சனிக்கிரகத்தைச் சுற்றி மேலும் நான்கு சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

This entry is part [part not set] of 11 in the series 20001029_Issue



வேறெந்த கிரகத்துக்கும் இல்லாததாக, சனிக்கிரகத்துக்கு இப்போது 22 தெரிந்த சந்திரன்கள் (துணைக்கோள்கள்).

உலக வானவியல் தொலைக்கண்ணாடி நிலையங்கள் இணைந்து இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளன.


இந்த நான்கு துணைக்கிரகங்களும் ‘ஒழுங்கற்றவை ‘ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், சனிக்கிரகத்தால் பிடிக்கப்பட்ட பெரும் எரிகற்களாக இருக்கலாம் என்று கருத்தப்படுகிறது.

வானவியலாளர்கள் இன்னும் பல சனிகிரகத்துச் சந்திரன்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவை மற்றவர்களால் உறுதிப்படுத்தப்பட காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

முதலிரண்டு சந்திரன்கள் சிலிநாட்டில் உள்ள ஐரோப்பிய தெற்கு வானவியல் நோக்ககத்தில் (European Southern Observatory) கண்டுபிடிக்கப்பட்டன.

ஆகஸ்ட் 7ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இரண்டு மெல்லிய நகரும் பொருள்கள் சனிக்கிரகத்தைச் சுற்றுவதை காண்பித்தன.


பிறகு 23 செப்டம்பரில், ஹவாயில் உள்ள மெளனா கீ மலையில் உள்ள கனடா-பிரஞ்சு-ஹவாய் வானவியல் நோக்ககத்தில் (Canada-France-Hawaii telescope) வானவியலாளர்கள் சிலியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சந்திரன்களையும் இன்னும் இரண்டு சந்திரன்களையும் கண்டார்கள்

சுற்றுவழிப்பாதை பற்றிய கணக்குகள், இந்த பொருள்கள் சனிக்கிரகத்தின் அருகில் ஓடும் விண்கற்களல்ல என்று காண்பிக்கின்றன. இருந்தாலும் அந்த எண்ணத்தை உதறிவிட இயலாது.

இன்னும் பல மாதங்கள் இந்த சந்திரன்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த சனிக்கிரகம் மார்ச் 2001இல் சூரியனுக்கு பின்னாக செல்லும் முன் இந்த வேலையை முடிக்க வேண்டும்.

இந்த புதிய சந்திரன்கள் ‘ஒழுங்கற்றவை ‘ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், இவை பெரும்பாலும், சனிக்கிரகம் தோன்றிய பின்னர் வெகுகாலத்துக்குப் பிறகு சனிக்கிரகத்தால் கைப்பற்றப்பட்ட எரிகற்களாகவோ, விண்கற்களாகவோ இருக்கலாம்.

இதற்கு எதிராக ‘ஒழுங்கான ‘ சந்திரன்கள் பெரியவை. வெகு வட்டமாக கிரகத்தைச் சுற்றி வருபவை. கிரகம் தோன்றும் ஆரம்ப காலத்தில், கிரகத்தின் புகை, தூசி, சேர்ந்து உருவாகுபவை.

சனிக்கிரகத்தின் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒழுங்கற்ற சந்திரன் ‘ஃபோபி ‘ Phoebe 1898இல் கண்டுபிடிக்கப்பட்டது. வியாழன் கிரகத்துக்கு 9 ஒழுங்கற்ற சந்திரன்கள் இருக்கின்றன (ஒன்று கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டது). நெப்டியூனுக்கு இரண்டும், யுரேனசுக்கு ஐந்தும் இருக்கின்றன.

இந்த புது கண்டுபிடிப்புகளால் சனிக்கிரகத்துக்கு 22 தெரிந்த துணைக்கோள்கள் இருக்கின்றன(யுரேனசை விட 1 அதிகம்). இந்த புதிய சந்திரன்கள் விட்டம் 10இலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவு இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

Series Navigation

செய்தி

செய்தி