பெங்குவின் தமிழ் பேசுகிறது – ஒரு பெங்குவின் தமிழ் பேசக் கற்றுக்கொள்கிறது – 9

This entry is part [part not set] of 12 in the series 20001112_Issue

வே. வெங்கடரமணன்


venkat@tamillinux.org

கடந்த வார இறுதியில் சாதனைப் பட்டியல் இடுவதாகக்கூறி உங்களை இருக்கைகளில் நிமிர்ந்து அமரச் சொன்னேன்; இதோ அந்தச் சாதனைப் பட்டியல். கணினி இயக்குதளத்தைப் பயன்படுத்த வேண்டிய இடைமுகம் இப்பொழுது தமிழில் கிடைக்கிறது. இது இந்திய கணினி வரலாற்றில் ஒரு சாதனை; இந்திய மொழிகளிலேயே முதன்முறையாகத் தமிழில் தான் இது சாத்தியமாக ஆகியிருக்கிறது.

கணினியை உள்ளுணர்வினால் இயக்குதல்

ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை கணினி பயன்களை நடைமுறைப் படுத்துவது அதன் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கூறாக இருந்திருக்கின்றது. ஆதிகாலங்களில், கணினியைப் பயன்படுத்த நீங்கள் ஒரு மின்னணுத் தொழில்நுட்ப வல்லுநராக இருந்திருக்க வேண்டும். உதாரணமாக, இன்று இணையம் என்ற பெயருடன் சிறுவர்கள் முதல் எல்லோரும் எளிதாகப் பயன்படுத்தும் வைய விரி வலையின் ஆதிகாலம் அவ்வளவு சுவாரசியமானதாக இல்லை. அது அமெரிக்காவிலுள்ள சில தலைசிறந்த பல்கலைக் கழகங்களும் அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி நிறுவனங்களும் தங்கள் தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள உருவானது, அதை ஆராய்ச்சி மாணவர்களும் பேராசிரியர்களும் மாத்திரம்தான் பயன்படுத்தினார்கள். பின்னர் அதன் செயல்முறைகள் எளிதாக்கப்பட்டன. அதற்கு இன்றைக்குப் பரவலாக நாம் அறியும் வரைவியல் இடைமுகம் கிடைத்து; இணையம் என்று பிரபலம் ஆனது.

வரைவியல் இடைமுகம் கணினி பயன்படுத்துதலை எளிதாக்குகிறது. கணினிகளுக்கு வரைவியல் அடிப்படையிலான ஆணைகளை உள்ளிடுதல் எனும் கோட்பாடு ஜெராக்ஸ் நிறுவனத்தின் ஆய்வகத்தில் தோன்றியது, பின்னர் அதை ஆப்பிள் மக்கின்டோஷ் கணினியில் பயன்படுத்தினார்கள், யுனிக்ஸ் இயக்குதளத்திற்கு எக்ஸ் விண்டோ (கவனிக்கவும், விண்டோ, விண்டோஸ் அல்ல) இடைமுகமும் உருவானது. இவை எல்லாவற்றிலிருந்தும் தொழில்நுட்பங்களைக் கவனித்து மைக்ரோஸாப்ட் நிறுவனம் விண்டோஸ் இயக்குதளங்களை உருவாக்கியது. தன் முக்கியமான கொள்கை கணினி பயன்முறையை மனித உள்ளுணர்வுக்கு ஏற்றவகையில் அமைப்பது, கணினிக்கு ஒரு செயலைச் செய்ய ஆணை வழங்கும் பொழுது அந்த யந்திரத்திற்கு ஆணையை எந்த வார்த்தைகளில் சொல்வது (ஆம், என்ன இருந்தாலும் அது இயந்திரம்தான், அதற்கு ஒரு குறிப்பிட்ட முறையில் சொன்னால்தான் புரியும்) என்பதை பயன்படுத்துபவர் நினைவில் கொள்ளவேண்டியிருந்தது. வரைவியல் இடைமுகத்தின் அழகிய வரைபடங்களை உங்கள் விசையெலியால் தொடுவதன் மூலம் அதே காரியத்தை நிகழ்த்திக் காட்டலாம். ஒருவகையில், எப்படிக் கட்டளை இடவேண்டும் என்பதை கணினியே உங்களுக்குத் தெரியப்படுத்தும், ஒரு அஞ்சல் பெட்டியைத் தொடுவதன் மூலம் உங்கள் மின்னஞ்சல்களைப் படிக்கலாம் என்பது உங்களுக்கு எளிதில் உள்ளுணர்வின் மூலம் புரியும்.

