலானவை மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயக்குதளத்தில் இயங்குபவை. இவற்றில் பரிச்சயமும், இவற்றுக்கான நிரலிகளை எழுதுவதாலும் மாணவர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும். வணிக உலகைச் சேராத லினக்ஸில் பங்கெடுப்பதால் எங்களுக்கு என்ன நன்மை ? இவர்களின் அரிய நேரத்தை இங்கே வீனாக்கலாமா ? உண்மை, இன்றைக்கு லினக்ஸ் சந்தைப் பங்கில் மிகவும் கீழேதான் இருந்துவருகின்றது, ஆனால் இன்னமொரு மறுக்கமுடியாத உண்மை, இன்றைய இயக்குதளச் சந்தையிலே வளர்ச்சி விகிதத்தில் இருந்துவரும் ஒரே இயக்குதளம் லினக்ஸ்தான். இதுதவிர பிற வர்த்தகரீதியான இயக்குதளங்களுக்கு நிரல்கள் எழுதிப்பழகினால் உங்களுக்கு முழூப் புரிதல் நிச்சயமில்லை. காப்புரிமைக்குக் கட்டுப்பட்ட இவை ஒரு கரும்பெட்டியைப் போன்றவை; இன்னதை உள்ளே போட்டால் இவ்வாறு வெளியே வரும் எனத் தெரியும், அல்லது இன்னது கிடைக்க இவ்வாறு நிரல் எழுத வேண்டும் எனத் தெரியும். ஆனால் அந்நிரல் எவ்வாறு செயல்படுகின்றது, அது துணைக்கு அழைக்கும் பிற துணைநிரல்களின் உள்ளே என்ன இருக்கின்றது என்பதை ஒருக்காலும் அறியமுடியாது. ஆனால் திறந்த புத்தகமான லினக்ஸில் உங்கள் குறியீடுகள் ஒவ்வொரு கட்டத்திலும் எந்தமாதிரி செயற்பாடுகளுக்கு உள்ளாகின்றன எனத் தெரிந்துகொள்ள இயலும். இது கணினி இயக்குதளங்களைப் பற்றிய அமைப்பு ரீதியான புரிதலுக்குப் பெரிதும் உதவும். பொதுவில் பரந்துபட்ட அறிவைக் கொண்டவர்களுக்கு எப்பொழுதும் மரியாதை அதிகம். அந்த வகையில் செய்யும் செயலைத் திருந்தச் செய்ய உதவுவதால் லினக்ஸ் உங்களுக்கு அதிக புரிதலையும் அதன் விளைவாக பரந்த ஞானத்தையும் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக லினக்ஸ் பங்களிப்பாளர்கள் விரும்பும் பரிசு ஒன்று உண்டு; அது நாம் எழுதிய நிரலைப் பல கணினித் துறை அறிவாளிகள் பயன்படுத்துகின்றார்கள் என்று கிடைக்கும் நேர்முக அல்லது மறைமுகப் பாராட்டு; அது திறந்த ஆணைமூல நிரலிகள் அல்லாமல் வேறேங்கும் கிடைக்க இயலாது.

எனவே எந்தவிதத் தகுதி உள்ளவர்களாலும் இந்தத் திட்டத்திற்குப் பங்களிக்க இயலும். மேலதிக விபரங்கள் அவ்வப்பொழுது தமிழ்லினக்ஸ்.அமை (tamillinux.org) அவ்வப்பொழுது வெளியாகும். இந்த அழைப்பு ஒருவருக்கொருவர் கைமாறு எதிர்பார்க்காது உதவி செய்யும் ஒரு இனிய சமுதாயத்தைப் படைக்க, கடல் கடந்த இடத்திலும் நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த. வாருங்கள், அந்த இனிய சமுதாயத்தை நோக்கி!!

தோக்கியோ

18 நவம்பர் 2000

தமிழ் லினக்ஸ் பற்றிய விவாதங்களில் பங்கேற்க http://www.egroups.com/group/tamilinix

தமிழ் லினக்ஸ் பற்றிய அணைத்து விபரங்களுக்கும் http://www.tamillinux.org

Series Navigation

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com