இரகசியங்களை வெளியில் காட்டி விற்கமுடியுமா ? ஒருபெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 6

This entry is part [part not set] of 9 in the series 20001022_Issue

வே. வெங்கடரமணன்.


கடந்த சில வாரங்களாக நாம் கணினி மென்பொருள்களின் ஆணைமூலங்களைத் (source code) திறந்த வடிவில் வெளியிடுவதில் உள்ள நன்மைகளைப் பற்றி பார்த்தோம். அத்துடன் தற்பொழுது அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற (அதன் மூலம் பிற அரசுகளின் ஆதரவு உறுதியளிக்கப்பட்ட) மென்கலன் காப்புரிமைக் கோட்பாடுகளையும், அதன்மூலம் தகவல் பறிமாற்றங்களுக்கு விளையக்கூடிய தடைகளையும், ஒரே செயலியைப் பலர் எழுதுவதால் உண்டாகும் தொழில் வளர்ச்சித் தடைகளையும் பார்த்தோம். மேலும், கணினி மென்கலன்களுக்கும் மற்ற உற்பத்திப் பொருள்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தையும் தெரிந்து கொண்டோம். இனி, அடிப்படை இரகசியங்களான ஆணை மூலங்களைத் திறந்த வடிவில் வெளியிட்டுவிட்டு மென்கலன் நிறுவனங்கள் எவ்வாறு லாபகரமாக தங்கள் வணிகத்தை நிகழ்த்தமுடியும் எனும் முரண்பாட்டைப் பார்ப்போம்.

தற்பொழுது நிறைய நிறுவனங்கள் திறந்த ஆணைமூலத்தின் கோட்ப்படுகளைத் தழுவி வருகின்றன. முற்றிலும் புதிய நிறுவனங்கள் பல தளையறு மென்கலன்களை அடிப்படையாகக் கொண்டு துவக்கப்பட்டு வருகின்றன, உதாரணத்திற்குப் பல லினக்ஸ் நிறுவனங்களைக் காட்டலாம். ஏற்கனவே உள்ள பல மாபெரும் நிறுவங்கள் தங்கள் செயலிகளின் ஆணை மூலங்களைத் திறந்த வடிவில் வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் ஐ.பி.எம், சன், ஆரக்கிள், கோரல், போன்றவை அடங்கும். இவற்றின் ஆணைமூலங்களின் திறந்த வடிவுகளில் பலதரப்பட்ட வகைகள் உள்ளன. இந்த வாரத் தகவலின் படி சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் தனது மிகப் பிரபலமான யுனிக்ஸ் இயக்குதளங்களுக்கான ஸ்டார் ஆபீஸ் எனும் செயலியின் ஆணைமூலங்களைத் திறந்து காட்டியுள்ளது.
 

மென்கலன் வடிவம் / கட்டுப்பாடுகள் வர்த்தக ரீதி சோதனை நிரல் பகிர்கலன் காசற்றது திறந்தமூலம் (அ) திறந்தமூலம் (ஆ) திறந்தமூலம் (இ)
உதாரணம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஆம் வின்ஸிப் நெட்ஸ்கேப் நாவிகேட்டர் பி.எஸ்.டி யுனிக்ஸ் அப்பாச்சே லினக்ஸ்/க்னூ
இலவசமாகக் கிடைக்குமா ? இல்லை ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
மறுவினியோகம் செய்யலாமா ? இல்லை இல்லை ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
பல கணினிகளில் பயன்படுத்தலாமா ? இல்லை இல்லை ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்
ஆணைமூலம் பார்க்கக் கிடைக்குமா ?  இல்லை இல்லை இல்லை ஆம் ஆம் ஆம் ஆம்
ஆணைமூலத்தை மாற்றவியலுமா ? இல்லை இல்லை இல்லை முடியாது ஆம் ஆம் ஆம்
பொதுமக்கள் பங்களிக்க முடியுமா ? இல்லை இல்லை இல்லை ஆம் முடியாது ஆம் ஆம்
மூலத்திலிருந்து தோன்றும் மென்கலன்களும் தடையின்றி இருக்க வேண்டுமா ? கேள்வியில்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை ஆம்
(மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இரகசிய ஆவணத்தின் (available as The Halloween Document – I from opensource.com) 
அடிப்படையில் அமைக்கப்பட்டது)