பலமொழிகளில் கணினிக்குக் கட்டளையிடல்

தொடர்ச்சியான கணினி முன்னேற்றத்தின் அடுத்த கட்டம் மொழி, பல ஆண்டுகள் வரை கணினியின் பயன்பாடுகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன, இதற்குப் பலகாரணங்கள் உண்டு, முக்கியமாக கணினி தொழில்நுட்பத்தின் பல சாதனைகள் அமெரிக்காவில்தான் நிகழந்தன. மற்றபடி இவையெல்லாம் ஆங்கிலத்தில் தான் எப்பொழுதும் இருக்கவேண்டும் எனும் கட்டுப்பாடு ஏதுமில்லை, மற்ற மொழிகளைப் போல ஆங்கிலமும் ஒரு சாதாரண மொழிதான், ஆங்கிலத்தில் இடப்பட்ட கட்டளைகளை அறிய உருவானதைப் போல் எந்த மொழியிலும் கட்டளைகளைப் பெற்று நிறைவேற்ற கணினிகளைப் படைக்கமுடியும். இதனால் ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் விரைவில் கணினிகள் படைக்கப்பட்டன.

ஏன் பலமொழிகளில் கணினிகளைப் படைக்க வேண்டும் ? – என்னதான் வரைவியல் இடைமுகம் போட்டுக்காட்டினாலும் சக்திவாய்ந்த கணினி செயலாக்கங்களுக்கு அதற்கு நேரடியாகக் கட்டளை இடுவது அவசியமாகிறது. உதாரணமாக இந்தக்கட்டுரையை நீங்கள் படிக்கும் பொழுது இந்த எழுத்துக்களின் வண்ணத்தை மாற்றுதல்; இதற்கு வார்த்தைகளால் ஆன கட்டளைகளின்றி அமைப்பது மிகவும் கடினம். Font attributes என்பதைப் புரிந்து கொள்வதைவிட ‘எழுத்துரு தன்மைகள் ‘ என்று இருந்தால் தமிழைத் தாய்மொழியாக் கொண்டவருக்கு அதை உள்ளுணர்வினால் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கும். (இருக்காது என்று விதண்டாவாதம் புரிபவர்களும் இருக்கிறார்கள்; அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்). சுருக்கமாகச் சொல்லப்போனால் கணினியைப் பயன்படுத்த (அதற்கும் மேலாக வருங்காலத்தில் சிறுகணினிகளை உள்ளடக்கி வர இருக்கின்ற குளிர்சாதனப் பெட்டி, செல்பேசி, கார் வழிகாட்டி போன்ற எல்லா புத்திசாலி சாதனங்களையும்) ஆங்கிலம் தெரிந்தாக வேண்டும் என்ற முறையற்ற முன்தேவையை நீக்கி, எல்லோரும் அவர்களின் தாய்மொழியில் தொழில்நுட்பப் பயன்களை அடைய வழி வகுப்பது.

எப்படி சாத்தியம் ?

மற்ற எல்லா இயக்குதளங்களையும் விட லினக்ஸை அமைப்பவர்கள்தான் தன் தேவையை முதலில் உணர்ந்தார்கள். பல மென்கலன் நிறுவனங்கள் தங்கள் நிரல்களை முற்றிலுமாக வேறுமொழிக்கு மாற்றியமைத்து வந்தார்கள். ஆனால் விரைவில் அதன் தொழில்நுட்பச் சாத்தியமின்மையை உணரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மொழிக்கும் அவ்வாறு செய்யும் பொழுது அதற்கு நிறைய வேலை தேவைப்படுகின்றது. இதற்குப் பதிலாக, இரண்டு தளங்களில் செயலிகளை அமைக்கலாம்; கணினிக்குத் தரப்படும் ஆணைத் தொடர்கள் ஒரு தளம், பயனர்களுக்குத் தரப்படும் இடைமுகம் இன்னொரு தளம். இவ்வாறு இரண்டாகப் பிரித்து நிரல் எழுதுவது சிரமமாக இருக்கலாம். ஆனால் இதில் நிறைய வசதிகள் உண்டு; குறிப்பாக பயனர் இடைமுகத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்டிக்கொள்ளலாம். அதாவது, அது எந்த மொழியிலும் இருக்கலாம், அதைத் தெரிவு செய்வதால் நடக்கும் மாற்றம் ஒன்றுதான். சுருக்கமாகச் சொல்லப்போனால் அஞ்சல் பெட்டிக்கு அடியில் postbox என்றோ mailbox மின்னஞ்சல் என்றோ, அஞ்சல் என்றோ எழுதி பயன்படுத்துபவர்களுக்கு எளிதாக்கலாம், இதைத் விசையெலியால் கிளிக் செய்வதன் மூலம் நடக்கும் செயல் ஒன்றுதான். இவ்வாறு பலமொழிகளிலும் பயனர் இடைமுகம் தருவதை எளிதாக்க லினக்ஸ் தன்னார்வலர்களில் i18n (internationalization, i(18எழுத்துக்கள்)n என்பதன் சுருக்கம்) எனும் ஒரு குழு முயல்கின்றது. அவர்களின் செயல் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த தேவையான காரணிகளை அமைத்து அதை ஒருங்கு சேர்த்துத் தருவது, அதாவது பயனர்களுக்கு அதிக வேலை இல்லை, நீங்கள் இருக்கும் இடம் America என்று தேர்ந்தெடுத்தால் உடனே அது உங்கள் மொழி ஆங்கிலம், பணம் டாலர், அதன் குறி $, நீங்கள் தேதியை வருடம்-மாதம்-நாள் எனும் முறையில் எழுதுவீர்கள் என்பது போன்ற விபரங்களை அது கணினிக்குச் சொல்லிவிடும்; அடுத்தமுறை நீங்கள் கணினியைத் துவக்கும் பொழுது உங்களுக்கு வசதியான முறையில் எல்லாம் தயாராக ருக்கும். அதே கணினியை உங்கள் டம் ந்தியா-தமிழகம் என்று சொன்னால், உடனே அது உங்களுக்குப் புரியும் மொழி தமிழ், உங்கள் பணம் ரூபாய், நீங்கள் தேதியை நாள்-மாதம்-வருடம் எனும் முறையில் எழுதுவீர்கள் என உங்களுக்கான டைமுகத்தை மாற்றியமைக்கும். உங்கள் கணினியில் வரும் கட்டளைப் பட்டியல்கள் எல்லாம் இப்பொழுது தமிழில்!!!

இதுதான் இப்பொழுது நடைமுறையில் சாத்தியமாக ஆகியிருக்கின்றது. லினக்ஸ் இயக்குதளத்திற்கு வரைபடங்களுடன் இடைமுகம் தர பல பொதிகள் (packages) கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமானவை DE எனப்படும் K Desktop Environment, மற்றது GNOME. இவை இரண்டும் பலமொழி இடைமுகங்கள் அமைக்க ஏதுவான வகையில் தயாரிக்கப்பட்டவை. இதன் முலம் பல மொழிகளைச் சேர்ந்தவர்களும் அவர்கள் மொழிகளில் லினக்ஸ் இயக்குதளங்களுக்கு இடைமுகம் அமைத்துவருகின்றார்கள். கடந்த அக்டோபர் 22ஆம் நாள் KDE தனது 2.0ஆம் வடிவத்தை வெளியிட்டது, அத்துடன் தமிழைக் கணினியில் பயன்படுத்தத் தேவையான அணைத்து நிரலிகளும் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டன. இதன்மூலம் இந்திய மொழிகளிலேயே தமிழ்தான் முதன்முறையாக முற்றிலும் கணினி செயல்பாடு கொண்டதாக ஆகியிருக்கிறது – இதுதான் நான் சொன்ன சாதனை.