இவற்றில் முற்றிலுமாகக் கட்டுப்பாடு ஏதும் இல்லாதவை லினக்ஸ் மற்றும் க்னூ பொது அனுமதி பெற்ற நிரலிகள். இவற்றை நீங்கள் பெறலாம், மாற்றியமைக்கலாம், இலவசமாகவோ/விலைக்கோ விற்கலாம், ஆனால் மாற்றியமைத்த நிரலிகளையும் பொது அனுமதியுடன் தளையின்றி, திறந்த ஆணைமூல வடிவில் வெளியிட வேண்டும். இதுதான் நிரலியை வடிவமைத்தவரின் அடிப்படை உணர்வைப் பிரதிபலிக்க ஒரே வழி (அவர் தன்னுடைய உழைப்பிலும் திறனிலும் வெளியாகும் பொருள் தடைகள் ஏதுமின்றி எல்லோருக்கும் பயன்பட வேண்டும் எனக்கருதியே ஆணைமூலங்களைத் திறந்த வடிவில் வெளியிட்டார், அவரது உழைப்பின் அடிப்படையில், மேம்பட்டு உருவாகும் பிற செயலிகளும் அவ்வாறே இருப்பதுதான் அவரது உணர்வை மதிக்கும் ஒரே வழி.)

கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வெளியாகும் லினக்ஸ் இயக்குதளமும், க்னூ தளையறு மென்கலன்களையும் சிறந்த முறையில் தொகுத்து, அதன் பயன்பாட்டை எளிதாக்கி பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இவற்றுக்கு உதாரணமாக, ரெட் ஹாட், எஸ்.யு.எஸ்.இ, கால்டெரா, கோரல், மான்ட்ரேக், போன்ற லினக்ஸ் நிறுவனங்களையும், அப்பாச்சே இணையச் சேவைப் பரிமாறி நிறுவனத்தையும் காட்டலாம். இவற்றில் பல இன்றைக்கு இலாபகரமாக இயங்கி வருகின்றன. ஒரு முன்னுதாரனமாக ரெட் ஹாட் நிறுவனத்தைக் கொள்ளலாம்.

ரெட் ஹாட் நிறுவனம் 1994ல் துவங்கப்பட்டது. நிறுவுவதற்குக் கடினமாக இருந்த லினக்ஸ் இயக்குதளத்தின் பல செயல்பாடுகளுக்கு வரைவியல் அடிப்படையிலான இடைமுகம் அளித்து லினக்ஸைப் பிரபலப் படுத்தியதில் ரெட் ஹாட்டின் பங்கு அளவிடமுடியாதது. இது ஆறுமாதங்களுக்கு ஒருமுறை இணையத்தின் பல மூலை முடுக்குகளில் வெளியாகும் அனைத்துப் பயனுள்ள லினக்ஸ் நிரல்களையும் தொகுத்து அவற்றை ஒரு வடிவில் பொதித்து, ஒரு லினக்ஸ் பொதியாக (Linux package) வெளியிடுகின்றது. இவற்றை இணையத்தின் மின்வணிக வசதிமூலம் அவர்களிடமிருந்து நேரடியாகவோ, பிற கணினிப் பொருட்கள் விற்பனைக் கடைகளிலோ வாங்கலாம். எல்லாவற்றையும் விட அதிசயமாகக் கடையில் காசுக்கு வாங்கும் அதே லினக்ஸ் பொதியை ரெட் ஹாட் இணையதளத்திலிருந்தோ உலகெங்கிலுமுள்ள அதன் கண்ணாடித் தளங்களிலிருந்தோ (mirror sites) இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். கடையில் வாங்கும் பொருளுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒரே ஒரு மாறுபாடு – காசுகொடுத்து அவர்களுடைய பொருள்களை வாங்கினால் அதனை நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலுமுள்ள உங்கள் கேள்விகளுக்கு விடைதந்து அவர்கள் உதவுவார்கள். பொதுவாகச் சொல்லப்போனால அவர்களது தயாரிப்புப் பொருள் முற்றிலும் இலவசம் – அவர்களது உதவிச் சேவைக்குத் தான் நீங்கள் பணம் தரவேண்டும்.