என்னவெல்லாம் தயார்

சுருக்கமாகச் சொல்லப்போனால், ஒரு சாதரண பயனரின் தினசரி பயன்பாடுகளுக்குத் தேவையான எல்லாமே இப்பொழுது தமிழில் தயார். உங்கள் கணினியின் இடைமுகம் முற்றிலும் தமிழில் இருக்கும், அதில் கட்டளைப் பட்டியல்கள் எல்லாம் உங்களுக்குத் தகுந்தவகையில். உங்களுக்குப் பிடித்த சுவர்காகிதத்தைத் தேர்ந்தெடுக்கலாம், எழுத்துகளின் வண்ணத்தை மாற்றலாம், சாரளங்களின் அமைப்பை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இதில் ஒரு சக்திவாய்ந்த kedit ாகுப்பி உள்ளது அதன்மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கோப்புகளை உருவாக்கலாம், kmail இயலிமூலம் உங்கள் மின்னஞ்சல்களைப் பெறலாம், படிக்கலாம்; புதிய மின்னஞ்சல்கள் எழுதலாம், இணையத்தை உலாவ தமிழ் இடைமுகம் கொண்ட konquerer டு. உங்கள் கோப்புகளை நிர்வகிக்கலாம் (file management). பலர் ஒரே சமயத்தில் பயன்படுத்தவும், ஒரே கணினியில் பல செயல்களை குழுப்பமின்றி செய்யவும் வசதியான லினக்ஸை நிர்வாகம் செய்யச் சிறிது திறமை தேவை, எளிதாக்கப்பட்ட நிர்வாகச் செயலிகளை நீங்கள் தற்பொழுது தமிழ் இடைமுகத்தின் மூலம் இயக்கலாம். உதாரணமாக, பயனர்கள் நிர்வாகம் (user management), செயல்களை காலவரையறைப்படுத்தல் (task scheduling), வலையமைப்பு நிர்வாகம் (network management) போன்றவை இதில் அடங்கும். இதுபோக KOffice எனும் சக்திவாய்ந்த தொகுப்பும் உண்டு, தன்மூலம் ஒரு அலுவலகத்திற்குத் தேவையான பதிப்பித்தல் (word processing), விரிதாள் (spreadsheet) செயல்கள் போன்றவைக்கும் தற்பொழுது தமிழ் இடைமுகம் தயாராகி வருகின்றது. பெரும்பாலான இந்த செயலிகள் உங்கள் கணினி பயன்முறைகளை எளிதாக்குகின்றன. நான் முன்னரே சொன்னதுபோல் பழகுமொழியில் இருப்பதால் உங்கள் உள்ளுணர்வின் மூலம் இவற்றை நீங்கள் எளிதாகக் கற்கலாம். தமிழ் இடைமுகம் வசதியில்லாத சமயங்களில் விசையெலியின் ஒரு சில கிளிக்குகள் மூலம் ஆங்கிலத்திற்கு (அல்லது வேறு மொழிக்குத்) தாவிக் கொள்ளலாம். இந்தச் செயலிகள் எல்லாம் இலவசமாக, காப்புரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைக்கின்றன.

யாரெல்லாம் செய்தார்கள் ?

இதுபோன்ற தன்னார்வ திட்டங்கள் பெரிதும் கூட்டுமுயற்சியாகவே உருவாகின்றன. பலர்பங்காற்றியே இவையெல்லாம் நடைமுறைக்கு வந்துள்ளன. இதில் பங்காற்றியவர்கள் அனைவரையும் திட்டவட்டமாகப் பட்டியலிடுவது இயலாதது. இந்த இடைமுகம் தமிழ் தகுதர எழுத்துக்களில் அமைந்துள்ளது, இந்தத் தகுதரம் உருவாகப் பலர் இணைந்து சேவை செய்திருக்கிறார்கள். இந்தத் தகுதரத்திற்குத் தமிழ் எழுத்துக்களையும் அகரம் கோப்புத் தொகுப்புச் செயலியையும் ஆரம்பகாலங்களில் சின்னச்சாமி நாகராஜன் தயாரித்தளித்தார். பின்னர் வசீகரன் தமிழ் விசைப்பலகை மேலாண்மை செயலியை உருவாக்கினார், இவரே அகரம் தொகுப்பியின் பயன்களை நீட்டித்து அதை சக்திவாய்ந்த அறிவியல் ஆவணங்களையும் தயாரிக்க ஏதுவாக்கினார் (akaramTeX) ந்த கட்டத்தில் சிவக்குமார் எனும் நண்பர் KDE டைமுகத்திற்கான தமிழ் வேலைகளைத் துவக்கினார். அவருடன் நாங்கள் சிலரும் இணைந்தோம். எனினும் சிவக்குமார், கோமதி இருவரும் இடைமுகத் தமிழாக்கத்தை விரைவுபடுத்தினார்கள். இன்றைக்கு வெளியாகி சாதனையாகப் பேசப்படும் தமிழ் லினக்ஸ் இடைமுகத்தில் இவருடைய பங்கு அளவிட முடியாதது. இது தொடர்ந்து தினேஷ் நடராஜா க்னோம் இடைமுகத்தையும் தமிழாக்கம் செய்வதில் முன்னின்று நடத்திவருகின்றார். சிவராஜ் வரைவியல் இடைமுகம் இல்லாத எழுத்து அடிப்படையிலான முனையங்களிலும் தமிழ் படிக்க ஏதுவாக்க அதி சக்தி வாய்ந்த செயலியை (console utilities) வடித்திருக்கிறார். இவர் க்னோம் இடைமுகத்திற்காக உருவாகிவரும் எழுத்துரு வரைவாக்க யந்திரமான பாங்கோ (pango)-வின் செயல்களை தமிழுக்கு நீட்டித்திருக்கிறார். இன்னும், பலர் (பெயர் குறிப்பிடப்படாத இவர்களின் பங்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல – இந்தச் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரமும் சக்கரம் சுழல இன்றியமையாத்து என்பதை நண்பர்கள் அனைவரும் நன்றாக உணர்வார்கள்). சக்கரம் தொடர்ந்து சுழன்றுகொண்டிருக்கிறது, விரைவில் பல சக்திவாய்ந்த செயலிகளும் தமிழ் இடைமுகம் பெறவிருக்கின்றன. தமிழுக்கென்றே முற்றிலும் புதிய செயலிகளும் உருவாகிவருகின்றன.

எங்கே செல்லலாம் ?

இதுகுறித்த அணைத்து விபரங்களையும் சாதாரணப் பயனர்களுக்கு அளிக்கவும், இத்திட்டத்தில் பங்காற்றும் பல நிரலர்களையும் தன்னார்வலர்களையும் ஒன்றிணைக்க தமிழ்லினக்ஸ்.ஆர்க் (http://tamillinux.org) எனும் வலைத்தளம் திறக்கப்பட்டுள்ளது. நான் குறிப்பிட்டுள்ள சில செயலிகள் பயன்படுத்தும் பொழுது வரும் தமிழ் இடைமுகத்தின் திரையோவியங்களை அங்கு தற்பொழுது நீங்கள் காணலாம். சில தன்னார்வலர்கள் சேர்ந்து அமைத்துள்ள இந்த தளத்தில் உங்கள் கணினியை தமிழில் அமைக்கத் தேவையான எல்லா செயலிகளும் தொகுத்து வழங்கப்படுகின்றது. இத்தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் லினக்ஸ் குறித்த அறிமுகக் கட்டுரைகளும், லினக்ஸ் சந்தேகங்கள் குறித்தனவற்றுக்கு விளக்கங்களும் வழங்கப்படுகின்றன. இது தவிர பன்னாட்டு தகவல் நுட்ப நிறுவனங்களின் உதவியுடம் அமைக்கப்பட்டு உலகளாவிய திறந்த ஆணைமூலச் செயலிகளை எழுதும் தன்னார்வலர்களுக்கு இடமும், கணினி வசதியும் உறுதிசெய்வதற்காக உருவாகியுள்ள sourceforge.net எனும் குடை அமைப்பின் கீழ் தமிழ் லினக்ஸ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது; அவர்களின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழில் லினக்ஸை மேம்படுத்தும் இம் முயற்சியில் தமிழ் நிரலர்கள் அனைவரையும் இணைக்க முயற்சி செய்யப்படுகின்றது; இது ஒரே செயலை பலர் செய்வதைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் பகிர்ந்து உதவுதலை உறுதிசெய்யும். இத்திட்டத்தின் முழு விபரங்களையும் வரும் நாட்களில் tamillinux.org தளத்தில் தரவிருக்கின்றோம்.

முற்றிலும் தன்னார்வலர்களின் தன்னலம் கருதா, வணிக முனைப்பற்ற முயற்சி இது. ஒருவருக்கொருவர் உதவும் ஒரு இனிய சமூகம், இச்சமூகத்தில் நீங்களும் பங்கேற்கலாம். கணினி நுட்பம் பற்றி அறிந்தவர் என்றால் உங்கள் உழைப்பில் பலருடைய செயற்பாடுகளும் எளிதாவதை நீங்கள் உணர்ந்து இந்த திறந்த ஆணைமூல திட்டத்தில் இணையுங்கள். தொழில்நுட்பம் பற்றிச் சற்றும் தெரியாதவர்களாலும் பிறருக்கு உதவ முடியும். உங்கள் சேவையை எப்படி நல்லமுறையில் சமூகத்திற்கு அளிப்பது, தமிழ் கணினித் துறையில் வருங்கலத்தில் என்ன எதிர்பார்க்கலாம் எனும் தகவல்களுடன் இத்தொடர் அடுத்த வாரம் நிறைவடையும். அதற்கு முன் ஆங்கிலம் தெரியாத என் பாட்டிக்கு கணினி பயன்படுத்துவது எப்படி என்று சொல்லிக்கொடுத்து அவர்களையும் இத்திட்டதில் பங்கேற்க்கத் தயார் படுத்தியாக வேண்டும். அடுத்த வாரம்…

தோக்கியோ

11 நவம்பர் 2000.

மேலதிக விபரங்களுக்கு: http://www.tamillinux.org வலைத்தளம் காணவும்.

Series Navigation

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com