இது மட்டுமில்லாமல் திறந்த ஆணை நிரல்களை வடிக்கும் அதிபுத்திசாலி நிரலர்களுக்கும் அந்நிறுவனம் வேலை தருகின்றது. அதாவது ரெட் ஹாட்டின் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் தரும் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு இந் நிரலர்கள் எழுதும் செயலிகளும் இலவசமாகப் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

ஒரு சிறு நிறுவனமாக இருந்த இது ஆகஸ்ட் 1999ல் தனது பங்குகளைச் சந்தையில் விற்கத் தொடங்கியது. அப்பொழுது லினக்ஸ் உருவாகப் பாடுபட்டு உழைத்த பலருக்கு (நினைவில் கொள்ளுங்கள் – இவர்கள் ஒருபோதும் அவற்றின் மூலம் அடையக்கூடிய ஆதாயங்களைச் சிந்தித்தவர்கள் இல்லை, அவர்கள் ஆணை நிரல் எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஆர்வத்தின் வெளிப்பாடாகவும், சமுதாயத்திற்குத் தங்களின் கடமையாகவும் இதனைச் செய்தவர்கள்) தனது ஆரம்பப் பங்குகளை அதன் அடிப்படை மதிப்பிற்கு அளிப்பதாகக் கூறியது. இதில் பல நிரலர்கள் பங்கு பெற்றார்கள். சிலருக்கு அது கிடைக்க முடியாமல் போனதில் வருத்தமும் எரிச்சலும். ஆனால் பொதுவில் ரெட் ஹாட் நிறுவனத்தின் நன்றி மறவாமை பலரையும் நெகிழச் செய்தது. இப்பொழுது அமெரிக்க உயர்தொழில் நுட்ப பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் ரெட் ஹாட்டின் பங்குகள் நல்ல விலைக்குப் போகின்றன.

இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகின ? தனது உற்பத்திப் பொருளை இலவசமாகத் தந்து, கடந்த காலத்தில் அதனை ஏணியாக இருந்து ஏற்றிவிட்ட நிரலர்களுக்கும் நிறுவனத்தில் பங்கு தந்து ஒரு வணிக நிறுவனம் பங்கு சந்தையிலும் எப்படி வெற்றிகரமாகச் செயல்பட முடிகின்றது. இது பலருக்கு வியப்பளிக்கும் விஷயமாக இருக்கலாம். இதற்கெல்லாம் ஒரே பதில் லினக்ஸ் இயக்குதளத்தின் தரம்தான். இது நல்ல பொருட்களுக்கு நியாயமான விலைதந்து வாங்கிப் பயனடைய எல்லோரும் எப்போதும் தயார் எனும் அடிப்படை நியதியை வலியுறுத்துகின்றது. பெரும்பாலான கணினி மென்கலன்கள் இந்தியா, சீனா, மலேசியா போன்ற நாடுகளில் திருட்டுப் பொருளாக விற்கப்படுவதன் ஆதார உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. பல வர்த்தரீதியிலான மென்பொருள்கள் இந்நாடுகளில் சராசரி நடுத்தரக் குடும்பத்தின் ஒரு மாதச் சம்பளத்தை முழுங்கிவிடக் கூடியவை. (இதே பொருட்கள் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்றவற்றில் ஒரு சராசரி உழைப்பாளியின் மாதச் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்குதான்). மென்கலன்களின் இராட்சத விலையைக் குறைத்து, அவற்றின் மீதுள்ள அளவிற்கு அதிகமான கட்டுப்பாடுகளை நீக்கினால் அவற்றை எல்லோரும் காசு கொடுத்து வாங்குவார்கள். அதன் மூலம் நியாயமான ஆதாயத்தை அடைவது எளிது.

நல்ல பொருள் இலவசமாகக் கிடைத்தாலும் அதற்கு விலைதர முன்வருவார்களா ? முரணாக உள்ள இந்தக் கேள்விக்குப் பதில் ஆம். உதாரணமாக, பலமுறை நல்ல சினிமாப் படங்கள் தங்களிடமுள்ள விடியோவில் திரையிடப்படுவதாக என் நண்பர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள்; நானும் போய்ப் பார்த்திருக்கிறேன், ஆனால் ஒரு நல்ல படமாக அது இருந்தால் நான் பார்க்க மறுத்து தியேட்டருக்குப் போய் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கின்றேன். இது தரத்திற்கு விலை தர யாரும் தயங்கமாட்டார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ரெட் ஹாட் போன்ற நிறுவனங்களின் வர்த்தக வெற்றி லினக்ஸ் இயக்குதளத்தின் தரத்திற்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கைப் பத்திரம். அதே வேளையில் இது வர்த்த முதலைகளின் பேராசையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

இனி, லினக்ஸ் இயக்குதளம் இந்தியா போன்ற முன்னேறிவரும் நாடுகளுக்கு ஏன் தவிர்க்க முடியாதது என்பதை வரும் வாரங்களில் தெரிந்து கொள்வோம்.

தோக்கியோ,
20.10.2000

Series Navigation

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com